யெகோவாவுடைய படைப்பின் மகத்துவம்
“ஆறுகளே! கைகொட்டுங்கள்”
உலக வரைபடத்தின் மீது உங்கள் பார்வையை செலுத்துங்கள். பெரும்பாலான இடங்களில் பெரும் நிலப்பரப்புகளின் வழியாக பல கோடுகள் நெளிந்து செல்வதை நீங்கள் காண்பீர்கள். சமவெளிகள், பாலைவனங்கள், மேய்ச்சல் நிலங்கள் ஆகியவற்றை கடந்து இந்தக் கோடுகள் செல்கின்றன. பள்ளத்தாக்குகள், செங்குத்தான பள்ளத்தாக்குகள், காடுகள் வழியாகவும் வளைந்து நெளிந்து செல்கின்றன. (ஆபகூக் 3:9) இந்தக் கோடுகள்தான் என்ன? நமது கிரகத்தின் உயிர் நாடியாக திகழும் ஆறுகளே இந்தக் கோடுகள். இவை, பூமியின் படைப்பாளராகிய யெகோவாவின் ஞானத்திற்கும் வல்லமைக்கும் சான்று பகருகின்றன. அவற்றை உற்று கவனிக்கையில், “ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள்; ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்” என்று பாடிய சங்கீதக்காரனின் அதே உணர்ச்சிகளை நாமும் பிரதிபலிக்கிறோம்.—சங்கீதம் [திருப்பாடல்கள்] 98:8, 9, பொது மொழிபெயர்ப்பு.a
ஆறுகளுக்கும் மனித சரித்திரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏதேனிலிருந்து பாய்ந்த ஒரு நதியிலிருந்து நான்கு முக்கிய நதிகள் பிரிந்து சென்றதாக பைபிள் குறிப்பிடுகிறது. (ஆதியாகமம் 2:10-14) மத்திய கிழக்கிலுள்ள யூப்ரடீஸ், டைக்ரிஸ் நதிகளின் செழிப்பான பள்ளத்தாக்குகளிலிருந்தே மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்று உதயமானது. சீனாவின் ஹ்வாங் நதி, தெற்கு ஆசியாவின் சிந்து, கங்கை நதிகள், எகிப்தின் நைல் நதி ஆகியவை பெரும் நாகரிகங்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தன.
எனவே, பெருக்கெடுத்து வலிமையோடு பாய்ந்து வரும் அழகான ஆறுகளைப் பார்க்கும் போதெல்லாம் மனிதன் வாயடைத்துப் போவதில் ஆச்சரியமில்லை! எகிப்தின் நைல் நதி சுமார் 6,670 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடுகிறது. தென் அமெரிக்காவிலுள்ள அமேசான் நதி உலகிலேயே மிகப் பெரிய நதி என்ற பெயரை பெற்றிருக்கிறது. சில ஆறுகள் கம்பீரமாக காட்சியளித்தாலும், நளினமாக ஓடும் சில நதிகளும் உண்டு, ஜப்பானிலுள்ள டோனேவைப் போல் ஒயிலாக, அதே சமயத்தில் விரைவாக பாய்ந்தோடும் சிறிய ஆறுகளும் உண்டு.
ஒரு நதி பாய்ந்தோடுவதற்கு காரணமாக இருப்பது எது? ஒரே வார்த்தையில் சொன்னால் ஈர்ப்புசக்தி. இந்த ஈர்ப்புசக்தியே உயர்ந்த பகுதியிலிருந்து தாழ்ந்த பகுதிக்கு தண்ணீரை இழுக்கிறது. இதனால் சில சமயங்களில் இடிமுழக்கம் போல் பேரிரைச்சலுடன் நீர்வீழ்ச்சிகள் ஏற்படுகின்றன. ஆற்றலும் கம்பீரமும் கலந்த இந்தக் காட்சிகளை விவரித்து பைபிள் இவ்வாறு கூறுகிறது: “ஆண்டவரே! ஆறுகள் குதித்தெழுந்தன; ஆறுகள் இரைச்சலிட்டன; ஆறுகள் ஆரவாரம் செய்தன.”—சங்கீதம் [திருப்பாடல்கள்] 93:3, பொ.மொ.
