‘தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ளுங்கள்’
“நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.”—எபேசியர் 6:11.
1, 2. கிறிஸ்தவர்கள் தரித்துக்கொள்ள வேண்டிய ஆன்மீக சர்வாயுதவர்க்கத்தை உங்களுடைய சொந்த வார்த்தையில் விவரியுங்கள்.
ரோமர்களது ஆட்சி பொ.ச. முதல் நூற்றாண்டில் கொடிகட்டி பறந்தது. அப்போது அறியப்பட்டிருந்த உலகத்தின் பெரும்பகுதியை ஆதிக்கம் செலுத்துமளவுக்கு ரோம படைகள் வலிமை வாய்ந்தவையாய் இருந்தன. இந்த ரோம படையை “சரித்திரத்திலேயே தன்னிகரற்ற இராணுவ அமைப்பு” என ஒரு சரித்திராசிரியர் விவரித்தார். ரோமின் போர்த் திறமிக்க படையில் ஒழுங்கும், கட்டுப்பாடும் உள்ள போர்வீரர்கள் இருந்தனர்; இவர்கள் கடும் பயிற்சியை பெற்றவர்கள் என்பது ஒருபுறமிருக்க, திறமை வாய்ந்த ஒரு சேனையாக அவர்களது வெற்றிக்கு அவர்கள் பூண்டிருந்த சர்வாயுதவர்க்கமும் ஒரு காரணமாக இருந்தது. பிசாசை எதிர்த்து வெற்றிகரமாக போரிட கிறிஸ்தவர்களுக்கு தேவைப்படும் ஆன்மீக சர்வாயுதவர்க்கத்தை விளக்குவதற்கு அப்போஸ்தலனாகிய பவுல் ரோம போர்வீரனின் சர்வாயுதவர்க்கத்தை பயன்படுத்தினார்.
2 இந்த ஆன்மீக சர்வாயுதவர்க்கம் பற்றிய விவரிப்பை எபேசியர் 6:14-17-ல் நாம் காணலாம். “சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத் தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் [“பெரிய,” NW] கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்” என பவுல் எழுதினார். மனித கண்ணோட்டத்தில் பார்த்தால், பவுல் விவரித்த சர்வாயுதவர்க்கம் ஒரு ரோம போர்வீரனுக்கு மிகுந்த பாதுகாப்பு அளித்தது. அந்த போர்வீரன் மற்றொருவரோடு போரிட தன்வசம் இருந்த முக்கிய ஆயுதமாகிய வாளையும் திறமையாக பயன்படுத்தினான்.
3. இயேசு கிறிஸ்துவின் அறிவுரைகளுக்கு கீழ்ப்படிந்து அவருடைய மாதிரியை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்?
3 ஆயுதமும் பயிற்சியும் ஒருபுறமிருந்தாலும், ரோம படையின் வெற்றி அதன் போர்வீரர்கள் தங்கள் படைத் தளபதிக்குக் கீழ்ப்படிவதன் பேரில் சார்ந்திருந்தது. அவ்வாறே, கிறிஸ்தவர்களும் இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவது மிகவும் அவசியம்; அவரை “ஜனங்களுக்கு தளபதி” என பைபிள் விவரிக்கிறது. (ஏசாயா 55:4, NW) அவர் ‘சபைக்குத் தலையாயுமிருக்கிறார்.’ (எபேசியர் 5:23) நம் ஆன்மீக போர் நடவடிக்கைகள் சம்பந்தமான அறிவுரைகளை அவர் வழங்குகிறார், ஆன்மீக சர்வாயுதவர்க்கத்தை எப்படி அணிய வேண்டும் என்பதற்கு சரியான மாதிரியையும் வைக்கிறார். (1 பேதுரு 2:21) கிறிஸ்துவின் இயல்பு நமது ஆன்மீக சர்வாயுதவர்க்கத்தை மிகவும் ஒத்திருப்பதால், கிறிஸ்துவின் சிந்தையை ‘ஆயுதமாகத் தரித்துக்கொள்ளும்படி’ பைபிள் நமக்கு ஆலோசனை தருகிறது. (1 பேதுரு 4:1) நமது ஆன்மீக சர்வாயுதவர்க்கத்தின் ஒவ்வொரு பாகத்தையும் ஆராய்கையில், அதன் முக்கியத்துவத்தையும் திறனையும் அறிந்துகொள்வதற்கு இயேசுவின் முன்மாதிரியை நாம் பார்க்கலாம்.
