உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w04 11/1 பக். 4-7
  • இன்று தலைசிறந்த தலைவர் யார்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இன்று தலைசிறந்த தலைவர் யார்?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மனிதர்களால் முடியாது
  • ஆளுவதற்கு உண்மையிலேயே தகுதிபெற்றவர்
  • இப்புதிய தலைவர் சாதிப்பவை
  • தலைசிறந்த தலைமை எங்கே கண்டடைவது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • உதவிக்காகக் கூப்பிடுவோரை யார் விடுவிப்பார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • நீங்கள் யாரை தலைவராக தேர்ந்தெடுப்பீர்கள்?—பைபிள் என்ன சொல்கிறது?
    வேறுசில தலைப்புகள்
  • கிறிஸ்துவின் தலைமை உங்களுக்கு நிஜமானதாக இருக்கிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
w04 11/1 பக். 4-7

இன்று தலைசிறந்த தலைவர் யார்?

1940-⁠ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் நெருக்கடி நிலை உருவானது. எழுபத்தேழு வயதுடைய டேவிட் லாயிட் ஜார்ஜ் அங்கு நடந்த விவாதத்தை கேட்டுக்கொண்டிருந்தார். முதல் உலகப் போரின் போது பிரிட்டனை வெற்றிப் பாதையில் வழிநடத்தியவர் அவரே; பல வருட அரசியல் அனுபவத்தின் காரணமாக, உயர் அதிகாரிகளின் நடவடிக்கைகளை அவரால் நன்கு சீர்தூக்கிப் பார்க்க முடிந்தது. மே 8-⁠ம் தேதி மக்கள் சபையில் ஆற்றிய பேச்சில் இவ்வாறு குறிப்பிட்டார்: “தேசம் எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருக்கும்​—⁠ஒரு தலைவர் இருக்கும் பட்சத்தில், அரசாங்கம் அதன் குறிக்கோள்களை தெளிவாக தெரிவிக்கும் பட்சத்தில், அரசாங்கத் தலைவர்கள் செம்மையானதை செய்கிறார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் பிறக்கும் பட்சத்தில்.”

சீரிய தலைவர்களை, நாட்டின் மேம்பாட்டிற்காக அயராது உழைக்கும் நேர்மையான தலைவர்களை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது லாயிட் ஜார்ஜ் சொன்ன இந்த வார்த்தைகளிலிருந்து தெளிவாகிறது. தேர்தல் பிரச்சாரம் செய்த ஒரு பெண் இவ்வாறு சொன்னார்: “ஒரு தலைவருக்காக மக்கள் ஓட்டுப் போடுகையில், தங்களுடைய வாழ்க்கையையும், எதிர்காலத்தையும், பிள்ளைகளையும் அவரிடம் நம்பிக்கையோடு ஒப்படைத்து ஓட்டுப் போடுகிறார்கள்.” இவர்களுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்துகொள்வது மிகப் பெரிய சவால். ஏன் அப்படி?

ஏனெனில் தீர்க்க முடியா பிரச்சினைகளுக்குள் சிக்கித் தவிக்கிறது நமது உலகம். உதாரணமாக, குற்றச்செயலையும் போரையும் ஒழிப்பதற்கு அறிவும் ஆற்றலும் படைத்த தலைவர் யாரேனும் இருந்திருக்கிறாரா? உணவு, சுத்தமான குடிநீர், சுகாதாரம் ஆகியவற்றை எல்லா மனிதருக்கும் அளிப்பதற்கு அக்கறையும் திறமையும் கொண்ட தலைவர் இன்று இருக்கிறாரா? சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் மதிநுட்பமும் மனோதிடமும் படைத்த ஒருவர் இருக்கிறாரா? முழு மனிதகுலத்திற்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையை, நீடித்த வாழ்க்கையை உத்தரவாதம் அளிப்பதற்குத் தகுதியும் திறனும் பெற்றவர் இருக்கிறாரா?

