சிலர் எப்படிப்பட்ட பெயரை விட்டுச்சென்றிருக்கிறார்கள்
சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்ரவேல் ராஜாவான சவுலுக்குப் பயந்து தாவீது தப்பியோடிக் கொண்டிருந்தார். செம்மறியாட்டு, வெள்ளாட்டு மந்தைகளுக்கு சொந்தக்காரனாகிய செல்வச்சீமான் நாபாலிடம் உணவும் தண்ணீரும் கேட்டு தாவீது தனது ஆட்களை அனுப்பினார். சொல்லப்போனால், தாவீதுக்கும் அவருடைய ஆட்களுக்கும் நாபால் உபகாரம் செய்ய கடமைப்பட்டிருந்தார், ஏனென்றால் இவர்கள் நாபாலின் மந்தைகளுக்கு பாதுகாப்பாக இருந்திருக்கிறார்கள். ஆனால் நாபால் எந்த உபசரிப்பையும் காண்பிக்க மறுத்துவிட்டார். தாவீதின் ஆட்களிடம் தாறுமாறாக பேசியும் அனுப்பிவிட்டார். நாபால் நெருப்புடன் விளையாடிக் கொண்டிருந்தார், ஏனென்றால் அவமரியாதையாக நடத்தப்படுவதற்கு தாவீது ஒன்றும் சாதாரண மனிதன் அல்ல.—1 சாமுவேல் 25:5, 8, 10, 11, 14.
விருந்தினரையும் அந்நியரையும் உபசரிப்பது மத்திய கிழக்கு பாரம்பரியம்; ஆனால் நாபாலின் மனப்பான்மையோ முரணாக இருந்தது. ஆகவே தனக்கு எப்படிப்பட்ட பெயரை நாபால் சம்பாதித்தான்? ‘அவன் முரடனாகவும் மோசமான பழக்கங்களை உடையவனாகவும்’ ‘ஒன்றுக்கும் உதவாதவனாகவும்’ இருந்தான் என பைபிள் பதிவு சொல்கிறது. அவனுடைய பெயரின் அர்த்தம் ‘புத்திகெட்டவன்’ என்பதாகும், அவனுடைய பெயருக்கேற்பதான் அவனும் இருந்தான். (1 சாமுவேல் 25:3, 17, 25, NW) மற்றவர்கள் உங்களை பற்றி இப்படி நினைத்துப் பார்ப்பதை நீங்கள் விரும்புவீர்களா? மற்றவர்களுடன் பழகும்போது, முக்கியமாக மற்றவர்கள் பாவப்பட்ட ஜனங்களாக தோன்றினால், நீங்கள் கொடூரமானவராகவும் இரக்கமற்றவராகவும் நடந்துகொள்கிறீர்களா? அல்லது அன்பானவராக, உபசரிப்பவராக, கரிசனையுள்ளவராக நடந்துகொள்கிறீர்களா?
அபிகாயில்—விவேகமுள்ள ஒரு பெண்
அவனுடைய முரட்டுத்தனமான மனப்பான்மையால் நாபால் சிக்கலான சூழ்நிலைமையில் இருந்தான். தாவீதும் அவனுடைய ஆட்களில் 400 பேரும் பட்டயத்தைக் கட்டிக்கொண்டு நாபாலுக்குப் பாடம் புகட்ட கிளம்பினார்கள். நடந்ததை நாபாலின் மனைவி அபிகாயில் கேள்விப்பட்டாள். சண்டை வரப்போவதை அவள் அறிந்தாள். அவள் என்ன செய்தாள்? வேகமாய் போய் போதுமான உணவையும் மற்ற பொருட்களையும் தயார் செய்து அவற்றை எடுத்துக்கொண்டு தாவீதையும் அவருடைய ஆட்களையும் சந்தித்து சண்டையை தடுப்பதற்காகப் புறப்பட்டாள். அவர்களை சந்தித்தபோது, வீணாக இரத்தம் சிந்த வேண்டாம் என தாவீதிடம் அவள் மன்றாடினாள். தாவீதின் மனம் இளகியது. அவளுடைய வேண்டுகோள்களுக்கு அவர் செவிசாய்த்து மனமிரங்கினார். இந்தச் சம்பவம் நடந்து சில காலத்திற்குப் பின்பு நாபால் இறந்துவிட்டான். அபிகாயிலின் நல்ல குணங்களை அறிந்த தாவீது அவளை தனது மனைவியாக்கிக் கொண்டார்.—1 சாமுவேல் 25:14-42.