அரையையும், மார்பையும், பாதத்தையும் பாதுகாத்தல்
4. கச்சை கட்டுவது ஒரு போர்வீரனுக்கு எவ்விதத்தில் பயனளித்தது, இது நமக்கு எதை விளக்குகிறது?
4 சத்தியம் என்னும் கச்சையை அரையில் கட்டினவர்களாய். பைபிள் காலங்களில், போர்வீரர்கள் தங்கள் அரையில் 5 முதல் 15 சென்டிமீட்டர் அகலமுள்ள தோல் கச்சையை, அதாவது பெல்ட்டை கட்டுவார்கள். “சத்தியத்தை கச்சை போல இடுப்பில் இறுகக் கட்டினவர்களாய்” என்பதாக இந்த வசனம் வாசிக்கப்பட வேண்டுமென சில மொழிபெயர்ப்பாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். போர்வீரனின் கச்சை அவனது அரையை பாதுகாக்க உதவியது; வாளை தொங்கவிடுவதற்கும் வசதியாக இருந்தது. ஒரு போர்வீரன் கச்சையை கட்டிவிட்டால் அவன் போருக்கு தயாராகிறான் என்று அர்த்தம். பைபிள் சத்தியம் நமது வாழ்க்கையில் எந்தளவுக்கு செல்வாக்கு செலுத்த வேண்டும் என்பதை விளக்குவதற்கே போர்வீரனின் அரைக் கச்சையை பவுல் உதாரணமாக பயன்படுத்தினார். அப்படியானால், சத்தியத்திற்கு இசைவாக வாழ்வதற்கும், எந்த சந்தர்ப்பத்திலும் அதை ஆதரித்து பேசுவதற்கும் ஒரு கச்சை போல் அதை இறுக்கமாக அணிந்துகொள்ள வேண்டும். (சங்கீதம் 43:3; 1 பேதுரு 3:15) அதற்காக, பைபிளை ஊக்கமாக படிப்பதும், அதிலுள்ள விஷயங்களை தியானிப்பதும் அவசியம். கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை இயேசு தமது “உள்ளத்திற்குள்” வைத்திருந்தார். (சங்கீதம் 40:8) ஆகவே, விரோதிகள் அவரை சோதித்தபோது, தம் நினைவில் வைத்திருந்த வசனங்களை பயன்படுத்தி அவர்களுக்கு பதிலளிக்க முடிந்தது.—மத்தேயு 19:3-6; 22:23-32.
5. சோதனை காலங்களில் பைபிளின் ஆலோசனை நமக்கு எப்படி உதவும் என்பதை விளக்குங்கள்.
5 பைபிள் சத்தியத்தை நம் வழிகாட்டியாக கொள்ளும்போது, பொய்யான நியாய விவாதங்களிலிருந்து அது நம்மை பாதுகாக்கும்; ஞானமான தீர்மானங்களை எடுப்பதற்கும் உதவும். சோதனை காலங்களில், பைபிள் தரும் வழிநடத்துதல்கள் சரியானதை செய்ய வேண்டுமென்ற நம் தீர்மானத்தை பலப்படுத்தும். சொல்லப்போனால், மகத்தான போதகராகிய யெகோவாவை நாம் பார்ப்பது போலவும், நமக்கு பின்னாலிருந்து “வழி இதுவே, இதிலே நடவுங்கள்” என்று சொல்வதை கேட்பது போலவும் இருக்கும்.—ஏசாயா 30:20, 21.
