யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
யாத்திராகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
‘கொடுங்கோல் ஆட்சியில் அடிமைப்படுத்தப்பட்ட’ ஜனங்கள் விடுதலை பெறுவதைப் பற்றிய நிஜக் கதையே இப்புத்தகம். (யாத்திராகமம் 1:13, NW) ஒரு தேசத்தின் பிறப்பைப் பற்றி சிலிர்ப்பூட்டும் விதத்தில் எடுத்துரைக்கும் ஒரு பதிவாகவும் இது உள்ளது. பிரமிப்பூட்டும் அற்புதங்கள், தலைசிறந்த சட்டங்கள், ஆசரிப்புக்கூடார கட்டுமானம் ஆகியவையே இப்புத்தகத்தின் மனங்கவரும் சில அம்சங்கள். சுருங்கச் சொன்னால், இவையே பைபிளிலுள்ள யாத்திராகம புத்தகத்தின் சாராம்சம்.
இப்புத்தகம் எபிரெய தீர்க்கதரிசியாகிய மோசேயால் எழுதப்பட்டது. 145 ஆண்டுகளுக்கும் அதிகமான காலப் பகுதியில், அதாவது பொ.ச.மு. 1657-ல் யோசேப்பு மரித்தது முதல் பொ.ச.மு. 1512-ல் ஆசரிப்புக்கூடாரம் கட்டி முடிக்கப்பட்டது வரையான காலப் பகுதியில் நடந்த இஸ்ரவேலரின் சரித்திரத்தை இது விவரிக்கிறது. இருந்தாலும், இது வெறும் சரித்திர நூல் அல்ல. கடவுளுடைய வார்த்தை, அதாவது மனிதகுலத்திற்கு கடவுள் கொடுத்த செய்தி அடங்கிய ஒரு நூலாகும். ஆகவே, இப்புத்தகம் ‘ஜீவனும் வல்லமையும் உள்ளது.’ (எபிரெயர் 4:12) அப்படியானால், யாத்திராகம புத்தகம் உண்மையிலேயே நமக்கு அர்த்தமுள்ள ஒரு புத்தகம்.
‘அவர்கள் முறையிடும் சத்தத்தை தேவன் கேட்டார்’
எகிப்தில் வாழ்ந்து வரும் யாக்கோபின் சந்ததியாருடைய எண்ணிக்கை மளமளவென்று பெருகுவதால் ராஜாவின் கட்டளைப்படி அவர்கள் அடிமைகளாக துன்புறுத்தப்படுகிறார்கள். இஸ்ரவேலருக்கு பிறக்கும் ஆண் குழந்தைகளை கொலை செய்யவும் பார்வோன் கட்டளையிடுகிறான். மூன்று மாத குழந்தையாகிய மோசே இப்படிப்பட்ட ஒரு கொலைபாதகத்திலிருந்து உயிர் தப்புகிறார். இவரை பார்வோனின் மகள் தத்தெடுக்கிறாள். மோசே அரச குடும்பத்தில் வளர்க்கப்பட்டாலும், 40-ம் வயதில் தன் இனத்தார் பக்கம் சேர்ந்து கொள்கிறார்; ஓர் எகிப்தியனை கொலையும் செய்து விடுகிறார். (அப்போஸ்தலர் 7:23, 24) அங்கிருந்து ஓடிப்போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதால் அவர் மீதியான் தேசத்திற்கு போகிறார். அங்கே அவர் திருமணம் செய்துகொண்டு, ஆடு மேய்க்கும் தொழில் செய்து தன் வாழ்க்கையை ஓட்டுகிறார். அந்த சமயத்தில்தான் அற்புதமாய் பற்றியெரியும் முட்செடியின் மத்தியிலிருந்து யெகோவா பேசுகிறார்; இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் பொறுப்பை மோசேக்கு அளித்து அவரை மீண்டும் எகிப்திற்கே செல்லும்படி சொல்கிறார். மோசேயின் சார்பாக பேசுவதற்கு அவரது சகோதரனாகிய ஆரோன் நியமிக்கப்படுகிறார்.
வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்:
3:1—எத்திரோ எப்படிப்பட்ட ஆசாரியராக இருந்தார்? முற்பிதாக்களின் காலத்தில் குடும்பத் தலைவரே தன் குடும்பத்திற்கு ஆசாரியராக இருந்தார். ஆகவே எத்திரோ மீதியானிய கோத்திரத்து குடும்பத் தலைவராக இருந்திருக்க வேண்டும். இந்த மீதியானியர், கேத்தூராள் மூலம் ஆபிரகாமுக்குப் பிறந்த சந்ததியார் ஆவர்; எனவே யெகோவாவின் வணக்கத்தைப் பற்றி அவர்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம்.—ஆதியாகமம் 25:1, 2.
4:11—‘ஊமையனையும் செவிடனையும் குருடனையும்’ யெகோவா உண்டாக்கினார் என என்ன கருத்தில் சொல்லப்படுகிறது? சிலர் குருடாயும் ஊமையாயும் ஆகிவிடுவதற்கு சில சமயங்களில் யெகோவா காரணமாக இருந்தாலும் எல்லாருடைய விஷயத்திலும் அப்படியல்ல. (ஆதியாகமம் 19:11; லூக்கா 1:20-22, 62-64) சுதந்தரிக்கப்பட்ட பாவத்தின் விளைவுகளே அவை. (யோபு 14:4; ரோமர் 5:12) என்றாலும், இத்தகைய நிலைமையை கடவுள் அனுமதித்திருப்பதால் ஊமையனையும் செவிடனையும் குருடனையும் ‘உண்டாக்கியது’ நான்தான் என்று அவரால் சொல்ல முடியும்.
4:16—ஆரோனுக்கு மோசே எப்படி “தேவனாக” இருந்தார்? மோசே கடவுளுடைய பிரதிநிதியாக இருந்ததால் ஆரோனுக்கு “தேவனாக” ஆனார்; மோசேக்கு பிரதிநிதியாக இருந்து அவர் சார்பாக பேசியவரே இந்த ஆரோன்.
நமக்குப் பாடம்:
1:7, 14. எகிப்தில் தம்முடைய ஜனங்கள் கொடுமைப்படுத்தப்பட்ட போது யெகோவா அவர்களை ஆதரித்தார். அவ்வாறே தம்முடைய நவீன கால சாட்சிகளையும், அவர்கள் கடுமையான துன்புறுத்தலை எதிர்ப்படுகையிலும்கூட காத்து ஆதரிக்கிறார்.
1:17-21. யெகோவா நம்மை நினைவில் வைத்து ‘நன்மை’ செய்கிறார்.—நெகேமியா 13:31.
3:7-10. யெகோவா தம்முடைய மக்களின் கூக்குரலுக்கு உடனடியாக செவிசாய்க்கிறார்.
3:14. யெகோவா தாம் சொன்னபடியே தம் நோக்கங்களை நிறைவேற்றுகிறார். ஆகவே, பைபிள் அடிப்படையிலான நமது நம்பிக்கைகளையும் அவர் நிறைவேற்றுவார் என்பதில் உறுதியோடிருக்கலாம்.
4:10, 13. பேசுவதற்கு தனக்கு கொஞ்சமும் திறமையில்லை என மோசே சொன்னார். கடவுளுடைய துணை கண்டிப்பாக அவருக்கு இருக்கும் என்று சொல்லப்பட்டபோதிலும்கூட, பார்வோனிடம் பேசுவதற்கு வேறு யாரையாவது அனுப்பும்படி கெஞ்சினார். இருந்தாலும், மோசேயை யெகோவா பயன்படுத்தினார், கொடுத்த வேலையை நிறைவேற்றுவதற்கு தேவையான ஞானத்தையும் பலத்தையும் அவருக்கு கொடுத்தார். அதுபோல நாமும் நம்முடைய குறைபாடுகளையே சிந்தித்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக, யெகோவாவை சார்ந்திருந்து, பிரசங்கித்து சீஷராக்கும் வேலையை உண்மையோடு நிறைவேற்றுவோமாக.—மத்தேயு 24:14; 28:19, 20.
