வாழ்க்கை சரிதை
யெகோவா எப்போதும் நம்மை கவனித்துக் கொள்கிறார்
எனெலெஸ் மஸாங் சொன்னபடி
வருடம் 1972. மலாவி இளைஞர் அணியைச் சேர்ந்த பத்து பேர் எங்கள் வீட்டிற்குள் புகுந்து, என்னைப் பிடித்து, அருகிலிருந்த கரும்பு தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றார்கள். அங்கே என்னை பயங்கரமாக அடித்து, செத்துவிட்டதாக நினைத்து அங்கேயே போட்டுவிட்டு சென்றார்கள்.
மலாவியிலிருந்த யெகோவாவின் சாட்சிகளில் எண்ணற்றோர் இதைப்போன்ற கொடுமைகளை சந்தித்தார்கள். அவர்கள் என்ன காரணத்திற்காக துன்புறுத்தப்பட்டார்கள்? அதை சகித்திருக்க அவர்களுக்கு உதவியது எது? எங்கள் குடும்பத்தின் கதையை கொஞ்சம் கேட்கிறீர்களா?
நான் 1921, டிசம்பர் 31-ம் தேதி பிறந்தேன். எங்கள் குடும்பம் மதப்பற்றுமிக்க ஒன்று. மத்திய ஆப்பிரிக்க பிரிஸ்பிட்டேரியன் சர்ச்சில் அப்பா பாஸ்டராக இருந்தார். மலாவியின் தலைநகரான லிலாங்வேக்கு அருகிலுள்ள அங்கோம் என்ற சிறிய நகரில்தான் நான் வளர்ந்தேன். எனக்கு 15 வயதாக இருந்தபோது எமாஸ் மஸாங் என்பவருக்கு மனைவி ஆனேன்.
ஒரு நாள், அப்பாவின் நண்பரான ஒரு பாஸ்டர் எங்கள் வீட்டிற்கு வந்தார். எங்கள் வீட்டிற்கு அருகில் யெகோவாவின் சாட்சிகள் வசிப்பதை அவர் கவனித்திருக்கிறார். எனவே, அவர்களோடு எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று எச்சரித்தார். சாட்சிகளுக்கு பேய் பிடித்திருக்கிறது என்றும், ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் எங்களுக்கும் பேய் பிடித்துவிடும் என்றும் கூறினார். அதைக் கேட்டு மிகவும் பயந்துவிட்டதால் நாங்கள் மற்றொரு கிராமத்திற்கே மாறிச் சென்றுவிட்டோம். அங்கு எமாஸுக்கு ஒரு கடையில் வேலை கிடைத்தது. ஆனால், எங்கள் புதிய வீட்டிற்கு அருகிலும் யெகோவாவின் சாட்சிகள் வசிக்கிறார்கள் என்பதை சீக்கிரத்திலேயே அறிய வந்தோம்!
எமாஸுக்கு பைபிள் என்றாலே உயிர். அதனால் சிறிது நாட்களிலேயே ஒரு சாட்சியிடம் பேசினார். எமாஸ் கேட்ட அநேக கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்கள் கிடைத்ததால் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளை படிக்க ஒப்புக்கொண்டார். ஆரம்பத்தில், அவர் வேலை செய்த கடையிலேயே பைபிள் படிப்பு நடந்தது; பிறகு வாரத்திற்கு ஒருமுறை எங்கள் வீட்டிலேயே நடந்தது. யெகோவாவின் சாட்சிகள் வீட்டிற்கு வந்த ஒவ்வொரு சமயமும், அவர்களைக் கண்டு பயந்ததால் நான் வெளியே போய்விடுவேன். இருந்தாலும், எமாஸ் தொடர்ந்து பைபிளைப் படித்தார். படிக்க ஆரம்பித்து சுமார் ஆறு மாதங்களில் ஏப்ரல் 1951-ல் அவர் முழுக்காட்டுதல் பெற்றார். ஆனால், நான் பிரிந்து சென்றுவிடுவேனோ என்று பயந்ததால் அதை என்னிடம் சொல்லவில்லை.
கடினமான வாரங்கள்
என் கணவர் யெகோவாவின் சாட்சியாக முழுக்காட்டுதல் எடுத்துவிட்டார் என்பதை என் தோழி எலன் கட்ஸாலெரோ ஒருநாள் என்னிடம் சொல்லிவிட்டாள். அவ்வளவுதான், எனக்கு வந்ததே கோபம்! அன்றிலிருந்து அவரிடம் பேசவும் இல்லை, அவருக்கு சாப்பாடு செய்து கொடுக்கவும் இல்லை. அவர் குளிப்பதற்காக தண்ணீர் எடுத்துவந்து சூடுபண்ணி கொடுப்பதையும் நிறுத்திவிட்டேன்; எங்கள் கலாச்சாரத்தில் இதெல்லாம் மனைவி செய்யவேண்டிய வேலையாக கருதப்பட்டது.
