இன்று கடவுளை மகிமைப்படுத்துகிறவர்கள் யார்?
“கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்.”—வெளிப்படுத்துதல் 4:11.
1, 2. (அ) பையோமிமெடிக்ஸ் எனும் அறிவியல் துறையை விளக்குவதற்கு சில உதாரணங்கள் தருக. (ஆ) என்ன கேள்வி எழும்புகிறது, அதற்குரிய பதில் என்ன?
சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு, சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் டெ மெஸ்ட்ரல் என்ற எஞ்ஜினியர் ஒரு நாள் தனது நாயை ‘வாக்கிங்’ கொண்டு போனார். அவர் வீடு திரும்புகையில், தன்னுடைய ட்ரஸ் மீதும் நாயின் மீதும் ஒரு செடியின் விதைகள் ஒட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்தார். இவை ஒட்டிக்கொள்வதற்குரிய காரணத்தை அறிய வேண்டுமென்ற ஆர்வத் துடிப்பில் அவற்றை நுண்ணோக்கியில் வைத்துப் பார்த்தார். வளையம்போல் இருக்கும் எதன் மீதும் மாட்டிக்கொள்ளும் சின்னஞ்சிறு கொக்கிகள் அவற்றிற்கு இருந்ததைப் பார்த்து இன்னுமதிக ஆர்வமடைந்தார். நாளடைவில், அதற்கு இணையான ஒன்றை அவராகவே உருவாக்கினார். அதுதான் வெல்க்ரோ. இயற்கையை காப்பியடித்தவர் டெ மெஸ்ட்ரல் மட்டுமே அல்ல. அமெரிக்காவைச் சேர்ந்த ரைட் சகோதரர்கள், பெரிய பெரிய பறவைகள் பறப்பதை பார்த்து ஒரு விமானத்தை வடிவமைத்தார்கள். அலெக்ஸாண்டர் குஸ்டாவ் ஈஃபல் என்ற பிரெஞ்சு எஞ்ஜினியர், மனித உடலின் பாரத்தை தொடை எலும்பு தாங்கும் முறையை அடிப்படையாக வைத்து பாரிஸ் நகரில் ஒரு கோபுரத்தைக் கட்டி அதற்கு தனது பெயரை சூட்டினார்.
2 இந்த உதாரணங்கள் எல்லாம், இயற்கையில் காணப்படும் வடிவமைப்புகளை காப்பியடிக்கும் பையோமிமெடிக்ஸ் எனும் அறிவியல் துறையை நன்கு படம் பிடித்து காட்டுகின்றன.a என்றாலும் நியாயமான ஒரு கேள்வி எழும்புகிறது: மனித கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக விளங்கும் இந்தச் சின்னஞ்சிறிய விதைகள், பெரிய பெரிய பறவைகள், மனிதனின் தொடை எலும்பு ஆகியவற்றையும் இதுபோன்ற இன்னும் பல பொருட்களையும் வடிவமைத்தவரை அறிவியல் அறிஞர்கள் எந்தளவுக்கு புகழ்ந்து பாராட்டுகிறார்கள்? வருத்தகரமான உண்மை என்னவென்றால், இன்றைய உலகம் கடவுளுக்கு சேர வேண்டிய பாராட்டை அல்லது மகிமையை அபூர்வமாகவே செலுத்துகிறது.
3, 4. “மகிமை” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தையின் அர்த்தம் என்ன, கடவுள் சம்பந்தமாக பயன்படுத்தப்படுகையில் இது எதைக் குறிக்க வேண்டும்?
3 ஆனால் சிலர் இவ்வாறு நினைக்கலாம்: ‘ஏன் கடவுளுக்கு மகிமை செலுத்த வேண்டும்? அவர் ஏற்கெனவே மகிமை பொருந்தியவராகத் தானே இருக்கிறார்?’ ஆம், இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் மகிமை பொருந்தியவர் யெகோவாதான். இருந்தாலும், எல்லா மனிதருமே அவரை மகிமை பொருந்தியவராய் கருதுகிறார்கள் என சொல்ல முடியாது. பைபிளில், “மகிமை” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தையின் அடிப்படை கருத்து “கனமாயிருத்தல்” என்பதாகும். மற்றவர்கள் பார்வையில் ஒருவரை கனம் பொருந்தியவராகவோ அல்லது முக்கியமானவராகவோ ஆக்கும் எதையும் அது குறிக்கிறது. கடவுள் சம்பந்தமாக இந்த வார்த்தை பயன்படுத்தப்படும்போது, மனிதர் பார்வையில் அவரை கனம் பொருந்தியவராக ஆக்கும் எதையும் குறிக்கிறது.
