ரெபெக்காள் தேவபக்தியுள்ள சுறுசுறுப்பான ஒரு பெண்
உங்களுடைய மகனுக்கு பெண் பார்க்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். எப்படிப்பட்ட பெண்ணை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்? அவளுக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? அழகான, அன்பான, புத்திசாலியான, கடின உழைப்பாளியான ஒரு பெண்ணை பார்ப்பீர்களா? அல்லது, வேறெதாவது தகுதிகளை எதிர்பார்ப்பீர்களா?
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைமையைத்தான் ஆபிரகாம் எதிர்ப்பட்டார். அவருடைய மகன் ஈசாக்கின் மூலம் தனது சந்ததியாருக்கு ஆசீர்வாதங்கள் பெருகும் என யெகோவா வாக்குறுதி அளித்திருந்தார். இந்த விவரப்பதிவை நாம் ஆராய்கையில், ஆபிரகாம் வயதானவராக இருக்கிறார், ஆனால் அவருடைய மகனோ இன்னும் மணமாகாதவராக இருக்கிறார். (ஆதியாகமம் 12:1-3, 7; 17:19; 22:17, 18; 24:1) ஈசாக்கு வருங்கால மனைவியுடனும் அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளுடனும் ஆசீர்வாதங்களை அனுபவிக்க இருப்பதால், அவருக்கு நல்ல பெண் பார்க்க ஆபிரகாம் ஏற்பாடு செய்கிறார். அவள் யெகோவாவின் ஊழியக்காரியாக இருக்க வேண்டுமென அவர் முக்கியமாக எதிர்பார்க்கிறார். ஆபிரகாம் வசிக்கிற கானான் தேசத்தில் அப்படிப்பட்ட பெண் இல்லாததால், அவர் வேறெங்காவதுதான் தேட வேண்டும். கடைசியில் ஈசாக்கிற்காக ரெபெக்காள் என்ற பெண் தேர்ந்தெடுக்கப்படுகிறாள். அவளை எப்படி கண்டுபிடித்தார்? அவள் ஆவிக்குரிய சிந்தையுள்ள பெண்ணா? அவளுடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
தகுந்த பெண்ணிற்கான தேடல்
யெகோவாவின் சக வணக்கத்தாராகிய தனது உறவினர்களிலிருந்து ஈசாக்கிற்கு ஒரு பெண் தேட வயதான வேலைக்காரரை, பெரும்பாலும் எலியேசரை, தூர தேசமாகிய மெசொப்பொத்தாமியாவுக்கு ஆபிரகாம் அனுப்புகிறார். இது அவ்வளவு முக்கியமான விஷயம் என்பதால், ஈசாக்கிற்கு கானானியரிலிருந்து பெண் பார்ப்பதில்லை என ஆணையிட்டுக் கொடுக்கும்படி எலியேசரிடம் ஆபிரகாம் கேட்கிறார். இந்த விஷயத்தில் ஆபிரகாம் உறுதியாக இருந்தது கவனிக்கத்தக்க அம்சமாகும்.—ஆதியாகமம் 24:2-10.
ஆபிரகாமின் உறவினர்கள் வசித்துவந்த பட்டணத்திற்கு சென்றபின், எலியேசர் தனது பத்து ஒட்டகங்களை ஒரு கிணற்றருகே ஓட்டிச் செல்கிறார். இப்பொழுது, அந்தக் காட்சியை கற்பனை செய்து பாருங்கள்! அது ஒரு மாலைவேளை, அப்பொழுது எலியேசர், ‘இதோ, நான் இந்தத் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப் புறப்பட்டு வருவார்களே. நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்க வேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கக்கடவள்’ என ஜெபிக்கிறார்.—ஆதியாகமம் 24:11-14.
தாகத்தோடிருக்கும் ஓர் ஒட்டகம், நிறைய தண்ணீர் (100 லிட்டர் வரை) குடிக்கும் என்பது எல்லா உள்ளூர் பெண்ணுக்கும் தெரிந்திருக்கும். ஆகவே பத்து ஒட்டகங்களுக்கும் தண்ணீர் இறைத்து ஊற்றுகிற ஒரு பெண், நிச்சயம் கடினமான வேலை செய்ய தயாராகத்தான் இருப்பாள்! மற்றவர்கள் உதவி செய்ய முன்வராமல் பார்த்துக் கொண்டிருக்கும்போது இதைச் செய்வது அவளுடைய சக்திக்கும், பொறுமைக்கும், தாழ்மை குணத்திற்கும், மனிதரிடமும் மிருகங்களிடமும் வெளிக்காட்டும் இளகிய மனதிற்கும் அத்தாட்சியாகவே இருக்கும்.
