வாழ்க்கை சரிதை
கண்ணிழந்தும் காண முடிந்தது!
ஏகான் ஹெளசர் சொன்னது
சுத்தமாக கண்ணே தெரியாமல் இரண்டு மாதங்கள் கஷ்டப்பட்டேன். ஆனால், வாழ்நாள் பூராவும் நான் ஒதுக்கித் தள்ளிய பைபிள் சத்தியங்கள் என் கண்களைத் திறந்தன.
எனக்கு வயது எழுபதுக்கும் மேல் ஆகிவிட்டது; இருந்தாலும் நான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது என் வாழ்க்கையில் நடந்திருக்கும் பல காரியங்கள் எனக்கு மனநிறைவைத் தருகின்றன. ஆனால் என் வாழ்க்கையில் ஒன்றை மட்டும் மாற்ற முடிந்திருந்தால் யெகோவா தேவனைப் பற்றி இன்னும் சீக்கிரமாகவே தெரிந்துகொள்ளும்படி அதை மாற்றியிருப்பேன்.
நான் 1927-ம் வருடம் உருகுவே நாட்டில் பிறந்தேன். பேரிக்காய் வடிவிலுள்ள இந்த சிறிய நாடு, அர்ஜென்டினாவுக்கும் பிரேசிலுக்கும் இடையே அமைந்துள்ளது; இதன் அட்லாண்டிக் கடற்கரை பகுதி நெடுக, பல கிலோமீட்டர் தூரத்துக்கு கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகு கண்ணுக்கு விருந்தளிக்கிறது. இத்தாலியிலிருந்தும், ஸ்பெயினிலிருந்தும் வந்து குடியேறியவர்களின் வம்சத்தாரே அதிகமாய் இங்கு வாழ்கிறார்கள். ஆனால் என் அப்பாவும் அம்மாவும் ஹங்கேரியிலிருந்து வந்த குடியேறிகள்; நான் சிறுவனாக இருந்தபோது சாதாரண ஜனங்கள் குடியிருக்கும் பகுதியில் நாங்கள் வாழ்ந்து வந்தோம். ஆனாலும் அக்கம் பக்கத்தாரிடையே எந்த வேற்றுமையும் இல்லாமல் ஒரே சமுதாயமாக வாழ்ந்து வந்தோம். எங்கள் கதவுகளுக்கு பூட்டோ ஜன்னல்களுக்குத் தாழ்ப்பாளோ தேவைப்படவில்லை. எங்களுக்குள் இன தப்பெண்ணங்கள் தலைதூக்கவில்லை. உள்ளூர் வாசிகளானாலும் சரி வெளியூர் வாசிகளானாலும் சரி, கருப்பர்களானாலும் சரி வெள்ளையர்களானாலும் சரி, நாங்கள் எல்லாருமே நண்பர்கள்தான்.
அப்பாவும் அம்மாவும் பக்திமிக்க கத்தோலிக்கர்கள்; பத்து வயதில் நான் சர்ச் பூசைகளில் பாதிரியாருக்கு உதவி செய்து வந்தேன். பெரியவனாக ஆனதும் உள்ளூர் சர்ச்சில் வேலை செய்தேன், அந்தப் பகுதியை மேற்பார்வை செய்து வந்த பிஷப்புடைய ஆலோசகர்களின் குழுவில் நானும் ஒருவன். டாக்டர் வேலையைத் தேர்ந்தெடுத்ததால் வெனிசுவேலாவில் கத்தோலிக்க சர்ச் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள வரும்படி அழைப்பைப் பெற்றேன். மகப்பேறு மருத்துவத்தில் விசேஷ பயிற்சி பெற்ற டாக்டர்கள் அடங்கிய எங்கள் குழுவிடம் அந்த சமயத்தில் விற்பனைக்கு வந்திருந்த கருத்தடை மாத்திரைகளைப் பற்றி ஆராயும்படி சொல்லப்பட்டது.
