‘ஆண்டவரே, எப்படி ஜெபம் செய்வதென்று எங்களுக்கு கற்றுத்தாரும்’
‘அவருடைய சீஷர்களில் ஒருவர் அவரை நோக்கி: ஆண்டவரே, எப்படி ஜெபம் செய்வதென்று எங்களுக்கு கற்றுத்தாரும் என்று கேட்டார்.’—லூக்கா 11:1; NW.
1. இயேசுவின் சீஷர்களில் ஒருவர் ஜெபம் செய்ய கற்றுத் தருமாறு ஏன் அவரிடம் கேட்டார்?
அது பொ.ச. 32-ம் வருடம்; இயேசு ஜெபம் செய்து கொண்டிருந்ததை அவருடைய சீஷர்களில் ஒருவர் கவனித்தார். இயேசு தம் பிதாவிடம் ஜெபத்தில் பேசிக் கொண்டிருந்தது அந்த சீஷரின் காதுகளில் விழவில்லை, ஒருவேளை அது மனதிற்குள்ளேயே செய்யப்பட்ட ஜெபமாக இருந்திருக்கலாம். என்றபோதிலும், இயேசு ஜெபம் செய்து முடித்தவுடன் அந்த சீஷர் அவரிடம்: ‘ஆண்டவரே, எப்படி ஜெபம் செய்வதென்று எங்களுக்கு கற்றுத்தாரும்’ என்று கேட்டார். (லூக்கா 11:1; NW) அந்த சீஷர் இப்படி கேட்க காரணம் என்ன? ஏற்கெனவே யூதர்களின் வாழ்க்கையிலும் வணக்கத்திலும் ஜெபம் ஒரு முக்கிய இடத்தை வகித்திருந்தது. எபிரெய வேதாகமத்தின் சங்கீதப் புத்தகத்திலும் வேறுபல பகுதிகளிலும் ஏராளமான ஜெபங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆகவே, அந்த சீஷர் தனக்கு முன்பின் தெரியாத ஒரு காரியத்தைப் பற்றி அல்லது அதற்கு முன் தான் ஒருபோதும் செய்திராத ஒரு காரியத்தைப் பற்றி கற்றுத் தருமாறு கேட்கவில்லை. ஏனெனில், யூத மதத் தலைவர்கள் தங்களுடைய சம்பிரதாய முறைப்படி செய்த ஜெபங்களெல்லாம் அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இப்போதோ இயேசு ஜெபித்த விதத்தை அவர் கவனித்திருந்தார்; எனவே, ரபீக்களின் பகட்டான ஜெபங்களுக்கும் இயேசுவின் ஜெபத்திற்கும் இடையே பெரும் வித்தியாசம் இருந்ததை ஒருவேளை அவர் உணர்ந்திருக்கக்கூடும்.—மத்தேயு 6:5-8.
2. (அ) மாதிரி ஜெபத்தை வார்த்தைக்கு வார்த்தை நாம் மனப்பாடமாக சொல்ல வேண்டுமென்று இயேசு அர்த்தப்படுத்தவில்லை என்பது எதிலிருந்து தெரிகிறது? (ஆ) எவ்வாறு ஜெபிப்பதென்று அறிந்துகொள்ள நாம் ஏன் விரும்புகிறோம்?