என்ன நடக்கிறது? ‘அவன் இப்படிச் சொல்லி முடிக்கும் முன்னே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய குமாரனாயிருக்கிற பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டு வருகிறாள். அந்தப் பெண் மகா ரூபவதியும், . . . கன்னிகையுமாய் இருக்கிறாள்; அவள் துரவில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவருகிறாள். அப்பொழுது அந்த ஊழியக்காரன், அவளுக்கு எதிர்கொண்டோடி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும் என்கிறான். அதற்கு அவள்: குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக்கொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுக்கிறாள்.’—ஆதியாகமம் 24:15-18.
ரெபெக்காள் தகுதியானவளா?
ஆபிரகாமின் சகோதரனுடைய பேத்திதான் ரெபெக்காள், அவள் அழகாக இருப்பதோடு நற்குணம் படைத்தவளாகவும் திகழ்கிறாள். ஓர் அந்நியருடன் பேசுவதற்கு அவள் தயங்குவதில்லை, அதேசமயத்தில் அவரோடு அளவுக்கதிகமாக பழகுவதும் இல்லை. எலியேசர் குடிக்க தண்ணீர் கேட்கும்போது அவள் கொடுக்கிறாள். அது மரியாதைக்குரிய செயல் என்பதால் எதிர்பார்க்கத்தக்கதே. ஆனால் பரீட்சையின் இரண்டாம் பாகத்தைப் பற்றியென்ன?
“குடியும் என் ஆண்டவனே” என ரெபெக்காள் கூறுகிறாள். ஆனால் அத்துடன் நின்றுவிடவில்லை. “உம்முடைய ஒட்டகங்களும் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் மொண்டு வார்ப்பேன்” என்று சொல்கிறாள். பொதுவாக எதிர்பார்க்கப்பட்டதற்கும் அதிகமாக செய்ய அவள் முன்வருகிறாள். ஆர்வத்தோடு ‘சீக்கிரமாய்த் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் மொண்டுவரத் துரவண்டையில் ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் மொண்டு வார்க்கிறாள்.’ அவள் பம்பரமாக சுழன்று வேலை செய்கிறாள். இவை எல்லாவற்றையும் ‘அந்த மனிதன் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்’ என பதிவு கூறுகிறது.—ஆதியாகமம் 24:18-21.
அந்த இளம் பெண் ஆபிரகாமுக்கு உறவினள் என எலியேசர் அறிந்ததும், தாழ விழுந்து யெகோவாவுக்கு நன்றி சொல்கிறார். தானும் தன்னுடன் வந்தவர்களும் அந்த இரவுப்பொழுதை கழிப்பதற்கு அவளுடைய தகப்பனார் வீட்டில் இடமிருக்கிறதா என்று அவர் வினவுகிறார். இடமிருக்கிறது என சொல்லி, இந்த விருந்தினரைப் பற்றிய செய்தியுடன் ரெபெக்காள் வீட்டிற்கு விரைகிறாள்.—ஆதியாகமம் 24:22-28.
எலியேசருடைய கதையைக் கேட்ட பிறகு, ரெபெக்காளின் சகோதரனாகிய லாபானும் அவளுடைய தகப்பன் பெத்துவேலும் இந்தக் காரியங்களை கடவுள் வழிநடத்தியதாக உணருகிறார்கள். நிச்சயமாகவே, ரெபெக்காள் ஈசாக்கிற்கென நியமிக்கப்பட்டவள். “இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள்; கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனைவியாகும்படிக்கு, அவளை அழைத்துக் கொண்டுபோம்” என அவர்கள் சொல்கிறார்கள். இதைப் பற்றி ரெபெக்காள் எப்படி உணருகிறாள்? உடனடியாக புறப்பட தயாரா என கேட்கப்பட்டபோது, “போகிறேன்” என ஒரே வார்த்தையில் அவள் பதிலளிக்கிறாள். இந்தத் திருமணத்திற்கு சம்மதிக்கும்படி அவள் கட்டாயப்படுத்தப்படவில்லை. “பெண் உன் பின்னே வர மனதில்லாதிருந்தாளேயாகில்,” அப்பொழுது நீ என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய் என எலியேசரிடம் ஆபிரகாம் தெளிவாக சொல்லியிருந்தார். ஆனால் ரெபெக்காளும் இந்த விஷயத்தில் கடவுளுடைய வழிநடத்துதல் இருந்ததை உணருகிறாள். ஆகவே, தாமதிக்காமல், தான் இதுவரை சந்தித்திராத ஓர் ஆடவனை மணந்துகொள்வதற்கு தனது குடும்பத்தைவிட்டுப் புறப்பட்டுச் செல்கிறாள். தைரியமிக்க அந்த முடிவு விசுவாசத்தின் குறிப்பிடத்தக்க வெளிக்காட்டாகும். உண்மையிலேயே சரியான தெரிவுதான்!—ஆதியாகமம் 24:29-59.