எப்படிப்பட்ட பெயரை அபிகாயில் சம்பாதித்தாள்? மூல எபிரெயு சொல்கிறபடி, அவள் “விவேகமானவளாக” அல்லது “புத்திசாலி”யாக இருந்தாள். அவள் அறிவுள்ளவளாகவும் சமயோசிதமாக செயல்படுகிறவளாகவும் இருந்தாள்; எப்பொழுது, எப்படி தானே முன்வந்து செயல்பட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தாள். முட்டாளான கணவனையும் அவனுடைய வீட்டையும் அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு அவள் உண்மையுடன் செயல்பட்டாள். காலப்போக்கில், அவளும் இறந்து விட்டாள்; ஆனாலும் விவேகமுள்ள பெண் என்ற நற்பெயருடன் இறந்தாள்.—1 சாமுவேல் 25:3; NW.
பேதுரு எத்தகைய பெயரை விட்டுச் சென்றார்?
இப்பொழுது கால ஓட்டத்தில் நாம் முன்னோக்கிச் சென்று பொது சகாப்தம் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த இயேசுவின் 12 அப்போஸ்தலர்களைப் பற்றி சிந்திப்போம். கேபா, அதாவது சீமோன் பேதுரு மிகவும் வெளிப்படையானவராகவும் துடுக்கானவராகவும் நடந்துகொண்டவர்களில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. இவர் முன்பு கலிலேயாவில் மீன்பிடிக்கும் தொழிலை செய்து வந்தவர்; சுறுசுறுப்பானவர்; தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும் பயப்படாதவர். உதாரணமாக, சீஷர்களின் பாதங்களை இயேசு கழுவிய சந்தர்ப்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பேதுருவின் பாதங்களை கழுவ இயேசு வந்தபோது அவர் எப்படி பிரதிபலித்தார்?
“ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா”? என்று இயேசுவிடம் கேட்டார். “நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய்” என இயேசு பதிலளித்தார். அதற்கு மறுமொழியாக, ‘நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவக் கூடாது’ என பேதுரு கூறினார். உறுதியாக அதேசமயத்தில் துடுக்காக பேதுரு பிரதிபலித்ததை கவனியுங்கள். அவருக்கு இயேசு எவ்வாறு பதிலளித்தார்?
“நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்.” அதற்குச் சீமோன் பேதுரு அவரிடம்: “ஆண்டவரே, என் கால்களை மாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவ வேண்டும் என்றான்.” இப்பொழுது, பேதுரு மற்றொரு முனைக்குச் சென்றுவிட்டார்! ஆனால் பேதுருவின் மனப்பான்மையை ஜனங்கள் எப்பொழுதும் அறிந்திருந்தனர். அவரிடத்தில் எந்தவித கள்ளங்கபடமோ சூதுவாதோ கிடையாது.—யோவான் 13:6-9.
பேதுரு என்ற பெயரை எடுத்தாலே அவருடைய பலவீனங்களும் நினைவுக்கு வரும். உதாரணமாக, குற்றவாளியாகிய நசரேயன் இயேசுவை சேர்ந்தவன் என குற்றம் சாட்டப்பட்டபோது எல்லாருக்கும் முன்பு அவரை மூன்று தடவை மறுதலித்தார். பேதுரு தனது தவறை உணர்ந்தபோது, மிகவும் மனங்கசந்து அழுதார். அவர் தன்னுடைய துயரத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்த பயப்படவில்லை. பேதுரு மறுதலித்ததைப் பற்றிய பதிவை சுவிசேஷ எழுத்தாளர்களில் ஒருவர் பதிவு செய்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்—இந்த விஷயத்தைப் பெரும்பாலும் பேதுருவே அவருக்கு சொல்லியிருக்கலாம்! தன்னுடைய தவறுகளை ஒத்துக்கொள்வதற்கு பேதுரு மனத்தாழ்மையுள்ளவராக இருந்தார். இந்த குணம் உங்களிடம் இருக்கிறதா?—மத்தேயு 26:69-75; மாற்கு 14:66-72; லூக்கா 22:54-62; யோவான் 18:15-18, 25-27.