இந்தக் கஷ்டங்களை எல்லாம் மூன்று வாரங்களுக்கு சகித்த பின் ஒருநாள், ‘இங்கே வந்து உட்கார், கொஞ்சம் பேசலாம்’ என்று என்னை தயவாக அழைத்தார். சாட்சியாக மாற ஏன் தீர்மானித்தார் என்பதை அப்போது கூறினார். 1 கொரிந்தியர் 9:16 போன்ற பல வசனங்களை வாசித்து விளக்கினார். என் நெஞ்சம் நெகிழ்ந்தது; நற்செய்தியை அறிவிப்பதில் நானும் பங்குகொள்ள வேண்டும் என்று உணர்ந்தேன். ஆகவே, யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படிக்க தீர்மானித்தேன். அன்று மாலையே என் அன்புக் கணவருக்காக சுவையான உணவு தயாரித்தேன், அது அவருக்கு அளவில்லா மகிழ்ச்சி தந்தது.
குடும்பத்தாரோடும் நண்பரோடும் சத்தியத்தை பகிர்ந்தோம்
நாங்கள் யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவு கொள்வதை எங்கள் பெற்றோர் கேள்விப்பட்டபோது கடுமையாக எதிர்த்தார்கள். ‘இனிமேலும் எங்களை பார்க்க வர வேண்டாம்’ என என் குடும்பத்தார் கடிதம் போட்டுவிட்டார்கள். அவர்கள் இப்படி எழுதியது எங்களுக்கு வருத்தத்தை தந்தது. என்றாலும், எங்களுக்கு ஏராளமான ஆவிக்குரிய சகோதர, சகோதரிகளும், அப்பா, அம்மாக்களும் கிடைப்பார்கள் என்ற இயேசுவின் வாக்குறுதியில் நம்பிக்கை வைத்தோம்.—மத்தேயு 19:29.
பைபிள் படிப்பில் வேகமாக முன்னேறி ஆகஸ்ட் 1951-ல், அதாவது என் கணவர் முழுக்காட்டுதல் எடுத்து வெறும் மூன்றரை மாதங்களில் நானும் முழுக்காட்டுதல் பெற்றேன். என் தோழி எலனுக்கு சத்தியத்தை சொல்ல வேண்டும் என்று தூண்டப்பட்டேன். பைபிள் படிப்பைப் பற்றி சொன்னபோது அவள் அதை ஏற்றுக்கொண்டது எனக்கு மகிழ்ச்சியளித்தது. எலன், மே 1952-ல் முழுக்காட்டுதல் பெற்று என் ஆவிக்குரிய சகோதரி ஆனாள். எங்கள் நட்பின் பிணைப்பை இது இன்னும் பலப்படுத்தியது. இன்றும் நாங்கள் மிக நெருங்கிய சிநேகிதிகளாக இருக்கிறோம்.
பல்வேறு சபைகளை சந்திக்க எமாஸ் 1954-ல் வட்டார கண்காணியாக நியமிக்கப்பட்டார். அந்தச் சமயத்திற்குள்ளாக எங்களுக்கு ஏற்கெனவே ஆறு பிள்ளைகள் இருந்தார்கள். அந்நாட்களில், குடும்பஸ்தராக இருந்த பயணக் கண்காணி ஒரு வாரம் சபையை சந்தித்துவிட்டு மறு வாரம் தன் மனைவி மக்களோடு வீட்டில் இருப்பது வழக்கமாக இருந்தது. என்றாலும், எமாஸ் பயணம் செய்தபோது எங்கள் குடும்ப பைபிள் படிப்பு தவறக்கூடாது என்பதற்காக என்னை நடத்த சொல்லிவிடுவார். எங்கள் பிள்ளைகளோடு படித்தபோது அதை சந்தோஷமான அனுபவமாக்க முயன்றோம். யெகோவா மீதும் அவருடைய வார்த்தையிலுள்ள சத்தியம் மீதும் எங்களுக்கு இருந்த அன்பைப் பற்றி இருதயப்பூர்வமான உறுதியோடு பேசினோம். பிரசங்க வேலையில் முழு குடும்பமாக பங்குகொண்டோம். இந்த ஆவிக்குரிய பயிற்றுவிப்பு எங்கள் பிள்ளைகளின் விசுவாசத்தை பலப்படுத்தியது, நாங்கள் எதிர்ப்படவிருந்த துன்புறுத்துதலை சமாளிக்க அவர்களை தயார்படுத்தவும் உதவியது.
