பட்சபாதமில்லாத நம் கடவுளாகிய யெகோவாவை பின்பற்றுங்கள்
“தேவனிடத்தில் பட்சபாதமில்லை.”—ரோமர் 2:11.
1, 2. (அ) பொதுவாக கானானியர்களைக் குறித்ததில் யெகோவாவின் நோக்கம் என்னவாக இருந்தது? (ஆ) யெகோவா என்ன செய்தார், இதனால் என்ன கேள்விகள் எழுகின்றன?
மோ வாபின் சமவெளிகளில் இஸ்ரவேலர் பாளயம் இறங்கியிருந்த சமயம் அது. வருடம் பொ.ச.மு. 1473. மோசேயின் வார்த்தைகளை அவர்கள் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். யோர்தான் நதிக்கு அப்பால் அவர்கள் சந்திக்க வேண்டிய சவால் ஒன்றிருந்தது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்த வலிமைமிக்க ஏழு கானானிய தேசங்களை அவர்கள் தோற்கடிக்க வேண்டும் என்ற யெகோவாவின் நோக்கத்தை மோசே அறிவித்தார். “உங்கள் தேவனாகிய யெகோவா அவர்களை கண்டிப்பாக உங்களிடத்தில் ஒப்புக்கொடுப்பார், நீங்கள் அவர்களை வீழ்த்த வேண்டும்” என்று சொல்லி மோசே நம்பிக்கை அளித்தார். இஸ்ரவேலர் அந்தத் தேசத்தாரோடு எந்த உடன்படிக்கையும் செய்யக் கூடாதென்று சொல்லப்பட்டது; அத்தேசத்தார் எந்த தயவும் பெற தகுதியற்றவர்களாக இருந்தனர்.—உபாகமம் 1:2; 7:1, 2, NW.
2 எனினும் இஸ்ரவேலர் தாக்குதல் நடத்திய முதல் நகரத்தில் யெகோவா ஒரு குடும்பத்தாரை அழிக்காமல் காப்பாற்றினார். இன்னும் நான்கு பட்டணங்களிலிருந்த சிலரையும் பாதுகாத்தார். ஏன்? இந்தக் கானானியர்கள் தப்பிப்பிழைத்ததைப் பற்றிய குறிப்பிடத்தக்க பதிவுகள் யெகோவாவைப் பற்றி நமக்கு என்ன கற்பிக்கின்றன? நாம் எவ்வாறு அவரை பின்பற்றலாம்?
யெகோவாவின் புகழ் ஏற்படுத்திய தாக்கம்
3, 4. இஸ்ரவேலர்களின் வெற்றிகளைப் பற்றிய செய்திகள் கானானில் இருந்தவர்கள்மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தின?
3 வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் செல்வதற்கு முன்பு இஸ்ரவேலர் 40 வருடங்களை வனாந்தரத்தில் கழித்தனர்; அந்த சமயத்தில் யெகோவா தம் மக்களுக்காக சண்டையிட்டு அவர்களை காப்பாற்றினார். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு தெற்கே இருந்த கானானிய ராஜா ஆராத் இஸ்ரவேலரோடு மோதினான். யெகோவாவின் உதவியோடு அவனையும் அவனுடைய மக்களையும் ஓர்மா என்ற இடத்தில் இஸ்ரவேலர் வீழ்த்தினர். (எண்ணாகமம் 21:1-3) பிற்பாடு இஸ்ரவேலர் ஏதோம் தேசத்தின் மையப்பகுதியை சுற்றி வடக்கு நோக்கி சென்று, சவக்கடலின் வடகிழக்கு பகுதிக்கு பயணப்பட்டனர். அங்கு எமோரியர்கள் குடியிருந்தனர்; முன்போ அங்கு மோவாபியர்கள் குடியிருந்தனர். இஸ்ரவேலர் அவ்வழியில் செல்ல எமோரிய ராஜா சீகோன் அனுமதிக்கவில்லை. ஆகவே யாகாசு என்ற இடத்தில் போர் மூண்டது; அது அர்னோன் பள்ளத்தாக்கின் வடக்கே இருந்திருக்கலாம். அங்குதான் சீகோன் கொல்லப்பட்டான். (எண்ணாகமம் 21:23, 24; உபாகமம் 