மனிதர்களால் முடியாது

தலைவர்கள் சிலர் ஓரளவுக்கு வெற்றி கண்டிருப்பது உண்மைதான். என்றாலும், அதிகபட்சமாக சில பத்தாண்டுகளே அவர்களால் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்க முடியும், அடுத்ததாக வேறொருவர் ஆட்சிக்கு வருகிறார். அவர் யார்? இந்தக் கேள்வியைக் குறித்து பூர்வ இஸ்ரவேலின் அரசனாகிய சாலொமோன் ஆழ்ந்து சிந்தித்தார்; படு திறமைசாலியான தலைவராக விளங்கிய அவர் பின்வரும் முடிவுக்கும் வந்தார்: “சூரியனுக்குக் கீழே நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்; எனக்குப் பின் வரப்போகிறவனுக்கு அதை நான் வைத்துப்போக வேண்டியதாகுமே. அவன் புத்திமானாயிருப்பானோ, மூடனாயிருப்பானோ, அதை யார் அறிவார்? ஆகிலும் சூரியனுக்குக் கீழே நான் பிரயாசப்பட்டு ஞானமாய்ச் சம்பாதித்த சகல வஸ்துக்களின் பேரிலும் அவன் அதிகாரியாவான்; இதுவும் மாயையே.”​—⁠பிரசங்கி 2:18, 19.

அடுத்து ஆட்சியில் அமருபவர் தன்னைப் போல் தொடர்ந்து நல்லதையே செய்வாரா அல்லது எல்லாவற்றையும் சீரழித்து விடுவாரா என்பது சாலொமோனுக்குத் தெரியவில்லை. அவரைப் பொறுத்த வரை, பழைய ஆட்சியாளர்கள் போய் புதிய ஆட்சியாளர்கள் வந்துகொண்டிருக்கும் இந்தச் சுழற்சி ஒரு ‘மாயையாகவே’ இருந்தது. சில பைபிள் மொழிபெயர்ப்புகள் இந்தச் சுழற்சியை “வீணானது,” “அர்த்தமற்றது” என்றெல்லாம் குறிப்பிடுகின்றன. ‘இது அறிவற்றது’ என மற்றொரு மொழிபெயர்ப்பு சொல்கிறது.

சில சமயங்களில், ஆட்சியாளர்களை மாற்ற ஆயுதமும் அடாவடித்தனமும் கையாளப்படுகிறது. தகுதி படைத்த தலைவர்கள் சிலர் பதவியில் இருக்கும்போதே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். எல்லாராலும் உயர்வாக மதிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு கூட்டத்தில் இவ்வாறு கூறினார்: “ஒரு முக்கியமான பொறுப்பை நிர்வகிக்க குறுகிய காலத்திற்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன், இப்போதும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த அதிகாரம் உங்களுடைய கண்களுக்கு முன்பாகவே சீக்கிரத்தில் பறிபோய் விடும்.” அவர் சொன்னபடி கொஞ்ச காலத்திற்கே பதவி வகித்தார். மக்களுக்காக ஜனாதிபதி லிங்கன் செய்தவை, செய்ய விரும்பியவை பல இருந்தாலும் அவர் நான்கு ஆண்டுகளே நாட்டை ஆண்டார். அவரது இரண்டாம் கட்ட ஆட்சியின் துவக்கத்தில், வேறு தலைவரை பதவியில் அமர்த்த விரும்பிய ஒருவரால் கொலை செய்யப்பட்டார்.

மிகச் சிறந்த தலைவர்களுக்கே எதிர்காலம் அவர்கள் கையில் இல்லை. அப்படியிருக்கும்போது, உங்களுடைய எதிர்காலத்திற்கு அவர்களை நம்பியிருக்க வேண்டுமா? “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்து போம்” என பைபிள் சொல்கிறது. பையிங்டன் மொழிபெயர்ப்பு இந்த வசனத்தின் கடைசி வரியை “அந்நாளில் அவனுடைய நல்ல திட்டங்கள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விடும்” என மொழிபெயர்க்கிறது.​—⁠சங்கீதம் 146:3, 4.

மனித தலைவர்களை நம்பாதேயுங்கள் என்ற இந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்வது ஒருவேளை கடினமாக இருக்கலாம். என்றாலும் மனிதகுலத்தை சிறப்பாகவும் நிரந்தரமாகவும் ஆளுவதற்கு தலைவரே இருக்கப் போவதில்லை என பைபிள் கூறுவதில்லை. “இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்” என ஏசாயா 32:1 சொல்கிறது. மனிதனை படைத்த யெகோவா தேவன் ‘ஒரு ராஜாவை,’ ஒரு தலைவரை ஏற்பாடு செய்திருக்கிறார்; அவர் விரைவில் பூமியின் விவகாரங்களை முற்றிலும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார். அவர் யார்? பைபிள் தீர்க்கதரிசனம் அவரை யாரென்று அடையாளம் காட்டுகிறது.

