யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்தும் இளைஞர்கள்
யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் இருக்கும் இளைஞர்களுக்காகவே இந்த படிப்புக் கட்டுரைகள் விசேஷமாக தயாரிக்கப்பட்டன. ஆகவே சபை காவற்கோபுர படிப்பில் இந்தக் கட்டுரைகள் சிந்திக்கப்படுகையில் அவற்றை கவனமாக படித்து தாராளமாக பதில்கள் சொல்லும்படி இளைஞர்களை உற்சாகப்படுத்துகிறோம்.
“என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.”—நீதிமொழிகள் 27:11.
1, 2. (அ) உலக காரியங்களால் கவர்ந்திழுக்கப்படும் காரணத்திற்காக நீங்கள் கிறிஸ்தவராக இருப்பதற்கு லாயக்கில்லாதவர் என்று அர்த்தமா? விளக்குக. (ரோமர் 7:21) (ஆ) ஆசாபின் உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? (பக்கம் 13-ல் உள்ள பெட்டியைக் காண்க.)
துணிமணி வாங்க நீங்கள் கடைக்குப் போவதாக வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்கிறீர்கள், ஆனால் ஒரு டிரஸ் மட்டும் பார்த்தவுடனேயே உங்களுக்கு பிடித்துவிடுகிறது. அந்தக் கலரும் பாட்டர்னும் உங்களுக்கு வெகு கச்சிதமாக இருப்பதுபோல் தெரிகிறது. விலையும் ரொம்ப மலிவாகத் தோன்றுகிறது. ஆனால் அதை இன்னும் நன்றாக உற்றுப் பார்க்கும்போது உங்களுக்கே ஆச்சரியமாகிவிடுகிறது. ஓரங்களில் துணி நைந்திருக்கிறது, தையல்களும் சரியில்லை. அந்த டிரஸ் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் தரம் குறைந்ததாக இருக்கிறது. அப்படிப்பட்ட மட்ட ரகத் துணியை நீங்கள் விலைகொடுத்து வாங்குவீர்களா?
2 இந்தச் சூழ்நிலையையும், கிறிஸ்தவ இளைஞனாக நீங்கள் சந்திக்க வேண்டிய சூழ்நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அந்தத் துணியைப் போலவே இந்த உலக காரியங்களும் முதலில் பார்க்கும்போது ரொம்ப கவர்ச்சியாக தெரியலாம். உதாரணத்திற்கு உங்கள் பள்ளியிலுள்ள பிள்ளைகள் ஜாலிக்காக பார்ட்டிகளுக்கு போகலாம், போதைப்பொருட்கள் எடுக்கலாம், குடிக்கலாம், உல்லாசமாக டேட்டிங் செய்யலாம், கல்யாணத்திற்கு முன்பே உடலுறவும் கொள்ளலாம். அவர்களைப் போல் வாழ வேண்டுமென்ற ஆசை உங்களுக்கு எப்போதாவது வருகிறதா? கட்டுப்பாடுகள் இல்லாத அவர்களது “சுதந்தர” வாழ்வை கொஞ்சம் அனுபவித்துப் பார்க்கத் துடிக்கிறீர்களா? ஆம் என்றால், நீங்கள் கெட்ட குணம் படைத்தவர்கள், கிறிஸ்தவராக இருப்பதற்கே லாயக்கற்றவர்கள் என்ற அவசர முடிவுக்கு வந்து விடாதீர்கள். சுண்டி இழுக்கும் சக்தி இந்த உலகத்திற்கு மிக அதிகம் உண்டு என்று பைபிளே ஒப்புக்கொள்ளுகிறது; கடவுளைப் பிரியப்படுத்த விரும்புபவரைக்கூட அது விட்டுவைப்பதில்லை.—2 தீமோத்தேயு 4:10.
3. (அ) இந்த உலக காரியங்களை நாடித் தேடுவது ஏன் வீணானது? (ஆ) உலக நாட்டங்கள் வீண் என்பதை ஒரு கிறிஸ்தவ பெண் எவ்வாறு விளக்கினாள்?
