வாழ்க்கை சரிதை
கடவுளுடைய ஆட்சியில் வாழ உறுதியான தீர்மானம்
மிகால் ஸாப்ராக் சொன்னபடி
தனிச் சிறையில் அடைக்கப்பட்டேன். ஒரு மாதம் கடந்தது. விசாரணை செய்பவரிடம் இழுத்துச் சென்றார்கள். விசாரணையின்போது அவர், “நீங்கள் உளவாளிகள்! அமெரிக்க உளவாளிகள்!” என்று முகம் சிவக்க ஆத்திரப்பட்டு கத்தினார். அவர் ஏன் அவ்வளவு கோபப்பட்டார்? எந்த மதத்தை சேர்ந்தவன் என்று என்னிடம் கேட்டதற்கு, “நான் ஒரு யெகோவாவின் சாட்சி” என்று பதில் சொன்னதே காரணம்.
இந்த விசாரணை நடைபெற்று 50 வருடங்களுக்கும் மேலாக ஆகிறது. அப்போது நான் வாழ்ந்த நாடு கம்யூனிஸ ஆட்சியின் கீழ் இருந்தது. என்றாலும் அந்த ஆட்சி வருவதற்கு ரொம்ப காலத்திற்கு முன்பிருந்தே எங்களுடைய கிறிஸ்தவ கல்விபுகட்டும் வேலைக்கு பயங்கர எதிர்ப்புகள் வர தொடங்கிவிட்டன.
போரின் கொடுமையை அனுபவித்தோம்
1914-ல் முதல் உலகப் போர் தொடங்கியபோது எனக்கு எட்டு வயது. அந்த சமயத்தில் நாங்கள் வசித்த ஸாலுஸிட்ஸே கிராமம் ஆஸ்திரிய-ஹங்கேரி பேரரசின் கீழ் இருந்தது. போர் உலக நிலைமைகளை தலைகீழாக்கியது; அதோடு என்னுடைய குழந்தைப் பருவத்தையும் பறித்துக்கொண்டது. ராணுவ வீரராக இருந்த என்னுடைய அப்பா போரின் முதல் வருடத்திலேயே இறந்துவிட்டார். அதனால் நானும், அம்மாவும், இரண்டு தங்கைகளும் கடும் வறுமையில் சிக்கித் தவித்தோம். வீட்டில் நான்தான் மூத்த பிள்ளை; ஒரே ஆண்பிள்ளையும்கூட. அதனால் எனக்கு நிறைய பொறுப்புகள் இருந்தன. அதாவது எங்களுடைய சிறிய பண்ணையிலும் வீட்டிலும் நிறைய வேலைகளை பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. சிறு வயதுமுதல் மதத்தில் எனக்கு அதிக ஈடுபாடு இருந்தது. எங்களுடைய ரிஃபார்ம்ட் (கால்வினிஸ்ட்) சர்ச் பாதிரி, தான் இல்லாத சமயத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதிக்குமாறுகூட என்னிடம் கேட்டிருக்கிறார்.
1918-ல் முதல் உலகப் போர் முடிவுக்கு வந்தது. நாங்கள் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். ஆஸ்திரியா-ஹங்கேரி பேரரசு கவிழ்ந்தது. பிறகு நாங்கள் செக்கோஸ்லோவாகியா குடியரசின் பிரஜைகளானோம். ஐக்கிய மாகாணங்களுக்கு குடிபெயர்ந்து போன எங்கள் ஏரியாவிலிருந்தவர்களில் அநேகர் கொஞ்ச நாட்களிலேயே வீடு திரும்பினார்கள். அவர்களில் மிகால் பெட்ரிக்கும் ஒருவர். 1922-ல் அவர் எங்களுடைய கிராமத்திற்கு வந்திருந்தார். அருகில் வசித்தவர்களின் வீட்டிற்கு ஒரு சமயம் அவர் வந்தபோது அந்தக் குடும்பத்தினர் என்னையும் அம்மாவையும்கூட அழைத்தார்கள்.
