உங்களது காத்திருக்கும் மனப்பான்மை எப்படிப்பட்டது?
இன்றைய உலகில், ஒருவருக்காக அல்லது ஒன்றிற்காக சந்தோஷத்தோடு காத்திருக்கும் மக்கள் வெகு சிலரே. காத்திருப்பது அவர்களுடைய பொறுமையை சோதிக்கிறது. என்றாலும், “காத்திருக்கும் மனப்பான்மையை” வளர்த்துக் கொள்ளும்படி கடவுளுடைய மக்களை பைபிள் உற்சாகப்படுத்துகிறது. தன்னை சூழ்ந்திருந்த மக்களின் மனப்பான்மைக்கும் மீகா தீர்க்கதரிசியின் மனப்பான்மைக்கும் எவ்வளவு வித்தியாசம்! அவர் இவ்வாறு அறிவித்தார்: “என் இரட்சிப்பின் கடவுளுக்காகக் காத்திருக்கும் மனப்பான்மையைக் காட்டுவேன்.”—மீகா 7:7, NW; புலம்பல் 3:26.
ஆனால், யெகோவாவுக்காக காத்திருப்பது என்றால் என்ன? ஒரு கிறிஸ்தவன் கடவுளுக்காக காத்திருப்பது எப்படி? காத்திருக்கும் மனப்பான்மையிலும் சரியானது, தவறானது என்று இருக்கிறதா? பொ.ச.மு. ஒன்பதாவது நூற்றாண்டில் வாழ்ந்த யோனா தீர்க்கதரிசியின் அனுபவம் இந்த விஷயத்தில் ஒரு படிப்பினையை அளிக்கிறது.
தவறான காரணத்துடன் காத்திருத்தல்
அசீரிய வல்லரசின் தலைநகரான நினிவேக்கு சென்று அங்குள்ள ஜனங்களுக்கு பிரசங்கிக்கும்படி யோனாவிடம் யெகோவா தேவன் சொன்னார். மிருகத்தனமாகவும் கொடூரமாகவும் சித்திரவதை செய்வதற்கு பெயர்பெற்ற நினிவே, ‘இரத்தப்பழிகளின் நகரம்’ என்று அழைக்கப்பட்டது. சரித்திர ஆசிரியர்களும் தொல்லியல் ஆய்வாளர்களும் இந்தக் கூற்று உண்மையென உறுதி செய்துள்ளனர். (நாகூம் 3:1) ஆரம்பத்தில் யோனா அந்த நியமிப்பிலிருந்து நழுவி விட பார்த்தார், ஆனால் இறுதியில் அவர் நினிவே பட்டணத்திற்கே செல்லும்படி யெகோவா பார்த்துக்கொண்டார்.—யோனா 1:3–3:2.
“யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பது நாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று கூறினான்.” (யோனா 3:4) யோனாவின் முயற்சிகளுக்கு அசாதாரண பிரதிபலிப்பு கிடைத்தது: “நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ் செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர் முதல் சிறியோர் மட்டும் இரட்டுடுத்திக் கொண்டார்கள்.” (யோனா 3:5) ‘ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்புகிற’ தேவனாகிய யெகோவா அதைக் கண்டபோது அந்நகரத்தை அழிக்கும் எண்ணத்தைக் கைவிட்டார்.—2 பேதுரு 3:9.
யோனா அதற்கு எப்படி பிரதிபலித்தார்? பதிவு இவ்வாறு சொல்கிறது: ‘யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவன் கடுங்கோபங்கொண்டான்.’ (யோனா 4:1) ஏன்? குறித்த நாளில் அழிவு வரும் என்று சொன்ன பிறகு அது வரவில்லையென்றால் தீர்க்கதரிசியாக தன்னுடைய மதிப்பை இழந்துவிடுவாரோ என்று யோனா ஒருவேளை நினைத்திருக்கலாம். மற்றவர்களுக்கு இரக்கமும் இரட்சிப்பும் கிடைக்க வேண்டுமென்பதில் அக்கறை காட்டுவதற்கு பதிலாக யோனா தனக்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருந்தார் என்பது தெளிவாகிறது.
