இயேசு வாழ்ந்ததற்கு தொல்லியல் அத்தாட்சி?
“இயேசு வாழ்ந்ததற்கு அத்தாட்சி கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.” இப்படித்தான் பைபிள் சார்ந்த தொல்லியல் ஆய்வு (நவம்பர்/டிசம்பர் 2002) என்ற ஆங்கில இதழின் அட்டை பக்கம் அறிவித்தது. சுண்ணாம்பு கல்லில் இழைக்கப்பட்ட ஓர் எலும்பு பெட்டி அந்தப் பத்திரிகையின் அட்டையில் சித்தரிக்கப்பட்டிருந்தது. பொ.ச.மு. முதல் நூற்றாண்டுக்கும் பொ.ச. 70-க்கும் இடைப்பட்ட குறுகிய காலங்களில் இத்தகைய எலும்பு பெட்டிகள் யூதர்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்பட்டன. இந்தப் பெட்டியின் ஒரு பக்கத்தில் அரமிய மொழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அதில், “யோசேப்பின் குமாரனும், இயேசுவின் சகோதரனுமாகிய யாக்கோபு” என எழுதப்பட்டிருந்ததாக அறிஞர்கள் ஒத்துக்கொண்டனர்.
நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசுவுக்கு யாக்கோபு எனப்பட்ட ஒரு சகோதரன் இருந்தார் என்றும், அவர் மரியாளின் கணவராகிய யோசேப்பின் மகனாக கருதப்பட்டார் என்றும் பைபிள் கூறுகிறது. இயேசு தமது சொந்த ஊரில் போதித்த சமயத்தில், அந்தக் கூட்டத்தார் ஆச்சரியப்பட்டு, “இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா?” என்று கேட்டார்கள்.—மத்தேயு 13:54-56; லூக்கா 4:22; யோவான் 6:42.
ஆம், அந்தப் பெட்டியில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் நசரேயனாகிய இயேசுவைப் பற்றிய வருணனைக்குப் பொருந்துகின்றன. அந்தப் பெட்டியில் யாக்கோபு என குறிப்பிடப்பட்டுள்ளது இயேசு கிறிஸ்துவின் ஒன்றுவிட்ட உடன் சகோதரனாக இருந்தால், இயேசு வாழ்ந்ததற்கு “பைபிளைத் தவிர மிகப் பழமையான தொல்பொருள் அத்தாட்சி” இதுவாகத்தான் இருக்கும் என அடித்துக் கூறுகிறார் ஆன்ட்ரே லெமர்; இவர் பழங்கால கல்வெட்டுகளைப் பற்றி சொல்லும் நிபுணரும் பைபிள் சார்ந்த தொல்லியல் ஆய்வு பத்திரிகையில் வெளிவந்ததாக மேலே குறிப்பிடப்பட்ட கட்டுரையின் எழுத்தாளரும் ஆவார். “பூமியில் எக்காலத்திலும் வாழ்ந்த மனிதர்களிலேயே மிக முக்கியமான நபரைப் பற்றிய நிஜமான, காணக்கூடிய அத்தாட்சிதான்” இந்த எலும்பு பெட்டி என இப்பத்திரிகையின் பதிப்பாசிரியர் ஹெர்ஷெல் ஷாங்க்ஸ் குறிப்பிடுகிறார்.
இருந்தாலும், அந்தப் பெட்டியில் பொறிக்கப்பட்டுள்ள வாசிக்கத்தக்க அம்மூன்று பெயர்களும் முதல் நூற்றாண்டில் மிகவும் சகஜமானவை. ஆகவே, இயேசு கிறிஸ்துவின் குடும்பம் அல்லாமல், யாக்கோபு, யோசேப்பு, இயேசு என்ற பெயர்களில் நபர்களைக் கொண்ட வேறொரு குடும்பம் இருந்திருப்பதற்கு சாத்தியம் இருக்கிறது. “பொ.ச. 70-க்கு முன்பு எருசலேமில் வாழ்ந்த இரண்டு தலைமுறையினரில், . . . ‘யோசேப்பின் குமாரனும், இயேசுவின் சகோதரனுமாகிய யாக்கோபு’ என அழைக்கப்படுகிறவர்கள் ஒருவேளை சுமார் 20 பேர் இருந்திருக்கலாம்” என லெமர் குறிப்பிடுகிறார். என்றபோதிலும், இந்தப் பெட்டியில் பொறிக்கப்பட்டுள்ள யாக்கோபு என்ற பெயர் இயேசு கிறிஸ்துவின் ஒன்றுவிட்ட உடன் சகோதரனாகிய யாக்கோபுதான் என்பதற்கு 90 சதவீத வாய்ப்பு இருப்பதாக அவர் கருதுகிறார்.