4 கடவுளை கனம் பொருந்தியவராக ஆக்கும் காரியங்களை இன்று அநேகர் பொருட்படுத்துவதே இல்லை. (சங்கீதம் 10:4; 14:1) சொல்லப்போனால், சமுதாயத்திலுள்ள பெரும் புள்ளிகளுக்கு கடவுள் நம்பிக்கையே கிடையாது; மகிமை பொருந்திய படைப்பாளரை மதிப்பு குறைவாக கருதும்படி மற்றவர்களையும் அவர்கள் தூண்டியிருக்கிறார்கள். இதை என்னென்ன வழிகளில் அவர்கள் செய்திருக்கிறார்கள்?
“அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை”
5. படைப்பின் அற்புதங்களுக்கு அறிவியலாளர்கள் பலர் எப்படி விளக்கம் கொடுக்கிறார்கள்?
5 கடவுள் என்று யாருமே கிடையாது என அநேக அறிவியலாளர்கள் அடித்துக் கூறுகிறார்கள். அப்படியானால், மனிதகுலமும் மற்ற அற்புத படைப்புகளும் எப்படி தோன்றியதாக விளக்குகிறார்கள்? இவை எல்லாம் பரிணாமத்தின் காரணமாக, அதாவது தற்செயலாக தோன்றியதென விளக்குகிறார்கள். உதாரணமாக, பரிணாமவாதி ஸ்டீஃபன் ஜே கூல்ட் இவ்வாறு எழுதினார்: “ஒருவித மீன் இனத்தின் விநோதமான துடுப்புகள் பிற்பாடு கால்களாக உருமாறின; அந்த மீன் இனம் நிலத்தில் வாழும் உயிரினமாக மாறியது. இப்படித்தான் படிப்படியாக நாம் தோன்றினோம். . . . இந்த விளக்கம் ஒருபுறமிருக்க, ‘அறிவுப்பூர்வமான’ வேறு விளக்கம் கிடைக்காதா என நாம் ஏங்கலாம். ஆனால் அப்படி ஒரு விளக்கம் இல்லவே இல்லை.” அதே போலவே, ரிச்சர்ட் ஈ. லீக்கீயும் ரோஜர் லூயனும் இவ்வாறு எழுதினார்கள்: “மாபெரும் உயிரியல் விபத்தின் விளைவே மனித இனம் என்று சொல்லலாம்.” இயற்கையில் காணப்படும் அழகையும் வடிவமைப்பையும் புகழ்ந்து பேசும் சில அறிவியலாளர்களும்கூட அதற்கான பாராட்டை கடவுளுக்கு செலுத்துவதில்லை.
6. படைப்பாளருக்கு சேர வேண்டிய புகழை செலுத்த விடாமல் அநேகரை எது தடுக்கிறது?
6 பரிணாமம் உண்மையென அடித்துச் சொல்லும் மேதைகள், விஷயம் அறியாதவர்கள்தான் அதை நம்ப மாட்டார்கள் என மறைமுகமாக குறிப்பிடுகிறார்கள். அவர்களுடைய கருத்தை மற்றவர்கள் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்கிறார்கள்? சில ஆண்டுகளுக்கு முன்பு, பரிணாம மேதை ஒருவர், அக்கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களை பேட்டி கண்டார். “பரிணாமத்தை நம்புகிறவர்கள் எல்லாருமே அறிவாளிகள் என சொல்லப்படுவதால்தான் பரிணாமத்தை பலரும் நம்புகிறார்கள் என்பதை நான் தெரிந்துகொண்டேன்” என்று முடிவாக சொன்னார். ஆம், மேதைகளுடைய நாத்திக கருத்துகள், படைப்பாளருக்கு உரிய புகழை மற்றவர்கள் செலுத்த முடியாதபடி செய்துவிடுகின்றன.—நீதிமொழிகள் 14:15, 18.
7. ரோமர் 1:20-ன்படி, காணக்கூடிய படைப்பின் மூலம் எதைத் தெளிவாகக் காண முடிகிறது, ஏன்?
7 கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாலா அறிவியலாளர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்? நிச்சயமாகவே இல்லை! படைப்பாளர் இருக்கிறார் என்பதற்கே நம்மைச் சுற்றிலும் ஆதாரங்கள் இருக்கின்றன. அவரைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது [மனிதகுலம் உண்டானது] முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் [அவநம்பிக்கையுள்ளவர்கள்] போக்குச்சொல்ல இடமில்லை.” (ரோமர் 1:20) படைப்பாளர் இருக்கிறார் என்பதற்குரிய அத்தாட்சி அவரது படைப்புகளில் தெளிவாகக் காணப்படுகிறது. ஆக, கடவுள் இருக்கிறார் என்பதற்கான அத்தாட்சியை மனிதகுலத்தின் ஆரம்பம் முதற்கொண்டே காணக்கூடிய படைப்புகள் மூலம் மனிதன் ‘தெளிவாகக் காண’ முடிந்திருக்கிறது என பவுல் கூறுகிறார். குறிப்பாக எங்கெல்லாம் இந்த அத்தாட்சியை காண முடிகிறது?