தீர்க்கதரிசியாக தன்னுடைய சேவையிலிருந்து விலகும் அளவுக்கு யோனா போகவில்லை என்பது உண்மைதான். இருப்பினும், ‘நகரத்துக்குச் சம்பவிக்கப்போகிறதை பார்க்க’ காத்துக்கொண்டிருந்தார். ஆம், ஒரு வகையான மனக்கசப்புடன், வேலை செய்வதை நிறுத்திவிட்டு, என்னதான் நடக்கிறதென பார்ப்போமே என்றிருந்தார். தான் நினைத்தபடி காரியங்கள் நடக்கவில்லை என்பதால், நினிவே பட்டணத்திற்கு என்ன நடக்கும் என்பதைப் பார்ப்பதற்கு ஒரு குடிசையைப் போட்டு, அதன் நிழலில் உட்கார்ந்து கோபத்தோடு காத்திருந்தார். ஆனால், யோனாவின் மனப்பான்மை யெகோவாவுக்குப் பிடிக்கவில்லை. எனவே தம்முடைய தீர்க்கதரிசியின் தவறான மனப்பான்மையை அவர் அன்போடு திருத்தினார்.—யோனா 4:5, 9-11.
யெகோவா ஏன் பொறுமையாக இருக்கிறார்
நினிவே மக்கள் மனந்திரும்பி அழிவிலிருந்து காக்கப்பட்டாலும், அதற்குப்பின் அவர்கள் தங்களுடைய பொல்லாத வழிகளுக்கே திரும்பினார்கள். தீர்க்கதரிசிகளாகிய நாகூம் மற்றும் செப்பனியா மூலம், நினிவேயின் அழிவை யெகோவா முன்னுரைத்தார். ‘இரத்தப்பழிகளின் நகர’மாகிய அதை பாழான ஸ்தலமாக்கி அசீரியாவை அழிக்கப்போவதாக யெகோவா உரைத்தார். (நாகூம் 3:1; செப்பனியா 2:13) பொ.ச.மு. 632-ல் நினிவே அழிந்து, மீண்டும் எழ முடியாதபடி மண்ணோடு மண்ணாய் மக்கிப்போனது.
அதைப் போலவே, வேண்டுமென்றே இரத்தஞ்சிந்துவதில் இன்றைய உலகம் பூர்வ நினிவேயை பெருமளவில் மிஞ்சிவிட்டது. இதன் காரணமாகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும், வரலாறு காணாத ‘மிகுந்த உபத்திரவத்தில்’ இந்தப் பொல்லாத ஒழுங்குமுறைக்கு முடிவுகட்ட யெகோவா தீர்மானித்துள்ளார்.—மத்தேயு 24:21, 22.
மனந்திரும்பிய நினிவே ஜனங்களைப் போல, இன்றுள்ள உண்மை மனதுடைய ஜனங்களும் மனந்திரும்பி காப்பாற்றப்படுவதற்காகவே, முன்னுரைத்த அழிவை கொண்டுவர யெகோவா தாமதிக்கிறார். அவருடைய பொறுமையை அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு விவரிக்கிறார்: “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.”—2 பேதுரு 3:9, 10, 13.
சரியான விதத்தில் காத்திருத்தல்
பேதுரு தொடர்ந்து சொல்கையில், “இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்” என்கிறார். (2 பேதுரு 3:11, 12) யெகோவாவின் நாளுக்காக காத்திருக்கும்போது, நாம் “பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும்” உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை கவனியுங்கள். அதாவது, செயலற்றவர்களாக அல்ல, செயல்படுகிறவர்களாக இருக்க வேண்டும்.
