சாந்தம்—அத்தியாவசியமான கிறிஸ்தவ குணம்
‘நீங்கள் சாந்தத்தை தரித்துக்கொள்ளுங்கள்.’—கொலோசெயர் 3:12.
1. சாந்தம் எவ்வாறு விசேஷித்த ஒரு குணம்?
சாந்தசொரூபியின் பக்கத்தில் இருப்பதே இனிய அனுபவம்தான். ஆனாலும், “சாந்தமுள்ள நாவு எலும்பையும் நொறுக்கும்” என்று ஞானியாகிய சாலொமோன் ராஜா கூறினார். (நீதிமொழிகள் 25:15, திருத்திய மொழிபெயர்ப்பு) சாந்தம் என்பது இனிமையும் வலிமையும் கலந்த விசேஷித்த ஒரு குணமாகும்.
2, 3. சாந்தத்துக்கும் பரிசுத்த ஆவிக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது, இந்தக் கட்டுரையில் நாம் எதை சிந்திப்போம்?
2 கலாத்தியர் 5:22, 23-ல் அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடும் “ஆவியின் கனி” பற்றிய பட்டியலில் சாந்தமும் இடம்பெறுகிறது. வசனம் 23-ல் “சாந்தம்” என தமிழ் யூனியன் பைபிளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை மற்ற பைபிள்களில் பெரும்பாலும் “அடக்கம்” அல்லது “பணிவு” என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த கிரேக்க வார்த்தைக்கு இணையான வார்த்தையை பெரும்பாலான மற்ற மொழிகளில் கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது; ஏனென்றால் இதன் மூல வார்த்தை, வெளித்தோற்றத்தில் அடக்கமாக அல்லது பணிவாக இருப்பதைக் குறிக்காமல் உள்ளார்ந்த விதத்தில் சாந்தத்தோடும் கருணையோடும் இருப்பதைக் குறிக்கிறது; அது ஒருவருடைய நடத்தையை அல்ல ஆனால் அவருடைய இருதய நிலையைக் குறிக்கிறது.
3 சாந்தம் என்பதன் அர்த்தத்தையும் மதிப்பையும் முழுமையாக புரிந்துகொள்வதற்கு உதவியாக, நான்கு பைபிள் உதாரணங்களை நாம் பார்க்கலாம். (ரோமர் 15:4) இந்த உதாரணங்களை சிந்திக்கையில், இந்தக் குணம் என்ன என்பதையும் இதை எவ்வாறு பெற்று நம்முடைய எல்லா செயல்களிலும் வெளிக்காட்டலாம் என்பதையும் நாம் கற்றுக்கொள்வோம்.
“தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது”
4. யெகோவா சாந்த குணத்தை உயர்வாக மதிக்கிறார் என்பது நமக்கு எப்படி தெரியும்?
4 சாந்தம் என்பது கடவுளுடைய ஆவியின் கனியில் ஒன்று; ஆகவே, இந்தக் குணத்திற்கும் கடவுளுடைய அற்புதமான குணாதிசயங்களுக்கும் ஒரு நெருங்கிய சம்பந்தம் இருக்க வேண்டுமென தெரிகிறது. ‘சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியானது’ “தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பேதுரு 3:4) ஆம், சாந்தம் யெகோவாவின் ஒரு குணம்; அதை அவர் உயர்வாக மதிக்கிறார். கடவுளுடைய ஊழியர்கள் அனைவரும் சாந்த குணத்தை வளர்த்துக்கொள்வதற்கு இந்த ஒரு காரணமே போதுமானது. ஆனால் சர்வ வல்லமையுள்ள கடவுள், சர்வலோகத்தின் உன்னத அதிகாரி, எவ்வாறு இந்த சாந்த குணத்தை வெளிக்காட்டுகிறார்?
5. யெகோவாவின் சாந்த குணத்தால் நமக்கு என்ன எதிர்கால நம்பிக்கை இருக்கிறது?
