கடவுளுடைய சித்தம் பூமியில் செய்யப்படுகையில்
“உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என ஜெபிக்கும்படி இயேசு தமது சீஷர்களுக்கு கற்பித்தபோது, தமது பிதாவோடு பரலோகத்தில் வாழ்ந்த அனுபவத்துடன் பேசிக் கொண்டிருந்தார். (மத்தேயு 6:10; யோவான் 1:18; 3:13; 8:42) மனிதனாக இயேசு பூமியில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பு, பரலோகத்திலும் பூமியிலும் அனைத்தும் கடவுளுடைய சித்தத்திற்கு இசைய நடந்துவந்த காலத்தை கண்ணாரக் கண்டிருந்தார். உண்மையிலேயே, அது நிறைவையும் திருப்தியையும் தந்த மகிழ்ச்சிக்குரிய காலமாக இருந்தது.—நீதிமொழிகள் 8:27-31.
கடவுளுடைய முதல் படைப்புகள் ஆவி சிருஷ்டிகள், அதாவது ‘அவர்தம் சொற்கேட்டு நடக்கும் வலிமைமிக்க தூதர்கள்.’ அவர்கள் ‘அவருடைய சித்தத்தின்படி செய்து, அவருக்கு பணிவிடைக்காரராக’ இருந்தார்கள், இருக்கிறார்கள். (சங்கீதம் 103:20, 21, பொது மொழிபெயர்ப்பு; NW) ஒவ்வொரு தூதரும் சுய விருப்பத்தின்படி செயல்படும் வாய்ப்பு இருந்ததா? ஆம் இருந்தது, பூமியை படைக்கையில், இந்தக் “கடவுளின் புதல்வர் களிப்பால் ஆர்ப்பரித்தனர்!” (யோபு 38:7, பொ.மொ.) கடவுளுடைய நோக்கத்தில் அவர்கள் அடைந்த தனிப்பட்ட மகிழ்ச்சியை இந்த ஆர்ப்பரிப்பு பிரதிபலித்தது, இவ்வாறு தங்களுடைய விருப்பத்தை கடவுளுடைய நோக்கத்திற்கு இசைவாக அமைத்துக் கொண்டார்கள்.
பூமியைப் படைத்தபின், அதை மனித குடியிருப்புக்காக தயார்படுத்தி, கடைசியில் முதல் மனிதனையும் மனுஷியையும் கடவுள் சிருஷ்டித்தார். (ஆதியாகமம், 1-ம் அதிகாரம்) இதுவும் ஆர்ப்பரிப்புக்கு தகுதியாக இருந்ததா? ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட பதிவு இவ்வாறு சொல்கிறது: “அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.” ஆம், எந்த மாசுமருவுமின்றி பூரணமாக இருந்தது.—ஆதியாகமம் 1:31.
நம்முடைய முதல் பெற்றோருக்கும் அவர்களுடைய சந்ததியாருக்கும் கடவுளுடைய சித்தம் என்ன? ஆதியாகமம் 1:28 கூறுகிறபடி, அதுவும் மிக நன்றாயிருந்தது: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.” இந்த அற்புதகரமான பொறுப்பை நிறைவேற்ற நமது ஆதி பெற்றோரும் அவர்களுடைய சந்ததியாரும் தொடர்ந்து—என்றென்றும்—வாழ வேண்டியிருந்தது. சோகமோ அநீதியோ இதயத்தைப் பிழிந்தெடுக்கும் வேதனையோ மரணமோ இருக்குமென எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இப்படிப்பட்ட ஒரு காலத்தில்தான் கடவுளுடைய சித்தம் பரலோகத்திலும் பூமியிலும் நடைபெற்று வந்தது. அவருடைய சித்தத்திற்கு இசைவாக வாழும் ஒவ்வொருவரும் அதில் மிகுந்த மகிழ்ச்சியைக் காண்பார்கள். ஆனால் என்ன குளறுபடி ஆனது?
எதிர்பாராத விதத்தில், கடவுளுடைய சித்தத்திற்கு எதிராக ஒரு சவால் எழுந்தது. ஆனால் அது தீர்க்கமுடியாத சவாலாக இருக்கவில்லை. என்றாலும், அது நெடுநாள் துக்கத்தையும் வேதனையையும் தொடங்கி வைத்து, மனிதகுலத்திற்கான கடவுளுடைய சித்தம் சம்பந்தமாக பெரும் குழப்பத்தை உண்டாக்கவிருந்தது. இதற்கு நாம் எல்லாருமே பலியாகியிருக்கிறோம். அந்த சவால் என்ன?