ஆளுவதற்கு உண்மையிலேயே தகுதிபெற்றவர்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மரியாள் எனும் ஓர் இளம் யூதப் பெண்ணிடம் தேவதூதன் இவ்வாறு சொன்னார்: “நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது.” (லூக்கா 1:31-33) ஆம், பைபிள் தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்படும் ராஜா நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவே.

ஓவியங்கள் பல, இயேசுவை பெரும்பாலும் ஒரு குழந்தையைப் போலவும், ஊட்டச்சத்து இல்லாமல் மெலிந்திருக்கும் ஒருவரைப் போலவும், அனைத்தையும் வெறுத்த துறவி போலவுமே சித்தரிக்கின்றன. இந்த உருவங்கள் எல்லாம் அவரை ஓர் ஆட்சியாளராக ஏற்றுக்கொண்டு அவர்மீது நம்பிக்கை வைப்பதற்குத் தூண்டுவதில்லை. ஆனால், பைபிளில் விவரிக்கப்பட்டுள்ள நிஜ இயேசு கிறிஸ்துவோ மிகுந்த ஆர்வமும் துடிப்பும் உடையவராக, அதிகாரமும் முதிர்ச்சியும் மிக்கவராக விளங்கினார். இலட்சிய தலைவருக்கு ஏற்ற அத்தனை இலட்சணங்களும் அவருக்கு இருந்தன. (லூக்கா 2:52) அவருடைய உயரிய குணங்கள் சிலவற்றை நாம் இப்போது சிந்திக்கலாம்.

இயேசு இறுதிவரை பரிபூரண உத்தமத்தை வெளிக்காட்டினார். அவர் நேர்மையும் நீதியும் உள்ளவராக திகழ்ந்ததால், தம்மீது எந்தக் குற்றத்தையாவது நியாயமாக சுமத்த முடியுமா என எதிரிகளிடம் யாவரறிய சவால்விட்டார். அவர்களால் ஒரு குற்றத்தையும் சுமத்த முடியவில்லை. (யோவான் 8:46) அவரது வஞ்சகமற்ற போதனைகளைக் கேட்ட நேர்மையான மக்கள் அநேகர் அவருடைய சீஷர்கள் ஆனார்கள்.​—⁠யோவான் 7:46; 8:28-30; 12:19.

கடவுளுக்காக இயேசு தம்மையே அர்ப்பணித்தார். கடவுள் கொடுத்த வேலையை செய்து முடிப்பதில் அந்தளவுக்கு உறுதியுடன் இருந்ததால் எந்த எதிரியாலும்​—⁠மனிதன் ஆகட்டும் பேய் ஆகட்டும்​—⁠அவரை தடுத்து நிறுத்த முடியவில்லை. பயங்கரமான தாக்குதல்களுக்கும் அவர் அஞ்சவில்லை. (லூக்கா 4:28-30) களைப்பினாலும் பசியினாலும் சோர்ந்துவிடவில்லை. (யோவான் 4:5-16, 31-34) நண்பர்கள் அவரை கைவிட்டபோதிலும் தமது இலட்சியத்தை கைவிடவே இல்லை.​—⁠மத்தேயு 26:55, 56; யோவான் 18:3-9.

இயேசுவுக்கு மக்கள் மீது ஆழ்ந்த அக்கறை இருந்தது. பசியில் வாடியோருக்கு உணவளித்தார். (யோவான் 6:10, 11) துயரத்தில் துவண்டுபோய் இருந்தோருக்கு ஆறுதலளித்தார். (லூக்கா 7:11-15) குருடருக்கு பார்வை அளித்தார், செவிடரை சுகப்படுத்தினார், நோயுற்றோரை குணப்படுத்தினார். (மத்தேயு 12:22; லூக்கா 8:43-48; யோவான் 9:1-6) கடினமாக உழைத்த தமது அப்போஸ்தலருக்கு உற்சாகம் அளித்தார். (யோவான், அதிகாரங்கள் 13-17) ஆடுகளை கண்ணும் கருத்துமாய் காத்துவந்த ‘நல்ல மேய்ப்பனாக’ விளங்கினார்.​—⁠யோவான் 10:11-15.

