“சுவிசேஷத்தை பரப்பின” தைரியமான “நாடோடி”
ஜார்ஜ் பாரோ என்பவர் தன்னுடைய 18-ம் வயதிற்குள் 12 மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார் என்பதாக குறிப்பிடப்படுகிறது. இரண்டு வருடங்களுக்குப் பின்னர் 20 வெவ்வேறு மொழிகளில் “லாவகமாகவும் நயமாகவும்” அவரால் மொழிபெயர்க்க முடிந்தது.
1833-ல் இங்கிலாந்திலுள்ள லண்டனின் பிரிட்டிஷ் அண்டு ஃபாரின் பைபிள் சொஸைட்டி (BFBS) அபூர்வ வரம் பெற்ற இம்மனிதரை பேட்டி காண அழைத்தது. அவருக்கு பயணத்தை மேற்கொள்ள பணமுமில்லை, அரிய வாய்ப்பை நழுவவிட மனமுமில்லை. ஆகையால் திடமனதோடு 30 வயது பாரோ, நார்விச்சிலுள்ள தன்னுடைய இல்லத்திலிருந்து வெறும் 28 மணிநேரங்களில் 180 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றார்.
அந்த பைபிள் சொஸைட்டி ஒரு சவாலை அவருக்கு முன் வைத்தது—சீனாவின் சில பாகங்களில் பேசப்படும் மான்சூ மொழியை ஆறு மாதங்களுக்குள் கற்கும்படி கேட்டுக்கொண்டது. அதன் இலக்கண புத்தகத்தை அவர் கேட்டபோது, அந்த மொழியில் மத்தேயு சுவிசேஷத்தின் ஒரு பிரதியையும், மான்சூ-பிரெஞ்சு அகராதியையும்தான் அவரிடம் கொடுத்தார்கள். இருப்பினும் வெறும் 19 வாரங்களுக்குள், “கடவுளுடைய அனுக்கிரகத்தால், மான்சூ மொழியை நான் கரைத்துக்குடித்து விட்டேன்” என்று லண்டனுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த சாதனை மிகவும் குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், மெக்சிகோ நாட்டின் சுதேசி மொழியாகிய நாவாட்டல் மொழியில் லூக்கா எழுதின சுவிசேஷத்தையும் அந்த சமயத்தில்தான் அவர் திருத்திக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
மான்சூ மொழியில் பைபிள்
17-வது நூற்றாண்டில், மங்கோலியாவின் விகுர் மொழியின் எழுத்துக்களை பயன்படுத்தி முதன்முதலில் மான்சூ மொழிக்கு எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டபோது, அது சீனாவின் அரசாங்க மொழியானது. காலப்போக்கில் அந்த மொழி மறைந்துவந்த போதிலும், பிரிட்டிஷ் அண்டு ஃபாரின் பைபிள் சொஸைட்டியின் அங்கத்தினர்கள் மான்சூ மொழியில் பைபிள்களை அச்சடித்து விநியோகிப்பதில் ஆர்வம் காட்டினர். 1822-ம் ஆண்டிற்குள் ஸ்டீபான் வி. லிப்போட்சாஃப் மொழிபெயர்த்த மத்தேயு சுவிசேஷத்தின் 550 பிரதிகளை அச்சிடுவதற்கு நிதியுதவி அளித்தனர். ரஷ்ய அயல்நாட்டு அலுவலகத்தில் பணியாற்றிய லிப்போட்சாஃப் சீனாவில் 20 ஆண்டுகள் வாழ்ந்தவர். மத்தேயு சுவிசேஷத்தின் அந்தப் பிரதிகள் செ. பீட்டர்ஸ்பர்கில் அச்சடிக்கப்பட்டன. ஆனால், சிறிதளவு பிரதிகளே விநியோகிக்கப்பட்டன, அதன்பின் மீதி பிரதிகள் வெள்ளத்தால் அழிந்துபோயின.
அதன்பின் முழு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மொழிபெயர்ப்பு வேலை விரைவில் ஆரம்பிக்கப்பட்டது. எபிரெய வேதாகமத்தின் பெரும் பகுதிக்குரிய பண்டைய கையெழுத்துப் பிரதி ஒன்று 1834-ல் கண்டுபிடிக்கப்பட்டபோது பைபிள் மீதுள்ள ஆர்வம் அதிகரித்தது. இப்பொழுது இருக்கும் மான்சூ மொழி பைபிளின் மறுபதிப்பு வேலையை ஒருங்கிணைத்து மீதி மொழிபெயர்ப்பையும் முடிக்க யாரால் முடியும்? தங்கள் சார்பாக இந்த வேலையை செய்து முடிக்க பிரிட்டிஷ் அண்டு ஃபாரின் பைபிள் சொஸைட்டி ஜார்ஜ் பாரோவை அனுப்பியது.