8. (அ) வானங்கள் கடவுளுடைய வல்லமையையும் ஞானத்தையும் எப்படி பறைசாற்றுகின்றன? (ஆ) இப்பிரபஞ்சத்திற்கு ஒரு காரணகர்த்தா இருந்திருக்கிறார் என்பதை எது எடுத்துக் காட்டுகிறது?
8 கடவுள் இருக்கிறார் என்பதற்கான அத்தாட்சியை நட்சத்திரங்கள் நிறைந்த வானில் நாம் காண்கிறோம். “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது” என சங்கீதம் 19:1 சொல்கிறது. “வானங்கள்,” அதாவது சூரியன், சந்திரன், மற்றும் நட்சத்திரங்கள் கடவுளுடைய வல்லமையையும் ஞானத்தையும் பறைசாற்றுகின்றன. நட்சத்திரங்களின் எண்ணிக்கை நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. விண்வெளியில் உள்ள இந்த அனைத்தும் தாறுமாறாக இயங்காமல் துல்லியமான இயற்பியல் சட்டங்களுக்கு இசைய இயங்குகின்றன.b (ஏசாயா 40:26) இந்த ஒழுங்கு குருட்டாம்போக்கில் ஏற்பட்டதென சொல்வது நியாயமாக இருக்குமா? குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இப்பிரபஞ்சத்திற்கு ஒரு திடீர் ஆரம்பம் இருந்ததென அநேக அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். இதை விளக்கும் வண்ணம் ஒரு பேராசிரியர் இவ்வாறு எழுதினார்: “இந்தப் பிரபஞ்சம் நித்திய நித்திய காலமாக இருந்து வந்திருக்கிறது என்று சொன்னால் ஒரு நாத்திகரோ அறியொணாமைவாதியோ எளிதில் ஏற்றுக்கொள்வார். அதே போல பிரபஞ்சத்திற்கு ஓர் ஆரம்பம் இருந்தது என்று சொன்னால் அதற்கு ஒரு காரணகர்த்தாவும் இருக்க வேண்டும் என்பதை எல்லாருமே ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார்கள்.”
9. விலங்கினங்களில் யெகோவாவின் ஞானம் எப்படி வெளிப்படுகிறது?
9 கடவுள் இருக்கிறார் என்பதற்கான அத்தாட்சியை பூமியிலும்கூட நாம் காண்கிறோம். “ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது” என சங்கீதக்காரன் வியந்து பாடினார். (சங்கீதம் [திருப்பாடல்கள்] 104:24, பொது மொழிபெயர்ப்பு) விலங்கினங்கள் உட்பட யெகோவாவின் ‘படைப்புகள்’ அனைத்தும் அவருடைய ஞானத்திற்கு அத்தாட்சி அளிக்கின்றன. ஆரம்பத்தில் குறிப்பிட்ட விதமாக, ஜீவராசிகளின் வடிவமைப்பு அத்தனை பிரமாதமாக இருப்பதாலேயே அறிவியலாளர்கள் பெரும்பாலும் அதை காப்பியடிக்க முயலுகிறார்கள். அதற்கு இன்னும் சில உதாரணங்களை நாம் பார்க்கலாம். உறுதியான ஹெல்மட்டுகளை உண்டாக்குவதற்கு மான் கொம்புகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்கிறார்கள்; சிறந்த காது கேட்கும் மிஷின்களை கண்டுபிடிப்பதற்கு கூர்மையான செவியுணர்வுடைய ஈ வகைகளை ஆராய்ச்சி செய்கிறார்கள்; ‘ஸ்டெல்த்’ விமானங்களை கண்டுபிடிக்கும் எண்ணத்தில் ஆந்தைகளின் இறக்கை சிறகுகளை ஆராய்கிறார்கள். ஆனால் மனிதன் எந்தளவுக்கு முயன்றாலும் இயற்கையை அப்படியே காப்பியடிக்க முடியாது. பையோமிமிக்ரி—இயற்கையின் தூண்டுதலால் புதுப்புது டிசைன்கள் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “மனிதன் செய்ய விரும்பும் அனைத்தையும் மற்ற ஜீவராசிகள் செய்திருக்கின்றன; அதுவும் நிலத்தடி எரிபொருளை அளவுக்குமீறி பயன்படுத்தாமல், பூமியை மாசுபடுத்தாமல், தங்கள் எதிர்காலத்திற்கும் ஆபத்து விளைவிக்காமல் இதையெல்லாம் செய்திருக்கின்றன.” யெகோவாவின் ஞானத்திற்கு எப்பேர்ப்பட்ட ஓர் அத்தாட்சி!