மருத்துவ மாணவனாக ஆரம்ப அபிப்பிராயங்கள்
மருத்துவம் பயிலும் மாணவனாக மனித உடற்கூறுகளைப் பற்றி படிக்கையில் ஞானம் பொதிந்த அதன் வடிவமைப்பைப் பார்க்கப் பார்க்க அது எனக்கு விந்தையிலும் விந்தையாக இருந்தது. உதாரணமாக, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்வதையும் ஈரலையோ விலா எலும்புகளில் சிலவற்றையோ ஓரளவு அகற்றிய பிறகு காயம் ஆறி அவை மீண்டும் சரியான அளவுக்கு வளரும் திறமையையும் கண்டு மலைத்திருக்கிறேன்.
அதே சமயத்தில் பல்வேறு பயங்கர விபத்துக்களுக்கு உள்ளான பலரைப் பார்த்திருக்கிறேன், இரத்தமேற்றியதால் அவர்கள் இறந்தபோது நொந்து போயிருக்கிறேன். இரத்தமேற்றுதல் சம்பந்தப்பட்ட சிக்கல்களால் உயிர் பிரிந்த நோயாளிகளின் உறவினர்களிடம் பேசுவதற்கு எந்தளவு கஷ்டப்பட்டிருக்கிறேன் என்பது இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. அநேக சமயங்களில் அந்த உறவினர்களிடம் இரத்தமேற்றியதாலேயே அவர்களுடைய பாசத்துக்குரியவர் இறந்துவிட்டார் என்பது சொல்லப்படவே இல்லை. அதற்குப் பதிலாக அவர்களிடம் வேறு ஏதாவது காரணம் சொல்லப்பட்டது. பல வருடங்கள் உருண்டோடினாலும் இரத்தமேற்றுதலைப் பொறுத்ததில் என் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது; இறுதியில் இப்படி இரத்தமேற்றுவதில் ஏதோ தவறிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தேன். இரத்தத்தின் பரிசுத்த தன்மை குறித்த யெகோவாவின் சட்டம் மட்டும் அப்போது எனக்குத் தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! இரத்தமேற்றுவதைக் காண்கையில் அப்போது என் மனம் நிலைகொள்ளாமல் அந்தளவுக்குத் தவித்திருக்காதே.—அப்போஸ்தலர் 15:19, 20.
ஜனங்களுக்கு உதவுவதில் திருப்தி
காலப்போக்கில் நான் அறுவை மருத்துவராகவும், சான்டா லூசியாவிலுள்ள மருத்துவ உதவி மையத்தின் இயக்குநராகவும் ஆனேன். நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பையலாஜிக்கல் சயன்ஸ் என்ற நிறுவனத்தில் எனக்கு பொறுப்புகளும் கொடுக்கப்பட்டிருந்தன. அது எனக்கு அதிக திருப்தியளிக்கும் வேலையாக இருந்தது. வியாதிப்பட்ட ஜனங்களுக்கு உதவினேன், அவர்களுடைய உடல் வேதனையைத் தணித்தேன், பல சமயங்களில் உயிரைக் காப்பாற்றியிருக்கிறேன், கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்து பல உயிர்கள் உலகில் பிரவேசிக்க உதவியிருக்கிறேன். இரத்தம் ஏற்றுவதால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆரம்ப காலத்திலேயே கண்கூடாக பார்த்திருந்ததால் அதை நான் சிகிச்சைக்குப் பயன்படுத்தவில்லை, இரத்தமின்றி ஆயிரக்கணக்கான ஆப்ரேஷன்களை செய்தேன். இரத்தக்கசிவு என்பது பீப்பாயில் ஏற்படும் கசிவைப் போன்றது என எனக்கு நானே நியாயப்படுத்தினேன். அதை சரிசெய்வதற்கு ஒரே வழி அந்தக் கசிவை நிறுத்துவதுதானே தவிர, பீப்பாயைத் தொடர்ந்து நிரப்புவது அல்ல.
