கடவுள் மீதுள்ள அன்பை காட்டும் வழிகள்
பள்ளிப் பாடங்களை படிப்பது போல கடவுளைப் பற்றி படித்தால் மட்டும் அவர் மீதுள்ள அன்பு வளர்ந்து விடாது. கடவுளுடைய ஆள்தன்மையைப் பற்றி ஒருவருக்கு நன்கு பரிச்சயம் ஆக ஆகத்தான் கடவுள் மீதுள்ள உண்மையான அன்பு வளரும்; அதோடு, கடவுள் எதை நேசிக்கிறார், எதை வெறுக்கிறார், எதை முக்கியமாக கருதுகிறார், எதை எதிர்பார்க்கிறார் என்பதையெல்லாம் ஒருவர் தொடர்ந்து தெரிந்து கொள்ளும்போது கடவுள் மீதுள்ள அவருடைய அன்பு இன்னும் பலப்படும்; இது உண்மை என்பதற்கு உலகெங்குமுள்ள கடவுளுடைய ஊழியர்கள் சாட்சி பகர்கின்றனர்.
யெகோவா தம்முடைய வார்த்தையான பைபிளை நமக்கு அன்போடு அளித்திருக்கிறார்; அதில் தம்மைப் பற்றி வெளிப்படுத்தியிருக்கிறார். பல்வேறு சூழ்நிலைகளை அவர் கையாண்ட விதத்தைப் பற்றி அதிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். அன்பான ஒருவரிடமிருந்து வரும் கடிதத்தை வாசிக்கும்போது மனதிற்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்குமோ, அதைப் போலவே பைபிளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள யெகோவாவுடைய ஆளுமையின் புதிய அம்சங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளும்போது நாம் மனமகிழ்ச்சியடைகிறோம்.
என்றாலும், கடவுளைப் பற்றி கற்றுக்கொள்கிற எல்லாருமே அவர் மீது அன்பு செலுத்த ஆரம்பிப்பதில்லை என்பதை நாம் ஊழியத்தில் அடிக்கடி பார்க்கிறோம். போற்றுதல் காண்பிக்காத சில யூதர்களிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, . . . உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்.” (யோவான் 5:39, 42) யெகோவாவின் அன்பான செயல்களைப் பற்றி சிலர் வருடக்கணக்காக கற்றுக்கொண்டே இருந்தாலும், அவர்களுக்கு அவர் மீது அன்பே பிறப்பதில்லை. ஏன்? கற்றுக்கொள்ளும் காரியங்களிலுள்ள உண்மைகளை அவர்கள் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்காததுதான் அதற்குக் காரணம். இதற்கு நேர்மாறாக, நம்மோடு பைபிளைப் படிக்கும் நல்மனமுள்ள லட்சக்கணக்கானவர்கள் கடவுள் மீதுள்ள தங்களுடைய அன்பு தொடர்ந்து அதிகரிப்பதைக் காண்கிறார்கள். ஏன்? ஏனென்றால், நம்மைப் போலவே அவர்களும் ஆசாபின் உதாரணத்தை பின்பற்றுகிறார்கள். எவ்விதத்தில்?
போற்றுதலோடு தியானியுங்கள்
யெகோவா மீதுள்ள அன்பை தன் இருதயத்தில் வளர்க்க ஆசாப் உறுதிபூண்டார். அவர் இப்படி எழுதினார்: “என் இருதயத்தில் சிந்தனை செய்கிறேன் . . . யெகோவாவின் செயல்களை நினைத்துப் பார்ப்பேன்; உம்முடைய பூர்வ காலத்து அதிசயங்களை நினைவுகூருவேன். உமது கிரியைகளைப் பற்றியெல்லாம் நிச்சயம் தியானிப்பேன், உமது செயல்களை சிந்தித்துப் பார்ப்பேன்.” (சங்கீதம் 77:6, 11, 12, NW) இந்த சங்கீதக்காரன் செய்தது போலவே, யெகோவாவின் வழிகளை ஒருவர் சிந்தித்துப் பார்க்கும்போது கடவுள் மீதுள்ள அன்பு அவருடைய இருதயத்திலே வளரும்.