கடவுளுடைய ஆட்சி எங்களுக்கு நிஜமானது
மிகால் ஒரு பைபிள் மாணாக்கர். அப்போதெல்லாம் யெகோவாவின் சாட்சிகள் அப்படித்தான் அழைக்கப்பட்டார்கள். என்னுடைய ஆர்வத்தை தூண்டிய முக்கியமான பைபிள் விஷயங்களைப் பற்றி அவர் பேசினார். முதலாவதாக யெகோவாவின் ராஜ்யம் வரப்போவதை குறித்துப் பேசினார். (தானியேல் 2:44) அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஸாஹார் கிராமத்தில் கிறிஸ்தவ கூட்டம் ஒன்று நடைபெறவிருந்ததைப் பற்றி அவர் சொன்னபோது அதற்கு கண்டிப்பாக போக வேண்டும் என்று தீர்மானித்தேன். விடியற்காலை 4 மணிக்கு எழுந்து ஒரு இரவல் சைக்கிளை வாங்க என்னுடைய உறவினர் வீட்டுக்கு சுமார் 8 கிலோமீட்டர் தூரம் நடந்தேன். அங்கிருந்து 24 கிலோமீட்டர் தூரத்தில் ஸாஹார் கிராமம் இருந்தது. பஞ்சராயிருந்த டயரை ஒட்டிவிட்டு பிறகு சைக்கிளை மிதித்தேன். கூட்டம் நடைபெறும் இடத்தின் விலாசம் எனக்கு தெரியாததால் ஒரு தெருவில் சைக்கிளை மெதுவாக ஓட்டிக்கொண்டு போனேன். அப்போது ஒரு வீட்டில் ராஜ்ய பாடல்கள் பாடும் சத்தம் கேட்டதும் எனக்கு சந்தோஷமாகிவிட்டது. அந்த வீட்டிற்குள் சென்று நான் எதற்காக வந்தேன் என்பதை விளக்கினேன். அவர்கள் என்னை டிபன் சாப்பிட கூப்பிட்டார்கள். பிறகு என்னை கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்து வீடு திரும்ப இன்னொரு 32 கிலோமீட்டர் சைக்கிளும் நடையுமாக பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஆனாலும் எனக்கு கொஞ்சங்கூட களைப்பே தெரியவில்லை.—ஏசாயா 40:31.
யெகோவாவின் சாட்சிகள் அளித்த தெளிவான, பைபிள் சார்ந்த விளக்கங்கள் என்னை வியக்க வைத்தன. கடவுளுடைய ஆட்சியின் கீழ் நிறைவுள்ள திருப்தியான வாழ்க்கையை அனுபவித்து மகிழலாம் என்ற நம்பிக்கை என் மனதை தொட்டது. (சங்கீதம் 104:28) நானும் அம்மாவும் சர்ச்சை விட்டு விலகுவதாக கடிதம் எழுதி அனுப்ப முடிவு செய்தோம். இது எங்களுடைய கிராமத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது; சிலர் எங்களிடம் பேசுவதைக்கூட கொஞ்ச காலத்திற்கு நிறுத்திவிட்டார்கள். ஆனாலும் எங்கள் பகுதியில் இருந்த யெகோவாவின் சாட்சிகள் நிறைய பேருடன் நல்ல நட்பை கொண்டிருந்தோம். (மத்தேயு 5:11, 12) சிறிது காலத்திற்குப்பின் ஊ ஆற்றில் முழுக்காட்டுதல் பெற்றேன்.
ஊழியம்தான் வாழ்க்கை
யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிப்பதற்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தினோம். (மத்தேயு 24:14) குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில், நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வெளி ஊழிய ஏற்பாடுகளில் கலந்துகொண்டோம். அப்போதெல்லாம் மக்கள் அதிகாலையிலேயே எழுந்துவிடுவார்கள். அதனால் நாங்களும் எங்களுடைய ஊழியத்தை சீக்கிரமாக தொடங்க முடிந்தது. மாலை வேளைகளில் பொதுக்கூட்டம் நடைபெறும். பைபிள் போதகர்கள் எழுதி வைத்து வாசிக்காமல் பெரும்பாலும் மனதிலிருந்துதான் பேச்சுக் கொடுத்தார்கள். அதாவது அக்கறை காட்டுபவர்கள் எத்தனைபேர் வந்திருக்கிறார்கள், எந்த மத பின்னணியிலிருந்து வந்திருக்கிறார்கள், அவர்களுடைய ஆர்வத்திற்குரிய விஷயங்கள் என்ன ஆகியவற்றையெல்லாம் மனதில் வைத்தே பேச்சை கொடுத்தார்கள்.