சாட்சிகளுக்கு சிகிச்சை அளித்தல்
இரத்தமில்லா அறுவை சிகிச்சைக்காக 1960-களில் எங்கள் கிளினிக்குக்கு யெகோவாவின் சாட்சிகள் வர ஆரம்பித்தபோது, அவர்களிடம் பழக வாய்ப்பு கிடைத்தது. பயனியராக (முழுநேர ஊழியராக) இருந்த மெர்சேதேஸ் கோன்சாலாஸ் என்ற நோயாளியை என்னால் மறக்கவே முடியாது. அவருக்கு அவ்வளவு அதிக இரத்த சோகை இருந்ததால் அவர் பிழைக்கவே மாட்டார் என பல்கலைக்கழக மருத்துவமனை டாக்டர்கள் எண்ணினார்கள், எனவே அவருக்கு ஆப்ரேஷன் செய்ய அவர்கள் முன்வரவில்லை. இரத்தக்கசிவு இருந்தபோதிலும் அவருக்கு எங்கள் கிளினிக்கில் ஆப்ரேஷன் செய்தோம். அது வெற்றியடைந்தது, அவர் 86 வயதில் சமீபத்தில்தான் இறந்தார். அது வரை 30 வருடங்களுக்கும் மேலாக அந்த சகோதரி பயனியர் ஊழியத்தைத் தொடர்ந்து செய்தார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவ சகோதரர்களைக் கவனித்துக் கொள்வதில் சாட்சிகள் காட்டிய அன்பும் அக்கறையும் எப்போதும் என்னை நெகிழ வைத்தன. நோயாளிகளைப் பார்வையிட நான் செல்கையில் அவர்கள் தங்கள் நம்பிக்கைகளைப் பற்றி என்னிடம் சொன்னவற்றை கேட்டு மகிழ்ந்தேன், அவர்கள் கொடுத்த பிரசுரங்களையும் பெற்றுக் கொண்டேன். சீக்கிரத்தில் நான் அவர்களது டாக்டராக மட்டுமல்ல அவர்களது ஆவிக்குரிய சகோதரனாகவும் ஆகிவிடுவேன் என கனவிலும் நினைக்கவில்லை.
நோயாளி ஒருவருடைய மகள் பியாட்ரிஸை நான் திருமணம் செய்துகொண்டபோது சாட்சிகளுடன் எனக்கு இருந்த நெருக்கம் இன்னும் அதிகரித்தது. அவளுடைய குடும்பத்தில் அநேகர் ஏற்கெனவே யெகோவாவின் சாட்சிகளாக இருந்தார்கள், எங்கள் திருமணத்திற்குப் பிறகு இவளும் ஒரு வைராக்கியமான சாட்சியானாள். நானோ என் வேலையிலேயே மூழ்கிக் கிடந்தேன்; மருத்துவ சமுதாயத்தில் எனக்கு ஒரு தனி மதிப்பு இருந்தது. என் வாழ்க்கை எனக்கு திருப்தி அளித்தது. சீக்கிரத்தில் என் வாழ்க்கையை ஒரு பேரிடி தாக்கி நிலைமை தலைகீழாக மாறப் போகிறதென அப்போது துளியும் நினைத்துப் பார்க்கவில்லை.
பேரிடி தாக்குகிறது
அறுவை மருத்துவராக இருக்கும் ஒருவருக்கு கண் பார்வை பறிபோவதென்றால் அதைவிட கொடுமை வேறெதுவும் இல்லை. எனக்கு ஏற்பட்டது அதுதான். திடீரென என் இரண்டு விழித்திரைகளும் சேதமடைந்தன, என்னால் சுத்தமாக பார்க்கவே முடியவில்லை, திரும்பவும் பார்வை கிடைக்குமா என்று எனக்கு அப்போது தெரியவில்லை. ஆப்ரேஷனுக்குப் பிறகு என் இரண்டு கண்களிலும் கட்டுப்போட்டு படுக்க வைத்திருந்தபோது மனமுடைந்து போனேன். உயிரோடிருந்து இனி எந்தப் பயனுமில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்யும் அளவுக்கு சென்றுவிட்டேன். மருத்துவமனையின் நான்காவது மாடியில் நான் இருந்ததால் படுக்கையைவிட்டு இறங்கி, தடவித் தடவி சுவற்றைப் பிடித்துக்கொண்டே ஜன்னலைக் கண்டுபிடிக்க முயன்றேன்; அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வதற்காக. ஆனால் நான் போய் சேர்ந்ததோ மருத்துவமனையின் நடைபாதைக்கு, எனவே ஒரு நர்ஸ் என்னை கைத்தாங்கலாக மீண்டும் என் படுக்கைக்கு அழைத்து வந்து விட்டார்.