ஆம், சரியான விதத்தில் காத்திருக்கும்போது யெகோவாவின் நாள் அவர் குறித்த காலத்திலிருந்து ஒரு நொடிகூட தள்ளிப்போகாது என்பதில் நாம் முழு விசுவாசத்தை வெளிக்காட்டுவோம். இப்படிப்பட்ட விசுவாசம் பரிசுத்த நடத்தைக்குரிய கிரியைகளையும் தேவபக்திக்குரிய செயல்களையும் பிறப்பிக்கிறது. அவற்றுள் கடவுளுடைய ராஜ்யத்தை பற்றிய நற்செய்தியை பிரசங்கிக்கும் வேலையே மேலோங்கி நிற்கிறது. பிரசங்கிப்பதில் இயேசு ஒரு சிறந்த முன்மாதிரியை வைத்துச் சென்றார்; தம்முடைய அபிஷேகம் பண்ணப்பட்ட சீஷர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தினார்: “உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும், தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள். எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள்.”—லூக்கா 12:35-37.
முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அடிமைகள் கடினமான வேலை செய்வதற்கு தோதாக தங்கள் அங்கிகளின் ஓரங்களை சேர்த்து தூக்கி ‘அரையில் கட்டிக்கொள்வார்கள்.’ அவ்வாறே, ஒரு கிறிஸ்தவன் நற்கிரியைகளில் சுறுசுறுப்பாகவும் வைராக்கியமாகவும் ஈடுபட வேண்டும். சிற்றின்பங்களுக்காக அல்லது பொருள் சேர்ப்பதற்காக தன்னுடைய சக்திகளை பயன்படுத்த நினைக்கும் எந்தவொரு மனச்சாய்வுக்கு எதிராகவும் அவர் போராட வேண்டும். ஏனெனில், அது ஆன்மீக வேலையில் செயலற்றுப்போய் ‘அசதியாயிருக்க’ செய்து விடும். மாறாக, யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாளுக்காக காத்திருக்கையில், ‘கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவராக’ அவர் இருக்க வேண்டும்.—ரோமர் 12:11; 1 கொரிந்தியர் 15:58.
காத்திருக்கையில் சுறுசுறுப்பாக இருத்தல்
யெகோவாவின் நாளுக்காக காத்திருக்கும் அதே சமயத்தில், யெகோவாவின் சாட்சிகள் தங்களை சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, 2003 ஊழிய ஆண்டில், யெகோவாவின் வார்த்தையை பிரசங்கிப்பதற்கு அவர்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக 33,83,000 மணிநேரங்களை செலவழித்துள்ளார்கள். ஒரு கிறிஸ்தவர் இரவும் பகலும் விடாமல் தொடர்ந்து 386 வருடங்கள் பிரசங்கித்தால் தான் இந்த மணிநேரத்தை தனியாக எட்ட முடியும்!
இருந்தாலும், நம்மை நாமே இவ்வாறு கேட்டுக் கொள்வது நல்லது: ‘தனிப்பட்ட முறையில் நான் எப்படிப்பட்ட காத்திருக்கும் மனப்பான்மையை காட்டுகிறேன்?’ அபிஷேகம் பண்ணப்பட்ட உண்மையுள்ள கிறிஸ்தவர்களிடம் கடின உழைப்பை இயேசு எதிர்பார்த்தார்; அதை விவரிக்க ஓர் உவமையை சொன்னார். அதில் மூன்று அடிமைகளைக் குறித்து பேசினார்: “அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, [அந்த எஜமான்] ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான். ஐந்து தாலந்தை வாங்கினவன் போய் அவைகளைக்கொண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான், அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான். ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்து வைத்தான். வெகுகாலமான பின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்.”—மத்தேயு 25:15-19.
எஜமானுடைய வருகைக்காக மூன்று அடிமைகளுமே காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், எஜமானுக்காக காத்திருக்கையில் தங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொண்ட இரண்டு அடிமைகளை, “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே” என்று எஜமான் பாராட்டினார். ஒன்றும் செய்யாமல் காத்துக்கொண்டிருந்த அடிமையையோ கடிந்துகொண்டார். “பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்” என்று சொன்னார்.—மத்தேயு 25:20-30.