கிறிஸ்துவை மறுதலித்து சில வாரங்கள் கழிந்த பின், பெந்தெகொஸ்தே நாளன்று திரளான யூதர்களிடம் பேதுரு தைரியமாக பிரசங்கிப்பதற்கு பரிசுத்த ஆவி வல்லமை அளித்தது. உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தார் என்பதற்கு உறுதியளிக்கும் ஓர் அடையாளமாக அது இருந்தது.—அப்போஸ்தலர் 2:14-21.
மற்றொரு சந்தர்ப்பத்தில், பேதுரு வேறொரு கண்ணியில் விழுந்துவிட்டார். அந்தியோகியாவிலுள்ள யூத சகோதரர்கள் சிலர் வருவதற்கு முன்பு புறஜாதி கிறிஸ்தவர்களுடன் பேதுரு நன்றாக பழகினார். ஆனால் எருசலேமிலிருந்து வந்த “விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து” புறஜாதி கிறிஸ்தவர்களை விட்டுவிலகினார் என அப்போஸ்தலன் பவுல் விளக்கினார். பேதுருவின் இரட்டை வேடத்தை பவுல் அம்பலமாக்கினார்.—கலாத்தியர் 2:11-14.
என்றபோதிலும், இயேசுவை பின்பற்றியவர்களில் அநேகர் அவரைவிட்டுப் பிரிந்துசெல்ல தயாராயிருந்த அந்த முக்கியமான கட்டத்தின்போது சீஷர்களில் யார் தைரியமாக பேசினார்? இயேசு புதிய ஒன்றை, அதாவது தமது மாம்சத்தைப் புசித்து இரத்தத்தை குடிப்பதன் முக்கியத்துவத்தை சொன்ன சந்தர்ப்பத்தில் இது நடந்தது. இயேசு இவ்வாறு கூறினார்: “நீங்கள் மனுஷ குமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை.” யூதர்களில் பெரும்பாலோர் இடறலடைந்து, “இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள்”? என்று கூறினார்கள். பிறகு என்ன நடந்தது? “அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்.”—யோவான் 6:50-66.
இத்தகைய முக்கியமான கட்டத்தில், இயேசு தமது 12 அப்போஸ்தலர்களிடம் திரும்பி, “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ”? என்ற இதயத்தை ஊடுருவும் கேள்வியைக் கேட்டார். அதற்கு பேதுரு: “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்” என்றார்.—யோவான் 6:67-69.
பேதுரு எப்படிப்பட்ட பெயரை விட்டுச்சென்றார்? அவரைப் பற்றிய பதிவை வாசிக்கிற ஒருவர் அவருடைய ஒளிவுமறைவற்ற குணத்தையும் நேர்மையையும் பற்றுறுதிமிக்க குணத்தையும், சொந்த பலவீனங்களை ஒத்துக்கொள்ளும் குணத்தையும் கண்டு மனம் கவரப்படாமல் இருக்க முடியாது. தனக்கு எப்பேர்ப்பட்ட சிறந்த பெயரை சம்பாதித்தார்!
இயேசுவை எப்படிப்பட்ட நபராக ஜனங்கள் நினைத்துப் பார்க்கிறார்கள்?
இயேசுவின் பூமிக்குரிய ஊழியம் வெறும் மூன்றரை ஆண்டுகளே நீடித்தன. இருந்தாலும், அவரை பின்பற்றியவர்கள் மத்தியில் எப்படிப்பட்ட பெயரெடுத்தார்? அவர் பாவமின்றி பரிபூரணராக விளங்கியதால், தன்னை தனியே ஒதுக்கி வைத்துக்கொண்டாரா? அவர் கடவுளுடைய குமாரனாக இருந்ததால் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தாரா? தன்னை பின்பற்றியவர்களைக் கீழ்ப்படியச் செய்வதற்கு அவர்களை பயமுறுத்தினாரா? அல்லது பலவந்தப்படுத்தினாரா? நகைச்சுவை உணர்வே இல்லாதவராக இருந்தாரா? பலவீனரிடம், வியாதியஸ்தரிடம், அல்லது சிறுபிள்ளைகளிடம் பேசுவதற்கு நேரமில்லாத அளவுக்கு ரொம்ப வேலையாக இருந்தாரா? மற்ற இனத்தவர்களை கீழ்த்தரமாக கருதினாரா? அந்தக் காலத்து ஆண்கள் பெரும்பாலும் செய்தது போல பெண்களை தரக்குறைவாக நடத்தினாரா? அவரைப் பற்றி பதிவு என்ன சொல்கிறது?
