சத்தியத்தின் கடவுளை பின்பற்றுதல்
‘பிரியமான பிள்ளைகளைப் போல், தேவனைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்.’ —எபேசியர் 5:1.
1. சத்தியத்தைப் பற்றி சிலர் என்ன நம்புகிறார்கள், அவர்களுடைய சிந்தனை ஏன் தவறானது?
“சத்தியமாவது என்ன”? (யோவான் 18:38) ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்னால், பொந்தியு பிலாத்து நக்கலாக கேட்ட இந்தக் கேள்வி, சத்தியத்தை நாடித்தேடினாலும் அது அவ்வளவு எளிதில் கிடைக்காது என்பதை மறைமுகமாய்க் குறிப்பிடுகிறது. இன்று பலர் இதை ஒப்புக்கொள்வார்கள். சத்தியத்தைப் பற்றி பலர் பல விதத்தில் விமர்சிக்கிறார்கள். உதாரணமாக, எது சத்தியம் என்று அவரவர் இஷ்டப்படி தீர்மானிக்கலாம் என்றும், சத்தியம் என்பது முழுமையானதல்ல என்றும், சத்தியம் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் என்றும் சிலர் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். இத்தகைய சிந்தனை தவறானது. நாம் வாழும் உலகத்தைப் பற்றிய உண்மைகளை, அதாவது சத்தியங்களைப் பற்றி அறிவதே ஆராய்ச்சி மற்றும் கல்வியின் நோக்கமாகும். சத்தியம் என்பது தனிப்பட்ட நபரின் கருத்து அல்ல. உதாரணமாக, ஒருவர் ‘மனித ஆத்துமா அழியாது’ என சொல்லலாம், இன்னொருவர் அது ‘அழியும்’ என சொல்லலாம்; அவ்வாறே, சாத்தான் இருக்கிறான் என ஒருவர் சொல்லலாம், இல்லை என மற்றொருவர் சொல்லலாம்; அதேபோல, வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் உள்ளது என ஒருவர் சொல்லலாம், இல்லை என இன்னொருவர் சொல்லலாம். இவை ஒவ்வொன்றிலும் ஒரு பதில் மட்டுமே சரியானதாக இருக்க முடியும். ஆம், ஒன்று சத்தியம் மற்றொன்று பொய்; இரண்டுமே சத்தியமாக இருக்க முடியாது.
2. எவ்விதத்தில் யெகோவா சத்தியபரராகிய கடவுள், என்ன கேள்விகள் இப்போது ஆராயப்படும்?
2 முந்திய கட்டுரையில், யெகோவா சத்தியபரரான கடவுள் என்பதை நாம் சிந்தித்தோம். எல்லாவற்றையும் பற்றிய சத்தியத்தை அவர் அறிந்திருக்கிறார். அவருடைய வஞ்சக எதிரியான பிசாசாகிய சாத்தானுக்கு நேர்மாறாக, யெகோவா என்றென்றைக்கும் சத்தியமுள்ளவராக இருக்கிறார். அதோடு, சத்தியத்தை தாராளமாக மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். அப்போஸ்தலனாகிய பவுல், சக கிறிஸ்தவர்களை இவ்வாறு ஊக்குவித்தார்: “நீங்கள் பிரியமான பிள்ளைகளைப் போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்.” (எபேசியர் 5:1) யெகோவாவின் சாட்சிகளாக, பேச்சிலும் சத்தியத்தின்படி வாழ்வதிலும் அவருடைய மாதிரியை நாம் எவ்வாறு பின்பற்றலாம்? அவ்வாறு செய்வது ஏன் முக்கியமானது? சத்தியத்தின் பாதையில் தொடர்ந்து நடப்போரை யெகோவா அங்கீகரிக்கிறார் என்பதற்கு என்ன உறுதி நமக்கு இருக்கிறது? நாம் பார்க்கலாம்.
3, 4. “கடைசி நாட்களில்” நடக்கப் போவதை அப்போஸ்தலர்களான பவுலும் பேதுருவும் எவ்வாறு விவரித்தார்கள்?
