இளைஞர்களே பெற்றோர் உங்கள் இருதயத்தைக் காத்திட அனுமதியுங்கள்!
கப்பல் கேப்டனுக்கு உள்ளதிலேயே எது மிகவும் சவாலான காரியம் என்று நினைக்கிறீர்கள்? பரந்து கிடக்கும் கடலை பாதுகாப்பாக கடந்து செல்வதா? இல்லை. அதிகமான கப்பற்சேதங்கள் கரை சேரும் போதுதான் நிகழ்கின்றன, நடுக்கடலில் அல்ல. சொல்லப்போனால், கப்பலைத் துறைமுகத்தில் சேர்ப்பது விமானத்தை தரையிறக்குவதைவிட அதிக ஆபத்தானது. ஏன்?
கப்பலை பாதுகாப்பாக துறைமுகத்தில் சேர்க்கும்முன் அங்கு ஏற்படக்கூடிய எல்லா ஆபத்துகளையும் கேப்டன் தவிர்க்க வேண்டும். அங்கிருக்கும் மற்ற கப்பல்கள் மீது மோதாமல் ஓட்டிச் செல்ல வேண்டும்; கடலடி நீரோட்டத்தை கருத்தில் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, தண்ணீருக்கு அடியில் மறைந்திருக்கும் மணல்திடல்கள், பாறைகள், உடைந்த கப்பல்களின் பாகங்கள் ஆகியவற்றின் மீது இடிக்காமல் செல்ல வேண்டும். அந்தத் துறைமுகத்திற்கு செல்வது அதுவே முதல்முறை என்றால் இன்னுமதிக ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.
புத்திசாலியான கேப்டன் இந்தச் சவால்களை சமாளிப்பதற்கு, அந்தத் துறைமுகத்தைப் பற்றி நுட்பமாக அறிந்திருக்கும் வழிகாட்டியின் உதவியைப் பெறுவார். கேப்டனுக்குப் பக்கத்தில் இந்த வழிகாட்டி நின்றுகொண்டு சிறந்த ஆலோசனைகளைத் தருவார். இருவரும் ஒன்றிணைந்து ஆபத்துகளைக் கண்டறிந்து, துறைமுகத்திற்கு செல்லும் எப்பேர்ப்பட்ட குறுகிய பாதைகளிலும் கப்பலைச் செலுத்தி அதைக் கரை சேர்த்துவிடுவர்.
அந்த வழிகாட்டியின் மதிப்புமிக்க சேவை, கிறிஸ்தவ இளைஞர்களுக்கு கிடைக்கிற விலைமதிப்பில்லா உதவிக்கு உதாரணமாக இருக்கிறது. இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கை எனும் கடலில் சந்திக்கும் ஆபத்துக்களை மீறி கரை சேருவதற்கு என்ன உதவி கிடைக்கிறது? பருவ வயதினருக்கு அது ஏன் தேவை?
அந்தக் கப்பலின் உதாரணத்தையே இப்போதும் எடுத்துக்கொள்வோம். நீங்கள் பருவ வயதினராக இருந்தால், கிட்டத்தட்ட அந்தக் கப்பலின் கேப்டனைப் போன்றே இருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையை ஓட்டிச் செல்வதற்கான பொறுப்பு உங்கள் கையில்தான் உள்ளது. உங்கள் பெற்றோர் அந்த வழிகாட்டியைப் போல் இருக்கிறார்கள். வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் மிகக் கடினமான சில சூழல்களை சமாளிக்க உதவுகிறார்கள். எனினும், பெற்றோர் கொடுக்கும் அறிவுரையை ஏற்பது பருவ வயதினருக்கு கடினமே. ஏன் அப்படி?