2 ஏறக்குறைய 18 மாதங்களுக்கு முன்னர்தான் மலைப் பிரசங்கத்தில் எப்படி ஜெபம் செய்வது என்பதற்கான ஒரு மாதிரியை இயேசு தம் சீஷர்களுக்கு கற்றுத் தந்திருந்தார். (மத்தேயு 6:9-13) முன்னர் குறிப்பிடப்பட்ட அந்த சீஷர் அச்சமயத்தில் ஒருவேளை அங்கு இல்லாமல் இருந்திருக்கலாம்; ஆகவே, மாதிரி ஜெபத்தின் முக்கிய குறிப்புகளை அவருக்கு இயேசு மறுபடியும் அன்போடு எடுத்துச் சொன்னார். ஆனால் இம்முறை அந்த ஜெபத்தை அவர் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே கூறவில்லை; இது கவனிக்க வேண்டிய விஷயம்; ஏனென்றால், அர்த்தம் தெரியாமல் மனப்பாடமாக திரும்பத் திரும்ப சொல்லும் ஓர் ஆராதனை ஜெபத்தை அவர் கற்பிக்கவில்லை என்ற குறிப்பு இதிலிருந்து தெரிய வருகிறது. (லூக்கா 11:1-4) பெயர் குறிப்பிடப்படாத அந்த சீஷர் எப்படி ஜெபிப்பதென்று கற்றுக்கொள்ள விரும்பினார்; யெகோவாவிடமாக நெருங்கி வரச் செய்யும் விதத்தில் எப்படி ஜெபிப்பதென்று கற்றுக்கொள்ள நாமும் விரும்புகிறோம். எனவே, அப்போஸ்தலன் மத்தேயு முழுமையாக பதிவு செய்துள்ள அந்த ஜெபத்தை இப்போது நாம் ஆராய்வோமாக. அதில் ஏழு வேண்டுகோள்கள் உள்ளன; அவற்றில் மூன்று கடவுளுடைய நோக்கங்களைப் பற்றியவை, மற்ற நான்கு நம்முடைய பொருளாதார தேவைகளையும் ஆவிக்குரிய தேவைகளையும் பற்றியவை. இந்தக் கட்டுரையில் முதல் மூன்று வேண்டுகோள்களை நாம் சிந்திக்க இருக்கிறோம்.
அன்புள்ள ஒரு தகப்பன்
3, 4. யெகோவாவை “எங்கள் பிதாவே” என்று அழைப்பது எதை குறிக்கிறது?
3 நம்முடைய ஜெபங்கள் யெகோவாவுடன் உள்ள நம் அன்யோன்யத்தை மட்டுமல்ல, மரியாதையுள்ள உறவையும் காட்ட வேண்டுமென்று இயேசு ஆரம்பத்திலிருந்தே குறிப்பிட்டார். அந்த மலையோரத்தில் தம் பக்கத்திலே அமர்ந்திருந்த சீஷர்களின் நலனை முக்கியமாக கருத்தில் கொண்டே இயேசு பேசினார்; யெகோவாவை ஜெபத்தில் அணுகுகையில், “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என அழைக்கும்படி அப்போது அவர்களிடம் சொன்னார். (மத்தேயு 6:9) இயேசு, அன்று புழக்கத்திலிருந்த எபிரெய மொழியில் பேசியிருந்தாலும் சரி, அரமேயிக் மொழியில் பேசியிருந்தாலும் சரி, “பிதா” என்பதற்கு அவர் பயன்படுத்திய சொல், ஒரு குட்டிப் பிள்ளை தன் அப்பாவை பாசத்தோடு அழைக்கும் அன்யோன்யமான ‘ஒரு மழலைச் சொல்’ என்று கல்விமான் ஒருவர் கூறுகிறார். யெகோவாவை “எங்கள் பிதாவே” என்று அழைப்பது, அவரோடு நம்பிக்கைக்குரிய அன்பான ஓர் உறவை நாம் வைத்திருக்கிறோம் என்பதை காட்டுகிறது.
4 ‘எங்கள் பிதாவே’ என்று சொல்லும்போது, யெகோவாவை உயிர் கொடுப்பவரென்று ஏற்றுக்கொண்டுள்ள ஆண்களும் பெண்களும் அடங்கிய ஒரு பெரிய குடும்பத்தின் பாகமாக நாம் இருக்கிறோம் என்பதையும் அங்கீகரிக்கிறோம். (ஏசாயா 64:8; அப்போஸ்தலர் 17:24, 28) ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ‘தேவனுடைய புத்திரர்களாக’ தத்தெடுக்கப்படுகிறார்கள்; எனவே யெகோவாவை நோக்கி அவர்கள் ‘அப்பா, பிதாவே என்று கூப்பிடுகிறார்கள்.’ (ரோமர் 8:14, 15) லட்சக்கணக்கான மற்றவர்கள் அவர்களுடைய பற்றுமாறா தோழர்கள் ஆகியிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, அதை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். இந்த “வேறே ஆடுகளும்”கூட இயேசுவின் பெயரிலே யெகோவாவை அணுகி, அவரை “எங்கள் பிதாவே” என்று அழைக்கலாம். (யோவான் 10:16; 14:6) நம்முடைய பரலோக பிதாவை துதிப்பதற்காகவும், நமக்காக அவர் செய்யும் அனைத்து நற்காரியங்களுக்கும் நன்றி சொல்வதற்காகவும், நம்முடைய எல்லா கவலைகளையும் அவரிடம் கொட்டிவிடுவதற்காகவும் தவறாமல் அவரிடம் ஜெபிக்கலாம்; நம்மீது அவர் அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்ற உறுதியோடு அவ்வாறு ஜெபிக்கலாம்.—பிலிப்பியர் 4:6, 7; 1 பேதுரு 5:6, 7.