3 மத சம்பந்தமான பொய்கள் நிரம்பியிருக்கும் ஒரு சகாப்தத்தில் நாம் வாழ்கிறோம். கடவுளின் ஏவுதலால் அப்போஸ்தலனாகிய பவுல் முன்னறிவித்தபடியே இந்தக் “கடைசி நாட்களில்” பல ஆட்கள் தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து, அதன் பலனை மறுதலிக்கிறவர்களாக இருக்கிறார்கள். சிலர் முற்றிலும் ‘மதிகெட்டவர்களாய்’ சத்தியத்தை எதிர்த்து நிற்கிறார்கள். மேலும், “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும் மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களா”கிறார்கள். இத்தகைய ஆட்கள் எப்போதும் கற்றுக்கொண்டிருந்தாலும், ‘சத்தியத்தின் திருத்தமான அறிவை’ (NW) ஒருபோதும் அடைவதில்லை.—2 தீமோத்தேயு 3:1, 5, 7, 8, 13.
4 கடைசி நாட்களைப் பற்றி எழுதும்படி அப்போஸ்தலனாகிய பேதுருவும் தேவாவியால் ஏவப்பட்டார். அவர் தீர்க்கதரிசனம் உரைத்தபடியே, ஆட்கள் சத்தியத்தை ஒதுக்குவது மட்டுமல்லாமல், கடவுளுடைய வார்த்தையையும் அதில் எழுதப்பட்டுள்ள சத்தியத்தை அறிவிப்போரையும் ஏளனம் செய்கிறார்கள். “தங்கள் சுய இச்சைகளின்படியே” நடக்கும் இத்தகைய பரியாசக்காரர், நோவாவின் நாளிலிருந்த உலகம் ஜலப்பிரளயத்தினால் அழிந்ததையும் எதிர்காலத்தில் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பு நாளுக்கு மாதிரியாக இருப்பதையும் அசட்டை செய்கிறார்கள். தேவபக்தியில்லாதவர்களை அழிப்பதற்கான கடவுளுடைய நேரம் வருகையில், தாங்கள் இச்சிப்பதே நடக்க வேண்டுமென விரும்புகிறவர்கள் அந்த அழிவைத் தப்ப மாட்டார்கள்.—2 பேதுரு 3:3-7.
யெகோவாவின் ஊழியர்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறார்கள்
5. ‘முடிவு காலத்தில்’ என்ன நடக்கும் என்று தீர்க்கதரிசியாகிய தானியேல் குறிப்பிட்டார், இந்தத் தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேற்றமடைந்திருக்கிறது?
5 கடவுளுடைய ஜனங்கள் மத்தியிலோ முன்னேற்றம் ஏற்படுமென, அதாவது மத சத்தியம் மறுமலர்ச்சி அடையுமென ‘முடிவு காலத்தைப்’ பற்றிய ஒரு விவரிப்பில் தானியேல் தீர்க்கதரிசி முன்னறிவித்தார். அவர் இவ்வாறு எழுதினார்: “அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், [“மெய்,” NW] அறிவும் பெருகிப்போம்.” (தானியேல் 12:4) பெரிய வஞ்சகனால் யெகோவாவின் ஜனங்கள் குழப்பமடையவோ, குருடாக்கப்படவோ இல்லை. பைபிளின் பக்கங்களை அங்குமிங்கும் திருப்பி ஆராய்வதன் மூலம், மெய் அறிவை அவர்கள் அடைந்திருக்கிறார்கள். முதல் நூற்றாண்டில், இயேசு தம்முடைய சீஷர்களுக்கு அறிவொளியூட்டினார். ‘வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்தார்.’ (லூக்கா 24:45) நம்முடைய நாளிலும் யெகோவா அவ்வாறே செய்திருக்கிறார். சகல சத்தியங்களையும் அறிந்திருக்கும் அவர், தமது வார்த்தை, ஆவி, மற்றும் அமைப்பின் வாயிலாக பூமி முழுவதிலுமுள்ள லட்சக்கணக்கானோருக்கு அவற்றை புரிய வைத்திருக்கிறார்.
