“ஞானமுள்ளவரின் சட்டம்”—ஜீவ ஊற்று
“ஆ!தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!” என வியந்து உரைத்தார் அப்போஸ்தலனாகிய பவுல். (ரோமர் 11:33) “[யெகோவா தேவன்] இருதயத்தில் ஞானமுள்ளவர்” என உத்தமரான யோபு சொன்னார். (யோபு 9:4) ஆம், வானத்தையும் பூமியையும் படைத்தவர் ஞானத்தில் ஈடிணையற்றவர். அப்படிப்பட்ட படைப்பாளரின் சட்டத்தை, அதாவது எழுதப்பட்ட வார்த்தையைப் பற்றி என்ன சொல்லலாம்?
“கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது” என சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 19:7, 8) இந்த வார்த்தைகளில் பொதிந்துள்ள உண்மையை பூர்வ இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் எவ்வளவாய் புரிந்திருப்பார்! “ஞானமுள்ளவரின் சட்டம் ஜீவ ஊற்று, மரண கண்ணிகளிலிருந்து அது ஒருவரை தப்புவிக்கும்” என அவர் குறிப்பிட்டார். (நீதிமொழிகள் 13:14, NW) இந்த நீதிமொழிகள் 13-ஆம் அதிகாரத்தின் முதல் 13 வசனங்களில், கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் அறிவுரைகள் நம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் ஆபத்துக்களைத் தவிர்க்கவும் எவ்வாறு உதவும் என்பதை சாலொமோன் காண்பித்தார்.
கற்றுக்கொள்ள மனமுள்ளவர்களாயிருங்கள்
“ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான்” என நீதிமொழிகள் 13:1 குறிப்பிடுகிறது. தகப்பன் லேசாகவும் சிட்சிக்கலாம், கடுமையாகவும் சிட்சிக்கலாம். முதலில் பயிற்றுவிப்பு என்ற வடிவில் சிட்சிக்கலாம், ஆனால் அது ஏற்கப்படாதபோது தண்டனை வழங்கலாம். தகப்பனின் சிட்சையை ஏற்றுக்கொள்ளும் மகன் ஞானமுள்ளவன்.
“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்” என பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 12:6) நம் பரலோக தகப்பன் நம்மை சிட்சிக்கும் ஒரு விதம், எழுதப்பட்ட அவரது வார்த்தையாகிய பைபிளின் மூலமாகும். நாம் மரியாதை உணர்வுடன் பைபிளை வாசித்து அதன்படி நடக்கும்போது, அவருடைய வார்த்தை நம்மை சிட்சிக்கிறது என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட சிட்சை நமக்கு பிரயோஜனமளிக்கும், ஏனென்றால் யெகோவா சொல்லும் அனைத்துமே நம் நன்மைக்காகத்தான்.—ஏசாயா 48:17.
நம்முடைய ஆவிக்குரிய நலனில் அக்கறையாக இருக்கும் சக விசுவாசி நம்மை திருத்தலாம்; இதுவும் நாம் சிட்சை பெறும் ஒரு வழியே. ஒருவர் கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாக பிரயோஜனமான எந்த அறிவுரையை நமக்கு வழங்கினாலும், அதை அவருடைய சொந்த அறிவுரையாக கருதாமல் சத்தியத்தின் மகா பிறப்பிடமானவரின் அறிவுரையாக கருத வேண்டும். ஆம், அது யெகோவாவிடமிருந்தே வருவதாக கருதுவதுதான் ஞானமானது. நாம் அவ்வாறு கருதி, நம் சிந்தையை செதுக்கவும் வசனங்களை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ளவும் நம் வழிகளை திருத்தவும் அதை அனுமதிக்கும்போது, அந்த சிட்சையிலிருந்து பயனடைகிறோம். கிறிஸ்தவ கூட்டங்களிலும் பைபிள் சார்ந்த பிரசுரங்களிலும் நாம் பெறுகிற அறிவுரையைப் பொருத்ததிலும் இதுவே உண்மை. அவ்வாறு வாசித்து அல்லது கேட்டு கற்றுக்கொள்ளும் விஷயங்களை நாம் ஏற்று கடைப்பிடிப்பது, சிறந்த வகையான சுயசிட்சை ஆகும்.