ரஷ்யாவிற்கு
செ. பீட்டர்ஸ்பர்கிற்கு வந்து சேர்ந்தவுடன், பைபிள் சொற்றொடர்களை தான் பிழைதிருத்தம் செய்வதற்காகவும் அதிக துல்லியமாய் மாற்றியமைப்பதற்காகவும் மான்சூ மொழியை கற்பதில் பாரோ மூழ்கிப் போனார். இருப்பினும், அந்த வேலை இமாலய வேலையாகத்தான் இருந்தது. த நியூ டெஸ்டமென்ட்டை அச்சுக்கோர்க்க உதவுவதற்கு ஒவ்வொரு நாளும் 13 மணிநேரம் உழைத்தார். முடிவில் இது “கிழக்கத்திய வேலையின் அழகிய பதிப்பு” என்பதாக போற்றப்பட்டது. ஓராயிரம் பிரதிகள் 1835-ல் அச்சடிக்கப்பட்டன. ஆனால் இந்தப் பிரதிகளை சீனாவுக்கு கொண்டுசென்று அவற்றை விநியோகிக்க வேண்டுமென்ற பாரோவின் ஆசை நிராசையானது. அவர் அவ்வாறு செய்தால், அண்டை நாடான சீனா அதை ஒரு மிஷனரி பயணமாக கருதிவிடுமோ என்றும், அதனுடன் உள்ள நட்புறவுக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்றும் ரஷ்ய அரசாங்கம் பயந்தது. எனவே, “மான்சூ மொழியில் ஒரேவொரு பைபிளை” எடுத்துச் சென்றால்கூட சீனாவின் எல்லைக்குள் காலடி வைக்கக்கூடாது என்று பாரோவிற்கு கட்டளையிடப்பட்டது.
சுமார் பத்தாண்டுகளுக்கு பின்னர், ஒரு சில பிரதிகள் சீனாவில் விநியோகிக்கப்பட்டன. அதுமட்டுமல்ல, மான்சூ மற்றும் சீன மொழிபெயர்ப்புகளை இணையான பத்திகளில் கொண்டிருந்த மத்தேயு, மாற்கு சுவிசேஷங்களின் பதிப்புகள் 1859-ல் தோன்றின. இந்த சமயத்திற்குள், மான்சூ மொழியை வாசிக்க தெரிந்தவர்களில் அநேகர் சீன மொழியில் வாசிக்கவே விரும்பினர். மான்சூ மொழியில் முழு பைபிளும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் மங்க ஆரம்பித்தன. சொல்லப்போனால், மான்சூ மொழியின் சுவடுகள் மறைய மறைய, அந்த இடத்தில் சீன மொழி விரைவிலேயே தன் சுவடுகளை பதிக்க ஆரம்பித்தது. சீனா 1912-ல் குடியரசு நாடாக ஆவதற்குள் இந்த மாற்றம் நிறைவு பெற்றது.
ஐபீரியன் தீபகற்பம்
தன்னுடைய அனுபவங்களால் ஊக்கமடைந்தவராய், ஜார்ஜ் பாரோ லண்டனுக்கு திரும்பினார். 1835-ல் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் செல்ல அவர் மீண்டும் நியமிக்கப்பட்டார். “கிறிஸ்தவ மதத்தின் உண்மைகளை ஏற்றுக்கொள்ள ஜனங்களுக்கு எந்தளவு மனப்பக்குவம் உள்ளது என்பதை கணிக்கவே” தான் அனுப்பப்பட்டதாக பிற்பாடு சொன்னார். பரவலாக இருந்த அரசியல் மற்றும் சமூக அமளியின் காரணமாக, பிரிட்டிஷ் அண்டு ஃபாரின் பைபிள் சொஸைட்டியின் பணி அச்சமயத்தில் அந்த இரு நாடுகளில் பெரும்பாலும் நடைபெறாமல் இருந்தது. போர்ச்சுகலிலுள்ள கிராமவாசிகளோடு பைபிளைப் பற்றி பேசுவதில் பாரோ பெருமகிழ்ச்சி அடைந்தார். ஆனால் சிறிது காலத்திலேயே, அங்கிருந்த ஜனங்களின் மத ஆர்வம் பட்டுப்போனதையும், அவர்களுடைய மெத்தனப் போக்கையும் பார்த்த பிறகு அவர் ஸ்பெயினுக்கு கிளம்பி சென்றுவிட்டார்.