6. என்ன பைபிள் சத்தியங்களை கடவுளுடைய ஜனங்கள் இன்று புரிந்திருக்கின்றனர்?
6 கடவுளுடைய ஜனங்களாக இருப்பதால்தான் நாம் பல காரியங்களை புரிந்திருக்கிறோம், இல்லாவிட்டால் அவற்றையெல்லாம் நாம் புரிந்திருக்க முடியாது. உலகப்பிரகாரமான ஞானிகள் தங்கள் மூளையை கசக்கிப் பிழிந்தும்கூட ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல கேள்விகளுக்கு பதில்களைக் கண்டடைய முடியவில்லை; ஆனால் அந்த கேள்விகளுக்கான பதில்களை நாம் அறிந்திருக்கிறோம். உதாரணமாக, இப்போது ஏன் துன்பம் நிலவுகிறது, ஆட்கள் ஏன் சாகிறார்கள், உலகளவில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் மனிதர்களால் ஏன் அடைய முடிவதில்லை என்பவற்றை நாம் அறிந்திருக்கிறோம். மேலும், எதிர்காலத்தில் நடக்கப் போகும் காரியங்களைப் பற்றி, அதாவது கடவுளுடைய ராஜ்யம், பரதீஸான பூமி, பரிபூரண நிலைமையில் முடிவில்லா வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றி அறிந்திருக்கும் சிலாக்கியத்தை பெற்றிருக்கிறோம். மகா உன்னதராகிய யெகோவாவைப் பற்றியும் அறிந்திருக்கிறோம். மனதைக் கவரும் அவருடைய குணாம்சத்தைப் பற்றியும், அவருடைய ஆசீர்வாதத்தை அனுபவித்து மகிழ்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நாம் கற்றறிந்திருக்கிறோம். சத்தியத்தை அறிந்திருந்தால்தான் எது பொய் என்பதை நாம் கண்டுகொள்ள முடியும். சத்தியத்தைப் பொருத்திப் பிரயோகிப்பது பிரயோஜனமற்ற காரியங்கள் செய்வதிலிருந்து நம்மை பாதுகாக்கிறது, மிகச் சிறந்த வாழ்க்கை வாழ உதவுகிறது, அதோடு அற்புதமான எதிர்கால நம்பிக்கையையும் அளிக்கிறது.
7. பைபிள் சத்தியங்களை யாரால் புரிந்துகொள்ள முடியும், யாரால் முடியாது?
7 பைபிள் சத்தியத்தை நீங்கள் புரிந்திருக்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் மிகுதியாய் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரு நூலாசிரியர் ஒரு புத்தகத்தை எழுதுகையில், தனிப்பட்ட ஒரு தொகுதியினருக்குக் கவர்ச்சியூட்டும் முறையில் அதை வடிக்கிறார். சில புத்தகங்கள் உயர்கல்வி பயின்றவர்களுக்காக எழுதப்படுகின்றன, மற்றவை பிள்ளைகளுக்காகவும், இன்னும் பல பிரத்தியேக தொழில்துறையில் இருப்பவர்களுக்காகவும் எழுதப்படுகின்றன. பைபிள் எல்லாருக்குமே எளிதாக கிடைத்தாலும், ஒரு குறிப்பிட்ட தொகுதியினர் மட்டுமே அதை புரிந்துகொள்வதற்காகவும் பாராட்டுவதற்காகவும் எழுதப்பட்டிருக்கிறது. அத்தொகுதியினர் யார்? உலகெங்குமுள்ள மனத்தாழ்மையும் சாந்தகுணமும் உள்ளவர்களே அவர்கள். இவர்களுக்காகவே யெகோவா அதை வடித்திருக்கிறார். கல்வி, பண்பாடு, அந்தஸ்து, இனம் எதுவாயிருந்தாலும், இத்தகைய ஆட்கள் பைபிளின் கருத்தைப் புரிந்துகொள்ள முடியும். (1 தீமோத்தேயு 2:3, 4) மறுபட்சத்தில், சரியான மனச்சாய்வில்லாதவர்கள் எவ்வளவுதான் புத்திக்கூர்மையுள்ளவர்களாக இருந்தாலும் சரி, கல்விமான்களாக இருந்தாலும் சரி, பைபிள் சத்தியத்தைப் புரிந்துகொள்ளும் பாக்கியத்தை பெறுவதில்லை. அவர்கள் கர்வமும் இறுமாப்புமுள்ளவர்கள், கடவுளுடைய வார்த்தையின் அருமையான சத்தியங்களைப் புரிந்துகொள்ளவே முடியாது. (மத்தேயு 13:11-15; லூக்கா 10:21; அப்போஸ்தலர் 13:48) அத்தகைய ஒரு புத்தகத்தை கடவுளால் மட்டுமே உருவாக்க முடியும்.
