யெகோவாவின் மகிமையை அனைவரும் அறிவிப்பார்களாக!
‘யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள். யெகோவாவின் திருநாமத்திற்குரிய மகிமையை அவருக்கே செலுத்துங்கள்.’—சங்கீதம் 96:7, 8, திருத்திய மொழிபெயர்ப்பு.
1, 2. எவை யெகோவாவுக்கு மகிமையை செலுத்துகின்றன, யாரும்கூட அவற்றுடன் சேர்ந்துகொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்?
ஈசாயின் மகன் தாவீது சிறுவனாக இருந்தபோது பெத்லகேமுக்கு அருகே ஆடுகளை மேய்த்து வந்தார். அமைதலான இரவு வேளையில், ஒதுக்குப்புறமான மேய்ச்சல் நிலங்களில் தனது தகப்பனாருடைய மந்தையை காவல் காத்துக் கொண்டிருந்தபோது, நட்சத்திரங்கள் மின்னும் பரந்துவிரிந்த வானத்தை அவர் எத்தனை முறை அண்ணாந்து பார்த்திருக்க வேண்டும்! 19-ம் சங்கீதத்தில் வரும் இந்த அழகான வார்த்தைகளை பரிசுத்த ஆவியின் ஏவுதலால் இயற்றியபோது அந்தப் பசுமையான நினைவுகள் அவருடைய மனத்திரையில் ஓடியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. . . . அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசி வரைக்கும் செல்லுகிறது” என அவர் பாடினார்.—சங்கீதம் 19:1, 4.
2 யெகோவாவின் படைப்பாகிய பிரமிக்க வைக்கும் வானங்கள் பேச்சின்றி, வார்த்தையின்றி, சத்தமின்றி இரவும் பகலும் அவருடைய மகிமையை அறிவிக்கின்றன. கடவுளுடைய மகிமையை அறிவிப்பதை படைப்பு ஒருபோதும் நிறுத்திவிடுவதில்லை. இந்த மௌனமான சாட்சி “பூச்சக்கரத்துக் கடைசி வரைக்கும்” எல்லா குடிகளுக்கும் சென்றெட்டுவதை ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்பது நம்மை மிகவும் சிறியவர்களாக உணர வைக்கிறது. ஆனால், படைப்பின் மெளனமான இந்த சாட்சி மட்டும் போதாது. உண்மையுள்ள மனிதர்களும் அவற்றுடன் சேர்ந்து வாய் திறந்து சாட்சி கொடுக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். பெயர் குறிப்பிடப்படாத ஒரு சங்கீதக்காரன் உண்மையுள்ள வணக்கத்தாருக்கு கடவுளால் ஏவப்பட்ட இந்த வார்த்தைகளை சொன்னார்: ‘யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள். யெகோவாவின் திருநாமத்திற்குரிய மகிமையை அவருக்கே செலுத்துங்கள்.’ (சங்கீதம் 96:7, 8, தி.மொ.) யெகோவாவுடன் நெருங்கிய உறவு வைத்திருப்பவர்கள் இந்த அறிவுரைக்கு பெருமகிழ்ச்சியுடன் கீழ்ப்படிகிறார்கள். அப்படியானால் கடவுளுக்கு மகிமை செலுத்துவதில் என்ன உட்பட்டுள்ளது?
3. மனிதர்கள் எவ்வழிகளில் யெகோவாவுக்கு மகிமையை செலுத்துகிறார்கள்?