ஈசாக்கை சந்திக்கும் சமயத்தில், பணிவுக்கு அடையாளமாக ரெபெக்காள் முக்காடிட்டுக் கொள்கிறாள். ஈசாக்கு அவளை தனது மனைவியாக ஏற்றுக்கொள்கிறார், அவளுடைய சிறந்த குணங்களின் நிமித்தம் அவளிடம் காதல் வயப்படுகிறார் என்பதில் சந்தேகமில்லை.—ஆதியாகமம் 24:62-67.
இரட்டை மகன்கள்
ரெபெக்காள் சுமார் 19 வருடங்களாக பிள்ளையில்லாமல் இருக்கிறாள். கடைசியில், அவளுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறக்கிறார்கள், ஆனால் பிரசவத்தில் சிக்கல் ஏற்படுகிறது, ஏனென்றால் அந்தப் பிள்ளைகள் அவளுடைய கருப்பையில் சண்டை போடுகிறார்கள், இதனால் ரெபெக்காள் கடவுளை நோக்கி கூக்குரலிடுகிறாள். நம்முடைய வாழ்க்கையில் பெரும் துன்பத்தை எதிர்ப்படுகையில் அவளைப் போல் நாமும் இதையே செய்யலாம். ரெபெக்காளின் கூக்குரலைக் கேட்டு, யெகோவா அவளுக்கு உறுதியளிக்கிறார். அவள் இரு தேசங்களுக்கு தாயாவாள், ஆனால் “மூத்தவன் இளையவனைச் சேவிப்பான்” என சொல்கிறார்.—ஆதியாகமம் 25:20-26.
ரெபெக்காள் இளைய மகனாகிய யாக்கோபை நேசிப்பதற்கு இந்த வார்த்தைகள் மாத்திரமே காரணம் அல்ல. இரு பையன்களும் வித்தியாசமானவர்களாக இருக்கிறார்கள். யாக்கோபு ‘குணசாலியாக’ இருக்கிறான், ஏசாவோ ஆன்மீக காரியங்கள் மீது அக்கறையில்லாதவனாக இருக்கிறான், ஒரேவொரு வேளை உணவுக்காக தனது பிறப்புரிமையையே, அதாவது கடவுளுடைய வாக்குறுதிகளை சுதந்தரிக்கும் உரிமையையே யாக்கோபிடம் விற்றுவிடுகிறான். இரண்டு ஏத்திய பெண்களை ஏசா மணமுடித்ததும் ஆன்மீக மதிப்பீடுகளின் மீது அவனுடைய அசட்டை மனப்பான்மையை, அவமதிப்பையேகூட காட்டுகிறது, இது அவனுடைய பெற்றோர்களுக்கு மிகுந்த துக்கத்தை தருகிறது.—ஆதியாகமம் 25:27-34; 26:34, 35.
யாக்கோபிற்காக ஆசீர்வாதத்தைப் பெற்றுத்தர முயலுதல்
யாக்கோபுவை ஏசா சேவிப்பான் என்பதை ஈசாக்கு அறிந்திருக்கிறாரா இல்லையா என பைபிள் சொல்வதில்லை. எப்படியிருந்தாலும், ஆசீர்வாதம் யாக்கோபுக்கு உரியது என்பதை யாக்கோபும் ரெபெக்காளும் அறிந்திருக்கிறார்கள். வேட்டையாடிய மிருகத்தை சமைத்து ஏசா தனது தகப்பனுக்கு கொண்டு வரும்போது அவனை ஈசாக்கு ஆசீர்வதிக்க எண்ணியிருப்பதை கேள்விப்பட்டு ரெபெக்காள் உடனடியாக செயல்படுகிறாள். இளமையில் இருந்த உறுதியும் ஆர்வமும் அவளைவிட்டு இன்னும் பிரியவில்லை. இரண்டு வெள்ளாட்டுக் குட்டிகளைக் கொண்டு வரும்படி யாக்கோபுவிடம் ‘கட்டளையிடுகிறாள்.’ உடனே தனது கணவனுக்குப் பிடித்த உணவை சமைக்கிறாள். இப்பொழுது, யாக்கோபு ஆசீர்வாதத்தைப் பெற ஏசாவைப் போல பாவனை செய்ய வேண்டும். யாக்கோபு மறுப்பு தெரிவிக்கிறான். தன்னுடைய தகப்பன் இந்தக் கபட நாடகத்தை அறிந்து தன்னை சபித்துவிடக்கூடும் என பயப்படுகிறான்! ஆனால் ரெபெக்காள் அவனை வற்புறுத்துகிறாள். “என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்” என கூறுகிறாள். பிறகு உணவு சமைத்து, யாக்கோபுக்கு மாறுவேடம் தரித்து, தன்னுடைய கணவனிடம் அனுப்புகிறாள்.—ஆதியாகமம் 27:1-17; NW.