5 நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை சாப்பிடக்கூடாது என்ற கடவுளுடைய தெளிவான கட்டளையை முதல் மனித தம்பதியரான ஆதாமும் ஏவாளும் வேண்டுமென்றே மீறினார்கள். (ஆதியாகமம் 2:16, 17) அப்படி வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் போனதால் பாவமும் மரணமும் விளைந்தது; அவர்களும் அவர்களுடைய எதிர்கால சந்ததியும் கடவுளிடமிருந்து விலகிப்போகும் நிலையும் ஏற்பட்டது. (ரோமர் 5:12) அந்த நியாயத்தீர்ப்பை கொடுப்பதில் யெகோவா முற்றிலும் நியாயமானவராக இருந்தாலும், மனித குலத்தை திருத்தவே முடியாது, அதை மீட்கவும் முடியாது என்று கருதி அவர் கைகழுவி விடவில்லை. (சங்கீதம் 130:3) அதற்கு மாறாக, சாந்தத்தை வெளிப்படுத்துகிறவராய் கருணையோடும், வற்புறுத்துகிறவராக இல்லாமல் மனப்பூர்வமாயும், பாவம் செய்த மனிதகுலம் தம்மிடம் வருவதற்காகவும் தம் தயவை பெறுவதற்காகவும் யெகோவா ஏற்பாடு செய்தார். ஆம், எந்த பயமோ நடுக்கமோ இல்லாமல் அவருடைய உன்னதமான சிங்காசனத்திடம் நாம் அணுகுவதை தம் மகனின் மீட்பு பலி என்ற பரிசின் வாயிலாக சாத்தியமாக்கியுள்ளார்.—ரோமர் 6:23; எபிரெயர் 4:14-16; 1 யோவான் 4:9, 10, 18.
6. காயீனிடம் கடவுள் நடந்துகொண்ட விதத்தில் எப்படி சாந்தத்தை வெளிக்காட்டினார்?
6 இயேசு பூமிக்கு வருவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, ஆதாமின் மகன்களாகிய காயீனும் ஆபேலும் காணிக்கைகளைக் கொண்டுவந்த போது யெகோவா சாந்த குணத்தை வெளிப்படுத்தினார். அவர்களுடைய இருதய நிலையை அறிந்து, யெகோவா காயீனுடைய பலியை நிராகரித்தார், ஆபேலையும் அவன் காணிக்கையையும் ‘அங்கீகரித்தார்.’ உண்மையுள்ள ஆபேலையும் அவன் காணிக்கையையும் கடவுள் பிரியத்துடன் ஏற்றுக்கொண்டதைப் பார்த்த காயீனுக்கு பொறாமையும் ஆத்திரமும் பொங்கிக்கொண்டு வந்தது. “காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது” என்று பைபிள் சொல்கிறது. இதற்கு யெகோவா எப்படி பிரதிபலித்தார்? காயீனின் கெட்ட குணம் தம்மை அவமதிப்பதாக அவர் நினைத்தாரா? இல்லை, காயீன் எரிச்சலடைந்ததற்கான காரணத்தை சாந்தத்துடன் கேட்டார். ‘மேன்மையடைவதற்கான’ வழியையும் அவர் காயீனுக்கு சொல்லிக் கொடுத்தார். (ஆதியாகமம் 4:3-7) ஆம், யெகோவா சாந்தத்தின் உருவாகவே இருக்கிறார்.—யாத்திராகமம் 34:6.
சாந்தம் கவர்ந்திழுக்கும், புத்துணர்ச்சியளிக்கும்
7, 8. (அ) யெகோவாவின் சாந்த குணத்தை நாம் எவ்வாறு புரிந்துகொள்ளலாம்? (ஆ) மத்தேயு 11:27-29-லுள்ள வார்த்தைகள் யெகோவாவையும் இயேசுவையும் பற்றி என்ன சொல்கின்றன?
7 இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றி படிப்பதே, யெகோவாவின் ஈடிணையற்ற குணங்களைப் புரிந்துகொள்வதற்கு மிகச் சிறந்த ஒரு வழியாகும். (யோவான் 1:18; 14:6-9) பிரசங்க ஊழியத்தின் இரண்டாம் ஆண்டில் கலிலேயாவில் இருந்தபோது கோராசின், பெத்சாயிதா, கப்பர்நகூம் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் இயேசு அநேக வல்லமையான செயல்களைச் செய்தார். என்றாலும், பெரும்பாலோர் அகந்தையாகவும் அக்கறையில்லாமலும் இருந்ததால் அவரை விசுவாசிக்க மறுத்தனர். இயேசு எவ்வாறு பிரதிபலித்தார்? அவர்களுடைய அவிசுவாசத்தினால் ஏற்படப்போகும் பின்விளைவுகளைக் குறித்து உறுதியாக எச்சரித்தார்; அதே சமயத்தில் அவர்கள் மத்தியில் இருந்த எளிய, பாமரர்களாகிய ஆம்ஹாரட்ஸின் கவலைக்கிடமான ஆன்மீக நிலையைக் கண்டும் பரிதாபப்பட்டார்.—மத்தேயு 9:35, 36; 11:20-24.
