சிட்சையின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளுதல்
“சிட்சை” என்ற வார்த்தையைக் கேட்டவுடனே எது உங்கள் மனதிற்கு வருகிறது? “சட்டங்களுக்கு அல்லது நடத்தை சம்பந்தமான தராதரங்களுக்கு மக்களைக் கீழ்ப்படியச் செய்வதும், அப்படி கீழ்ப்படியத் தவறும்போது தண்டிப்பதுமே” சிட்சை என ஓர் அகராதி வரையறுக்கிறது. இதுவே ஏற்கத்தகுந்த ஒரே விளக்கம் இல்லையென்றாலும், மக்கள் இன்றைக்கு சிட்சையோடு சம்பந்தப்பட்ட எதற்கும் இதுபோன்ற எதிர்மறையான விளக்கத்தையே தருகிறார்கள்.
ஆனால் பைபிளோ சிட்சையை வித்தியாசமான கோணத்தில் விளக்குகிறது. “என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே” என ஞானியாகிய சாலொமோன் ராஜா எழுதினார். (நீதிமொழிகள் 3:11) இந்த வார்த்தைகள் பொதுவான சிட்சையை குறிப்பிடுவதில்லை, ஆனால் “கர்த்தருடைய சிட்சையை,” அதாவது கடவுளுடைய உயர்ந்த நியமங்களின் அடிப்படையில் வழங்கப்படும் சிட்சையை குறிப்பிடுகிறது. இத்தகைய சிட்சை மட்டுமே ஆன்மீக ரீதியில் பயனளிப்பதாக இருக்கிறது, ஏன் விரும்பத்தக்கதாகவும் இருக்கிறது. மாறாக, மனிதனுடைய யோசனையின் அடிப்படையில் வழங்கப்படுகிற சிட்சையும், யெகோவாவின் உயர்ந்த நியமங்களுக்கு முரணாக வழங்கப்படுகிற சிட்சையும் பெரும்பாலும் முரட்டுத்தனமானது, தீங்கிழைப்பது. அநேகர் சிட்சையைக் குறித்து எதிர்மறையான கண்ணோட்டம் உடையவர்களாக இருப்பது ஏன் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
யெகோவா தரும் சிட்சையை ஏற்றுக்கொள்ளும்படி நாம் ஏன் தூண்டப்படுகிறோம்? தெய்வீக சிட்சை என்பது தமது மானிட படைப்புகள் மீது கடவுள் வைத்துள்ள அன்பின் ஒரு வெளிக்காட்டு என வேதாகமத்தில் விவரிக்கப்படுகிறது. ஆகவே, சாலொமோன் தொடர்ந்து கூறினார்: “தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறது போல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.”—நீதிமொழிகள் 3:12.
சிட்சையா தண்டனையா—எது?
பைபிளில் சொல்லப்பட்டுள்ள சிட்சை அநேக அம்சங்களை, அதாவது வழிநடத்துதல், போதனை, பயிற்சி, கண்டித்தல், திருத்துதல் ஆகியவற்றையும், அதோடு தண்டனையையும்கூட உட்படுத்துகிறது. ஆனால் ஒவ்வொரு அம்சத்திலும், யெகோவா தரும் சிட்சை அன்பின் தூண்டுதலால் கொடுக்கப்படுகிறது, அதைப் பெறுகிறவர் பயனடைய வேண்டும் என்பதே அதன் இலக்கு. யெகோவா தரும் சிட்சையின் முக்கிய நோக்கம் தண்டிப்பது மட்டுமே அல்ல.
அதேசமயத்தில், கடவுளிடமிருந்து வரும் தண்டனை எப்பொழுதும் திருத்துவதற்காகவோ அறிவு புகட்டுவதற்காகவோ கொடுக்கப்படுவதில்லை. உதாரணமாக, ஆதாம் ஏவாள் பாவம் செய்த நாள் முதற்கொண்டே கீழ்ப்படியாமையின் விளைவுகளை அறுவடை செய்ய ஆரம்பித்தார்கள். ஏதேன் என்ற பரதீஸிய தோட்டத்திலிருந்து யெகோவா அவர்களை வெளியேற்றினார், அபூரணமும் வியாதியும் முதுமையும் அவர்களை ஆட்டிப்படைத்தன. நூற்றுக்கணக்கான வருடங்களாக பல கஷ்டங்களை அனுபவித்து, கடைசியில் நிரந்தரமாக அழிந்து போனார்கள். இவை அனைத்தும் கடவுளிடமிருந்து வந்த தண்டனையின் விளைவே, ஆனால் அது திருத்துவதற்கு கொடுக்கப்பட்ட சிட்சை அல்ல. வேண்டுமென்றே கீழ்ப்படியாததாலும் மனந்திரும்பாததாலும் ஆதாம் ஏவாள் திருத்தப்பட முடியாதவர்களாக இருந்தார்கள்.