6. நம் அடையாள அர்த்தமுள்ள இருதயத்திற்கு ஏன் பாதுகாப்பு தேவை, அதை நீதி எப்படி திறம்பட பாதுகாக்கும்?
6 நீதியென்னும் மார்க்கவசம். ஒரு போர்வீரனின் மார்க்கவசம் முக்கிய உறுப்பாகிய இருதயத்தை பாதுகாத்தது. நம் அடையாள அர்த்தமுள்ள இருதயத்திற்கு, அதாவது நாம் உள்ளுக்குள் எப்படிப்பட்டவராக இருக்கிறோம் என்பதற்கு விசேஷ பாதுகாப்பு அளிப்பது அவசியம்; ஏனெனில் இது தவறான காரியங்களிடம் சாய்ந்துவிடுகிறது. (ஆதியாகமம் 8:21) ஆகவே, யெகோவாவின் நீதியான தராதரங்களை நாம் கற்றுக்கொள்வதும் அவற்றை நேசிப்பதும் அவசியம். (சங்கீதம் 119:97, 105) நாம் நீதியை நேசிப்பது, யெகோவாவுடைய தெள்ளத் தெளிவான சட்டதிட்டங்களை அலட்சியப்படுத்துகிற அல்லது அவற்றின் முக்கியத்துவத்தை குறைக்கிற உலக சிந்தையை விட்டொழிப்பதற்கு உதவுகிறது. அதுமட்டுமல்ல, நாம் சரியானதை நேசித்து தவறானதை வெறுக்கும்போது, நம்முடைய வாழ்க்கையை பாழாக்கும் வழியை பின்பற்றுவதைத் தவிர்க்கிறோம். (சங்கீதம் 119:99-101; ஆமோஸ் 5:15) இந்த விஷயத்தில் இயேசு ஒரு தலைசிறந்த முன்மாதிரி. அவரைக் குறித்து பைபிள் இவ்வாறு கூறுகிறது: “நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்.”—எபிரெயர் 1:9.a
7. ஒரு ரோம போர்வீரனுக்கு உறுதியான காலணி ஏன் தேவைப்பட்டது, இது எதை தெளிவுபடுத்துகிறது?
7 சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய பாதரட்சையை கால்களிலே தொடுத்தவர்களாய். ரோம போர்வீரர்களுக்கு நீடித்து உழைக்கும் ஷூக்கள் அல்லது உறுதியான காலணிகள் தேவைப்பட்டன; ஏனெனில், படையெடுப்பின்போது சுமார் 27 கிலோ எடையுள்ள சர்வாயுதவர்க்கத்தை அணிந்துகொண்டு அல்லது எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் 30 கிலோமீட்டர் தூரம் அணிவகுத்து செல்வது வழக்கம். கேட்போர் அனைவருக்கும் ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பதற்காக நாம் தயாராய் இருப்பதை தெளிவுபடுத்துவதற்கு காலணியை பவுல் பயன்படுத்தியது பொருத்தமானதே. இது முக்கியமானதாயிருக்க காரணம், பிரசங்கிப்பதற்கு நாம் தயாராகவும் மனமுள்ளவராகவும் இல்லாவிட்டால் யெகோவாவைப் பற்றி ஆட்கள் எப்படி அறிந்துகொள்வார்கள்?—ரோமர் 10:13-15.
8. நற்செய்தியை பிரசங்கிப்பதில் இயேசுவின் மாதிரியை நாம் எப்படி பின்பற்றலாம்?