8 பிற்பாடு இயேசு செய்த காரியங்கள் அவர் ‘பிதாவை முழுமையாக அறிந்திருந்ததையும்’ (NW) அவரைப் பின்பற்றியதையும் காட்டின. பொது மக்களுக்கு இயேசு இந்தக் கனிவான அழைப்பை விடுத்தார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் [“புத்துணர்ச்சி,” NW] தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்த வார்த்தைகள் எப்பேர்ப்பட்ட ஆறுதலையும் புத்துணர்ச்சியையும் தந்தன! இயேசுவின் வார்த்தைகள் இன்று நமக்கும் ஆறுதலையும் புத்துணர்ச்சியையும் தருகின்றன. நாம் உண்மையில் சாந்த குணத்தைத் தரித்துக்கொள்வோமானால், ‘குமாரன் யாருக்கு [தமது தந்தையை] வெளிப்படுத்த சித்தமாயிருக்கிறாரோ’ அவர்கள் மத்தியில் நாமும் இருப்போம்.—மத்தேயு 11:27-29.
9. சாந்தத்தோடு நெருங்கிய தொடர்புடைய குணம் எது, இந்த விஷயத்தில் இயேசு எவ்வாறு சிறந்து விளங்குகிறார்?
9 “மனத்தாழ்மை” சாந்தத்தோடு நெருங்கிய தொடர்புடைய குணம். மறுபட்சத்தில் பெருமை அகங்காரத்திற்கு வழிநடத்துகிறது; மற்றவர்களை கடுமையாகவும் உணர்ச்சியற்ற விதமாகவும் நடத்துவதற்கு தூண்டுகிறது. (நீதிமொழிகள் 16:18, 19) இயேசு தமது பூமிக்குரிய ஊழிய காலம் முழுவதிலும் மனத்தாழ்மையைக் காண்பித்தார். தமது மரணத்துக்கு ஆறு நாட்களுக்கு முன்னர் எருசலேமுக்குள் பவனி வருகையில் யூதர்களின் ராஜா என்று உற்சாகமாக வரவேற்கப்பட்டார்; அந்தச் சமயத்திலும், இயேசு இவ்வுலக ஆட்சியாளர்களிலிருந்து மிகவும் வித்தியாசமானவராக நடந்துகொண்டார். “இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார்” என சகரியா மேசியாவைக் குறித்து சொன்ன தீர்க்கதரிசனத்தை அவர் நிறைவேற்றினார். (மத்தேயு 21:4; சகரியா 9:9) யெகோவா தமது குமாரனுக்கு ஆட்சியுரிமையை ஒப்படைப்பதை உண்மையுள்ள தீர்க்கதரிசியாகிய தானியேல் ஒரு தரிசனத்தில் பார்த்தார். எனினும் அதற்கு முந்தின தீர்க்கதரிசனம் ஒன்றில் இயேசுவை ‘மனுஷரில் மிகத் தாழ்மையானவர்’ என்று தானியேல் விவரித்தார். ஆம், மனத்தாழ்மையும் சாந்தமும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையது.—தானியேல் 4:17, NW; 7:13, 14.
10. கிறிஸ்தவ சாந்தம் ஏன் பலவீனத்தை குறிப்பதில்லை?
