உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான வாக்குறுதிகள்
வாக்குறுதிகள் அடிக்கடி நம்பிக்கையற்றவையாக ஆகக்கூடும் என்பதை கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய மீகா அறிந்திருந்தார். அவர் வாழ்ந்த நாட்களில், கொடுத்த வாக்கை காப்பாற்றும் விஷயத்தில் உற்ற நண்பர்களையும்கூட எப்பொழுதும் நம்ப முடியாததால் அவர் இவ்வாறு எச்சரித்தார்: “அடுத்திருப்பவன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டாம்; தோழனிடத்திலும் நம்பிக்கை வைக்க வேண்டாம்; உன் மார்பில் சாய்ந்திருக்கிற மனைவி முன்பும் உன் வாய்க்குப் பூட்டுப்போடு!”—மீகா 7:5, பொது மொழிபெயர்ப்பு.
இந்தக் கசப்பான உண்மையின் நிமித்தம் எல்லா வாக்குறுதிகளையுமே சந்தேகக் கண்ணோடு மீகா பார்த்தாரா? இல்லை! தனது கடவுளாகிய யெகோவா தந்த வாக்குறுதிகளில் அவர் முழு நம்பிக்கையை வெளிப்படுத்தினார். “நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்” என்று அவர் எழுதினார்.—மீகா 7:7.
மீகா ஏன் இத்தகைய நம்பிக்கை வைத்திருந்தார்? ஏனென்றால் யெகோவா ஒருபோதும் வாக்கு மாறாதவர் என்பதை அவர் அறிந்திருந்தார். மீகாவின் முன்னோருக்கு கடவுள் ஆணையிட்டுக் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றும் பொய்த்துப் போகவில்லை, எல்லாம் நிறைவேறின. (மீகா 7:20) யெகோவா கடந்த காலத்தில் உண்மையுள்ளவராய் நடந்துகொண்டது, வருங்காலத்திலும் தமது சொல்லை காப்பாற்றுவார் என நம்பிக்கை வைக்க மீகாவுக்கு ஓர் அஸ்திவாரமாய் விளங்கியது.
“ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை”
உதாரணமாக, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலரை யெகோவா மீட்டதை மீகா அறிந்திருந்தார். (மீகா 7:15) அந்த மீட்பை அனுபவித்த யோசுவா, கடவுளுடைய வாக்குறுதிகள் அனைத்திலும் விசுவாசம் வைக்க தனது சக இஸ்ரவேலரை உற்சாகப்படுத்தினார். எதன் அடிப்படையில்? “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை” என்பதை யோசுவா அவர்களுக்கு நினைப்பூட்டினார்.—யோசுவா 23:14.
தங்களுக்காக யெகோவா மகத்தான செயல்களை செய்திருந்ததை இஸ்ரவேலர் நன்கு அறிந்திருந்தார்கள். ஆபிரகாமின் சந்ததியார் வானத்து நட்சத்திரங்களைப் போல பெருகுவார்கள் என்றும், கானான் தேசத்தை சுதந்தரித்துக் கொள்வார்கள் என்றும் தேவ பயமுடைய முற்பிதாவான ஆபிரகாமுக்குக் கொடுத்த தமது வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றியிருந்தார். ஆபிரகாமின் வம்சத்தார் 400 வருடங்கள் உபத்திரவப்படுவார்கள், ஆனால் ‘நாலாம் தலைமுறையில்’ கானானுக்குத் திரும்புவார்கள் என்றும்கூட அவர் ஆபிரகாமிடம் சொன்னார். இவை அனைத்தும் அச்சுப் பிசகாமல் நிறைவேறின.—ஆதியாகமம் 15:5-16; யாத்திராகமம் 3:6-8.
யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பின் காலத்தில் இஸ்ரவேலர் எகிப்திற்கு வந்தபோது அவர்கள் நன்கு வரவேற்கப்பட்டனர். பிற்பாடு இஸ்ரவேலர் கொடூரமான அடிமைத் தொழில் புரியும்படி எகிப்தியர் செய்துவிட்டனர், ஆனால் கடவுளுடைய வாக்குறுதிக்கு இசைய, அவர்கள் எகிப்தில் நுழைந்த காலத்திலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக வந்த நான்கு தலைமுறைகளுக்குள் ஆபிரகாமின் இந்த வம்சத்தார் எகிப்தின் அடிமைத்தன விலங்கிலிருந்து விடுதலை பெற்றனர்.a
அதற்குப்பின் வந்த 40 வருடங்களில், யெகோவா எப்பொழுதும் தமது வாக்குறுதிகளைக் காப்பாற்றுகிறவர் என்பதற்கு கூடுதலான அத்தாட்சியை இஸ்ரவேலர் கண்கூடாகக் கண்டனர். அமலேக்கியர் அநியாயமாக இஸ்ரவேலர் மீது தாக்குதல் நடத்த வந்தபோது, கடவுள் தமது ஜனங்கள் சார்பாக போரிட்டு அவர்களை காப்பாற்றினார். வனாந்தரத்தில் 40 வருடம் பயணம் செய்த காலப்பகுதியில் அவர்களுடைய பொருளாதார தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து, கடைசியில் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் அவர்களை குடியிருக்கச் செய்தார். ஆபிரகாமின் இந்தச் சந்ததியாருடன் யெகோவா நடந்துகொண்ட விதத்தைப் பற்றிய சரித்திரத்தை யோசுவா அவர்களுக்கு நினைப்பூட்டியபோது, நம்பிக்கையுடன் இவ்வாறு சொல்ல முடிந்தது: “கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.”—யோசுவா 21:45.
