தெய்வத் தலையீடு—நாம் எதை எதிர்பார்க்கலாம்?
பொது சகாப்தத்திற்கு முன் எட்டாம் நூற்றாண்டில், 39 வயதுடைய யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா தான் நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்ததை அறிய வந்தார். இந்தச் செய்தியை கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சியடைந்து, தன்னை குணமாக்குவதற்கு ஜெபத்தில் கடவுளிடம் மன்றாடினார். கடவுள் தமது தீர்க்கதரிசியின் வாயிலாக இவ்வாறு பதிலளித்தார்: “உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.”—ஏசாயா 38:1-5.
இந்தக் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் கடவுள் ஏன் தலையிட்டார்? நூற்றாண்டுகளுக்கு முன்னர், நீதியுள்ள அரசனாகிய தாவீதிடம் கடவுள் இவ்வாறு வாக்குறுதி அளித்திருந்தார்: “உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்.” தாவீதின் வம்சத்தில் மேசியா தோன்றுவார் என்பதையும் கடவுள் வெளிப்படுத்தினார். (2 சாமுவேல் 7:16; சங்கீதம் 89:20, 26-29; ஏசாயா 11:1) எசேக்கியா வியாதிப்பட்ட சமயத்தில், அவருக்கு மகனே இருக்கவில்லை. எனவே, தாவீதின் அரசப் பரம்பரை அற்றுப்போகும் ஆபத்தில் இருந்தது. எசேக்கியாவின் விஷயத்தில் கடவுளே குறுக்கிட்டதால் மேசியாவின் வம்சாவளியைப் பாதுகாக்க வேண்டியிருந்த திட்டவட்டமான நோக்கம் நிறைவேறியது.
கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன்னர் அநேக சந்தர்ப்பங்களில் யெகோவா தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தமது ஜனங்கள் சார்பாக தலையிட்டார். இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்வது சம்பந்தமாக மோசே இவ்வாறு அறிவித்தார்: “கர்த்தர் உங்களில் அன்புகூர்ந்ததினாலும், உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்க வேண்டும் என்பதினாலும்; கர்த்தர் பலத்த கையினால் உங்களைப் புறப்படப்பண்ணி, அடிமைத்தன வீடாகிய எகிப்தினின்றும் அதின் ராஜாவான பார்வோனின் கையினின்றும் உங்களை மீட்டுக்கொண்டார்.”—உபாகமம் 7:8.
இதுபோல் முதல் நூற்றாண்டிலும், கடவுள் தலையிட்டதால் அவருடைய நோக்கங்கள் மேலுமாக நிறைவேறின. உதாரணத்திற்கு, கிறிஸ்துவின் சீஷர்களை துன்புறுத்துவதற்கு சவுல் என்ற ஒரு யூதர் தமஸ்குவுக்குச் சென்று கொண்டிருந்ததை தடுக்க அவருக்கு அற்புதமான தரிசனம் கிடைத்தது. சவுலின் (இவர் பிற்பாடு அப்போஸ்தலன் பவுல் ஆனார்) மதமாற்றம் புறதேசத்தாருக்கு நற்செய்தியைப் பரப்புவதில் முக்கிய பாகம் வகித்தது.—அப்போஸ்தலர் 9:1-16; ரோமர் 11:13.
தலையீடுதான் தராதரமா?
தெய்வத் தலையீடு ஒரு விதிமுறையா அல்லது விதிவிலக்கா? வேதவசனங்கள் தெளிவாக காட்டுகிறபடி தெய்வத் தலையீடு எப்போதும் தராதரமாக இருக்கவில்லை. அக்கினி சூளையிலிருந்து மூன்று எபிரெய வாலிபர்களையும், சிங்கக் கெபியிலிருந்து தானியேல் தீர்க்கதரிசியையும் கடவுள் விடுவித்தபோதிலும், பிற தீர்க்கதரிசிகளை அவர் மரணத்திலிருந்து காப்பாற்றவில்லை. (2 நாளாகமம் 24:20, 21; தானியேல் 3:21-27; 6:16-22; எபிரெயர் 11:37) பேதுருவை முதலாம் ஏரோது அகிரிப்பா சிறையில் அடைத்திருந்தபோது அவர் அற்புதமாய் அதிலிருந்து விடுவிக்கப்பட்டார். இருந்தாலும், அதே அரசன் அப்போஸ்தலன் யாக்கோபுவை கொலை செய்தபோது, அதை தடுப்பதற்கு கடவுள் தலையிடவில்லை. (அப்போஸ்தலர் 12:1-11) நோயாளிகளை குணப்படுத்துவதற்கும் மரித்தோரை உயிர்த்தெழுப்புவதற்கும் அப்போஸ்தலர்களுக்கு கடவுள் வல்லமை அளித்தபோதிலும், அப்போஸ்தலன் பவுலை வதைத்துக் கொண்டிருந்த ‘மாம்சத்திலே ஒரு முள்ளை’—ஒருவேளை இது சரீர உபாதையாக இருந்திருக்கலாம்—எடுப்பதற்கு கடவுள் இணங்கவில்லை.—2 கொரிந்தியர் 12:7-9; அப்போஸ்தலர் 9:32-41; 1 கொரிந்தியர் 12:28.