10 யெகோவாவும் இயேசுவும் காட்டும் இதமான சாந்தம் அவர்களிடம் நம்மை கவர்ந்திழுக்கிறது. (யாக்கோபு 4:8) நிச்சயமாகவே சாந்த குணம் பலவீனத்தைக் குறிக்காது. அது பலவீனமாக இருக்கவே முடியாது! சர்வ வல்லமையுள்ள கடவுளாகிய யெகோவா மகா பலமும் வல்லமையும் படைத்தவர். அநீதியைப் பார்த்தால் அவருடைய கோபம் பற்றியெரியும். (ஏசாயா 30:27; 40:26) இயேசுவும் அதேவிதமாக எதையும் விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருந்தார், பிசாசாகிய சாத்தானின் தாக்குதலை எதிர்ப்பட்ட சமயத்திலும்கூட அப்படித்தான் இருந்தார். அன்றிருந்த மதத் தலைவர்களின் சட்டவிரோதமான வியாபார பழக்கங்களை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. (மத்தேயு 4:1-11; 21:12, 13; யோவான் 2:13-17) ஆனால், தம் சீஷர்களின் குறைபாடுகளை கண்ணாரக் கண்டபோதும் சாந்த குணத்தைக் காத்துக்கொண்டு, அவர்களுடைய பலவீனங்களை பொறுமையோடு தாங்கிக்கொண்டார். (மத்தேயு 20:20-28) பைபிள் கல்விமான் ஒருவர் சாந்த குணத்தை சரியாகவே இவ்வாறு விவரித்தார்: “பூப்போன்ற அந்த மென்மைக்குப் பின்னாலிருப்பது இரும்பின் பலமாகும்.” கிறிஸ்துவைப் போல நாமும் சாந்த குணத்தை வெளிக்காட்டுவோமாக.
அன்று வாழ்ந்தவர்களிலேயே மிகவும் சாந்தமான மனிதர்
11, 12. மோசே வளர்ந்த விதத்தை எண்ணிப் பார்க்கும்போது, அவர் சாந்தமுள்ளவராக இருந்தது ஏன் குறிப்பிடத்தக்கது?
11 நாம் மூன்றாவது உதாரணமாக மோசேயைப் பற்றி சிந்திப்போம். ‘பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவர்’ என அவரை பைபிள் விவரிக்கிறது. (எண்ணாகமம் 12:3) இந்த விவரிப்பு தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டது. மோசே நிகரற்ற விதத்தில் சாந்த குணமுள்ளவராக இருந்ததால்தான் அவர் யெகோவாவின் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ள முடிந்தது.
12 மோசே வித்தியாசமான சூழலில் வளர்க்கப்பட்டார். நம்பிக்கை துரோகமும் கொலை வெறியும் நிலவியிருந்த அந்தச் சமயத்தில், உண்மையுள்ள எபிரெய பெற்றோரின் இந்த மகன் உயிரோடு காக்கப்படும்படி யெகோவா பார்த்துக் கொண்டார். சிறு பிராயத்தில் மோசே தன் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்; மெய்க் கடவுளாகிய யெகோவாவைப் பற்றி அந்தத் தாய் அவருக்கு கவனமாக போதித்தார். பிற்பாடு, முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலில் வாழ்வதற்காக தன் வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். “மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்”டிருந்தார் என்று ஆரம்ப கால கிறிஸ்தவ உயிர்த்தியாகி ஸ்தேவான் குறிப்பிட்டார். உண்மையில் மோசே “வாக்கிலும் செய்கையிலும் வல்லவ”ரானார். (அப்போஸ்தலர் 7:22) பார்வோனுடைய அடிமைகளின் எஜமானர்கள் தன் சகோதரர்களுக்கு இழைத்த அநீதியைப் பார்த்தபோது மோசேயின் விசுவாசம் வெளிப்பட்டது. எபிரெயன் ஒருவனை எகிப்தியன் தாக்கியதைக் கண்ட மோசே அவனை கொன்றதால், எகிப்தைவிட்டு மீதியான் தேசத்துக்கு ஓடிப்போக வேண்டியிருந்தது.—யாத்திராகமம் 1:15, 16; 2:1-15; எபிரெயர் 11:24, 25.
13. மோசே மீதியானில் 40 ஆண்டு காலம் வாழ்ந்தது அவர் மீது என்ன பாதிப்பை ஏற்படுத்தியது?