3 நீங்கள் விரும்பிய துணியை வாங்குவதற்கு முன்பு அதை எப்படி உற்றுப் பார்ப்பீர்களோ அப்படியே இந்த உலகக் காரியங்களையும் இப்போது தயவுசெய்து உற்றுப் பாருங்கள். ‘இந்த உலகத்தின் தரம் எப்படியிருக்கிறது?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். இந்த ‘உலகம் அழிந்துபோகிறது’ என்று பைபிள் குறிப்பிடுகிறது. (1 யோவான் 2:17, NW) ஆகவே இந்த உலகம் தரும் எவ்விதமான இன்பமும் தற்காலிகமானதே. அதோடு, அவபக்தியான நடத்தையின் விளைவுகள் கொடியவை. அவற்றால் எந்த லாபமும் இல்லை. “இளமையை வீணாக்கியதால் வேதனைகள்” அனுபவித்ததாக ஒரு கிறிஸ்தவ பெண் சொன்னாள். “இந்த உலகம் நம்மை வசீகரித்து, சுண்டி இழுக்கலாம். அதன் உல்லாசத்தை வேதனைகளின்றி அனுபவிக்கலாம் என்று நம்மை நம்ப வைக்க முயலலாம். ஆனால் உண்மையில் அது வேதனை தராமல் போகாது. உலகம் நம்மை நன்கு பயன்படுத்திக் கொண்டு, கடைசியில் தூக்கியெறிந்துவிடும்” என்றும் அவள் சொன்னாள்.a இப்படிப்பட்ட மட்ட ரக வாழ்க்கைக்காக ஏன் உங்கள் இளமையை வீணாக்க வேண்டும்?
“தீயோனிடமிருந்து” பாதுகாப்பு
4, 5. (அ) இறப்பதற்கு சற்று முன்பு இயேசு ஜெபத்தில் என்ன கேட்டுக்கொண்டார்? (ஆ) அது ஏன் நியாயமான வேண்டுகோளாக இருந்தது?
4 தரமுள்ள எதையும் இந்த உலகத்தால் அளிக்க முடியாது என்பதை யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் உள்ள இளைஞர்கள் உணருகிறார்கள், ஆகவே இந்த உலகோடு நட்பு வைப்பதை தவிர்க்க முயலுகிறார்கள். (யாக்கோபு 4:4) அப்படிப்பட்ட உண்மையுள்ள இளைஞர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால் சபாஷ்! நண்பர்களின் அழுத்தத்தை சமாளித்து வித்தியாசமாக வாழ்ந்து காட்டுவது சுலபமில்லைதான், ஆனால் ஒருவர் உங்களுக்கு உதவக் காத்திருக்கிறார்.
5 இயேசு இறப்பதற்கு சற்று முன்பு, “தீயோனிடமிருந்து” தம் சீஷர்களை “காத்தருள” வேண்டும் என்று ஜெபத்தில் யெகோவாவிடம் கேட்டார். (யோவான் 17:15, பொது மொழிபெயர்ப்பு) நியாயமான காரணத்திற்காகவே இயேசு அவ்வாறு வேண்டிக்கொண்டார். தம் சீஷர்கள் எந்த வயதினராக இருந்தாலும் உத்தமர்களாக நிலைத்திருப்பது கஷ்டம் என்பதை அவர் அறிந்திருந்தார். ஏன் அது அவர்களுக்கு கஷ்டமாக இருக்கும்? வல்லமையுள்ள, காணக்கூடாத ஒரு எதிரியே அதற்கு ஒரு காரணம் என இயேசு ஒப்புக்கொண்டார். அந்த எதிரி, ‘தீயோனாகிய’ சாத்தானே. இந்தத் தீய ஆவி ஆள், “கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” என பைபிள் சொல்கிறது.—1 பேதுரு 5:8.
6. சிறியவர்கள்மீது சாத்தான் துளியும் இரக்கம் காண்பிப்பதில்லை என்பது நமக்கு எப்படி தெரியும்?