அதன் பிறகு மறுபடியும் தற்கொலை முயற்சியில் இறங்கவில்லை. ஆனால் இருண்ட என் சாம்ராஜ்யத்தில் எப்போதும் மனச்சோர்வின் பிடியில் சிக்கி தவித்தேன், தொட்டதற்கெல்லாம் எரிந்து விழுந்தேன். இப்படி பார்வை இழந்து தவித்த காலத்தில் கடவுளிடம் ஒரு வாக்குக்கொடுத்தேன், என்னால் திரும்பவும் பார்க்க முடிந்தால் பைபிளை முதலிலிருந்து கடைசி வரை படித்து முடிப்பதாக சொன்னேன். கடைசியில் என்னால் ஓரளவு பார்க்க முடிந்தது, வாசிக்கவும் முடிந்தது. ஆனால் தொடர்ந்து அறுவை மருத்துவராக பணி செய்ய முடியவில்லை. எனினும், உருகுவேயில் பலரும் அறிந்த ஒரு முதுமொழி உண்டு; “நோ ஹை மால் கே போர் பயேன் நோ வெங்கா,” அதன் அர்த்தம் “எப்படிப்பட்ட கெட்ட காரியத்திலிருந்தும் ஒரு நல்ல காரியம் பிறக்க முடியும்” என்பதே. அதன் நிஜத்தை என் வாழ்க்கையில் நான் ருசிக்கவிருந்தேன்.
தப்பெண்ணத்துடன் ஆரம்பமான கூட்டுறவு
பெரிய அச்செழுத்திலிருந்த த ஜெருசலேம் பைபிள் ஒன்றை வாங்க விரும்பினேன், ஆனால் யெகோவாவின் சாட்சிகளிடம் குறைந்த விலையில் பைபிள் கிடைப்பதை அறிந்தேன்; சாட்சியாக இருந்த ஓர் இளைஞர் அதை என் வீட்டிற்குக் கொண்டுவந்து கொடுப்பதாக சொன்னார். மறுநாள் காலையில் என் வீட்டு வாசலில் அவர் பைபிளுடன் வந்து நின்றார். என் மனைவி கதவைத் திறந்து அவருடன் பேசினாள். பைபிளுக்கான பணத்தை என் மனைவியிடமிருந்து வாங்கிக்கொண்ட பிறகு அவருக்கு இனி இங்கு எந்த வேலையுமில்லை, போகலாமென வீட்டிற்குள்ளிருந்து கோபமாக கத்தினேன்; அவரும் பதில் பேசாமல் உடனடியாக அங்கிருந்து போய்விட்டார். சீக்கிரத்தில் இதே நபர் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறார் என அப்போது நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
ஒருநாள் என் மனைவியிடம் ஒரு வாக்குக் கொடுத்துவிட்டு அதை என்னால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. எனவே அதை சரிக்கட்டி, அவளை சந்தோஷப்படுத்துவதற்கு கிறிஸ்துவின் வருடாந்தர மரண நினைவு ஆசரிப்புக்கு அவளுடன் வருவதாக சொன்னேன். அந்த நாளும் வந்தது, கொடுத்த வாக்கை காப்பாற்ற அவளுடன் போய் அந்த ஆசரிப்பில் கலந்துகொண்டேன். ஒருவருக்கொருவர் நண்பர்களைப் போல பழகியதும் என்னை கனிவோடு வரவேற்றதும் என் மனதுக்குப் பிடித்துப்போனது. பேச்சாளர் தன் பேச்சை ஆரம்பிக்கையில் அவர் யாரென பார்த்ததும் எனக்கு ஆச்சரியம் தாளவில்லை; தரக்குறைவாக பேசி அன்று வீட்டைவிட்டு வெளியேறும்படி கத்தினேனே அதே இளைஞர்தான். அவருடைய பேச்சு என் நெஞ்சைத் தொட்டது, கொஞ்சம்கூட பண்பில்லாமல் அவரிடம் நடந்துகொண்டதை எண்ணி கூனிக்குறுகினேன். என்னால் அதற்கு என்ன பரிகாரம் செய்ய முடியும்?