ரெபெக்காள் ஏன் இப்படி செயல்படுகிறாள் என்பதற்குரிய காரணம் கொடுக்கப்படவில்லை. அவளுடைய செயலுக்கு அநேகர் கண்டனம் தெரிவிக்கின்றனர், ஆனால் பைபிள் அப்படி செய்வதில்லை, ஆசீர்வாதத்தை யாக்கோபு பெற்றுவிட்டான் என்பது ஈசாக்குக்குத் தெரியவந்தபோது அவரும் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. மாறாக, யாக்கோபுக்கு இன்னுமதிக ஆசீர்வாதத்தை அவர் தருகிறார். (ஆதியாகமம் 27:29; 28:3, 4) தனது குமாரர்களைப் பற்றி யெகோவா முன்னறிவித்ததை ரெபெக்காள் அறிந்திருக்கிறாள். ஆகவேதான், சரியாகவே யாக்கோபுக்கு செல்ல வேண்டிய ஆசீர்வாதத்தை அவன் பெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கிறாள். இது யெகோவாவின் சித்தத்திற்கு இசைவாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.—ரோமர் 9:6-13.
யாக்கோபு ஆரானுக்கு அனுப்பப்படுகிறார்
ஏசாவின் கோபம் தணியும்வரை தலைமறைவாகும்படி யாக்கோபுவை ரெபெக்காள் தூண்டுகிறாள்; இவ்வாறு ஏசாவின் திட்டங்களை முறியடிக்கிறாள். தனது திட்டத்திற்கு ஈசாக்கின் சம்மதத்தை கேட்கிறாள், ஆனால் தயவுடன் ஏசாவின் கோபத்தைப் பற்றி அவரிடம் சொல்லாமல் தவிர்த்துவிடுகிறாள். மாறாக, யாக்கோபு ஒரு கானானியப் பெண்ணை மணமுடித்துவிடுவானோ என்பதைக் குறித்த தனது கவலையை தெரிவிப்பதன் மூலம் அவள் சாமர்த்தியமாக தன் கணவனிடம் மன்றாடுகிறாள். இப்படிப்பட்ட காரியத்தை யாக்கோபு செய்துவிடாமல் அவனை தடுப்பதற்கும், தேவ பயமுடைய ஒரு பெண்ணை கண்டுபிடிக்க அவனை ரெபெக்காளின் குடும்பத்தாரிடம் அனுப்புவதற்கும் இந்த யோசனையே போதுமானதாக இருக்கிறது. ரெபெக்காள் மறுபடியும் யாக்கோபுவை சந்தித்ததாக எந்தப் பதிவுமில்லை, ஆனால் அவளுடைய செயல் எதிர்கால இஸ்ரவேல் தேசத்திற்கு நிச்சயம் மிகுந்த பலனை தருகிறது.—ஆதியாகமம் 27:43–28:2.
ரெபெக்காளைப் பற்றி நாம் அறிந்த விஷயங்கள் அவளை மெச்சுவதற்கு நம்மை உந்துவிக்கின்றன. அவள் மிக அழகானவள், ஆனால் அவளுடைய உண்மையான அழகு தேவ பக்தியில்தான் இருந்தது. அதைத்தான் ஆபிரகாம் தனது மருமகளிடம் எதிர்பார்த்தார். ரெபெக்காளின் மற்ற நற்குணங்கள் ஆபிரகாம் எதிர்பார்த்த எல்லாவற்றையும் ஒருவேளை விஞ்சியிருக்கலாம். தெய்வீக வழிநடத்துதலைப் பின்பற்றுவதில் அவள் காண்பித்த விசுவாசம், தைரியம், அவளுடைய ஆர்வம், அடக்கம், தாராள குணம் ஆகியவை எல்லா கிறிஸ்தவ பெண்களும் பின்பற்ற வேண்டிய குணங்கள். இவற்றைத்தான் உண்மையான முன்மாதிரியாக திகழும் பெண்களிடம் யெகோவா எதிர்பார்க்கிறார்.