இதிலுள்ள எழுத்துப் பொறிப்புகள் இயேசு கிறிஸ்துவின் ஒன்றுவிட்ட உடன் சகோதரனாகிய யாக்கோபையே குறிக்கிறது என்பதை சிலர் நம்புவதற்கு மற்றொரு காரணம் இருக்கிறது. இறந்துபோனவருடைய தகப்பனார் பெயரை சேர்த்து குறிப்பிடுவது சாதாரண பழக்கமாக இருந்தாலும், ஒரு சகோதரனுடைய பெயரை சேர்த்து குறிப்பிடுவது அபூர்வமே. ஆகவே, இந்த இயேசு முக்கியமான ஒருவராக இருக்க வேண்டும் என்றும், இவர் கிறிஸ்தவத்தின் ஸ்தாபகராகிய இயேசு கிறிஸ்துவாகத்தான் இருக்க வேண்டும் என்றும் அறிஞர்கள் சிலர் நம்புகின்றனர்.
அந்த எலும்பு பெட்டி நம்பகமானதா?
எலும்பு பெட்டி என்பது என்ன? கல்லறையில் வைக்கப்பட்ட உடல் அழுகியப் பிறகு இறந்தவருடைய எலும்புகளைப் போட்டு வைக்கும் பெட்டி அல்லது பேழைதான் அது. எருசலேமைச் சுற்றிலுமிருந்த கல்லறைகளிலிருந்து இந்தப் பெட்டிகளில் பல கொள்ளையடிக்கப்பட்டுவிட்டன. யாக்கோபின் பெயர் பொறிக்கப்பட்ட இந்தப் பெட்டி பண்டைக்கால பொருட்கள் கிடைக்கும் சந்தையிலிருந்து பெறப்பட்டது, அதிகாரப்பூர்வமான அகழாய்வு இடத்திலிருந்து அல்ல. இப்பண்டைய பொருளை அதன் சொந்தக்காரர் 1970-களில் சில டாலருக்கு வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆகவே, இந்தப் பெட்டி எப்படி வந்தது என்பது ஒரு மர்மமாக இருக்கிறது. “ஒரு பண்டைக்கால பொருள் எங்கிருந்து கண்டெடுக்கப்பட்டது என்பதையும், சுமார் 2,000 ஆண்டுகளாக எங்கிருந்தது என்பதையும் உங்களால் சொல்ல முடியாவிட்டால், அந்தப் பொருளுக்கும் அது குறிப்பிடும் ஆட்களுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி உங்களால் ஊகிக்க முடியாது” என நியு யார்க்கின் பார்ட் கல்லூரி பேராசிரியர் புரூஸ் சில்டன் கூறுகிறார்.
தொல்லியல் பின்னணி இல்லாததை ஈடுகட்டுவதற்கு, இஸ்ரேலின் நிலவியல் அளவைத் துறைக்கு (Geological Survey of Israel) அந்தப் பெட்டியை ஆன்ட்ரே லெமர் அனுப்பினார். அந்தப் பெட்டி பொ.ச. முதல் நூற்றாண்டில் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் சுண்ணாம்புக் கல்லால் தயாரிக்கப்பட்டது என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தினர். “நவீன கருவிகளோ பொருட்களோ பயன்படுத்தப்பட்டதாக எந்த அறிகுறியும் இல்லை” என்று கூறினர். இருந்தாலும், “அது இயேசுதான் என்பதற்கு சூழ்நிலைச் சான்று பலமாக இருக்கிறது, என்றாலும் அது சூழ்நிலைச் சான்றுதான்” என நியு யார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்த பைபிள் கல்விமான்கள் கருத்துத் தெரிவித்தனர்.
“படித்த எவருமே இயேசு வாழ்ந்தார் என்பதைக் குறித்து இன்று சந்தேகப்பட மாட்டார்கள்” என டைம் பத்திரிகை குறிப்பிட்டது. என்றாலும், இயேசு வாழ்ந்தார் என்பதற்கு பைபிளைத் தவிர வேறு அத்தாட்சியும் வேண்டும் என பலர் நினைக்கின்றனர். இயேசு கிறிஸ்துவை நம்புவதற்கு தொல்லியல் ஆதாரம் அவசியமா? “பூமியில் எக்காலத்திலும் வாழ்ந்த மனிதர்களிலேயே மிக முக்கியமான நபரைப்” பற்றி நம்மிடம் உள்ள வரலாற்று சான்று என்ன?
[பக்கம் 3-ன் படங்களுக்கான நன்றி]
இடது, யாக்கோபின் எலும்பு பெட்டி: AFP PHOTO/J.P. Moczulski; right, கல்வெட்டு: AFP PHOTO/HO