உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w03 12/15 பக். 28-29
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • இதே தகவல்
  • ஆவி உலகில் நமது மிகச்சிறந்த நண்பர் இருக்கிறார்
    விழித்தெழு!—1996
  • கடவுளுடைய ராஜ்யம் என்பது என்ன?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • கடவுளுடைய ராஜ்யம் பிறக்கிறது!
    வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
w03 12/15 பக். 28-29

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

கெட்ட தேவதூதர்கள் பரலோகத்திலிருந்து தள்ளப்படாதிருந்த சமயத்தில்கூட அங்கு கடவுளுடைய சித்தம் செய்யப்பட்டு வந்ததாக இயேசு தம் மாதிரி ஜெபத்தில் அர்த்தப்படுத்தினாரா?

“உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என இயேசு ஜெபித்ததாக மத்தேயு 6:10-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. நவீன மொழிபெயர்ப்புகள் பலவற்றில் காட்டப்பட்டுள்ளபடி, மூல வாக்கியத்தை இரண்டு விதங்களில் புரிந்துகொள்ளலாம். ஒன்று, கடவுளுடைய சித்தம் ஏற்கெனவே பரலோகத்தில் செய்யப்பட்டு வருவதுபோல் பூமியிலும் செய்யப்பட வேண்டுமென ஜெபித்ததாக புரிந்துகொள்ளலாம். இரண்டாவது, கடவுளுடைய சித்தம் பரலோகத்திலும் பூமியிலும் முழுமையாக செய்யப்பட வேண்டுமென ஜெபித்ததாக புரிந்துகொள்ளலாம்.a “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று இயேசு அதற்குமுன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை எடுத்துக்கொண்டால், இரண்டாவது கருத்தே வேதவசனங்களுக்கு அதிக இசைவாக இருக்கிறது. இயேசு பூமியிலிருந்தபோதும் அதற்குப் பிறகு நீண்ட காலத்திற்கும் நிலவும் சூழ்நிலையை இது எடுத்துக் காட்டுகிறது. எப்படி?

கடவுளுடைய ராஜ்யம் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டதால் ஏற்பட்ட தெளிவான இரண்டு விளைவுகளை வெளிப்படுத்துதல் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. முதல் விளைவு பரலோகம் சம்பந்தப்பட்டது, இரண்டாவது பூமி சம்பந்தப்பட்டது. வெளிப்படுத்துதல் 12:7-9, 12 இவ்வாறு கூறுகிறது: “வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம் பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம் பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக் காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.”

1914-⁠க்குப் பிறகு சாத்தானும் அவனுடைய பேய்களும் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டார்கள்; இவ்வாறு, கலகக்கார ஆவி சிருஷ்டிகள் அனைவரும் அங்கிருந்து நீக்கப்பட்டார்கள். இதன் காரணமாக யெகோவாவின் ஆவி சிருஷ்டிகளில் பெரும்பான்மையோரான உண்மைப் பற்றுறுதியுள்ள தூதர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டானது. (யோபு 1:6-12; 2:1-7; வெளிப்படுத்துதல் 12:10) இவ்வாறு, பரலோகத்தைப் பொறுத்தவரை, மாதிரி ஜெபத்தில் இயேசு செய்த விண்ணப்பம் நிறைவேற்றமடைந்தது. பரலோகத்தில் மீந்திருந்தவர்கள் அனைவரும் யெகோவாவுக்கு உண்மைப் பற்றுறுதியைக் காண்பித்து, அவருடைய அரசதிகாரத்திற்கு முழுமையாக கீழ்ப்படிந்தார்கள்.

அதற்கு முன்பே, அதாவது பொல்லாத தேவதூதர்கள் பரலோகத்திற்குள் செல்லக்கூடிய அனுமதி இருந்தபோதே, கடவுளுடைய குடும்பத்திலிருந்து அவர்கள் விலக்கப்பட்டு குறிப்பிட்ட கட்டுப்பாடுகளின் கீழ் இருந்தார்கள் என்பதை வலியுறுத்திக் கூற வேண்டும். உதாரணமாக, பொ.ச. முதல் நூற்றாண்டிலேயே அவர்கள் ‘மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, [ஆவிக்குரிய] அந்தகாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள்’ என யூதா 6 வெளிப்படுத்துகிறது. அதைப் போலவே, 2 பேதுரு 2:4 இவ்வாறு கூறுகிறது: “பாவஞ் செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், [ஆவிக்குரிய] அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி, நரகத்திலே [டார்டரஸ் அல்லது மிகவும் தாழ்வான நிலையிலே] தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்க ஒப்புக்கொடுத்தார்.’b