3 கடவுளை மகிமைப்படுத்துவதற்கு வெறும் வார்த்தைகள் போதாது. ஏசாயாவின் காலத்தில் இஸ்ரவேலரில் பெரும்பாலோர் உள்ளப்பூர்வமாக அல்லாமல் தங்கள் உதடுகளால்தான் கடவுளை மகிமைப்படுத்தினார்கள். ஆகவே, ஏசாயாவின் மூலம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது.” (ஏசாயா 29:13) அவர்களுடைய நாவின் துதிகள் அனைத்தும் அர்த்தமற்றவையாக இருந்தன. ஆனால் அர்த்தமுள்ள விதத்தில் துதிப்பதற்கு யெகோவா மீதுள்ள அன்பு நிறைந்த இருதயத்தால் துதிக்க வேண்டும்; அதுமட்டுமல்ல, அவரது ஒப்பற்ற மகிமையை உள்ளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு துதிக்க வேண்டும். யெகோவாவே படைப்பாளர், சர்வவல்லவர், நீதியுள்ளவர், அன்பே உருவானவர். நம் இரட்சிப்புக்கு காரண கர்த்தரும் தகுதியுள்ள பேரரசரும் அவரே; பரலோகத்திலும் பூமியிலுமுள்ள அனைவரும் அவருக்கே கீழ்ப்படிய கடமைப்பட்டிருக்கிறோம். (வெளிப்படுத்துதல் 4:11; 19:1) இவற்றையெல்லாம் நாம் உண்மையிலேயே நம்புகிறோமென்றால், முழு இருதயத்தோடு அவரை மகிமைப்படுத்துவோமாக.
4. கடவுளை மகிமைப்படுத்துவது சம்பந்தமாக என்ன அறிவுரைகளை இயேசு கொடுத்தார், அவற்றை நாம் எப்படி நிறைவேற்றலாம்?
4 கடவுளை எப்படி மகிமைப்படுத்துவது என இயேசு கிறிஸ்து நமக்கு சொல்லியிருக்கிறார். “நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்” என அவர் சொன்னார். (யோவான் 15:8) மிகுந்த கனிகளை நாம் எப்படி கொடுக்கிறோம்? முதலாவதாக, “ராஜ்யத்தின் நற்செய்தியை” முழு ஆத்துமாவோடு பிரசங்கிப்பதன் மூலம் கொடுக்கிறோம்; இவ்வாறு அவருடைய ‘காணப்படாத பண்புகளை’ ‘அறிவிப்பதில்’ அனைத்து படைப்புகளோடும் சேர்ந்து கொள்கிறோம். (மத்தேயு 24:14, NW; ரோமர் 1:20, NW) அதுமட்டுமல்ல, இவ்வாறு செய்யும்போது ஏகோபித்த குரலில் யெகோவா தேவனை துதிக்கும் புதிய சீஷர்களை உருவாக்குவதில் நேரடியாகவோ மறைமுகமாகவோ நாம் அனைவருமே பங்குகொள்கிறோம். இரண்டாவதாக, பரிசுத்த ஆவி நமக்குள் பிறப்பிக்கும் கனியை நாம் வளர்க்கிறோம், யெகோவா தேவனின் ஈடிணையற்ற பண்புகளை பின்பற்றவும் முயலுகிறோம். (கலாத்தியர் 5:22, 23; எபேசியர் 5:1; கொலோசெயர் 3:10) அதன் பலனாக, நம் நடத்தை தினம் தினம் கடவுளை மகிமைப்படுத்துகிறது.
“பூமியெங்கும்”
5. கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசத்தை மற்றவர்களிடத்தில் பகிர்ந்துகொள்வதன் மூலம் கடவுளை மகிமைப்படுத்த வேண்டிய உத்தரவாதத்தை பவுல் எப்படி அழுத்திக் காட்டினார் என விளக்குங்கள்.
5 கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசத்தை மற்றவர்களிடத்தில் பகிர்ந்துகொள்வதன் மூலம் கடவுளை மகிமைப்படுத்த வேண்டிய உத்தரவாதத்தைப் பற்றி ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் அழுத்திக் காட்டினார். இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பவர்கள் மட்டுமே இரட்சிக்கப்படுவார்கள் என்பதுதான் ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தின் மையப் பொருள். ‘கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்க,’ மாம்சப் பிரகாரமான இஸ்ரவேலரோ இன்னும் நியாயப்பிரமாணத்தின் மூலம் நீதியான நிலையை எட்ட முயன்றதாக தன் கடிதத்தின் 10-ம் அதிகாரத்தில் பவுல் குறிப்பிட்டார். ஆகவே, “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” என பவுல் சொல்கிறார். அந்த சமயம் முதற்கொண்டு ‘யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இருக்கவில்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரிய சம்பன்னராயிருக்கிறார். ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.’—ரோமர் 10:4, 9-13.
6. சங்கீதம் 19:4-ஐ பவுல் எப்படி பொருத்திக் காட்டினார்?