10. மகத்தான வடிவமைப்பாளரை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன் நியாயமற்றது? விளக்கவும்.
10 மேலே வானத்திலும் சரி, கீழே பூமியிலும் சரி, படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதற்கான அத்தாட்சி தெள்ளத் தெளிவாக காணப்படுகிறது. (எரேமியா 10:12) “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர்” என பரலோக சிருஷ்டிகள் சொன்னதை நாமும் இருதயப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். (வெளிப்படுத்துதல் 4:11) அநேக அறிவியலாளர்கள் தங்கள் கண்களால் இயற்கையின் வடிவமைப்பை பார்த்து வியந்திருப்பது என்னவோ உண்மைதான். ஆனாலும் தங்களுடைய ‘மனக்கண்களால்’ படைப்பாளர் ஒருவர் இருப்பதற்கான அத்தாட்சியை அவர்கள் பார்ப்பதில்லை. (எபேசியர் 1:19) இதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: ஓர் அழகான ஓவியத்தை பார்த்து ரசித்துவிட்டு, அதை ஒரு கலைஞர் வரைந்தார் என ஏற்றுக்கொள்ளாமல் போவது நியாயமற்றதாக இருக்கும் அல்லவா? அப்படியே இயற்கையின் அழகையும் வடிவமைப்பையும் பார்த்து ரசித்துவிட்டு, அவற்றை மகத்தான வடிவமைப்பாளர் ஒருவர் படைத்தாரென ஏற்க மறுப்பதும் நியாயமற்றது. ஆகவே, கடவுளை நம்பாதவர்கள் ‘போக்குச்சொல்ல இடமில்லை’!
அநேகரை மோசம்போக்கும் ‘குருட்டு வழிகாட்டிகள்’
11, 12. முன்விதித்தல் என்ற கோட்பாடு எந்த ஊகத்தின் அடிப்படையில் அமைந்தது, இக்கோட்பாடு கடவுளுக்கு மகிமை சேர்ப்பதில்லை என எது காட்டுகிறது?
11 மத நம்பிக்கையுள்ள அநேகர் தங்களுடைய வழிபாட்டு முறை கடவுளை மகிமைப்படுத்துவதாக மனதார நம்புகிறார்கள். (ரோமர் 10:2, 3) ஆனால், பொதுவில் மதம் என்பதை எடுத்துக்கொண்டால், கடவுளை மகிமைப்படுத்த விடாமல் கோடிக்கணக்கானோரை தடுத்திருக்கும் மற்றொரு அம்சமாகவே அது இருக்கிறது. அதை எப்படி சொல்ல முடியும்? இரண்டு வழிகளை நாம் பார்க்கலாம்.
12 மதங்கள் கடவுளுக்கு மகிமை செலுத்தாமல் அவமதிக்கும் ஒரு வழி பொய் போதனைகளின் மூலமாகும். உதாரணத்திற்கு முன்விதித்தல் எனும் போதனையை எடுத்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்தை அறியும் ஆற்றல் கடவுளுக்கு இருப்பதால், சம்பவிக்கப்போகும் அனைத்தையும் வெகு காலத்திற்கு முன்பே அவர் அறிந்திருக்க வேண்டும் என்ற ஊகத்தின் அடிப்படையில் அமைந்ததே இந்தக் கோட்பாடு. ஆக, முன்விதித்தல் என்ற இக்கோட்பாடு ஒவ்வொருவருக்கும் எதிர்காலத்தில் நல்லது நடக்குமா, கெட்டது சம்பவிக்குமா என்பதை வெகு காலத்திற்கு முன்பே கடவுள் தீர்மானித்து விட்டார் என்ற கருத்தைத் தருகிறது. இக்கருத்தின்படி, இன்றைய உலகின் துயரத்திற்கும் துன்மார்க்கத்திற்கும் கடவுள் மீது பழிபோடப்படுகிறது. உண்மையில், “உலகத்தின் அதிபதி” என பைபிள் அழைக்கிற, கடவுளுடைய பிரதான எதிரியாகிய சாத்தான் மீது சுமத்தப்பட வேண்டிய பழி கடவுள் மீது சுமத்தப்படுவதால் அது அவருக்கு கொஞ்சமும் மகிமை சேர்ப்பதில்லை.—யோவான் 14:30; 1 யோவான் 5:19.
13. எதிர்காலத்தை முன்னறியும் திறமையை கடவுளால் கட்டுப்படுத்த முடியாது என நினைப்பது ஏன் முட்டாள்தனமானது? விளக்கவும்.