2:30-33) அதற்கும் வடக்கே பாசானில் இருந்த மற்ற எமோரியர்களை ஓக் என்பவன் ஆண்டுவந்தான். ஓக் ஒரு ராட்சச பிறவியாக இருந்தபோதும் யெகோவாவுக்கு முன் வெறும் துரும்பாக இருந்தான். அவன் எத்ரேயு என்ற இடத்தில் கொல்லப்பட்டான். (எண்ணாகமம் 21:33-35; உபாகமம் 3:1-3, 11) இந்த வெற்றிகளை பற்றிய செய்தியும் எகிப்திலிருந்து இஸ்ரவேலர் விடுவிக்கப்பட்ட விவரங்களும் கானானில் வாழ்ந்தவர்கள்மீது பலத்த தாக்கத்தை ஏற்படுத்தின.a
4 இஸ்ரவேலர் யோர்தானைக் கடந்து முதன்முதலில் கானானுக்குள் நுழைந்தபோது, கில்கால் என்ற இடத்தில் பாளயம் இறங்கினர். (யோசுவா 4:9-19) அதற்கு அருகேதான் மதில் சூழ்ந்த எரிகோ நகரம் இருந்தது. யெகோவாவின் செயல்களைப் பற்றி கானானியப் பெண் ராகாப் கேள்விப்பட்ட விஷயங்கள், விசுவாசத்தோடு செயல்பட அவளைத் தூண்டின. அதன் விளைவாக, எரிகோமீது யெகோவா அழிவைக் கொண்டுவந்தபோது அவளையும் அவள் வீட்டாரையும் காப்பாற்றினார்.—யோசுவா 2:1-13; 6:17, 18; யாக்கோபு 2:25.
5. விவேகமாக நடந்துகொள்ள கிபியோனியர்களைத் தூண்டியது எது?
5 அடுத்ததாக, இஸ்ரவேலர் யோர்தான் நதிக்குப் பக்கத்திலிருந்த தாழ்நிலங்களை விட்டு அப்பகுதியின் நடுவிலிருந்த குன்றுகள்மீது ஏறினர். யெகோவா கொடுத்த கட்டளைகளின்படியே ஆயி பட்டணத்தை கைப்பற்ற யோசுவா சாணக்கியத்தோடு பதுங்கியிருந்து தாக்க ஏற்பாடு செய்தார். (யோசுவா, அதிகாரம் 8) அப்பட்டணம் பயங்கரமாக அழிக்கப்பட்டதைக் கேள்விப்பட்டு பல கானானிய ராஜாக்கள் போர் தொடுக்க ஏகமாய்க் கூடினார்கள். (யோசுவா 9:1, 2) அருகேயிருந்த ஏவியர் நகரமான கிபியோனில் இருந்தவர்களோ வித்தியாசமாக நடந்துகொண்டார்கள். “அவர்கள் ஒன்றாக கூடி ஆலோசனை பண்ணி விவேகமாக நடந்துகொண்டார்கள்” என யோசுவா 9:4 (NW) சொல்கிறது. யெகோவா இஸ்ரவேலரை எகிப்திலிருந்தும் சீகோன், ஓக் ஆகிய ராஜாக்களின் கைகளிலிருந்தும் காப்பாற்றியதைப் பற்றி ராகாபைப் போலவே கிபியோனியர்களும் கேள்விப்பட்டிருந்தனர். (யோசுவா 9:6-10) இஸ்ரவேலரை எதிர்த்துப் போரிடுவது வீண் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். ஆகவே கிபியோன் சார்பாகவும் அருகிலிருந்த கெபிரா, பெயெரோத், கீரியாத்யெயாரீம் ஆகிய மூன்று பட்டணங்களின் சார்பாகவும் கில்காலிலிருந்த யோசுவாவிடம் சிலரை மாறுவேடத்தில் அனுப்பினர்; தொலைதூரத்திலிருந்து வந்திருப்பதுபோல் அவர்கள் தங்களைக் காட்டிக்கொண்டனர். அவர்களது தந்திரம் பலித்தது. யோசுவா அவர்களோடு ஓர் உடன்படிக்கை செய்தார்; அதனால் அவர்கள் உயிர் தப்பினர். மூன்று நாட்களுக்குப் பிறகு, தாங்கள் ஏமாற்றப்பட்டதை யோசுவாவும் இஸ்ரவேலரும் புரிந்துகொண்டனர். இருந்தாலும் யெகோவாவின் பெயரில் சத்தியம் செய்திருந்ததால் அவர்கள் உடன்படிக்கையை மீறவில்லை. (யோசுவா 9:16-19) யெகோவா அச்செயலை சரியென்று கருதினாரா?
