உண்மையான அன்பை வளர்ப்பது எவ்வாறு
“வாழ்க்கையின் சர்வரோக நிவாரணி அன்பு; அன்பே வாழ்க்கை.”—வாழ்க்கையிலிருந்து மிகச் சிறந்ததை பெறுதல் (ஆங்கிலம்), ஜோஸஃப் ஜான்ஸன், 1871.
மனிதன் அன்பாக இருக்க எப்படி கற்றுக்கொள்கிறான்? மனோதத்துவம் படிப்பதன் மூலமா? சுய உதவி புத்தகங்களை வாசிப்பதன் மூலமா? காதல் சமாச்சாரங்கள் நிறைந்த படங்களை பார்ப்பதன் மூலமா? இல்லை, இவை எதன் மூலமும் இல்லை. மனிதர்கள் முதலாவதாக அன்பு காண்பிக்க கற்றுக்கொள்வது, அவர்களுடைய பெற்றோரின் முன்மாதிரியிலிருந்தும் அவர்கள் கொடுக்கும் பயிற்சியிலிருந்தும்தான். அன்பும் பாசமும் பொங்கி வழியும் ஒரு சூழ்நிலையில், பெற்றோர்கள் தங்களை ஊட்டி வளர்ப்பதையும், பேணிப் பாதுகாப்பதையும், பேச்சுத்தொடர்பை வைத்துக்கொள்வதையும், ஆழ்ந்த அக்கறை காண்பிப்பதையும் பார்த்துத்தான் அன்பு என்றால் என்ன என்பதை பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள். அதோடு, சரி எது தவறு எது என்ற நல்ல நியமங்களை கடைப்பிடிக்க, பெற்றோர்கள் சொல்லித் தரும்போதும் பிள்ளைகள் அன்பு காட்ட கற்றுக்கொள்வார்கள்.
உண்மையான அன்பு என்பது வெறுமனே மேலோட்டமான உணர்ச்சியை குறிக்கிறதில்லை, அதைவிட அதிகத்தை குறிக்கிறது. மற்றவர்கள் இந்த அன்பை முழுமையாக மதிக்காதபோதுகூட அவர்களுடைய மிகச் சிறந்த நன்மைக்காகவே அது எப்போதும் செயல்படும்; உதாரணமாக, அன்பாக கண்டிக்கையில் பிள்ளைகள் பெரும்பாலும் அதை மதிப்பதில்லை. இத்தகைய சுயநலமற்ற அன்பை காண்பிப்பதில் படைப்பாளர் தாமே பரிபூரண உதாரணமாக திகழ்கிறார். ‘என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்து போகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சிக்கிறார்’ என அப்போஸ்தலன் பவுல் எழுதினார்.—எபிரெயர் 12:5, 6.
பெற்றோர்களே, உங்கள் குடும்பத்தின்மீது அன்பு காட்டுவதில் யெகோவாவின் மாதிரியை நீங்கள் எவ்வாறு பின்பற்றலாம்? கணவன் மனைவியாக உங்கள் மத்தியிலுள்ள உறவில் நல்ல ஒரு முன்மாதிரியை வைப்பது எந்தளவுக்கு முக்கியம்?
முன்மாதிரியின் மூலம் அன்பு காண்பிக்க கற்றுக்கொடுங்கள்
நீங்கள் ஒரு கணவர் என்றால், உங்கள் மனைவியை உயர்வாக கருதுகிறீர்களா? மதிப்பு மரியாதையோடு நடத்துகிறீர்களா? நீங்கள் ஒரு மனைவி என்றால், உங்கள் கணவரிடம் அன்போடும் அனுசரணையோடும் நடந்துகொள்கிறீர்களா? கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பையும் மரியாதையையும் காண்பிக்க வேண்டும் என பைபிள் சொல்கிறது. (எபேசியர் 5:28; தீத்து 2:4) இதை அவர்கள் பின்பற்றும்போது, கண்ணெதிரிலேயே கிறிஸ்தவ அன்பு செயல்படுவதை அவர்களுடைய பிள்ளைகள் காண்பார்கள். அது எப்பேர்ப்பட்ட வலிமையான, மதிப்புமிக்க பாடமாக இருக்கும்!