13 முன்விதித்தல் என்ற இந்தக் கோட்பாடு கடவுள் மீது பழிசுமத்துகிற வேதப்பூர்வமற்ற ஒரு போதனையாகும். கடவுளால் செய்ய முடிகிற காரியம் எது என்பதற்கும் உண்மையில் அவர் செய்து வருகிற காரியம் எது என்பதற்கும் வித்தியாசம் புரியாதபடி செய்துவிடுகிறது இந்தப் போதனை. நடக்கப்போகிறவற்றை கடவுளால் முன்னறிய முடியும் என்பதை பைபிளே தெளிவாகக் காட்டுவது உண்மைதான். (ஏசாயா 46:9, 10) என்றாலும், எதிர்காலத்தை முன்னறியும் திறமையை அவரால் கட்டுப்படுத்த முடியாது என்றோ ஒவ்வொரு சம்பவத்திற்கும் அவரே பொறுப்பாளி என்றோ நினைப்பது நியாயமற்றது. இதை இப்படி விளக்கலாம்: நீங்கள் அதிபலசாலி என வைத்துக்கொள்ளுங்கள். அதனால் கண்ணில் படும் கனமான பொருட்கள் எல்லாவற்றையும் தூக்க வேண்டும் என நினைப்பீர்களா? நிச்சயம் அப்படி நினைக்க மாட்டீர்கள். அதுபோலவே, எதிர்காலத்தை முன்னறியும் திறமை இருக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் கடவுள் முன்னறிவதோ முன்தீர்மானிப்பதோ இல்லை. மாறாக, முன்னறியும் திறமையை தம் விருப்பப்படி பயன்படுத்துகிறார்.c எனவே, முன்விதித்தல் கோட்பாடும் மற்ற எல்லா பொய்ப் போதனைகளும் கடவுளுக்கு மகிமை சேர்ப்பதில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
14. மதங்கள் எவ்வழியில் கடவுளை அவமதித்திருக்கின்றன?
14 மதங்கள் கடவுளை அவமதிக்கிற மற்றொரு வழி, அவற்றின் அங்கத்தினர்களுடைய நடத்தை மூலமாகும். இயேசுவின் போதனைகளை பின்பற்ற வேண்டுமென கிறிஸ்தவர்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள். ‘ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும்,’ ‘உலகத்தின் பாகமாக இல்லாதிருக்க வேண்டும்’ என்றெல்லாம் இயேசு தம் சீஷர்களுக்கு போதித்தார். (யோவான் 15:12; 17:14-16) இந்தப் போதனைகளை கிறிஸ்தவமண்டல குருமார் உண்மையிலேயே பின்பற்றியிருக்கிறார்களா?
15. (அ) தேசங்களின் போரில் குருமார் எவ்விதங்களில் பங்கு வகித்திருக்கிறார்கள்? (ஆ) குருமாரின் நடத்தை கோடிக்கணக்கானோரை எப்படி பாதித்திருக்கிறது?
15 உதாரணமாக, போர் என்ற விஷயத்தில் குருமார் வகித்த பங்கை சிந்தித்துப் பாருங்கள். தேசங்களின் அநேக போர்களை அவர்கள் ஆதரித்திருக்கிறார்கள், அனுமதித்திருக்கிறார்கள், சொல்லப்போனால் அவற்றிற்கு முக்கிய காரணராயும் இருந்திருக்கிறார்கள். படைவீரர்களை ஆசீர்வதித்தது மட்டுமல்லாமல், நாட்டிற்காக கொலைகள் செய்வதை ஆமோதித்தும் இருக்கிறார்கள். ‘தங்கள் மதத்தை சேர்ந்த எதிர்தரப்பு குருமாரும் தாங்கள் செய்வதைத்தான் செய்கிறார்கள் என்பதை அவர்கள் நினைப்பதே இல்லையா?’ என நமக்கு கேட்கத் தோன்றுகிறது. (“கடவுள் யார் பக்கம்?” என்ற பெட்டியைக் காண்க.) இரத்தம் சிந்தும் போர்களில் தங்களுக்கு கடவுளுடைய ஆதரவு இருக்கிறது என சொல்லும்போது அந்தக் குருமார் கடவுளை மகிமைப்படுத்துவதில்லை. அவ்வாறே பைபிள் தராதரங்கள் நம்முடைய காலத்திற்கு பொருந்தாது என்று அவர்கள் சொல்லும்போதும் பாலியல் ஒழுக்கக்கேடுகளை பொருட்படுத்தாமல் விட்டுவிடும்போதும் அவர்கள் கடவுளை மகிமைப்படுத்துவதில்லை. உண்மையில், ‘அக்கிரமச் செய்கைக்காரர்’ என்றும் ‘குருடருக்கு வழிகாட்டுகிற குருடர்கள்’ என்றும் இயேசு அழைத்த மதத் தலைவர்களையே இவர்கள் நமக்கு நினைப்பூட்டுகிறார்கள். (மத்தேயு 7:15-23; 15:14) குருமாரின் நடத்தையால் கோடிக்கணக்கானோருக்கு கடவுள் மீதுள்ள அன்பே தணிந்துபோய் விட்டது.—மத்தேயு 24:12.