8 இயேசுவின் வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்ற வேலை என்ன? ரோம ஆளுநர் பொந்தியு பிலாத்துவிடம் அவர் இவ்வாறு சொன்னார்: ‘சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்க நான் இந்த உலகத்தில் வந்தேன்.’ கேட்க மனமுள்ள ஆட்களை எங்கெல்லாம் பார்த்தாரோ அவர்களிடம் இயேசு பிரசங்கித்தார்; அதுமட்டுமல்ல, ஊழிய வேலையில் மிகவும் மகிழ்ச்சி கண்டதால் தன்னுடைய சரீர தேவைகளைவிட அதற்கே முக்கியத்துவம் கொடுத்தார். (யோவான் 4:5-34; 18:37) இயேசுவை போலவே, நற்செய்தியை அறிவிப்பதற்கு நாம் ஆர்வமாக இருந்தால் அதை பிறரிடம் பகிர்ந்துகொள்வதற்கு அநேக சந்தர்ப்பங்கள் கிடைக்கும். அதோடு, ஊழியத்தில் எப்போதும் வைராக்கியமாக ஈடுபடுவது ஆன்மீக ரீதியில் பலமாக இருக்க நமக்கு உதவும்.—அப்போஸ்தலர் 18:5.
கேடகம், தலைச்சீரா, பட்டயம்
9. ரோம போர்வீரனுக்கு ஒரு பெரிய கேடகம் எத்தகைய பாதுகாப்பை அளித்தது?
9 விசுவாசமென்னும் பெரிய கேடகம். ‘பெரிய கேடகம்’ என இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, கிட்டத்தட்ட உடல் முழுவதையும் மறைக்கக்கூடிய ஒரு கேடகத்தைக் குறிக்கிறது. இது எபேசியர் 6:16-ல் சொல்லப்பட்டுள்ள ‘அக்கினியாஸ்திரங்களிலிருந்து’ ஒருவரை பாதுகாக்கும். பைபிள் காலங்களில், உள்ளீடற்ற தண்டுகளாலான ஏவுகணைகளை போர்வீரர்கள் பயன்படுத்தினர்; அவற்றில் எரிகிற இரசக் கற்பூரத் தைலம் நிரப்பப்பட்ட சிறிய இரும்பு கொள்கலன்கள் இருந்தன. இந்த ஏவுகணைகள் “பண்டைக் கால போர்களில் பயன்படுத்தப்பட்ட மிகவும் ஆபத்தான ஆயுதங்களில் ஒன்று” என ஒரு கல்விமான் கூறுகிறார். இப்படிப்பட்ட ஏவுகணைகளிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கு ஒரு பெரிய கேடகம் போர்வீரனிடம் இல்லையென்றால், அவர் படுகாயமடையலாம், ஏன் உயிரே பறிபோய் விடலாம்.
10, 11. (அ) சாத்தான் பயன்படுத்தும் என்னென்ன ‘அக்கினியாஸ்திரங்கள்’ நம் விசுவாசத்தை குலைத்துப் போடலாம்? (ஆ) நெருக்கடியான சமயங்களில் விசுவாசத்தோடு இருப்பதன் அவசியத்தை இயேசுவின் முன்மாதிரி எப்படி காட்டுகிறது?
10 நம்முடைய விசுவாசத்தை குலைத்துப் போட என்னென்ன “அக்கினியாஸ்திரங்களை” சாத்தான் பயன்படுத்துகிறான்? குடும்பத்தில், வேலை செய்யுமிடத்தில், அல்லது பள்ளியில் துன்புறுத்தலையோ எதிர்ப்பையோ அவன் தூண்டிவிடக் கூடும். மேன்மேலும் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஆசை, பாலியல் கவர்ச்சி ஆகியவையும்கூட சிலரை ஆன்மீக ரீதியில் பாழாக்கியிருக்கின்றன. இப்படிப்பட்ட ஆபத்துக்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு, ‘எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் பெரிய கேடகத்தைப் பிடித்துக்கொள்ள’ வேண்டும். யெகோவாவைப் பற்றி கற்று, அவரிடம் தவறாமல் ஜெபம் செய்து, நம்மை அவர் பாதுகாக்கும் விதத்தையும் ஆசீர்வதிக்கும் விதத்தையும் பகுத்துணர்வதன் மூலமே நமக்குள் விசுவாசம் ஏற்படுகிறது.—யோசுவா 23:14; லூக்கா 17:5; ரோமர் 10:17.