13 மோசே 40 வயதாயிருக்கையில், வனாந்தரத்தில் வாழ நேர்ந்தது. மீதியானில் அவர் ரெகுவேலின் ஏழு குமாரத்திகளை சந்தித்தார். அவர்களுடைய தகப்பனின் பெரிய மந்தைக்கு தண்ணீர் காட்ட அவர்களுக்கு உதவி செய்தார். அந்த இளம் பெண்கள் வீட்டிற்கு வந்து, தங்களுக்குத் தொல்லை கொடுத்த மேய்ப்பர்களிடமிருந்து “எகிப்தியன் ஒருவன்” தங்களைக் காப்பாற்றிய விதத்தை ரெகுவேலிடம் உற்சாகமாய் விளக்கினார்கள். ரெகுவேல் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மோசே அவர்களோடு தங்கினார். அவர் பட்ட கஷ்டங்கள் அவரை மனக்கசப்படையவும் செய்யவில்லை, புதிய சூழ்நிலைக்கேற்ப தன் வாழ்க்கைப் பாணியை மாற்றிக்கொள்ள தடை செய்யவும் இல்லை. யெகோவாவின் சித்தத்தை செய்ய வேண்டும் என்ற ஆசையில் எந்த தடுமாற்றமும் அவருக்கு இருக்கவில்லை. அவர் ரெகுவேலின் ஆடுகளை கவனித்துக்கொண்டு சிப்போராளை மணமுடித்து, தன் மகன்களை வளர்த்த அந்த 40 நீண்ட ஆண்டுகளின்போது சாந்த குணத்தை வளர்த்துக்கொண்டு அதில் மென்மேலும் முன்னேறி வந்தார்; அது அவரது தனிச்சிறப்புமிக்க குணமானது. ஆம், கஷ்டங்களை சகிப்பதன் மூலம் மோசே சாந்த குணத்தைக் கற்றுக்கொண்டார்.—யாத்திராகமம் 2:16-22; அப்போஸ்தலர் 7:29, 30.
14. இஸ்ரவேலின் தலைவராக இருந்த சமயத்தில் மோசே சாந்த குணத்தை வெளிக்காட்டிய ஒரு சம்பவத்தை விவரிக்கவும்.
14 யெகோவா இஸ்ரவேல் தேசத்துக்கு அவரைத் தலைவராக நியமித்த பின்பும், மோசே சாந்த குணமுள்ளவராகவே இருந்தார். மோசேக்கு உதவியாக சேவை செய்வதற்கு யெகோவா 70 மூப்பர்களின் மீது தமது ஆவியை ஊற்றியபோது, எல்தாத்தும் மேதாத்தும் பாளயத்தில் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள் என்று மோசேயிடம் ஓர் இளம் மனிதன் அறிவித்தான். அப்போது யோசுவா, “என் ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைபண்ணும் என்றான்.” அதற்கு மோசே மிகவும் சாந்தமாக, “நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே” என பதிலளித்தார். (எண்ணாகமம் 11:26-29) இறுக்கமான ஒரு சூழ்நிலை சகஜ நிலைக்கு வர சாந்த குணம் உதவியது.
15. மோசே அபூரணராக இருந்தபோதிலும், அவருடைய முன்மாதிரி ஏன் பின்பற்ற சிறந்தது?
15 ஒரு சமயம் மோசே சாந்த குணத்தைக் காண்பிக்க தவறிவிட்டதாக தெரிகிறது. காதேசுக்கு அருகே மேரிபாவில் இருக்கும்போது, அற்புதங்களை நடப்பித்துவந்த யெகோவாவை மோசே மகிமைப்படுத்த தவறினார். (எண்ணாகமம் 20:1, 9-13) ஆம், மோசே அபூரணராக இருந்தார், ஆனாலும், அசைக்க முடியாத அவருடைய விசுவாசம் வாழ்நாள் முழுவதும் அவரை ஆதரித்து வழிநடத்தியது. அவருடைய சிறப்புமிக்க சாந்த குணம் இன்றும்கூட நம் மனதை கவர்ந்திருக்கிறது.—எபிரெயர் 11:23-28.
கடுமைக்கு எதிராக சாந்தகுணம்
16, 17. நாபாலையும் அபிகாயிலையும் பற்றிய பதிவிலிருந்து நாம் என்ன எச்சரிப்பை பெறுகிறோம்?
16 கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் மரணத்துக்குப்பின், தாவீதின் நாளில் நடந்த ஒரு நிகழ்ச்சி எச்சரிக்கும் உதாரணமாக உள்ளது. அது நாபாலையும் அவனுடைய மனைவி அபிகாயிலையும் பற்றியது. இந்த இருவருடைய குணத்திற்கும் இடையே எத்தனை வித்தியாசம்! அபிகாயில் “மகா புத்திசாலி”யாக இருக்கையில், நாபால் ‘முரடனும் கெட்டவனுமாக’ இருந்தான். ஒரு சந்தர்ப்பத்தில், நாபாலின் பெரிய மந்தைகளை கொள்ளையரிடமிருந்து காப்பாற்றிய தாவீதின் ஆட்கள் நாபாலிடத்தில் போய் ஏதாவது உணவு தரும்படி கேட்டார்கள்; அவனோ முரட்டுத்தனமாக மறுத்து அவர்களை வெறும் கையோடு திருப்பி அனுப்பினான். நியாயமான கோபத்துடன் தாவீதும் அவருடைய ஆட்களும் அவனோடு நேருக்கு நேர் மோதுவதற்கு பட்டயத்துடன் கிளம்பினார்கள்.—1 சாமுவேல் 25:2-13; NW.