யார் உண்மையில் கடவுளை மகிமைப்படுத்துகிறார்கள்?
16. யார் உண்மையில் கடவுளை மகிமைப்படுத்துகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலை பெற நாம் ஏன் பைபிளில் பார்க்க வேண்டும்?
16 இவ்வுலகில் பிரபலமானவர்களும், செல்வாக்கு மிக்கவர்களும் கடவுளை மகிமைப்படுத்த தவறியிருக்கிறார்கள் என்றால் யார்தான் உண்மையில் கடவுளை மகிமைப்படுத்துகிறார்கள்? இதற்கு பதிலை நாம் பைபிளில் பார்க்க வேண்டும். தம்மை எப்படி மகிமைப்படுத்த வேண்டுமென்று சொல்ல கடவுளுக்கு உரிமை இருக்கிறது; அதோடு, தம் வார்த்தையாகிய பைபிளில் அதற்கான தராதரங்களையும் அவர் கொடுத்துள்ளார். (ஏசாயா 42:8) கடவுளை மகிமைப்படுத்துவதற்கான மூன்று வழிகளை நாம் இப்போது சிந்திக்கலாம்; இவை ஒவ்வொன்றும் இன்று யார் இதை செய்து வருகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கிறது.
17. தம் பெயரை மகிமைப்படுத்துவது தமது சித்தத்தின் முக்கிய அம்சம் என்பதை யெகோவா தாமே எப்படி குறிப்பிட்டுள்ளார், பூமியெங்கும் இன்று கடவுளுடைய பெயரை புகழ்ந்து பேசுபவர்கள் யார்?
17 முதலாவதாக, கடவுளுடைய பெயரை புகழ்ந்து பேசுவதன் மூலம் அவரை மகிமைப்படுத்தலாம். அவ்வாறு புகழ்ந்து பேசுவது கடவுளுடைய சித்தத்தின் முக்கிய அம்சமாகும்; இயேசுவிடம் யெகோவா சொன்ன விஷயத்திலிருந்து இது தெளிவாகிறது. இயேசு இறப்பதற்கு சில நாட்களுக்கு முன், “பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும்” என ஜெபித்தார். அப்போது, “மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன்” என்ற சத்தம் கேட்டது. (யோவான் 12:28) அது யெகோவாவின் சத்தமே என்பதில் சந்தேகமில்லை. அவர் கொடுத்த பதிலிலிருந்து, தமது நாமத்தை மகிமைப்படுத்துவதை அவர் முக்கியமானதாக கருதுகிறார் என்பது தெளிவாகிறது. அப்படியானால், இன்று யெகோவா என்ற பெயரை அறிவித்து பூமியெங்கும் அதைப் புகழ்ந்து பேசுவதன் மூலம் அவரை மகிமைப்படுத்துகிறவர்கள் யார்? யெகோவாவின் சாட்சிகளே; அதை அவர்கள் 235 நாடுகளில் செய்து வருகிறார்கள்.—சங்கீதம் 86:11, 12.
18. கடவுளை சத்தியத்தோடு வழிபடுபவர்களை நாம் எப்படி அடையாளம் கண்டுகொள்ளலாம், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எந்த வகுப்பார் பைபிள் சத்தியத்தை போதித்து வந்திருக்கிறார்கள்?
18 இரண்டாவதாக, கடவுளைப் பற்றிய சத்தியத்தை போதிப்பதன் மூலம் அவரை நாம் மகிமைப்படுத்தலாம். மெய் வணக்கத்தார் கடவுளை ‘உண்மையோடு,’ அதாவது சத்தியத்தோடு ‘தொழுதுகொள்வார்கள்’ என இயேசு சொன்னார். (யோவான் 4:24) சத்தியத்தோடு கடவுளை வழிபடுபவர்களை நாம் எப்படி அடையாளம் கண்டுகொள்ளலாம்? அவர்கள் பைபிள் அடிப்படையில் இல்லாத கோட்பாடுகளையும், கடவுளையும் அவருடைய சித்தத்தையும் பற்றி திரித்துக்கூறும் கோட்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மாறாக, கடவுளுடைய வார்த்தையிலுள்ள சுத்தமான சத்தியங்களை போதிப்பார்கள். அவர்கள் போதிக்கும் சத்தியங்களில் சில பின்வருமாறு: யெகோவாவே உன்னதமான கடவுள், அந்த மகத்தான ஸ்தானம் அவருக்கு மட்டுமே உரியது (சங்கீதம் 83:17); கடவுளுடைய குமாரனே இயேசு, கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தின் அரசரும் அவரே (1 கொரிந்தியர் 15:27, 28); கடவுளுடைய ராஜ்யம் யெகோவா என்ற அவருடைய பெயரை பரிசுத்தப்படுத்தி, பூமியையும் மனிதரையும் குறித்த அவருடைய நோக்கத்தை நிறைவேற்றும் (மத்தேயு 6:9, 10); இந்த ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி பூமியெங்கும் பிரசங்கிக்கப்பட வேண்டும். (மத்தேயு 24:14) இந்த அருமையான சத்தியங்களை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உண்மையோடு அறிவித்து வரும் ஒரே வகுப்பார் யெகோவாவின் சாட்சிகளே!