நாங்கள் பிரசங்கித்த பைபிள் சத்தியங்கள் அநேக நல்மனமுள்ள ஆட்களின் மனக்கண்களை திறந்தன. முழுக்காட்டுதல் பெற்ற கையோடு நான் ட்ரஹாவிஷ்டே கிராமத்தில் பிரசங்கிக்க தொடங்கினேன். அப்போது திருமதி ஸுஸானா மாஸ்கால் என்பவரை வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சந்தித்தேன். அவர் அன்பாகவும், சிநேகமாகவும் நடந்துகொண்டார். நான் முன்பு ஒரு கால்வினிஸ்டாக இருந்தது போலவே அவரும் அவருடைய குடும்பத்தினரும் அப்போது கால்வினிஸ்டுகளாக இருந்தார்கள். அவர் பைபிளை நன்றாக தெரிந்துவைத்திருந்தார். இருந்தாலும் பைபிள் சம்பந்தப்பட்ட நிறைய கேள்விகளுக்கு அவருக்கு பதில் கிடைக்கவில்லை. நாங்கள் ஒரு மணிநேரம் கலந்துரையாடினோம். பின்பு த ஹார்ப் ஆஃப் காட் என்ற புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன்.a
மாஸ்கால் குடும்பத்தினர் தவறாமல் பைபிளை வாசித்து வந்தார்கள். ஹார்ப் புத்தகத்தை பெற்ற உடனேயே அதையும் தவறாமல் வாசிக்கத் தொடங்கினார்கள். அந்தக் கிராமத்து மக்களில் அநேகர் ஆர்வம் காட்டி, கூட்டங்களுக்கு வரத்தொடங்கினார்கள். அவர்களுடைய கால்வினிஸ்ட் பாதிரி எங்களையும் எங்கள் பிரசுரங்களையும் எதிர்த்து கடுமையாக எச்சரித்தார். அப்போது, ஆர்வம் காட்டின சிலர், ‘நீங்கள் அவர்களுடைய கூட்டத்துக்கு வந்து அங்கு சொல்லப்படும் விஷயங்கள் தவறென்று எல்லார் முன்பும் நிரூபியுங்கள்’ என்று பாதிரிக்கு ஐடியா கொடுத்தார்கள்.
கூட்டத்துக்கு பாதிரி வந்திருந்தார். ஆனால் தன்னுடைய போதனைகள் சரியானவை என்பதை நிரூபிக்க அவரால் பைபிளிலிருந்து ஒரு ஆதாரத்தைக்கூட எடுத்துக்காட்ட முடியவில்லை. தான் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கு இவ்வாறு சொன்னார்: “பைபிள் சொல்லும் அனைத்தையும் நாம் நம்பிவிட முடியாது. அதை மனிதர்கள்தானே எழுதினார்கள். மதம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு நிறைய விதங்களில் விளக்கம் தர முடியும்.” அநேகருக்கு இது ஒரு திருப்புக்கட்டமாக அமைந்தது. ‘நீங்கள் பைபிளை நம்பாவிட்டால் இனியொருபோதும் உங்கள் பிரசங்கத்தை கேட்பதற்கு வரமாட்டோம்’ என்று சிலர் பாதிரியிடம் கூறினார்கள். இவ்வாறாக அந்தக் கிராமத்திலிருந்த சுமார் 30 பேர் கால்வினிஸ்ட் சர்ச்சுடன் தாங்கள் வைத்திருந்த உறவை முறித்துக்கொண்டு பைபிள் சத்தியத்திற்கு உறுதியான நிலைநிற்கை எடுத்தார்கள்.
ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பதே என் வாழ்க்கையாகி விட்டதால், ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ள குடும்பத்திலிருந்தே திருமண துணையை தேடிக்கொண்டிருந்தேன். என்னுடைய உடன் ஊழியரான யான் பெட்ரூஷ்கா என்பவருக்கு ஐக்கிய மாகாணங்களில் இருந்தபோது சத்தியம் கிடைத்தது. அவருக்கு மாரியா என்று ஒரு மகள் இருந்தாள். தன் அப்பாவைப் போலவே அவளும் எல்லாரிடமும் சாட்சி கொடுக்க எப்போதும் தயாராயிருந்தாள். அது என்னை மிகவும் கவர்ந்தது. 1936-ல் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். மாரியா 50 வருடங்களுக்கு எனக்கு உண்மையுள்ள துணைவியாக இருந்தாள். பிறகு 1986-ல் மரணமடைந்தாள். எங்களுடைய ஒரே மகனான எடுவர்ட் 1938-ல் பிறந்தான். ஆனால் அந்த சமயத்தில் ஐரோப்பாவில் இன்னொரு போர் தொடங்கவிருந்தது. எங்களுடைய பிரசங்க வேலையை அது எவ்வாறு பாதிக்கவிருந்தது?