யெகோவாவின் பெயரை நேசித்தல்
5. மாதிரி ஜெபத்திலுள்ள முதல் வேண்டுகோள் எது, இவ்வாறு வேண்டுவது ஏன் பொருத்தமானது?
5 மாதிரி ஜெபத்திலுள்ள முதல் வேண்டுகோளானது, முக்கியத்துவம் தர வேண்டிய காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கிறது. அது இவ்வாறு குறிப்பிடுகிறது: “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.” (மத்தேயு 6:9) ஆம், யெகோவாவின் பெயரை பரிசுத்தப்படுத்துவதே நமது அக்கறைக்குரிய முதல் விஷயமாக இருக்க வேண்டும்; ஏனெனில் நாம் அவரை நேசிக்கிறோம், அதோடு அவருடைய பெயர் மீது பல வித நிந்தைகள் குவிக்கப்படுகிறதை காண நாம் அறவே விரும்புவதில்லை. சாத்தானின் கலகமும், முதல் மனித ஜோடியை அவன் யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் போகும்படி செய்ததும் அவருடைய பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியது; எப்படியெனில், சர்வலோக பேரரசுரிமையை யெகோவா சரிவர கையாளுகிறாரா என்ற சந்தேகத்தை கிளப்பியதன் மூலம் அவருடைய பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியது. (ஆதியாகமம் 3:1-6) மேலும், யெகோவாவை பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லிக் கொள்பவர்களின் வெட்கக்கேடான செயல்களும் போதனைகளும்கூட, அன்றிலிருந்து இன்றுவரையாக, அவருடைய பெயருக்கு இழுக்கை கொண்டு வந்திருக்கின்றன.
6. யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதற்காக ஜெபித்தோமென்றால் நாம் என்ன செய்ய மாட்டோம்?
6 யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதற்காக நாம் ஜெபிப்பது, சர்வலோக பேரரசுரிமையைப் பற்றிய விவாதத்தில் நாம் எடுத்திருக்கும் நிலைநிற்கையை காட்டுகிறது, அதாவது சர்வலோகத்தை ஆளுவதற்கான யெகோவாவின் உரிமையை நாம் முழுமையாக ஆதரிக்கிறோம் என்பதை காட்டுகிறது. யெகோவாவையும் அவருடைய பெயர் பிரதிநிதித்துவம் செய்யும் எல்லாவற்றையும் நேசிப்பதன் காரணமாக முழு மனதோடும் மகிழ்ச்சியோடும் அவருடைய நீதியான பேரரசுரிமைக்கு கீழ்ப்படிகிற புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகளால் இந்த சர்வலோகம் நிறைந்திருக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். (1 நாளாகமம் 29:10-13; சங்கீதம் 8:1; 148:13) அவ்வாறு, நாம் யெகோவாவின் பெயரை நேசிப்பதால் அந்தப் பரிசுத்த பெயருக்கு களங்கம் கற்பிக்கும் எந்தவொரு காரியத்தையும் நாம் செய்ய மாட்டோம். (எசேக்கியேல் 36:20, 21; ரோமர் 2:21-24) யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதையும் அவருடைய பேரரசுரிமைக்கு அன்புடன் கீழ்ப்பட்டிருப்பதையும் பொறுத்தே சர்வலோகமும் அதன் குடிகளும் சமாதானமாக வாழ முடியும்; எனவே, “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று நாம் ஜெபிப்பது அவருக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் அவருடைய நோக்கம் கண்டிப்பாக நிறைவேறும் என்ற நமது திடநம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.—எசேக்கியேல் 38:23.