19, 20. (அ) ஒரு கிறிஸ்தவரின் நன்னடத்தை கடவுளுக்கு ஏன் மகிமை சேர்க்கலாம்? (ஆ) நன்னடத்தை மூலம் இன்று கடவுளை மகிமைப்படுத்துகிறவர்கள் யார் என்பதைத் தீர்மானிக்க என்ன கேள்விகள் நமக்கு உதவும்?
19 மூன்றாவதாக, கடவுளுடைய தராதரங்களுக்கு இசைய வாழ்வதன் மூலம் அவரை நாம் மகிமைப்படுத்தலாம். அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்.” (1 பேதுரு 2:12) ஒரு கிறிஸ்தவரின் விசுவாசத்தை அவருடைய நடத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மற்றவர்கள் அதைத் தொடர்புபடுத்திப் பார்க்கையில், அதாவது ஒரு கிறிஸ்தவருடைய நன்னடத்தைக்கு காரணம் அவருடைய விசுவாசமே என்பதை அவர்கள் பார்க்கையில் அது கடவுளுக்கு மகிமை சேர்க்கிறது.
20 நன்னடத்தை மூலம் இன்று கடவுளை மகிமைப்படுத்துகிறவர்கள் யார்? அமைதியானவர்கள், சட்டத்திற்கு கட்டுப்பட்டு வரி செலுத்தும் பிரஜைகள் என்றெல்லாம் பல அரசாங்கங்களாலும் புகழப்படும் மத வகுப்பார் யார்? (ரோமர் 13:1, 3, 6, 7) குலம், தேசம், இனம் என்ற பாகுபாடுகளின்றி சக விசுவாசிகளோடு ஐக்கியமாக இருப்பவர்கள் என உலகெங்கும் அறியப்படுபவர்கள் யார்? (சங்கீதம் 133:1; அப்போஸ்தலர் 10:34, 35) சட்டத்திற்கும் குடும்ப மதிப்பீடுகளுக்கும் பைபிளின் ஒழுக்க நெறிகளுக்கும் மதிப்பு கொடுக்க ஊக்குவிக்கும் பைபிள் கல்வியை உலகெங்கும் புகட்டி வருபவர்கள் என்ற பெயரெடுத்துள்ள வகுப்பார் யார்? இந்த அம்சங்களிலும் இன்னும் பிற அம்சங்களிலும் தங்கள் நன்னடத்தை மூலம் இதற்கு அத்தாட்சி அளிக்கிற ஒரே வகுப்பார் யெகோவாவின் சாட்சிகளே!
நீங்கள் கடவுளை மகிமைப்படுத்துகிறீர்களா?
21. யெகோவாவை தனிப்பட்ட முறையில் மகிமைப்படுத்துகிறோமா என்பதை நாம் ஏன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
21 ‘நான் தனிப்பட்ட முறையில் யெகோவாவை மகிமைப்படுத்துகிறேனா?’ என நாம் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும். சங்கீதம் 148-ன்படி பெரும்பாலான படைப்புகள் கடவுளை மகிமைப்படுத்துகின்றன. தேவதூதர்கள் யெகோவாவை புகழ்ந்து பேசுகிறார்கள்; வானம், பூமி, அதிலுள்ள ஜீவராசிகள் இவை அனைத்தும் யெகோவாவைத் துதிக்கின்றன. (வசனங்கள் 1-10) இன்று பெரும்பாலான மனிதர் இதைச் செய்யாமலிருப்பது எவ்வளவு வருந்தத்தக்கது! நீங்கள் கடவுளை மகிமைப்படுத்தும் விதத்தில் வாழ்வதன் மூலம் யெகோவாவை புகழ்ந்து துதிப்பதில் மற்றெல்லா படைப்புகளோடும் சேர்ந்துகொள்வீர்கள். (வசனங்கள் 11-13) உங்களுடைய வாழ்க்கையை சிறந்த விதத்தில் பயன்படுத்த இதைக் காட்டிலும் மேலான வழி இல்லை.