ஆனால் பரியாசக்காரன் சிட்சையை ஏற்பதில்லை. “எது சிறந்ததென்று தனக்கே தெரியும் என நினைப்பதால் அவன் கற்றுக்கொள்ள விரும்புவதில்லை” என ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது. சற்று கடுமையான சிட்சையாகிய கடிந்துகொள்ளுதலையும் அவன் ஏற்பதில்லை. ஆனால் தகப்பனுடைய சிட்சை தவறானது என்று நிரூபிக்க அவனால் எப்போதாவது முடியுமா? யெகோவா ஒருபோதும் தவறு செய்ததில்லை, இனி ஒருபோதும் தவறு செய்யவும் மாட்டார். சிட்சையை ஏற்க மறுப்பதன் மூலம் பரியாசக்காரன் தனக்கே பரியாசத்தை தேடிக்கொள்கிறான். கற்றுக்கொள்ள மனமுள்ளவர்களாக இருப்பதன் மதிப்பை ரத்தின சுருக்கமாக எவ்வளவு அருமையாய் சாலொமோன் காட்டுகிறார்!
நாவுக்கு கடிவாளம் போடுங்கள்!
கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாக நம் நாவை பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்ட, கனிதரும் மரத்தை வாயுடன் ஒப்பிட்டு பேசுகிறார் இஸ்ரவேலின் ராஜா. “மனிதன் தன் வாயின் கனிகளால் நன்மையை புசிப்பான், ஆனால் துரோகம் செய்வோரின் ஆத்துமாவோ [“ஆத்ம விருப்பமோ,” அடிக்குறிப்பு] வன்முறை” என அவர் சொல்கிறார். (நீதிமொழிகள் 13:2, NW) பேசப்படும் வார்த்தைகளே வாயின் கனிகள். மனிதன் வார்த்தைகளால் எதை விதைக்கிறானோ அதையே அறுக்கிறான். “அவனுடைய வார்த்தைகள் நல்லெண்ணத்தோடும் தன் அயலகத்தாரோடு நட்பை வளர்க்கும் நோக்கத்தோடும் பேசப்படும்போது அவன் நன்மையை புசிப்பான், சந்தோஷமாகவும் சமாதானமாகவும் வாழ்வான்” என ஒரு அறிஞர் சொல்கிறார். ஆனால் துரோகியைப் பொருத்ததிலோ நிலைமை வேறு. அவன் வன்முறையில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு தீங்கிழைக்க விரும்புகிறான். மனதில் வன்முறையை விதைக்கிறான், வன்முறையையே அறுக்கிறான். மரணத்தின் கண்ணிகள் அவன் வாசலருகே இருக்கின்றன.
“தன் வாய்க்குக் காவல் வைப்போன் தன் உயிரைக் காப்பான். வாயை விரிவாய்த் திறப்பவன் பாழாவான்” என சாலொமோன் தொடர்கிறார். (நீதிமொழிகள் 13:3, திருத்திய மொழிபெயர்ப்பு) நற்பெயர் பாழாவது, மனம் புண்படுவது, உறவுகள் விரிசலடைவது, ஏன் உடலளவில் தீங்கு ஏற்படுவதுகூட முன்யோசனையற்ற, முட்டாள்தனமான பேச்சின் விளைவுகளாக இருக்கலாம். நாவை கட்டுப்படுத்தாவிட்டால் கடவுளுடைய வெறுப்புக்கும் ஆளாவோம், ஏனென்றால் எல்லாருமே தாங்கள் பேசும் வார்த்தைகளைக் குறித்து அவருக்குக் கணக்கு கொடுக்க வேண்டும். (மத்தேயு 12:36, 37) உண்மையில் நம் நாவுக்கு உறுதியான கடிவாளம் போடுவது பாழாகிவிடாமல் நம்மை காக்கும். ஆனால் நம் நாவுக்கு கடிவாளம் போட கற்றுக்கொள்வது எப்படி?