நாம் ஜெபிக்கும் அந்த ராஜ்யம்
7, 8. (அ) எந்த ராஜ்யத்திற்காக ஜெபிக்கும்படி இயேசு நமக்கு கற்றுக்கொடுத்தார்? (ஆ) தானியேல் மற்றும் வெளிப்படுத்துதல் புத்தகத்திலிருந்து இந்த ராஜ்யத்தைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
7 “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்பதே மாதிரி ஜெபத்தின் இரண்டாம் வேண்டுகோளாகும். (மத்தேயு 6:10) இந்த வேண்டுகோளிற்கும் இதற்கு முந்தின வேண்டுகோளிற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மேசியானிய ராஜ்யத்தை—தம்முடைய குமாரனான இயேசு கிறிஸ்துவை ராஜாவாக நியமித்துள்ள பரலோக அரசாங்கத்தை—யெகோவா தம் புனிதப் பெயரை பரிசுத்தப்படுத்துவதற்கான கருவியாக பயன்படுத்துவார். (சங்கீதம் 2:1-9) தானியேலின் தீர்க்கதரிசனம் அந்த மேசியானிய ராஜ்யத்தை “மலையிலிருந்து” பெயர்ந்து வந்த “ஒரு கல்” என சித்தரிக்கிறது. (தானியேல் 2:34, 35, 44, 45) அந்த மலை யெகோவாவின் சர்வலோக பேரரசுரிமையை குறிக்கிறது; ஆகவே ராஜ்யத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அந்தக் கல் யெகோவாவின் சர்வலோக ஆளுகையின் புதிய ஒரு வெளிக்காட்டாக இருக்கும். அந்தக் கல் ‘ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பியதாக’ அத்தீர்க்கதரிசனம் சொல்கிறது; அதாவது பூமியை ஆளுவதில் அந்த மேசியானிய ராஜ்யம் தெய்வீக பேரரசுரிமையை பிரதிநிதித்துவம் செய்யுமென்று சுட்டிக்காட்டுகிறது.
8 இந்த மேசியானிய ராஜ்யத்தில் “பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட” 1,44,000 பேர் கிறிஸ்துவோடுகூட ஆட்சி செய்கிற ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் இருப்பார்கள். (வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1-4; 20:6) அவர்களை “உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள்” என்று தானியேல் குறிப்பிடுகிறார்; அவர்கள் தங்களுடைய தலைவரான கிறிஸ்துவோடு ‘வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகத்தையும் ஆளுகையையும் மகத்துவத்தையும் பெற்றுக்கொள்வார்கள். . . . அவர்களுடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; எல்லா ராஜ்யங்களும் அவர்களுக்குப் பணிந்து கீழ்ப்பட்டிருக்கும்’ என்றும் தானியேல் குறிப்பிடுகிறார். (தானியேல் 7:13, 14, 18, 27; NW) ஆம், பரலோக அரசாங்கத்தைப் பற்றிய மிகச் சிறந்த விவரிப்பு இது; இந்த ராஜ்யத்திற்காக ஜெபிக்கும்படியே இயேசு தம்மை பின்பற்றினவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.
ராஜ்யம் வருவதற்காக இன்னமும் ஏன் ஜெபிக்க வேண்டும்?
9. கடவுளுடைய ராஜ்யம் வருவதற்காக நாம் ஜெபிப்பது ஏன் பொருத்தமானது?