கடவுளுடைய வாக்குறுதிகளில் நம்பிக்கையை வளருங்கள்
மீகா மற்றும் யோசுவாவைப் போல, யெகோவாவின் வாக்குறுதிகள் மீது நீங்கள் எவ்வாறு நம்பிக்கையை வளர்க்க முடியும்? சரி, மற்றவர்கள் மீது நீங்கள் எவ்வாறு நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறீர்கள்? அவர்களைப் பற்றி உங்களால் முடிந்தளவு நன்றாக அறிந்துகொள்வதன் மூலம் வளர்த்துக் கொள்கிறீர்கள். உதாரணமாக, கொடுக்கும் எல்லா வாக்கையும் தவறாமல் நிறைவேற்ற அவர்கள் முயலுவதை கூர்ந்து கவனிப்பதன் மூலம் அவர்கள் எந்தளவுக்கு நம்பகமானவர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இத்தகைய நபர்களைப் பற்றி நீங்கள் அதிகமதிகமாய் அறிந்து கொள்ளும்போது, அவர்கள் மீது உங்களுடைய நம்பிக்கையை படிப்படியாக வளர்த்துக் கொள்கிறீர்கள். கடவுளுடைய வாக்குறுதிகள் மீது உங்களுடைய நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் விஷயத்திலும் இதையே நீங்கள் செய்யலாம்.
இதைச் செய்வதற்கு ஒரு வழி, படைப்பையும் அதை கட்டுப்படுத்தும் சட்டங்களையும் தியானிப்பதாகும். உதாரணமாக, ஒரேவொரு மனித செல் பிரிந்து கோடானுகோடி செல்களாக பெருகி உங்களுடைய உடலை உருவாக்கியதை சிந்தித்துப் பாருங்கள்; இத்தகைய சட்டங்கள் மீது விஞ்ஞானிகள் தங்களுடைய நம்பிக்கையை வைக்கிறார்கள். சொல்லப்போனால், இந்த அண்டம் முழுவதிலும் உள்ள பொருள் மற்றும் ஆற்றலின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டங்கள், முற்றிலும் நம்பிக்கைக்குப் பாத்திரமான சட்ட இயற்றுநரால் ஸ்தாபிக்கப்பட்டிருக்க வேண்டும். நிச்சயமாகவே, அவருடைய படைப்பை கட்டுப்படுத்தும் சட்டங்கள் மீது நம்பிக்கை வைப்பதைப் போல, அவருடைய வாக்குறுதிகள் மீதும் நீங்கள் நம்பிக்கை வைக்கலாம்.—சங்கீதம் 139:14-16; ஏசாயா 40:26; எபிரெயர் 3:4.
யெகோவா தமது வாக்கு எந்தளவு நம்பத்தகுந்தது என்பதை மீகா காலத்தில் வாழ்ந்த ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் விளக்கினார்; இதற்கு தவறாமல் நிகழும் பருவ காலங்களையும் தண்ணீர் சுழற்சியையும் உதாரணமாக பயன்படுத்தினார். ஒவ்வொரு வருடமும் மழை வருகிறது. அது நிலத்தை நன்றாக நனைக்கிறது. இதனால் மக்கள் விதை விதைத்து பயிரை அறுவடை செய்ய முடிகிறது. இதன் சம்பந்தமாக யெகோவா இவ்வாறு கூறினார்: “மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச் செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”—ஏசாயா 55:10, 11.
பரதீஸ் பூமியைப் பற்றிய நம்பகமான வாக்குறுதிகள்
படைப்பை ஆராய்வது படைப்பாளர் மீது நம்பிக்கையை வளர்க்கலாம், ஆனால் ‘அவருடைய வாயிலிருந்து புறப்படும் வசனத்தின்’ பாகமான வாக்குறுதிகளைப் பற்றி நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பினால், வேறொன்றையும் நீங்கள் செய்ய வேண்டும். இந்த வாக்குறுதிகளில் நம்பிக்கை வைக்கும் அளவிற்கு அவற்றைக் குறித்து கற்றுக்கொள்வதற்கு, பூமிக்கான கடவுளுடைய நோக்கத்தையும் மனிதரோடு அவர் நடந்துகொண்ட விதங்களையும் தெரியப்படுத்தும் பைபிள் பதிவை நீங்கள் ஆராய வேண்டும்.—2 தீமோத்தேயு 3:14-17.