அளவுக்கதிகமாக பேசாமல் இருப்பது ஒரு எளிய வழி. “சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 10:19) யோசித்துவிட்டு பேசுவது மற்றொரு வழி. “யோசனையின்றிப் பேசிப் பட்டயம்போற் குத்துவோருண்டு” என கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதினார் ஒருவர். (நீதிமொழிகள் 12:18, தி.மொ.) கொஞ்சமும் யோசிக்காமல் பேசினால், பேசுபவரும் சரி கேட்பவரும் சரி புண்படலாம். ஆகவே, ‘நீதிமான் மனம் யோசித்துப் பதிற்சொல்லும்’ என்ற நடைமுறையான அறிவுரையை பைபிள் வழங்குகிறது.—நீதிமொழிகள் 15:28, தி.மொ.
சுறுசுறுப்பாக இருங்கள்
“சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய [“சுறுசுறுப்புள்ளவர்களுடைய,” NW] ஆத்துமாவோ புஷ்டியாகும்” என சாலொமோன் குறிப்பிடுகிறார். (நீதிமொழிகள் 13:4) ஒரு புத்தகத்தின்படி, “வெறுமனே விருப்பப்படுவதில் கொஞ்சமும் பிரயோஜனமில்லை, ஆனால் சுறுசுறுப்பாக உழைப்பதில் மதிப்பு உண்டு என்பதுதான் [இந்த நீதிமொழியின்] குறிப்பு. சோம்பேறிகள் தங்களையே அழித்துவிடும் ஆசைகளுக்கு . . . பலியாகிறார்கள், எந்தப் பலனையும் அவர்கள் பெறுவதில்லை.” இருந்தாலும் சுறுசுறுப்புள்ளவர்களுடைய ஆத்துமா புஷ்டியாகும், அதாவது அவர்களுடைய விருப்பம் நிறைவேறும்.
பொறுப்புகளை தவிர்ப்பதற்காக யெகோவாவிற்கு தங்களை ஒப்புக்கொடுக்க தயங்குபவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? கடவுளுடைய புதிய உலகில் வாழ அவர்கள் விருப்பம் காட்டலாம், ஆனால் அதற்காக தங்கள் பங்கில் செய்ய வேண்டியதை செய்ய விரும்புகிறார்களா? இயேசுவின் மீட்கும் பலியில் விசுவாசம் வைத்து, யெகோவாவிற்கு தங்களை ஒப்புக்கொடுத்து, அதற்கு அடையாளமாக தண்ணீர் முழுக்காட்டுதல் பெறுவதே ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து வருகிறவர்களிடம்’ எதிர்பார்க்கப்படும் தேவை.—வெளிப்படுத்துதல் 7:14, 15.
சபையில் கண்காணிக்கும் பொறுப்பை பெறுவதில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதையும் கவனியுங்கள். இந்த அருமையான பொறுப்பை பெற விரும்புவது நிச்சயம் பாராட்டத்தக்கது, அதை வேதவசனங்களும் ஆதரிக்கின்றன. (1 தீமோத்தேயு 3:1) இருந்தாலும் வெறுமனே விருப்பப்படுவதால் அந்தத் தகுதியைப் பெற முடியாது. தகுதி பெறுவதற்கு தேவையான குணங்களையும் திறமைகளையும் வளர்த்துக்கொள்வது அவசியம். அதற்கு சுறுசுறுப்பாக உழைக்க வேண்டும்.