இயேசு வேலை செய்ய மனமுள்ளவராக இருந்தார். ஒரு முக்கிய பாடத்தைக் கற்பிப்பதற்காக அப்போஸ்தலரின் கால்களைக் கழுவினார். (யோவான் 13:4-16) அவரோ தம்முடைய கால்களில் புழுதி படிய இஸ்ரவேலின் சாலைகளில் நடந்து நற்செய்தியைப் பிரசங்கித்தார். (லூக்கா 8:1) ‘தனிமையான ஓரிடத்தில்’ இளைப்பாற நினைத்தபோதிலும், திரளான ஜனங்கள் மீண்டும் அவரைத் தேடி வந்தபோது அவர்களுக்கு போதித்தார். (மாற்கு 6:30-34, பொது மொழிபெயர்ப்பு) இவ்வாறு, எல்லா கிறிஸ்தவர்களும் சுறுசுறுப்பாக செயல்பட இலக்கணமாய் திகழ்ந்தார்.​—⁠1 யோவான் 2:6.

இயேசு தமது வேலையை முடித்த பின் பூமியை விட்டுச் சென்றார். அவருடைய உண்மைத்தன்மைக்கு பரிசாக பரலோகத்தில் அழிவில்லா வாழ்வையும் அரசதிகாரத்தையும் யெகோவா தேவன் அருளினார். உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவைப் பற்றி பைபிள் இவ்வாறு கூறுகிறது: ‘மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.’ (ரோமர் 6:9) மனிதகுலத்திற்கு ஏற்ற இலட்சிய தலைவராக இருப்பதற்கு அவரே தகுதி வாய்ந்தவர் என்பதில் உறுதியுடன் இருக்கலாம். கிறிஸ்து இயேசு இந்த முழு பூமியையும் தம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பிறகு, வேறொரு தலைவரை நியமிக்க வேண்டிய அவசியம் இருக்காது; தலைவர்களை மாற்றிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இருக்காது. ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும்போது படுகொலை செய்யப்படும் நிலையும் அவருக்கு வராது. அவரது நற்பணிகளை வேறொரு தகுதியற்ற தலைவரால் பாழாக்கவோ அழிக்கவோ முடியாது. ஆனால் மனிதகுலம் நன்மையடைய முக்கியமாக அவர் என்ன செய்வார்?

இப்புதிய தலைவர் சாதிப்பவை

பரிபூரணரும் அழியாதவருமான இந்த ராஜா எப்படி ஆட்சி செய்வார் என்பதைப் பற்றிய சில தீர்க்கதரிசன விளக்கங்களை 72-⁠ம் சங்கீதம் அளிக்கிறது. 7 மற்றும் 8 வசனங்களில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ள வரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். ஒரு சமுத்திரந் தொடங்கி மறு சமுத்திரம் வரைக்கும், நதி தொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும் அவர் அரசாளுவார்.” மிகுந்த நன்மை அளிக்கும் அவரது ஆட்சியில் பூமியின் குடிகள் என்றென்றும் பாதுகாப்போடு சுகமாய் வாழ்வார்கள். இப்போதிருக்கும் எல்லா போர்க் கருவிகளையும் அவர் அழித்து விடுவார்; போர் வெறியையும் மனிதனின் இதயத்திலிருந்து எடுத்துப் போடுவார். பசிவெறியில் இருக்கும் சிங்கங்களைப் போல் இன்று பிறரை தாக்குவோர் அல்லது கடுகடுப்பான கரடிகளைப் போல் அக்கம்பக்கத்தாரிடம் நடந்துகொள்வோர் தங்களுடைய குணத்தை அடியோடு மாற்றியிருப்பார்கள். (ஏசாயா 11:1-9) எங்கும் சமாதானமே நிலவும்.

மேலும் 72-⁠ம் சங்கீதத்தின் 12 முதல் 14 வரையான வசனங்கள் இவ்வாறு சொல்கின்றன: “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.” சிறுமைப்பட்டவர்களும் எளியவர்களும் உதவியற்றவர்களும் ராஜா இயேசு கிறிஸ்துவின் தலைமையில் ஒன்றுபட்டு ஒரே குடும்பமாக மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். வேதனையோ துயரமோ அல்ல, ஆனால் சந்தோஷமே அவர்களுடைய வாழ்வில் குடிகொள்ளும்.​—⁠ஏசாயா 35:10.