மத துன்புறுத்துதல் ஆரம்பம்
1964-ல் மலாவி ஒரு சுதந்திர நாடானது. நாங்கள் அரசியலில் நடுநிலை வகிப்பதை ஆளுங்கட்சி அதிகாரிகள் அறிந்தபோது எங்களை வற்புறுத்தி அரசியல் அட்டைகளை வாங்க வைக்க முயன்றார்கள்.a எமாஸும் நானும் அவற்றை வாங்க மறுத்ததால் இளைஞர் அணியின் அங்கத்தினர்கள் எங்களுக்கு சொந்தமான சோளக்கொல்லையை நாசப்படுத்தினார்கள். அடுத்த வருடத்திற்கான எங்கள் சாப்பாடே அதுதான். அவர்கள் சோளப் பயிரை வெட்டி சாய்த்தபோது, “காமூசூவின் [ஜனாதிபதி பாண்டாவின்] அரசியல் அட்டையை வாங்க மறுப்போரின் செழுமையான சோளத்தை கறையான் தின்னும், அதற்காக அவர்கள் அழுது புலம்புவார்கள்” என்று பாடினார்கள். இவ்வாறு உணவு சேதம் ஏற்பட்டபோதிலும் நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை. யெகோவாவின் கவனிப்பை உணர்ந்தோம். அவர் அன்போடு எங்களை பலப்படுத்தினார்.—பிலிப்பியர் 4:12, 13.
ஆகஸ்ட் 1964-ல் ஓர் இரவு பிள்ளைகளோடு நான் மட்டும் வீட்டில் இருந்தேன். தூங்கிக்கொண்டிருந்தபோது தூரத்தில் ஏதோ பாட்டு சத்தம் கேட்டு நடுராத்திரி திடுக்கிட்டு விழித்தேன். மக்களின் மனங்களில் பீதியை கிளப்பிய கூலெவாம்கூலூ என்ற இரகசிய சங்கத்தை சேர்ந்தவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். மக்களை தாக்குவதும் மரித்த மூதாதைகளின் ஆவிகள்போல நடிப்பதுமே அச்சங்கத்தைச் சேர்ந்த பழங்குடி ஆட்டக்காரர்களின் வேலையாகும். இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் எங்களை தாக்குவதற்காக கூலெவாம்கூலூவை அனுப்பி வைத்திருந்தார்கள். உடனே பிள்ளைகளை எழுப்பிவிட்டேன். தாக்குபவர்கள் வீட்டிற்கு அருகில் வருவதற்கு முன்பே நாங்கள் புதர்களுக்குள் ஓடி ஒளிந்துகொண்டோம்.
மறைவிடத்திலிருந்து பார்த்தபோது பிரகாசமான ஒளி தெரிந்தது. எங்களுடைய கூரை வீட்டை கூலெவாம்கூலூவினர் கொளுத்திவிட்டிருந்தார்கள். எங்கள் சொத்து பத்துக்களோடு சேர்ந்து வீடு சாம்பலாகிவிட்டது. புகைந்துகொண்டிருந்த எங்கள் வீட்டின் இடிபாடுகளைவிட்டு செல்லுகையில், “அந்த சாட்சி குளிர்காய சரியான நெருப்பு இதுதான்” என அவர்கள் பேசியதை கேட்டோம். நாங்கள் உயிரோடு தப்பியதற்காக யெகோவாவிற்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருந்தோம்! எங்கள் சொத்தை எல்லாம் அவர்கள் அழித்துப்போட்டது உண்மையே. ஆனால், மனிதனுக்கு பதிலாக யெகோவாவையே நம்புவோம் என்ற எங்கள் தீர்மானத்தை அவர்கள் அழிக்கவில்லை.—சங்கீதம் 118:8.
அந்தப் பகுதியில் வசித்த இன்னும் ஐந்து யெகோவாவின் சாட்சிகள் குடும்பங்களிலும் இதே கொடுமையை கூலெவாம்கூலூ செய்திருந்ததை அறிய வந்தோம். அருகிலுள்ள சபைகளிலிருந்த சகோதரர்கள் உதவிக்கு வந்தபோது நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியும் நன்றியும் உள்ளவர்களாக இருந்தோம்! அவர்கள் எங்கள் வீடுகளை மறுபடியும் கட்டிக்கொடுத்து, பல வாரங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களையும் வழங்கினார்கள்.
துன்புறுத்துதல் தீவிரிக்கிறது
செப்டம்பர் 1967-ல், எங்குமிருந்த யெகோவாவின் சாட்சிகளை ஒன்று திரட்டும் திட்டம் நாடு முழுவதும் படுவேகமாக பரவியது. எங்களை கண்டுபிடிப்பதற்காக இளைஞர் அணி மற்றும் மலாவி இளம் பயனியர் அமைப்புகளைச் சேர்ந்த ஈவிரக்கமற்ற இளைஞர்கள் பெரிய அரிவாள்களோடு வீடுவீடாக சென்றார்கள். சாட்சிகளை கண்டுபிடித்தபோது அவர்களிடம் அரசியல் அட்டைகளை விற்க முயன்றார்கள்.