நீதி—ஒரு தற்காப்பு
நீதியுள்ள ஒருவர் தெய்வீக பண்புகளை வளர்க்கிறார், சத்தியத்தைப் பேசுகிறார். பொய் பேசுவது யெகோவாவின் சட்டத்திற்கு முரணானது என்பதை உணர்ந்திருக்கிறார். (நீதிமொழிகள் 6:16-19; கொலோசெயர் 3:9) இது சம்பந்தமாக சாலொமோன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நீதிமான்கள் பொய்யை வெறுக்கிறார்கள், துன்மார்க்கரோ வெட்கக்கேடாக நடந்து தங்களுக்குத் தாங்களே அவமானத்தை வருவித்துக்கொள்கிறார்கள்.” (நீதிமொழிகள் 13:5, NW) நீதிமான் பொய்யை வெறுமனே தவிர்ப்பதில்லை, அதை அடியோடு வெறுக்கிறார். பொய் எவ்வளவுதான் தீங்கற்றதாக தோன்றினாலும் மனிதருக்கிடையே உள்ள நல்லுறவுகளை அறுத்துவிடுகிறது என்பதை அறிந்திருக்கிறார். மேலும் பொய் பேசுபவர்கள் மற்றவர்களுடைய நம்பிக்கையை அறவே இழந்துவிடுகிறார்கள். துன்மார்க்கன் பொய் பேசுவதன் மூலம் அல்லது வேறு வழியில் வெட்கக்கேடாக நடந்துகொள்வதன் மூலம் தனக்குத் தானே அவமானத்தை வருவித்துக்கொள்கிறான்.
கடவுளுடைய பார்வையில் சரியானதை செய்வது நன்மையானது என்பதைக் காட்ட ஞானமுள்ள அரசர் இவ்வாறு சொல்கிறார்: “நீதி உத்தமமார்க்கத்தானைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.” (நீதிமொழிகள் 13:6) நீதி ஒரு அரணைப் போல் பாதுகாப்பு தருகிறது, துன்மார்க்கமோ சீரழிக்கிறது.
நடிக்காதீர்கள்
மனித இயல்பை புரிந்துகொண்டவராக இஸ்ரவேலின் ராஜா இவ்வாறு சொன்னார்: “ஒன்றுமில்லாதிருந்தும் செல்வர் போல நடிப்போருமுண்டு; மிகுந்த செல்வமிருந்தும் ஏழைகள் போல நடிப்போருமுண்டு.” (நீதிமொழிகள் 13:7, பொது மொழிபெயர்ப்பு) ஒருவர் பார்ப்பதற்கு ஒரு விதமாகவும் எதார்த்தத்தில் வேறு விதமாகவும் இருப்பார். ஏழைகள் சிலர், ஒருவேளை பகட்டாக காட்டிக்கொள்ள, வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களென்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்த, அல்லது வெறுமனே கௌரவத்தை காத்துக்கொள்ள செல்வந்தர்கள்போல் நடிக்கின்றனர். பணக்காரரோ தங்களுக்கிருக்கும் ஏராளமான சொத்தை மறைக்க ஏழைபோல் வேஷம் போடலாம்.
போலியாக காட்டிக்கொள்வதும் நல்லதல்ல, உண்மையை மறைப்பதும் நல்லதல்ல. நம்முடைய வருமானம் குறைவாக இருக்கும்போது செல்வந்தர்கள்போல் காட்டிக்கொள்வதற்காக ஆடம்பரமாக செலவு செய்தால் நாமும் நம் குடும்பத்தாரும் அடிப்படைத் தேவைகளுக்கே திண்டாட வேண்டியதுதான். ஏராளமான சொத்தை சேர்த்து வைத்திருந்தாலும் ஏழைபோல் நடிப்பவர் கஞ்சன் ஆகிவிடுகிறார், சுய மதிப்பை இழக்கிறார், தாராள குணத்தால் கிடைக்கும் சந்தோஷத்தை பறிகொடுக்கிறார். (அப்போஸ்தலர் 20:35) நேர்மையாக வாழ்வது சிறந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
ஆசைக்கு அணைபோடுங்கள்
“மனுஷனுடைய ஐசுவரியம் அவன் பிராணனை மீட்கும்; தரித்திரனோ மிரட்டுதலைக் கேளாதிருக்கிறான்” என்கிறார் சாலொமோன். (நீதிமொழிகள் 13:8) இந்த ஞானமுள்ள நீதிமொழி கற்பிக்கும் பாடம் என்ன?