என் மனைவியிடம் அவரை இரவு சாப்பாட்டுக்கு எங்கள் வீட்டிற்கு வரும்படி அழைக்கச் சொன்னேன், ஆனால் அவளோ: “நான் கூப்பிடுவதைவிட நீங்கள் கூப்பிடுவதுதானே முறையாக இருக்கும்? பேசாமல் இங்கேயே இருங்கள், அவரே நம்மிடம் வருவார்” என்றாள். அவள் சொன்னது நூற்றுக்கு நூறு சரி. அவர் எங்களிடம் வந்து எங்களுக்கு வணக்கம் சொன்னார், என் அழைப்பையும் ஏற்றுக்கொண்டார்.
அன்று இரவில் நடந்த உரையாடல் என் வாழ்க்கையில் அநேக மாற்றங்கள் செய்வதற்கு அச்சாரமாக அமைந்தது. நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்a என்ற புத்தகத்தை அவர் எனக்குக் காட்டினார், நானோ என்னிடமிருந்த அதே புத்தகத்தின் ஆறு பிரதிகளைக் காட்டினேன். மருத்துவமனையில் வேலை செய்தபோது, சாட்சிகளாக இருந்த வெவ்வேறு நோயாளிகள் அவற்றை எனக்குக் கொடுத்திருந்தார்கள், ஆனால் அவற்றை நான் திறந்துகூட பார்த்ததில்லை. சாப்பாட்டின் போதும் அதற்குப் பிறகும் நள்ளிரவு வரை அவரிடம் நான் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன்; அதற்கெல்லாம் அவர் பைபிளிலிருந்து பதில் சொல்லிக்கொண்டிருந்தார். மறுநாள் விடியும் வரை எங்கள் உரையாடல் தொடர்ந்தது. புறப்படுவதற்கு முன்பு அந்த இளைஞர் சத்தியம் புத்தகத்திலிருந்து எனக்கு பைபிள் படிப்பு நடத்துவதாக சொன்னார். அந்தப் புத்தகத்தை நாங்கள் மூன்று மாதங்களில் படித்து முடித்தோம், அடுத்து “மகா பாபிலோன் விழுந்தது!” கடவுளுடைய ராஜ்யம் ஆளுகிறது!b என்ற ஆங்கில புத்தகத்தைப் படித்தோம். அதன் பிறகு என் வாழ்க்கையை யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றேன்.
மீண்டும் பயனுள்ளவனாக உணருதல்
கண்களை இழந்ததால்தான் என் மனக்கண்கள் திறந்தன; அது வரை நான் ஒதுக்கித் தள்ளிய பைபிள் சத்தியங்களைப் புரிந்துகொள்ளும்படி அவ்வாறு திறந்தன! (எபேசியர் 1:19) யெகோவாவையும் அவருடைய அன்பான நோக்கங்களையும் அறிந்துகொண்டது என் வாழ்க்கையை அடியோடு மாற்றிவிட்டது. உயிரோடிருந்து பயனில்லை என்ற எண்ணம் அதற்குப் பிறகு ஏற்படவேயில்லை, மாறாக சந்தோஷம்தான் குடிகொண்டது. உடல் ரீதியிலும் ஆவிக்குரிய ரீதியிலும் ஜனங்களுக்கு உதவுகிறேன், இந்த உலகத்தில் நல்லபடியாக இன்னும் கொஞ்சம் வருஷம் வாழ்வதற்கும் புதிய உலகில் நித்தியமாய் வாழ்வதற்கும் அவர்களுக்கு வழி காட்டுகிறேன்.