பிரமிப்பூட்டும் அற்புதங்கள் மூலம் விடுதலை
மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் சென்று, வனாந்தரத்திலே யெகோவாவுக்கு பண்டிகை கொண்டாடுவதற்காக இஸ்ரவேலரை அனுப்பும்படி கேட்கிறார்கள். எகிப்தின் அரசனோ அனுப்ப முடியாது என பிடிவாதமாக சொல்கிறான். மோசேயை பயன்படுத்தி ஒன்றன்பின் ஒன்றாக பத்து பயங்கரமான வாதைகளை யெகோவா வரப் பண்ணுகிறார். பத்தாவது வாதைக்குப் பிறகே இஸ்ரவேலரை போக அனுமதிக்கிறான். என்றாலும், சீக்கிரத்திலேயே அவனும் அவனுடைய படைவீரர்களும் கோபாவேசத்தோடு பின்தொடர்கிறார்கள். ஆனால், அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கு சிவந்த சமுத்திரத்தைப் பிளந்து அதன் நடுவே ஒரு பாதையை யெகோவா அமைத்துக் கொடுத்து தம் ஜனங்களை இரட்சிக்கிறார். பின்தொடரும் எகிப்தியர்களோ பிளவுற்ற தண்ணீர் ஒன்றுசேர்ந்ததும் அதில் மூழ்கி மடிந்துவிடுகிறார்கள்.
வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்:
6:3—என்ன அர்த்தத்தில் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கடவுளுடைய பெயர் அறிவிக்கப்படவில்லை? முற்பிதாக்களாகிய இவர்கள் கடவுளுடைய பெயரை பயன்படுத்தினார்கள், அவரிடமிருந்து வாக்குறுதிகளையும் பெற்றார்கள். இருந்தாலும், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒருவராக யெகோவாவை அவர்கள் அறியவில்லை அல்லது அனுபவத்தில் பார்க்கவில்லை.—ஆதியாகமம் 12:1, 2; 15:7, 13-16; 26:24; 28:10-15.
7:1—‘பார்வோனுக்கு தேவனாக’ மோசே ஆக்கப்பட்டது எப்படி? மோசேக்கு தெய்வீக வல்லமையும் பார்வோன் மீது அதிகாரமும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆகவே, அந்த அரசனுக்கு அவர் பயப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
7:22—இரத்தமாக மாறாத தண்ணீர் எகிப்தின் மந்திரவாதிகளுக்கு எங்கிருந்து கிடைத்தது? இந்த வாதை வருவதற்கு முன்பே நைல் நதியிலிருந்து எடுத்திருந்த தண்ணீரை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். நைல் நதியைச் சுற்றியுள்ள நீர்ப்பாங்கான பகுதிகளில் ஊற்றுகளை தோண்டியபோதும்கூட இரத்தமாக மாறாத தண்ணீர் கிடைத்திருக்கலாம்.—யாத்திராகமம் 7:24.
8:26, 27—இஸ்ரவேலரின் பலிகள் ‘எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும்’ என மோசே ஏன் சொன்னார்? எகிப்தியர் பல்வேறு மிருகங்களை தெய்வங்களாக வழிபட்டனர். ஆகவே மிருகங்களை பலியிடுவதைப் பற்றி மோசே குறிப்பிட்டதானது, யெகோவாவுக்கு பலி செலுத்த இஸ்ரவேலரை அங்கிருந்து போக அனுமதிக்கும்படி அவர் இன்னுமதிக வலிமையோடும் இணங்க வைக்கும் விதத்திலும் கேட்க உதவியது.
12:29—யாரெல்லாம் தலைப்பிள்ளைகளாக கருதப்பட்டார்கள்? ஆண்கள் மட்டுமே தலைப்பிள்ளைகளாக கருதப்பட்டார்கள். (எண்ணாகமம் 3:40-51) பார்வோனும்கூட தலைப்பிள்ளையாக இருந்தான், ஆனால் அவன் சாகவில்லை. ஏனெனில் அவன் ஒரு குடும்பஸ்தன். ஆகவே, குடும்பத் தலைவன் அல்ல, ஆனால் வீட்டின் தலைமகனே பத்தாவது வாதையின்போது மரித்தான்.
12:40—இஸ்ரவேலர் எகிப்தில் எவ்வளவு காலம் குடியிருந்தனர்? இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் 430 ஆண்டுகள், “எகிப்து தேசத்திலும் கானான் தேசத்திலும்” இஸ்ரவேலர் செலவிட்ட காலப்பகுதியாகும். (NW அடிக்குறிப்பு) எழுபத்தைந்து வயதான ஆபிரகாம் பொ.ச.மு. 1943-ல் கானானுக்கு செல்லும் வழியில் ஐப்பிராத்து நதியைக் கடந்தார். (ஆதியாகமம் 12:4) அந்த சமயத்திலிருந்து, 130 வயதான யாக்கோபு எகிப்திற்கு சென்ற காலப்பகுதி வரை 215 ஆண்டுகள் உருண்டோடின. (ஆதியாகமம் 21:5; 25:26; 47:9) அப்படியானால், மீதி 215 ஆண்டுகளே இஸ்ரவேலர் எகிப்தில் குடியிருந்த காலமாகும்.
