வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
‘வட்டியின்றி கடன் கொடுங்கள், எந்தக் கைம்மாறும் எதிர்பார்க்காதீர்கள்’ (NW) என்று இயேசு அறிவுறுத்திய போது, அசலைக்கூட திருப்பி கேட்கக் கூடாது என அர்த்தப்படுத்தினாரா?
நியாயப்பிரமாணத்தின் பின்னணியை மனதில் கொள்ளும்போது லூக்கா 6:35-ல் சொல்லப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளை நாம் நன்கு புரிந்துகொள்ள முடியும். பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்படும் சக இஸ்ரவேலருக்கு வட்டியில்லா கடன்கள் கொடுக்க வேண்டுமென இஸ்ரவேலருக்கு கடவுள் கட்டளையிட்டிருந்தார். (யாத்திராகமம் 22:25; லேவியராகமம் 25:35-37; மத்தேயு 5:42) இந்தக் கடன்கள் லாபம் சம்பாதிப்பதற்காகவோ வியாபார நோக்கத்திற்காகவோ கொடுக்கப்பட்ட கடன்கள் அல்ல. மாறாக, ஏழ்மையிலிருந்தும் அசம்பாவிதங்களிலிருந்தும் ஒருவரை விடுவிக்க கொடுக்கப்பட்ட வட்டியில்லா கடன்கள். சொல்லப்போனால், ஒருவருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை சாதகமாக பயன்படுத்தி லாபம் சம்பாதிக்க நினைப்பது மிகவும் அன்பற்ற செயல். இருப்பினும், கடன் கொடுத்தவர் அசலை திரும்பப் பெற உரிமை பெற்றிருந்தார்; இதற்கு சில சமயங்களில் ‘பிணையமாக’ (அடமானமாக) எதையாவது வாங்கிக்கொண்டார்.—உபாகமம் 15:7, 8, NW.
அந்த நியாயப்பிரமாண சட்டத்தை இயேசு ஆதரித்ததோடு, அதை இன்னும் விரிவாக்கினார்; அதாவது கடன் தரும்போது ‘கைம்மாறு கருதக்’ கூடாது என்றும் குறிப்பிட்டார். இஸ்ரவேலரைப் போலவே, சில சமயங்களில் கிறிஸ்தவர்களும் பொருளாதார நெருக்கடிகளில் அல்லது மற்ற சூழ்நிலைகளில் சிக்கி ஏழ்மையில் வாடலாம். இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் கிறிஸ்தவ சகோதரர் ஒருவர் பண உதவி நாடி வரும்போது அவருக்கு உதவி செய்வது தயவான செயல் அல்லவா? உண்மையில், பிரச்சினை கைமீறி போனதால் ஒரு சகோதரர் படுமோசமான பணக் கஷ்டத்திற்கு ஆளாகும்போது அவருக்கு உதவ உண்மையான அன்பு சக கிறிஸ்தவரை உந்துவிக்கும். (நீதிமொழிகள் 3:27) அப்படிப்பட்ட சகோதரருக்கு பெரிய தொகையை கடனாக கொடுக்க முடியாவிட்டாலும், நம்மால் முடிந்த குறைந்த தொகையை அன்பளிப்பாக கொடுக்கலாம்.—சங்கீதம் 37:21.
பொ.ச. முதல் நூற்றாண்டில், யூதேயாவில் பஞ்சம் நிலவியபோது அங்கிருந்த சகோதரர்களுக்கு ஆசியா மைனரிலிருந்த கிறிஸ்தவர்கள் நன்கொடைகள் வழங்கினர். அதைக் கொண்டுசெல்ல அப்போஸ்தலன் பவுலும் பர்னபாவும் நியமிக்கப்பட்டனர். (அப்போஸ்தலர் 11:28-30) இன்றும் அது போலவே, பேரழிவு தாக்குகையில், தேவையிலிருக்கும் சகோதரர்களுக்கு கிறிஸ்தவர்கள் அடிக்கடி அன்பளிப்புகளை அனுப்புகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் பிறருக்கு நற்சாட்சியும் அளிக்கின்றனர். (மத்தேயு 5:16) உண்மைதான், உதவியை நாடுபவரின் மனப்பான்மையையும் சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்; அவருக்கு ஏன் உதவி தேவைப்படுகிறது என சிந்திக்க வேண்டும். இவ்விஷயத்தில் பவுலின் வார்த்தைகள் குறிப்பிடத்தக்கவை: ‘ஒருவன் வேலை செய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாது.’—2 தெசலோனிக்கேயர் 3:10.
கடன் கேட்கும் சகோதரர் ஒருவேளை ரொம்ப மோசமான நிலைமையில் இல்லையென்றாலும், பண நெருக்கடியிலிருந்து விடுபட்டு தன் சொந்தக் காலில் நிற்பதற்கு தற்காலிக பண உதவி கேட்டால், அவருக்கு வட்டியில்லாமல் கடன் கொடுப்பது பொருத்தமானதாக இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில், முழு தொகையையும் திரும்பப் பெறும் நோக்கத்தோடு கடன் கொடுப்பது லூக்கா 6:35-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளுக்கு முரணாக இருக்காது. இதை எழுத்து வடிவில் ஒப்பந்தம் செய்ய வேண்டும்; கடன் வாங்கியவர் தான் ஒத்துக்கொண்ட விதிமுறைகளின்படியே கடனை அடைக்க தன்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். உண்மையில், கிறிஸ்தவ அன்பு கடன் கொடுக்க தூண்டுவது போலவே அதைத் திரும்ப அடைக்கவும் தூண்ட வேண்டும்.
கடன் கொடுக்க நினைப்பவர் (அல்லது அன்பளிப்பு கொடுப்பவர்) தன் குடும்ப சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒருவர் கடன் கொடுப்பதால் தன் குடும்ப அங்கத்தினர்களின் தேவைகளை கவனித்துக்கொள்ள வேண்டிய வேதாகம பொறுப்பிற்கு பங்கம் வந்துவிட வாய்ப்புள்ளதா? (2 கொரிந்தியர் 8:12; 1 தீமோத்தேயு 5:8) இருப்பினும், கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதற்காக வாய்ப்புகளைத் தேடுகின்றனர்; அதோடு, பைபிள் நியமங்களுக்கு இசைய அந்த அன்பை நடைமுறையான வழிகளில் வெளிக்காட்டுகின்றனர்.—யாக்கோபு 1:27; 1 யோவான் 3:18; 4:7-11.