6 அடுத்ததாக, நியாயமான முறையில் பவுல் இவ்வாறு கேட்கிறார்: “அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படி கேள்விப்படுவார்கள்?” (ரோமர் 10:14, 15) இஸ்ரவேலர் “எல்லாரும் நற்செய்திக்கு கீழ்ப்படியவில்லை” என பவுல் சொல்கிறார். அவர்கள் ஏன் கீழ்ப்படியவில்லை? அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காததால் அல்ல, ஆனால் விசுவாசம் இல்லாததாலேயே கீழ்ப்படியவில்லை. சங்கீதம் 19:4-ஐ பவுல் மேற்கோள் காட்டி, அதை படைப்பின் மௌனமான சாட்சிக்கு பொருத்தாமல், கிறிஸ்தவ பிரசங்க வேலைக்கு பொருத்துகிறார். “அவர்களின் சத்தம் பூமியெங்கும் அவர்களின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே” என அவர் சொல்கிறார். (ரோமர் 10:16, 18; NW) ஆம், உயிரற்ற படைப்பு யெகோவாவை மகிமைப்படுத்துவது போல முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் இரட்சிப்பின் நற்செய்தியை எங்கும் பிரசங்கிப்பதன் மூலம் “பூமியெங்கும்” கடவுளை துதித்தார்கள். கொலோசெயருக்கு எழுதிய கடிதத்தில், நற்செய்தி எந்தளவுக்கு பரவலாக பிரசங்கிக்கப்பட்டிருந்தது என்பதையும்கூட பவுல் குறிப்பிட்டார். இந்த நற்செய்தி “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும்” பிரசங்கிக்கப்பட்டிருந்தது என அவர் சொன்னார்.—கொலோசெயர் 1:23.
வைராக்கியமுள்ள சாட்சிகள்
7. இயேசு சொன்னபடி கிறிஸ்தவர்களுக்கு என்ன பொறுப்பு உள்ளது?
7 இயேசு கிறிஸ்து மரித்து சுமார் 27 ஆண்டுகளுக்குப் பின் கொலோசெயருக்கு பவுல் இக்கடிதத்தை எழுதியிருக்கலாம். இந்த கொஞ்ச காலத்திற்குள் பிரசங்க வேலை எப்படி கொலோசெ பட்டணம் வரை பரவியிருக்க முடியும்? முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் வைராக்கியமாக இருந்ததும் அதை யெகோவா ஆசீர்வதித்ததுமே அதற்கு காரணம். தம்மைப் பின்பற்றுபவர்கள் சுறுசுறுப்புடன் பிரசங்கிப்பார்கள் என இயேசு முன்னறிவித்தபோது, “சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்பட வேண்டும்” என்று சொன்னார். (மாற்கு 13:10) இந்தத் தீர்க்கதரிசனத்துடன், மத்தேயு சுவிசேஷத்தின் இறுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள பின்வரும் கட்டளையையும் சேர்த்து இயேசு சொன்னார். “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.” (மத்தேயு 28:19, 20) பரலோகத்திற்கு இயேசு உயிர்த்தெழுந்து சென்றதும் சீக்கிரத்திலேயே அவருடைய சீஷர்கள் அந்தக் கட்டளைகளை நிறைவேற்ற ஆரம்பித்தார்கள்.
8, 9. அப்போஸ்தலருடைய நடபடிகளில் சொல்லப்பட்டுள்ளபடி, இயேசுவின் கட்டளைகளுக்கு கிறிஸ்தவர்கள் எப்படி கீழ்ப்படிந்தார்கள்?
8 இயேசுவின் உண்மையான சீஷர்கள் மீது பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவி ஊற்றப்பட்ட பின்பு, முதல் காரியமாக அவர்கள் புறப்பட்டு போய் எருசலேமுக்கு வந்திருந்த ஜனக்கூட்டத்தாரிடம் “தேவனுடைய மகத்துவங்களை” பிரசங்கித்தார்கள். அவர்களுடைய பிரசங்க வேலை மிகுந்த பலனை தந்தது; அதன் காரணமாக “ஏறக்குறைய மூவாயிரம் பேர்” முழுக்காட்டுதல் பெற்றார்கள். அந்த சீஷர்கள் தொடர்ந்து வெளியரங்கமாகவும் வைராக்கியமாகவும் கடவுளைத் துதித்தார்கள்; அதனால் நல்ல பலன்களும் கிடைத்தன.—அப்போஸ்தலர் 2:4, 11, 41, 46, 47.