பணக்காரர்களாக இருப்பதால் பயன்கள் உண்டு, ஆனால் பணமும் பொருளும் சந்தோஷத்திற்கு உத்தரவாதம் அளிப்பதில்லை. நாம் வாழ்ந்துவரும் இந்த கொடிய காலங்களில் பணக்காரர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் காசுக்காக கடத்தப்படும் ஆபத்தில் இருக்கிறார்கள். சில சமயங்களில் பணம் கொடுத்து தன் உயிரை அல்லது தன் குடும்பத்தினரின் உயிரை காப்பாற்றும் வசதி பணக்காரருக்கு இருக்கலாம். ஆனால் கடத்தப்படும் நபர் பெரும்பாலும் கொலை செய்யப்படுகிறார். எனவே இந்த பயத்திலேயே செத்து செத்துப் பிழைக்கிறார் பணக்காரர்.
ஏழைக்கோ அப்படிப்பட்ட பயமே இல்லை. பணக்காரர் அனுபவிக்கும் சொத்து சுகம் ஏழைக்கு கிடைக்காதிருக்கலாம் என்றாலும் கடத்தல்காரர்களிடம் சிக்கும் அபாயம் மிகக் குறைவு. இது, செல்வத்தைத் தேடுவதிலேயே நேரத்தையும் சக்தியையும் செலவழிக்காமல் வாழ்க்கையை எளிமையாக வைப்பதன் நன்மைகளில் ஒன்று.—2 தீமோத்தேயு 2:4.
‘வெளிச்சத்தில்’ சந்தோஷப்படுங்கள்
யெகோவாவிற்கு பிரியமான விதத்தில் காரியங்களை செய்வது நமக்கு எவ்வாறு அதிக பிரயோஜனமானது என்பதை சாலொமோன் தொடர்ந்து காட்டுகிறார். “நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோம்” என அவர் சொல்கிறார்.—நீதிமொழிகள் 13:9.
வாழ்க்கை என்ற பாதையில் வெளிச்சத்திற்காக எதை சார்ந்திருக்கிறோம் என்பதையே தீபம் அடையாளப்படுத்துகிறது. ‘கடவுளுடைய வார்த்தை நீதிமானின் கால்களுக்குத் தீபமும் அவர் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.’ (சங்கீதம் 119:105) படைப்பாளரின் வற்றாத அறிவும் ஞானமும் அதில் பொதிந்துள்ளது. கடவுளுடைய சித்தத்தையும் நோக்கத்தையும் அதிகமதிகமாக நாம் புரிந்துகொள்ளும்போது, நமக்கு வழிகாட்டும் ஆவிக்குரிய வெளிச்சம் மேன்மேலும் பிரகாசிக்கும். அது எப்பேர்ப்பட்ட சந்தோஷம் தரும்! ஆகவே உலக ஞானத்தால் அல்லது ‘ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற’ காரியத்தால் நம் கவனம் ஏன் சிதற வேண்டும்?—1 தீமோத்தேயு 6:20; 1 கொரிந்தியர் 1:20; கொலோசெயர் 2:8.
துன்மார்க்கனை பொருத்ததில், அவன் எவ்வளவுதான் செழிப்போடு வாழ்வதாக தெரிந்தாலும், அதாவது அவன் தீபம் எவ்வளவுதான் பிரகாசமாய் எரிவதாக தெரிந்தாலும் அது அணைந்துபோகும். முடிவில் அவன் இருளில் தள்ளப்படுவான், அங்கே அவன் பாதங்கள் இடறும். மேலும், அவனுக்கு “எதிர்காலமே இருக்காது.”—நீதிமொழிகள் 24:20, NW.
இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன நடவடிக்கை எடுப்பதென்று நமக்கு புரியாதபோது என்ன செய்ய வேண்டும்? நடவடிக்கை எடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இருக்கிறதா என்றே தெரியாதபோது என்ன செய்வது? “அசட்டுத் துணிச்சலுடன் முந்திக்கொள்வதால் பிரச்சினையே ஏற்படும்” (NW) என நீதிமொழிகள் 13:10 எச்சரிக்கிறது. அசட்டுத் துணிச்சலுடன் முந்திக்கொள்வது என்பது அரைகுறை அறிவுடன் அல்லது அதிகாரமில்லாமல் செயல்படுவதைக் குறிக்கிறது, அதனால் மற்றவர்களுடன் பிரச்சினை ஏற்படுவது உறுதி. அறிவும் விவேகமும் படைத்தவர்களுடைய ஆலோசனையை நாடுவது எவ்வளவோ மேல் அல்லவா? “ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு” என்கிறார் ஞானமுள்ள அரசர்.
பொய்யான எதிர்பார்ப்புகளைக் குறித்து ஜாக்கிரதை
பணம் பிரயோஜனமானதுதான். வயிற்றுப் பாட்டிற்கே திண்டாடும் நிலையில் இருப்பதைவிட போதிய வசதியுடன் இருப்பது மேலானதுதான். (பிரசங்கி 7:11, 12) ஆனால் தகாத விதத்தில் சேர்க்கும் செல்வம் கைகொடுக்கும் என நினைப்பது தவறு. “வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம்; கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான்” என எச்சரிக்கிறார் சாலொமோன்.—நீதிமொழிகள் 13:11.
உதாரணத்திற்கு சூதாட்ட மோகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சூதாடுபவர், பம்பர் தொகையை தட்டிச்செல்வதற்காக, கஷ்டப்பட்டு சம்பாதித்த காசையெல்லாம் சூதாட்டத்தில் கொட்டலாம். இதனால் அவரது குடும்பத்தினரின் நலன் அல்லவா பெரும்பாலும் பணயம் வைக்கப்படுகிறது! சூதாட்டத்தில் அவர் வெற்றி பெறும்போது என்ன நடக்கிறது? அந்தப் பணத்தை குறுக்கு வழியில் சுலபமாக பெற்றதால், அது அவருக்கு மதிப்புள்ளதாகவே தெரியாது. அதோடு, தான் வென்ற அந்தப் பரிசை நல்ல விதமாக உபயோகிக்கும் திறமை அவரிடம் இல்லாதிருக்கலாம். அந்த செல்வம் வந்த வேகத்திலேயே அவர் கையிலிருந்து நழுவிவிடும் அல்லவா? மாறாக கடின உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கப்படும் சொத்து சீரான விதத்தில் அதிகரிக்கிறது, பயனுள்ள விதத்தில் உபயோகிக்கப்படுகிறது.
“நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம் போல் இருக்கும்” என சாலொமோன் குறிப்பிடுகிறார். (நீதிமொழிகள் 13:12) எதிர்பார்ப்புகள் தோல்வியடைகையில் ஏமாற்றம் ஏற்படும், இதனால் இருதயம் இளைக்கும். அனுதின வாழ்க்கையில் இது சகஜம். இருந்தாலும் கடவுளுடைய வார்த்தையின் பேரில் உறுதியான ஆதாரம் கொண்ட எதிர்பார்ப்புகளைப் பொறுத்ததிலோ இது உண்மையல்ல. அவை நிறைவேறும் என நாம் முழுமையாக நம்பலாம். தாமதிப்பதாக நமக்கு தோன்றினாலும் ஏமாற்றமடைய அதிக வாய்ப்பில்லை.