அதுமட்டுமின்றி, பெற்றோர்கள் குடும்பத்திற்காக பொழுதுபோக்கு, ஒழுக்கநெறிகள், இலக்குகள், முன்னுரிமைகள் ஆகிய காரியங்களில் உயர்ந்த தராதரங்களை நிர்ணயித்து அவற்றை கடைப்பிடிக்கும்போதும் அன்பை வளர்க்கிறார்கள். குடும்பத்திற்கான இப்படிப்பட்ட தராதரங்களை நிர்ணயிக்க பைபிள் பெரிதும் உதவுவதாக உலகெங்குமுள்ள மக்கள் கண்டிருக்கிறார்கள்; பைபிள் உண்மையில் “தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” என்பதற்கு இவர்கள் தாமே உயிருள்ள சாட்சிகளாக விளங்குகிறார்கள். (2 தீமோத்தேயு 3:16, 17) ஆம், மலைப்பிரசங்கத்தில் காணப்படும் நன்னெறிகளும் வாழ்க்கைக்கு தேவையான வழிநடத்துதலும் வேறெதைக் காட்டிலும் ஈடிணையற்றவை என பரவலாக கருதப்படுகிறது.—மத்தேயு, 5 முதல் 7 அதிகாரங்கள் வரை.
முழு குடும்பமும் வழிநடத்துதலுக்காக கடவுளை நோக்கியிருக்கும்போதும், அவருடைய தராதரங்களை கடைப்பிடிக்கும்போதும், தனிப்பட்ட ஒவ்வொருவரும் அதிக பாதுகாப்புடன் இருப்பதாக உணருவார்கள், அதோடு பெற்றோர்களை நேசிப்பதற்கும், அவர்களிடம் மரியாதை காட்டுவதற்கும் பிள்ளைகள் இன்னும் அதிகமாய் கற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. இதற்கு எதிர்மாறாக, ஒரு குடும்பத்தில் ஆளாளுக்கு வித்தியாசப்பட்ட, தவறான, அல்லது கண்டிப்பற்ற தராதரங்களை பின்பற்றும்போது பிள்ளைகள் எரிச்சலடையலாம், கோபமடையலாம், கலகம் செய்யவும் ஆரம்பிக்கலாம்.—ரோமர் 2:21; கொலோசெயர் 3:21.
ஒற்றைப் பெற்றோரைப் பற்றியதென்ன? தங்கள் குழந்தைகளுக்கு அன்பைப் பற்றி கற்றுக்கொடுக்கவே முடியாத நிலையில் அவர்கள் இருக்கிறார்களா? அப்படியொன்றும் இல்லை. நல்ல அம்மா நல்ல அப்பா ஆகிய இருவருமே உள்ள குடும்பத்தை வேறெதுவுமே ஈடுசெய்ய முடியாதென்பது உண்மைதான். என்றாலும், ஒரேவொரு பெற்றோர் உடைய குடும்பத்திலுள்ளவர்கள் நெருக்கமாக இருக்கும்போது அம்மாவோ அப்பாவோ இல்லாத குறையை ஓரளவுக்காவது போக்க முடியுமென அனுபவங்கள் காட்டுகின்றன. நீங்கள் ஒரு ஒற்றைப் பெற்றோராக இருந்தால், பைபிள் நியமங்களை உங்கள் குடும்பத்தில் கடைப்பிடிக்க பிரயாசப்படுங்கள். ஆம், ஒரு நீதிமொழி நமக்கு இவ்வாறு சொல்கிறது: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்”—பெற்றோருக்குரிய கடமைகள் என்ற பாதை உட்பட.—நீதிமொழிகள் 3:5, 6; யாக்கோபு 1:5.