9 அந்தக் கிறிஸ்தவர்களின் நடவடிக்கைகள் விரைவிலேயே மதத் தலைவர்களின் கண்ணில் பட ஆரம்பித்தன. பேதுருவும் யோவானும் தைரியமாக பேசுவதைக் கண்டு அவர்கள் கலக்கமடைந்ததால் பிரசங்கிப்பதை நிறுத்த வேண்டுமென கட்டளையிட்டார்கள். அதற்கு அந்த அப்போஸ்தலர்கள், “நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக் கூடாதே” என பதிலளித்தார்கள். பேதுருவும் யோவானும் பயமுறுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பிறகு, அவர்கள் இருவரும் தங்கள் சகோதரரிடத்திற்கு போய் அவர்களுடன் சேர்ந்து யெகோவாவிடம் ஜெபித்தார்கள். “உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி . . . அநுக்கிரகஞ் செய்தருளும்” என அவர்கள் தைரியமாக யெகோவாவிடம் வேண்டினார்கள்.—அப்போஸ்தலர் 4:13, 20, 29, 30.
10. எப்படிப்பட்ட எதிர்ப்பு எழும்பியது, மெய்க் கிறிஸ்தவர்கள் அதற்கு எப்படி பிரதிபலித்தார்கள்?
10 அவர்கள் செய்த ஜெபம் யெகோவாவின் சித்தத்திற்கு இசைவாக இருந்தது என்பது சற்று பிறகு தெரிய வந்தது. அப்போஸ்தலர்கள் சிறையில் அடைக்கப்பட்டபோது ஒரு தேவதூதன் அவர்களை அற்புதகரமாய் விடுவித்தார். அந்த தூதன் அவர்களிடம், “நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் [“தொடர்ந்து,” NW] சொல்லுங்கள்” என்றார். (அப்போஸ்தலர் 5:18-20) அப்போஸ்தலர்கள் அதற்கு கீழ்ப்படிந்ததால் அவர்களை யெகோவா தொடர்ந்து ஆசீர்வதித்தார். ஆகவே, “தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம் பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.” (அப்போஸ்தலர் 5:42) வெளியரங்கமாய் தேவனுக்கு மகிமை செலுத்துவதை முற்றிலும் தடுப்பதற்கு எப்பேர்ப்பட்ட கடுமையான எதிர்ப்புகள் வந்தபோதிலும் இயேசுவின் சீஷர்கள் தொடர்ந்து பிரசங்கித்தார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
11. பிரசங்க வேலையைக் குறித்ததில் ஆரம்பகால கிறிஸ்தவர்களின் மனநிலை என்ன?
11 சீக்கிரத்தில் ஸ்தேவான் கைது செய்யப்பட்டு கல்லெறிந்து கொல்லப்பட்டார். அவரது கொலைக்குப் பிறகு துன்புறுத்துதல் எனும் தீ எருசலேமில் பற்றியெரிய ஆரம்பித்தது; இதனால் அப்போஸ்தலரைத் தவிர மற்ற சீஷர்கள் எல்லாரும் பிற தேசங்களுக்கு சிதறிப் போக வேண்டியதாயிற்று. துன்புறுத்துதலின் காரணமாக அவர்கள் சோர்வடைந்து போனார்களா? இல்லவே இல்லை. “சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்” என நாம் வாசிக்கிறோம். (அப்போஸ்தலர் 8:1, 4) கடவுளுடைய மகிமையை அறிவிப்பதில் மெய்க் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து அந்த வைராக்கியத்தை காட்டினார்கள். தர்சு பட்டணத்து பரிசேயனாகிய சவுல், தமஸ்குவிலிருந்த இயேசுவின் சீஷர்களை துன்புறுத்தும்படி தூண்டிவிடுவதற்காக அங்கு செல்லும் வழியில் இயேசுவின் தரிசனத்தைக் கண்டு பார்வையிழந்தார் என அப்போஸ்தலர் 9-ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். அவர் தமஸ்குவுக்கு வந்தபோது அனனியா அவருடைய கண்களுக்கு அற்புதமாய் பார்வையளித்தார். அப்போது சவுல்செய்த முதல் காரியம் என்ன? பிற்பாடு அப்போஸ்தலன் பவுல் என அழைக்கப்பட்ட அவர், ‘தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தார்’ என பதிவு சொல்கிறது.—அப்போஸ்தலர் 9:20.