6 சரித்திரம் முழுவதிலும், மனிதர்களுக்கு மிகக் கொடிய சோதனைகளை தந்து சாத்தான் கொடூர இன்பம் கண்டிருக்கிறான். யோபுவிற்கும் அவரது குடும்பத்திற்கும் சாத்தான் கொண்டுவந்த பயங்கர துன்பங்களை நினைத்துப் பாருங்கள். (யோபு 1:13-19; 2:7) சாத்தானின் மூர்க்க குணத்தை பிரதிபலிக்கும் சம்பவங்கள் உங்கள் காலத்தில்கூட நடந்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். சாத்தான் இரையைத் தேடி தீவிரமாக அலைகிறான்; யாரை விழுங்கலாம் என்று வெறி பிடித்துத் திரியும் அவன், பிள்ளைகளுக்கும் தயவுதாட்சண்யம் காட்டுவதில்லை. உதாரணத்திற்கு பொ.ச. முதல் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பெத்லகேமிலிருந்த இரண்டு அல்லது அதற்கும் குறைவான வயதுடைய சிறிய ஆண் குழந்தைகள் அனைத்தையும் கொன்றுபோட ஏரோது திட்டமிட்டான். (மத்தேயு 2:16) சாத்தான்தான் ஏரோதை தூண்டியிருக்க வேண்டும்; கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாகி, சாத்தான் மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றவிருந்த பிள்ளையை கொல்லவே அந்த முயற்சி எடுக்கப்பட்டது. (ஆதியாகமம் 3:15) சிறியவர்கள்மீது சாத்தான் துளியும் இரக்கம் காண்பிப்பதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. எவ்வளவு பேரை விழுங்க முடியுமோ அவ்வளவு பேரை விழுங்குவதே அவனது ஒரே குறிக்கோள். அதுவும் இன்று அவன் இதில் தீவிரமாக இருக்கிறான்; ஏனென்றால் பரலோகத்திலிருந்து பூமிக்கு தள்ளப்பட்டிருக்கும் அவன், ‘தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபத்தில்’ இருக்கிறான்.—வெளிப்படுத்துதல் 12:9, 12.
7. (அ) யெகோவா எவ்வாறு சாத்தானிலிருந்து முற்றிலும் வித்தியாசமானவராக இருக்கிறார்? (ஆ) நீங்கள் வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவிப்பதைப் பற்றி யெகோவா எவ்வாறு உணருகிறார்?
7 ‘மிகுந்த கோபத்தோடு’ அலையும் சாத்தானுக்கு நேர்மாறாக, யெகோவா ‘உருக்கமான இரக்கம்’ உள்ளவர். (லூக்கா 1:77) அவர் அன்பின் பிரதிபிம்பம். இந்த மகத்தான குணத்தின் உருவாக அவர் இருப்பதால், “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 4:8) இந்த உலகத்தின் கடவுளுக்கும், நீங்கள் வணங்குவதற்கு பாக்கியம் பெற்றுள்ள கடவுளுக்கும் எவ்வளவு வித்தியாசம்! சாத்தான் எல்லாரையும் விழுங்க முயலுகிறான், யெகோவாவோ ‘ஒருவரும் அழிந்துபோவதை விரும்புவதில்லை.’ (2 பேதுரு 3:9, NW) ஒவ்வொரு மனித உயிரையும், உங்கள் உயிரையும்கூட யெகோவா மதிப்புள்ளதாக கருதுகிறார். இந்த உலகத்தின் பாகமாக இருக்கக்கூடாது என்று யெகோவா தமது வார்த்தையில் சொல்வது, உங்கள் சந்தோஷத்தைப் பறிப்பதற்கோ, உங்கள் சுதந்தரத்தை கட்டுப்படுத்துவதற்கோ அல்ல. (யோவான் 15:19) மாறாக, தீயோனிடமிருந்து உங்களை பாதுகாக்கவே அவ்வாறு சொல்கிறார். இந்த உலகத்தின் தற்காலிக இன்பங்களைவிட பல மடங்கு சிறந்த ஒன்றை நீங்கள் பெற வேண்டும் என்று உங்கள் பரலோக தந்தை விரும்புகிறார். ‘உண்மையான வாழ்க்கையை,’ அதாவது பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனை நீங்கள் பெற வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். (1 தீமோத்தேயு 6:17-19, NW) அதைப் பெறுவதில் நீங்கள் வெற்றி சிறக்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார், ஆகவே அந்த இலக்கை அடைய முயலும்படி உங்களை ஊக்குவிக்கிறார். (1 தீமோத்தேயு 2:4) அதோடு, ஒரு விசேஷ அழைப்பை யெகோவா உங்களுக்குக் கொடுக்கிறார். அது என்ன தெரியுமா?