ஜனங்கள் மீது இயேசு அக்கறை காண்பித்தார். பல சந்தர்ப்பங்களில் முடவர்களையும் பிணியாளிகளையும் குணப்படுத்தினார் என அவருடைய ஊழியத்தைப் பற்றிய ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. ஏழைகளுக்கு உதவ அவர் கடினமாய் முயன்றார். சிறுவர்களிடம் அக்கறை காண்பித்தார், அதனால்தான் தமது சீஷர்களிடம் இவ்வாறு அறிவுரை கூறினார்: “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்.” பின்பு இயேசு “அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.” சிறுபிள்ளைகளுக்காக நீங்கள் நேரத்தை ஒதுக்குகிறீர்களா, அல்லது அவர்களை கவனிக்க முடியாதளவுக்கு ரொம்ப ‘பிஸி’யாக இருக்கிறீர்களா?—மாற்கு 10:13-16; மத்தேயு 19:13-15.
இயேசு பூமியில் வாழ்ந்த சமயத்தில், நியாயப்பிரமாணத்தையும் மிஞ்சின மதச் சட்டங்களாலும் விதிமுறைகளாலும் ஜனங்கள் ஒடுக்கப்பட்டார்கள். மதத் தலைவர்கள் பாரமான சுமைகளை அவர்கள் மீது சுமத்தினார்கள், ஆனால் அவர்களோ தங்களுடைய ஒரு விரலினால்கூட அந்தச் சுமைகளை நகர்த்தவில்லை. (மத்தேயு 23:4; லூக்கா 11:46) ஆகவே இயேசு எவ்வளவு வித்தியாசமானவராக திகழ்ந்தார்! “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று அவர் கூறினார்.—மத்தேயு 11:28-30.
இயேசுவுடன் கூட்டுறவு கொண்டபோது ஜனங்கள் புத்துணர்ச்சி அடைந்தார்கள். அவர் தம்மைப் பின்பற்றியவர்களை அச்சுறுத்தவில்லை, அதனால் தங்கள் மனதிலுள்ளதை வெளிப்படுத்துவதற்கு அவர்கள் பயப்படவில்லை. சொல்லப்போனால், அவர்களுடைய மனதில் இருப்பதை வெளிப்படுத்துவதற்கு உற்சாகமூட்டும் கேள்விகளை கேட்டார். (மாற்கு 8:27-29) கிறிஸ்தவ கண்காணிகள் தங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘சக விசுவாசிகளிடம் இதே போன்ற ஓர் எண்ணத்தை நானும் ஏற்படுத்துகிறேனா? மற்ற மூப்பர்கள் தங்களுடைய கருத்துக்களை உண்மையிலேயே என்னிடம் தெரிவிக்கிறார்களா, அல்லது தெரியப்படுத்த தயங்குகிறார்களா?’ கண்காணிகள் சிநேகப்பான்மையானவர்களாக, பிறர் சொல்வதை செவிகொடுத்துக் கேட்பவர்களாக, வளைந்துகொடுப்பவர்களாக இருக்கும்போது அது எவ்வளவு புத்துணர்ச்சியூட்டுகிறது! நியாயமில்லாமல் நடந்துகொண்டால் மற்றவர்கள் மனந்திறந்து தாராளமாய் பேச மாட்டார்கள்.
இயேசு கடவுளுடைய குமாரனாக இருந்தபோதிலும், தமது அதிகாரத்தை ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யவில்லை. மாறாக, தமக்கு செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் நியாயங்காட்டிப் பேசினார். பரிசேயர்கள் அவரை சிக்க வைக்கும் எண்ணத்தோடு, “இராயனுக்கு வரி கொடுக்கிறது நியாயமோ, அல்லவோ?” என்று தந்திரமாக கேள்வி கேட்டபோது அவர் இதைத்தான் செய்தார். அவர்களிடம் ஒரு நாணயத்தை வாங்கி இவ்வாறு கேட்டார்: “இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது”? “இராயனுடையது” என பதிலளித்தார்கள். “அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்” என்று அவர் கூறினார். (மத்தேயு 22:15-21) எளிமையாக தர்க்க ரீதியில் பேசியது போதுமானதாக இருந்தது.
