எந்த மதத்தை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும்?
‘எல்லா மதங்களும் ஒரே இடத்திற்குச் செல்லும் வெவ்வேறு பாதைகள்தான். உண்மையில் ஒரேவொரு கடவுள்தானே இருக்கிறார்?’ இப்படித்தான் அநேகர் சொல்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, எம்மதமும் சம்மதமே, ஆனால் கட்டாயம் ஒரு மதத்தில் இருக்க வேண்டும்.
அவர்களுடைய விவாதம் நியாயமாக தோன்றலாம், ஏனென்றால் சர்வவல்லமையுள்ள கடவுள் ஒருவர் மட்டுமே இருப்பது உண்மை. (ஏசாயா 44:6; யோவான் 17:3; 1 கொரிந்தியர் 8:5, 6) இருந்தாலும், உண்மைக் கடவுளை சேவிப்பதாக சொல்லிக்கொள்ளும் மதத் தொகுதிகளுக்கு இடையே உள்ள தெள்ளத்தெளிவான வித்தியாசங்களை, ஏன் முரண்பாடுகளைக்கூட நாம் கவனியாதிருக்க முடியாது. பழக்கங்கள், நம்பிக்கைகள், போதனைகள், எதிர்பார்க்கப்படும் காரியங்கள் ஆகியவற்றில் அவை அனைத்தும் மிகவும் வித்தியாசப்படுகின்றன. அந்த வித்தியாசங்கள் அவ்வளவு பெரிதாக இருப்பதால், ஒரு மதத்தையோ மதத் தொகுதியையோ சேர்ந்தவர்கள் மற்றொன்றின் போதனையை அல்லது நம்பிக்கையை புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாமல் திண்டாடுகிறார்கள்.
மறுபட்சத்தில் இயேசு இவ்வாறு சொன்னார்: “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.” (யோவான் 4:24) கடவுளை உண்மையோடு தொழுதுகொள்வது, மாறுபட்ட கருத்துக்களுக்கு—அவர் யார், அவருடைய நோக்கங்கள் என்ன, எப்படிப்பட்ட வணக்கத்தை விரும்புகிறார் ஆகியவற்றின் பேரிலான முரண்பட்ட கருத்துக்களுக்கு—இடமளிக்குமா? நாம் எப்படி வணங்குகிறோம் என்பதில் சர்வவல்லமையுள்ளவருக்கு அக்கறை இல்லை என நினைப்பது நியாயமாகுமா?
அன்றும் இன்றும் உண்மை கிறிஸ்தவர்கள்
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு சிலசமயம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. உதாரணத்திற்கு கொரிந்துவில் இருந்தவர்களைப் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு சொன்னார்: “என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக் குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது. உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.”—1 கொரிந்தியர் 1:11, 12.
பவுல் இந்த வேறுபாடுகளை சிறிய விஷயமாக கருதினாரா? இரட்சிப்படைய அவரவர் தத்தம் பாதையில் சென்றுகொண்டிருந்தார்களா? நிச்சயமாகவே இல்லை! பவுல் இவ்வாறு அறிவுறுத்தினார்: “சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.”—1 கொரிந்தியர் 1:10.
நம்பிக்கையில் ஒன்றுபட்டிருப்பது என்பது, வற்புறுத்தலால் சாதிக்க முடியாத விஷயம். ஒவ்வொருவரும் தனித்தனியாக விஷயங்களை கவனமாக அலசி ஆராய்ந்த பிறகு ஒரேவித முடிவுக்கு வருகையிலும் ஒரேவித முடிவை ஏற்கையிலும்தான் அப்படிப்பட்ட ஒற்றுமையை பெற முடியும். ஆகவே பவுல் கூறிய விதமான ஒற்றுமையை அனுபவிக்க கடவுளுடைய வார்த்தையை தனிப்பட்ட விதமாக படிப்பதும் படிப்பதை கடைப்பிடிக்க மனதார விரும்புவதும் அவசியம். அப்படிப்பட்ட ஒற்றுமையை இன்று காண முடியுமா? நாம் ஏற்கெனவே பார்த்தபடி, கடவுள் தம் மக்களை ஒரு தொகுதியாகத்தான் நீண்ட காலமாக கையாண்டு வந்திருக்கிறார். அந்தத் தொகுதியை இன்று அடையாளம் கண்டுகொள்வது சாத்தியமா?