யெகோவாவின் ஊழியர்கள் சத்தியமுள்ளவர்கள்
8. இயேசு ஏன் சத்தியத்தின் உருவாகவே இருந்தார்?
8 யெகோவாவைப் போலவே அவருடைய கடமை தவறாத சாட்சிகளும் சத்தியமுள்ளவர்களாக இருக்கிறார்கள். யெகோவாவின் தலைசிறந்த சாட்சியாகிய இயேசு கிறிஸ்து, தாம் கற்பித்த காரியங்களாலும், வாழ்ந்து மரித்த விதத்தாலும் சத்தியத்தை உறுதியாக ஆதரித்தார். யெகோவாவின் வார்த்தையும் வாக்குறுதிகளும் சத்தியம் என்பதை அவர் உயர்த்திக் காட்டினார். இதனால், இயேசு சத்தியத்தின் உருவாகவே இருந்தார். இதை அவரே சொல்லியிருக்கிறார்.—யோவான் 14:6; வெளிப்படுத்துதல் 3:14; 19:10.
9. சத்தியத்தைப் பேசுவதைப் பற்றி வேதவசனங்கள் என்ன சொல்கின்றன?
9 இயேசு, ‘தகுதியற்ற தயவும் சத்தியமும் நிறைந்தவராய்’ இருந்தார். ‘அவர் வாயில் வஞ்சனையே இருந்ததில்லை.’ (யோவான் 1:14, NW; ஏசாயா 53:9) மற்றவர்களிடம் உண்மையாயிருப்பதில் இயேசு வைத்த முன்மாதிரியை உண்மை கிறிஸ்தவர்கள் பின்பற்றுகிறார்கள். உடன் விசுவாசிகளுக்கு பவுல் இவ்வாறு அறிவுரை கூறினார்: “நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் [சத்தியத்தை] பேசக்கடவன்.” (எபேசியர் 4:25) முன்பு, தீர்க்கதரிசியாகிய சகரியா இவ்வாறு எழுதினார்: “அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்.” (சகரியா 8:16) கிறிஸ்தவர்கள் கடவுளைப் பிரியப்படுத்த விரும்புவதால் சத்தியத்தை பேசுகிறார்கள். யெகோவா சத்தியபரர், பொய் பேசுவதால் விளையும் தீங்கை அவர் அறிந்திருக்கிறார். ஆகையால், தம்முடைய ஊழியர்கள் சத்தியத்தையே பேசும்படி அவர் நியாயமாகவே எதிர்பார்க்கிறார்.
10. ஆட்கள் ஏன் பொய் சொல்லுகின்றனர், அதன் தீய விளைவுகள் யாவை?