6. கிபியோனியர்களோடு யோசுவா செய்த உடன்படிக்கை சம்பந்தமாக யெகோவா எப்படி செயல்பட்டார்?
6 இஸ்ரவேலருக்கு—கூடாரத்திலிருந்த ‘யெகோவாவின் பலிபீடத்திற்கும்’கூட—மரங்களை வெட்டிக்கொடுக்கவும் தண்ணீரை சுமந்துவரவும் கிபியோனியர்கள் உபயோகிக்கப்பட்டனர். (யோசுவா 9:21-27) அதுமட்டுமின்றி, ஐந்து எமோரிய ராஜாக்களும் அவர்களது சேனைகளும் கிபியோனியர்களை அச்சுறுத்தியபோது யெகோவா தலையிட்டு அற்புதமாக செயல்பட்டார். யோசுவாவின் படைகளைவிட கல்மழையே அதிகமான எதிரிகளின் உயிர்களை காவுகொண்டது. எதிரிகளை முழுமையாக முறியடிக்கும் வரை சூரியனையும் சந்திரனையும் அசையாது நிற்க வைக்கும்படி கேட்ட யோசுவாவின் வேண்டுகோளையும் யெகோவா நிறைவேற்றினார். ‘இப்படி யெகோவா ஒரு மனிதனுடைய சொல் கேட்ட அந்நாளையொத்த நாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப் பின்னுமில்லை; யெகோவா இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்’ என யோசுவா குறிப்பிட்டார்.—யோசுவா 10:1-14.
7. பேதுரு ஒப்புக்கொண்ட என்ன அடிப்படை உண்மை சில கானானியர்கள் விஷயத்தில் தெளிவுபடுத்தப்பட்டது?
7 கானானியர்களான ராகாபும், அவளது குடும்பத்தாரும், கிபியோனியர்களும்கூட யெகோவாவிற்கு பயப்பட்டார்கள், அதற்கேற்ப நடக்கவும் செய்தார்கள். அவர்களுக்கு சம்பவித்த காரியம், ஒரு உண்மையை தெளிவுபடுத்துகிறது; அதைத்தான் கிறிஸ்தவ அப்போஸ்தலன் பேதுரு பிற்பாடு குறிப்பிட்டார்; “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல . . . எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்” என்றார்.—அப்போஸ்தலர் 10:34, 35.
ஆபிரகாமையும் இஸ்ரவேலரையும் நடத்திய விதம்
8, 9. ஆபிரகாமையும் இஸ்ரவேலரையும் யெகோவா எவ்வாறு பட்சபாதமில்லாமல் நடத்தினார்?
8 ஆபிரகாமையும் அவரது சந்ததியாரையும் நடத்திய விதத்தில் யெகோவா வெளிக்காட்டிய தகுதியற்ற தயவிடம் சீஷனாகிய யாக்கோபு கவனத்தைத் திருப்பினார். ஆபிரகாம் ‘யெகோவாவின் சிநேகிதனாக’ ஆனதற்கு அவரது இனம் அல்ல, ஆனால் அவரது விசுவாசமே காரணம். (யாக்கோபு 2:23) யெகோவா மீது ஆபிரகாமுக்கு இருந்த விசுவாசமும் அன்பும் அவரது சந்ததியாருக்கு ஆசீர்வாதங்களை அளித்தன. (2 நாளாகமம் 20:7) “நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன்” என்று யெகோவா ஆபிரகாமிடம் வாக்குறுதி அளித்தார். ஆனால் “உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்” என்றும் வாக்குறுதி கொடுக்கப்பட்டதை அடுத்த வசனத்தில் கவனியுங்கள்.—ஆதியாகமம் 22:17, 18; ரோமர் 4:1-8.