11 இயேசு பூமியில் இருந்தபோது, நெருக்கடியான சமயங்களில் உறுதியான விசுவாசத்தோடு இருப்பதன் முக்கியத்துவத்தை செயலில் காட்டினார். அவர் தம்முடைய பிதாவின் தீர்மானங்களில் முழு நம்பிக்கை வைத்தார், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் மகிழ்ச்சி கண்டார். (மத்தேயு 26:42, 53, 54; யோவான் 6:38) கெத்செமனே தோட்டத்தில் தாங்க முடியாத மனவேதனையோடு இருந்த சமயத்திலும்கூட, “என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என தம் பிதாவிடம் இயேசு சொன்னார். (மத்தேயு 26:39) உத்தமத்தோடு நிலைத்திருந்து தமது பிதாவை சந்தோஷப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இயேசு ஒருபோதும் மறந்துவிடவில்லை. (நீதிமொழிகள் 27:11) யெகோவா மீது நமக்கு இதேவிதமான நம்பிக்கை இருக்குமானால், குற்றங்குறையோ எதிர்ப்போ எதுவானாலும் சரி நம் விசுவாசத்தை பலவீனப்படுத்த அனுமதிக்க மாட்டோம். மாறாக, கடவுள் மீது நம்பிக்கை வைத்து, அவரை நேசித்து, அவரது கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது நம்முடைய விசுவாசம் பலப்படுத்தப்படும். (சங்கீதம் 19:7-11; 1 யோவான் 5:3) பொருளாதார நன்மைகளானாலும் சரி, கணநேர இன்பங்களானாலும் சரி, தம்மை நேசிப்போருக்கு யெகோவா அருளப்போகும் ஆசீர்வாதங்களுக்கு இணையாகாது.—நீதிமொழிகள் 10:22.
12. அடையாள அர்த்தமுள்ள நமது தலைச்சீரா எந்த முக்கியமான பாகத்தை பாதுகாக்கிறது, அத்தகைய பாதுகாப்பு ஏன் இன்றியமையாதது?
12 இரட்சணியமென்னும் தலைச்சீரா. போர்வீரனின் தலையையும் மூளையையும், அதாவது அறிவின் இருப்பிடத்தை தலைச்சீரா பாதுகாத்தது. நம் கிறிஸ்தவ நம்பிக்கை ஒரு தலைச்சீராவுக்கு ஒப்பிடப்படுகிறது, ஏனெனில் இது நம் மனதைப் பாதுகாக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 5:8) கடவுளுடைய வார்த்தையின் திருத்தமான அறிவால் நம் மனதை மாற்றியிருக்கிற போதிலும், நாம் இன்னமும் பலவீனமான, அபூரண மனிதரே. நம் மனம் எளிதில் கெடுக்கப்படலாம். இந்த உலகத்தின் இலக்குகள், நம்மை திசைதிருப்பி விடலாம் அல்லது கடவுள் அளித்திருக்கும் நம்பிக்கையைக்கூட குலைத்து அதன் இடத்தை பிடித்துவிடலாம். (ரோமர் 7:18; 12:2) “உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும்” அளிக்க முன்வருவதன் மூலம் இயேசுவை திசைதிருப்பி விடும் வீண் முயற்சியில் பிசாசு இறங்கினான். (மத்தேயு 4:8) ஆனால், இயேசு அதை ஒரேயடியாக மறுத்தார், அவரைப் பற்றி பவுல் சொன்னபடி “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.”—எபிரெயர் 12:2.
13. நமக்கு முன்னால் இருக்கும் எதிர்பார்ப்பில் நம் நம்பிக்கையை எப்படி காத்துக் கொள்ளலாம்?