கலகம் வெடித்த காலப்பகுதியில் கடவுளுடைய சித்தம்
“கடவுளின் [ஆவி] புதல்வர்”களில் ஒருவன் மனிதகுலத்திற்கான கடவுளுடைய சித்தத்தில் குறுக்கிடுவதற்கு சாத்தியமிருந்ததைப் பார்த்தான்; தனக்கு ஆதாயம் தேடுவதே அவனுடைய திட்டமாக இருந்தது. இதைப் பற்றி எந்தளவுக்கு அதிகமாய் சிந்தித்தானோ அந்தளவுக்கு அது அவனுக்கு சாத்தியமாக தோன்றியது, அந்தளவுக்கு கவர்ச்சிகரமாகவும் ஆனது. (யாக்கோபு 1:14, 15) கடவுளுக்கு செவிசாய்ப்பதற்குப் பதிலாக தனக்கு செவிசாய்க்கும்படி முதல் தம்பதியினரை செய்துவிட்டால், ஒரு போட்டி அரசுரிமையை பொறுத்துக்கொள்ளும் கட்டாயத்திற்கு கடவுள் வந்துவிடுவார் என அவன் யோசித்திருக்கலாம். அதுமட்டுமல்ல, அவர்களை கடவுள் அழிக்க மாட்டார், ஏனென்றால் அது கடவுளுடைய நோக்கம் தோல்வியடைந்ததாக ஆகிவிடும் என்றும் அவன் கணக்கிட்டிருக்கலாம். மேலும், இந்த ஆவி புதல்வனின் அதிகாரத்தை அனுமதித்து, தமது மானிட சிருஷ்டியை இவனுக்கு கீழ்ப்படிந்து நடக்க அனுமதிப்பதன் மூலம் யெகோவா தேவன் தமது நோக்கத்தை மாற்றியமைக்க வேண்டியிருக்கும் என்று அவன் நினைத்திருக்கலாம். பொருத்தமாகவே, இந்தக் கலகக்காரன் பிற்பாடு சாத்தான் என அழைக்கப்பட்டான், இதன் அர்த்தம் “எதிர்ப்பவன்” என்பதாகும்.—யோபு 1:6, NW அடிக்குறிப்பு.
சாத்தான் தனது ஆசைப்படி முதல் மனுஷியை அணுகினான். கடவுளுடைய சித்தத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு தார்மீக ரீதியில் சுதந்திரமாக இருப்பதற்கு அவளைத் தூண்டினான். ‘நீங்கள் சாகவே சாவதில்லை; . . . நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவனைப் போல் இருப்பீர்கள்’ என்று அவளிடம் கூறினான். (ஆதியாகமம் 3:1-5) அந்த ஸ்திரீக்கு இது விடுதலை அளிப்பதாக தோன்றியது, மேம்பட்ட வாழ்க்கை கிடைக்கும் என நம்பி அவன் சொன்னபடியே செய்தாள். பிற்பாடு தனது கணவனும் தன்னுடன் சேர்ந்துகொள்ளும்படி அவனையும் இணங்க வைத்தாள்.—ஆதியாகமம் 3:6.
அந்தத் தம்பதியருக்கு கடவுளுடைய சித்தம் அதுவாக இருக்கவில்லை. அது அவர்களுடைய சுய சித்தமாகவே இருந்தது. மேலும், அது பயங்கர விளைவுகளைக் கொண்டுவரும். இத்தகைய போக்கு அவர்களை மரணத்திற்கு வழிநடத்தும் என கடவுள் ஏற்கெனவே சொல்லியிருந்தார். (ஆதியாகமம் 3:3) கடவுளுடைய உதவியின்றி தன்னிச்சையுடன் செயல்பட்டு வெற்றிகரமாக வாழ அவர்கள் படைக்கப்படவில்லை. (எரேமியா 10:23) அதோடு, அவர்கள் அபூரணர் ஆனார்கள், அதனால் அபூரணமும் மரணமும் அவர்களுடைய சந்ததியாருக்கு கடத்தப்படும். (ரோமர் 5:12) இந்த விளைவுகளை சாத்தானால் மாற்றவே முடியவில்லை.
