வயதான சக விசுவாசிகளை உயர்வாக மதிக்கிறீர்களா?
பூர்வ இஸ்ரவேல் ஜனங்கள் கடவுளுடன் ஓர் உடன்படிக்கை உறவுக்குள் இருந்தபோது, அவர்களுக்கு இவ்வாறு கட்டளை கொடுக்கப்பட்டது: “நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக.” (லேவியராகமம் 19:32) இவ்வாறு முதியோருக்கு மரியாதை காண்பிப்பது ஒரு பரிசுத்த கடமை, இது கடவுளுக்கு கீழ்ப்படிவதுடன் நெருங்கிய தொடர்புடையது. கிறிஸ்தவர்களாகிய நாம் இப்போது மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லாதபோதிலும், தமக்கு சேவை செய்கிற முதியோர்களை மதிப்புமிக்கவர்களாகவும் அருமையானவர்களாகவும் யெகோவா கருதுகிறார் என்பதை இது நமக்கு நினைப்பூட்டுகிறது. (நீதிமொழிகள் 16:31; எபிரெயர் 7:18) நாம் யெகோவாவின் நோக்குநிலையை பிரதிபலிக்கிறோமா? வயதான கிறிஸ்தவ சகோதர சகோதரிகளை உயர்வாக மதிக்கிறோமா?
வயதான நண்பரை உயர்வாக மதித்தவர்
வயதானோருக்கு மரியாதை செலுத்துவதை சிறப்பித்துக் காட்டுகிற பைபிள் விவரப்பதிவு இரண்டு இராஜாக்கள் புத்தகத்தில் காணப்படுகிறது. எலியாவுக்குப் பிறகு அவருடைய ஸ்தானத்திற்கு அவரைவிட இளைய தீர்க்கதரிசியாகிய எலிசா வந்ததைப் பற்றிய விவரம் இதில் இருக்கிறது. எலியா தனது அந்திம காலத்தில் ஒரு தீர்க்கதரிசியாக இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யத்தில் சேவை செய்தபோது நடந்ததை கவனியுங்கள்.
அந்த காலத்தில், கில்காலிலிருந்து பெத்தேலுக்கும், பெத்தேலிலிருந்து எரிகோவுக்கும், பிறகு எரிகோவிலிருந்து யோர்தான் நதிக்கும் செல்லும்படி வயதான தீர்க்கதரிசியாகிய எலியாவுக்கு யெகோவா கட்டளையிட்டார். (2 இராஜாக்கள் 2:1, 2, 4, 6) சுமார் 50 கிலோமீட்டர் தூரமுடைய இந்தப் பயணத்தின்போது, எலிசா தன்னை தொடர்ந்து வருவதை மூன்று முறை எலியா தடுத்தார். இருந்தாலும், நூற்றாண்டுகளுக்கு முன்னர் நகோமியை விட்டுப்பிரிய மனமில்லாதிருந்த இளம் ரூத்தைப் போலவே, எலிசாவும் இந்த வயதான தீர்க்கதரிசியை விட்டுப்பிரிய மறுத்தார். (ரூத் 1:16, 17) எலிசா மூன்று முறை இவ்வாறு குறிப்பிட்டார்: “நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன்.” (2 இராஜாக்கள் 2:2, 4, 6) அந்தச் சமயத்தில், எலியாவுக்கு சுமார் ஆறு ஆண்டுகளாக எலிசா பணிவிடை செய்திருந்தார். இருந்தாலும், கூடுமானவரை எலியாவுடன் சேர்ந்து சேவை செய்யவே விரும்பினார். சொல்லப்போனால், ‘அவர்கள் பேசிக்கொண்டு நடந்து போகையில், இதோ, . . . எலியா சுழல் காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனார்’ என பதிவு சொல்கிறது. (வசனம் 11) இஸ்ரவேலில் எலியாவின் ஊழியத்தின் கடைசி நிமிடம் வரை எலியாவும் எலிசாவும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். வயதானவரும் அதிக அனுபவசாலியுமான தீர்க்கதரிசி எலியாவிடமிருந்து முடிந்தவரை அதிக போதனைகளையும் உற்சாகத்தையும் பெறுவதில் இளைய தீர்க்கதரிசி எலிசா மிகுந்த ஆவலுடையவராக இருந்தார் என தெரிகிறது. ஆகவே, வயதில் மூத்த தனது நண்பரை அவர் உயர்வாக மதித்தார் என்பதில் சந்தேகமில்லை.