அந்தப் பொல்லாத தேவதூதர்கள் பரலோகத்தில் விலக்கப்பட்ட நிலையில் இருந்தபோதிலும், பூமியில் அதற்கு நேர் எதிர்மாறாக மிகுந்த அதிகாரம் செலுத்தினார்கள். சொல்லப்போனால், சாத்தானை “இந்த உலகத்தின் அதிபதி” என்றும், பிசாசுகளை ‘இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகள்’ என்றும் கடவுளுடைய வார்த்தை அழைக்கிறது. (யோவான் 12:31; எபேசியர் 6:11, 12; 1 யோவான் 5:19) பிசாசானவனுக்கு மிகுந்த அதிகாரம் இருந்ததால்தான், தன்னை ஒருமுறை வணங்குவதற்கு கைமாறாக இந்த “உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும்” கொடுப்பதாக இயேசுவிடம் சொல்ல முடிந்தது. (மத்தேயு 4:8, 9) அப்படியானால், கடவுளுடைய ராஜ்யம் ‘வரும்’ போது, பூமியைப் பொறுத்தவரை, அது பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

இங்கே பூமியில் கடவுளுடைய ராஜ்யம் ‘வரும்’ போது, முற்றிலும் புதிய ஒழுங்குமுறை உண்டாகும். அந்த ராஜ்யம் எல்லா மனித ஆட்சிகளையும் நொறுக்கி, பூமியை ஆளும் ஒரே அரசாங்கமாக திகழும். அதேசமயத்தில், தேவபயமுள்ள அதன் குடிமக்கள் ‘புதிய பூமியாக’ இருப்பார்கள். (2 பேதுரு 3:13; தானியேல் 2:44) அந்த ராஜ்யம், கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்தின் பாவத்தை பூண்டோடு ஒழித்து, காலப்போக்கில் இந்தப் பூமியை ஒரு பூகோள பரதீஸாக மாற்றிவிடும். இவ்வாறாக, சாத்தானுடைய ஆட்சியின் எந்தவொரு தடயமும் இல்லாமல் செய்துவிடும்.​—⁠ரோமர் 8:20, 21; வெளிப்படுத்துதல் 19:17-21.

ஆயிரமாண்டின் இறுதியில், அதாவது மேசியானிய ராஜ்யம் கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றியிருக்கும் சமயத்தில், “தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.” (1 கொரிந்தியர் 15:28) பிறகு கடைசி பரீட்சை இருக்கும்; அடுத்து சாத்தானும், அவனைச் சேர்ந்த பேய்களும், தவறாக வழிநடத்தப்பட்டு கலகம் செய்யும் மனிதர்களும் ‘இரண்டாம் மரணத்தில்’ நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள். (வெளிப்படுத்துதல் 20:7-15) அதன் பின்பு, பரலோகத்திலும் பூமியிலும் வாழும் புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகள் யாவும் யெகோவாவின் அன்பான அரசுரிமைக்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்து நடப்பார்கள். எல்லா அம்சத்திலும், இயேசுவின் மாதிரி ஜெபத்திலுள்ள வார்த்தைகளுக்கு அதுவே முழு நிறைவேற்றமாக இருக்கும்.​—⁠1 யோவான் 4:8.

[அடிக்குறிப்புகள்]

a இயேசு கற்பித்த மாதிரி ஜெபத்தின் இப்பகுதியை த பைபிள்​—⁠அன் அமெரிக்கன் டிரான்ஸ்லேஷன் இவ்வாறு மொழிபெயர்க்கிறது: “உம்முடைய ராஜ்யம் வருக! உம்முடைய சித்தம் பூமியிலும் பரலோகத்திலும் செய்யப்படுக!”​—⁠மத்தேயு 6:10.

b ஆவிக்குரிய விதத்தில் விலக்கப்பட்ட இந்த நிலையை ‘காவலில்’ வைக்கப்பட்டிருப்பதற்கு அப்போஸ்தலன் பேதுரு ஒப்பிட்டு பேசினார். என்றாலும், எதிர்காலத்தில் பிசாசுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு அடைத்து வைக்கப்படும் ‘பாதாளத்தை’ (அபிஸை) அவர் அர்த்தப்படுத்தவில்லை.​—⁠1 பேதுரு 3:19, 20; லூக்கா 8:30, 31; வெளிப்படுத்துதல் 20:1-3.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்