மருத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களை தொடர்ந்து படித்து அத்துப்படியாக தெரிந்து வைத்திருக்கிறேன், இரத்தம் சம்பந்தப்பட்ட அபாயங்களையும், மாற்று சிகிச்சை முறைகளையும், நோயாளியின் உரிமைகளையும், உயிர்-ஒழுக்கவியல் (Bioethics) பற்றியும் ஆராய்ச்சி நடத்தியிருக்கிறேன். மருத்துவ கருத்தரங்குகளில் இவ்விஷயங்களின் பேரில் சொற்பொழிவு நடத்த அழைக்கையில் உள்ளூர் மருத்துவர்களுடன் இந்தத் தகவலை பகிர்ந்துகொள்ள எனக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. 1994-ல், பிரேசிலிலுள்ள, ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற இரத்தமில்லா சிகிச்சை பற்றிய முதல் மாநாட்டில் கலந்துகொண்டு இரத்தக் கசிவுகளை எப்படி சமாளிப்பது என்பதன் பேரில் சொற்பொழிவு ஆற்றினேன். ஹிமோடேரப்பியா என்ற மருத்துவ இதழில் “ஊனா ப்ரோப்வெஸ்டா: எஸ்ராடேக்யாஸ் பாரா எல் ட்ராடாமெய்ன்டோ டி லாஸ் ஏமோராக்யாஸ்” (“இரத்தக் கசிவை சமாளிக்கும் சிகிச்சையில் ஒரு திறம்பட்ட தெரிவு”) என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையில் அந்தத் தகவலின் ஒரு பகுதி வெளிவந்தது.
சோதனையிலும் உத்தமத்தில் நிலைத்திருத்தல்
ஆரம்பத்தில் பெரும்பாலும் விஞ்ஞான அறிவின் அடிப்படையில்தான் இரத்தமேற்றுதல் சம்பந்தமாக எனக்கு சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் நானே நோயாளியாக சிகிச்சை பெற்றபோது இரத்தமேற்றுதல்களை எதிர்ப்பதும், டாக்டர்களின் கெடுபிடியான வற்புறுத்தலின் நடுவில் என் விசுவாசத்தைக் காத்துக்கொள்வதும் எளிதல்ல என்பதைப் புரிந்துகொண்டேன். படுமோசமான மாரடைப்புக்குப் பிறகு, என் நிலையை அறுவை மருத்துவருக்கு விளக்க இரண்டு மணிநேரத்துக்கும் மேல் எடுத்தது. அவர் என் நெருங்கிய நண்பர் ஒருவருடைய மகன்; என் உயிரைக் காப்பாற்றுவதற்கு இரத்தம் தேவைப்படுமானால் அதை அளிக்க அவர் தயங்க மாட்டார் என என்னிடம் சொன்னார். என்னுடன் அவர் ஒத்துப்போகாவிட்டாலும் என் நிலையைப் புரிந்துகொண்டு, அதற்கு மதிப்பு கொடுக்க அவருக்கு உதவும்படி நான் மனதுக்குள் யெகோவாவிடம் ஜெபித்தேன். கடைசியில் அவர் என் விருப்பப்படி செய்வதாக உறுதியளித்தார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், புராஸ்டேட் சுரப்பியிலிருந்த பெரிய கட்டியை அகற்ற வேண்டி வந்தது. இரத்தக் கசிவும் இருந்தது. இரத்தமேற்ற வேண்டாமென்பதற்கான காரணங்களை நான் மீண்டும் விளக்கினேன், மூன்றில் இரண்டு மடங்கு இரத்தத்தை நான் இழந்திருந்த போதிலும் மருத்துவ குழுவினர் என் நிலைநிற்கைக்கு மதிப்பு கொடுத்தார்கள்.