‘தகப்பன்களைப் போலவும் தாய்களைப் போலவும்’
எலிசா வயதான தீர்க்கதரிசியை ஒரு நண்பராகவும்—ஆவிக்குரிய தகப்பனாகவும்—நேசித்ததைப் புரிந்துகொள்வது ஒன்றும் கடினம் அல்ல. (2 இராஜாக்கள் 2:12) இஸ்ரவேலில் எலியாவின் வேலை முடிவடைந்ததற்கு சற்று முன்பு, எலிசாவிடம் இவ்வாறு கேட்டார்: “நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படு முன்னே நான் உனக்குச் செய்ய வேண்டியது என்ன, கேள்.” (வசனம் 9) ஆகவே, தனது பணியைத் தொடரும் எலிசாவின் ஆவிக்குரிய நலனிலும் கடவுளுடைய வேலை தொடர்ந்து நடைபெறுவதிலும் கடைசி வரை எலியா அக்கறை காண்பித்தார்.
இன்று, வயதான நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் தகப்பனையும் தாயையும் போன்ற அதே அக்கறையை காண்பித்து தங்களுடைய அறிவையும் ஞானத்தையும் இளையவர்களுடன் தாராளமாக பகிர்ந்துகொள்வதைப் பார்க்கும்போது அது இதயத்திற்கு எவ்வளவு இதமாக இருக்கிறது! உதாரணமாக, பெத்தேல் குடும்பத்தில் சேரும் புதியவர்கள் தங்களுடைய வேலையை செய்ய தேவையான திறமைகளைப் பெற யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்களில் நீண்ட காலமாய் சேவை செய்யும் தன்னார்வத் தொண்டர்கள் மனப்பூர்வமாக உதவுகிறார்கள். அதைப் போலவே, அநேக வருடங்களாக சபைகளை சந்திக்கும் பயணக் கண்காணிகளும் அவர்களுடைய துணைவியாரும் தாங்கள் பெற்ற அபரிமிதமான அனுபவத்தை பயணக் கண்காணிகளாக பயிற்சி பெறுவோருடன் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறார்கள். மேலும், உலகெங்கிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில், பல ஆண்டுகளாக யெகோவாவுக்கு உண்மையுடன் சேவை செய்துவரும் வயதான சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள்; இவர்கள் தாங்கள் பெற்ற நடைமுறை ஞானத்தையும் அனுபவத்தையும் சபையிலுள்ள புதிய அங்கத்தினர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.—நீதிமொழிகள் 2:7; பிலிப்பியர் 3:17; தீத்து 2:3-5.
முதுமை எய்திய இந்த அன்பான கிறிஸ்தவர்கள் காண்பிக்கும் மனமார்ந்த அக்கறை இப்படிப்பட்டவர்களுக்கு மரியாதை காண்பிப்பதை உண்மையிலேயே இன்பமான ஒன்றாக்குகிறது. ஆகவே, வயதான சக விசுவாசிகளுக்கு ஆழ்ந்த மரியாதை காண்பிப்பதில் நாம் எலிசாவின் முன்மாதிரியை பின்பற்ற வேண்டும். அப்போஸ்தலன் பவுல் நமக்கு நினைப்பூட்டுகிறபடி, ‘முதிர்வயதுள்ளவரை . . . தகப்பனைப் போலவும்,’ “முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப் போலவும்” நாம் தொடர்ந்து நடத்துவோமாக. (1 தீமோத்தேயு 5:1, 2) அப்படி செய்வதன் மூலம் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ சபை தகுந்த விதத்தில் செயல்படுவதற்கும் வளர்ச்சியடைவதற்கும் நாம் பெரிதும் பங்காற்றுகிறோம்.
[பக்கம் 30-ன் படம்]
முடிந்தவரை எலியாவுடன் சேர்ந்து சேவை செய்யவே எலிசா விரும்பினார்
[பக்கம் 31-ன் படங்கள்]
வயதான கிறிஸ்தவர்களிடமிருந்து இளையவர்கள் பெரிதும் பயனடைகிறார்கள்