9 தம்முடைய மாதிரி ஜெபத்தில், கடவுளுடைய ராஜ்யம் வருவதற்காக ஜெபிக்கும்படி கிறிஸ்து நமக்கு கற்றுக்கொடுத்தார். பரலோகத்தில் மேசியானிய ராஜ்யம் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்டதை பைபிள் தீர்க்கதரிசன நிறைவேற்றங்கள் சுட்டிக்காட்டுகின்றன.a அப்படியானால், அந்த ராஜ்யம் ‘வருவதற்காக’ இன்னமும் நாம் ஜெபிப்பது பொருத்தமானதா? ஆம், நிச்சயமாக பொருத்தமானதே. ஏனெனில் தானியேல் தீர்க்கதரிசனத்தில் மேசியானிய ராஜ்யமாக அடையாளம் காட்டப்பட்டுள்ள அந்தக் கல் மிகப் பெரிய சிலையோடு, அதாவது மனித அரசாங்கங்களோடு நேருக்கு நேர் மோதுவதற்காக உருண்டு வரப்போகிறது. அந்தக் கல் சீக்கிரத்தில் வந்து, ஒரே மோதலில் அதை தூள்தூளாக்கிப் போடப்போகிறது. இதை தானியேல் தீர்க்கதரிசனம் பின்வருமாறு சொல்கிறது: “அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை. . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:44.
10. கடவுளுடைய ராஜ்யம் வருவதற்காக நாம் ஏன் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறோம்?
10 சாத்தானின் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறைக்கு எதிராக கடவுளுடைய ராஜ்யம் வரப்போவதை காண நாம் ஆவலோடு காத்திருக்கிறோம்; ஏனெனில் இந்த ராஜ்யமே யெகோவாவின் புனிதப் பெயரை பரிசுத்தப்படுத்தும், அதோடு தெய்வீக பேரரசுரிமையை எதிர்க்கிற அனைவரையும் ஒழித்துக்கட்டிவிடும். ஆகவே நாம் ஊக்கத்துடன் “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று ஜெபித்து, அப்போஸ்தலன் யோவானோடு சேர்ந்து, “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்” என்று சொல்கிறோம். (வெளிப்படுத்துதல் 22:20) ஆம், யெகோவாவின் பெயரை பரிசுத்தப்படுத்துவதற்கும் அவருடைய பேரரசுரிமையை நியாயநிரூபணம் செய்வதற்கும் இயேசு வருவாராக; அதன் மூலம் சங்கீதக்காரனின் பின்வரும் இவ்வார்த்தைகள் நிறைவேறுவதாக: ‘யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணர்ந்து கொள்வார்களாக.’—சங்கீதம் 83:17.
“உம்முடைய சித்தம் . . . செய்யப்படுவதாக”
11, 12. (அ) கடவுளுடைய சித்தம் “பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று ஜெபிக்கும்போது உண்மையில் நாம் என்ன கேட்கிறோம்? (ஆ) யெகோவாவின் சித்தம் நிறைவேற்றப்படுவதற்காக நாம் ஜெபிப்பது வேறு எதையும் அர்த்தப்படுத்துகிறது?
11 இதனை அடுத்து, “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று ஜெபிக்கும்படி இயேசு தம் சீஷர்களுக்கு கற்பித்தார். (மத்தேயு 6:10) யெகோவாவுடைய சித்தத்தினால்தான் இந்த சர்வலோகமே தோன்றியது. “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது” என்று வல்லமைமிக்க பரலோக சிருஷ்டிகள் உரக்க சப்தமிடுகின்றன. (வெளிப்படுத்துதல் 4:11) ‘பரலோகத்தில் இருக்கிறவைகளையும் பூலோகத்தில் இருக்கிறவைகளையும்’ குறித்து யெகோவாவுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. (எபேசியர் 1:8-10) எனவே, கடவுளுடைய சித்தம் நிறைவேறும்படி நாம் ஜெபிப்பதன் மூலம் ‘யெகோவாவே உம்முடைய நோக்கத்தை நீர் நிறைவேற்றும்’ என்றே உண்மையில் நாம் அவரிடம் கேட்கிறோம். மேலும், இவ்வாறு ஜெபிப்பதன் மூலம் தெய்வீக சித்தமானது சர்வலோகமெங்கும் நிறைவேற்றப்படுவதை பார்க்க நாம் ஆவலோடு இருப்பதை காட்டுகிறோம்.