10 பொய் சொல்லுவது, சில ஆதாயங்களைப் பெறுவதற்கு எளிய வழியாக பலருக்குத் தோன்றலாம். தண்டனையிலிருந்து தப்புவதற்கு, ஏதோ ஒரு வழியில் பயனடைவதற்கு, அல்லது மற்றவர்களின் புகழை சம்பாதிப்பதற்கு ஆட்கள் பொய் சொல்கின்றனர். எனினும், பொய் சொல்லுவது ஒரு தீய பழக்கமே. ஏன், பொய் சொல்லுகிறவன் கடவுளுடைய அங்கீகாரத்தையே பெற முடியாதே! (வெளிப்படுத்துதல் 21:8, 27; 22:15) நாம் சத்தியத்தை பேசுபவர்கள் என்ற பெயரெடுத்திருந்தால்தான் நாம் சொல்வதை மற்றவர்கள் நம்புவர்; நம்மீது அவர்களுக்கு நம்பிக்கையும் பிறக்கும். எனினும், நாம் ஒரே ஒரு பொய் சொல்வதை அவர்கள் கேட்டால் போதும், அதற்குப் பிற்பாடு நாம் எதை சொன்னாலும் அது உண்மைதானா என்று சந்தேகிக்க ஆரம்பித்துவிடுவர். ஆப்பிரிக்க பழமொழி ஒன்று இவ்வாறு சொல்கிறது: “ஒரு பொய் ஆயிரம் உண்மைகளைக் கெடுக்கிறது.” மற்றொரு பழமொழி, “பொய்யனென்று பெயரெடுத்தவன், உண்மையைப் பேசினாலும் நம்பப்படான்” என்று கூறுகிறது.
11. சத்தியமுள்ளவர்களாக இருப்பதற்கு உண்மையை சொல்வது மட்டும் போதாது, எப்படி?
11 சத்தியமுள்ளவர்களாக இருப்பதற்கு உண்மையை சொல்வது மட்டும் போதாது. அது வாழ்க்கையில் ஒரு பாகம். நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை அது தெளிவுபடுத்துகிறது. சொல்லால் மட்டுமல்ல, செயலாலும் மற்றவர்களுக்கு சத்தியத்தை அறிவிக்கிறோம். “மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவு செய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவு செய்யலாமா? விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா?” என்று அப்போஸ்தலன் பவுல் கேட்டார். (ரோமர் 2:21, 22) மற்றவர்களுக்கு சத்தியத்தை நாம் தெரிவிக்க வேண்டுமானால், நம்முடைய எல்லா வழிகளிலும் நாம் உண்மையானவர்களாக இருக்க வேண்டும். நாம் உண்மையும் நேர்மையுமானவர்களென்று ஆட்கள் அறிந்தால், நாம் கற்பிப்பதை முழு மனதோடு வெகு எளிதாக ஏற்றுக்கொள்வார்கள்.
12, 13. உண்மையானவளாக இருப்பதைப் பற்றி ஓர் இளம் பெண் என்ன எழுதினாள், அவளுடைய உயர்ந்த ஒழுக்க தராதரத்திற்கு எது காரணமாக இருந்தது?
12 யெகோவாவின் அமைப்பில் இளைஞர்களுங்கூட, உண்மையுள்ளவர்களாய் இருப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்கிறார்கள். ஜென்னி 13 வயதாக இருந்தபோது, பள்ளி கட்டுரை ஒன்றில் இவ்வாறு எழுதினாள்: “நேர்மை நான் உயர்வாய் மதிக்கும் ஒன்று. ஆனால், இன்று நிறைய பேரிடம் துளியும் நேர்மை இல்லை என்பதே சங்கடமான விஷயம்.. என் வாழ்க்கையில் எப்போதும் நேர்மையை காத்துவருவேன் என்று எனக்கு நானே உறுதி கூறிக்கொள்கிறேன். உண்மையைச் சொல்வதால் எனக்கோ என் நண்பர்களுக்கோ உடனடியாக நன்மை கிடைக்காவிடினும் நேர்மையாக இருப்பேன். உண்மையைச் சொல்கிறவர்களும் நேர்மையுள்ள ஆட்களுமே என் நண்பர்களாக இருக்கும்படி நான் பார்த்துக்கொள்வேன்.”
13 இந்தக் கட்டுரையின்பேரில் ஜென்னியின் ஆசிரியை இவ்வாறு கூறினார்: “இந்த இள வயதிலும், இத்தனை உறுதியான ஒழுக்க நெறியையும் இங்கிதத்தையும் கடைப்பிடிக்கிறாய். அதை விடாமல் கடைப்பிடிப்பாயென்று எனக்குத் தெரியும், ஏனெனில் உனக்கு தார்மீக பலம் இருக்கிறது.” இந்தப் பள்ளிச் சிறுமியின் தார்மீக பலத்திற்கு எது காரணமாயிருந்தது? தன் கட்டுரையின் முகவுரையில், தன் மதமே “[தன்] வாழ்க்கைக்குத் தராதரங்களை வைக்கிறது” என்று ஜென்னி கூறியிருந்தாள். அந்தக் கட்டுரையை ஜென்னி எழுதி ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. அவளுடைய ஆசிரியை ஊகித்தது போலவே ஜென்னி, யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக, தன் வாழ்க்கையில் உயர்ந்த ஒழுக்க தராதரத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறாள்.