“என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து”
8, 9. (அ) யெகோவாவிற்கு நீங்கள் என்ன பரிசை கொடுக்க முடியும்? (ஆ) யோபுவின் உதாரணம் காட்டுகிறபடி, சாத்தான் எப்படி யெகோவாவை நிந்திக்கிறான்?
8 நெருங்கிய நண்பர் யாருக்காவது நீங்கள் பரிசு கொடுத்திருக்கிறீர்களா? அப்போது அந்த நண்பரின் முகம் ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் நன்றியுணர்விலும் பிரகாசிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அவருக்கு என்ன பரிசு கொடுப்பது ஏற்றதாக இருக்கும் என்று ரொம்ப நேரம் நீங்கள் பலமாக யோசித்திருக்கலாம். இப்போது இந்தக் கேள்வியைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: உங்கள் படைப்பாளராகிய யெகோவா தேவனுக்கு நீங்கள் என்ன பரிசு கொடுக்கலாம்? இந்தக் கேள்வி முதலில் அபத்தமாக தெரியலாம். சர்வவல்லமையுள்ளவருக்கு சாதாரண மனிதனிடமிருந்து என்ன தேவைப்படப்போகிறது? அவரிடம் ஏற்கெனவே இல்லாத எதை பெரிதாக நம்மால் கொடுத்துவிட முடியும்? நீதிமொழிகள் 27:11-ல் பைபிள் இவ்வாறு விடையளிக்கிறது: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.”
9 பிசாசாகிய சாத்தானே யெகோவாவை நிந்திக்கிறான் என்பதை நீங்கள் பைபிளிலிருந்து படித்துத் தெரிந்திருப்பீர்கள். அன்பினால் அல்ல, ஆனால் சுயநல காரணங்களுக்காகவே மனிதர்கள் கடவுளை சேவிக்கிறார்கள் என்று அவன் வாதாடுகிறான். கஷ்டம் வந்தால் போதும் அவர்கள் உடனடியாக உண்மை வணக்கத்தை விட்டுவிடுவார்கள் என்று அவன் சொல்கிறான். உதாரணத்திற்கு, நீதிமானாகிய யோபுவைப் பற்றி யெகோவாவிடம் சாத்தான் என்ன சொன்னான் என்று கவனியுங்கள்: “நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று. ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும்.”—யோபு 1:10, 11.
10. (அ) யோபு தவிர மற்றவர்களின் உத்தமத்தையும் சாத்தான் கேள்விக்குறியாக்கினான் என்பது நமக்கு எப்படி தெரியும்? (ஆ) பேரரசுரிமை சார்ந்த விவாதத்தில் நீங்கள் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள்?