எங்கள் வீட்டிற்கு வந்தபோது அரசியல் அட்டை இருக்கிறதா என்று கேட்டார்கள். “நான் வாங்கவில்லை. இப்போதும் வாங்கமாட்டேன், எதிர்காலத்திலும் வாங்கப் போவதில்லை” என்று சொன்னேன். உடனே, அவர்கள் என்னையும் என் கணவரையும் பிடித்து அருகிலிருந்த போலீஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்றார்கள். எங்களோடு எதையும் எடுத்துச்செல்ல வாய்ப்பே தரவில்லை. பள்ளியிலிருந்து திரும்பி வந்த சிறு பிள்ளைகள் எங்களை காணவில்லை என்றதும் ரொம்பவே பயந்துவிட்டார்கள். நல்லவேளையாக, சிறிது நேரத்திற்குள் எங்கள் மூத்த மகன் டான்யல் வீட்டிற்கு வந்து நடந்தவற்றை பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து அறிந்துகொண்டான். உடனடியாக, தம்பி தங்கைகளை கூட்டிக்கொண்டு போலீஸ் நிலையத்திற்கு விரைந்தான். லிலாங்வேக்கு அழைத்துச் செல்வதற்காக போலீஸார் எங்களை வண்டிகளில் ஏற்றிக்கொண்டிருந்தபோது பிள்ளைகள் வந்து சேர்ந்தார்கள். அவர்களும் எங்களோடுகூட வந்தார்கள்.
லிலாங்வேயில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் பெயருக்கு வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. “நீங்கள் தொடர்ந்து யெகோவாவின் சாட்சிகளாக இருப்பீர்களா?” என அதிகாரிகள் எங்களிடம் கேட்டார்கள். “ஆம்!” என்றோம். அப்படி சொன்னாலே ஏழு வருட சிறைதண்டனை நிச்சயம் என்பதை அறிந்தும் அவ்வாறு கூறினோம். அமைப்பை “நடத்தியவர்களுக்கு” 14 வருட சிறைதண்டனை.
ஓர் இரவு முழுவதும் உணவும் உறக்கமும் இல்லாமல் கழித்த பிறகு போலீஸார் எங்களை மாயூல் சிறைச்சாலைக்கு அழைத்து சென்றார்கள். அங்கிருந்த அறைகளில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் தரையில் படுக்க இடத்தை கண்டுபிடிப்பதுகூட கடினமாக இருந்தது! கும்பல் நிறைந்த ஒவ்வொரு அறையிலும் வைக்கப்பட்டிருந்த ஒரு வாளிதான் மலம் கழிக்கும் இடமாக இருந்தது. மோசமாக தயாரிக்கப்பட்ட உணவு கொஞ்சமே கொடுக்கப்பட்டது. இரண்டு வாரங்கள் கழித்து, நாங்கள் அமைதியான மக்கள்தான் என்பதை சிறை அதிகாரிகள் உணர்ந்துகொண்டதால் திறந்த வெளியிலிருந்த சிறைச்சாலை உடற்பயிற்சி முற்றத்தை உபயோகிக்க அனுமதித்தார்கள். இத்தனை அநேக சாட்சிகள் ஒன்று சேர்ந்திருந்ததால் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தவும் மற்ற கைதிகளுக்கு அருமையான சாட்சி கொடுக்கவும் தினந்தோறும் ஏராளமான சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஏறக்குறைய மூன்று மாத சிறைதண்டனைக்கு பிறகு நாங்கள் விடுவிக்கப்பட்டது எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. சர்வதேச அளவில் மலாவி அரசாங்கத்தின்மீது அழுத்தங்கள் வந்ததால் விடுதலை செய்யப்பட்டோம்.
வீடுகளுக்கு திரும்பி செல்லும்படி கூறிய போலீஸ் அதிகாரிகள், மலாவியில் யெகோவாவின் சாட்சிகள் தடை செய்யப்பட்டிருப்பதாகவும் எங்களிடம் கூறினார்கள். இந்தத் தடையுத்தரவு, 1967, அக்டோபர் 20 முதல் 1993, ஆகஸ்ட் 12 வரை சுமார் 26 வருடங்கள் நீடித்தது. அவை மிகக் கடினமான காலங்களாக இருந்தன; என்றாலும் யெகோவாவின் உதவியோடு எங்களால் நடுநிலைமையை உறுதியாக காத்துக்கொள்ள முடிந்தது.
மிருகங்களைப் போல துரத்தப்படுதல்
அக்டோபர் 1972-ல் வெளியான ஓர் அரசாங்க ஆணை கொடிய துன்புறுத்துதலை மீண்டும் துவக்கிவிட்டது. யெகோவாவின் சாட்சிகள் அனைவரும் வேலை செய்யும் இடங்களிலிருந்து வெளியேற்றப்படவும் கிராமங்களில் வசித்தவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து துரத்தப்படவும் வேண்டும் என அந்த ஆணை கூறியது. சாட்சிகள் மிருகங்களைப்போல துரத்தப்பட்டார்கள்.