13 இயேசுவுக்கு இருந்த நம்பிக்கை தானாக வந்ததல்ல. நமக்கு முன் இருக்கும் எதிர்பார்ப்பை மனதில் வைப்பதற்கு பதிலாக, இந்த உலகின் சிந்தைகளும் இலக்குகளுமே நம் மனதில் இருந்தால் கடவுளுடைய வாக்குறுதிகளின் மீதுள்ள நம் விசுவாசம் பலவீனமடைந்துவிடும். நாளடைவில், அந்த எதிர்பார்ப்பை நாம் முற்றிலுமாக இழந்தும் விடலாம். மறுபட்சத்தில், கடவுளுடைய வாக்குறுதிகளைப் பற்றி தவறாமல் தியானித்து வந்தால், நமக்கு முன்னால் இருக்கும் எதிர்பார்ப்பில் நாம் தொடர்ந்து மகிழ்ச்சி காண்போம்.—ரோமர் 12:12.
14, 15. (அ) நம்முடைய அடையாளப்பூர்வ பட்டயம் எது, அதை எப்படி பயன்படுத்தலாம்? (ஆ) சோதனையை சமாளிக்க ஆவியின் பட்டயம் நமக்கு எப்படி உதவும் என்பதை உதாரணத்துடன் விளக்குங்கள்.
14 ஆவியின் பட்டயம். பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள கடவுளுடைய வார்த்தை, அதாவது செய்தி இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைப் போன்றது; நல்மனமுள்ளவர்கள் மதத்தின் பொய்ப் போதனைகளிலிருந்து விலகி ஆன்மீக விடுதலையைக் கண்டடைய இது உதவும். (யோவான் 8:32; எபிரெயர் 4:12) மேலும், சோதனைகள் நம்மை தாக்கினால், அல்லது விசுவாச துரோகிகள் நம் விசுவாசத்தை குலைத்துப் போட முயன்றால் இந்த ஆன்மீக பட்டயம் நம்மை பாதுகாக்கும். (2 கொரிந்தியர் 10:4, 5) ‘வேதவாக்கியங்கள் எல்லாமே தேவ ஆவியினால் அருளப்பட்டிருப்பதாலும் எந்த நற்கிரியையும் செய்ய நம்மை தகுதியுள்ளவர்களாக்குவதாலும்’ நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்!—2 தீமோத்தேயு 3:16, 17.
15 இயேசு வனாந்தரத்தில் சாத்தானால் சோதிக்கப்பட்டபோது, பொய்யான நியாய விவாதங்களையும் தந்திரமான சோதனைகளையும் சந்திக்க ஆவியின் பட்டயத்தை திறமையாக பயன்படுத்தினார். சாத்தானின் ஒவ்வொரு சோதனையின் போதும் இப்படி “எழுதியிருக்கிறதே” என சொல்லி அவர் பதிலளித்தார். (மத்தேயு 4:1-11) அவ்வாறே சோதனையை சமாளிப்பதற்கு பைபிள் வசனங்கள் உதவியதை ஸ்பெயினைச் சேர்ந்த டேவிட் என்ற ஒரு யெகோவாவின் சாட்சி உணர்ந்தார். அவருக்கு 19 வயது இருக்கையில் அவர் வேலை செய்துவந்த அதே க்ளீனிங் கம்பெனியில் இருந்த ஒரு அழகான பெண், “இருவரும் ஜாலியாக இருப்போமா” என்று அவரை அழைத்திருக்கிறாள். கெட்ட எண்ணத்துடன் அவள் விடுத்த அழைப்புக்கு டேவிட் மறுப்பு தெரிவித்தார். அதுமட்டுமல்ல இனி இப்படியொரு சூழ்நிலை ஏற்படாமல் இருப்பதற்காக வேறு இடத்தில் தனக்கு வேலை தரும்படி சூப்பர்வைஸரிடம் கேட்டார். “யோசேப்பின் உதாரணமே என் ஞாபகத்துக்கு வந்தது. அவர் ஒழுக்கக்கேடான காரியத்துக்கு மறுப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் அந்த இடத்தை விட்டே ஓடிப் போய்விட்டார். நானும் அதையே செய்தேன்” என டேவிட் சொன்னார்.—ஆதியாகமம் 39:10-12.
16. ‘சத்திய வசனத்தை சரியாக கையாளுவதற்கு’ ஏன் பயிற்சி தேவை என்பதை விளக்குங்கள்.