ஸ்பெயினில், முக்கியமாக ஜிப்ஸி மக்களின் விஷயத்தில் பாரோ ஒரு வித்தியாசமான சவாலை சந்தித்தார். அவர்களுடைய பாஷையில் பேசியதால், வெகு விரைவிலேயே அவர்களோடு நெருங்கிய உறவை வளர்த்துக்கொண்டார். அவர் அங்கு வந்து சேர்ந்து கொஞ்ச நாட்களிலேயே, “நியூ டெஸ்டமென்ட்”-ஐ ஸ்பானிய ஜிப்ஸி மொழியான ச்சிடானோவிற்கு மொழிபெயர்க்க ஆரம்பித்தார். இந்த வேலையில் உதவி செய்வதற்காக இரண்டு ஜிப்ஸி பெண்களை அழைத்தார். ஸ்பானிய மொழிபெயர்ப்பிலிருந்து அவர்களுக்கு வாசித்துக் காட்டி, அவர்களுடைய மொழியில் தனக்கு அதை மொழிபெயர்த்து சொல்லுமாறு கேட்டார். இவ்விதமாக அவர் ஜிப்ஸி மரபுத்தொடர்களை பிழையின்றி பயன்படுத்த கற்றுக்கொள்ள முடிந்தது. இந்த முயற்சியின் விளைவால், 1838-ன் வசந்தகாலத்தில் லூக்காவின் சுவிசேஷம் பிரசுரிக்கப்பட்டது. இதனால் வியப்படைந்த ஒரு பிஷப் இவ்வாறு சொல்ல தூண்டப்பட்டார்: “ஜிப்ஸியர்களின் மொழியை பயன்படுத்தி எல்லா ஸ்பானியர்களையும் அவர் மதமாற்றி விடுவார்.”
‘பாஸ்க் மொழியில் வேதவசனங்களை மொழிபெயர்க்க தகுதிவாய்ந்த ஒரு நபரை’ கண்டுபிடிக்க ஜார்ஜ் பாரோவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. அந்தப் பொறுப்பை ஒட்டேசா என்கிற மருத்துவரிடம் அவர் கொடுத்தார். “எனக்கு ஓரளவு தெரிந்த அந்த கிளைமொழியில் அவர் நன்கு தேர்ச்சி பெற்றவர்” என்பதாக பாரோ அவரைப் பற்றி குறிப்பிட்டார். 1838-ல் ஸ்பானிய பாஸ்க் மொழியில், லூக்காவின் சுவிசேஷம் முதல் பைபிள் புத்தகமாக வெளிவந்தது.
பாமர மக்களுக்கு அறிவொளியூட்ட வேண்டும் என்ற ஆவல் கொளுந்துவிட்டு எரிந்ததால், கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பைபிள் புத்தகங்களை விநியோகிக்க, ஆபத்தான நெடுந்தூரப் பயணங்களை பாரோ மேற்கொண்டார். மத அறியாமை மற்றும் மூடநம்பிக்கை என்னும் கட்டுகளிலிருந்து அவர்களை விடுவிக்க நினைத்தார். பாவமன்னிப்பு சீட்டு வாங்குவது பயனற்றது என்பதை வெட்டவெளிச்சமாக்க, அவர் நியாயங்காட்டிப் பேசுவார். உதாரணத்திற்கு: “பாவத்தை விற்கும் இந்த செயலை நல்லவராயிருக்கிற கடவுளால் அங்கீகரிக்க முடியுமா?” என்று கேட்பார். வேரூன்றிய நம்பிக்கைகளை பாரோ தாக்கிப் பேசியதால் தங்களுடைய வேலைகளுக்கு எங்கே தடை வந்துவிடுமோ என்று பைபிள் சொஸைட்டி பயந்தது, ஆகவே பைபிள்களை விநியோகிப்பதில் மட்டும் அவரை கவனம் செலுத்துமாறு அது உத்தரவிட்டது.
