இயேசுவின் குடும்பத்தார்—அவர்கள் யார்?
குழந்தை இயேசு தனது தாயாகிய மரியாள் மற்றும் வளர்ப்பு தகப்பனாகிய யோசேப்பின் பாசக் கரங்களில் இருப்பதைப் போன்ற காட்சிகளை டிசம்பர் மாதத்தில் உலகின் பெரும்பாலான பகுதிகளில் பார்க்கலாம். இது போன்ற காட்சிகள் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களையும் கவரலாம். இவற்றில் இயேசுவே பிரதானமாக சித்தரித்துக் காட்டப்படுகிறார். ஆனால், அவருடைய பூமிக்குரிய குடும்பத்தாரைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
இயேசுவின் குடும்ப பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. அவர் மரியாள் என்ற கன்னிகைக்குப் பிறந்து, மானிட குடும்பத்தின் பாகமானார். பரிசுத்த ஆவியின் மூலம் அவருடைய உயிர் பரலோகத்திலிருந்து மரியாளின் கருப்பைக்கு மாற்றப்பட்டதாக பைபிள் கூறுகிறது. (லூக்கா 1:30-35) இந்த அற்புதமான கருத்தரிப்பைப் பற்றி மரியாளுக்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பே, யோசேப்புடன் அவளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு யோசேப்பு, இயேசுவின் வளர்ப்புத் தகப்பனாக ஆனார்.
இயேசு பிறந்தபின், யோசேப்புக்கும் மரியாளுக்கும் வேறு குழந்தைகளும் பிறந்தார்கள்; அவர்களே இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகள். நாசரேத்து ஊரார் இயேசுவைப் பற்றி பிற்பாடு கேட்ட கேள்விகளிலிருந்து இதை தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்; “இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா?” என்று அவர்கள் கேட்டார்கள். (மத்தேயு 1:25; 13:55, 56; மாற்கு 6:3) எனவே, இயேசுவின் குடும்பத்தில் அவருடைய பெற்றோர்களும் நான்கு சகோதரர்களும் குறைந்தபட்சம் இரண்டு சகோதரிகளும் இருந்தார்கள் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.
ஆனால் இயேசுவின் சகோதரர்களும் சகோதரிகளும் யோசேப்புக்கும் மரியாளுக்கும் பிறந்த பிள்ளைகள் அல்ல என இன்று சிலர் நினைக்கிறார்கள். ஏன்? “மரியாள் காலம்பூராவும் கன்னியாகவே இருந்ததாக சர்ச் ஆரம்ப காலத்திலிருந்து கற்பித்து வந்தது. ஆக, மரியாளுக்கு வேறெந்த பிள்ளைகளும் பிறக்கவில்லை என்பதில் சந்தேகமே இல்லை” என நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது. “சகோதரர்” மற்றும் “சகோதரி” என்ற வார்த்தைகள் மத ரீதியிலோ மற்ற ரீதியிலோ ஐக்கியப்பட்டவரை/வர்களை” அல்லது உறவினர்களை, ஒருவேளை ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகளை குறிக்கலாம் என இதே நூல் கூறுகிறது.
இதுதான் உண்மையா? சில கத்தோலிக்க இறையியல் வல்லுநர்களும்கூட இந்தப் பாரம்பரிய கோட்பாட்டை ஒத்துக்கொள்வதில்லை; உடன் பிறந்த சகோதரர்களும் சகோதரிகளும் இயேசுவுக்கு இருந்தார்கள் என்ற கருத்தை அவர்கள் ஆதரிக்கிறார்கள். அமெரிக்காவின் கத்தோலிக்க பைபிள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜான் பி. மையர் இவ்வாறு எழுதினார்: “புதிய ஏற்பாட்டில் அடெல்போஸ் [சகோதரர்] என்பது அடையாளப்பூர்வமாகவோ உருவகமாகவோ பயன்படுத்தப்படாமல், மாம்சப் பிரகாரமான அல்லது சட்டப்பூர்வமான உறவை குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகையில் அது உடன்பிறந்த சகோதரரையோ ஒன்றுவிட்ட சகோதரரையோ மட்டும்தான் குறிக்கிறது.”a ஆம், இயேசுவுக்கு சகோதரர்களும் சகோதரிகளும் இருந்தார்கள் என்றும், அவர்கள் யோசேப்புக்கும் மரியாளுக்கும் பிறந்தவர்கள் என்றும் பைபிள் சுட்டிக் காட்டுகிறது.
இயேசுவின் மற்ற உறவினர்களைப் பற்றியும் சுவிசேஷங்கள் குறிப்பிடுகின்றன, ஆனால் இப்பொழுது இயேசுவின் நெருங்கிய குடும்பத்தார் மீது நாம் கவனம் செலுத்தி அவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதை ஆராயலாம்.
[அடிக்குறிப்பு]
a ஜே. பி. மையர் எழுதிய “திருச்சபை நோக்குநிலையில் இயேசுவின் சகோதரர்களும் சகோதரிகளும்,” த கேத்தலிக் பிப்ளிக்கல் குவாட்டர்லி, ஜனவரி 1992, பக்கம் 21.