பிரசங்க வேலையில் அனைவரும் பங்கேற்றனர்
12, 13. (அ) சரித்திராசிரியர்கள் குறிப்பிட்டபடி, ஆரம்பகால கிறிஸ்தவ சபையின் குறிப்பிடத்தக்க அம்சம் எது? (ஆ) சரித்திராசிரியர்களின் அறிக்கைகளை அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் எப்படி ஆதரிக்கிறது?
12 ஆரம்பகால கிறிஸ்தவ சபையிலிருந்த அனைவரும் பிரசங்க வேலையில் ஈடுபட்டனர் என்ற விஷயம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அக்காலத்து கிறிஸ்தவர்களைப் பற்றி ஃபிலிப் ஷாஃப் இவ்வாறு எழுதுகிறார்: “ஊழியம் செய்வதே ஒவ்வொரு சபையின் நோக்கமாக இருந்தது, ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒரு சுவிசேஷகராக இருந்தார்.” (கிறிஸ்தவ சர்ச்சின் சரித்திரம் [ஆங்கிலம்]) “புராதன சர்ச்சில் இருந்த கிறிஸ்தவர்கள் எல்லாரும், முக்கியமாக தெய்வீக வரத்தை [பரிசுத்த ஆவியின் வரத்தை] பெற்றிருந்தவர்கள் எல்லாரும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள் என்று பொதுவான அத்தாட்சி காட்டுகிறது” என பாமர மக்களின் மகத்தான ஊழியம் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் டபிள்யு. எஸ். வில்லியம்ஸ் குறிப்பிடுகிறார். “ஊழியத்தில் சில குறிப்பிட்ட ஸ்தானம் வகிப்பவர்கள் மட்டுமே பிரசங்கிப்பதற்கு தகுதி பெற்றவர்கள் என இயேசு கிறிஸ்து அர்த்தப்படுத்தவில்லை” என்றும் அவர் அழுத்தந்திருத்தமாக குறிப்பிடுகிறார். கிறிஸ்தவத்தின் பண்டைய எதிரியாய் இருந்த செல்சஸ் என்பவரும்கூட இவ்வாறு எழுதினார்: “கம்பளி தொழிலாளிகள், செருப்பு தைப்பவர்கள், தோல் பதனிடுபவர்கள், துளியும் படிப்பறிவில்லாத, தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள் ஆகியோர் சுவிசேஷத்தை வைராக்கியமாக பிரசங்கித்தார்கள்.”
13 மேற்கூறப்பட்ட அறிக்கைகள் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அப்போஸ்தலருடைய நடபடிகளின் சரித்திர பதிவில் காண முடிகிறது. பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்ட பின்பு, ஆண்கள் பெண்கள் என எல்லா சீஷர்களும் கடவுளுடைய மகத்துவங்களைப் பற்றி வெளியரங்கமாக அறிவித்தார்கள். ஸ்தேவான் கொலை செய்யப்பட்டதை அடுத்து ஆரம்பித்த துன்புறுத்துதலுக்குப் பின், பிற தேசங்களுக்கு சிதறிப் போன கிறிஸ்தவர்கள் எல்லாரும் மூலைமுடுக்கெங்கும் நற்செய்தியை பரப்பினார்கள். சுமார் 28 ஆண்டுகளுக்கு பிற்பாடு பவுல், ஒரு சிறிய பாதிரி வகுப்பாருக்கு அல்ல, ஆனால் எபிரெய கிறிஸ்தவர்கள் அனைவருக்குமாக எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்: “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.” (எபிரெயர் 13:15) பிரசங்க வேலையைப் பற்றியதில் பவுல் தன்னுடைய எண்ணத்தைக் குறிப்பிடுகையில், “சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ” என்று சொன்னார். (1 கொரிந்தியர் 9:16) முதல் நூற்றாண்டு உண்மை கிறிஸ்தவர்கள் எல்லாருமே இதேவிதமாகத்தான் நினைத்தார்கள் என்பதில் சந்தேகமில்லை.