10 பைபிள் பதிவில் காட்டப்பட்டுள்ளபடி, யோபுவின் உத்தமத்தை மட்டுமல்ல, கடவுளை சேவிக்கும் மற்ற எல்லாருடைய உத்தமத்தையும் சாத்தான் கேள்விக்குறியாக்கினான். இதற்கு நீங்களும் விதிவிலக்கல்ல. சொல்லப்போனால், மனிதவர்க்கத்தைப் பற்றி பேசியபோது யெகோவாவிடம் சாத்தான் இப்படி சொன்னான்: “தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும் மனுஷன் [யோபு மட்டுமல்ல, எந்த மனுஷனும்] கொடுத்துவிடுவான்.” (யோபு 2:4) இந்த முக்கிய விவாதத்தில் உங்கள் பங்கு என்ன என்று தெரிகிறதா? யெகோவாவிற்கு நீங்கள் ஒன்றை தர முடியும் என்று அவரே நீதிமொழிகள் 27:11-ல் சுட்டிக்காட்டுகிறார்; அதாவது, அவரை நிந்திக்கும் சாத்தானுக்கு உத்தரவு கொடுப்பதற்கான ஒரு அடிப்படையை தர முடியும் என்று சுட்டிக்காட்டுகிறார். இதை யோசித்துப் பாருங்கள்: விவாதங்களிலேயே மிகப் பெரிய விவாதத்தைத் தீர்ப்பதில் பங்கு கொள்ளும்படி சர்வலோகப் பேரரசர் உங்களை அழைக்கிறார். எப்பேர்ப்பட்ட மலைக்க வைக்கும் பொறுப்பும் பாக்கியமும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது! யெகோவா உங்களிடம் கேட்பதை நீங்கள் தருவீர்களா? யோபு தந்தார். (யோபு 2:9, 10) இயேசுவும், இளைஞர்கள் உட்பட மற்ற எண்ணற்றவர்களும் அவ்வாறே செய்தார்கள். (பிலிப்பியர் 2:8; வெளிப்படுத்துதல் 6:9) நீங்களும் அவ்வாறே செய்யலாம். என்றாலும், இந்த விஷயத்தில் இடைப்பட்ட நிலை எதுவுமே இல்லை என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். சாத்தானின் நிந்தை, யெகோவாவின் பதில் ஆகிய இரண்டில் ஒன்றை உங்கள் நடத்தை ஆதரிக்கும். ஆக, நீங்கள் எதை ஆதரிப்பீர்கள்?
யெகோவா உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார்!
11, 12. யெகோவாவை சேவிக்கும் தெரிவை நீங்கள் செய்கிறீர்களா இல்லையா என்பது அவருக்கு முக்கியமா? விளக்குக.
11 நீங்கள் எதை ஆதரிக்க தீர்மானிக்கிறீர்கள் என்பது உண்மையிலேயே யெகோவாவிற்கு முக்கியமா? சாத்தானுக்கு போதியளவு பதில் சொல்லும் விதத்தில் ஏற்கெனவே நிறைய பேர் கடவுளுக்கு உத்தமமாக நிலைத்திருக்கிறார்கள் அல்லவா? யாருமே யெகோவாவை அன்பினால் சேவிப்பதில்லை என்ற சாத்தானின் குற்றச்சாட்டு ஏற்கெனவே பொய்யாக நிரூபிக்கப்பட்டுவிட்டது உண்மைதான். இருந்தாலும், தனிப்பட்ட விதமாக உங்கள்மீது யெகோவா அக்கறை உள்ளவராக இருப்பதால் பேரரசுரிமை சார்ந்த விவாதத்தில் தம் பக்கம் நீங்கள் நிற்க வேண்டும் என்று விரும்புகிறார். “இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல” என்று இயேசுவும் சொன்னார்.—மத்தேயு 18:14.
12 நீங்கள் என்ன தெரிவை செய்கிறீர்கள் என்பதில் யெகோவா அக்கறையுள்ளவராக இருப்பது தெளிவாக தெரிகிறது. அதைவிட முக்கியமாக, உங்கள் தெரிவு அவரை பாதிக்கிறது. யெகோவாவிற்கு ஆழ்ந்த உணர்ச்சிகள் உண்டு என்றும் மனிதர்களின் நல்ல நடத்தை அல்லது தீய நடத்தை அவரது உணர்ச்சிகளை பாதிக்கிறது என்றும் பைபிள் தெளிவாக காட்டுகிறது. உதாரணத்திற்கு இஸ்ரவேலர்கள் மறுபடியும் மறுபடியுமாக கலகம் செய்தபோது யெகோவா ‘வேதனைப்பட்டார்.’ (சங்கீதம் 78:40, 41, NW) நோவாவின் நாளில் ஜலப்பிரளயம் வருவதற்கு முன்பு ‘மனிதனுடைய அக்கிரமம் பெருகியிருந்தபோது,’ அது யெகோவாவின் “இருதயத்துக்கு விசனமாயிருந்தது.” (ஆதியாகமம் 6:5, 6) இதன் அர்த்தத்தை சற்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் தவறான பாதையில் சென்றால் உங்கள் படைப்பாளரின் மனதிற்கு வேதனையளிப்பீர்கள். கடவுள் பலவீனராக இருக்கிறார் என்றோ உணர்ச்சிகளுக்கு அடிமையாயிருக்கிறார் என்றோ இது அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, அவர் உங்களை நேசிக்கிறார் என்றும் உங்கள் நலனில் அக்கறையாக இருக்கிறார் என்றுமே அர்த்தப்படுத்துகிறது. மறுபட்சத்தில், நீங்கள் சரியானதை செய்யும்போது யெகோவாவின் இருதயம் சந்தோஷப்படுகிறது. சாத்தானுக்கு மேலும் பதிலளிக்க முடியும் என்பதால் மட்டும் அல்ல, உங்களுக்கு பலன் அளிக்க முடியும் என்பதாலும் அவர் சந்தோஷப்படுகிறார். பலன் அளிக்கவே அவர் காத்திருக்கிறார். (எபிரெயர் 11:6) யெகோவா தேவன் எப்படிப்பட்ட அன்பான தகப்பன்!