அந்தச் சமயத்தில் ஓர் இளம் கிறிஸ்தவ சகோதரர் எங்கள் வீட்டிற்கு ஓடி வந்தார். ‘இளைஞர் அணியினர் உங்கள் தலையை வெட்டி, ஒரு கோலில் மாட்டி, கிராம அதிகாரிகளிடம் எடுத்துச்செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள்’ என்ற அவசர செய்தியை எமாஸிடம் தெரிவித்தார். உடனடியாக எமாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். அதற்கு முன்பு, கூடிய சீக்கிரத்தில் நாங்கள் அவரை பின்தொடருவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டுதான் சென்றார். அவசர அவசரமாக பிள்ளைகளை அனுப்பி வைத்தேன். பின்னர், நான் கிளம்பவிருந்த சமயத்தில் இளைஞர் அணியைச் சேர்ந்த பத்து பேர் எமாஸை தேடிக்கொண்டு வந்தார்கள். அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தபோது எமாஸ் அங்கு இல்லை என்பதை அறிந்தார்கள். கோபமடைந்த அவர்கள் அருகிலிருந்த கரும்பு தோட்டத்திற்குள் என்னை இழுத்துச் சென்று, காலால் உதைத்து கரும்பு தண்டுகளால் என்னை அடித்தார்கள். பிறகு, செத்துவிட்டதாக நினைத்து அங்கேயே போட்டுவிட்டு சென்றார்கள். நினைவு திரும்பியதும் மெதுவாக வீட்டிற்கு ஊர்ந்து வந்தேன்.
அன்று இருட்டியதும் தன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு எமாஸ் என்னை தேடி வீட்டிற்கே வந்துவிட்டார். நான் பயங்கரமாக அடிபட்டிருப்பதை கண்ட அவரும் கார் வைத்திருந்த அவர் நண்பரும் சேர்ந்து என்னை தூக்கி பத்திரமாக காருக்குள் வைத்தார்கள். பிறகு, லிலாங்வேயில் வசித்த ஒரு சகோதரரின் வீட்டிற்கு சென்றோம். அங்கிருக்கையில் என் காயமெல்லாம் மெல்ல மெல்ல ஆறியது, நாட்டிலிருந்தே வெளியேற எமாஸ் திட்டங்களை தீட்ட ஆரம்பித்தார்.
அண்ட இடமில்லாத அகதிகள்
எங்கள் மகள் டீனெஸுக்கும் அவள் கணவருக்கும் சொந்தமான ஐந்து டன் டிரக்கு ஒன்று இருந்தது. முன்பு மலாவி இளம் பயனியர் அமைப்பில் இருந்தவரும், இப்போது எங்கள் சூழ்நிலையைக் கண்டு இரக்கப்பட்டவருமான ஒருவரை டிரைவராக வேலைக்கு அமர்த்தினார்கள். எங்களுக்கும் மற்ற சாட்சிகளுக்கும் உதவ அவர் முன்வந்தார். அந்த டிரைவர், பல மாலைப்பொழுதுகள் சுற்றித்திரிந்து முன்பே திட்டமிட்டிருந்த மறைவிடங்களில் இருந்த சாட்சிகளை அழைத்து வந்தார். பின்பு அவர் தனது மலாவி இளம் பயனியர் சீருடையை அணிந்துகொண்டு சாட்சிகள் நிறைந்த டிரக்கை போலீஸ் தடைகள் பலவற்றை கடந்து ஓட்டிச்சென்றார். எல்லைக்கோட்டை கடந்து ஜாம்பியாவிற்குள் செல்ல நூற்றுக்கணக்கான சாட்சிகளுக்கு உதவ அவர் தனது உயிரையே பணயம் வைத்தார்.
சில மாதங்கள் கழித்து, ஜாம்பிய அதிகாரிகள் எங்களை மறுபடியும் மலாவிக்கு அனுப்பி வைத்தார்கள்; என்றாலும், சொந்த கிராமத்திற்கு எங்களால் செல்ல முடியவில்லை. நாங்கள் விட்டுச்சென்றிருந்த பொருட்கள் அனைத்தும் திருட்டு போயிருந்தன. வீட்டிலிருந்த உலோக கூரைகள்கூட காணாமல் போயிருந்தன. தப்பியோட வேறு இடமில்லாததால் மொசாம்பிக் ஓடிப்போனோம். அங்கே மலாங்கெனீ அகதி முகாமில் இரண்டரை வருடங்கள் தங்கியிருந்தோம். என்றாலும், ஜூன் 1975-ல் மொசாம்பிக்கில் ஒரு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அது அந்த முகாமை மூடிவிட்டு, மீண்டும் மலாவிக்கே செல்லும்படி எங்களை வற்புறுத்தியது. அங்கோ, யெகோவாவுடைய மக்களின் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆக, வேறு வழியின்றி மீண்டும் ஜாம்பியாவிற்கே ஓடிப்போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கே, சிகூமூக்கீர் அகதி முகாமிற்கு சென்றோம்.
இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஏராளமான பஸ்களும் இராணுவ டிரக்குகளும் பிரதான சாலையில் வந்து குவிந்தன. அதிலிருந்து ஆயுதம் தாங்கிய நூற்றுக்கணக்கான ஜாம்பிய வீரர்கள் முகாமிற்குள் படையெடுத்தனர். எங்களுக்காக அழகான வீடுகள் கட்டப்பட்டிருப்பதாகவும், அங்கு செல்ல அவர்களே எங்களுக்கு போக்குவரத்து உதவி செய்வதாகவும் சொன்னார்கள். இது சுத்தப் பொய் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். டிரக்குகளிலும் பஸ்களிலும் ஏறும்படி வீரர்கள் அகதிகளை தள்ள ஆரம்பித்ததால் எங்கும் ஒரே பீதி. வீரர்கள் தங்களிடமிருந்த இயந்திர துப்பாக்கிகளால் மேல்நோக்கி சுட ஆரம்பித்தார்கள். சகோதர, சகோதரிகளில் ஆயிரக்கணக்கானோர் பயத்தில் இங்குமங்கும் சிதறி ஓடினார்கள்.
இந்தக் குழப்பத்தில் எமாஸ்மீது யாரோ தெரியாமல் மோதியதால் அவர் கீழே விழுந்து பிறர் கால்களின் கீழ் மிதிபட்டார். ஆனால், காலூன்றி நிற்க ஒரு சகோதரர் அவருக்கு உதவினார். மிகுந்த உபத்திரவம் ஆரம்பித்துவிட்டது என்றே நாங்கள் நினைத்தோம். அகதிகள் அனைவரும் மலாவி நோக்கி ஓடத் தொடங்கினார்கள். இன்னும் ஜாம்பியாவிற்குள் இருந்தபோது ஓர் ஆற்றை கடக்க வேண்டி வந்தது. பத்திரமாக ஆற்றைக் கடக்க மற்றவர்களுக்கு உதவுவதற்காக சகோதரர்கள் கைகளை பிடித்துக்கொண்டு மனித சங்கிலிகளைப் போல பல இடங்களில் நின்றிருந்தார்கள். ஆற்றுக்கு அக்கரையில் சேர்ந்தபோதோ ஜாம்பிய வீரர்கள் எங்களை சூழ்ந்துகொண்டு வலுக்கட்டாயமாக மலாவிக்கு திரும்பி அனுப்பி வைத்தார்கள்.
மறுபடியும் மலாவி வந்துசேர்ந்த எங்களுக்கு எங்கு போவது என்றே தெரியவில்லை. கிராமத்திற்கு வரும் “புது முகங்களை,” அதாவது யெகோவாவின் சாட்சிகளை அடையாளம் காண கவனமாயிருக்கும்படி அரசியல் கூட்டங்களிலும் செய்தித்தாள்களிலும் ஜனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருப்பதை அறிய வந்தோம். கிராமத்தைவிட நகரத்திற்கு சென்றால் கண்டுபிடிப்பது கடினம் என்பதால் தலைநகருக்கு செல்ல தீர்மானித்தோம். வெற்றிகரமாக ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தோம். பயணக் கண்காணியாக ரகசியமாய் சபைகளை சந்திக்கும் தனது வேலையை எமாஸ் மறுபடியும் தொடங்கினார்.
சபை கூட்டங்களுக்கு செல்லுதல்
உண்மையோடு நிலைத்திருக்க எங்களுக்கு எது உதவியது? சபை கூட்டங்களே! மொசாம்பிக்கிலும் ஜாம்பியாவிலும் உள்ள அகதி முகாம்களில் இருந்தபோது எந்த தடையுமின்றி கூட்டங்களுக்கு சென்றோம். புல் கூரை கொண்ட அந்த ராஜ்ய மன்றங்கள் மிகவும் எளிமையாக இருந்தன. மலாவியிலோ கூட்டங்களுக்காக கூடிவருவது ஆபத்தானது, கடினமானதுங்கூட; என்றாலும் முயற்சி செய்தபோது அதற்கேற்ற பலன்கள் கிடைத்தன. கண்டுபிடிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக பொதுவாக நடுராத்திரியில், ஒதுக்குப்புறமான இடங்களில் கூட்டங்களை நடத்தினோம். கூட்டம் நடப்பதை மற்றவர்கள் அறிந்துவிடக் கூடாது என்பதற்காக பேச்சாளர் பேசி முடித்த பிறகு போற்றுதல் தெரிவிப்பதற்காக கைகளை தட்டாமல் வெறுமனே கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்தோம்.