9 யெகோவா கொஞ்சமும் பட்சபாதம் காட்டவில்லை; மாறாக, இஸ்ரவேலரை நடத்திய விதத்தின் மூலம், தமக்குக் கீழ்ப்படிபவர்களுக்கு தம்மால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டினார். அப்படிப்பட்ட சம்பவங்கள், உண்மையுள்ள ஊழியர்கள்மீது யெகோவா பற்றுமாறாத அன்பை காட்டுவதற்கு எடுத்துக்காட்டுகள். இஸ்ரவேலர் யெகோவாவின் ‘விசேஷித்த சொத்தாக’ இருந்தது உண்மைதான்; அதற்காக மற்றவர்கள் கடவுளுடைய அருளை பெற முடியாதவர்களாக இல்லை. (யாத்திராகமம் 19:5, NW; உபாகமம் 7:6-8, NW) யெகோவா இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, “பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன்” என அறிவித்தது உண்மைதான். ஆனால் ஆமோஸ் தீர்க்கதரிசி மூலமும் மற்றவர்கள் மூலமும் அவர் ‘சகல ஜாதிகளுக்குமே’ அருமையான எதிர்பார்ப்பை அளித்தார்.—ஆமோஸ் 3:2; 9:11, 12; ஏசாயா 2:2-4.
இயேசு—பட்சபாதமில்லாத ஆசிரியர்
10. இயேசு எவ்வாறு தம் பிதாவைப் போலவே பட்சபாதமில்லாமல் நடந்துகொண்டார்?
10 குணாம்சத்தில் யெகோவாவின் பிரதிபிம்பமாக திகழும் இயேசு, பூமிக்குரிய ஊழியத்தின்போது யெகோவாவைப் போலவே பட்சபாதமில்லாமல் நடந்துகொண்டார். (எபிரெயர் 1:3, NW) அச்சமயத்தில் ‘காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரை’ கண்டுபிடிப்பதே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனாலும் கிணற்றருகே ஒரு சமாரியப் பெண்ணிடம் சாட்சி கொடுக்க அவர் தயங்கவில்லை. (மத்தேயு 15:24; யோவான் 4:7-30) புறதேசத்தானாகிய நூற்றுக்கு அதிபதி வேண்டிக் கொண்டதன் பேரில் அவர் ஓர் அற்புதத்தையும் செய்தார். (லூக்கா 7:1-10) கடவுளுடைய மக்களுக்கு அன்பான காரியங்களை செய்தது போக மற்றவர்களுக்கும் இவ்வாறு உதவினார். அவருடைய சீஷர்கள்கூட எல்லா இடங்களிலும் இருந்தவர்களுக்கு பிரசங்கித்தார்கள். ஆக, எந்தத் தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்தல்ல, ஆனால் என்ன மனப்பான்மையைக் காட்டுகிறார்கள் என்பதைப் பொறுத்தே யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற முடியும் என்பது தெளிவானது. சத்தியத்திற்காக ஏங்கி தவித்த பணிவும், நேர்மையும் மிக்கவர்கள் ராஜ்ய நற்செய்தியை ஏற்றுக்கொண்டார்கள். கர்வமும் ஆணவமும் மிக்கவர்களோ இயேசுவையும் அவரது செய்தியையும் இழித்துப் பழித்தார்கள். “பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது” என இயேசு கூறினார். (லூக்கா 10:21) அன்பு மற்றும் விசுவாசத்தின் அடிப்படையில் நாம் மற்றவர்களை நடத்தும்போது யெகோவாவிற்குப் பிரியமாக, அதாவது பட்சபாதமில்லாமல் நடந்துகொள்கிறோம்.
11. ஆரம்ப கால கிறிஸ்தவ சபையில் பட்சபாதம் காட்டப்படவில்லை என ஏன் சொல்லலாம்?