கோளாறு பெரும்பாலும் இருதயத்தில்தான் உள்ளது. தடை செய்யப்பட்டதை இச்சிப்பதற்கோ உங்கள் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது போல் தோன்றும் எதையும் எதிர்ப்பதற்கோ உங்கள் இருதயம் உங்களைத் தூண்டும். “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி பொல்லாததாயிருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 8:21) உங்கள்முன் இருப்பது பெரிய சவால் என்பதை யெகோவா தெளிவாக சொல்கிறார். “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே வஞ்சிக்கும் இயல்புடையது; வழிதவறிப்போகச் செய்து ஆபத்துக்குள் தள்ளுவது” என்று அவர் எச்சரிக்கிறார். (எரேமியா 17:9, ராதர்ஹாம்) இருதயம் தவறான ஆசைகளை மறைமுகமாக வளர்க்கிறது. அதுமட்டுமல்ல, பெற்றோர்கள் அனுபவசாலிகளாக இருந்தாலும், அவர்களைவிட தனக்கு ரொம்ப தெரியும் என்பதாக ஓர் இளைஞனை நினைக்க வைத்து அவனை அது ஏமாற்றிவிடும். எனினும், பருவ வயதின் இக்கட்டான காலங்களை ஓட்டிச் செல்கையில், உங்கள் பெற்றோரின் உதவியை நாடுவதற்கு தகுந்த காரணங்கள் உள்ளன.
உங்கள் பெற்றோருக்கு ஏன் கீழ்ப்படிய வேண்டும்?
எல்லாவற்றிற்கும் மேலாக, குடும்பத்தை ஆரம்பித்து வைத்தவராகிய யெகோவா, பெற்றோரின் வழிநடத்துதலுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டுமென்று சொல்கிறார். (எபேசியர் 3:14) உங்களை கவனித்துக் கொள்வதற்கு உங்கள் பெற்றோரை யெகோவா நியமித்திருப்பதால், அவர் இந்த ஆலோசனையை தருகிறார்: “பிள்ளைகளே, கர்த்தர் விரும்புவது போல நீங்கள் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். இதுவே நீங்கள் செய்ய வேண்டிய சரியான செயலாகும்.” (எபேசியர் 6:1-3, ஈஸி டு ரீட் வர்ஷன்; சங்கீதம் 78:5) நீங்கள் டீனேஜ் பருவத்தில் இருந்தாலும், உங்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு உங்கள் பெற்றோருக்கு இன்னமும் இருக்கிறது; அதற்கு செவிசாய்க்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று அப்போஸ்தலன் பவுல் எழுதுகையில், அவர் பயன்படுத்திய கிரேக்க வார்த்தை, எல்லா வயதிலுள்ள பிள்ளைகளையும் குறிக்கிறது. உதாரணமாக, மத்தேயு 23:37-ல் பதிவு செய்துள்ளபடி, எருசலேமின் குடிமக்களில் பெரும்பாலும் பெரியவர்களே இருந்தபோதிலும், அவர்களை அதன் ‘பிள்ளைகள்’ என்று இயேசு குறிப்பிட்டார்.
பூர்வத்தில் வாழ்ந்த உண்மையுள்ள மனிதர்கள் அநேகர் தாங்கள் பெரியவர்களாக ஆன பிறகும் தங்கள் பெற்றோருக்குத் தொடர்ந்து கீழ்ப்படிந்திருந்தனர். யெகோவாவை வணங்காத பெண்ணை கல்யாணம் செய்ய வேண்டாம் என தன் தகப்பன் கட்டளையிட்டபோது யாக்கோபு வளர்ந்த ஆளாகத்தான் இருந்தார்; என்றாலும், அந்தக் கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதை அவர் புரிந்துகொண்டார். (ஆதியாகமம் 28:1, 2) தன்னுடைய அண்ணன் புறமத கானானிய பெண்களை கல்யாணம் செய்துகொண்டது பெற்றோருக்கு மனவேதனை ஏற்படுத்தியதையும் யாக்கோபு கவனித்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை.—ஆதியாகமம் 27:46.