நோவாவின் காலத்து ஜலப்பிரளயம், சோதோம் கொமோராவின் அழிவு, செங்கடலில் எகிப்திய ராணுவம் பூண்டோடு அழிக்கப்பட்டது இவையெல்லாம் யெகோவா கொடுத்த தண்டனையைப் பற்றிய பதிவுகளே. யெகோவாவின் இந்த நடவடிக்கைகள் வழிநடத்துதலோ போதனையோ அல்லது பயிற்றுவிப்போ தருவதற்கு எடுக்கப்பட்டவை அல்ல. இந்த நடவடிக்கைகள் சம்பந்தமாக, அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப் பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின் மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி; சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்[தார்].”—2 பேதுரு 2:5, 6.
“பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு” இந்தத் தண்டனைகள் எந்தக் கருத்தில் “திருஷ்டாந்தமாக” இருக்கின்றன? தெசலோனிக்கேயருக்கு எழுதிய கடிதத்தில், நம்முடைய நாளைப் பற்றி பவுல் குறிப்பிடுகிறார்; அது, “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும்” கடவுள் தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் ‘ஆக்கினைத் தீர்ப்பைக்’ கொண்டுவரும் நாள் என அவர் குறிப்பிடுகிறார். பவுல் மேலும் இவ்வாறு கூறுகிறார்: “[இவர்கள்] நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.” (2 தெசலோனிக்கேயர் 1:7, 10) இத்தகைய தண்டனை போதிப்பதற்கோ சீர்திருத்துவதற்கோ கொடுக்கப்படுவதில்லை என்பது தெளிவாகிறது. என்றாலும், சிட்சையை ஏற்றுக்கொள்ளும்படி தமது வணக்கத்தாரிடம் யெகோவா சொல்லும்போது மனந்திரும்பாத பாவிகளுக்கு வழங்கும் தண்டனையைப் பற்றி அவர் குறிப்பிடுவதில்லை.
தண்டிப்பவராக யெகோவாவை பைபிள் விவரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, அன்பான போதகராகவும் பொறுமையுள்ள பயிற்றுவிப்பாளராகவுமே அவர் பெரும்பாலும் விவரிக்கப்படுகிறார். (யோபு 36:22; சங்கீதம் 71:17; ஏசாயா 54:13) ஆம், திருத்தும் நோக்கத்தில் கொடுக்கப்படும் தெய்வீக சிட்சை எப்பொழுதும் அன்புடனும் பொறுமையுடனும் வழங்கப்படுகிறது. சிட்சையின் நோக்கத்தை கிறிஸ்தவர்கள் புரிந்துகொள்வதன் மூலம் அதை சரியான மனப்பான்மையுடன் ஏற்றுக்கொள்ளவும் வழங்கவும் முடிகிறது.
அன்பான பெற்றோர் தரும் சிட்சை
குடும்ப வட்டாரத்திலும் கிறிஸ்தவ சபையிலும், அனைவருமே சிட்சையின் நோக்கத்தை புரிந்துகொள்வது அவசியம். முக்கியமாக அதிகாரத்தில் இருப்பவர்கள், உதாரணத்திற்கு பெற்றோர்கள், இதைப் புரிந்துகொள்ள வேண்டும். நீதிமொழிகள் 13:24 இவ்வாறு கூறுகிறது: “பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன் மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான் [“சிட்சிக்கிறான்,” NW].”
பெற்றோர்கள் எவ்வாறு சிட்சை கொடுக்க வேண்டும்? பைபிள் இவ்வாறு விளக்குகிறது: “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.” (எபேசியர் 6:4) இந்தப் புத்திமதியை பின்வரும் வார்த்தைகள் மீண்டும் அழுத்திக் காட்டுகின்றன: “பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப் போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.”—கொலோசெயர் 3:21.
சிட்சையின் நோக்கத்தைப் புரிந்துகொள்கிற கிறிஸ்தவ பெற்றோர்கள் மூர்க்கத்தனமாக செயல்பட மாட்டார்கள். சிட்சையை எப்படி வழங்க வேண்டும் என்பதற்கு 2 தீமோத்தேயு 2:24-ல் கொடுக்கப்பட்டுள்ள நியமத்தை பெற்றோர் பின்பற்றலாம். பவுல் இவ்வாறு எழுதினார்: ‘கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டை பண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதக சமர்த்தனுமாயிருக்க வேண்டும்.’ கட்டுக்கடங்காத கோபமும், ஆவேசமாக கத்துவதும், அவமரியாதையான அல்லது கீழ்த்தரமான வார்த்தைகளால் வசை பாடுவதும் அன்பான சிட்சையாகாது, அது கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ஏற்றதும் அல்ல.—எபேசியர் 4:31; கொலோசெயர் 3:8.