17 நடந்ததை அபிகாயில் கேள்விப்பட்ட போது, அவள் உடனடியாக அப்பம், திராட்சரசம், சமைத்த இறைச்சி, திராட்சப்பழ மற்றும் அத்திப்பழ அடைகளை எடுத்துக்கொண்டு தாவீதை சந்திக்கப் புறப்பட்டாள். “என் ஆண்டவனே, இந்தப் பாதகம் என்மேல் சுமரட்டும்” என்று தாவீதை கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். “உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும் பொருட்டாக உம்முடைய அடியாள் உமது செவிகேட்கப் பேச வேண்டும்.” அபிகாயிலின் சாந்தமான மன்றாட்டினால் தாவீதின் இருதயம் இளகியது. அபிகாயிலின் விளக்கத்தைக் கேட்டபின், தாவீது இவ்வாறு சொன்னார்: “உன்னை இன்றைய தினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றைய தினம் எனக்குத் தடைபண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக.” (1 சாமுவேல் 25:18, 24, 32, 33) நாபாலின் கடுமையான நடத்தை கடைசியில் அவனை மரணத்திற்கு வழிநடத்தியது. அபிகாயிலின் நல்ல குணங்களோ தாவீதின் மனைவியாகும் மகிழ்ச்சியான வாய்ப்பை அவளுக்கு அளித்தது. இன்று யெகோவாவை சேவிக்கும் அனைவருக்கும் அவளுடைய சாந்த குணம் ஒரு முன்மாதிரியாக அமைகிறது.—1 சாமுவேல் 25:36-42.
சாந்த குணத்தை நாடுங்கள்
18, 19. (அ) நாம் சாந்தத்தை தரித்துக்கொள்ளும்போது என்ன மாற்றங்கள் நம்மில் அப்பட்டமாக தெரியும்? (ஆ) திறம்பட சுயபரிசோதனை செய்துகொள்ள எது நமக்கு உதவலாம்?
18 அப்படியென்றால் சாந்த குணம் அத்தியாவசியமான ஒன்று. அது மென்மையாக நடந்துகொள்வதைவிட அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. அது மற்றவர்களுக்கு புத்துணர்வை அளிக்கும் இனிய குணம். வெடுக்கென்று பேசுவதும் தயவில்லாமல் நடந்துகொள்வதும் ஒருவேளை நம் பழக்கமாக முன்பு இருந்திருக்கலாம். ஆனால் பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொண்ட போது நாம் இதமாகவும் இனிமையாகவும் பேசுகிறவர்களாக மாறியிருக்கிறோம். உடன் கிறிஸ்தவர்களை பின்வருமாறு ஊக்குவித்தபோது பவுல் இந்த மாற்றத்தைப் பற்றி குறிப்பிட்டார்: “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்து”க்கொள்ளுங்கள். (கொலோசெயர் 3:12) பைபிள் இந்த மாற்றத்தை, பயங்கரமான காட்டு மிருகங்கள்—ஓனாய், புலி, சிங்கம், கரடி, விரியன் பாம்பு போன்றவை—அமைதியான வீட்டு மிருகங்களாக—ஆட்டுக்குட்டி, வெள்ளாட்டுக்குட்டி, கன்றுக்குட்டி, பசு போன்றவையாக—மாறுவதற்கு ஒப்பிடுகிறது. (ஏசாயா 11:6-9; 65:25) இந்த மாற்றங்கள் அவ்வளவு அப்பட்டமாக தெரிவதால் பார்க்கிறவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். ஆனால் கடவுளுடைய ஆவி செயல்படுவதாலேயே இந்த மாற்றம் ஏற்படுகிறதென்று நமக்கு தெரியும், ஏனென்றால் அதன் சிறப்பான குணங்களில் சாந்தமும் ஒன்று.