உங்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பை உங்களுடைய கிறிஸ்தவ பெற்றோர்களுக்குக் கடவுள் கொடுத்திருக்கிறார். மேலும், உங்களுடைய ஆலோசகர்களாக இருப்பதற்கு அதிகம் தகுதி பெற்றவர்களும் அவர்களே. ஏனெனில் உங்களை அவர்கள் நன்கு அறிந்திருப்பதோடு, தங்களுடைய தன்னலமற்ற அன்பை பல வருடங்களாக உங்கள் மீது பொழிந்துள்ளனர் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. அந்தக் கப்பலின் வழிகாட்டியைப் போலவே, பெற்றோர் எதையுமே தங்கள் அனுபவத்திலிருந்து சொல்கின்றனர். ‘பாலியத்துக்குரிய இச்சைகள்’ சம்பந்தமாக அவர்கள் ஏற்கெனவே அனுபவ பாடம் கற்றுள்ளனர். உண்மை கிறிஸ்தவர்களாக, பைபிள் நியமங்களை பின்பற்றுவதன் மதிப்பை தனிப்பட்ட விதத்தில் கண்டறிந்திருக்கின்றனர்.—2 தீமோத்தேயு 2:22.
இப்படிப்பட்ட அனுபவசாலிகள் உங்கள் பக்கம் இருக்கையில், எப்படிப்பட்ட கஷ்டமான சூழல்களையும் வெற்றிகரமாக கையாள உங்களுக்கு உதவி கிடைக்கும். உதாரணத்திற்கு, எதிர்பாலாரோடு உள்ள உறவை எடுத்துக்கொள்வோம். இதுபோன்ற விஷயத்திலும் கிறிஸ்தவ பெற்றோர்கள் எப்படி உங்களை வழிநடத்தலாம்?
எதிர்பாலார் மீது கவர்ச்சி
தண்ணீருக்கு அடியில் பரந்து கிடக்கும் மணல்திடல்களிலிருந்து தூர விலகி செல்லுமாறு கேப்டன்களுக்கு வழிகாட்டிகள் சொல்வார்கள். மணல்திடல்கள் மிருதுவானவை, இடம் மாறிக் கொண்டே இருப்பதால் ஆபத்தானவையும்கூட. அதுபோலவே உங்களை உணர்ச்சி ரீதியில் ஆபத்திற்குள்ளாக்கும் சூழல்களிலிருந்து நீங்கள் விலகியிருக்கும்படி உங்கள் பெற்றோர் விரும்புகிறார்கள். உதாரணத்திற்கு, எதிர்பாலார் மீதுள்ள உணர்ச்சிகள் ஆழமாகவும், வரையறுக்க கடினமாகவும் இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். ஒருமுறை அந்த உணர்ச்சிகள் எழும்பிவிட்டால், அவை உங்களை சேதப்படுத்திவிடலாம்.
ஆபத்தான இடத்திற்கு அருகே செல்வதால் உண்டாகும் அபாயத்தை தீனாளின் உதாரணம் காட்டுகிறது. ஒருவேளை ஆர்வக்கோளாறும், ஜாலியாக இருக்க வேண்டும் என்ற ஆசையும் கானானிய பெண்களுடைய சகவாசத்தை நாடுவதற்கு தீனாளை தூண்டியிருக்கலாம். அந்தப் பெண்களுடைய ஒழுக்க தராதரங்களோ சீர்கெட்டதாக இருந்தது. எந்த தீங்குமில்லாதது போல் முதலில் தோன்றிய காரியம் விரைவிலேயே கசப்பான அனுபவத்திற்கு அவளை வழிநடத்தியது—அத்தேசத்தில் “அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவனாயிருந்த” வாலிபனால் அவள் கற்பழிக்கப்பட்டாள்.—ஆதியாகமம் 34:1, 2, 19.
செக்ஸை அதிகம் வலியுறுத்தும் நம்முடைய காலங்களில் இப்படிப்பட்ட ஆபத்துகள் பெருகியுள்ளன. (ஓசியா 5:4) இருப்பதிலேயே மிகவும் கிளர்ச்சியூட்டும் விஷயம் எதிர்பாலாரோடு ஜாலியாக இருப்பதுதான் என்ற அபிப்பிராயத்தை அநேக இளைஞர்கள் ஏற்படுத்தலாம். பார்ப்பதற்கு அழகாயிருப்பதாக உங்களுக்குத் தோன்றும் ஒருவரோடு தனிமையில் இருப்பது போன்ற நினைப்பே உங்கள் இதயத்தை பூரிப்பாக்கலாம். ஆனால் கடவுளுடைய தராதரங்களை மதிக்காத இளைஞர்களுடைய சகவாசத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கவே அன்புள்ள பெற்றோர் முயற்சி செய்வார்கள்.