ரோம பேரரசனாகிய நீரோவின் தூண்டுதலால் கிறிஸ்துவின் சீஷர்களுக்கு எதிராக பொங்கியெழுந்த துன்புறுத்துதலைத் தடுப்பதற்கு கடவுள் தலையிடவில்லை. கிறிஸ்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள், உயிரோடு கொளுத்தப்பட்டார்கள், கொடிய விலங்குகள் மத்தியில் போடப்பட்டார்கள். இருந்தாலும், இந்த எதிர்ப்புகள் ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை, கடவுள் மீது அவர்களுக்கு இருந்த விசுவாசத்தைப் பலவீனப்படுத்தவுமில்லை. சொல்லப்போனால், நீதிமன்றங்களுக்கு இழுத்துச் செல்லப்படுவார்கள் என்றும், விசுவாசத்திற்காக துன்பத்தை அனுபவிக்கவும் மரிப்பதற்கும்கூட தயாராயிருக்க வேண்டும் என்றும் இயேசு தமது சீஷர்களை ஏற்கெனவே எச்சரித்திருந்தார்.—மத்தேயு 10:17-22.
தமது ஊழியர்களை ஆபத்தான சூழ்நிலைமைகளிலிருந்து மீட்கும் திறமை அன்று போலவே இன்றும் கடவுளுக்கு இருக்கிறது; அவருடைய பாதுகாக்கும் கரங்களிலிருந்து அப்படி பயனடைந்ததாக உணருபவர்களை குறைசொல்ல கூடாது. அத்தகைய சந்தர்ப்பங்களில் கடவுள் தலையிட்டாரா இல்லையா என்பதை உறுதியாகக் கூறுவது கடினம். டூலோஸில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் யெகோவாவின் உண்மை ஊழியர்கள் பலர் காயமுற்றார்கள், அதோடு கடவுளுடைய தலையீடு இல்லாததால் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் நாசி மற்றும் கம்யூனிஸ முகாம்களில் அல்லது வேறுசில அவலங்களால் இறந்திருக்கிறார்கள். தமது அங்கீகாரத்தை பெற்ற எல்லோர் சார்பாகவும் கடவுள் ஏன் எப்போதுமே தலையிடுவதில்லை?—தானியேல் 3:17, 18.
‘சமயமும் எதிர்பாரா சம்பவங்களும்’
ஒரு பேரழிவு தாக்கும்போது யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம், கடவுளுக்கு உத்தமமாய் இருப்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. டூலோஸில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் ஆலனும் லீலியானும் உயிர்தப்பினார்கள், ஆனால் 30 பேர் உயிரிழந்தார்கள், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தார்கள், அவர்கள் எந்தத் தவறும் செய்யாதபோதிலும் அவர்களுக்கு இப்படி நேரிட்டது. பெரிய அளவில் பார்த்தால், குற்றச்செயல், துணிச்சலாக வண்டி ஓட்டுதல், போர்கள் ஆகியவற்றால் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகிறார்கள், ஆனால் இத்தகைய அவலத்திற்கு கடவுளை குற்றம்சாட்ட முடியாது. ‘சமயமும் எதிர்பாரா சம்பவங்களும்’ எல்லாருக்கும் நேரிடுகின்றன என பைபிள் நமக்கு நினைப்பூட்டுகிறது.—பிரசங்கி 9:11, NW.
அதோடு, மனிதருக்கு வியாதியும் வயோதிகமும் மரணமும் நேரிட்டே தீரும். தங்களுடைய உயிரை கடவுள் அற்புதகரமாய் காப்பாற்றியதாக சிலர் நினைத்தபோதிலும் அல்லது எதிர்பாராமல் வியாதியிலிருந்து சுகமடைந்ததால் கடவுளுக்கு புகழ்சேர்த்தபோதிலும் அவர்கள் எல்லாரும் கடைசியில் ஒருநாள் மரணத்தை சந்திக்க வேண்டியிருந்தது. வியாதியையும் மரணத்தையும் நீக்கி, மனிதருடைய கண்களிலிருந்து ‘கண்ணீரை துடைப்பது’ எதிர்காலத்தில் கடவுள் செய்யப்போகும் காரியங்கள்.—வெளிப்படுத்துதல் 21:1-4.