14. விசுவாசமும் பிரசங்க வேலையும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன?
14 எனவே, ஓர் உண்மை கிறிஸ்தவர் பிரசங்க வேலையில் பங்குகொள்வது அவசியம்; ஏனெனில் பிரசங்க வேலையும் விசுவாசமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்” என்று பவுல் சொன்னார். (ரோமர் 10:10) சபையிலுள்ள ஒரு சிறிய வகுப்பார்—குருவர்க்கத்தினர் போன்றோர்—மட்டுமே விசுவாசத்தைக் காண்பிக்கிறார்களா? அதனால் பிரசங்கிக்கும் பொறுப்பை அவர்கள் மட்டுமே பெற்றுள்ளார்களா? நிச்சயமாகவே இல்லை! மெய்க் கிறிஸ்தவர்கள் அனைவருமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் உறுதியான விசுவாசத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்; அந்த விசுவாசத்தை மற்றவர்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க அவர்கள் தூண்டப்படுகிறார்கள். இல்லாவிட்டால், அவர்களுடைய விசுவாசம் செத்ததாயிருக்கும். (யாக்கோபு 2:26) பொது சகாப்தம் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த உண்மையுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இதேவிதமாக விசுவாசத்தைக் காண்பித்ததால் யெகோவாவின் பெயருக்கு பெருமுழக்கத்தோடு துதி ஏறெடுக்கப்பட்டது.
15, 16. பிரச்சினைகளின் மத்தியிலும் பிரசங்க வேலையில் முன்னேற்றம் காணப்பட்டதற்கு உதாரணம் கொடுங்கள்.
15 முதல் நூற்றாண்டில் சபைக்கு உள்ளேயும் வெளியேயும் பிரச்சினைகள் இருந்தன; என்றபோதிலும், யெகோவா தம் மக்களை ஆசீர்வதித்ததால் சபை விருத்தியடைந்தது. உதாரணமாக, மதம் மாறிய எபிரெய யூதருக்கும் கிரேக்க யூதருக்கும் இடையே பூசல்கள் ஏற்பட்டதாக அப்போஸ்தலர் 6-ம் அதிகாரம் குறிப்பிடுகிறது. அந்தப் பிரச்சினையை அப்போஸ்தலர்கள் சரிசெய்தார்கள். அதன் விளைவாக, “தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்” என நாம் வாசிக்கிறோம்.—அப்போஸ்தலர் 6:7.
16 பிற்பாடு, தீரு, சீதோன் ஆகிய பட்டணத்து மக்களுக்கும் யூதேய ராஜா ஏரோது அகிரிப்பாவுக்கும் இடையே அரசியல் பூசல்கள் எழுந்தன. அந்தப் பட்டணத்து மக்கள் அவரை திருப்திப்படுத்தும் வகையில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்கள்; அதில் உச்சி குளிர்ந்துபோன ஏரோது அகிரிப்பா ஒரு சொற்பொழிவாற்றினார். அதைக் கேட்டு கூடிவந்திருந்த ஜனங்கள், “இது மனுஷ சத்தமல்ல; இது தேவ சத்தம்” என்று ஆர்ப்பரித்தார்கள். உடனடியாக யெகோவாவின் தூதர் ஏரோது அகிரிப்பாவை அடித்தார். “அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால்” இறந்தான். (அப்போஸ்தலர் 12:20-23) மனித ஆட்சியாளர்களில் நம்பிக்கை வைத்தவர்களுக்கு அது எப்பேர்ப்பட்ட அதிர்ச்சியாக இருந்தது! (சங்கீதம் 146:3, 4) ஆனால், கிறிஸ்தவர்களோ யெகோவாவை தொடர்ந்து மகிமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அதன் விளைவாக, அரசியல் பிரச்சினைகளின் மத்தியிலும் “தேவ வசனம் வளர்ந்து பெருகிற்று.”—அப்போஸ்தலர் 12:24.
அன்றும் இன்றும்
17. முதல் நூற்றாண்டில் அதிகமதிகமானோர் எதைச் செய்வதில் சேர்ந்துகொண்டனர்?