ஆபத்தைத் தெரிந்து கொள்ளாதபடி, ஆர்வக்கோளாறு பருவ வயதினரின் கண்களை மறைத்துவிடும் என்பதை லாரா ஒத்துக்கொள்கிறாள்: “என்னோடு படிக்கிற கேர்ல்ஸ், சில அழகான பாய்ஸ்ஸோட சேர்ந்து நடுராத்திரி வரைக்கும் டான்ஸ் ஆடி எஞ்சாய் பண்ணினதாக என்னிடம் சொல்லுவாங்க. வாழ்வில் மறக்கவே முடியாத அனுபவம் போல காட்டிப்பாங்க. அவங்க ரொம்ப மிகைப்படுத்தி சொல்றாங்க என்பது எனக்கு தெரியும். இருந்தாலும், அந்த விஷயத்துல எனக்கு ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. நான் ஒருவேளை ரொம்ப ஜாலியான சமயங்களை மிஸ் பண்ணுகிறேனோ என்று நினைப்பதுண்டு. அப்படிப்பட்ட இடங்களுக்கு போவதற்கு என்னோட அப்பா அம்மா அனுமதிக்காதது சரிதான்னு தெரிந்தாலும், அதனிடம் ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது.”
மற்ற வாகனங்களைப் போன்று கப்பல்களுக்கு பிரேக்குகள் இல்லாததால், நிறுத்துவதற்கு அதிக நேரம் எடுக்கும். அதுபோலவே மோகத்தைக் கட்டுப்படுத்துவது கடினம் என்பது பெற்றோர்களுக்குத் தெரியும். கட்டுப்படுத்தாத மோகத்துக்கு பின்செல்லும் மனிதன், அடிக்கப்படுவதற்கு கொண்டு செல்லப்படும் மாட்டிற்கு ஒப்பாக இருப்பதாய் நீதிமொழிகள் புத்தகம் சொல்கிறது. (நீதிமொழிகள் 7:21-23) இதுபோன்ற உணர்ச்சி ரீதியான மற்றும் ஆன்மீக ரீதியான கப்பற்சேதம் உங்களுக்கு நேரிடுவதை அனுமதிக்க நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இந்த விஷயத்தில் உங்கள் இருதயம் எப்போது உங்களை வழிதவறிப் போகச் செய்திருக்கிறது என்பதை உங்கள் பெற்றோர் கண்டுகொண்டு, அதற்கு இசைவாக ஆலோசனை வழங்குவார்கள். அதை ஏற்று ஆபத்தை தவிர்க்கும் மனப்பக்குவம் உங்களுக்கு இருக்குமா?—நீதிமொழிகள் 1:8; 27:12.
சகாக்களுடைய அழுத்தத்தை சமாளிப்பதற்கும்கூட பெற்றோருடைய உதவி உங்களுக்குத் தேவை. அவர்கள் எப்படி உதவலாம்?
சகாக்களின் மசிய வைக்கும் செல்வாக்கு
ஒரு பலமான ஏற்றவற்றத்தால் அல்லது நீரோட்டத்தால் கப்பல் திசைமாறிப் போகலாம். இந்த விசையை எதிர்ப்பதற்கு, கப்பலை வேறு திசையில் செலுத்த வேண்டும். அதைப் போலவே, மற்ற இளைஞர்களுடைய மசிய வைக்கும் செல்வாக்குக்கு எதிராக நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அது உங்களை ஆன்மீக பாதையிலிருந்து வழிவிலகச் செய்துவிடலாம்.
தீனாளின் அனுபவம் காட்டுகிறபடி, “மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” (நீதிமொழிகள் 13:20) யெகோவாவை அறியாத அல்லது அவருடைய வழிகளில் நடக்க விரும்பாத நபரையே ‘மூடர்’ என பைபிள் அழைப்பதை நினைவில் வையுங்கள்.
