உங்களை உட்படுத்தும் ஓர் ஆசரிப்பு
இயேசு கிறிஸ்து பூமியில் வாழ்ந்தபோது, கடவுளுக்கு மகிமை சேர்க்கும் ஓர் ஆசரிப்பை ஆரம்பித்து வைத்தார். தமது சீஷர்கள் அனுசரிக்க வேண்டுமென அவர் நேரடியாக கட்டளையிட்ட ஒரே மத ஆசரிப்பு இதுவே. இது கர்த்தருடைய இராப்போஜனம் என அழைக்கப்படுகிறது.
இந்த ஆசரிப்புக்கு வழிநடத்திய சம்பவங்களின்போது நீங்கள் அங்கிருந்து அவற்றை பார்ப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். யூத பஸ்கா பண்டிகையை ஆசரிப்பதற்காக இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் எருசலேமில் ஒரு மாடி அறையில் கூடி வந்திருக்கிறார்கள். நெருப்பில் சுடப்பட்ட ஆட்டுக்குட்டி, கசப்பான கீரை, புளிப்பில்லாத அப்பம், சிகப்பு திராட்சரசம் ஆகியவை அடங்கிய வழக்கமான பஸ்கா போஜனத்தை அவர்கள் இப்பொழுது சாப்பிட்டு முடித்திருக்கிறார்கள். விசுவாச துரோகியான அப்போஸ்தலன் யூதாஸ் காரியோத்து வெளியேற்றப்பட்டிருக்கிறான், சீக்கிரத்தில் தனது எஜமானரை அவன் காட்டிக்கொடுக்கப் போகிறான். (மத்தேயு 26:17-25; யோவான் 13:21, 26-30) உண்மையுள்ள 11 அப்போஸ்தலர்கள் மட்டுமே இயேசுவுடன் இருக்கிறார்கள். அவர்களில் மத்தேயுவும் ஒருவர்.
கண்கண்ட சாட்சியான மத்தேயுவின் விவரப்பதிவின்படி, கர்த்தருடைய இராப்போஜனத்தை இயேசு இப்படி ஆரம்பித்து வைக்கிறார்: “இயேசு [புளிப்பில்லாத] அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.”—மத்தேயு 26:26-28.
கர்த்தருடைய இராப்போஜனத்தை இயேசு ஏன் ஆரம்பித்து வைத்தார்? அதைச் செய்தபோது, எதற்காக புளிப்பில்லாத அப்பத்தையும் சிவந்த திரட்சரசத்தையும் பயன்படுத்தினார்? சின்னங்களாக விளங்கும் இந்த அப்பத்தையும் திராட்சரசத்தையும் கிறிஸ்துவை பின்பற்றுகிற அனைவரும் புசிக்க வேண்டுமா? இந்த இராப்போஜனத்தை எப்பொழுதெல்லாம் ஆசரிக்க வேண்டும்? இது உங்களுக்கு உண்மையிலேயே அர்த்தமுள்ளதா?