யெகோவாவின் ஊழியர்கள் சத்தியத்தை வெளிப்படுத்துகிறார்கள்
14. உண்மையை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய பெரும் பொறுப்பு முக்கியமாய் கடவுளுடைய ஊழியருக்கு இருப்பது ஏன்?
14 யெகோவாவின் சாட்சிகள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் சத்தியத்தைப் பேசி, நேர்மையாக இருக்க முயற்சி செய்யலாம். எனினும், கடவுளின் ஊழியர்களாக, தனிப்பட்ட முறையில் உண்மையை உறுதியாய்க் கடைப்பிடிக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. நித்திய ஜீவனுக்கு ஒருவரை வழிநடத்தும் பைபிள் சத்தியங்கள் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், அந்த அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கடமை நமக்கு உள்ளது. “எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்” என்று இயேசு சொன்னார். (லூக்கா 12:48) நிச்சயமாகவே, கடவுளைப் பற்றிய மதிப்புமிக்க அறிவைப் பெற்றவர்களிடம் ‘அதிகம் கேட்கப்படுகிறது.’
15. பைபிள் சத்தியத்தை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதில் என்ன மகிழ்ச்சியை நீங்கள் காண்கிறீர்கள்?
15 பைபிள் சத்தியத்தை மற்றவர்களுக்குத் தெரிவிப்பது மகிழ்ச்சியைத் தரும். இயேசுவின் முதல் நூற்றாண்டு சீஷர்களைப் போல், இதயத்திற்கு இதமூட்டும் நம்பிக்கைக்குரிய நற்செய்தியை, “மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய்” இருப்போருக்கும், ‘பிசாசுகளின் உபதேசங்களால்’ குருடாக்கப்பட்டும் குழப்பப்பட்டும் இருப்போருக்கும் நாம் அறிவிக்கிறோம். (மத்தேயு 9:36; 1 தீமோத்தேயு 4:1) அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.” (3 யோவான் 4) யோவானின் ‘பிள்ளைகள்’—ஒருவேளை அவர் மூலமாக சத்தியத்தை அறிந்தவர்கள்—உண்மையானவர்களாக இருந்தது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. கடவுளுடைய வார்த்தைக்கு ஆட்கள் நன்றியோடு தங்கள் மதித்துணர்வை காட்டுவதை நாம் காண்கையில் அது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
16, 17. (அ) சத்தியத்தை ஏன் எல்லாரும் ஏற்பதில்லை? (ஆ) பைபிள் சத்தியத்தை அறிவிக்கையில் என்ன மகிழ்ச்சியை நீங்கள் அடையலாம்?
16 சத்தியத்தை எல்லாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உண்மைதான். கடவுளைப் பற்றிய சத்தியத்தை ஜனங்கள் விரும்பாவிட்டாலும் இயேசு அதைப் பேசினார். தம்மை எதிர்த்த யூதரிடம் அவர் இவ்வாறு கூறினார்: “நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை. தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள்.”—யோவான் 8:46, 47.