யெகோவாவின் வாக்குறுதிகள் மீது மீகா தீர்க்கதரிசி நம்பிக்கை வைத்திருந்தார். கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட பைபிள் பதிவுகள் மீகாவிடம் இருந்ததைக் காட்டிலும் உங்களிடம் அதிகமாக இருக்கின்றன. எனவே பைபிளை படித்து அதை தியானிக்கும்போது, கடவுளுடைய வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் நீங்களும் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியும். இந்த வாக்குறுதிகள் வெறுமனே ஆபிரகாமின் சந்ததியாருக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மட்டுமல்ல, முழு மனிதகுலத்திற்கும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள். தேவ பயமுடைய ஆபிரகாமிடம் யெகோவா இவ்வாறு வாக்குறுதி அளித்தார்: “நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.” (ஆதியாகமம் 22:18) மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவே ஆபிரகாமின் முக்கிய “சந்ததி.”—கலாத்தியர் 3:16.
இந்த ஆசீர்வாதங்கள் இயேசு கிறிஸ்துவின் மூலம் மனிதகுலத்திற்கு கிடைக்கும்படி யெகோவா செய்வார். நம்முடைய காலத்தில் என்ன செய்யப்போவதாக கடவுள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்? பின்வரும் தீர்க்கதரிசன வார்த்தைகளில் மீகா 4:1, 2 பதிலளிக்கிறது: “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள். திரளான ஜாதிகள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்.”
யெகோவாவின் வழிகளைக் கற்றுக்கொள்கிறவர்கள் ‘பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிக்கிறார்கள்.’ இதனால் போர் செய்யும் மனப்பான்மைகள் அடியோடு மறைந்துவிடுகின்றன. விரைவில் இந்தப் பூமி நீதியான ஜனங்களால் நிரப்பப்படும், பயப்படுத்துவார் யாரும் இருக்க மாட்டார்கள். (மீகா 4:3, 4) ஆம், இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் ராஜ்யத்தில், ஒடுக்குகிறவர்கள் அனைவரையும் இந்தப் பூமியிலிருந்து யெகோவா அழிக்கப்போவதாக அவருடைய வார்த்தை வாக்குறுதி அளிக்கிறது.—ஏசாயா 11:6-9; தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 11:18.
கடவுளுக்கு எதிராக மனிதன் செய்த கலகத்தனத்தின் விளைவாக துன்பப்பட்டு மடிந்தவர்களும்கூட இப்பூமியில் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்புடன் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். (யோவான் 5:28, 29) துன்மார்க்கத்தைத் தூண்டிவிடும் சாத்தானும் அவனுடைய பேய்களும் இருக்க மாட்டார்கள், ஆதாம் செய்த பாவத்தின் விளைவுகளும் இயேசுவின் கிரயபலியினால் நீக்கப்படும். (மத்தேயு 20:28; ரோமர் 3:23, 24; 5:12; 6:23; வெளிப்படுத்துதல் 20:1-3) கீழ்ப்படிதலுள்ள மனிதருக்கு எப்படிப்பட்ட நிலைமை இருக்கும்? பூங்காவனம் போன்ற பரதீஸான பூமியில் அவர்கள் பூரண ஆரோக்கியத்துடன் நித்திய காலமாக வாழும்படி ஆசீர்வதிக்கப்படுவார்கள்!—சங்கீதம் 37:10, 11; லூக்கா 23:43; வெளிப்படுத்துதல் 21:3-5.
உண்மையிலேயே இவை மகத்தான வாக்குறுதிகள்! ஆனால் இவற்றில் நீங்கள் நம்பிக்கை வைக்க முடியுமா? ஆம், நிச்சயமாகவே நம்பிக்கை வைக்க முடியும். நல்மனம் படைத்தவர்களாயிருந்தும் தாங்கள் சொல்வதை நிறைவேற்ற சக்தி இல்லாத மனிதர்கள் தரும் வாக்குறுதிகள் அல்ல இவை; மாறாக, சர்வ வல்லமை படைத்த கடவுள் தரும் வாக்குறுதிகள் இவை. அவர் பொய் சொல்லாதவர், ‘தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராதவர்.’ (2 பேதுரு 3:9; எபிரெயர் 6:13-18) பைபிளிலுள்ள எல்லா வாக்குறுதிகள் மீதும் நீங்கள் முழு நம்பிக்கை வைக்க முடியும், ஏனென்றால் ‘சத்தியபரராகிய யெகோவாவே’ அவற்றின் ஊற்றுமூலர்.—சங்கீதம் 31:5.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வேதாகமத்தின் பேரில் உட்பார்வை, தொகுதி 1, பக்கங்கள் 911-12-ஐ காண்க.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.”—யோசுவா 23:14
[பக்கம் 4, 5-ன் படங்கள்]
யெகோவா செங்கடலிலும் வனாந்தரத்திலும் இஸ்ரவேலருக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்
[பக்கம் 7-ன் படங்கள்]
ஆபிரகாமுக்கு தந்த வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றினார். அவருடைய சந்ததியில் வந்த இயேசு கிறிஸ்து, மனிதகுலத்தின் மீது ஆசீர்வாதங்களைப் பொழிவார்