22. யெகோவாவை மகிமைப்படுத்துவதன் மூலம் நீங்கள் என்னென்ன வழிகளில் ஆசீர்வதிக்கப்படுவீர்கள், உங்களுடைய தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?
22 யெகோவாவை மகிமைப்படுத்துவதன் மூலம் நீங்கள் அநேக வழிகளில் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். கிறிஸ்துவின் மீட்கும் பலியில் விசுவாசம் வைக்கையில், நீங்கள் கடவுளோடு ஒப்புரவாகி, பரலோகத் தகப்பனோடு சமாதானமான, பலன்தரும் உறவை அனுபவித்து மகிழ்வீர்கள். (ரோமர் 5:10) கடவுளை மகிமைப்படுத்துவதற்கான காரணங்களை கண்டுபிடிக்க முயலுகையில், நீங்கள் இன்னுமதிக நம்பிக்கையுள்ளவராயும் நன்றியுணர்வுள்ளவராயும் ஆவீர்கள். (எரேமியா 31:12) அப்போது, மகிழ்ச்சியும் திருப்தியுமான வாழ்க்கையை நடத்த பிறருக்கு உதவி செய்ய உங்களால் முடியும், அதன் மூலம் நீங்கள்தாமே மிகுந்த மகிழ்ச்சி அடைவீர்கள். (அப்போஸ்தலர் 20:35) இன்றும் என்றென்றும் கடவுளை மகிமைப்படுத்த வேண்டுமென்ற திட தீர்மானத்தை எடுத்திருப்பவர்களோடு நீங்களும் சேர்ந்துகொள்வீர்களாக!
[அடிக்குறிப்புகள்]
a “பையோமிமெடிக்ஸ்” என்ற வார்த்தை பையாஸ் மற்றும் மைமெஸிஸ் என்ற கிரேக்க வார்த்தைகளிலிருந்து வருகிறது; பையாஸ் என்பதற்கு “உயிர்” என்றும் மைமெஸிஸ் என்பதற்கு “காப்பியடித்தல்” என்றும் அர்த்தம்.
b வானங்கள் கடவுளுடைய ஞானத்தையும் வல்லமையையும் எப்படி வெளிக்காட்டுகின்றன என்பதைப் பற்றிய கூடுதலான தகவல்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்துள்ள யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகத்தில் 5 மற்றும் 17 அதிகாரங்களைக் காண்க.
c யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்துள்ள வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) தொகுதி 1, பக்கம் 853-ஐக் காண்க.
நினைவிருக்கிறதா?
• கடவுளை மகிமைப்படுத்துவதற்கு அறிவியலாளர்கள் மக்களுக்கு உதவவில்லை என ஏன் சொல்லலாம்?
• மதங்கள் என்ன இரண்டு வழிகளில் கடவுளை மகிமைப்படுத்த விடாமல் மக்களை தடுத்திருக்கின்றன?
• என்னென்ன வழிகளில் நாம் கடவுளை மகிமைப்படுத்தலாம்?
• தனிப்பட்ட முறையில் யெகோவாவை மகிமைப்படுத்துகிறீர்களா என்பதை நீங்கள் ஏன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
[பக்கம் 12-ன் பெட்டி]
“கடவுள் யார் பக்கம்?”
இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானிய விமானப் படையில் சேவை செய்த ஒருவர் பிற்பாடு யெகோவாவின் சாட்சியாக ஆனார். அவர் இவ்வாறு சொல்கிறார்:
“போர் நடந்த ஆண்டுகளில், . . . கத்தோலிக்கர், லூத்தரன், எப்பிஸ்கோப்பல் போன்று அநேகமாக எல்லா பிரிவுகளில் இருந்த குருமாரும், குண்டு போடுவதற்காக செல்லவிருந்த விமானங்களையும் விமானப்படையினரையும் ஆசீர்வதித்து அனுப்பியதைப் பார்த்தது என் மனதைக் குடைந்தது. ‘கடவுள் யார் பக்கம்?’ என நான் அடிக்கடி யோசித்தேன்.
“ஜெர்மானிய இராணுவ வீரர்கள் அணிந்திருந்த பெல்ட்டின் பக்கிளில் கடவுள் எங்களோடு இருக்கிறார் என்று ஜெர்மானிய மொழியில் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் ‘எதிரி படையில் அதே மதத்தைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் அதே கடவுளிடம் ஜெபித்துக் கொண்டிருந்தார்களே, அப்படியானால், கடவுள் ஒருவேளை அவர்கள் பக்கம் இருப்பாரோ’ என்று யோசித்தேன்.”
[பக்கம் 10-ன் படம்]
பூமியெங்கும், யெகோவாவின் சாட்சிகள் கடவுளை உண்மையிலேயே மகிமைப்படுத்துகிறார்கள்