12 அதுமட்டுமல்ல, இவ்வாறு ஜெபிப்பதன் மூலம் யெகோவாவின் சித்தத்திற்கு இசைய நம் வாழ்க்கையை மாற்றியமைக்க மனமுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதையும் காண்பிக்கிறோம். “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது” என்று இயேசு சொன்னார். (யோவான் 4:34) ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களான நாம் இயேசுவைப் போலவே கடவுளுடைய சித்தத்தை செய்வதில் மகிழ்ச்சி காண்கிறோம். “மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழை”க்கும் விதத்தில் நம் வாழ்க்கையை அமைக்க யெகோவாவின் மீதும் அவருடைய குமாரன் மீதும் உள்ள அன்பு நம்மை ஏவுகிறது. (1 பேதுரு 4:1, 2; 2 கொரிந்தியர் 5:14, 15) யெகோவாவின் சித்தத்திற்கு எதிரான காரியங்கள் எவையென்று அறிந்திருக்கிறவற்றை தவிர்க்க நாம் பிரயாசப்படுகிறோம். (1 தெசலோனிக்கேயர் 4:3-5) பைபிளை வாசிப்பதற்கும், அதை ஆழ்ந்து படிப்பதற்கும் நேரத்தை பிரயோஜனப்படுத்திக் கொள்வதன் மூலம் ‘யெகோவாவுடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து கொள்கிறோம்.’ “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷ”த்தை பிரசங்கிக்கும் வேலையில் நாம் மும்முரமாக ஈடுபட வேண்டுமென்பதுகூட யெகோவாவுடைய சித்தமாகும்.—எபேசியர் 5:15-17; மத்தேயு 24:14.
பரலோகத்தில் யெகோவாவின் சித்தம்
13. சாத்தானின் கலகம் ஆரம்பித்ததற்கு வெகு காலத்துக்கு முன்பிருந்தே யெகோவாவின் சித்தம் எவ்வாறு நிறைவேறி வந்திருக்கிறது?
13 யெகோவாவுடைய ஆவி குமாரர்களில் ஒருவன் கலகம் செய்து சாத்தானாக மாறினதற்கு வெகு காலத்துக்கு முன்பிருந்தே யெகோவாவின் சித்தம் பரலோகத்தில் நிறைவேறி வந்திருக்கிறது. நீதிமொழிகள் புத்தகமானது கடவுளுடைய ஒரேபேறான குமாரனை ஞானம் என்று உருவகப்படுத்திக் காட்டுகிறது. யுகா யுகங்களாக கடவுளுடைய ஒரேபேறான குமாரன் தம்முடைய பிதாவின் சித்தத்தை செய்வதற்கு மனமகிழ்ச்சியோடு “எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்”திருந்ததாக அந்தப் புத்தகம் காண்பிக்கிறது. காலப்போக்கில், அந்தக் குமாரன் ‘பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகலத்தையும்’ சிருஷ்டிப்பதில் யெகோவாவின் ‘கைதேர்ந்த வேலையாளாக’ ஆனார். (நீதிமொழிகள் 8:22-31; NW; கொலோசெயர் 1:15-17) அதுமட்டுமல்ல, இயேசுவை தம் வார்த்தையாக, அதாவது தம் சார்பில் பேசுபவராகவும் யெகோவா பயன்படுத்தினார்.—யோவான் 1:1-3.
14. பரலோகத்தில் யெகோவாவின் சித்தத்தை தேவதூதர்கள் நிறைவேற்றும் விதத்தைப் பற்றி 103-ம் சங்கீதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
14 யெகோவாவின் பேரரசுரிமை மற்ற எல்லாவற்றையும்விட மேலானது என சங்கீதக்காரன் காண்பிக்கிறார்; திரளான தேவதூதர்கள்கூட அவருடைய அறிவுரைகளை கேட்டு அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதாகவும் காண்பிக்கிறார். அதை இவ்வாறு வாசிக்கிறோம்: “கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது. கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள். கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள். கர்த்தர் ஆளுகிற [அதாவது, கர்த்தருடைய பேரரசுரிமையின் கீழ்] எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி.”—சங்கீதம் 103:19-22.