11 ஆரம்ப கால கிறிஸ்தவ சபையில் யூதர்களும் யூதர்களல்லாதவர்களும் சமமாக கருதப்பட்டனர். “முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மை செய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும். தேவனிடத்தில் பட்சபாதமில்லை” என்று பவுல் விளக்கினார்.b (ரோமர் 2:10, 11) எந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதன் அடிப்படையில் அல்ல, ஆனால் யெகோவாவையும் அவரது குமாரன் இயேசுவின் மீட்கும் பலி தரும் ஆசீர்வாதங்களையும் பற்றி கற்றுக்கொண்டபோது எப்படி பிரதிபலித்தார்கள் என்பதன் அடிப்படையிலேயே யெகோவாவின் தகுதியற்ற தயவை மக்கள் பெற்று நன்மையடைந்தார்கள். (யோவான் 3:16, 36) பவுல் இவ்வாறு எழுதினார்: “புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்.” பிறகு, “யூதன்” (அர்த்தம்: “யூதாவைச் சேர்ந்தவன்,” அதாவது பாராட்டப்படுபவன் அல்லது புகழப்படுபவன்) என்ற பதத்தோடு சம்பந்தப்பட்ட வார்த்தைகளை திறமையாக பயன்படுத்தி, “இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது” என்றார். (ரோமர் 2:28, 29) யெகோவா பட்சபாதமில்லாமல் மற்றவர்களை புகழ்கிறார். நாமும் அப்படி செய்கிறோமா?
12. வெளிப்படுத்துதல் 7:9 என்ன எதிர்பார்ப்பை அளிக்கிறது, யாருக்கு?
12 பிற்பாடு அப்போஸ்தலனாகிய யோவான் ஒரு தரிசனத்தைக் கண்டார்; அதில், அபிஷேகம் செய்யப்பட்ட உண்மையுள்ள கிறிஸ்தவர்கள், “இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரை போடப்பட்ட” 1,44,000 பேர் அடங்கிய ஆவிக்குரிய தேசமாக சித்தரிக்கப்பட்டதைப் பார்த்தார். அதன் பிறகு, “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்த . . . திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்” கண்டார். (வெளிப்படுத்துதல் 7:4, 9) இவ்வாறு, இன்றைய கிறிஸ்தவ சபையில் எந்த இனத்தாருக்கும் அல்லது பாஷைக்காரருக்கும் இடமில்லாமல் இல்லை. வரவிருக்கும் ‘மிகுந்த உபத்திரவத்தில்’ தப்பிப்பிழைத்து புதிய உலகில் ‘ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டையிலிருந்து’ குடிக்கும் எதிர்ப்பார்ப்பு எல்லா விதமான பின்னணியைச் சேர்ந்தவர்களுக்கும் உண்டு.—வெளிப்படுத்துதல் 7:14-17.
நல்ல பலன்கள்
13-15. (அ) இன, கலாச்சார வேறுபாடுகளை நாம் எவ்வாறு தகர்த்தெறியலாம்? (ஆ) சிநேகப்பான்மையால் பலன் கிடைக்கும் என்பதற்கு உதாரணங்கள் தருக.
13 நல்ல தகப்பன் தன் பிள்ளைகளை அறிந்திருப்பதுபோல் யெகோவா நம்மை நன்கு அறிந்திருக்கிறார். அதேபோல் நாமும் மற்றவர்களுடைய கலாச்சாரத்தையும் பின்னணியையும் பற்றி அக்கறையோடு தெரிந்துகொண்டு அவர்களை புரிந்துகொள்வோமானால் வேறுபாடுகள் ஒரு பிரச்சினையாகவே இருக்காது. இன பாகுபாடுகள் மறைந்து, நட்பும் அன்பும் அதிகரிக்கும். ஐக்கியம் பலப்படும். (1 கொரிந்தியர் 9:19-23) வெளிநாடுகளில் ஊழியம் செய்யும் மிஷனரிகளின் விஷயத்தில் இதுவே உண்மை. அங்கே வாழ்வோரிடம் அவர்கள் அக்கறை காட்டுகிறார்கள்; அதன் காரணமாக அங்கிருக்கும் சபைகளோடு சீக்கிரத்தில் ஒன்றிவிடுகிறார்கள்.—பிலிப்பியர் 2:4.