17 ஆம், முதல் நூற்றாண்டிலிருந்த உலகளாவிய கிறிஸ்தவ சபை வைராக்கியமாக, சுறுசுறுப்பாக யெகோவா தேவனை துதிக்கும் சபையாக இருந்தது. விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள் எல்லாருமே நற்செய்தியைப் பரப்புவதில் ஈடுபட்டனர். சிலர், கேட்கும் மனமுடைய மக்களை சந்தித்தனர்; இயேசு கட்டளையிட்ட யாவற்றிற்கும் கீழ்ப்படியும்படி அவர்களுக்கு கற்றும் கொடுத்தனர். (மத்தேயு 28:19) அதன் பலனாக, சபை வளர்ந்தது, பண்டைய காலத்து தாவீது ராஜாவைப் போல யெகோவாவைத் துதிப்பதில் அதிகமதிகமானோர் சேர்ந்துகொண்டனர். அவர்கள் எல்லாருமே கடவுளால் ஏவப்பட்ட இந்த வார்த்தைகளை எதிரொலித்தனர்: “என் தேவனாகிய ஆண்டவரே உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன். [ஏனெனில்,] நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது.”—சங்கீதம் 86:12, 13.
18. (அ) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபைக்கும் இன்றைய கிறிஸ்தவமண்டலத்துக்கும் இடையே என்ன வித்தியாசத்தை பார்க்க முடிகிறது? (ஆ) அடுத்த கட்டுரையில் எதை ஆராயலாம்?
18 இதன் சம்பந்தமாக, இறையியல் பேராசிரியை ஆலஸன் ஏ. டிரைட்ஸ் சொன்ன வார்த்தைகள் சிந்தையைத் தூண்டுகின்றன. இன்றைய கிறிஸ்தவமண்டலத்தை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவத்தோடு ஒப்பிட்டு அவர் இவ்வாறு சொன்னார்: “இன்றைய சர்ச்சுகள் பொதுவாக உயிரியல் வளர்ச்சியாலோ (சர்ச்சுக்கு செல்லும் குடும்பத்தாரின் பிள்ளைகள் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தும்போது ஏற்படும் வளர்ச்சியாலோ) இடமாற்ற வளர்ச்சியாலோ (ஒருவர் இடம் மாறி ஒரு சர்ச்சிலிருந்து மற்றொரு சர்ச்சுக்கு செல்லும்போது ஏற்படும் வளர்ச்சியாலோ) விருத்தியடைகின்றன. ஆனால், அப்போஸ்தலருடைய நடபடிகளில் சொல்லப்பட்டிருப்பது மதமாற்ற வளர்ச்சி; ஏனெனில் அந்த சர்ச் அப்போதுதான் செயல்பட ஆரம்பித்திருந்தது.” அப்படியானால் மெய்க் கிறிஸ்தவம் எப்படி வளர வேண்டுமென இயேசு சொல்லியிருந்தாரோ அதேவிதமாக வளரவில்லை என அர்த்தமா? இல்லவே இல்லை. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே இன்று மெய்க் கிறிஸ்தவர்கள் எல்லா வழிகளிலும் கடவுளை வெளிப்படையாக துதிப்பதில் வைராக்கியமாக இருக்கிறார்கள். இதை நாம் அடுத்த கட்டுரையில் ஆராயலாம்.
உங்களால் விளக்க முடியுமா?
• கடவுளை எவ்வழிகளில் மகிமைப்படுத்துகிறோம்?
• சங்கீதம் 19:4-ஐ பவுல் எப்படி பொருத்திக் காட்டினார்?
• விசுவாசமும் பிரசங்க வேலையும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன?
• முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையின் குறிப்பிடத்தக்க அம்சம் என்ன?
[பக்கம் 8, 9-ன் படம்]
வானங்கள் யெகோவாவின் மகிமையை தொடர்ந்து பறைசாற்றுகின்றன
[படத்திற்கான நன்றி]
Courtesy of Anglo-Australian Observatory, photograph by David Malin
[பக்கம் 10-ன் படங்கள்]
பிரசங்க வேலையும் ஜெபமும் நெருங்கிய தொடர்புடையவை