இந்த சம்பவங்களெல்லாம் மனிதகுலத்திற்கும் பூமிக்குமான கடவுளுடைய நோக்கத்தை, அதாவது சித்தத்தை என்றுமாக மாற்றிவிட்டதா? இல்லை. (ஏசாயா 55:9-11) ஆனால் அவை பதிலளிக்கப்பட வேண்டிய பின்வரும் கேள்விகளை எழுப்பின: சாத்தான் உரிமை பாராட்டியபடி, மனிதர் ‘நன்மை தீமை அறிந்து தேவனைப் போல்’ இருக்க முடியுமா? வேறு வார்த்தையில் சொன்னால், போதிய அவகாசம் கொடுக்கப்பட்டால், வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் சரி தவற்றை அல்லது நல்லது கெட்டதை நாமே தீர்மானித்துக்கொள்ள முடியுமா? கடவுளுடைய ஆட்சியே மிகச் சிறந்தது என்பதால் முழு கீழ்ப்படிதலைப் பெற அவர் தகுதியானவரா? அவருடைய சித்தம் முழு கீழ்ப்படிதலைப் பெற தகுதியானதா? இதற்கு நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
புத்திக்கூர்மையுள்ள படைப்புக்கு முன்னால் இந்த விவாதங்களைத் தீர்க்க ஒரே வழிதான் இருந்தது, அதாவது தன்னிச்சையாக வாழ்வது வெற்றி பெறுமா என்பதை முயன்று பார்க்க அவர்களை அனுமதிப்பதே. வெறுமனே அவர்களை கொன்றுவிட்டிருந்தால் எழுப்பப்பட்ட இந்த விவாதத்தை தீர்க்க முடிந்திருக்காது. போதுமான காலத்திற்கு மனித இனத்தை அதன் போக்கிலேயே செல்ல விட்டுவிடுவது காரியங்களைத் தீர்க்கும், ஏனென்றால் அதன் விளைவு அப்பட்டமாக தெரியும். அந்த ஸ்திரீக்கு பிள்ளைகள் பிறப்பார்கள் என கடவுள் சொன்னபோது இந்த முறையில் காரியங்களை கையாளுவதாக சுட்டிக்காட்டினார். இவ்வாறு மனித குடும்பம் ஆரம்பமாகும். கடவுள் இப்படி செய்ததால், இன்றைக்கு நாம் உயிர் வாழ்கிறோம்!—ஆதியாகமம் 3:16, 20.
என்றபோதிலும், மனிதர்களும் கலகத்தனம் செய்த ஆவி புதல்வனும் முழுக்கமுழுக்க தங்கள் இஷ்டப்படியே செய்ய கடவுள் விட்டுவிடுவார் என இது அர்த்தப்படுத்தாது. கடவுள் தமது அரசதிகாரத்தைத் துறந்துவிடவில்லை, அதேபோல் தமது நோக்கத்தையும் கைவிட்டுவிடவில்லை. (சங்கீதம் 83:17) கலகத்தைத் தூண்டியவனை கடைசியில் மிதித்து, கெட்ட விளைவுகள் அனைத்தையும் ஒழித்துவிடுவதை முன்னறிவித்ததன் மூலம் அவர் இதை தெளிவாக்கினார். (ஆதியாகமம் 3:15) ஆகவே, விடிவுகாலம் உண்டு என்ற வாக்குறுதி ஆதிமுதலே மனித குடும்பத்திற்கு இருந்தது.
இதற்கிடையில், நமது முதல் பெற்றோர் தங்களையும் தங்களுடைய வருங்கால சந்ததியினரையும் கடவுளுடைய ஆட்சியிலிருந்து பிரித்திருந்தார்கள். அவர்கள் எடுத்த முடிவின் எல்லா கெட்ட விளைவுகளையும் கடவுள் தடுப்பதாக இருந்தால், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் மீது தமது சித்தத்தை அவர் திணிக்க வேண்டியதாயிருந்திருக்கும். இது, அவர்கள் தன்னிச்சையாக செயல்பட முயல்வதை அனுமதிக்காமல் தடுப்பது போல இருந்திருக்கும்.