15:8—சிவந்த சமுத்திரத்தின் தண்ணீர் ‘உறைந்துபோனது’ என சொல்லப்பட்டிருப்பது அது ஐஸ்கட்டியாக உறைந்ததை அர்த்தப்படுத்துகிறதா?’ ‘உறைந்துபோனது’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தை கெட்டியாவதை அர்த்தப்படுத்துகிறது. யோபு 10:10-ல் தயிர் உறைவதுடன் சம்பந்தப்படுத்தி இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, தண்ணீர் உறைந்துபோனது என்று சொல்லப்பட்டிருப்பது அது ஐஸ்கட்டியாக உறைந்திருக்க வேண்டுமென்று அர்த்தப்படுத்துவதில்லை. யாத்திராகமம் 14:21-ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘பலத்த கீழ்க்காற்று’ தண்ணீரை ஐஸ்போல் கெட்டியாக உறைய வைக்கும் அளவுக்கு குளிராக இருந்திருந்தால், கடுங்குளிர் இருந்ததைப் பற்றி நிச்சயமாகவே ஏதாவது குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கும். காணக்கூடிய எதுவும் இந்த தண்ணீரை தடுத்து நிறுத்துவதாக தெரியாததால், அது பார்ப்பதற்கு உறைந்ததாக, கெட்டியாக இருந்தது.
நமக்குப் பாடம்:
7:14–12:30. இந்தப் பத்து வாதைகளும் எதேச்சையாக நிகழ்ந்தவை அல்ல. அவற்றைப் பற்றி முன்கூட்டியே சொல்லப்பட்டது; அதன்படி குறித்த சமயத்தில் அவை நிகழ்ந்தன. தண்ணீர், சூரிய ஒளி, பூச்சிகள், மிருகங்கள், மற்றும் மனிதர்கள் மீதெல்லாம் படைப்பாளருக்கு அதிகாரம் இருப்பதை இந்தப் பத்து வாதைகளும் எவ்வளவு தத்ரூபமாய் எடுத்துக் காட்டுகின்றன! அதோடு, கடவுள் தம் விரோதிகளை மட்டுமே அழித்து, தம்மை வணங்குவோரை காப்பாற்ற முடியும் என்பதையும் இவை காண்பிக்கின்றன.
11:2; 12:36. யெகோவா தம் மக்களை ஆசீர்வதிக்கிறார். எகிப்தில் இஸ்ரவேலர் பட்ட கஷ்டங்களுக்கு இப்போது கட்டாயம் பலன் கிடைக்கச் செய்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. ஆரம்பத்தில் இஸ்ரவேலர் எகிப்திற்கு சென்றபோது போர்க்கைதிகளைப் போல அடிமைகளாக செல்லவில்லை, சுதந்திரமுடைய ஜனங்களாகவே சென்றார்கள்.
14:30. யெகோவா தமது வணக்கத்தாரை வரப்போகும் ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து’ காப்பாற்றுவார் என்பதில் நாம் நம்பிக்கையோடிருக்கலாம்.—மத்தேயு 24:20-22; வெளிப்படுத்துதல் 7:9, 14.
தேவாட்சிக்குட்பட்ட ஒரு தேசத்தை யெகோவா ஒழுங்கமைக்கிறார்
எகிப்திலிருந்து விடுதலை பெற்று வந்தபின் மூன்றாம் மாதத்திலே இஸ்ரவேலர் சீனாய் மலையடிவாரத்தில் கூடாரமிடுகிறார்கள். அங்கே அவர்கள் பத்து கட்டளைகளையும் பிற சட்டங்களையும் பெற்று, யெகோவாவுடன் ஓர் உடன்படிக்கைக்குள் வருகிறார்கள், தேவாட்சிக்குட்பட்ட ஒரு தேசமாகவும் ஆகிறார்கள். மோசே 40 நாட்கள் அந்த மலையிலே தங்கியிருந்து, மெய் வணக்கம் சம்பந்தமாகவும் யெகோவாவுக்கு ஆசரிப்புக் கூடாரம் அமைப்பது சம்பந்தமாகவும் அறிவுரைகளைப் பெறுகிறார். இதற்கிடையே இஸ்ரவேலர் ஒரு பொன் கன்றுக்குட்டியைச் செய்து அதை வணங்குகிறார்கள். மலையிலிருந்து கீழே இறங்கி வருகையில் மோசே இதைப் பார்த்து மிகுந்த கோபங்கொண்டு கடவுள் கொடுத்த இரண்டு கற்பலகைகளையும் உடைத்துப் போடுகிறார். தவறு செய்தவர்களுக்கு தக்க தண்டனை அளித்த பிறகு, அவர் மறுபடியும் மலைக்கு ஏறிச் சென்று வேறு இரண்டு கற்பலகைகளைப் பெற்றுக்கொள்கிறார். மோசே திரும்பி வந்ததும் ஆசரிப்புக் கூடார வேலை நடைபெறுகிறது. இஸ்ரவேலர் விடுதலை பெற்று வந்த முதலாம் வருடத்தில் இந்த அருமையான கூடாரமும் அதன் உட்புற அலங்கார வேலைகளும் செய்து முடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்படுகிறது. அதன் பிறகு யெகோவா அதை மகிமையால் நிரப்புகிறார்.
வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்:
20:5—‘பிதாக்களுடைய அக்கிரமங்களுக்காக’ பிற்கால சந்ததியாரை யெகோவா தண்டிப்பது எப்படி? வயதுவந்த தனிநபர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய நடத்தை மற்றும் மனப்பான்மையின் அடிப்படையில் நியாயந்தீர்க்கப்படுகிறார்கள். ஆனால் இஸ்ரவேல் தேசமோ விக்கிரகாராதனையில் ஈடுபட்டபோது அதன் பின்விளைவுகளை தலைமுறை தலைமுறையாக அனுபவித்தது. மத அட்டூழியங்களின் காரணமாக உண்மையான இஸ்ரவேலருக்கும்கூட உத்தமத்தோடு நிலைத்திருப்பது கடினமாக இருந்தது, இவ்விதத்தில் அந்தப் பின்விளைவுகளின் பாதிப்புகளை உணர்ந்தார்கள்.
23:19; 34:26—ஆட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கக் கூடாது என்ற கட்டளையின் முக்கியத்துவம் என்ன? ஒரு குட்டியை (வெள்ளாட்டுக் குட்டியை அல்லது வேறு மிருகத்தின் குட்டியை) அதன் தாயின் பாலிலே சமைப்பது மழை வருவிப்பதற்காக புறமதத்தார் செய்த ஒரு மதச்சடங்கு என சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, குட்டிக்கு தாய்ப்பால் போஷாக்கு அளிப்பதாக இருப்பதால் அந்தப் பாலிலே குட்டியை சமைப்பது ஒரு ஈவிரக்கமற்ற செயலாக இருக்கும். கடவுளுடைய ஜனங்கள் மற்றவர்களிடம் இரக்கமுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்பதைக் காட்ட இந்தச் சட்டம் அவர்களுக்கு உதவியது.
23:20-23—இங்கே குறிப்பிட்டுள்ள தூதன் யார், யெகோவாவின் பெயர் ‘அவருடைய உள்ளத்தில்’ இருப்பது எப்படி? இந்தத் தூதன், மனிதனாக வருவதற்கு முன்பு பரலோகத்திலிருந்த இயேசுவாக இருக்க வேண்டும். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்லும் வழியில் இஸ்ரவேலரை வழிநடத்த இவரையே கடவுள் பயன்படுத்தினார். (1 கொரிந்தியர் 10:1-4) பிதாவின் பெயரை ஆதரிப்பதிலும் பரிசுத்தப்படுத்துவதிலும் இயேசு முதன்மையானவராய் இருப்பதால் யெகோவாவின் பெயர் ‘அவருடைய உள்ளத்தில்’ இருக்கிறது என்று சொல்லலாம்.
32:1-8, 25-35—பொன் கன்றுக்குட்டியை செய்ததற்காக ஆரோன் ஏன் தண்டிக்கப்படவில்லை? ஆரோன் அந்த விக்கிரகாராதனைக்கு உள்ளப்பூர்வமாக உடன்படவில்லை. ஏனெனில் பிற்பாடு, கடவுள் சார்பாகவும் மோசேக்கு விரோதமாய் கலகம் செய்தவர்களுக்கு எதிராகவும் நிலைநிற்கை எடுத்த சக லேவியருடன் அவர் சேர்ந்துகொண்டார். தவறு செய்தவர்கள் அழிக்கப்பட்ட பிறகு, ஆரோனுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும்கூட யெகோவா இரக்கம் காண்பித்ததையும், தவறிழைத்தவர்கள் மகா பெரிய பாவம் செய்திருந்ததையும் ஜனங்களுக்கு மோசே நினைவுபடுத்தினார்.