இருப்பினும், உங்கள் பள்ளி சகாக்களுடைய கருத்துக்களை அல்லது பழக்கவழக்கங்களை தவிர்ப்பது சுலபமான விஷயமல்ல. மாரியா ஹோசே இவ்வாறு விளக்குகிறாள்: “மற்ற இளைஞர்கள் என்னை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவேன். என்னை வித்தியாசமானவளாக அவர்கள் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக முடிந்தமட்டும் அவர்கள் செய்வதைப் போலவே செய்வேன்.” உங்களை அறியாமலேயே, நீங்கள் கேட்கும் இசையில், உடுத்தும் உடையில், ஏன் பேசும் விதத்திலும்கூட சகாக்களின் செல்வாக்கினால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். உங்களுடைய வயதிற்கொத்த இளைஞர்களோடு பழகும்போதுதான் நீங்கள் ஒருவேளை சங்கோஜப்படாமல் இருப்பீர்கள். அது இயல்பே. ஆனால் அவர்களுடைய பலமான செல்வாக்கிற்கு ஆளாகிவிடுவீர்கள். அதுவே உங்களுக்கு உலை வைத்துவிடலாம்.—நீதிமொழிகள் 1:10-16.
சில வருடங்களுக்கு முன்பு எதிர்ப்பட்ட கஷ்டத்தைப் பற்றி காரலின் இவ்வாறு சொல்கிறாள்: “என்னோடு பழகின நிறைய பிள்ளைகளுக்கு 13 வயசுலேயே பாய்ஃபிரெண்ட்ஸ் இருந்தாங்க. அவங்க மாதிரியே இருப்பதற்கான அழுத்தத்தில் தொடர்ந்து பல வருடங்களாக அவதிப்பட்டேன். என்றாலும், இந்தக் கஷ்டமான காலங்களை ஓட்டுவதற்கு என் அம்மா எனக்கு உதவினாங்க. நான் சொல்வதை காதுகொடுத்து கேட்டாங்க; என்னோடு நியாயமான காரணங்களை எடுத்துக்காட்டி பேசினாங்க; எனக்கு போதிய வயது ஆகும் வரைக்கும் இந்த மாதிரி விஷயங்களை தள்ளிப் போடுவதன் அவசியத்தை புரியவைத்தாங்க. இதற்காக என்னோடு பல மணிநேரங்கள் செலவழித்தாங்க.”
சகாக்களுடைய செல்வாக்கைக் குறித்து எச்சரிக்கும் பொறுப்பைப் பெற்றிருப்பதை காரலினுடைய அம்மாவைப் போன்றே உங்கள் பெற்றோரும் உணர்கின்றனர். சில நடவடிக்கைகளை அல்லது சில ஆட்களுடைய சகவாசங்களைக்கூட அவர்கள் தடை செய்யலாம். இதுபோன்ற விஷயங்களில் நேதனுக்கும் அவருடைய பெற்றோருக்கும் இடையே ஏற்பட்ட நிறைய மோதல்களை அவரே விளக்குகிறார்: “என்னுடைய ஃபிரெண்ட்ஸ் அடிக்கடி வெளியே போவதற்கு கூப்பிடுவார்கள், ஆனால் கும்பலாக ஊர் சுத்துவதையும், பெரியவங்க இல்லாத பெரிய பார்ட்டிகளுக்கு செல்வதையும் என்னுடைய பெற்றோர் விரும்ப மாட்டார்கள். மற்றவர்களுடைய அப்பா அம்மாவைவிட என்னுடைய அப்பா அம்மா ஏன் அவ்வளவு கண்டிப்பாக இருக்கிறார்கள் என்பதை அப்பொழுது என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.”