இயேசு நகைச்சுவை உணர்வுடையவராக இருந்தாரா? செல்வந்தன் ஒருவன் கடவுளுடைய ராஜ்யத்திற்குள் போவதைவிட ஒட்டகம் ஊசியின் காதில் போவது எளிது என இயேசு சொன்னதில் சிறிது நகைச்சுவை இருப்பதாக வாசகர்கள் சிலர் உணரலாம். (மத்தேயு 19:23, 24) சொல்லர்த்தமாகவே ஊசியின் காதில் ஒட்டகம் போவது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. உயர்வுநவிர்ச்சிக்கு மற்றொரு உதாரணம், ஒருவன் தன்னுடைய கண்ணில் உத்திரம் இருப்பதை உணராமல் சகோதரனுடைய கண்ணில் இருக்கும் துரும்பைப் பார்ப்பதைப் பற்றியதாகும். (லூக்கா 6:41, 42) ஆம், உணர்ச்சிகளை வெளிக்காட்டாத கண்டிப்பாளராக இயேசு இருக்கவில்லை. அவர் கனிவானவராகவும் நட்புமிக்கவராகவும் இருந்தார். கவலையான நேரங்களில், துயரை தணிப்பதற்கு நகைச்சுவை உணர்வு இன்று கிறிஸ்தவர்களுக்கு உதவும்.
ஒரு பெண்ணிடம் இயேசு காண்பித்த இரக்கம்
இயேசு அருகில் இருந்தபோது பெண்கள் எவ்வாறு உணர்ந்தார்கள்? அவருடைய தாயாராகிய மரியாள் உட்பட, அநேக பெண்கள் அவரை உண்மையுடன் பின்பற்றினர். (லூக்கா 8:1-3; 23:55, 56; 24:9, 10) இயேசுவை அணுகிப் பேசுவதில் பெண்கள் அந்தளவு இயல்பாக உணர்ந்ததால், “பாவியெனப் பேர் வாங்கின” ஒரு ஸ்திரீ அவருடைய கால்களை தனது கண்ணீரால் கழுவி, பரிமள தைலத்தை அவருடைய பாதங்களில் தடவினாள். (லூக்கா 7:37, 38, திருத்திய மொழிபெயர்ப்பு) பல வருடங்களாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மற்றொரு பெண், குணமடைவதற்காக அவருடைய ஆடையை தொடுவதற்கு அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்து சென்றாள். இயேசு அவளுடைய விசுவாசத்தை மெச்சினார். (மத்தேயு 9:20-22) ஆம், இயேசுவை சிநேகப்பான்மையானவராக பெண்கள் கருதினர்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், கிணற்றின் அருகே ஒரு சமாரியப் பெண்ணிடம் இயேசு பேசினார். அவள் மிகவும் ஆச்சரியப்பட்டு அவரிடம் இவ்வாறு கூறினாள்: “நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத் தா என்று எப்படிக் கேட்கலாம்”? பொதுவாக சமாரியர்களிடம் யூதர்கள் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்வதில்லை. ‘நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றைப்’ பற்றிய அற்புதகரமான சத்தியத்தைப் பற்றி இயேசு அவளிடம் தொடர்ந்து பேசினார். பெண்களிடம் இயல்பாக பழகினார். அதை தமது அந்தஸ்திற்கு குறைச்சலாக அவர் கருதவில்லை.—யோவான் 4:7-15.
சுயதியாக மனப்பான்மை உட்பட, மனிதநேயமிக்க அநேக குணங்களுக்காக இயேசு நினைவுகூரப்படுகிறார். கடவுளுடைய அன்பிற்கு இலக்கணமாக திகழ்ந்தார். தம்மை பின்பற்றுகிறவர்கள் அனைவருக்கும் இயேசு சிறந்த தராதரத்தை வைத்தார். நீங்கள் அவருடைய முன்மாதிரியை எவ்வளவு நெருக்கமாக பின்பற்றுகிறீர்கள்?—1 கொரிந்தியர் 13:4-8; 1 பேதுரு 2:21.
நவீன நாளைய கிறிஸ்தவர்கள் எவ்வாறு நினைவுகூரப்படுகிறார்கள்?