உதாரணத்திற்கு கடவுளுடைய புதிய உலகம் சீக்கிரத்தில் வரும் என்று நமக்கு தெரியும். (2 பேதுரு 3:13) கடவுளுடைய வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தைக் காண நாம் மிகுந்த ஆவலோடும் சந்தோஷத்தோடும் காத்திருக்கிறோம். அதுவரை, “கர்த்தருடைய கிரியையிலே” சுறுசுறுப்பாக ஈடுபடவும், சக விசுவாசிகளை உற்சாகப்படுத்தவும், யெகோவாவுடன் இன்னுமதிகமாக நெருங்கி வரவும் நேரத்தை நாம் பிரயோஜனப்படுத்தும்போது என்ன நடக்கிறது? ‘இருதயம் இளைப்பதற்கு’ பதிலாக சந்தோஷத்தால் பூரித்துப் போகிறது. (1 கொரிந்தியர் 15:58; எபிரெயர் 10:24, 25; யாக்கோபு 4:8) வெகு நாளாக காத்திருந்த பிறகு விருப்பம் ஈடேறும்போது அது ஜீவ விருட்சம் போல் இருக்கிறது, அதாவது உயிர்ப்பிக்கிறதாகவும் புத்துணர்ச்சி அளிப்பதாகவும் இருக்கிறது.
கடவுளுடைய சட்டம்—ஜீவ ஊற்று
கடவுளுக்குக் கீழ்ப்படிவதன் அவசியத்தை நீதிமொழிகள் 13:13 (NW) இவ்வாறு எடுத்துக் காட்டுகிறது: “சொல்லுக்கு ஒருவன் மதிப்பு காட்டாவிட்டால், அவனிடமிருந்து கடனாளியின் அடமானப் பொருள் பறிக்கப்படும்; ஆனால் கட்டளைக்கு பயந்து நடப்பவனோ வெகுமதியைப் பெறுவான்.” ஒரு கடனாளி, தான் சொன்ன சொல்லை மதிக்காமல் கடனைத் திருப்பித்தர மறுக்கும்போது அடமானமாக வைத்த பொருளை இழப்பான். அதேவிதமாக கடவுளுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் போனால் நாமும் ஒன்றை இழப்போம். அது என்ன?
“ஞானமுள்ளவரின் சட்டம் ஜீவ ஊற்று, மரண கண்ணிகளிலிருந்து அது ஒருவரை தப்புவிக்கும்.” (நீதிமொழிகள் 13:14, NW) சர்வ ஞானமுள்ள கடவுளாகிய யெகோவாவின் சட்டத்தை புறக்கணித்துவிட்டு வாழ்வது, மேம்பட்ட, நீடித்த வாழ்க்கைக்கு உதவும் வழிகாட்டுதலை தவறவிடுவதாக இருக்கும். அது எப்பேர்ப்பட்ட இழப்பு! ஆகவே கடவுளுடைய வார்த்தைக்கு கூர்ந்து கவனம் செலுத்தி, நம் சிந்தையையும் பேச்சையும் நடத்தையையும் செதுக்கி சீராக்க அதை அனுமதிப்பதுதான் ஞானமானது.—2 கொரிந்தியர் 10:5; கொலோசெயர் 1:10.
[பக்கம் 23-ன் படங்கள்]
வேதப்பூர்வ ஆலோசனைக்கு செவிசாய்ப்பது, சிறந்த வகையான சுயசிட்சை
[பக்கம் 24, 25-ன் படங்கள்]
“நீதிமான் மனம் யோசித்துப் பதிற்சொல்லும்”
[பக்கம் 24, 25-ன் படங்கள்]
“கர்த்தருடைய கிரியையிலே” சுறுசுறுப்பாக ஈடுபடுவது நம் இருதயத்தை சந்தோஷப்படுத்தும்