ஆனால் தனிப்பட்ட நபர்கள் கடவுளுடைய ஆட்சியை ஆதரிக்க முடியும். இந்தக் காலப்பகுதியில் மக்களுக்கான கடவுளுடைய சித்தம் என்ன என்பதை அவர்கள் அறிந்துகொள்ள முடியும், முடிந்தளவு அதற்கு இசைவாக நடக்கவும் முடியும். (சங்கீதம் 143:10) என்றாலும், மனிதர் தன்னிச்சையாக செயல்படுவது சம்பந்தமான விவாதம் தீர்க்கப்படாமல் தொடர்ந்திருக்கும் வரை அவர்கள் பிரச்சினைகளை எதிர்ப்பட்டே தீர வேண்டியிருக்கும்.
சுய சித்தப்படி நடந்ததால் வந்த விளைவுகள் மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலேயே தெளிவானது. மனித குடும்பத்தின் முதல் மகனாகிய காயீன் தனது சகோதரனாகிய ஆபேலை கொலை செய்தான், ஏனென்றால் ‘அவன் கிரியைகள் பொல்லாதவைகளும், அவன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாக இருந்தன.’ (1 யோவான் 3:12) இது கடவுளுடைய சித்தமாக இருக்கவில்லை, ஏனென்றால் காயீனை கடவுள் எச்சரித்திருந்தார், பிற்பாடு அவனை தண்டிக்கவும் செய்தார். (ஆதியாகமம் 4:3-12) சாத்தான் அறிமுகப்படுத்திய தன்னிச்சையான போக்கை காயீன் தேர்ந்தெடுத்தான், அதனால் அவன் ‘பொல்லாங்கனால் உண்டானவனாக’ இருந்தான். அவனுடைய போக்கையே மற்றவர்களும் பின்பற்றினார்கள்.
மனித சரித்திரத்தில் 1,500 வருடங்களுக்கும் மேலாக, “பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.” (ஆதியாகமம் 6:11) அழிவிலிருந்து பூமியை காப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. கடவுள் அந்த நடவடிக்கையை எடுத்தார்; உலகளாவிய ஜலப்பிரளயத்தைக் கொண்டுவந்து, நோவா, அவருடைய மனைவி, அவருடைய மகன்கள், அவர்களுடைய மனைவிகள் ஆகியோர் அடங்கிய நீதியுள்ள ஒரேவொரு குடும்பத்தைக் காப்பாற்றினார். (ஆதியாகமம் 7:1) நாம் அனைவரும் அவர்களுடைய சந்ததியாரே.
அது முதல் மனித சரித்திரத்தில், கடவுளுடைய சித்தத்தைப் பற்றி தெரிந்துகொள்ள உள்ளப்பூர்வமாக விரும்பியவர்களுக்கு கடவுள் வழிநடத்துதல் அளித்திருக்கிறார். வழிநடத்துதலுக்காக தம்மை நோக்கியிருந்த எல்லாருடைய நன்மைக்காகவும் தமது எண்ணங்களை பதிவு செய்ய உண்மைப் பற்றுறுதியுள்ள மனிதரை ஆவியால் ஏவினார். இவை பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. (2 தீமோத்தேயு 3:16) உண்மையுள்ள மனிதர் தம்முடன் நல்லுறவுக்குள் வருவதற்கு, நண்பராவதற்கும்கூட அவர் அன்புடன் அனுமதித்தார். (ஏசாயா 41:8) மேலும், தன்னிச்சையாக செயல்பட்டு வந்த இந்த ஆயிரமாயிரம் ஆண்டு காலப்பகுதியில் மனிதர் அனுபவித்த கஷ்டமான சோதனைகளைத் தாங்கிக்கொள்ள தேவையான பலத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார். (சங்கீதம் 46:1; பிலிப்பியர் 4:13, NW) இப்படிப்பட்ட அனைத்து உதவிக்கும் நாம் எவ்வளவு நன்றியுடன் இருக்க வேண்டும்!
‘உம்முடைய சித்தம் செய்யப்படும்’—முழுமையாக
மனிதகுலத்திற்கான கடவுளுடைய சித்தத்தில் இதுவரை அவர் செய்திருக்கிற காரியங்கள் மட்டுமே அடங்குவதில்லை. கிறிஸ்தவ அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) இந்த அடையாளப்பூர்வ மொழிநடை, மனிதகுலத்தை ஆளப்போகும் ஒரு புதிய அரசாங்கமும் அதன் கீழ் வாழப்போகும் புதிய மனித சமுதாயமும் உண்டாகவிருப்பதைக் குறிக்கிறது.