இப்போது அபரிமிதமான ஆசீர்வாதங்கள்
13. யெகோவாவை சேவிப்பதால் இப்போதே என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?
13 யெகோவாவை சேவிப்பதால் எதிர்காலத்தில் மட்டும் ஆசீர்வாதங்களை அனுபவிக்க மாட்டோம். யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் உள்ள அநேக இளைஞர்கள் இப்போதே சந்தோஷத்தையும் திருப்தியையும் அனுபவிக்கிறார்கள். அதற்கு நியாயமான காரணமும் உண்டு. “ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன” என்று சங்கீதக்காரன் எழுதினார். (சங்கீதம் [திருப்பாடல்கள்] 19:8, பொ.மொ.) நமக்கு எது நல்லது என்பதை மற்ற எந்த மனிதனை விடவும் யெகோவா நன்கு அறிந்திருக்கிறார். ஏசாயா தீர்க்கதரிசி மூலம் யெகோவா இவ்வாறு குறிப்பிட்டார்: “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.”—ஏசாயா 48:17, 18.
14. பைபிள் நியமங்கள் எவ்வாறு கடனில் சிக்கும் வேதனையை தவிர்க்க உங்களுக்கு உதவும்?
14 பைபிள் நியமங்களைப் பின்பற்றுவது மன வேதனையையும் வலியையும் பெருமளவு தவிர்க்க உங்களுக்கு உதவும். உதாரணத்திற்கு, பண ஆசையுள்ளவர்கள் “அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 6:9, 10) இந்த வசனத்திலுள்ள கசப்பான உண்மையை உங்கள் நண்பர்களில் யாராவது அனுபவித்திருக்கிறார்களா? சில இளவட்டங்கள் பயங்கர கடனில் சிக்கியிருக்கிறார்கள்; விலையுயர்ந்த லேட்டஸ்ட் பிரான்ட் துணிமணிகளையும் புதுப் புது தொழில்நுட்ப சாதனங்களையும் வைத்திருக்க அவர்கள் நினைப்பதாலேயே இந்நிலை. உண்மையில் தங்களுக்கு கட்டுப்படியாகாத பொருட்களுக்காக வெகு காலம் உயர்ந்த வட்டியுடன் பணம் கட்டுவது வேதனையளிக்கும் ஒருவித அடிமைத்தனம்!—நீதிமொழிகள் 22:7.
15. பாலியல் ஒழுக்கக்கேட்டினால் விளையும் வேதனையிலிருந்து பைபிள் நியமங்கள் உங்களை எந்த விதங்களில் பாதுகாக்கும்?
15 பாலியல் ஒழுக்கக்கேட்டையும் எடுத்துக்கொள்ளுங்கள். உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும், மணமாகாத எண்ணற்ற இளம் பெண்கள் கர்ப்பமாகிறார்கள். சிலருக்கு குழந்தையை வளர்க்கும் ஆசையே கிடையாது, அதற்கான திறனும் இல்லை. மற்ற சிலர் கருக்கலைப்பு செய்துகொண்டு மனசாட்சியின் உறுத்துதலால் தவிக்கிறார்கள். பாலியலால் கடத்தப்படும் எய்ட்ஸ் போன்ற வியாதிகளால் அவதிப்படுகிற இளம் ஆண்களும் பெண்களும்கூட உண்டு. யெகோவாவை அறிந்திருப்பவர் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுகையில் வரும் மிக வேதனையான விளைவோ, யெகோவாவுடன் உள்ள உறவில் விரிசல் ஏற்படுவதே.b (கலாத்தியர் 5:19-21) ஆக, “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என்று பைபிள் சொல்வது நியாயமானது.—1 கொரிந்தியர் 6:18.