வசனம் 16 (NW) இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறது: “பூமியில் தானியம் மிகுந்திருக்கும்; மலைகளின் உச்சியில் அமோக விளைச்சல் இருக்கும்.” பசியின் கொடுமை இன்று கோடிக்கணக்கானோரை வாட்டி வதைக்கிறது. சரிசமமாக உணவு பங்கீடு செய்வதை அரசியலும் பேராசையும் தடுத்திருக்கின்றன; அதனால் எண்ணற்றோர், முக்கியமாக குழந்தைகள் பட்டினியால் சாகிறார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவின் ஆட்சியில் இந்தப் பிரச்சினை அடியோடு மறைந்துவிடும். இந்தப் பூமியில் ருசிமிக்க உணவு ஏராளமாக விளையும். மனிதர் அனைவரும் நன்கு போஷிக்கப்படுவார்கள்.

சிறந்த தலைவரின் ஆட்சியால் கிடைக்கும் நன்மைகளை அனுபவித்து மகிழ விரும்புகிறீர்களா? அப்படியானால், சீக்கிரத்தில் இந்த முழு பூமியையும் ஆட்சி செய்யப்போகிற தலைவரைப் பற்றி கற்றுக்கொள்ள உங்களை உற்சாகப்படுத்துகிறோம். இதற்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். “நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன் மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம் பண்ணி வைத்தேன்” என யெகோவா தேவனே தம்முடைய குமாரனைப் பற்றி சொல்லியிருக்கிறார்; ஆகவே நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.​—⁠சங்கீதம் 2:6.

[பக்கம் 5-ன் பெட்டி]

திடீர் பதவி பறிப்பு

ஓர் ஆட்சியாளர் நியாயமான அளவுக்கு சமாதானத்தையும் பாதுகாப்பான வாழ்க்கையையும் அமைத்துக் கொடுத்தால், குடிமக்களின் மரியாதையும் ஆதரவும் அவருக்கு கிடைக்கும். ஆனால், ஏதாவது காரணத்தின் நிமித்தம் அவர் மீதுள்ள நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டால், சீக்கிரத்தில் அவரது பதவி பறிபோய்விடும். செல்வாக்குமிக்கவர்களின் பதவி திடீரென பறிபோனதற்கு வழிவகுத்த சில சூழ்நிலைகள் இவை:

திருப்தியற்ற வாழ்க்கை சூழ்நிலைகள். 18-⁠ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அநேக பிரெஞ்சு குடிமக்கள் பெரும் வரிச்சுமையுடனும் உணவுப் பற்றாக்குறையுடனும் வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இந்தச் சூழ்நிலையே பிரெஞ்சு புரட்சிக்கு வித்திட்டது. இதன் விளைவாக 1793-⁠ல் கிலட்டின் மேடையில் அரசன் பதினாறாம் லூயியின் தலை துண்டிக்கப்பட்டது.

போர். முதல் உலகப் போர், சரித்திரத்தில் மிகவும் செல்வாக்கு பெற்றிருந்த சில பேரரசர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது. உதாரணமாக, 1917-⁠ல் போரின் காரணமாக, ரஷ்யாவிலுள்ள செ. பீட்டர்ஸ்பர்க்கில் ஏற்பட்ட பஞ்சம் பிப்ரவரி புரட்சியை தூண்டிவிட்டது. இப்புரட்சி, இரண்டாம் சார் நிக்கலஸ் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கும் கம்யூனிச ஆட்சி நிறுவப்படுவதற்கும் அடிகோலியது. நவம்பர் 1918-⁠ல் ஜெர்மனி சமரசத்தை நாடியது; ஆனால் நேச நாடுகளோ வேறு தலைவரை அமர்த்தும் வரையில் தொடர்ந்து போரிட்டன. அதன் விளைவாக, ஜெர்மானிய பேரரசர் இரண்டாம் வில்ஹம் நெதர்லாந்துக்கு நாடுகடத்தப்படும் சூழ்நிலைக்கு ஆளானார்.

வெவ்வேறு அரசாங்கங்களுக்கான ஆவல். 1989-⁠ல் இரும்புத் திரை தகர்க்கப்பட்டது. கம்யூனிச ஆட்சியை மக்கள் தள்ளிவிட்டு பல வித்தியாசமான ஆட்சிமுறைகளை ஸ்தாபித்த போது பாறை போல் உறுதியாக இருந்த அரசுகள் சுக்குநூறாயின.

[பக்கம் 7-ன் படங்கள்]

பசியில் வாடியோருக்கு இயேசு உணவளித்தார், நோயுற்றோரை சுகப்படுத்தினார், கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் இலக்கணமாய் திகழ்ந்தார்

[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]

லாயிட் ஜார்ஜ்: போட்டோ: Kurt Hutton/Picture Post/Getty Images

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்