இருந்தபோதிலும், நேதன் பின்னர் புரிந்துகொண்டார். அவர் இவ்வாறு ஒத்துக்கொள்கிறார்: “‘பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கிறது’ என்பது என்னுடைய விஷயத்தில் உண்மையாகவே இருந்தது. பையன்கள் கும்பலாக இருக்கையில் இந்த மதியீனம் எளிதில் தலைதூக்கிவிடும். ஒருவன் ஏதாவது சேட்டை செய்ய ஆரம்பிப்பான், மற்றவன் ஒரு படி அதிகம் செய்வான், அடுத்தவன் இருவரையுமே மிஞ்சி மோசமாக நடந்துகொள்வான். சீக்கிரத்தில் எல்லோரும் அதில் சேர்ந்துகொள்ள தூண்டப்படுவார்கள். யெகோவாவை சேவிப்பதாக சொல்லிக்கொள்ளும் இளைஞரும் இந்தக் கண்ணியில் அகப்பட்டுவிடலாம்.”—நீதிமொழிகள் 22:15.
சகாக்கள் சொன்ன காரியத்தை தங்களுடைய பெற்றோர் தடை செய்தபோது நேதன், மாரியா ஹோசே ஆகிய இருவருக்கும் மனப்போராட்டம் ஏற்பட்டது. இருப்பினும், அவர்கள் கீழ்ப்படிந்தனர்; அவ்வாறு செய்ததை எண்ணி பின்னர் சந்தோஷப்பட்டனர். ஒரு நீதிமொழி இப்படி சொல்கிறது: “உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை.”—நீதிமொழிகள் 22:17.
கனத்திற்குரியவர்கள்
ஒரு பக்கமாக சாயும் கப்பலை திறமையாக ஓட்டிச்செல்வது கடினம். அதுவே அதிகமாக சாய்கையில் எளிதில் கவிழ்ந்துவிடலாம். நாம் அபூரணர்களாக இருப்பதால், தன்னலமான காரியங்கள் மீதும் தடை செய்யப்பட்ட காரியங்கள் மீதுமே நம் மனம் சாய்ந்திருக்கிறது. தங்களுடைய பெற்றோர்களின் வழிநடத்துதலை கவனமாக பின்தொடர்ந்தால், இப்படிப்பட்ட மனச்சாய்வுகளின் மத்தியிலும் இளம் பிள்ளைகள் தங்களுடைய வாழ்வில் கரைசேர முடியும்.
உதாரணத்திற்கு, ஜீவனுக்குப் போகிற இடுக்கமான வாசலுமின்றி கேட்டுக்குப் போகிற விரிவான வாசலுமின்றி இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு பாதை இருக்கிறதென்ற கருத்தை ஒதுக்கித்தள்ள உங்கள் பெற்றோர் உதவலாம். (மத்தேயு 7:13, 14) ஓர் உணவை விழுங்காமல் “ருசி” பார்த்துவிட முடியும் என்று சொல்வது நம்பமுடியாத ஒன்று; அது போலவே ஒரு தவறில் முழுமையாக ஈடுபடாமல் கொஞ்சமாக அதை ருசிக்கலாம் என்ற கருத்தும் நடைமுறைக்கு ஒத்து வராதது. அப்படிப்பட்ட பாதையில் நடக்க முயற்சிப்பவர்கள் ‘இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடக்கிறார்கள்.’ யெகோவாவை ஓரளவு சேவித்துக்கொண்டு அதே சமயத்தில் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூருகிறார்கள். அவர்கள் ஆன்மீக ரீதியில் எளிதில் கவிழ்ந்துவிடுவார்கள். (1 இராஜாக்கள் 18:21; 1 யோவான் 2:15) ஏன் அப்படி ஆகிறது? நம்முடைய பாவமுள்ள மனச்சாய்வுகளே அதற்கு காரணம்.