உடனுக்குடனும் உறுதியுடனும் திருத்தியே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடனும் பெற்றோர் தண்டனை வழங்கினால் போதாது. பெரும்பாலான குழந்தைகளின் சிந்தையை திருத்துவதற்கு பலமுறை அவர்களுக்கு புத்திமதி கொடுப்பது அவசியம். எனவே, இதற்காக பெற்றோர்கள் நேரம் செலவழிக்க வேண்டும், பொறுமையோடிருக்க வேண்டும், சிட்சை கொடுக்கும் விதத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகளை ‘யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்’ வளர்க்க வேண்டும் என்பதை அவர்கள் மனதிற்கொள்ள வேண்டும். இது பல வருட கால பயிற்றுவிப்பை குறிக்கிறது.
கிறிஸ்தவ மேய்ப்பர்கள் சாந்தமாய் சிட்சை அளிக்கிறார்கள்
இந்த நியமம் கிறிஸ்தவ மூப்பர்களுக்கும் பொருந்துகிறது. அன்பான மேய்ப்பர்களாக மந்தைக்குப் போதனையையும் வழிநடத்துதலையும், தேவையான சமயத்தில் கடிந்துகொள்ளுதலையும் தந்து உற்சாகப்படுத்துவதற்கு இவர்கள் கடினமாக முயற்சி செய்கிறார்கள். அப்படி செய்கையில், சிட்சையின் உண்மையான நோக்கத்தை மனதில் கொள்கிறார்கள். (எபேசியர் 4:12, 13) தண்டிப்பதற்கு மட்டுமே கவனம் செலுத்தினால், அவர்கள் வெறுமனே தண்டித்துவிட்டு அத்தோடு விட்டுவிடுபவர்களாகத்தான் இருப்பார்கள். தெய்வீக சிட்சையில் இன்னும் நிறைய விஷயங்கள் உட்பட்டுள்ளன. சிட்சை கொடுக்கப்பட்டவர்களை மூப்பர்கள் தொடர்ந்து அன்போடு கவனித்து, அவர்களுக்கு உதவி அளிக்கிறார்கள். உள்ளப்பூர்வமான அக்கறை காட்டுவதால், மீண்டும் மீண்டும் பல சந்தர்ப்பங்களில் உற்சாகமூட்டுதலையும் பயிற்றுவிப்பையும் தருவதற்கு மூப்பர்கள் திட்டமிடுகிறார்கள்.
2 தீமோத்தேயு 2:25, 26-ல் (NW) கொடுக்கப்பட்டுள்ள புத்திமதிக்கு இசைய, சிட்சையை உடனடியாக ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கும் மூப்பர்கள் “சாந்தமாய்” அறிவுரை கொடுக்க வேண்டும். சிட்சையின் நோக்கத்தைக் குறித்து தொடர்ந்து அந்த வசனம் இவ்வாறு கூறுகிறது: “சத்தியத்தின் திருத்தமான அறிவை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளலாம், அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து பிசாசின் கண்ணிக்கு நீங்கலாம்.”
சிலசமயங்களில், மனந்திரும்பாத பாவிகளை சபையிலிருந்து நீக்குவது அவசியமாகிறது. (1 தீமோத்தேயு 1:18-20) இத்தகைய கடும் நடவடிக்கைகூட வெறும் தண்டனையாக அல்ல சிட்சையாகவே கருதப்பட வேண்டும். சபை நீக்கம் செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து தவறு செய்யாமல் இருந்தால் அவர்களை அவ்வப்பொழுது சந்திப்பதற்கு மூப்பர்கள் முயற்சி எடுக்கிறார்கள். இத்தகைய சந்திப்புகளின்போது, சிட்சையின் உண்மையான நோக்கத்திற்கு இசைய மூப்பர்கள் செயல்படுகிறார்கள். அதாவது, கிறிஸ்தவ சபைக்கு மீண்டும் திரும்பிவர ஒருவர் என்னென்ன படிகளை எடுக்க வேண்டுமென எடுத்துக் காட்டுகிறார்கள்.
யெகோவா பரிபூரண நியாயாதிபதி
பெற்றோர்களும் கிறிஸ்தவ மேய்ப்பர்களும் வேதப்பூர்வ அறிவுரை வழங்குவதற்கு அதிகாரம் பெற்ற மற்றவர்களும் இந்த உத்தரவாதத்தை கருத்தோடு எடுத்துக்கொள்ள வேண்டும். திருந்தவே மாட்டார்கள் என்ற எண்ணத்துடன் மற்றவர்களை நியாயந்தீர்க்கக் கூடாது. பழிவாங்கும் விதத்தில் அல்லது விரோத மனப்பான்மையுடன் ஒருபோதும் சிட்சை அளிக்கக் கூடாது.