முழுக்காட்டுதல் கொடுப்பது எல்லாம் நடுஜாமத்தில்தான் நடந்தது. அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில்தான் எங்கள் மகன் அபியூட் முழுக்காட்டுதல் பெற்றான். முழுக்காட்டுதல் பேச்சிற்கு பிறகு, அவனும் முழுக்காட்டுதல் பெறவிருந்த மற்றவர்களும் இருட்டில் சதுப்புநில பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். அங்கே தோண்டப்பட்டிருந்த ஆழமற்ற குழி ஒன்றில் முழுக்காட்டப்பட்டார்கள்.
எங்கள் சிறிய வீடே பாதுகாப்பான புகலிடம்
அரசாங்க தடையுத்தரவு அமலிலிருந்த முடிவான வருடங்களில் லிலாங்வேயில் இருந்த எங்கள் வீடே பாதுகாப்பான இடமாக உபயோகிக்கப்பட்டது. ஜாம்பிய கிளை அலுவலகத்திலிருந்து தபாலும் பிரசுரங்களும் எங்கள் வீட்டிற்கு ரகசியமாக வந்து சேர்ந்தன. ஜாம்பியாவிலிருந்து வந்த பிரசுரங்களை எடுத்துச் செல்லவும் தபாலையும் பிரசுரங்களையும் மலாவியின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் சைக்கிள் கூரியர்களாக சேவித்த சகோதரர்கள் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். அப்போது விநியோகிக்கப்பட்ட காவற்கோபுர பத்திரிகைகள், பைபிளை அச்சடிக்கும் தாளில் அச்சிடப்பட்டிருந்ததால் மெல்லிசாக இருந்தன. இதன் காரணமாக, சாதாரண தாளில் அச்சிடப்பட்டிருந்தால் எவ்வளவு எடுத்துச்செல்ல முடியுமோ அதைவிட இரண்டு மடங்கு அதிக பத்திரிகைகளை கூரியர்களால் எடுத்துச்செல்ல முடிந்தது. படிப்பு கட்டுரைகள் மட்டுமே இருந்த காவற்கோபுர மினி பத்திரிகைகளையும் கூரியர்கள் விநியோகித்தார்கள். அது ஒரே தாளில் அச்சிடப்பட்டிருந்ததால் மினி பத்திரிகையை சட்டைப் பைக்குள்ளும் மிக எளிதில் மறைத்துவிடலாம்.
இந்தக் கூரியர்கள், ஏராளமான பெட்டிகளில் இருந்த தடை செய்யப்பட்ட பிரசுரங்களை தங்கள் சைக்கிள்களில் உயர அடுக்கி வைத்துக்கொண்டு சில சமயம் இரவின் இருளில் பதுங்கி காட்டு வழியே சென்றார்கள். தங்கள் சுதந்திரத்தையும் உயிரையும் பற்றிக்கூட கவலைப்படாமல் இதை செய்தார்கள். ரோடுகளில் போலீஸ் தடைகளும் மற்ற ஆபத்துக்களும் இருந்தபோதிலும், எந்த சீதோஷண நிலையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணித்து தங்கள் சகோதரர்களுக்கு ஆவிக்குரிய உணவை எடுத்துச் சென்றார்கள். அன்பார்ந்த அந்தக் கூரியர்கள் எவ்வளவு தைரியசாலிகள்!
யெகோவா விதவைகளை கவனித்துக் கொள்கிறார்
டிசம்பர் 1992-ல் வட்டார சந்திப்பின்போது பேச்சு கொடுக்கையில் எமாஸுக்கு ஸ்ட்ரோக் வந்தது. அதற்கு பிறகு அவரால் பேச முடியாமல் போய்விட்டது. கொஞ்ச காலத்தில் அவருக்கு மறுபடியும் ஸ்ட்ரோக் வந்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அவருடைய ஆரோக்கியம் நலிவடைந்து வந்தபோது அதை சமாளிப்பது அவருக்கு கடினமாக இருந்தது. என்றாலும், எங்கள் சபையிலுள்ளவர்கள் கொடுத்த அன்பான ஆதரவு என் மனமுறிவை போக்க உதவியது. நவம்பர் 1994-ல் 76 வயதில் அவர் மரிக்கும் வரை அவரை வீட்டிலேயே வைத்து என்னால் கவனித்துக்கொள்ள முடிந்தது. எங்களுக்கு திருமணமாகி 57 வருடங்கள் ஓடிவிட்டன. எமாஸ் மரிப்பதற்கு முன்பு தடையுத்தரவு நீக்கப்பட்டதையும் பார்த்துவிட்டார். இருந்தாலும், எனது உண்மையுள்ள துணைவரை இழந்த வருத்தம் இன்றும் எனக்கு உள்ளது.