15. ராஜ்ய அதிகாரத்தை இயேசு பெற்றபோது, பரலோகத்தில் கடவுளுடைய சித்தம் எவ்வாறு நிறைவேறியது?
15 யோபு புத்தகம் குறிப்பிடுகிறபடி, சாத்தான் தன் கலகத்தை ஆரம்பித்த பிறகும்கூட பரலோகத்திற்கு அவனால் போய்வர முடிந்தது. (யோபு 1:6-12; 2:1-7) என்றாலும், அவனும் அவனுடைய பேய்களும் பரலோகத்திலிருந்து வெளியே தள்ளப்படும் ஒரு காலத்தைப் பற்றி வெளிப்படுத்துதல் புத்தகம் தீர்க்கதரிசனம் உரைத்தது. இயேசு கிறிஸ்து 1914-ல் ராஜ்ய அதிகாரத்தை பெற்றதும் சீக்கிரத்திலே அதற்கான காலம் வந்தது. அச்சமயத்திலிருந்து அந்தக் கலகக்காரர்களுக்கு பரலோகத்தில் இடமில்லாமல் போனது. பூமியின் சுற்றுவட்டாரத்தில் மட்டுமே இனி அவர்களால் இருக்க முடியும். (வெளிப்படுத்துதல் 12:7-12) பரலோகத்திலோ யெகோவாவின் பேரரசுரிமைக்கு எதிராக இனி எந்தக் குரலும் கேட்காது, மாறாக யெகோவாவுக்கு கீழ்ப்படிந்து, ‘ஆட்டுக்குட்டியான’ இயேசு கிறிஸ்துவை ஒருசேர துதிக்கும் குரல்கள் மட்டுமே கேட்கும். (வெளிப்படுத்துதல் 4:9-11) ஆம், யெகோவாவின் சித்தம் பரலோகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
பூமிக்கான யெகோவாவுடைய சித்தம்
16. மனிதவர்க்கத்துக்கான எதிர்கால நம்பிக்கை சம்பந்தப்பட்டதில் மாதிரி ஜெபம் கிறிஸ்தவமண்டல போதனையை எப்படி தவறென்று நிரூபிக்கிறது?
16 நல்லவர்கள் எல்லாரும் பரலோகத்திற்கு போகிறார்கள் என கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் கற்பிக்கின்றன; இவ்வாறு கற்பிப்பதன் மூலம், பூமியைக் குறித்து கடவுளுக்கு எந்த நோக்கமும் இல்லை என்று அவை அர்த்தப்படுத்துகின்றன. ஆனால் “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று ஜெபிக்கும்படியே இயேசு நமக்கு கற்பித்தார். (மத்தேயு 6:10) வன்முறையாலும், அநீதியாலும், வியாதியாலும், மரணத்தாலும் பீடிக்கப்பட்டுள்ள இன்றைய பூமியில் யெகோவாவின் சித்தம் முழுமையாக நிறைவேறி வருவதாக யாராவது ஒரு பேச்சுக்குக்கூட சொல்ல முடியுமா? முடியவே முடியாது! ஆகையால், கடவுளுடைய சித்தம் பூமியில் நடந்தேறுவதற்காக நாம் ஊக்கமாக ஜெபிக்க வேண்டும்; இந்த ஜெபம் அப்போஸ்தலன் பேதுரு பதிவு செய்த பின்வரும் வாக்குறுதிக்கு இசைவாக இருக்கும்: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் [கிறிஸ்துவினால் ஆளப்படும் மேசியானிய ராஜ்ய அரசாங்கம்] புதிய பூமியும் [நீதியுள்ள மனித சமுதாயம்] உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.”—2 பேதுரு 3:13.
17. பூமியைக் குறித்ததில் யெகோவாவின் நோக்கம் என்ன?