14 பட்சபாதமில்லாமல் நடந்துகொள்வதன் பலன்களை அநேக நாடுகளில் உள்ளோர் கண்கூடாக கண்டிருக்கின்றனர். ஆக்ளிலூ என்பவர் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்; ஆனால் பிரிட்டனின் தலைநகரான லண்டனில் வசித்து வந்தார். தனிமை உணர்வு அவரை வாட்டியெடுத்தது. போதா குறைக்கு, அங்குள்ளவர்கள் வெளிநாட்டவர்களோடு ஒட்டாமல் ஒதுங்கி வாழ்வதாக அவருக்கு தோன்றியது; இன்றைய ஐரோப்பாவின் அநேக மாநகரங்களில் இப்படிப்பட்ட சூழல் நிலவுவதாக கருதப்படுகிறது. ஆனால் ஆக்ளிலூ யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்திற்கு போனபோது நெகிழ்ந்துபோனார்! அங்கிருந்தவர்கள் அவரை வரவேற்றார்கள், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவரது கூச்சமும் தயக்கமும் பறந்துபோனது. படைப்பாளரைப் பற்றி அதிகம் தெரிந்துகொண்டு போற்றுதல் காட்டுவதில் அவர் வேகமாக முன்னேறினார். அந்த மாவட்டத்திலிருந்த மற்றவர்களோடு ராஜ்ய நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகளைத் தேடினார். சொல்லப்போனால், ஆக்ளிலூவோடு ஊழியம் செய்துகொண்டிருந்தவர், “இப்போது உங்களுடைய வாழ்க்கையின் இலட்சியங்கள் என்ன?” என்று கேட்டபோது, தன் தாய்மொழியாகிய அம்ஹாரிக் மொழியில் என்றாவது ஒரு சபை உருவாவதைக் காண வேண்டும் என்பதே தன் ஆசை என ஆக்ளிலூ சட்டென பதிலளித்தார். அங்கிருந்த ஆங்கில சபையின் மூப்பர்கள் இதைக் கேள்விப்பட்டபோது, உடனடியாக ஆக்ளிலூவின் தாய்மொழியில் ஒரு பொதுப் பேச்சை ஏற்பாடு செய்தார்கள். பிரிட்டனில் நடந்த முதல் அம்ஹாரிக் கூட்டத்திற்கு அநேக வெளிநாட்டவர்களும் உள்ளூர்வாசிகளும் வந்திருந்தார்கள். இன்று ஒரு அம்ஹாரிக் சபை அங்கு தழைத்தோங்குகிறது; அந்தப் பிராந்தியத்திலுள்ள எத்தியோப்பியர்களும் மற்றவர்களும் ஒற்றுமையோடு ஒன்றுகூடி வருகிறார்கள். யெகோவாவின் சார்பாக நிலைநிற்கை எடுப்பதையும் அதற்கு அடையாளமாக கிறிஸ்தவ முழுக்காட்டுதல் பெறுவதையும் எதுவுமே தடை செய்ய முடியாது என்பதை அங்குள்ள அநேகர் கண்டிருக்கிறார்கள்.—அப்போஸ்தலர் 8:26-36.
15 பண்புகளும் பின்னணிகளும் நபருக்கு நபர் வித்தியாசப்படுகின்றன. ஆனால் அவை வெறுமனே வித்தியாசங்கள்தான்; மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்றோ தாழ்ந்தவர்கள் என்றோ காட்டும் தராதரங்கள் அல்ல. மால்டா தீவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள், புதியவர்கள் யெகோவாவிற்கு தங்களை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறுவதைப் பார்த்து குதூகலத்தை வெளிக்காட்டினர். பிரிட்டனிலிருந்து வந்திருந்தவர்களின் கண்களோ சந்தோஷத்தில் குளமாயின. இருதரப்பினருமே தங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டினார்கள், ஆனால் வித்தியாசமான விதங்களில் வெளிக்காட்டினார்கள்; யெகோவாவின் மீதான பலமான அன்பு அவர்களது கிறிஸ்தவ சகோதரத்துவத்தை பலப்படுத்தியது.—சங்கீதம் 133:1; கொலோசெயர் 3:14.