19 அப்படியென்றால், தேவையான மாற்றங்களை செய்து, நம்மை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த பின்பு சாந்த குணத்தை இனிமேலும் வளர்க்கத் தேவை இல்லை என்று இது அர்த்தப்படுத்துமா? நிச்சயமாக இல்லை. உதாரணமாக, புதிய உடைகளை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருப்பதற்கு எப்போதும் அதை பராமரிப்பது அவசியம். கடவுளுடைய வார்த்தையை உற்றுப்பார்த்து, அதிலிருக்கும் முன்மாதிரிகளைக் குறித்து தியானிப்பது, நம்மைநாமே புதிய கோணத்தில், யதார்த்தமாக பார்த்துக்கொள்ள உதவுகிறது. தேவாவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட கடவுளுடைய வார்த்தை என்ற கண்ணாடி உங்களைப் பற்றி என்ன வெளிப்படுத்துகிறது?—யாக்கோபு 1:23-25.
20. சாந்த குணத்தைக் காட்டுவதில் நாம் எவ்வாறு வெற்றி பெறலாம்?
20 இயற்கையாகவே நம் சுபாவங்கள் வித்தியாசப்படுகின்றன. கடவுளுடைய ஊழியர்கள் சிலருக்கு சாந்த குணத்தைக் காட்டுவது மற்றவர்களைவிட எளிதாக இருக்கிறது. எப்படியிருந்தாலும், எல்லா கிறிஸ்தவர்களுமே சாந்தம் உட்பட கடவுளுடைய ஆவியின் கனியை வளர்த்துக்கொள்வது அவசியம். தீமோத்தேயுவுக்கு பவுல் அன்பாக இந்த அறிவுரையைக் கொடுத்தார்: “நீதியையும், தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.” (1 தீமோத்தேயு 6:11) “நாடு” என்ற வார்த்தையிலிருந்து முயற்சி தேவைப்படுவது தெரிகிறது. ஒரு பைபிள் மொழிபெயர்ப்பு ‘உன் இருதயத்தை ஊன்ற வை” என்று இந்த அறிவுரையை மொழிபெயர்க்கிறது. (ஜெ. பி. ஃபிலிப்ஸ் என்பவரின் நியூ டெஸ்டமென்ட் இன் மார்டன் இங்லீஷ்) கடவுளுடைய வார்த்தையிலுள்ள நல்ல உதாரணங்களைப் பற்றி தியானிக்க நீங்கள் முயற்சி செய்தால், அவை உங்கள் இரத்தத்திலேயே ஊறிப்போய், உங்களின் ஒரு பாகமாகவே ஆகிவிடும். அதோடு, அவை உங்களை பண்படுத்தி நல்வழிப்படுத்தும்.—யாக்கோபு 1:21.
21. (அ) சாந்த குணத்தை நாம் ஏன் நாட வேண்டும்? (ஆ) நம்முடைய அடுத்த கட்டுரையில் எது கலந்தாலோசிக்கப்படும்?
21 நாம் எந்தளவுக்கு சாந்தத்தைக் காட்டுகிறோம் என்பது மற்றவர்களிடம் நாம் நடந்துகொள்ளும் முறையிலிருந்து தெரிந்துவிடும். “உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்” என்று சீஷனாகிய யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 3:13) இந்தக் கிறிஸ்தவ குணத்தை நாம் எவ்வாறு வீட்டில், கிறிஸ்தவ ஊழியத்தில், சபையில் காட்டலாம்? பின்வரும் கட்டுரை பயனுள்ள ஆலோசனைகளை அளிக்கிறது.
மறுபார்வை
• கீழே கொடுக்கப்பட்டவர்களின் முன்மாதிரியிலிருந்து சாந்த குணத்தைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்:
• யெகோவா?
• இயேசு?
• மோசே?
• அபிகாயில்?
• நாம் ஏன் சாந்த குணத்தை நாட வேண்டும்?
[பக்கம் 16-ன் படம்]
யெகோவா ஏன் ஆபேலின் காணிக்கையை ஏற்றுக்கொண்டார்?
[பக்கம் 17-ன் படம்]
சாந்தத்திற்கும் மனத்தாழ்மைக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை இயேசு காட்டினார்
[பக்கம் 18-ன் படம்]
சாந்த குணத்தை வெளிக்காட்டுவதில் மோசே சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தார்