‘மழையை வருஷிக்கப் பண்ணுகிறவர் யார்?’ என தேவபயமுள்ள மனிதனாகிய யோபுவிடம் யெகோவா கேட்டார். (யோபு 38:26) ஆம், இந்தத் தண்ணீர் எல்லாம் எங்கிருந்து வருகிறது? நீர் சுழற்சி என்ற சிக்கலான அமைப்பு இதற்கு பதிலளிக்கிறது. சூரிய வெப்பத்தாலும் ஈர்ப்புசக்தியாலும் பூமியின் நீர் எப்போதும் சுழற்சி நிலையில் இருக்கிறது. தண்ணீர் ஆவியாகி வளிமண்டலத்திற்கு செல்கிறது. பிற்பாடு, அது குளிர்ந்து திரவமாகி மேகங்களாக மாறுகிறது. அதன் பிறகு இந்த நீராவி பனியாகவோ மழையாகவோ பூமிக்கே திரும்புகிறது. கடல்கள், ஏரிகள், ஆறுகள், பனியாறுகள் ஆகியவற்றிலும் பனி மூடிய துருவப் பகுதிகளிலும் பூமிக்கு அடியிலும் தண்ணீர் பெருமளவில் சேமிக்கப்பட்டு உள்ளது.
வியப்பூட்டும் இந்த சுழற்சியைப் பற்றி பைபிள் இவ்வாறு கூறுகிறது: “எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.” (பிரசங்கி 7:1) எல்லையில்லா ஞானமும் அன்பான அக்கறையும் நிறைந்த கடவுளாகிய யெகோவாவால் மட்டுமே இப்படிப்பட்ட சுழற்சியை இயங்க வைக்க முடியும். நுட்பமான இந்த சுழற்சி திட்டம் கடவுளைப் பற்றி என்ன சொல்கிறது? அவர் மிகுந்த ஞானமுள்ள கடவுள், அன்பாக கவனித்து பராமரிக்கிற கடவுள் என சொல்கிறது.—சங்கீதம் 104:13-15, 24, 25; நீதிமொழிகள் 3:19, 20.
சிறியதோ பெரியதோ ஆறுகள் பல இருந்தாலும், உலகின் நன்னீரில் வெகு சொற்பமே அவற்றில் உள்ளன. என்றாலும், உயிர்வாழ அவை மிகவும் அத்தியாவசியம். “தண்ணீர் மட்டும் கிடைக்காவிட்டால், அதை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வைக்காவிட்டால் மனிதனுடைய எந்த தேவைகளையும்—சிறிதானாலும்சரி, பெரியதானாலும்சரி—பூர்த்தி செய்ய முடியாது. நதிகள் வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானவை என்பதாலேயே அவை பண்டைய நாகரிகங்களின் முக்கிய அம்சங்களாக திகழ்ந்தன” என வாட்டர் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே ஆறுகள் மனிதனின் தாகத்தை தணித்திருக்கின்றன, அவனுடைய தோட்டங்களுக்கு தண்ணீரை தந்திருக்கின்றன. அநேக ஆறுகளுக்கு அருகேயுள்ள வளமிக்க மண், பயிர் செய்வதற்கு ஏற்றது. யெகோவாவின் ஊழியர்கள் அனுபவித்த ஆசீர்வாதங்களைப் பற்றிய குறிப்பில் இந்த விஷயம் எப்படி சொல்லப்பட்டுள்ளது என்பதை கவனியுங்கள்: “யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்! அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப் போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப் போலவும், கர்த்தர் நாட்டின சந்தன மரங்களைப் போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப் போலவும் இருக்கிறது.” (எண்ணாகமம் 24:5, 6) இங்கு நீங்கள் பார்க்கிற வாத்துகள், நரி ஆகிய உயிரினங்களுக்கும் ஆறுகள் உணவளித்து ஆதரிக்கின்றன. உண்மையில், ஆறுகளைப் பற்றி நாம் எந்தளவு கற்றுக்கொள்கிறோமோ அந்தளவு யெகோவாவுக்கு நன்றி செலுத்த நாம் தூண்டப்படுகிறோம்.
[அடிக்குறிப்பு]
a 2004 யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டரில் மே/ஜூன் பக்கத்தைக் காண்க.
[பக்கம் 8-ன் பெட்டி/படம்]
அர்ஜென்டினா மற்றும் பிரேசிலின் எல்லையில் அமைந்துள்ள இக்குவாகு என்ற நீர்வீழ்ச்சி, மற்றெல்லாவற்றையும்விட அகன்ற நீர்வீழ்ச்சியாகும். இதன் அகலம் மூன்று கிலோமீட்டருக்கும் அதிகமாகும். மாசுபடாத அந்த வெப்பமண்டல காட்டில் அமைந்திருக்கும் இந்த நீர்வீழ்ச்சி சுமார் 300 சிறு சிறு நீழ்வீழ்ச்சிகளால் ஆனது. மழை காலத்தில் நொடிக்கு கிட்டத்தட்ட 10,000 கனசதுர மீட்டர் தண்ணீரை இது கொட்டுகிறது.
[பக்கம் 9-ன் படம்]
டோனே ஆறு, ஜப்பான்