வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
பவுல் கப்பற்சேதத்திற்குள்ளானது சிசிலிக்கு தெற்கே உள்ள மெலித்தா தீவில் அல்ல ஆனால் வேறொரு தீவில் என்று சிலர் வாதாடுகிறார்கள். அப்படியென்றால் பவுலுக்கு கப்பற்சேதம் எந்த தீவில் ஏற்பட்டது?
அயோனியன் கடலில், கிரேக்கு தேசத்தின் மேற்கு கரைக்கு அருகில் கார்ஃபு தீவு இருக்கிறது. இந்த கார்ஃபு தீவுக்கு பக்கத்தில் செஃபலோனியா (அல்லது, கெஃபலனியா) என்ற தீவும் உள்ளது. இந்த செஃபலோனியா தீவில்தான் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு கப்பற்சேதம் ஏற்பட்டது, மெலித்தா தீவில் அல்ல என்ற ஒரு புதுக் கருத்து சமீபத்தில் தோன்றியிருக்கிறது. இந்த கருத்தில்தான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. ரோம நூற்றுக்கதிபதியான யூலியுவின் பாதுகாவலில், பவுலும் அவருடன் காவலில் வைக்கப்பட்டவர்களும் மற்ற படை வீரர்களும் செசரியாவை விட்டு புறப்பட்டுப் போனார்கள் என்று பைபிள் பதிவு நமக்கு சொல்கிறது. வரைபடத்தில் காட்டியுள்ளபடி, அவர்கள் சீதோனுக்கும் மீறாவிற்கும் கப்பலில் சென்றார்கள். அதன்பின், எகிப்திலுள்ள அலெக்சந்திரியாவிலிருந்து வந்திருந்த ஒரு பெரிய தானிய கப்பலில் ஏறி மேற்கேயுள்ள கினீதுவிற்கு புறப்பட்டார்கள். அவர்கள் திட்டமிட்டபடி, ஏஜியன் கடல் வழியாக கிரேக்கு தேசத்தின் முனையைக் கடந்து ரோமாபுரிக்கு போக முடியவில்லை. பலத்த காற்று தெற்கேயுள்ள கிரேத்தாவிற்கு கப்பலை தள்ளியது. அவர்கள் கிரேத்தாவின் ஒதுக்கிலேயே கப்பலை ஓட்டினார்கள். அங்கு நல்ல துறைமுகம் எனப்பட்ட இடத்தில் கப்பலை நிறுத்தினார்கள். “கிரேத்தா தீவை விட்டுப்” புறப்பட்டபோது ‘யூரோக்கிலிதோன் என்னும் கடுங்காற்றில்’ கப்பல் ‘அகப்பட்டுக் கொண்டது.’ பதினான்காம் இராத்திரி வரையாக இந்தப் பெரிய தானியக் கப்பல் ‘கடலில் அலைவுபட்டு ஓடிக்கொண்டிருந்தது.’ முடிவில் கப்பலிலிருந்த 276 பேரும், ஒரு தீவில் கப்பற்சேதத்திற்கு உள்ளானார்கள். பரிசுத்த வேதாகமத்தின் கிரேக்க வாசகம் அந்தத் தீவை மெலட் என்று அழைக்கிறது.—அப்போஸ்தலர் 27:1–28:1.
கடந்த காலங்களில் இந்த மெலட் தீவை வித்தியாசமான இடங்களாக மக்கள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள். சிலர் அதை மெலட் இலீரிகா தீவு என்று நினைத்தார்கள். இப்போது அது மல்யெட் என்று அழைக்கப்படுகிறது. அது ஏட்ரியாடிக் கடலில் குரோஷியா கரைக்குப் பக்கத்தில் அமைந்திருக்கிறது. ஆனால் சிலர் நினைத்தது போல் பவுலுக்கு அங்கு கப்பற்சேதம் ஏற்பட்டிருக்க முடியாது. ஏனென்றால் மல்யெட் வடக்கில் இருந்தது, பவுல் அடுத்தடுத்து பிரயாணம் செய்த இடங்களாகிய சீரகூசா, சிசிலி, மற்றும் இத்தாலியாவின் மேற்கு கரையோரப் பகுதிகளோ வேறு திசையில் இருந்தன.—அப்போஸ்தலர் 28:11-13.
அநேக பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் மெலட் என்னும் இடம் மெலட் ஆஃப்ரிகேனஸை குறிக்கிறது என்கிறார்கள். இந்த மெலட் ஆஃப்ரிகேனஸைத்தான் மக்கள் இன்று மெலித்தா என்று அழைக்கிறார்கள். பவுலுடைய கப்பல் கடைசியாக நின்ற துறைமுகம் கிரேத்தாவிலிருந்த நல்ல துறைமுகமாகும். பிறகு புயல் காற்று கப்பலை மேற்கு நோக்கி கிலவுதா பக்கம் அடித்துச் சென்றது. பல நாட்களுக்கு காற்று கப்பலை வேகமாக அடித்துக் கொண்டே சென்றது. எனவே கடுங்காற்று கப்பலை மேன்மேலும் மேற்கு திசையில் அடித்துச் சென்று மெலித்தாவை அடைந்திருக்கும் என்று சொல்வது நிச்சயம் பொருத்தமானது.
இடைவிடாமல் வீசிய காற்றையும் “கப்பல் அடித்துச் செல்லப்பட்ட திசையையும் வேகத்தையும்” கருத்தில் கொண்டு கானிபாரும் ஹாயுசனும், செ. பவுலுடைய வாழ்க்கையும் நிருபங்களும் என்ற தங்களுடைய ஆங்கில புத்தகத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள்: “கிலவுதாவிற்கும் மெலித்தாவிற்கும் இடையே உள்ள தூரம் 770 கிலோமீட்டருக்கு கொஞ்சம் குறைவானது. எனவே, அறிகுறிகள் அந்தளவுக்கு குறிப்பிடத்தக்கதாக இருப்பதால், பதினான்காம் இரவன்று மாலுமிகள் கப்பலை வேறெந்த இடத்திற்குமல்ல, ஆனால் மெலித்தா தீவிற்கே கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. ஆக, மெலித்தா தீவில்தான் பவுலுக்கு கப்பற்சேதம் ஏற்பட்டதென்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகிறது.”
கப்பற்சேதம் நடந்த இடத்தை பற்றி வெவ்வேறு கருத்துக்கள் நிலவினாலும், இங்கே உள்ள வரைபடத்தில் காட்டப்பட்டிருக்கும் இடத்தில்தான், அதாவது மெலித்தாவில்தான் கப்பற்சேதம் ஏற்பட்டது என்பது பைபிள் பதிவிற்கு இசைவாக இருக்கிறது.
[பக்கம் 31-ன் தேசப்படம்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
எருசலேம்
செசரியா
சீதோன்
மீறா
கினீது
கிரேத்தா
கிலவுதா
மெலித்தா
சிசிலி
சீரகூசா
ரோமாபுரி
மல்யெட்
கிரேக்கு
செஃபலோனியா