இந்த உவமை அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக சொல்லப்பட்டது. ஆனால், நாம் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நம் அனைவருக்கும் இதில் ஒரு பாடம் உள்ளது. யெகோவாவின் மகா நாளில் கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருக்கிற நாம், அவருடைய சேவையில் ஊக்கத்துடன் ஈடுபட வேண்டுமென்று எஜமானராகிய இயேசு கிறிஸ்து எதிர்பார்க்கிறார். ‘அவரவருடைய திறமைக்குத்தக்கவாறும்’ சூழ்நிலைக்குத்தக்கவாறும் நாம் செய்யும் வேலையை அவர் மதிக்கிறார். காத்திருக்கும் காலம் முடிந்தபின் எஜமான் நாம் செய்ததைப் பார்த்து “நல்லது” என்று சொல்லும்போது, எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கும்!
நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமை இரட்சிப்பாகும்
இந்த ஒழுங்குமுறை அழிந்துவிடும் என்று நாம் ஒருகாலத்தில் நினைத்ததைவிட அல்லது எதிர்பார்த்ததைவிட அதிக காலமாக அது அழியாமல் இருக்கிறது என்றால் என்ன செய்வது? அது அவ்வாறு நீடிப்பதற்கு நல்ல காரணம் உள்ளது என்பதை முதலில் உணர வேண்டும். “நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (2 பேதுரு 3:15) யெகோவா தேவன் எவ்வளவு காலம் இந்த ஒழுங்குமுறைமீது பொறுமையாக இருக்க விரும்புகிறாரோ அவ்வளவு காலம் நாமும் பொறுமையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பதற்கு, அவருடைய நோக்கங்களைப் பற்றிய திருத்தமான அறிவு தேவை; அத்துடன், நம்முடைய விருப்பத்தைவிட அவருடைய நோக்கம் நிறைவேறுவதே முக்கியம் என்பதை மனத்தாழ்மையோடு ஒத்துக்கொள்வதும் உதவும்.
கிறிஸ்தவர்களை பொறுமையாக இருக்க உற்சாகப்படுத்துவதற்கு பைபிள் எழுத்தாளரான யாக்கோபு ஓர் உதாரணத்தை அளித்தார். “இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே” என்று அவர் எழுதினார்.—யாக்கோபு 5:7, 8.
நாம் காத்திருக்கையில் சோர்வடைவதையோ பொறுமை இழந்துவிடுவதையோ யெகோவா தேவன் விரும்புவதில்லை. காத்திருக்கும் இந்த காலப்பகுதியில் நாம் செய்வதற்கு ஒரு வேலையை தந்திருக்கிறார்; அந்த வேலையில் நாம் சுறுசுறுப்புடன் ஈடுபடுகையில் அவர் சந்தோஷப்படுகிறார். அப்போஸ்தலன் பவுல் எபிரெயருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள ஆட்களைப் போலவே நாமும் இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார்: “நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து, உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.”—எபிரெயர் 6:11, 12.
ஆதலால், நாம் துவண்டுவிடாமல் இருப்போமாக. யெகோவா தேவனோடு உள்ள உறவு, இயேசுவின் கிரய பலியின்மீது உள்ள விசுவாசம், புதிய ஒழுங்குமுறையைக் குறித்த பிரகாசமான நம்பிக்கை ஆகியவை நம் வாழ்வில் உந்துவிக்கும் சக்திகளாக இருப்பதாக. இயேசுவின் உவமையில் சொல்லப்பட்ட “உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்கார” அடிமைகளைப் போல, பாராட்டுக்கும் பரிசுக்கும் நம்மை பாத்திரர்களாக நிரூபிக்கும்படி கடவுளை துதிப்பதில் சுறுசுறுப்பாக செயல்படுவோமாக. அவ்வாறு செய்த சங்கீதக்காரன் சொன்னதாவது: “நானோ எப்பொழுதும் நம்பிக்கை கொண்டிருந்து, [அல்லது காத்திருந்து] மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.”—சங்கீதம் 71:14.
[பக்கம் 21-ன் படம்]
ஏமாற்றமடைந்த யோனா, நினிவேக்கு என்னதான் நடக்கப்போகிறது என்பதைப் பார்க்க காத்திருந்தார்
[பக்கம் 22, 23-ன் படங்கள்]
யெகோவாவின் நாளுக்காக காத்திருக்கையில் தேவபக்தியை வெளிக்காட்டுவோமாக