தப்பெண்ணத்தை தகர்த்தெறிவது
16-18. கிறிஸ்தவ சபையில் தப்பெண்ணத்தை எவ்வாறு தகர்த்தெறியலாம் என்பதற்கு ஒரு அனுபவத்தை சொல்லுங்கள்.
16 யெகோவாவின் மீதும் நம் கிறிஸ்தவ சகோதரர்கள் மீதும் அன்பு பெருகப் பெருக, மற்றவர்களை நாம் எண்ணும் விதத்தில் யெகோவாவை மிக நெருக்கமாக பின்பற்ற முடியும். சில குறிப்பிட்ட தேசங்கள், இனங்கள் அல்லது கலாச்சாரங்கள் மீது நமக்கு ஏதேனும் தப்பெண்ணம் இருந்தால் அதை தகர்த்தெறிய முடியும். ஆல்பர்ட் என்பவரின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் இரண்டாம் உலக யுத்தத்தின் போது பிரிட்டிஷ் படையில் பணியாற்றினார். 1942-ல் சிங்கப்பூர் கைப்பற்றப்பட்டபோது அவர் ஜப்பானியர்களிடம் பிடிபட்டார். பிற்பாடு சுமார் மூன்று ஆண்டுகளுக்கு “மரண ரயில்பாதை” அமைக்கும் பணியில் ஈடுபட்டார்; அதன் அருகேயிருந்த க்வை நதியின்மீதுதான் புகழ்பெற்ற பாலம் அமைக்கப்பட்டது. போர் முடிவடைந்த பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்; ஆனால் அப்போது அவரது எடை வெறும் 32 கிலோ, தாடையிலும் மூக்கிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தன. அதுமட்டுமல்ல, சீதபேதி, படர்தாமரை, மலேரியா ஆகியவற்றாலும் அவதிப்பட்டார். அவருடன் சிறையில் இருந்த ஆயிரக்கணக்கானவர்கள் இன்னும் மோசமான நிலையில் தவித்தனர். அநேகர் பிழைக்கவே இல்லை. அட்டூழியங்களை கண்ணார கண்டதாலும் அனுபவித்ததாலும், கடவுளுமில்லை மதமுமில்லை என்ற விரக்தியோடும் மனக்கசப்போடும் அவர் 1945-ல் வீடுதிரும்பினார்.
17 ஆல்பர்ட்டின் மனைவி ஐரின் யெகோவாவின் சாட்சியாக ஆனாள். அவளுடைய சந்தோஷத்திற்காக, அங்கு நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சில கூட்டங்களுக்கு அவர் சென்றார். முழுநேர ஊழியம் செய்துகொண்டிருந்த பால் என்ற இளம் கிறிஸ்தவர் ஆல்பர்ட்டை சந்தித்து பைபிள் படிப்பு நடத்தினார். யெகோவா ஒவ்வொருவரின் இருதய நிலையையும் பார்க்கிறார் என்பதை ஆல்பர்ட் விரைவில் புரிந்துகொண்டார். தன் வாழ்க்கையை யெகோவாவிற்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றார்.
18 பிற்பாடு பால் லண்டனுக்கு குடிமாறிச் சென்று, ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொண்டு, அம்மொழி பேசும் சபையோடு கூட்டுறவு கொண்டார். அங்கு விஜயம் செய்த சில ஜப்பானிய சாட்சிகளை முன்பு தானிருந்த சபைக்கு அழைத்துச் செல்ல அவர் விரும்பினார்; ஆனால் அதைக் கேட்டவுடன் அந்தச் சபையைச் சேர்ந்த சகோதரர்கள் ஆல்பர்ட்டை நினைத்து பயப்பட்டனர். ஜப்பானியர்களைக் கண்டாலே அவருடைய இரத்தம் கொதிக்கும் என்பதும் அவர்கள் நினைவுக்கு வந்தது. பிரிட்டனுக்கு சென்றது முதல் ஆல்பர்ட் எந்த ஜப்பானியர்களையும் நேருக்கு நேர் சந்திக்காதிருக்கும்படி பார்த்துக்கொண்டார். ஆகவே என்ன செய்வாரோ என அந்த சகோதரர்கள் பயப்பட்டனர். உண்மையில் அவர்கள் கவலைப்பட்டிருக்கவே வேண்டாம்—ஆல்பர்ட் இருதயப்பூர்வமாய் சகோதர பாசத்தைப் பொழிந்து அந்த ஜப்பானிய சாட்சிகளை வரவேற்றார்.—1 பேதுரு 3:8, 9.