17 இயேசுவைப் போல நாமும் யெகோவாவைப் பற்றிய அருமையான சத்தியத்தை மற்றவர்களிடம் சொல்வதை நிறுத்திவிடுவதில்லை. ஆனால், எல்லாரும் நாம் சொல்வதை ஏற்பார்கள் என நாம் எதிர்பார்ப்பதில்லை, ஏனெனில், இயேசு சொன்னதைக்கூட எல்லாரும் ஏற்கவில்லையே. இருப்பினும், நாம் சரியானதைச் செய்கிறோம் என்பதை அறிவதால் மகிழ்ச்சியடைகிறோம். யெகோவா தம்முடைய அன்புள்ள தயவினால், மனிதகுலத்துக்கு சத்தியத்தை வெளிப்படுத்த விரும்புகிறார். கிறிஸ்தவர்கள் சத்தியத்தை பெற்றிருப்பதால் இருளடைந்த உலகத்தில் ஒளி கொண்டு செல்வோராக இருக்கின்றனர். நம் சொல்லிலும் செயலிலும் சத்தியத்தின் ஒளியைப் பிரகாசிக்கச் செய்து, மற்றவர்கள் நம் பரலோகத் தகப்பனை மகிமைப்படுத்துவதற்கு நாம் உதவலாம். (மத்தேயு 5:14, 16) சத்தியத்தைப் பற்றிய சாத்தானின் பொய்ப் போதகங்களை நாம் அறவே நிராகரிக்கிறோம் என்றும், கலப்படமற்றதும் தூய்மையானதுமான கடவுளுடைய வார்த்தையை ஆதரிக்கிறோம் என்றும் யாவரும் அறியச் செய்கிறோம். நாம் அறிந்தும், பகிர்ந்துகொண்டும் வருகிற சத்தியத்தை ஏற்போருக்கு அது மெய்யான விடுதலையை அளிக்கலாம்.—யோவான் 8:32.
சத்திய வழியில் தொடர்ந்து நடவுங்கள்
18. நாத்தான்வேலுக்கு இயேசு ஏன் தயவு காட்டினார், எப்படி காட்டினார்?
18 இயேசு சத்தியத்தை நேசித்தார், சத்தியத்தையே பேசினார். பூமியில் அவருடைய ஊழிய காலத்தின்போது, உண்மையாக இருந்தவர்களுக்கு அவர் தயவு காட்டினார். நாத்தான்வேலைக் குறித்து, “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்று இயேசு கூறினார். (யோவான் 1:47) பற்தொலொமேயு என்றும் அழைக்கப்பட்ட நாத்தான்வேல், பிற்பாடு 12 அப்போஸ்தலர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (மத்தேயு 10:2-4) எப்பேர்ப்பட்ட மதிப்பு அவருக்கு கிடைத்தது!
19-21. ஒரு காலத்தில் குருடனாக இருந்த ஒரு மனிதன், தைரியமாய் சத்தியத்தை சொன்னதற்காக எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டான்?
19 பைபிள் புத்தகமாகிய யோவானில் ஓர் அதிகாரம் முழுவதுமே, இயேசுவால் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றொரு நேர்மையுள்ள மனிதனைப் பற்றிய விவரத்தைக் கூறுகிறது. அவனுடைய பெயர் நமக்குத் தெரியாது. அந்த மனிதன் ஒரு பிச்சைக்காரன், பிறவிக் குருடன் என்று மட்டுமே நமக்கு தெரியும். அவனுக்கு இயேசு பார்வை அளித்தபோது, ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள். இந்த அற்புத சுகப்படுத்துதலைப் பற்றிய செய்தி, பரிசேயர் சிலரின் செவிகளுக்கு எட்டியது. அவர்கள் சத்தியத்தைப் பகைத்தார்கள், இயேசுவில் விசுவாசம் வைப்போரை ஜெப ஆலயத்திலிருந்து விலக்க வேண்டுமென்று தங்களுக்குள் தீர்மானித்திருந்தார்கள். அவர்களுடைய திட்டத்தை அறிந்து கலக்கமடைந்த அந்த குருடனின் பெற்றோர், தங்கள் மகனுக்கு இப்போது பார்வை கிடைத்தது எப்படி, அதற்குக் காரணர் யார் என்பது எதுவும் தங்களுக்குத் தெரியாதென பரிசேயரிடம் பொய் சொன்னார்கள்.—யோவான் 9:1-23.