அநேக அருமையான இளைஞர்கள் ஒற்றைப் பெற்றோரினால் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள்; இப்போது அவர்கள் உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகளின் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ சபைகளில் கடவுளை உண்மையோடு சேவித்து வருகிறார்கள். ஒற்றைப் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு அன்பை கற்றுத்தர முடியும் என்பதற்கு இது அத்தாட்சியாக விளங்குகிறது.
எல்லாரும் அன்பை வளர்ப்பது எப்படி
“கடைசிநாட்களில்,” ‘சுபாவ அன்பு’ இருக்காது அதாவது, பொதுவாக குடும்ப அங்கத்தினர்களிடையே இருக்கும் இயல்பான பாசமோ பிணைப்போ இருக்காது என பைபிள் முன்னறிவித்தது. (2 தீமோத்தேயு 3:1, 3) இருந்தபோதிலும், பாசம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு சூழ்நிலையில் வாழ்ந்தவர்கள்கூட அன்பை வளர்க்க கற்றுக்கொள்ள முடியும். எப்படி? அன்பின் ஊற்றுமூலமானவரும், முழு இருதயத்தோடு தம்மை நோக்கியிருப்பவர்கள்மீது அன்பையும் பாசத்தையும் பொழிபவருமான யெகோவாவிடமிருந்து அவர்கள் கற்றுக்கொள்ளலாம். (1 யோவான் 4:7, 8) “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்” என ஒரு சங்கீதக்காரன் சொன்னார்.—சங்கீதம் 27:10.
நம்மேல் இருக்கும் அன்பை யெகோவா பல்வேறு வழிகளில் வெளிப்படுத்துகிறார். அதாவது, பைபிள் மூலமாக ஒரு தகப்பனைப் போல வழிநடத்துதலைக் கொடுக்கிறார்; பரிசுத்த ஆவியின் உதவியை கொடுக்கிறார்; அதோடு, கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் மூலம் கனிவான ஆதரவையும் அளிக்கிறார். (சங்கீதம் 119:97-105; லூக்கா 11:13; எபிரெயர் 10:24, 25) கடவுள் மீதும் அயலகத்தார் மீதும் உள்ள அன்பில் வளர இந்த மூன்று ஏற்பாடுகளும் உங்களுக்கு எப்படி உதவும் என்பதை சிந்தியுங்கள்.
தகப்பனைப் போன்ற வழிநடத்துதல்
எவருடனாவது அன்பிலே பிணைக்கப்பட வேண்டுமானால், அந்த நபரைப் பற்றி நாம் நன்கு தெரிந்துகொள்வது அவசியம். பைபிளில் யெகோவா தம்மைப் பற்றி வெளிப்படுத்தியிருப்பதன் மூலம் தம்மிடம் நெருங்கி வருமாறு நம்மை அழைக்கிறார். என்றாலும், பைபிளை வாசிப்பது மட்டுமே போதுமானதல்ல. அதன் போதனைகளை பொருத்திப் பிரயோகித்து, அதனால் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்க வேண்டும். (சங்கீதம் 19:7-10) “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே” என்பதாக ஏசாயா 48:17 சொல்கிறது. ஆம், அன்பே உருவான யெகோவா நம்முடைய நன்மைக்காகவே நமக்கு போதிக்கிறார்—தேவையற்ற விதிமுறைகளால் நம் சுதந்திரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல.
பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவு, சகமனிதர்கள் மீதுள்ள அன்பிலே நாம் வளருவதற்கு உதவுகிறது. ஏனெனில், கடவுள் மனிதர்களை எவ்வாறு கருதுகிறார் என்பதை பைபிள் நமக்கு கற்பிக்கிறது; அது மட்டுமல்ல நாம் ஒருவரையொருவர் எவ்வாறு நடத்த வேண்டும் என்ற நியமங்களையும் அது காண்பிக்கிறது. இப்படிப்பட்ட தகவல்களை பெற்றிருப்பதால், அயலகத்தார்மீது அன்பை வளர்க்க பலமான காரணம் நம்மிடம் உள்ளது. ‘உங்கள் அன்பானது திருத்தமான அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும் . . . வேண்டுதல் செய்கிறேன்’ என அப்போஸ்தலன் பவுல் சொன்னார்.—பிலிப்பியர் 1:9, NW.
அன்பு எப்படி ‘திருத்தமான அறிவினால்’ சரியாக வழிநடத்தப்படும் என்பதை புரிந்துகொள்ள, அப்போஸ்தலர் 10:34, 35-ல் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படையான சத்தியத்தை சிந்தியுங்கள்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல . . . எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.” ஜனங்களுடைய தேசத்தையோ இனத்தையோ வைத்தல்ல, ஆனால் அவர்களுடைய நீதியான செயல்களையும் தேவ பயத்தையும் வைத்தே கடவுள் அவர்களை எடைபோடுகிறார். அப்படியானால், நாமும் சகமனிதர்களை அதேபோன்று பட்சபாதமில்லாமல் நோக்க வேண்டாமா?—அப்போஸ்தலர் 17:26, 27; 1 யோவான் 4:7-11, 20, 21.
அன்பு —கடவுளுடைய ஆவியின் கனியில் ஒன்று
ஏற்ற வேளையில் மழை பெய்தால் ஒரு பழத்தோட்டம் ஏராளமான கனிகளை கொடுத்து அமோக விளைச்சலைத் தரும்; அதேபோல கடவுளுடைய ஆவி நல்மனமுள்ள நபர்களில், “ஆவியின் கனி” என பைபிள் விவரிக்கும் நற்பண்புகளை விளைவிக்கிறது. (கலாத்தியர் 5:22, 23) இந்தக் கனியில் முதன்மையானது அன்பு. (1 கொரிந்தியர் 13:13) ஆனால், கடவுளுடைய ஆவியை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்? முக்கியமான ஒரு வழி ஜெபம். நாம் கடவுளுடைய ஆவிக்காக ஜெபித்தால், நிச்சயம் அதை நமக்கு தருவார். (லூக்கா 11:9-13, NW) கடவுளுடைய ஆவியை பெற்றுக்கொள்வதற்காக ஜெபத்தில் நீங்கள் “தொடர்ந்து” கேட்கிறீர்களா? அப்படி நீங்கள் ஜெபம் செய்யும்போது அதன் அருமையான கனி—அன்பு உட்பட—உங்கள் வாழ்க்கையில் முன் ஒருபோதும் இல்லாதளவுக்கு அதிகமாக வெளிப்பட வேண்டும்.
என்றபோதிலும், கடவுளுடைய ஆவிக்கு எதிராக இன்னொரு வகையான ஆவி செயல்படுகிறது. பைபிள் இதை “உலகத்தின் ஆவி” என அழைக்கிறது. (1 கொரிந்தியர் 2:12; எபேசியர் 2:2) இந்த ஆவி தீமையானது; கடவுளை விட்டு விலகியிருக்கும் மனிதவர்க்க ‘உலகத்தின் அதிபதியான’ பிசாசாகிய சாத்தானே இதற்கு மூலகாரணன். (யோவான் 12:31) வீசியடிக்கும் காற்று எப்படி புழுதியையும் குப்பைக்கூளங்களையும் கிளறிவிடுகிறதோ, அப்படியே இந்த “உலகத்தின் ஆவி” தீங்கான ஆசைகளையெல்லாம் கிளறிவிட்டு அன்பை குலைத்துப் போடுகிறது; அதோடு, மாம்ச இச்சைகளுக்கும் தீனி போடுகிறது.—கலாத்தியர் 5:19-21.