நம்முடைய அபூரணத்தால் ஏற்படும் ஆசைகளுக்கு நாம் இணங்கிவிடுகையில், அவை மேலும் வலுவாகின்றன. நம்முடைய ‘வஞ்சனையான இருதயமோ’ பாவத்தை ருசி பார்ப்பதோடு திருப்தியடையாது. இன்னும் அனுபவிக்கத் தூண்டும். (எரேமியா 17:9 NW) ஆன்மீக ரீதியில் வழிவிலகிச் செல்ல ஆரம்பித்துவிட்டோம் என்றால், இந்த உலகம் நம் மீது அதிகமதிகமாக செல்வாக்கு செலுத்தும். (எபிரெயர் 2:1) ஆன்மீக ரீதியில் நீங்கள் சாய்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியாதிருக்கலாம், ஆனால் உங்களுடைய பெற்றோர் அதை கவனித்திருப்பார்கள். உண்மைதான், கம்ப்யூட்டர் புரோகிராமை கற்றுக்கொள்வதில் உங்கள் அளவுக்கு உங்களுடைய பெற்றோர் கெட்டிக்காரர்களாக இருக்க மாட்டார்கள்; ஆனால், வழிதவறிப்போக செய்யும் இருதயத்தை அறிவதில் உங்களைவிட அவர்களே கெட்டிக்காரர்கள். ‘உங்கள் இருதயத்தை நல்வழியிலே நடத்தி,’ ஜீவனை அடைய உங்களுக்கு உதவ விரும்புகிறார்கள்.—நீதிமொழிகள் 23:19.
இசை, பொழுதுபோக்கு, தோற்றம் போன்ற சிக்கலான விஷயங்களில் உங்கள் பெற்றோர் உங்களை வழிநடத்த வேண்டும். அவ்வாறு வழிநடத்துகையில் காரியங்களை கச்சிதமாக கையாள வேண்டும் என்று அவர்களிடமிருந்து எதிர்பார்க்காதீர்கள். சாலொமோனைப் போன்ற ஞானமோ அல்லது யோபைப் போன்ற பொறுமையோ அவர்களுக்கு இல்லாதிருக்கலாம். கப்பல் கேப்டனின் வழிகாட்டியைப் போல, சில சமயங்களில் அவர்கள் அளவுக்கு மிஞ்சிய எச்சரிப்புடனும் இருக்கலாம். இருப்பினும் ‘உன் தகப்பன் புத்தியைக் கேட்டு, உன் தாயின் போதகத்தைத் தள்ளாதிருந்தால்,’ அவர்களுடைய வழிநடத்துதல் மதிப்புமிக்க ஒன்றாகலாம்.—நீதிமொழிகள் 1:8, 9.
இளைஞர்கள் சிலர் தங்களுடைய பெற்றோர்களைப் பற்றி இளக்காரமாக பேசுவார்கள். ஆனால் உங்கள் பெற்றோர் பைபிள் நியமங்களின்படி வாழ முயற்சிப்பவர்கள் என்றால், எல்லா சூழலிலும், எல்லா சமயத்திலும், எல்லா கஷ்டத்திலும் உங்களுக்குத் தோள் கொடுப்பதற்கு இருக்கிறார்கள். அனுபவம் வாய்ந்த துறைமுக வழிகாட்டி கேப்டனை வழிநடத்துவது போல, உங்கள் பெற்றோர் ஞானமான பாதையில் உங்களை வழிநடத்துவார்கள். அதனால் கிடைக்கும் பலன்களோ எண்ணிறந்தவை.
‘ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும், அந்தகார வழிகளில் நடக்க நீதி நெறிகளை விட்டு . . . விடுகிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.’ ஏனெனில், ‘செவ்வையானவர்களே பூமியில் வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்களே அதில் தங்கியிருப்பார்கள்.’—நீதிமொழிகள் 2:10-15, 21.
[பக்கம் 22-ன் படம்]
மற்ற இளைஞர்களுடைய செல்வாக்கினால் நீங்கள் ஆன்மீக பாதையிலிருந்து வழிவிலகிவிடலாம்
[பக்கம் 23-ன் படம்]
தீனாளின் அனுபவத்தை நினைவில் வையுங்கள்
[பக்கம் 24-ன் படம்]
அனுபவம் வாய்ந்த வழிகாட்டியின் உதவியை கப்பலின் கேப்டன் நாடுவதுபோல், தங்கள் பெற்றோரின் வழிநடத்துதலை இளைஞர்கள் நாட வேண்டும்
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
போட்டோ: www.comstock.com