33:11, 20—மோசேயிடம் கடவுள் எப்படி “முகமுகமாய்” பேசினார்? அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நெருக்கமான உரையாடலை இந்த வார்த்தை குறிக்கிறது. கடவுளுடைய பிரதிநிதியுடன் மோசே பேசினார், அவர் மூலம் யெகோவாவிடமிருந்து வாய்மொழி அறிவுரைகளையும் பெற்றார். ஆனால் மோசே யெகோவாவை பார்க்கவில்லை; ஏனென்றால் ‘ஒரு மனுஷனும் கடவுளைக் கண்டு உயிரோடு இருக்க முடியாது.’ உண்மையில், யெகோவாவே நேரடியாக மோசேயிடம் பேசவில்லை. நியாயப்பிரமாண சட்டமும்கூட ‘தேவதூதரைக் கொண்டு மத்தியஸ்தர் மூலமாய் கொடுக்கப்பட்டது’ என கலாத்தியர் 3:19 குறிப்பிடுகிறது.
நமக்குப் பாடம்:
15:25; 16:12. யெகோவா தம்முடைய மக்களின் தேவைகளை கவனித்துக்கொள்கிறார்.
18:21. கிறிஸ்தவ சபையில் பொறுப்புள்ள ஸ்தானங்களை வகிக்க தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தகுதியானவர்களாக, தேவபயமுள்ளவர்களாக, நம்பகமானவர்களாக, சுயநலமற்றவர்களாக இருக்கவும் வேண்டும்.
20:1–23:33. யெகோவா உன்னத சட்டப் பிரமாணிகர். இஸ்ரவேலர் யெகோவாவுக்கு கீழ்ப்படிந்தபோது, ஒழுங்குடனும் மகிழ்ச்சியுடனும் அவரை வணங்குவதற்கு அவருடைய சட்டங்கள் அவர்களுக்கு உதவின. இன்றும் தேவாட்சிக்குட்பட்ட ஓர் அமைப்பு யெகோவாவுக்கு உள்ளது. அதற்கு ஒத்துழைத்தால் மகிழ்ச்சியும் பாதுகாப்பும் கிடைப்பது உறுதி.
நமக்கு மெய்யான அர்த்தத்தை அளிக்கிறது
யெகோவாவைப் பற்றி இந்த யாத்திராகம புத்தகம் நமக்கு எதை வெளிப்படுத்துகிறது? யெகோவா அன்பாக காத்து பராமரிப்பவர், ஈடிணையற்ற மீட்பர், தம் நோக்கங்களை நிறைவேற்றுபவர் என்ற விஷயங்களை வெளிப்படுத்துகிறது. தேவாட்சிக்குட்பட்ட ஓர் அமைப்பின் கடவுளாகவும் அவர் இருக்கிறார்.
தேவராஜ்ய ஊழியப் பள்ளிக்காக வாராந்தர பைபிள் வாசிப்பு பகுதியை தயாரிக்கையில் யாத்திராகம புத்தகத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் உங்கள் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கும். “வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்” என்ற பகுதியை ஆராய்வது பைபிள் வசனங்கள் சிலவற்றை இன்னும் நன்றாக புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும். “நமக்குப் பாடம்” என்ற தலைப்பின் கீழுள்ள குறிப்புகள் வாராந்தர பைபிள் வாசிப்பிலிருந்து நாம் எப்படி பயனடையலாம் என்பதைக் காட்டும்.
[பக்கம் 24, 25-ன் படம்]
இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து கொண்டுவரும்படி சாந்த குணமுள்ள மோசேக்கு யெகோவா பொறுப்பளித்தார்
[பக்கம் 25-ன் படம்]
தண்ணீர், சூரிய ஒளி, பூச்சிகள், மிருகங்கள் மற்றும் மனிதர்கள் மீது படைப்பாளருக்கு அதிகாரம் இருப்பதை பத்து வாதைகளும் எடுத்துக்காட்டின
[பக்கம் 26, 27-ன் படம்]
மோசே மூலம் இஸ்ரவேலரை தேவாட்சிக்குட்பட்ட ஒரு தேசமாக யெகோவா ஒழுங்கமைத்தார்