சரியான கூட்டுறவின் நன்மைகள்
“கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்?” என சங்கீதக்காரனாகிய தாவீது ஒருமுறை கேட்டார். அது உண்மையில் சிந்தனையைத் தூண்டும் கேள்வி. அதற்கு தாவீதே பதிலளித்தார்; “உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே” என்றார். (சங்கீதம் 15:1, 2) கடவுள் எதிர்பார்க்கும் இந்தக் காரியங்களை எந்த மதம் பூர்த்தி செய்கிறது என்பதை கண்டுபிடிக்க, பைபிளின் திருத்தமான புரிந்துகொள்ளுதல் உதவும். பிறகு அந்த மதத் தொகுதியோடு கூட்டுறவு கொள்வதன் மூலம், கடவுளை “ஆவியோடும் உண்மையோடும்” ஒன்றுபட்டு தொழுதுகொள்ளும் மக்களுடைய உற்சாகமளிக்கும் நட்பை அனுபவித்து மகிழ முடியும்.
ஒற்றுமையின்றி பிளவுபட்டிருக்கும் இன்றைய உலகில்கூட நம்பிக்கையிலும் செயலிலும் ஒன்றுபட்டிருப்பது சாத்தியமே என்பதை யெகோவாவின் சாட்சிகள் நிரூபித்திருக்கிறார்கள். இப்போது யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் அநேகர், முன்பு அநேக மதங்களையும் இனத் தொகுதிகளையும் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். சிலர் முன்பு அறியொணாமைக் கொள்கையினராக அல்லது நாத்திகர்களாக இருந்தார்கள். இன்னும் சிலர் மதத்தைப் பற்றியே சிந்திக்காமல் இருந்தார்கள். இப்படி பலதரப்பட்ட மதங்கள், கலாச்சாரங்கள், தத்துவங்கள் ஆகியவற்றிலிருந்து வந்த நபர்கள் இப்போது உலகில் வேறெங்கும் இல்லாத மத ஒற்றுமையை அனுபவித்து மகிழ்கிறார்கள்.
இந்த ஒற்றுமைக்கு அடிப்படை, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள். ஆனால் இப்படித்தான் செய்ய வேண்டுமென மற்றவர்களுக்கு தாங்கள் சொல்ல முடியாது என்பதை யெகோவாவின் சாட்சிகள் அறிந்திருக்கிறார்கள். இருந்தபோதிலும், பைபிளிலிருந்து கற்றுக்கொண்டு அந்த ஸ்திரமான அஸ்திவாரத்தின் அடிப்படையில் வணக்க சம்பந்தமான தெரிவைச் செய்யும்படி மற்றவர்களை உற்சாகப்படுத்தும் வாய்ப்பை அவர்கள் பாக்கியமாக கருதுகிறார்கள். இவ்விதத்தில், கடவுளை “ஆவியோடும் உண்மையோடும்” வணங்குவதன் நன்மைகளை இன்னுமநேகர் பெற முடியும்.
தீய செல்வாக்குகளுக்கும் கவர்ச்சிகளுக்கும் பலியாகும் ஆபத்து இன்று மிக அதிகம். ஆகவே சரியான கூட்டுறவை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்” என்றும் “கெட்ட கூட்டுறவுகள் நல்ல பழக்கங்களைக் கெடுக்கும்” என்றும் பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 13:20; 1 கொரிந்தியர் 15:33, NW) உண்மை வணக்கத்தாருடன் கூட்டுறவு கொள்வது ஒரு பாதுகாப்பு. அதனால்தான் பைபிள் இவ்வாறு நமக்கு நினைப்பூட்டுகிறது: “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்ல வேண்டும்.” (எபிரெயர் 10:24, 25) உண்மை நண்பர்களான ஆவிக்குரிய சகோதர சகோதரிகள், கடவுள் தந்திருக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற ஒருவருக்கொருவர் அன்போடு உதவுவது எப்பேர்ப்பட்ட ஓர் ஆசீர்வாதம்!
இந்தக் கருத்தை ஆட்மார் என்பவர் ஆமோதிக்கிறார். ஜெர்மனியில் வசித்து வந்த ஒரு கத்தோலிக்க குடும்பத்தைச் சேர்ந்த அவர் சர்ச்சுக்கு செல்வதை விட்டுவிட்டார். “சர்ச்சுக்கு உள்ளே போகும்போது இருந்த வெறுமையான உணர்வுதான் வெளியே வந்த பிறகும் இருந்தது” என விளக்குகிறார். இருந்தாலும் அவர் கடவுள் நம்பிக்கையை கைவிடவில்லை. பிறகு யெகோவாவின் சாட்சிகளை சந்திக்க நேர்ந்தது; அவர்கள்தான் கடவுளுடைய உண்மையான ஊழியர்கள் என்பது அவருக்கு தெள்ளத்தெளிவாக புரிந்துவிட்டது. அவர்களோடு கூட்டுறவு கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். இப்போது அவர் சொல்வதாவது: “ஓர் உலகளாவிய அமைப்பின் பாகமாக செயல்படுவது மனதுக்கும் உள்ளத்துக்கும் சமாதானத்தை தருகிறது. பைபிளை இன்னும் திருத்தமாக புரிந்துகொள்ள எனக்கு படிப்படியாக உதவி அளிக்கப்படுகிறது. அது தனிப்பட்ட வகையில் எனக்கு மிகுந்த மதிப்புள்ளதாக இருக்கிறது.”