யெகோவா கடுமையாகவும் முடிவாகவும் தண்டனை வழங்குபவரென பைபிள் விவரிப்பது உண்மைதான். சொல்லப்போனால், “ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே” என வேதவசனங்கள் சொல்கின்றன. (எபிரெயர் 10:31) ஆனால் இந்த விதத்திலோ வேறெந்த விதத்திலோ தன்னை யெகோவாவுடன் ஒப்பிட யாருமே முயற்சி செய்யக் கூடாது. மேலும், வீட்டில் பெற்றோருடைய அல்லது சபையில் ஒரு குறிப்பிட்ட மூப்பருடைய கைகளில் விழுவது பயங்கரமாயிருக்கும் என யாராவது உணருவதற்கு எந்தக் காரணமும் இருக்கக் கூடாது.
சிட்சை கொடுக்கும் விஷயத்தில், பூரண சமநிலையை காத்துக்கொள்ளும் திறமை யெகோவாவுக்கு இருக்கிறது. ஆனால் இந்தத் திறமை மனிதருக்கு இல்லை. ஒருவர் திருந்த முடியாதளவுக்கு சென்று விட்டார் என்பதை அவருடைய இருதயத்தை வைத்தே கடவுள் அறிந்துகொள்கிறார்; ஆகவே முடிவான இறுதிக்கட்ட அழிவுக்கு அந்த நபர் பாத்திரர் என்பதை தீர்மானிக்கிறார். மனிதருக்கோ இத்தகைய தண்டனைத்தீர்ப்பு வழங்கும் திறமையில்லை. அதனால், அதிகாரத்தில் இருப்பவர்கள் சிட்சை கொடுக்க வேண்டிய அவசியம் வரும்போது, தண்டிக்கும் நோக்கத்துடன் அல்ல, ஆனால் திருத்தும் நோக்கத்துடன்தான் எப்பொழுதும் சிட்சை வழங்க வேண்டும்.
யெகோவாவின் சிட்சையை ஏற்றுக்கொள்ளுதல்
யெகோவாவின் சிட்சை நம் அனைவருக்குமே தேவை. (நீதிமொழிகள் 8:33, NW) சொல்லப்போனால், கடவுளுடைய வார்த்தையிலிருந்து கிடைக்கும் சிட்சையை நாம் ஆவலுடன் பெற்றுக்கொள்ள வேண்டும். யெகோவாவுடைய வார்த்தையைப் படிக்கையில் அதன் மூலம் அவரிடமிருந்து நேரடியாக வரும் சிட்சையை ஏற்றுக்கொள்ளலாம். (2 தீமோத்தேயு 3:16, 17) சிலசமயங்களில், சக கிறிஸ்தவர்களிடமிருந்து நாம் சிட்சை பெறுகிறோம். இத்தகைய சிட்சையின் நோக்கத்தை உணர்ந்துகொள்வது அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள நமக்கு உதவும்.
“எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்” என்பதை அப்போஸ்தலன் பவுல் ஒப்புக்கொண்டார். “ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” என்றும் அவர் கூறினார். (எபிரெயர் 12:11) யெகோவா தரும் சிட்சை, அவர் நம்மீது வைத்துள்ள அளவுகடந்த அன்பின் வெளிக்காட்டாகும். மற்றவர்களிடமிருந்து நமக்கு சிட்சை கிடைத்தாலும்சரி, நாம் மற்றவர்களுக்கு சிட்சை வழங்கினாலும்சரி, தெய்வீக சிட்சையின் நோக்கத்தை மனதிற்கொண்டு பைபிளிலுள்ள பின்வரும் ஞானமான அறிவுரைக்கு செவிசாய்ப்போமாக: “புத்திமதியை [“சிட்சையை,” NW] உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.”—நீதிமொழிகள் 4:13.
[பக்கம் 21-ன் படங்கள்]
மனந்திரும்பாத பாவிகள், திருத்துவதற்கான சிட்சையை அல்ல, ஆனால் நியாயத்தீர்ப்பு தண்டனையைத்தான் கடவுளிடமிருந்து பெறுகிறார்கள்
[பக்கம் 22-ன் படங்கள்]
ஆராய்ச்சி செய்வதற்கும் தவறிழைத்தவர்களுக்கு உதவி செய்வதற்கும் அன்பினால் தூண்டப்பட்டு மூப்பர்கள் நேரம் ஒதுக்குகிறார்கள்
[பக்கம் 23-ன் படங்கள்]
‘யெகோவாவுக்கேற்ற சிட்சையையும் போதனையையும்’ பெற்றோர்கள் பொறுமையுடனும் அன்புடனும் வழங்குகிறார்கள்