17 ஒரு நோக்கத்தோடுதான் யெகோவா இந்தப் பூமியை படைத்தார். “வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை” என பதிவு செய்யுமாறு தீர்க்கதரிசியான ஏசாயாவை அவர் ஏவினார். (ஏசாயா 45:18) முதல் மனித தம்பதியை கடவுள் ஒரு பரதீஸான தோட்டத்தில் வைத்து, “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்”துங்கள் என்று கட்டளையிட்டார். (ஆதியாகமம் 1:27, 28; 2:15) யெகோவாவின் பேரரசுரிமைக்கு சந்தோஷமாக கீழ்ப்படிகிற பரிபூரண நீதிமான்கள் பூமியில் குடியிருக்க வேண்டும் என்பதும் கிறிஸ்து வாக்குறுதியளித்த பரதீஸில் அவர்கள் என்றென்றுமாக வாழ வேண்டும் என்பதுமே சிருஷ்டிகரின் நோக்கம்; இது தெள்ளத் தெளிவாக இருக்கிறது.—சங்கீதம் 37:11, 29; லூக்கா 23:43.
18, 19. (அ) பூமியில் கடவுளுடைய சித்தம் முழுமையாக நிறைவேற்றப்படும் முன் என்ன நடந்தேற வேண்டும்? (ஆ) இயேசு கற்றுக்கொடுத்த மாதிரி ஜெபத்தின் மற்ற என்ன அம்சங்கள் அடுத்த கட்டுரையில் ஆராயப்படும்?
18 யெகோவாவின் பேரரசுரிமையை எதிர்க்கும் ஆண்களும் பெண்களும் இவ்வுலகில் குடியிருக்கும் வரை பூமியைக் குறித்த அவருடைய சித்தம் முழுமையாக நிறைவேறாது. ‘பூமியை கெடுக்கிறவர்களை கெடுப்பதற்கு’ கிறிஸ்துவின் தலைமையில் வல்லமைமிக்க ஆவி சேனைகளை கடவுள் பயன்படுத்துவார். சாத்தானின் பொல்லாத ஒழுங்குமுறை—அதன் பொய் மதம், ஊழல்மிக்க அரசியல், பேராசையும் அநியாயமும் நிறைந்த வர்த்தகம், நாசகர இராணுவம் உட்பட—அனைத்துமே நித்தியத்திற்கும் பூண்டோடு அழிக்கப்படும். (வெளிப்படுத்துதல் 11:18; 18:21; 19:1, 2, 11-18) யெகோவாவின் பேரரசுரிமை நியாயநிரூபணம் செய்யப்படும், அவருடைய பெயர் பரிசுத்தமாக்கப்படும். ஆக, “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று விண்ணப்பிக்கையில் மேற்குறிப்பிட்ட அனைத்தும் நடக்க வேண்டும் என்றே நாம் ஜெபிக்கிறோம்.—மத்தேயு 6:9, 10.
19 என்றாலும், நம்முடைய தனிப்பட்ட காரியங்களுக்காகவும் ஜெபிக்கலாம் என்பதை இயேசு தம்முடைய மாதிரி ஜெபத்தில் காண்பித்தார். ஜெபத்தின் இந்த அம்சங்களை அடுத்து வரும் கட்டுரை ஆராயும்.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! என்ற புத்தகத்தில் 6-ம் அதிகாரத்தை காண்க.
மறுபார்வைக்காக
• யெகோவாவை “எங்கள் பிதாவே” என்று நாம் அழைப்பது ஏன் பொருத்தமானது?
• யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதற்காக நாம் ஜெபிப்பது ஏன் மிக மிக முக்கியமானது?
• கடவுளுடைய ராஜ்யம் வருவதற்காக நாம் ஏன் ஜெபிக்கிறோம்?
• கடவுளுடைய சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்பட வேண்டும் என்று நாம் ஜெபிப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
[பக்கம் 9-ன் படம்]
பரிசேயர்களின் பகட்டான ஜெபங்களிலிருந்து இயேசுவின் ஜெபங்கள் பெருமளவு வேறுபட்டன
[பக்கம் 10-ன் படம்]
கடவுளுடைய ராஜ்யம் வருவதற்காகவும், அவருடைய பெயர் பரிசுத்தப்படுவதற்காகவும், அவருடைய சித்தம் செய்யப்படுவதற்காகவும் கிறிஸ்தவர்கள் ஜெபிக்கிறார்கள்