மேலும், யெகோவாவுடைய சேவையில் நமக்கு கிடைத்திருக்கும் அருமையான அனுபவங்களை நினைவுபடுத்திப் பார்க்கும்போதும் அவரோடுள்ள நம் உறவு பலப்படும். நாம் தேவனுடைய “உடன் வேலையாட்களாயிருக்கிறோம்” என அப்போஸ்தலன் பவுல் சொன்னார்; ஆம், சக வேலையாட்களிடையே வளரக்கூடிய நட்பு மிகவும் விசேஷமானது. (1 கொரிந்தியர் 3:9) யெகோவா மீது அன்பு வைத்திருப்பதை நாம் வெளிக்காட்டும்போது, அதை அவர் உண்மையிலேயே மதிக்கிறார்; அது அவருடைய இருதயத்தை சந்தோஷப்படுத்தவும் செய்கிறது. (நீதிமொழிகள் 27:11) அதுமட்டுமல்ல, ஏதோவொரு பிரச்சினையைக் குறித்து உதவி கேட்டு நாம் யெகோவாவை அணுகும்போது அதைத் தீர்க்க அவர் நமக்கு உதவி செய்கையில், அவர் நம்மோடு இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்வதால் அவர் மீதுள்ள நம் அன்பு ஆழமாகிறது.
உணர்ச்சிகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கையில் இரு நபர்களுக்கிடையே நட்பு வளருகிறது. அதேபோல, நாம் யெகோவாவுக்கு ஏன் விசுவாசமாக இருக்கிறோம் என்பதை மனந்திறந்து அவரிடம் சொல்லும்போது அவர் மீதுள்ள நம் அன்பு பலப்படும். அப்போது, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக” என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு இணங்க நடப்பவர்களாக இருப்போம். (மாற்கு 12:30) யெகோவாவை நம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு பலத்தோடும் தொடர்ந்து அன்புகூருவதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள நாம் என்ன செய்யலாம்?
யெகோவாவை நம் முழு இருதயத்தோடு அன்புகூருவது
அடையாளப்பூர்வ இருதயத்தை, அதாவது உள்ளான ஆள்தன்மையை—நமது மனப்பான்மை, விருப்பங்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றை—பற்றி வேதவாக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆகவே, யெகோவாவை நம் முழு இருதயத்தோடு அன்புகூருவது என்றால், எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை பிரியப்படுத்தவே நாம் விரும்புகிறோம் என அர்த்தம். (சங்கீதம் 86:11) நம்முடைய ஆள்தன்மையை அவருக்குப் பிரியமான விதத்தில் மாற்றிக்கொள்வதன் மூலம் அப்படிப்பட்ட அன்பு நமக்கு இருப்பதை காண்பிக்கிறோம். “தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்”கொள்வதன் மூலம் கடவுளைப் போல இருக்க நாம் பிரயாசப்படுகிறோம்.—ரோமர் 12:9.
கடவுள் மீதுள்ள நம் அன்பு, எல்லா காரியங்களையும் குறித்த நம்முடைய உணர்ச்சிகளை பாதிக்கிறது. உதாரணத்திற்கு, நம்முடைய உலகப்பிரகாரமான வேலை நமக்கு படு சுவாரஸ்யமாக இருக்கலாம் அல்லது அவ்வேலையிலேயே நாம் மூழ்கிப் போய்விடலாம். இப்போது கேள்வி என்னவென்றால், நம் இருதயம் அந்த வேலையில்தான் இருக்கிறதா? இல்லை. நாம் யெகோவாவை முழு இருதயத்தோடு அன்புகூருவதால், முதலில் நாம் அவருக்குத்தான் ஊழியக்காரர்கள். அதேபோல, நம் பெற்றோர், நம் மணத்துணை, நம் முதலாளி ஆகியோரை நாம் பிரியப்படுத்த விரும்பினாலும், முதலாவதாக நாம் யெகோவாவை பிரியப்படுத்தவே முயற்சி செய்கிறோம்; இவ்வாறு அவரை நாம் முழு இருதயத்தோடு நேசிப்பதை காட்டுகிறோம். என்ன இருந்தாலும், நம்முடைய இருதயத்தில் முதலிடத்தைப் பெறும் தகுதி அவர் ஒருவருக்குத்தானே இருக்கிறது!—மத்தேயு 6:24; 10:37.