இவை நிறைவேறுவதற்கு, கடவுள் எப்பொழுதாவது மட்டுமே அல்ல, ஆனால் மிகப் பெரியளவிலும் முழுமையாகவும் தலையிட வேண்டும். ‘யெகோவாவின் பெரிய நாள்’ என அழைக்கப்படும் ஒரு சம்பவத்தைப் பற்றி பைபிள் பேசுகிறது. (செப்பனியா 1:14) பிரமாண்டமான இந்தத் தலையீட்டின்போது, கடவுள் எல்லா பொல்லாங்கையும் அடியோடு நீக்கிவிடுவார். பரிபூரண நிலைமைகளில் என்றென்றும் வாழும் வாய்ப்பு மனிதகுலத்திற்கு அளிக்கப்படும்; அப்பொழுது, ‘முந்தினவைகள் இனி நினைக்கப்படாது, மனதிலே தோன்றவும் மாட்டாது.’ (ஏசாயா 65:17) இறந்தவர்களும் உயிரோடு மீண்டும் வருவர், இதன் மூலம் மனிதருக்கு நேரிடும் எல்லா அவலங்களிலேயே மிகப் பெரிய அவலத்தை மாற்றிவிடுவார். (யோவான் 5:28, 29) தமது எல்லையற்ற அன்பினாலும் நற்குணத்தினாலும் மனிதருடைய பிரச்சினைகளுக்கெல்லாம் கடவுள் ஒரேயடியாக முடிவுகட்டுவார்.
கடவுள் இன்று எவ்வாறு தலையிடுகிறார்
ஆனால் ஜீவராசிகள் வேதனையால் துடிப்பதை கடவுள் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை இது அர்த்தப்படுத்தாது. இன்று, எந்த இனமாகவோ சமுக பின்னணியாகவோ இருந்தாலும்சரி, தம்மைப் பற்றி தெரிந்துகொண்டு, தம்முடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்வதற்கு கடவுள் எல்லா மனிதருக்கும் வாய்ப்பளிக்கிறார். (1 தீமோத்தேயு 2:3, 4) இதை இயேசு பின்வரும் வார்த்தைகளில் விவரித்தார்: “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்.” (யோவான் 6:44) தமது ஊழியர்களால் உலகெங்கிலும் அறிவிக்கப்படும் ராஜ்ய நற்செய்தியின் மூலம் நேர்மை இதயமிக்கவர்களை கடவுள் தம் பக்கமாக ஈர்க்கிறார்.
அதோடு, கடவுளுடைய வழிநடத்துதலை ஏற்க மனமுள்ளவர்களின் வாழ்க்கையில் அவர் நேரடியாக செல்வாக்கு செலுத்துகிறார். அவருடைய சித்தத்தைப் புரிந்துகொள்வதற்கும் அவருடைய வழிகளை கடைப்பிடிப்பதற்கும் தமது பரிசுத்த ஆவியின் வாயிலாக ‘அவர்களுடைய இருதயத்தைத் திறக்கிறார்.’ (அப்போஸ்தலர் 16:14) ஆம், அவரையும் அவருடைய வார்த்தையையும் நோக்கங்களையும் பற்றி அறிந்துகொள்வதற்கு வாய்ப்பு அளிப்பதன் மூலம் நம் ஒவ்வொருவர் மீதும் அவர் அன்பான அக்கறை காட்டுவதை நிரூபிக்கிறார்.—யோவான் 17:3.
கடைசியாக, இன்று கடவுள் தமது ஊழியர்களை அற்புதமாய் விடுதலை செய்வதற்கு பதிலாக, எந்தவொரு சூழ்நிலைமையையும் சமாளிப்பதற்கு பரிசுத்த ஆவியையும் ‘இயல்புக்கு அப்பாற்பட்ட வல்லமையையும்’ தருவதன் மூலம் உதவுகிறார். (2 கொரிந்தியர் 4:7, NW) அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “எனக்கு வலுவூட்டுகிறவரின் [யெகோவா தேவனின்] துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.”—பிலிப்பியர் 4:13, பொது மொழிபெயர்ப்பு.
கடவுள் நமக்கு உயிர் கொடுத்ததற்காகவும் எந்த துன்பமும் இல்லாத உலகில் என்றும் வாழும் நம்பிக்கையை அளித்ததற்காகவும் தினமும் அவருக்கு நன்றியுடன் இருப்பதற்கு நமக்கு நல்ல காரணம் இருக்கிறது. “கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்” என சங்கீதக்காரன் கேட்டார். “இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்” என அவர் சொன்னார். (சங்கீதம் 116:12, 13) உங்களுக்கு இப்பொழுது மகிழ்ச்சியையும் எதிர்காலத்திற்கு உறுதியான நம்பிக்கையையும் தருவதற்காக கடவுள் செய்திருக்கிற, செய்துகொண்டிருக்கிற, செய்யப்போகிற காரியங்களைப் புரிந்துகொள்ள இந்தப் பத்திரிகையை தவறாமல் வாசிப்பது உங்களுக்கு உதவும்.—1 தீமோத்தேயு 4:8.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.” —ஏசாயா 65:17
[பக்கம் 5-ன் படங்கள்]
பைபிள் காலங்களிலும்கூட, சகரியா கல்லெறியுண்டு கொல்லப்பட்டதை யெகோவா தடுக்கவில்லை . . .
அப்பாவி பிள்ளைகள் ஏரோதுவினால் கொலை செய்யப்பட்டதையும் தடுக்கவில்லை
[பக்கம் 7-ன் படம்]
துன்பமே இல்லாத காலம் வெகு விரைவில்; இறந்தவர்களும்கூட மீண்டும் உயிர் பெற்று வருவர்