‘சந்தோஷமுள்ள கடவுளை’ சேவிப்பது
16. (அ) நீங்கள் உங்கள் இளமையை அனுபவிக்க வேண்டும் என்று யெகோவா விரும்புவது நமக்கு எப்படி தெரியும்? (ஆ) யெகோவா எதற்காக உங்களுக்கு வழிகாட்டிகளை தருகிறார்?
16 யெகோவாவை ‘சந்தோஷமுள்ள கடவுள்’ என்று பைபிள் அழைக்கிறது. (1 தீமோத்தேயு 1:11, NW) நீங்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். சொல்லப்போனால், ‘உன் இளமையை அனுபவி. இளமையில் இருக்கும்போதே சந்தோஷமாக இரு’ என்று அவருடைய வார்த்தையே சொல்கிறது. (பிரசங்கி 11:9, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) ஆனால் நல்ல நடத்தையினாலும் கெட்ட நடத்தையினாலும் ஏற்படும் உடனடியான விளைவுகளை மட்டுமல்லாமல், அவற்றின் நீண்ட கால விளைவுகளையும் யெகோவாவினால் அறிய முடியும். ஆகவேதான் உங்களுக்கு இப்படி அறிவுரை வழங்குகிறார்: “உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே. ‘வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே’ என்று நீ சொல்லக்கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும் வருமுன் அவரை உள்ளத்திலே நினை.”—பிரசங்கி (சபை உரையாளர்) 12:1, பொ.மொ.
17, 18. யெகோவாவை சேவிப்பதில் மகிழ்ச்சி காண்பதை பற்றி ஓர் இளம் கிறிஸ்தவ பெண் என்ன சொன்னாள், நீங்களும் அதே மகிழ்ச்சியை எப்படி பெறலாம்?
17 இன்று அநேக இளைஞர்கள் யெகோவாவை சேவிப்பதில் மிகுந்த சந்தோஷத்தைப் பெற்றிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, 15 வயது லினா இவ்வாறு சொல்கிறாள்: “நான் தலைநிமிர்ந்து நடக்கிறேன். சிகரெட்டையும் போதைப்பொருட்களையும் தொடாததால் ஆரோக்கியமாக இருக்கிறேன். சபையில் மதிப்புள்ள அறிவுரைகளை பெறுவதால் சாத்தானின் பயங்கரமான அழுத்தங்களை என்னால் சமாளிக்க முடிகிறது. ராஜ்ய மன்றத்தில் நல்ல கூட்டுறவை அனுபவித்து மகிழ முடிவதால் என் முகத்தில் சந்தோஷக் களை தெரிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, பூமியில் நித்திய ஜீவனைப் பெறும் அருமையான வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.”
18 லினாவைப் போலவே அநேக கிறிஸ்தவ இளைஞர்கள் விசுவாசத்திற்காக கடினமாக போராடுகிறார்கள், இது அவர்களுக்கு சந்தோஷத்தைத் தருகிறது. தங்கள் வாழ்க்கை சில சமயங்களில் மிகுந்த சவாலுக்குரியதாக இருந்தாலும் அதற்கு உண்மையான நோக்கமும் உண்மையான எதிர்காலமும் இருப்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆகவே உங்கள் நலனில் மிகுந்த அக்கறை காட்டும் கடவுளை தொடர்ந்து சேவியுங்கள். அவரது இருதயத்தைச் சந்தோஷப்படுத்துங்கள். அப்போது அவர் இன்றைக்கும் இனி வரும் சதா காலங்களுக்கும் உங்களை சந்தோஷப்படுத்துவார்!—சங்கீதம் 5:11.
