‘கடவுளுடைய வார்த்தைக்குத்தான் எத்தனை வல்லமை!’
“தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ள[து].” (எபிரெயர் 4:12) கடவுளுடைய வார்த்தையின் மகா வல்லமைக்கு அத்தாட்சி அளிக்கும் விதத்தில், 2003 யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டர் ஆறு நிஜ வாழ்க்கை அனுபவங்களை சிறப்பித்துக் காட்டியது. ஒழுக்கநெறிகளை மேம்படுத்துவதற்கும், மோசமான வாழ்க்கை பாணிகளை விட்டொழிப்பதற்கும், குடும்ப வாழ்க்கையை பலப்படுத்துவதற்கும் கடவுளுடன் தனிப்பட்ட உறவை வளர்ப்பதற்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய கல்வி எவ்வாறு மக்களுக்கு உதவியது என்பதை “அன்றும் இன்றும்” என்ற தலைப்பில் அந்தக் காலண்டர் படம்பிடித்துக் காட்டியது.
2003 காலண்டர் சம்பந்தமாக வந்த பாராட்டுக் கடிதங்கள் மலைபோல் குவிந்துள்ளன. அவற்றில் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
“தங்களைப் போலவே விசுவாசத்திற்காக கடினமாய் போராடிய இன்னும் பலர் இருக்கிறார்கள் என்பதற்கு இந்தக் காலண்டர் மெய்க் கிறிஸ்தவர்களுக்கு அத்தாட்சி அளிக்கிறது. அவர்கள் அந்தப் படங்களை பார்த்து, வாழ்க்கையில் சிலர் எவ்வாறு மாற்றங்களை செய்திருக்கிறார்கள் என்பதை நினைவுகூரலாம்.”—ஸ்டீவன், ஐக்கிய மாகாணங்கள்.
“2003-ம் வருட காலண்டர் எந்தளவு என்னுடைய இதயத்தைத் தொட்டிருக்கிறது என்பதை தெரியப்படுத்த இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுத விரும்பினேன். இதுவரை வேறு எந்தக் காலண்டரும் என் மீது இந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தனிநபர்கள் மீது பைபிள் செலுத்தும் வல்லமைக்கு மனதில் பதியத்தக்க உயிருள்ள அத்தாட்சியாக விளங்கும் இந்தக் காலண்டரை மக்களுக்கு காட்டுவதற்காக ஊழியத்திற்குப் போகும்போது இதையும் நான் கொண்டு செல்வேன்.”—மாற்க், பெல்ஜியம்.
“இந்தக் காலண்டர் என் மனதை அப்படியே கொள்ளை கொண்டுவிட்டது. யெகோவா எவ்வாறு இவர்களை மாற்றியிருக்கிறார் என்பதை வாசித்து பார்த்தபோது உணர்ச்சிகள் என் இதயத்தில் பொங்கியெழுந்தன. இதனால், என்னுடைய வாழ்க்கையில் தொடர்ந்து மாற்றங்கள் செய்வதற்குத் தூண்டப்பட்டிருக்கிறேன். இப்பொழுது, நம்முடைய உலகளாவிய சகோதரத்துவத்தின் பாகமாக இருப்பதாக அதிகமதிகமாய் உணருகிறேன்.”—மேரி, ஐக்கிய மாகாணங்கள்.
“இயேசு தம்மை சூழ்ந்திருந்த ஜனக் கூட்டத்தாருடைய ஆவிக்குரிய நிலைமையைக் கண்டார், அது அவருடைய இதயத்தை ஆழமாக தொட்டது. 2003-ம் ஆண்டு காலண்டரில் வாழ்க்கை சரிதைகளை சிறப்பித்துக் காட்டியதன் மூலம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றியதற்கு நன்றி. என்னுடைய வாழ்க்கையில் இதற்கு முன்பு வேறெந்த காலண்டரையும் பார்த்து இப்படி கண்ணீர் வடித்ததில்லை.”—கஸாண்ட்ரா, ஐக்கிய மாகாணங்கள்.
“11 வயதில் நான் புகைப்பிடிக்க ஆரம்பித்தேன்; பின்பு போதைப் பொருட்களைப் பயன்படுத்தினேன். என் வாழ்க்கையை முடித்துக்கொள்வதைப் பற்றி நான் அடிக்கடி யோசித்ததுண்டு. யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ளத் தொடங்கியபோது அந்தப் பழக்கங்களையெல்லாம் விட்டொழிக்க உதவி கிடைத்தது. இந்தக் காலண்டர் எனக்கு மிகவும் முக்கியம். உலகெங்கிலுமுள்ள என்னுடைய சகோதர சகோதரிகளுடைய முன்மாதிரிகள் என்னை பலப்படுத்துகின்றன. இந்தப் போராட்டம் எனக்கு மட்டுமே இல்லை என்பதையும், யெகோவா மீதுள்ள அன்பும் முழு இருதயத்துடன் அவருக்கு சேவை செய்வதுமே மிக முக்கியம் என்பதையும் இப்பொழுது அறிந்திருக்கிறேன்.”—மார்கரெட், போலந்து.
“அப்பப்பா, கடவுளுடைய வார்த்தைக்குத்தான் எத்தனை வல்லமை! 2003-ம் வருட காலண்டர் என்னுடைய கையில் கிடைத்தபோது, கண்ணீரைக் கட்டுப்படுத்த போராடினேன். இந்த அனுபவங்களும் அதோடு போடப்பட்டிருக்கும் படங்களும் விசுவாசத்தை மிகவும் பலப்படுத்துவதாக இருக்கின்றன.”—டார்லின், ஐக்கிய மாகாணங்கள்.
“இதிலுள்ள சிலருடைய வாழ்க்கையைப் போலத்தான் என்னுடைய முன்னாள் வாழ்க்கையும் இருந்தது. வெல்ல முடியாதது போல தோன்றிய கெட்ட பழக்கங்களை விட்டொழிப்பதற்கு யெகோவா எனக்கு பலம் தந்திருக்கிறார். இத்தகைய நிஜ வாழ்க்கை சரிதைகளுக்கு மிக்க நன்றி.”—வில்லியம், ஐக்கிய மாகாணங்கள்.