மனப்பான்மையில் மாற்றம்
உயிர்-ஒழுக்கவியல் பன்னாட்டு அமைப்பின் அங்கத்தினராக இருக்கும் எனக்கு, நோயாளியின் உரிமைகளை மதிக்கும் விஷயத்தில் மருத்துவ குழுவினருடைய மனப்பான்மையிலும், சட்ட நிபுணர்களுடைய மனப்பான்மையிலும் ஏற்பட்டுள்ள மாற்றம் திருப்தியளிக்கிறது. டாக்டர்கள் அதிகாரத்துடன் செயல்படுவதற்கு மாறாக நோயாளிகள் விவரமறிந்து சம்மதம் தெரிவிக்கும் (informed consent) விஷயங்களுக்கு மதிப்பு காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். எப்படிப்பட்ட சிகிச்சையை நோயாளிகள் பெற விரும்புகிறார்களோ அதைத் தேர்ந்தெடுப்பதற்கு இப்போது அனுமதிக்கிறார்கள். மருத்துவ உதவி பெற தகுதியற்ற கொள்கை வெறியர்கள் என்ற பெயர் இனியும் யெகோவாவின் சாட்சிகளுக்கு இல்லை. மாறாக, அவர்கள் விவரமறிந்து சம்மதம் தெரிவிக்கும் நோயாளிகளாக கருதப்படுகிறார்கள், ஆகவே அவர்களுடைய உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்கப்படுகிறது. மருத்துவ கருத்தரங்குகளிலும் டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும் பின்வருவதை பிரபல பேராசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள்: “யெகோவாவின் சாட்சிகள் எடுத்த முயற்சிகளால் நாம் இப்போது புரிந்துகொண்டிருக்கிறோம் . . . ” “யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம் . . . ” “நாம் முன்னேறுவதற்கு அவர்கள் கற்பித்திருக்கிறார்கள்.”
எல்லாவற்றிற்கும் மேலாக உயிர் மதிப்பு வாய்ந்தது; அது இல்லாவிட்டால், சுதந்திரம், விடுதலை, கண்ணியம் அனைத்தும் அர்த்தமற்றதாகிவிடும் என்றும் சொல்லப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் சொந்தமான உரிமைகள் உண்டு, குறிப்பிட்ட சூழ்நிலையில் தன்னுடைய எந்த உரிமைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் பொறுப்பு அவருக்கே உரியது என்ற சட்டப்பூர்வமான உயரிய கருத்தை அநேகர் இப்போது ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு, கண்ணியம், தெரிவு செய்யும் சுதந்திரம், மத நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தன் உடல் நலம் சம்பந்தமாக தனிப்பட்ட தீர்மானங்கள் செய்வதற்கு நோயாளிக்கு உரிமை இருக்கிறது. யெகோவாவின் சாட்சிகள் நிறுவியிருக்கும் மருத்துவ தகவல் சேவை, இந்தக் காரியங்களை நன்கு புரிந்துகொள்ள அநேக டாக்டர்களுக்கு உதவியிருக்கிறது.
தொடர்ந்து என் குடும்பத்தார் எனக்கு அளிக்கும் ஆதரவு யெகோவாவின் சேவையில் இன்னும் பயனுள்ளவனாக இருப்பதற்கும், கிறிஸ்தவ சபையில் மூப்பராக சேவிப்பதற்கும் எனக்கு உதவியிருக்கிறது. நான் முன்பு சொன்னதுபோல் இளம் வயதிலேயே யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்ளாததற்காக ரொம்பவே வேதனைப்படுகிறேன். எனினும் ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லாதிருக்கும்’ கடவுளுடைய ராஜ்ய ஏற்பாட்டில் வாழும் அருமையான நம்பிக்கையை காணும்படி அவர் என் மனக்கண்களை திறந்திருப்பதற்காக அதிக நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.—ஏசாயா 33:24.c
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
c இந்தக் கட்டுரை தயாராகும் சமயத்தில் சகோதரர் ஏகான் ஹெளசர் இறந்துவிட்டார். அவர் உண்மையுள்ளவராக மரித்தார், அவருடைய நம்பிக்கை நிச்சயமானது என்பதால் அவருடன் சேர்ந்து நாமும் களிகூருகிறோம்.
[பக்கம் 24-ன் படம்]
என் 30-களில், சான்டா லூசியாவிலுள்ள மருத்துவமனையில் பணிபுரியும்போது
[பக்கம் 26-ன் படம்]
1995-ல் என் மனைவி பியாட்ரிஸுடன்