16 சாத்தானின் பிடியிலிருந்து தப்பிக்க மற்றவர்களுக்கு உதவுவதற்கும்கூட ஆவியின் பட்டயத்தை இயேசு பயன்படுத்தினார். “என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது” என இயேசு சொன்னார். (யோவான் 7:16) இயேசுவின் திறம்பட்ட போதிக்கும் கலையை பின்பற்றுவதற்கு நமக்கு பயிற்சி தேவை. ரோம போர்வீரர்களைப் பற்றி யூத சரித்திராசிரியர் ஜொஸிஃபஸ் இவ்வாறு எழுதினார்: “போர்வீரர் ஒவ்வொருவரும் தினம்தினம் பயிற்சி செய்தனர், அதுவும் போரில் ஈடுபட்டிருப்பது போல் மிக ஊக்கமாக பயிற்சி செய்தனர். அதனால்தான் போரில் ஈடுபடும்போது எளிதில் களைப்படையாமல் சமாளித்துக் கொள்கிறார்கள்.” நாம் ஈடுபடும் ஆன்மீக போரில் பைபிளை பயன்படுத்துவது அவசியம். அதுமட்டுமல்ல ‘வெட்கப்படாத ஊழியக்காரராயும் சத்திய வசனத்தை சரியாக கையாளுபவராயும் தேவனுக்கு முன்பாக உத்தமராக நிற்பதற்கு’ முழு முயற்சி செய்ய வேண்டும். (2 தீமோத்தேயு 2:15, NW) ஆர்வம் காட்டும் ஒருவருடைய உள்ளப்பூர்வமான கேள்விக்கு பைபிளை பயன்படுத்தி பதிலளிக்கையில் நாம் எவ்வளவாய் திருப்தி அடைகிறோம்!
எந்த சமயத்திலும் ஜெபம்பண்ணுங்கள்
17, 18. (அ) சாத்தானை எதிர்ப்பதில் ஜெபம் என்ன பங்கு வகிக்கிறது? (ஆ) ஜெபத்தின் முக்கியத்துவத்தை ஓர் உதாரணம் மூலம் விளக்குங்கள்.
17 ஆன்மீக சர்வாயுதவர்க்கத்தைப் பற்றி சொன்ன பிறகு மற்றொரு முக்கிய ஆயுதத்தைப் பற்றியும் பவுல் சொல்கிறார். சாத்தானை எதிர்ப்பதற்கு, கிறிஸ்தவர்கள் “சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்” ஜெபம் செய்ய வேண்டும். எப்பொழுதெல்லாம் ஜெபிக்க வேண்டும்? ‘எந்த சமயத்திலும் ஆவியினாலே ஜெபம்பண்ணும்படி’ பவுல் எழுதினார். (எபேசியர் 6:18) சோதனைகளை, பரீட்சைகளை, அல்லது மனச்சோர்வை எதிர்ப்படும்போது, ஜெபம் நம்மை பெருமளவில் பலப்படுத்தும். (மத்தேயு 26:41) இயேசு ‘தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி, வேண்டுதல் செய்திருக்கிறார்.’—எபிரெயர் 5:7.
18 தீரா வியாதியில் கிடந்த தன் கணவரை 15 ஆண்டுகளாக கவனித்து வந்த மிலாக்ரோஸ் இவ்வாறு கூறுகிறார்: “நான் மனமொடிந்து போகும் சமயங்களில் யெகோவாவிடம் ஜெபம் செய்கிறேன். அவரைப் போல் உதவ வல்லவர் வேறொருவரும் எனக்கு இல்லை. ஆமாம், இனியும் என்னால் தாங்க முடியாது என நான் நினைத்த பல சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் யெகோவாவிடம் ஜெபம் செய்தபோது எனக்கு புதுப் பலமும் தெம்பும் கிடைத்தது போலவே உணர்ந்திருக்கிறேன்.”
19, 20. சாத்தானுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற நாம் என்ன செய்வது அவசியம்?