நான் விதவையான பிறகு என் மருமகன், தன் மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகளோடு சேர்த்து என்னையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை தானே ஏற்றுக்கொண்டார். வருத்தகரமாக, கொஞ்ச நாள் வியாதியாய் இருந்த அவர் ஆகஸ்ட் 2000-ல் மரித்தார். எங்கள் அனைவருக்கும் உணவும் உறைவிடமும் அளிக்க என் மகளால் என்ன செய்ய முடியும்? யெகோவா நம்மை கவனித்துக் கொள்கிறார், உண்மையில் “திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்” என்பதை மறுபடியும் கண்டுணர்ந்தேன். (சங்கீதம் 68:5) பூமியிலுள்ள தமது ஊழியர்கள் மூலம் யெகோவா எங்களுக்கு ஓர் அழகிய புதிய வீட்டை கட்டிக் கொடுத்தார். இது எப்படி நடந்தது? எங்களுடைய மோசமான சூழ்நிலையை பார்த்த சபையின் சகோதர, சகோதரிகள் ஐந்தே வாரங்களில் எங்களுக்காக ஒரு வீட்டை கட்டிவிட்டார்கள்! மற்ற சபைகளைச் சேர்ந்த கொத்தனார்களாயிருந்த சகோதரர்கள் வந்து உதவினார்கள். இந்த அனைத்து சாட்சிகளும் காண்பித்த அன்பும் தயவும் எங்களை திக்குமுக்காட வைத்துவிட்டன. ஏனெனில், அவர்களில் அநேகர் வாழும் வீடுகளைவிட சிறந்த ஒன்றை எங்களுக்காக கட்டிக் கொடுத்தார்கள். இவ்வாறு சபையினர் காண்பித்த அன்பின் வெளிக்காட்டு அந்த சுற்றுவட்டாரத்தில் அருமையான சாட்சி பகர்ந்தது. ஒவ்வொரு இரவும் தூங்கச் செல்கையில் ஏற்கெனவே பரதீஸில் இருப்பதுபோல உணருகிறேன்! எங்கள் அழகிய புதிய வீடு செங்கலாலும் சிமென்டாலும்தான் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால், அநேகர் கூறியபடி உண்மையில் அது அன்பால் கட்டப்பட்ட வீடு.—கலாத்தியர் 6:10.
யெகோவா தொடர்ந்து கவனித்துக் கொள்கிறார்
சில சமயங்களில் அறவே நம்பிக்கை அற்றுப்போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்போதும் யெகோவா என்னை ஆதரித்திருக்கிறார். எனது ஒன்பது பிள்ளைகளில் ஏழு பேர் இப்போது உயிரோடு இருக்கிறார்கள். நெருங்கிய உறவினர் உட்பட எங்கள் குடும்பத்தில் இப்போது 123 பேர் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் யெகோவாவை உண்மையோடு சேவிக்கிறார்கள் என்பதால் எவ்வளவு நன்றியுள்ளவளாக இருக்கிறேன்!
இப்போது எனக்கு 82 வயது. கடவுளுடைய ஆவி மலாவியில் சாதித்திருப்பதை பார்க்கும்போது எனக்குள் சந்தோஷம் நிரம்பி வழிகிறது. கடந்த நான்கு வருடங்களில் மட்டுமே ராஜ்ய மன்றங்களின் எண்ணிக்கை 1-லிருந்து 600-க்கும் மேலாக அதிகரித்திருப்பதை பார்த்திருக்கிறேன். இப்போது லிலாங்வேயில் ஒரு புதிய கிளை அலுவலகமும் உள்ளது. கட்டியெழுப்பும் ஆவிக்குரிய உணவும் தடையின்றி கிடைப்பதால் மகிழ்கிறோம். ஏசாயா 54:17-ல் காணப்படும் கடவுளுடைய வாக்குறுதி நிறைவேறியதை கண்ணார கண்டதாக நான் உணருகிறேன். “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்” என்று அங்கே நமக்கு உறுதியளிக்கப்படுகிறது. 50-க்கும் அதிக வருடங்கள் யெகோவாவை சேவித்த பிறகு, நாம் எப்படிப்பட்ட சோதனைகளை சந்தித்தாலும் சரி யெகோவா நம்மை எப்போதும் கவனித்துக் கொள்கிறார் என்பதில் முழு நிச்சயமாக இருக்கிறேன்.
[அடிக்குறிப்பு]
a மலாவியில் யெகோவாவின் சாட்சிகளுடைய சரித்திரத்தைப் பற்றி அதிகத்தை அறிந்துகொள்ள 1999 யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக்கில் (ஆங்கிலம்) 149-223 பக்கங்களைக் காண்க. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 24-ன் படம்]
என் கணவர் எமாஸ் ஏப்ரல் 1951-ல் முழுக்காட்டுதல் பெற்றார்
[பக்கம் 26-ன் படம்]
தைரியமுள்ள கூரியர்கள் சிலர்
[பக்கம் 28-ன் படம்]
அன்பால் கட்டப்பட்ட வீடு