தெளிவான மொழிநடையை பயன்படுத்தி தானியேல் தீர்க்கதரிசி இவ்வாறு எழுதினார்: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (தானியேல் 2:44) இத்தீர்க்கதரிசனம் லாயக்கில்லாத இன்றைய ஒழுங்குமுறை முடிவுக்கு வரும் என்பதையும் அது கடவுளுடைய ராஜ்யத்தால், அதாவது அரசாங்கத்தால் மாற்றீடு செய்யப்படும் என்பதையும் முன்னறிவிக்கிறது. எப்பேர்ப்பட்ட நற்செய்தி! இன்றைய உலகை வன்முறையால் நிரப்பி, மீண்டும் இப்பூமியை நாசமாக்க அச்சுறுத்தும் சச்சரவுகளும் தன்னலமும் ஒருநாள் நிச்சயம் சுவடு தெரியாமல் மறைந்துவிடும்.
இவையெல்லாம் எப்பொழுது சம்பவிக்கும்? இதே கேள்வியைத்தான் இயேசுவின் சீஷர்கள் கேட்டனர்; “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” அதற்குரிய பதிலில் ஒரு பாகமாக இயேசு இவ்வாறு சொன்னார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.”—மத்தேயு 24:3, 14.
இந்தப் பிரசங்க வேலை உலகெங்கிலும் செய்யப்பட்டு வருகிறது என்பது உலகறிந்த உண்மை. உங்களுடைய சொந்த ஊரிலேயே இதை நீங்கள் பார்த்திருக்கலாம். இவர்களும் நம்புகிறார்கள் என்ற ஆங்கில நூலில், பேராசிரியர் சார்ல்ஸ் எஸ். பிரேடன் இவ்வாறு எழுதுகிறார்: “யெகோவாவின் சாட்சிகள் சொல்லர்த்தமாகவே இந்தப் பூமியை தங்களுடைய சாட்சியால் நிரப்பியிருக்கிறார்கள். . . . யெகோவாவின் சாட்சிகளைவிட வேறெந்த தனிப்பட்ட மத அமைப்பும் ராஜ்யத்தின் நற்செய்தியைப் பரப்புவதில் இந்தளவுக்கு ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் காண்பிக்கவில்லை.” இந்த நற்செய்தியை யெகோவாவின் சாட்சிகள் உலகெங்கிலும் 230-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 400 மொழிகளில் சுறுசுறுப்பாக அறிவித்து வருகிறார்கள். முன்னறிவிக்கப்பட்ட இந்த வேலை முன்னொருபோதும் இந்தளவு உலகளாவிய விதத்தில் செய்யப்படவில்லை. கடவுளுடைய ராஜ்யம் மனித அரசாங்கங்களை மாற்றீடு செய்வதற்குரிய காலம் இப்பொழுது நெருங்கி வருகிறது என்பதற்கு அநேக அத்தாட்சிகளில் இது ஒன்றாகும்.
பிரசங்கிக்கப்படும் என இயேசு சொன்ன அதே ராஜ்யத்திற்காகத்தான் ஜெபிக்கும்படி மாதிரி ஜெபத்தில் பின்வருமாறு அவர் நமக்கு கற்றுக்கொடுத்தார்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:10) ஆம், அந்த ராஜ்யமே மனிதகுலத்திற்கும் இப்பூமிக்குமான தமது நோக்கத்தை, அதாவது தமது சித்தத்தை நிறைவேற்ற கடவுள் பயன்படுத்தப்போகும் கருவியாகும்.
இது எதை அர்த்தப்படுத்துகிறது? வெளிப்படுத்துதல் 21:3, 4 இவ்வாறு பதிலளிக்கிறது: “பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.” அப்பொழுது, உண்மையிலேயே கடவுளுடைய சித்தம் பூமியிலும் பரலோகத்திலும் முழுமையாக செய்யப்படும்.a அதில் நீங்களும் வாழ விரும்புகிறீர்கள் அல்லவா?
[அடிக்குறிப்பு]
a கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி அதிகமாக கற்றுக்கொள்ள விரும்பினால், உங்களுடைய ஊரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளை தொடர்புகொள்ளுங்கள், அல்லது இப்பத்திரிகையில் பக்கம் 2-ல் கொடுக்கப்பட்டுள்ள விலாசங்களில் ஒன்றிற்கு எழுதுங்கள்.
[பக்கம் 5-ன் படம்]
கடவுளுடைய சித்தத்தை ஒதுக்கிவிட்டு தன்னிச்சையாக செயல்பட்டது துயரத்தைக் கொண்டுவந்தது