யெகோவாவை நம் முழு ஆத்துமாவோடு அன்புகூருவது
வேதவாக்கியங்களிலுள்ள “ஆத்துமா” என்ற வார்த்தை ஒரு முழு நபரைக் குறிக்கிறது, சில இடங்களில், அந்த வார்த்தை நம்முடைய உயிரைக் குறிக்கிறது. ஆகவே, முழு ஆத்துமாவோடு யெகோவா மீது அன்புகூருவது என்பது, அவரை துதிப்பதற்காகவும் அவர் மீதுள்ள அன்பை நிரூபிப்பதற்காகவும் நமது ஜீவனை பயன்படுத்துவதை அர்த்தப்படுத்துகிறது.
உண்மைதான், வாழ்க்கையில் வேறு பல நாட்டங்களும் நமக்கு இருக்கலாம்; உதாரணத்திற்கு, ஒரு வேலையை கற்றுக்கொள்வது, ஒரு தொழிலை நிர்வகிப்பது, அல்லது பிள்ளைகளை பெற்று வளர்ப்பது போன்ற நாட்டங்கள் இருக்கலாம். அதே நேரத்தில், யெகோவாவுடைய வழியில் காரியங்களை செய்வதன் மூலமாகவும், நம் வாழ்க்கையில் மற்ற காரியங்களை அவற்றிற்குரிய இடத்தில் வைத்து, “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடு”வதன் மூலமாகவும் நாம் யெகோவாவை முழு ஆத்துமாவோடு அன்புகூருகிறோம் என்பதை நிரூபிக்கிறோம். (மத்தேயு 6:33) முழு ஆத்துமாவோடு சேவிப்பது வைராக்கியமாக இருப்பதையும் அர்த்தப்படுத்துகிறது. ராஜ்ய செய்தியை வைராக்கியமாக பிரசங்கிப்பது, சபைக் கூட்டங்களில் மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் குறிப்புகளை சொல்வது, நம்முடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு உதவுவது ஆகியவற்றின் மூலம் நாம் யெகோவா மீது அன்புகூருவதை காண்பிக்கிறோம். எல்லா காரியங்களிலும் தொடர்ந்து ‘தேவனுடைய சித்தத்தின்படியே மனப்பூர்வமாய் செய்கிறோம்.’—எபேசியர் 6:6.
இயேசு தம்மைத் தாமே சொந்தம் கைவிடுவதன் மூலம் முழு ஆத்துமாவோடு கடவுள் மீது அன்புகூர்ந்ததை வெளிக்காட்டினார். கடவுளுடைய சித்தத்தை செய்வதற்கு முதலிடம் கொடுத்த பிறகுதான் தமது தனிப்பட்ட தேவைகளுக்கு கவனம் செலுத்தினார். அவருடைய மாதிரியை பின்பற்றும்படி நமக்கு அழைப்புக் கொடுத்தார். “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, [“சொந்தம் கைவிட்டு,” NW] தன் சிலுவையை [“கழுமரத்தை,” NW] எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” என்று சொன்னார். (மத்தேயு 16:24, 25) நம்மை நாமே சொந்தம் கைவிடுவதென்றால், நம்மையே ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று அர்த்தப்படுத்துகிறது. பைபிள் காலங்களில் ஒரு இஸ்ரவேலன் தன்னுடைய எஜமானனை மிகவும் நேசித்தால், நிரந்தர அடிமையாக அவரிடமே தங்கிவிட மனமுவந்து ஒப்புக்கொள்வான்; அதைப் போலவே, நாம் கடவுளை மிகவும் நேசிப்பதால் நம்மையே முழுமையாக அவரிடம் ஒப்படைத்து விடுகிறோம். (உபாகமம் 15:16, 17) நம் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பது அவர் மீது நாம் அன்புகூருகிறோம் என்பதற்கு மறுக்க முடியாத அத்தாட்சி அளிக்கிறது.
யெகோவாவை நம் முழு மனதோடு அன்புகூருவது
யெகோவாவை நம் முழு மனதோடு அன்புகூருவது, அவருடைய ஆளுமையையும் நோக்கங்களையும் அவர் தேவைப்படுத்துபவற்றையும் புரிந்துகொள்ள நாம் எல்லா முயற்சிகளையும் எடுப்பதை அர்த்தப்படுத்துகிறது. (யோவான் 17:3; அப்போஸ்தலர் 17:11) யெகோவா மீது அன்பை வளர்த்துக்கொள்ள மற்றவர்களுக்கு உதவும் வேலையில் நம்முடைய எல்லா திறமைகளையும் முழுமையாக பயன்படுத்துவதன் மூலமும், நாம் போதிக்கின்ற முறையில் முன்னேற்றம் செய்வதன் மூலமும் யெகோவா மீதுள்ள நம் அன்பை வெளிக்காட்டுகிறோம். “செயல்படுவதற்கு உங்கள் மனதை தயாராக்குங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு உந்துவித்தார். (1 பேதுரு 1:13, NW) அதுமட்டுமல்ல, மற்றவர்களுடைய நலனில், குறிப்பாக நம் சக ஊழியர்களுடைய நலனில் அக்கறை காண்பிக்க முயற்சி செய்கிறோம். அவர்களுடைய சூழ்நிலையை நன்கு அறிந்து வைத்திருக்கிறோம்; அதோடு, அவர்களை எப்போது பாராட்ட வேண்டும், அவர்களுக்கு எப்போது ஆறுதல் சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுகிறோம்.