‘விரிவாகுங்கள்’
19. நம்மிடம் பட்சபாதத்தின் சிறு அறிகுறி தெரிந்தாலும் அப்போஸ்தலன் பவுலின் எந்த அறிவுரை உதவும்?
19 “பட்சபாதம் காட்டுவது நல்லதல்ல” என்று ஞானியாகிய சாலோமோன் ராஜா எழுதினார். (நீதிமொழிகள் 28:21, NW) நன்கு தெரிந்தவர்களிடம் நெருங்கிப் பழகுவது சுலபம். ஆனால் சிலசமயங்களில் அந்தளவுக்கு பழக்கமில்லாதவர்களை நாம் பொருட்படுத்தக்கூட மாட்டோம். இப்படிப்பட்ட பட்சபாதம் யெகோவாவின் ஊழியருக்கு அழகல்ல. நாம் அனைவரும், ‘விரிவாகுங்கள்’ என்ற பவுலின் தெளிவான அறிவுரைக்கு இணங்குவது நிச்சயமாகவே நல்லது; ஆம், வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த உடன் கிறிஸ்தவர்களிடம் அன்பு காட்டுவதில் விரிவாகுங்கள்.—2 கொரிந்தியர் 6:13, NW.
20. பட்சபாதமில்லாத நம் கடவுளாகிய யெகோவாவை வாழ்க்கையின் எந்த அம்சங்களில் பின்பற்ற வேண்டும்?
20 நமக்கு பரலோக நம்பிக்கை இருந்தாலும்சரி என்றென்றும் பூமியில் வாழும் நம்பிக்கை இருந்தாலும்சரி, பட்சபாதம் காட்டாதிருக்கும்போது, ஒரே மேய்ப்பனின்கீழ் ஒரே மந்தையாக ஐக்கியப்பட்டிருக்க முடியும். (எபேசியர் 4:4, 5, 16) பட்சபாதமில்லாத நம் கடவுளாகிய யெகோவாவைப் பின்பற்ற முயற்சி செய்வது, கிறிஸ்தவ ஊழியத்திலும் குடும்பத்திலும் சபையிலும், ஏன், வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் உதவியாக இருக்கும். அது எப்படி? அடுத்த கட்டுரை இதற்கு பதிலளிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் புகழ் பிற்பாடு பரிசுத்த பாடல்களின் மையப்பொருளானது.—சங்கீதம் 135:8-11; 136:11-20.
b இங்கே ‘கிரேக்கர்’ என்ற பதம் பொதுப்படையாக புறதேசத்தாரைக் குறிக்கிறது.—யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 1, பக்கம் 1004.
எப்படி பதிலளிப்பீர்கள்?
• ராகாபிடமும் கிபியோனியர்களிடமும் யெகோவா எவ்வாறு பட்சபாதமில்லாமல் நடந்துகொண்டார்?
• இயேசு எவ்வாறு பட்சபாதம் காட்டாமல் போதித்தார்?
• கலாச்சார, இன தப்பெண்ணங்களை தகர்த்தெறிய நமக்கு எது உதவும்?
[பக்கம் 13-ன் படம்]
கானானை இஸ்ரவேலர் கைப்பற்ற ஆரம்பிக்கின்றனர்
[பக்கம் 15-ன் படம்]
சமாரியப் பெண்ணிடம் சாட்சி கொடுக்க இயேசு தயங்கவில்லை
[பக்கம் 16-ன் படம்]
பிரிட்டனில் அம்ஹாரிக் மொழியில் கூட்டம்
[பக்கம் 16-ன் படம்]
யெகோவாவின் மீதான அன்பு தப்பெண்ணத்தை தகர்த்தெறிய ஆல்பர்ட்டுக்கு உதவியது