பொருளாசையும் சுயநலமும் நிறைந்த சிந்தனைகள், வன்முறை மனப்பான்மை, அன்பைப் பற்றி மலிந்திருக்கும் வக்கிர எண்ணங்கள் ஆகியவற்றைப் பற்றி மக்கள் அதிகமதிகமாக தெரிந்துகொள்ளும்போது அவர்களையும் அந்தத் தீய ஆவி தொற்றிக் கொள்கிறது. ஆகவே, உண்மையான அன்பிலே நீங்கள் வளர வேண்டுமானால், இந்த உலகத்தின் ஆவியை உறுதியுடன் எதிர்த்துப் போராட வேண்டும். (யாக்கோபு 4:7) ஆனால், உங்கள் சொந்த பலத்தை மட்டுமே நம்பியிருக்காதீர்கள்; உதவிக்காக யெகோவாவை கூப்பிடுங்கள். சர்வலோகத்திலேயே அதிசக்தி வாய்ந்த அவருடைய பரிசுத்த ஆவி உங்களை பலப்படுத்துவதோடு உங்களுக்கு வெற்றி தருவதும் நிச்சயம்.—சங்கீதம் 121:2.
கிறிஸ்தவ சகோதரத்துவத்திலிருந்து அன்பை கற்றுக்கொள்ளுங்கள்
குடும்பத்தில் அன்பை ருசிப்பதன் மூலம் பிள்ளைகள் அன்பு காண்பிக்க கற்றுக்கொள்வது போல, நாம் எல்லாரும்—சிறியவரும் பெரியவரும்—மற்ற கிறிஸ்தவர்களோடு சேர்ந்து கூட்டுறவை வைத்துக்கொள்வதன் மூலம் அன்பிலே வளர முடியும். (யோவான் 13:34, 35) ஆம், ‘அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பும்’ ஒரு சூழலை உருவாக்கித் தருவதே கிறிஸ்தவ சபையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.—எபிரெயர் 10:24, பொது மொழிபெயர்ப்பு.
நம்மைச் சுற்றியுள்ள அன்பற்ற உலகில் “தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய்” இருப்பவர்கள் இப்படிப்பட்ட அன்புக்கு முக்கியமாக போற்றுதலை காண்பிக்கிறார்கள். (மத்தேயு 9:36) குழந்தைகளாக அன்பில்லாத சூழலில் வளர்ந்ததால் மோசமான பாதிப்புகளுக்கு ஆளானவர்கள் பெரியவர்களான பிறகு அன்புமிக்க உறவுகளின் உதவியால் அந்தப் பாதிப்புகளை மேற்கொள்ள முடிந்ததென்று அனுபவங்கள் காட்டுகின்றன. ஆகவே, ஒப்புக்கொடுத்த எல்லா கிறிஸ்தவர்களுமே தங்களோடு கூட்டுறவு கொள்ள ஆரம்பிக்கும் புதியவர்களை உண்மையிலேயே இருதயப்பூர்வமாக வரவேற்பது எவ்வளவு முக்கியமானது!
“அன்பு ஒருக்காலும் ஒழியாது”
“அன்பு ஒருக்காலும் ஒழியாது” என பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 13:8) அது எப்படி? “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது” என அப்போஸ்தலன் பவுல் நமக்கு சொல்கிறார். (1 கொரிந்தியர் 13:4, 5) தெளிவாகவே, இப்படிப்பட்ட அன்பு வெறும் கற்பனையோ மேலோட்டமான உணர்ச்சியோ அல்ல. மாறாக, இத்தகைய அன்பை காண்பிக்கிறவர்கள், வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்களையும் வேதனைகளையும் பற்றி நன்கு தெரிந்திருக்கிறார்கள், அவற்றை ஒத்துக்கொள்கிறார்கள், ஆனால் இவையெல்லாம் சகமனிதர்கள் மீதுள்ள அன்பை அழித்துப்போட அவர்கள் அனுமதிப்பதில்லை. இப்படிப்பட்ட அன்பு உண்மையில் ‘பூரண சற்குணத்தின் கட்டு’ என்றே சொல்லலாம்.—கொலோசெயர் 3:12-14.