19 தனக்கு கொஞ்ச காலம் மட்டுமே இருக்கிறது என்பதை பிசாசு அறிந்திருப்பதால், நம்மீது வெற்றிகொள்ள அவன் படுதீவிரமாக முயற்சி செய்கிறான். (வெளிப்படுத்துதல் 12:12, 17) ஆகவே வலிமை வாய்ந்த இந்த எதிரியை எதிர்த்து ‘விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராட’ வேண்டியுள்ளது. (1 தீமோத்தேயு 6:12) இவ்வாறு போராட இயல்புக்கு அப்பாற்பட்ட வல்லமை தேவைப்படுகிறது. (2 கொரிந்தியர் 4:7, NW) கடவுளுடைய பரிசுத்த ஆவியின் உதவியும் நமக்கு தேவைப்படுகிறது; எனவே அதற்காக ஜெபிப்பது அவசியம். “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா” என இயேசு சொன்னார்.—லூக்கா 11:13.
20 ஆகவே, யெகோவா அளிக்கும் சர்வாயுதவர்க்கத்தை அணிந்துகொள்வது மிகவும் முக்கியம் என்பது தெளிவாகிறது. இதை நாம் அணிவது விசுவாசம், நீதி போன்ற தெய்வீக பண்புகளை வளர்த்துக்கொள்வதைத் தேவைப்படுத்துகிறது. இது சத்தியத்தை நேசிப்பதை, அதாவது கச்சையைப் போல் கட்டிக்கொள்வதையும், எல்லா சந்தர்ப்பங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கிக்க தயாராய் இருப்பதையும் நமக்கு முன்னால் இருக்கும் நம்பிக்கையை மனதில் பசுமையாக வைத்திருப்பதையும் தேவைப்படுத்துகிறது. ஆவியின் பட்டயத்தை திறமையாக நாம் பயன்படுத்த கற்றுக்கொள்வது அவசியம். கடவுள் தரும் சர்வாயுதவர்க்கத்தை அணிவதன் மூலம் பொல்லாத ஆவி சேனைகளோடு எதிர்த்து போராடி வெற்றி பெற முடியும்; அதன்மூலம் யெகோவாவின் பரிசுத்த பெயருக்கு மகிமையையும் சேர்க்க முடியும்.—ரோமர் 8:37-39.
[அடிக்குறிப்பு]
a ஏசாயா தீர்க்கதரிசனத்தில் யெகோவா தாமே “நீதியை மார்க்கவசமாக” அணிந்திருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளார். ஆகவே, சபைக் கண்காணிகள் நியாயம் வழங்கி, நீதியாக செயல்படுவதை அவர் எதிர்பார்க்கிறார்.—ஏசாயா 59:14, 15, 17.
எப்படி பதிலளிப்பீர்கள்?
• ஆன்மீக சர்வாயுதவர்க்கத்தை அணிவதில் நமக்கு சிறந்த முன்மாதிரி வைப்பவர் யார், அவருடைய முன்மாதிரியை நாம் ஏன் கவனமாக ஆராய வேண்டும்?
• நம் மனதையும் அடையாள அர்த்தமுள்ள இருதயத்தையும் எப்படி பாதுகாக்கலாம்?
• ஆவியின் பட்டயத்தை நாம் எப்படி திறம்பட கையாளலாம்?
• நாம் ஏன் எந்த சமயத்திலும் ஜெபம் பண்ண வேண்டும்?
[பக்கம் 17-ன் படங்கள்]
பைபிளை ஊக்கமாய் படிப்பது எல்லா சமயத்திலும் நற்செய்தியை அறிவிக்க நம்மைத் தூண்டும்
[பக்கம் 18-ன் படங்கள்]
உறுதியான நம்பிக்கை, சோதனைகளை எதிர்ப்படுகையில் நமக்கு கைகொடுக்கிறது
[பக்கம் 19-ன் படங்கள்]
ஊழியத்தில் ‘ஆவியின் பட்டயத்தை’ பயன்படுத்துகிறீர்களா?