[அடிக்குறிப்புகள்]
a அக்டோபர் 22, 1996, விழித்தெழு! பிரதியில் வெளிவந்த “சத்தியம் என்னை மீண்டும் உயிரடையச் செய்தது” என்ற கட்டுரையைக் காண்க.
b ஒருவர் மனந்திரும்பி, தவறு செய்வதை விட்டுவிட்டு, தன் பாவங்களை அறிக்கை செய்யும்போது, யெகோவா ‘தாராளமாக மன்னிப்பார்’ என்பதை அறிவது ஆறுதல் தருகிறது.—ஏசாயா 55:7, NW.
நினைவிருக்கிறதா?
• ‘தீயோனாகிய’ சாத்தானிடமிருந்து என்ன ஆபத்தை சந்திக்கிறீர்கள்?
• யெகோவாவின் இருதயத்தை நீங்கள் எப்படி சந்தோஷப்படுத்தலாம்?
• யெகோவா உங்கள்மீது அக்கறையாக இருப்பதை பைபிள் எவ்வாறு காட்டுகிறது?
• யெகோவாவை சேவிப்பதால் வரும் சில ஆசீர்வாதங்கள் என்ன?
[பக்கம் -ன் பெட்டி/படம்] 13
அடிசறுக்கி விழப்போன நீதிமான்
ஆசாப் என்பவர் பேர்பெற்ற லேவியர். அவர் பூர்வ இஸ்ரவேலிலிருந்த யெகோவாவின் ஆலயத்தில் சங்கீதக்காரனாய் பணியாற்றி வந்தார். பொது வணக்கத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்களையும் அவர் இயற்றினார். ஆனால் இந்த விசேஷ சிலாக்கியங்களைப் பெற்றிருந்தபோதும், ஒரு காலக் கட்டத்தில், பக்தியில்லாத மற்றவர்களின் நடத்தையைக் கண்டு அவரது மனம் அலைபாய்ந்தது. பக்தியில்லாதவர்கள் கடவுளுடைய சட்டங்களை மீறியபோதும் எந்த கெட்ட விளைவுகளையும் சந்திக்காததுபோல் அவருக்கு தோன்றியது. “என் கால்கள் சற்றே நிலைதடுமாறலாயின; நான் அடிசறுக்கி விழப்போனேன். ஆணவம் கொண்டோர்மேல் நான் பொறாமை கொண்டேன்; பொல்லாரின் வளமிகு வாழ்வை நான் கண்டேன்” என அவர் பிற்பாடு ஒப்புக்கொண்டார்.—சங்கீதம் (திருப்பாடல்கள்) 73:2, 3, பொ.மொ.
அதன் பிறகு ஆசாப் கடவுளுடைய பரிசுத்த ஸ்தலத்திற்கு சென்று இந்த விஷயத்தைக் குறித்து ஜெபம் செய்தார். அவர் மறுபடியும் ஆவிக்குரிய தெளிவைப் பெற்றார். யெகோவா துன்மார்க்கத்தை வெறுக்கிறார் என்றும், ஏற்ற சமயத்தில் நல்லோரும் சரி தீயோரும் சரி, தாங்கள் விதைத்ததை அறுப்பார்கள் என்றும் புரிந்துகொண்டார். (சங்கீதம் 73:16-20; கலாத்தியர் 6:7, 8) உண்மையில் பொல்லாதவர்கள் சறுக்கலான இடங்களில் நிற்கிறார்கள். இறுதியில், யெகோவா இந்த அவபக்தியுள்ள உலகத்தை அழிக்கும்போது அவர்கள் விழுவார்கள்.—வெளிப்படுத்துதல் 21:8.
[பக்கம் 15-ன் படங்கள்]
யெகோவா உங்கள் நலனில் மிகுந்த அக்கறை காட்டுகிறார், ஆனால் சாத்தானோ உங்களை விழுங்கத் துடிக்கிறான்
[பக்கம் 16-ன் படம்]
உடன் கிறிஸ்தவர்களோடு சேர்ந்து யெகோவாவை சேவிப்பதில் அநேக இளைஞர்கள் மிகுந்த சந்தோஷத்தைப் பெறுகிறார்கள்