ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
வேலை செய்யுமிடத்தில் சாட்சிகொடுத்தல்
அப்போஸ்தலர்களாகிய மத்தேயு, பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியோரிடம் காணப்படும் பொதுவான விஷயம் என்ன? அவர்கள் எல்லாருமே, வேலை செய்துகொண்டிருக்கும்போது இயேசுவால் அழைக்கப்பட்டவர்கள். “என் பின்னே வாருங்கள்” என இயேசு அழைத்த சமயத்தில் பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியோர் மீன்பிடிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். தம்முடைய சீஷனாக ஆவதற்கு மத்தேயுவை இயேசு அழைத்தபோது அவர் சுங்கச் சாவடியில் இருந்தார்.—மத்தேயு 4:18-21; 9:9.
வேலை செய்யுமிடங்களில் ஜனங்களிடம் சாட்சி கொடுப்பது பலன் தரலாம். ஜப்பானிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் இதை உணர்ந்து, ஊழியத்தின் இந்த அம்சத்தில் ஈடுபடுவதற்கு சமீபத்தில் ஒரு கூட்டு முயற்சி செய்தார்கள். இதன் பலன்கள்? சில மாதங்களுக்குள் ஆயிரக்கணக்கான மறுசந்திப்புகள் செய்யப்பட்டன, சுமார் 250 பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இது சம்பந்தமாக பின்வரும் அனுபவங்களை கவனியுங்கள்.
டோக்கியோவைச் சேர்ந்த முழுநேர ஊழியர் ஒருவர், ஒரு ரெஸ்டாரன்டின் மானேஜரை சந்தித்தார்; அவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்கூலில் படிக்கிற காலத்திலேயே ஒரு யெகோவாவின் சாட்சியிடம் பேசியிருந்தார். அப்போது கேட்ட விஷயங்கள் பெரும்பாலும் அவருக்கு புரியாவிட்டாலும் பைபிள் மீது அவருக்கு ஆர்வம் வந்தது. அந்த ஆர்வம் இப்போது மீண்டும் தூண்டிவிடப்பட்டதால், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவுa என்ற புத்தகத்தின் உதவியுடன் பைபிளைப் படிக்க உடனடியாக ஒத்துக்கொண்டார். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு தனிப்பட்ட விதமாக பைபிளை வாசிக்கவும் ஆரம்பித்தார்.
விசேஷ பயனியரான ஒரு சகோதரி ஓர் அலுவலகத்திற்கு சென்றார். வரவேற்பறையிலிருந்து மானேஜருக்கு ஃபோன் செய்தார்; ஆனால் அவர் இல்லை, அவருக்கு பதிலாக ஓர் இளம் பெண் ஃபோனில் பேசினார். “என்னிடம் பேசுறீங்களா?” என அந்தப் பெண் கேட்டார். சுருக்கமாக பேசிய பிறகு, அந்தப் பெண் நேரில் வந்து பைபிளை வாசிக்க தனக்கு ஆசை இருப்பதாக சொன்னார். இந்த விசேஷ பயனியர் அவருக்கு ஒரு பைபிளை கொடுப்பதாக சொன்னார். அவருடன் பைபிள் படிப்பும் ஆரம்பிக்கப்பட்டது; அவர் வேலைக்கு போவதற்கு முன்பு, அருகில் உள்ள பார்க்கில் காலையிலேயே பைபிள் படிப்பு நடத்தப்பட்டது.
மற்றொரு அலுவலகத்தில், சக பணியாளர் ஒருவர் யெகோவாவின் சாட்சியிடமிருந்து காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை வாங்கிவிட்டு, அவர் அங்கிருந்து போனதும் அவற்றை தூக்கியெறிவதை ஒரு நபர் கண்டார். அந்த நபர் வீட்டிற்குப் போனதும் யெகோவாவின் சாட்சியாக இருக்கும் தன் மனைவியிடம் இந்த விஷயத்தை சொல்லி, ‘அந்தப் பத்திரிகைகளை என்னிடம் கொடுத்திருந்தால் கொஞ்சமாவது காது கொடுத்து கேட்டிருப்பேன்’ என்று சொன்னார். அவர் சொன்னது மகளின் காதில் விழுந்தது, அதைப் பற்றி அந்த வியாபார பிராந்தியத்தில் ஊழியம் செய்துவந்த ஒரு சாட்சியிடம் அவள் சொன்னாள். அந்த சாட்சி உடனடியாக அவரை அலுவலகத்தில் சந்தித்து, பைபிள் படிப்பையும் ஆரம்பித்தார். விரைவில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கூட்டங்களுக்கு தவறாமல் வர ஆரம்பித்தார்.
வேலை செய்யுமிடங்களில் ஜனங்களுக்கு சாட்சி கொடுப்பதால் வேறு பல நன்மைகளும் கிடைத்திருக்கின்றன. கடைவீதிகளிலும் தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் மறு சந்திப்புகளை நடத்துவதில் ஜப்பானிய பிரஸ்தாபிகள் பலர் திறமைசாலிகளாக ஆகியிருக்கிறார்கள். அது தவிர, இந்த முறையில் சாட்சி கொடுப்பதன் மூலம் செயலற்றவர்கள் பலரை சந்திக்க முடிந்திருக்கிறது; அவர்களுக்கு மீண்டும் பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சிறந்த பலன்கள் கிடைத்திருக்கின்றன. மத்திய டோக்கியோவில் உள்ள ஒரு சபை சமீபத்தில் 108 பைபிள் படிப்புகளை அறிக்கை செய்தது; அது கடந்த ஆண்டின் அறிக்கையைவிட இரு மடங்குக்கும் அதிகமாகும்.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.