ரோமன் கத்தோலிக்க கோட்பாடுகளைப் பற்றிய குறிப்புகள் இல்லாத எல் நியுஈவொ டெஸ்டமென்டொ என்கிற ஸ்பானிய மொழி நியூ டெஸ்டமென்ட்-ஐ அச்சடிக்க வாய்மொழி உத்தரவை பாரோ பெற்றுக்கொண்டார். அந்த மொழிபெயர்ப்பு ஆபத்தானது என்றும் அது “தகாத புத்தகம்” என்றும் விவரித்த பிரதம மந்திரியின் ஆரம்ப எதிர்ப்பை அவர் பொருட்படுத்தவில்லை. பின்னர் ஸ்பானிய மொழி நியூ டெஸ்டமென்ட்-ஐ விற்க மாட்ரிட்டில் ஒரு டிப்போவை பாரோ திறந்தார். இந்த செயலால் அவருக்கும் மத தலைவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கும் சச்சரவு ஏற்பட்டது. 12 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார். அவர் இதை எதிர்த்தபோது, அங்கிருந்து அமைதியாக சென்றுவிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். தனக்கு அளித்த தண்டனை சட்டவிரோதமானது என்பது அவருக்கு நன்கு தெரிந்திருந்ததால், அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியை எடுத்துக்காட்டிப் பேசினார்; தன்னுடைய பெயருக்கு எந்தவொரு அவமதிப்புமின்றி தன்னை முறைப்படி குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கும்வரை அங்கேயே இருந்துவிட முடிவு செய்தார்.—அப்போஸ்தலர் 16:37.
தங்களுடைய வைராக்கியமான இரகசிய தூதுவர் 1840-ல் ஸ்பெயினை விட்டபோது, பைபிள் சொஸைட்டி இவ்வாறு அறிக்கை செய்தது: “கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏறக்குறைய 14,000 பைபிள் பிரதிகள் ஸ்பெயினில் விநியோகிக்கப்பட்டன.” இதில் ஒரு பெரிய பங்கை வகித்த பாரோ, “என்னுடைய வாழ்நாளில் மிகவும் சந்தோஷமான வருடங்கள்” என்று தன்னுடைய ஸ்பானிஷ் அனுபவங்களை சுருங்க உரைக்கிறார்.
முதலில் 1842-ல் பிரசுரிக்கப்பட்ட த பைபிள் இன் ஸ்பெயின் என்ற புத்தகத்தில்—இன்றும் அச்சடிக்கப்படுகிற புத்தகத்தில்—தன் பயணங்களைப் பற்றியும் துணிச்சலான செயல்களைப் பற்றியும் ஜார்ஜ் பாரோ எழுதிய தத்ரூபமான பதிவுகள் இருக்கின்றன. அமோகமாக விற்பனையான இந்தப் புத்தகத்தில், “சுவிசேஷத்தை பரப்பின நாடோடி” என்று அவர் தன்னை அழைத்திருக்கிறார். “கரடுமுரடான குன்றுகளுக்கும் மலைகளுக்கும் மத்தியிலுள்ள ஒதுக்குப்புறமான இரகசிய இடங்களுக்கு சென்று அங்குள்ள ஜனங்களிடமும் என்னுடைய பாணியில் கிறிஸ்துவைப் பற்றி பேச திட்டமிட்டிருந்தேன்” என்று அவர் எழுதுகிறார்.
அலாதி ஆர்வத்தோடு வேதவசனங்களை மொழிபெயர்த்து விநியோகித்ததில், ஜார்ஜ் பாரோ முன்னோடியாக திகழ்ந்தார்—உண்மையிலேயே மதிப்புமிக்க சிலாக்கியம்தான்.
[பக்கம் 29-ன் தேசப்படம்]
பைபிளை மொழிபெயர்த்து விநியோகிக்க ஜார்ஜ் பாரோ எடுத்துக்கொண்ட முயற்சிகள் அவரை (1) இங்கிலாந்திலிருந்து, (2) ரஷ்யா, (3) போர்ச்சுகல், மற்றும் (4) ஸ்பெயினிற்கு அழைத்துச் சென்றது
[படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.
[பக்கம் 28-ன் படம்]
1835-ல், மான்சூ மொழியில் அச்சடிக்கப்பட்ட யோவான் சுவிசேஷத்தின் ஆரம்ப வார்த்தைகள், மேலிருந்து கீழே, இடமிருந்து வலமாக வாசிக்கிறது
[படத்திற்கான நன்றி]
From the book The Bible of Every Land, 1860
[பக்கம் 27-ன் படத்திற்கான நன்றி]
From the book The Life of George Borrow by Clement K. Shorter, 1919