மன ரீதியில் யெகோவாவுக்கு கீழ்ப்படிவதன் மூலமும் நாம் அவரை முழு மனதோடு நேசிப்பதை காண்பிக்கிறோம். காரியங்களை அவருடைய கண்ணோட்டத்தில் பார்க்க முயலுகிறோம், தீர்மானங்கள் எடுக்கையிலும் அவரை நினைத்துக்கொள்கிறோம், அதோடு அவருடைய வழிதான் சிறந்தது என்றும் நம்புகிறோம். (நீதிமொழிகள் 3:5, 6; ஏசாயா 55:9; பிலிப்பியர் 2:3-7) ஆனால், கடவுளிடம் தொடர்ந்து அன்புகூருகையில் நம்முடைய பலத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும்?
யெகோவாவை நம் முழு பலத்தோடு அன்புகூருவது
கிறிஸ்தவ சபைகளிலுள்ள அநேக இளைஞர்கள் யெகோவாவை துதிப்பதில் தங்கள் பலத்தை பயன்படுத்துகிறார்கள். (நீதிமொழிகள் 20:29; பிரசங்கி 12:1) ஏராளமான கிறிஸ்தவ இளைஞர்கள் யெகோவாவை முழு பலத்தோடு அன்புகூருவதை காட்டிவரும் ஒரு வழி, பயனியர் சேவையில் அதாவது முழுநேர ஊழியத்தில் பங்கு கொள்வதாகும். அநேக தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றவுடன், ஊழியத்திற்கு கிளம்பி விடுகிறார்கள். உண்மையுள்ள மூப்பர்கள், தங்கள் சொந்த குடும்பத்தின் நலனில் அக்கறை காட்டுவதோடு சபையிலுள்ள சகோதர சகோதரிகளின் வீடுகளுக்கு சென்று மேய்ப்பு சந்திப்பு செய்து, முழு பலத்தோடு யெகோவாவை நேசிப்பதை காண்பிக்கிறார்கள். (2 கொரிந்தியர் 12:15) யெகோவா தம்மீது நம்பிக்கை வைக்கிறவர்களுக்கு பலத்தை கொடுக்கிறார்; அதன் விளைவாக அவர்கள் தங்களிடமுள்ள பலத்தையெல்லாம் பயன்படுத்தி அவரைத் துதிக்கிறார்கள்; இப்படி செய்வதன் மூலம் அவர் மீதுள்ள தங்கள் அன்பை வெளிக்காட்டுகிறார்கள்.—ஏசாயா 40:29; எபிரெயர் 6:11, 12.
அன்பை சரியான விதத்தில் வளர்த்தால், அது கண்டிப்பாக வளரும். எனவே, தியானிப்பதற்கு நாம் தொடர்ந்து நேரத்தை ஒதுக்குகிறோம். நமக்காக யெகோவா என்ன செய்திருக்கிறார், நம்முடைய வணக்கத்தைப் பெற்றுக்கொள்ள அவர் ஏன் தகுதியானவர் என்பதைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்கிறோம். “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளை” பெற்றுக்கொள்கிற தகுதி ஆதாமின் அபூரண சந்ததியாரான நமக்கு ஒருபோதும் இல்லையென்றாலும், யெகோவா மீது அன்பு இருப்பதை நமது ஒவ்வொரு மூச்சிலும் நம்மால் காண்பிக்க முடியும். அதையே தொடர்ந்து செய்வோமாக!—1 கொரிந்தியர் 2:9.
[பக்கம் 20-ன் படம்]
கடவுள் மீதுள்ள அன்பை செயல்களில் வெளிக்காட்டுகிறோம்