வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
பூர்வ இஸ்ரவேலில் லேவியருக்கு எவ்வித சொத்துரிமையும் கொடுக்கப்படவில்லை; அப்படியானால், எரேமியா 32:7-ல் குறிப்பிட்டுள்ளபடி லேவியனான அனாமெயேல் தன்னுடைய சித்தப்பா மகனான எரேமியாவுக்கு எப்படி ஒரு நிலத்தை விற்க முடிந்தது?
லேவியரைக் குறித்து ஆரோனிடம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “அவர்களுடைய [இஸ்ரவேலர்களுடைய] தேசத்தில் உனக்கு சொத்துரிமை ஏதுமில்லை, அவர்களிடையே உனக்கு எந்தப் பங்கும் இல்லை.” (எண்ணாகமம் 18:20, NW) என்றபோதிலும், வாக்குப்பண்ணப்பட்ட தேசமெங்கும் ஆங்காங்கே இருந்த 48 பட்டணங்களும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் லேவியருக்கென்று ஒதுக்கப்பட்டன. ‘ஆசாரியரான ஆரோனுடைய குமாரருக்கென்று’ கொடுக்கப்பட்ட பட்டணங்களில் எரேமியாவின் சொந்த ஊரான ஆனதோத்தும் ஒன்று.—யோசுவா 21:13-19; எண்ணாகமம் 35:1-8; 1 நாளாகமம் 6:54, 60.
லேவியருக்கு சொந்தமாக இருந்த நிலபுலன்களை ‘மீட்டுக்கொள்வதைக்’ குறித்து யெகோவா சில கட்டளைகளை கொடுத்தார்; அதை லேவியராகமம் 25:32-34-ல் நாம் பார்க்கிறோம். ஆகவே, லேவி கோத்திரத்தை சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும், தங்களுக்கென நியமிக்கப்பட்ட நிலத்தை வைத்துக்கொள்ளவோ, பயன்படுத்தவோ, விற்கவோ உரிமை இருந்ததென்பது இதிலிருந்து தெரிகிறது. அப்படியானால், நிலபுலன்களை விற்பதும், மீட்டுக்கொள்வதும்கூட இதில் உட்படுகிறது.a பல விதங்களில், மற்ற இஸ்ரவேல் கோத்திரத்தாரைப் போலவே லேவியரும் சொந்த நிலங்களை வைத்து, அவற்றை பயன்படுத்தினார்கள்.
லேவியருக்கு சொந்தமான அத்தகைய நிலங்கள் வழிவழியாக வந்த சந்ததியாருக்கு குடும்பச் சொத்து போல ஒருவேளை கொடுக்கப்பட்டிருக்கலாம். என்றாலும், லேவியர்கள் மட்டுமே அத்தகைய நிலங்களை ‘மீட்டுக்கொள்ள’ அனுமதி பெற்றிருந்தார்கள். அதுமட்டுமல்ல, பட்டணத்திற்குள் இருந்த நிலபுலன்களை மட்டும்தான் அவர்களால் விற்கவும் மீட்கவும் முடிந்தது. ‘அவர்களுடைய பட்டணங்களைச் சூழ்ந்திருந்த மேய்ச்சல் நிலத்தை’ விற்க அவர்களுக்கு அனுமதியில்லை; காரணம்? அந்நிலம் ‘அவர்களுக்கு என்றென்றும் நிலைத்திருக்க வேண்டிய உடைமையாக’ இருந்தது.—லேவியராகமம் 25:32, 34, NW.
ஆகையால், அனாமெயேலிடமிருந்து எரேமியா மீட்டுக்கொண்ட நிலமானது, மீட்கும் உரிமை பெற்ற ஒரு நிலமாக இருந்திருக்க வேண்டும். அது, பட்டணத்திற்குள் இருந்த நிலமாக இருந்திருக்கலாம். ‘அந்த நிலம்’ அனாமெயேலுக்கு சொந்தமாக இருந்ததென்றும், அதை ‘மீட்கும்’ உரிமை எரேமியாவுக்கு இருந்ததென்றும் யெகோவா தாமே ஊர்ஜிதப்படுத்தினார். (எரேமியா 32:6, 7) கொஞ்ச காலம் நாடுகடத்தப்பட்ட பிறகு, இஸ்ரவேலர் பாபிலோனிலிருந்து திரும்பி வந்து தங்கள் நிலத்தை மீட்டுக் கொள்வார்கள் என்ற தம்முடைய வாக்குறுதியை வலியுறுத்துவதற்காக, எரேமியா நிலத்தை மீட்பதைப் பற்றிய விஷயத்தை யெகோவா அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தினார்.—எரேமியா 32:13-15.
ஆனதோத்திலிருந்த நிலத்தை ஏதோ தகாத முறையில் அனாமெயேல் பெற்றுக்கொண்டதாக எந்தவொரு குறிப்பும் இல்லை. அதுமட்டுமல்ல, அந்நிலத்தை வாங்கிக்கொள்ளும்படி எரேமியாவிடம் சொன்னதன் மூலம் அவர் யெகோவாவின் சட்டத்தை மீறினார் என சொல்வதற்கோ, எரேமியா தனக்கிருந்த மீட்கும் உரிமையை தவறாக பயன்படுத்தி அந்த நிலத்தை வாங்கினார் என சொல்வதற்கோ எவ்வித அத்தாட்சியும் இல்லை.—எரேமியா 32:8-15.
[அடிக்குறிப்பு]
a பொ.ச. முதல் நூற்றாண்டிலிருந்த லேவியனான பர்னபா, தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை விற்று, எருசலேமிலிருந்த ஏழை சீஷர்களுக்கு உதவ அந்தப் பணத்தை நன்கொடையாக அளித்தார். அந்த நிலம் பாலஸ்தீனாவிலோ சீப்புருவிலோ இருந்திருக்கலாம். அல்லது சவ அடக்கம் செய்வதற்காக எருசலேம் பகுதியில் பர்னபா வாங்கியிருந்த நிலமாக அது இருந்திருக்கலாம்.—அப்போஸ்தலர் 4:34-37.