நாடித் தேடுவோருக்கு ஓர் அழைப்பு
ஒரே சிந்தையுள்ள மக்கள் தொகுதியாக ஒன்றுசேர்ந்து வேலை செய்யும்போது, தனித்தனியாக வேலை செய்பவர்களைவிட அதிக திறம்பட்ட விதத்தில் பணியை நிறைவேற்ற முடியும். உதாரணத்திற்கு இயேசு பூமியை விட்டுச் செல்வதற்கு முன்பாக தம் சீஷர்களிடம் இவ்வாறு அறிவுரை கூறினார்: “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.” (மத்தேயு 28:19, 20) எந்த வழிநடத்துதலோ அமைப்போ இல்லாமல் இந்தப் பணியை எப்படி திருப்திகரமாக நிறைவேற்றி முடிக்க முடியும்? தன்னந்தனியாக கடவுளை சேவிக்க முயற்சித்தால் இந்த வேதப்பூர்வ கட்டளைக்கு எப்படி கீழ்ப்படிய முடியும்?
சென்ற வருடத்தில், உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் பைபிள் அடிப்படையிலான 9,19,33,280 புத்தகங்கள், சிறு புத்தகங்கள், சிற்றேடுகள் ஆகியவற்றையும் 69,76,03,247 பத்திரிகைகளையும் விநியோகித்தார்கள்; இவ்வாறு 235 நாடுகளிலுள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு கடவுளுடைய வார்த்தையிலுள்ள செய்தியை அறிவித்தார்கள். யாருடைய உதவியும் இல்லாத தனிப்பட்ட முயற்சியால் ஒருபோதும் சாதிக்க முடியாததை நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஐக்கியப்பட்ட தொகுதியால் சாதிக்க முடியும் என்பதற்கு எப்பேர்ப்பட்ட தலைசிறந்த உதாரணம்!
யெகோவாவின் சாட்சிகள் பைபிள் பிரசுரங்களை விநியோகிப்பது போக, இலவசமான பைபிள் படிப்பையும் நடத்துகிறார்கள்; அதாவது கடவுள் எதை எதிர்பார்க்கிறார் என்பது சம்பந்தமாக ஆழமான அறிவைப் பெற மக்களுக்கு உதவுகிறார்கள். சென்ற வருடம் சராசரியாக 57,26,509 பைபிள் படிப்புகள் ஒவ்வொரு வாரமும் தனிப்பட்ட நபர்களுடன் அல்லது தொகுதிகளுடன் நடத்தப்பட்டன. இந்த பைபிள் போதனை, வணக்க சம்பந்தமான தெரிவை செய்வதற்கு உதவும் ஸ்திரமான அஸ்திவாரத்தைப் பெற ஏராளமானோருக்கு உதவியிருக்கிறது. கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கும் காரியங்களைப் பற்றி பைபிளிலிருந்து கற்றுக்கொள்ள உங்களை அழைக்கிறோம். பிறகு நீங்களாகவே தெரிவு செய்யலாம்.—எபேசியர் 4:11; பிலிப்பியர் 1:9; 1 தீமோத்தேயு 6:20; 2 பேதுரு 3:18.
நீங்கள் கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமென்றால் மதத்தோடு கூட்டுறவு கொள்வது அவசியம், ஆனால் அது எந்தவொரு மதமாகவோ மதத் தொகுதியாகவோ இருக்கலாகாது. அதேசமயத்தில் மத சம்பந்தமான தெரிவை, நிரூபிக்கப்படாத ஊகங்களின் பேரில் அல்லது கேள்விப்படும் விஷயங்களின் பேரில் அல்லாமல் பைபிளின் திருத்தமான அறிவின் பேரில் செய்ய வேண்டும். (நீதிமொழிகள் 16:25) உண்மை மதத்திற்கு தேவையானவற்றை கற்றுக்கொள்ளுங்கள். அவற்றை உங்கள் நம்பிக்கைகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். பிறகு அதற்கேற்ப தெரிவு செய்யுங்கள்.—உபாகமம் 30:19.
[பக்கம் 7-ன் படங்கள்]
பிளவுபட்டிருக்கும் உலகில் யெகோவாவின் சாட்சிகள் ஒற்றுமையை அனுபவித்து மகிழ்கிறார்கள்