கொரியாவிலுள்ள 17 வயதான ஒரு கிறிஸ்தவ பெண்ணின் உதாரணத்தைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அவள் யெகோவா தேவனை சேவிக்க ஆரம்பித்தபோது அவள் குடும்பத்தினர் அதை ஏற்றுக்கொள்ளாததால் அவள் வீட்டை விட்டே போக வேண்டியிருந்தது. ஆனாலும் அவள் கோபப்படவில்லை; அதற்கு பதிலாக இந்த விஷயத்தைக் குறித்து ஜெபம் செய்தாள்; அதோடு கடவுளுடைய வார்த்தையைப் படித்து, அவருடைய ஆவியின் உதவியைப் பெற்று தன்னுடைய சிந்தனையை பக்குவப்படுத்தினாள். அந்தச் சமயத்திலிருந்து தன் குடும்பத்தினருக்கு அடிக்கடி கடிதம் எழுதத் தொடங்கினாள்; அவர்கள்மீது தனக்கிருந்த உண்மையான பாசத்தையும் நேசத்தையும் பற்றியே அவளுடைய கடிதங்களில் முழுக்க முழுக்க எழுதினாள். இதன் விளைவாக, அவளுடைய இரண்டு அண்ணன்கள் பைபிளை படிக்க ஆரம்பித்து, இப்போது ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களாகி இருக்கின்றனர். அவளுடைய அம்மாவும் தம்பியும்கூட பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர். கடைசியாக, கடுமையாக எதிர்த்து வந்த அவள் அப்பாவும் மனம் மாறினார். யெகோவாவின் சாட்சியான அந்தப் பெண் இவ்வாறு எழுதுகிறாள்: “நாங்கள் எல்லாரும் சககிறிஸ்தவர்களை மணம் செய்து கொண்டோம்; இப்போது எங்களுடைய குடும்பத்தில் மொத்தம் 23 பேர் ஒரே வணக்கத்தில் ஐக்கியப்பட்டிருக்கிறோம்.” அன்புக்கு கிடைத்த வெற்றியை பாருங்கள்!
உண்மையான அன்பை வளர்க்க நீங்கள் விரும்புகிறீர்களா? அதேபோன்ற அன்பை மற்றவர்களும் வளர்க்க அவர்களுக்கு உதவ விரும்புகிறீர்களா? அப்படியானால், இந்த அருங்குணத்தின் ஊற்றுமூலரான யெகோவாவின் உதவியை நாடுங்கள். ஆம், அவருடைய வார்த்தையை உங்கள் இருதயப்பலகையில் எழுதிக்கொள்ளுங்கள், பரிசுத்த ஆவிக்காக ஜெபியுங்கள், அதோடு கிறிஸ்தவ சகோதரர்களோடு தவறாமல் கூட்டுறவு கொள்ளுங்கள். (ஏசாயா 11:9; மத்தேயு 5:5) சீக்கிரத்தில் எல்லா துன்மார்க்க ஜனங்களும் ஒழிந்து போவார்கள், உண்மையான கிறிஸ்தவ அன்பை காண்பிக்கிறவர்கள் மட்டுமே இருக்கப் போகிறார்கள்; இதை அறிவது மனதிற்கு எத்தனை இதமாக இருக்கிறது! சந்தேகமில்லாமல், மகிழ்ச்சிக்கும் ஜீவனுக்கும் அன்பு ஒன்றே திறவுகோல்.—சங்கீதம் 37:10, 11; 1 யோவான் 3:14.
[பக்கம் 6-ன் படங்கள்]
ஜெபம் செய்வதும் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதும் உண்மையான அன்பை வளர்ப்பதற்கு நமக்கு உதவும்