நவீன காலங்களில், உண்மையுள்ள கிறிஸ்தவர்களில் ஆயிரக்கணக்கானோர் மரித்திருக்கிறார்கள்; பலர் வயதாகி இறந்திருக்கிறார்கள், சிலர் இளவயதில் இறந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நற்பெயரை விட்டுச் சென்றிருக்கிறார்கள். வயதாகி மரித்த கிரிஸ்டல் என்பவரைப் போன்ற சிலர், தங்களுடைய கனிவான அன்பிற்கும் நன்கு பழகும் சுபாவத்திற்கும் நினைவுகூரப்படுகிறார்கள். சுமார் 40 வயதில் இறந்த டர்க் என்பவரைப் போன்றோர் கலகலவென மகிழ்ச்சியாக இருக்கும் குணத்திற்கும் உதவி செய்யக்கூடிய குணத்திற்கும் நினைவுகூரப்படுகிறார்கள்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஹோசே என்பவரையும் எடுத்துக்கொள்ளுங்கள். 1960-களில், அந்நாட்டில் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலை தடை செய்யப்பட்டிருந்த சமயத்தில், ஹோசே மணமுடித்தார், அவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் பிறந்தார்கள். பார்சிலோனாவில் அவர் நிரந்தரமான ஒரு வேலை பார்த்து வந்தார். ஆனால் அந்தச் சமயம், தென் ஸ்பெயினில் முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவ மூப்பர்கள் தேவைப்பட்டார்கள். ஹோசே தனது வேலையை விட்டுவிட்டு மலகா என்ற இடத்திற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்து சென்றார். அவருக்கு அடிக்கடி சரியான வேலை கிடைக்காமல் போனதால் அவர்கள் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க வேண்டியிருந்தது.
இருந்தாலும், ஹோசே உண்மையுள்ளவராக இருப்பதற்கு பெயர்பெற்றவராக விளங்கினார், ஊழியத்தில் நம்பத்தக்க முன்மாதிரியாக திகழ்ந்தார், தன்னுடைய பிள்ளைகளை நல்ல விதத்தில் வளர்ப்பதிலும் எடுத்துக்காட்டாக விளங்கினார், இதற்கு தன்னுடைய மனைவி கார்மெலாவின் ஆதரவும் இருந்தது. அந்தப் பகுதியில் கிறிஸ்தவ மாநாடுகளை ஒழுங்கமைக்க யாராவது தேவைப்பட்ட போதெல்லாம் ஹோசே உதவ தயாராக இருந்தார். சுமார் 50 வயதாக இருந்தபோது, எதிர்பாரா விதமாக பயங்கர வியாதி ஒன்று அவரை தாக்கி அவருடைய உயிரை பறித்துவிட்டது. இருந்தாலும், நம்பகமானவர், கடினமாக உழைக்கும் மூப்பர், அன்பான கணவன், தகப்பன் என்ற பெயரை விட்டுச் சென்றார்.
ஆகவே, உங்களைப் பற்றி மற்றவர்கள் எப்படி நினைத்துப் பார்ப்பார்கள்? நீங்கள் நேற்று மரித்திருந்தால், இன்று உங்களைப் பற்றி ஜனங்கள் என்ன சொல்வார்கள்? இது, நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதன் பேரில் முன்னேற்றம் செய்வதற்கு நாம் அனைவருமே சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு கேள்வியாக இருக்கிறது.
நற்பெயரை விட்டுச்செல்வதற்கு நாம் என்ன செய்யலாம்? ஆவியின் கனிகளை—அன்பு, நீடிய பொறுமை, தயவு, சாந்தம், இச்சையடக்கம் போன்றவற்றை—காண்பிப்பதில் நாம் எப்பொழுதும் முன்னேறலாம். (கலாத்தியர் 5:22, 23) ஆம், “விலையுயர்ந்த நறுமணத் தைலத்தைவிட நற்புகழே மேல். பிறந்த நாளைவிட இறக்கும் நாளே சிறந்தது.”—பிரசங்கி [சபை உரையாளர்] 7:1, பொது மொழிபெயர்ப்பு; மத்தேயு 7:12.
[பக்கம் 5-ன் படம்]
அபிகாயில் தனது விவேகத்திற்கு நினைவுகூரப்படுகிறாள்
[பக்கம் 7-ன் படம்]
பேதுரு தனது துடுக்குத்தனமான அதேசமயத்தில் நேர்மையான குணத்திற்காக நினைவுகூரப்படுகிறார்
[பக்கம் 8-ன் படம்]
இயேசு சிறுபிள்ளைகளுக்காக நேரத்தை ஒதுக்கினார்