20 பார்வையடைந்த மனிதன் மறுபடியும் பரிசேயர் முன்பாக அழைக்கப்பட்டான். என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்றெல்லாம் அவன் கவலைப்படாமல், தைரியமாய் உண்மையைக் கூறினான். தனக்கு எப்படி பார்வை கிடைத்தது என்பதையும் இயேசுவே சுகப்படுத்தினார் என்பதையும் விலாவாரியாக கூறினான். கடவுளால் அனுப்பப்பட்டவரே இயேசு என்பதை கல்வி கற்றவர்களும் பிரபலமானவர்களுமாகிய இவர்கள் நம்பாததைக் கண்டு ஆச்சரியப்பட்டு, “அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே” என்ற தெளிவான உண்மையை ஏற்றுக்கொள்ளும்படி அவர்களிடம் தைரியமாய் சொன்னான். எதிர் வாதம் ஏதும் செய்ய முடியாமல், அந்தப் பரிசேயர் அவனை தலைக்கனம் பிடித்தவனென்று குற்றஞ்சாட்டி, புறம்பே தள்ளினார்கள்.—யோவான் 9:24-34.
21 இயேசுவுக்கு இது தெரிய வந்தபோது, அந்த மனிதனைக் கண்டுபிடிக்க அவர் அன்புடன் நேரத்தைச் செலவிட்டார். அவனைக் கண்டுபிடித்த பின்பு, குருடனாயிருந்தபோது அவன் காண்பித்த விசுவாசத்தை அவர் மேலும் பலப்படுத்தினார். தாமே மேசியா என இயேசு வெளிப்படையாகக் குறிப்பிட்டார். உண்மையை சொன்னதற்காக அந்த மனிதன் எவ்வளவாய் ஆசீர்வதிக்கப்பட்டான்! சத்தியத்தைப் பேசுகிறவர்களின்மீது தேவன் நிச்சயமாகவே தயவு காண்பிப்பார்.—யோவான் 9:35-37.
22. நாம் ஏன் சத்தியப் பாதையிலே நடக்க வேண்டும்?
22 சத்தியத்தை நடைமுறையில் கடைப்பிடிப்பதை மிகவும் அவசியமான ஒன்றாக நாம் கருத வேண்டும். ஆட்களுடனும் கடவுளுடனும் நல்ல உறவை வளர்ப்பதற்கும் அதைக் காப்பதற்கும் இது மிக முக்கியமானதாக இருக்கிறது. சத்தியவான்களாக இருப்பது, திறந்த மனமுள்ளவராயும், உண்மையானவராயும், அணுகத்தக்கவராயும், நம்பத்தக்கவராயும் இருப்பதாகும். இது யெகோவாவின் அங்கீகாரப் புன்னகையைப் பெறும்படி செய்கிறது. (சங்கீதம் 15:1, 2) உண்மையற்றவர்கள் என்பது, வஞ்சகமாக, நம்பத்தகாதவர்களாக, நேர்மையற்றவர்களாக இருப்பதாகும், இது யெகோவாவின் வெறுப்புக்குள்ளாகும்படி செய்விக்கிறது. (நீதிமொழிகள் 6:16-19) ஆகையால், எப்போதும் சத்தியப் பாதையிலே நடக்க தீர்மானமாக இருங்கள். நிச்சயமாகவே, சத்தியபரரான கடவுளின் மாதிரியைப் பின்பற்றுவதற்கு, நாம் சத்தியத்தை அறிய வேண்டும், சத்தியத்தைப் பேச வேண்டும், சத்தியத்தின்படி வாழவும் வேண்டும்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• நாம் சத்தியத்தை அறிந்திருப்பதற்காக ஏன் நன்றியுள்ளோராக இருக்கலாம்?
• சத்தியவான்களாக இருப்பதில் யெகோவாவின் மாதிரியை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
• பைபிள் சத்தியங்களை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதில் என்ன நன்மைகள் இருக்கின்றன?
• சத்தியப் பாதையிலே தொடர்ந்து நடப்பது ஏன் முக்கியம்?
[பக்கம் 17-ன் படங்கள்]
கிறிஸ்தவர்களிடம் பைபிள் சத்தியம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால், அதை மற்றவர்களுக்கு வைராக்கியத்துடன் அறிவிக்கிறார்கள்
[பக்கம் 18-ன் படங்கள்]
இயேசுவால் பார்வை பெற்ற குருடன் உண்மையைச் சொன்னதற்காக பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்டான்