எங்களுடைய கிறிஸ்தவ நடுநிலைமை சோதிக்கப்பட்டது
இரண்டாம் உலகப் போர் தொடங்கினபோது தனிநாடாக ஆன ஸ்லோவாக்யா நாசிக்களுடைய ஆட்சியின் கீழ் இருந்தது. ஆனால் ஒரு அமைப்பாக யெகோவாவின் சாட்சிகள் மீது அரசாங்கம் எந்த ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இருந்தாலும் எங்களுடைய வேலையை இரகசியமாக செய்ய வேண்டியிருந்தது. எங்களுடைய பிரசுரங்கள்கூட தணிக்கை செய்யப்பட்டன. எப்படியோ, தொடர்ந்து வேலைகளை விவேகத்துடன் செய்துகொண்டிருந்தோம்.—மத்தேயு 10:16.
போர் தீவிரமான சமயத்தில் எனக்கு 35 வயது கடந்துவிட்டிருந்தது; அப்படியிருந்தும் இராணுவத்தில் சேர கட்டாயப்படுத்தப்பட்டேன். கிறிஸ்தவ நடுநிலைமையின் காரணமாக போரில் ஈடுபட மறுத்தேன். (ஏசாயா 2:2-4) நல்லவேளை, என்னை என்ன செய்யலாம் என்று அதிகாரிகள் தீர்மானிப்பதற்கு முன்பே, என்னுடைய வயதிலிருந்த எல்லோரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.
கிராமவாசிகளைவிட பட்டணத்தில் வாழ்ந்த சகோதரர்கள் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளைக்கூட பெற்றுக்கொள்ள மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்ததை நாங்கள் உணர்ந்தோம். எங்களிடம் உள்ளதை அவர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்பினோம். (2 கொரிந்தியர் 8:15) எனவே எவ்வளவு உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவையும் எடுத்துக்கொண்டு 500 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் பிராட்டஸ்லாவுக்கு சென்றோம். போரின்போது நாங்கள் வளர்த்துக்கொண்ட கிறிஸ்தவ நட்பும் அன்பும் பின்வரும் வருடங்களில் எதிர்ப்பட வேண்டிய கஷ்டங்களை சமாளிக்க உதவியாயிருந்தன.
தேவையான உற்சாகத்தை பெறுதல்
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஸ்லோவாக்யா மறுபடியுமாக செக்கோஸ்லோவாகியாவின் பாகமாக ஆனது. 1946-48 வரையாக யெகோவாவின் சாட்சிகளுடைய தேசிய மாநாடுகள் ப்ரனோ அல்லது ப்ராக்கில்தான் நடைபெற்றன. கிழக்கு ஸ்லோவாக்யாவை சேர்ந்த நாங்கள் மாநாட்டிற்கு வருபவர்களுக்கென்று ஏற்பாடு செய்த விசேஷித்த ரயில்களில் பயணித்தோம். போகும் வழியெல்லாம் பாடிக்கொண்டே சென்றோம்; ஆகவே அந்த ரயில்களை பாடும் ரயில்கள் என்றுகூட அழைக்கலாம்.—அப்போஸ்தலர் 16:25.
1947-ல் ப்ரனோவில் நடைபெற்ற மாநாட்டை என்னால் மறக்கவே முடியாது. தலைமையகத்திலிருந்து மூன்று கிறிஸ்தவ கண்காணிகள் மாநாட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்களில் சகோதரர் நேதன் எச். நாரும் ஒருவர். பொதுப் பேச்சின் தலைப்பை விளம்பரம் செய்வதற்கு இருபக்க விளம்பர அட்டைகளை கழுத்தில் மாட்டிக்கொண்டு நகரத்தில் நிறைய பேர் நடந்து சென்றோம். அப்போது ஒன்பதே வயதான எங்களுடைய மகன் எடுவர்டுக்கு இந்த அட்டை கிடைக்கவில்லை என்று ரொம்ப வருத்தப்பட்டான். அதனால் சகோதரர்கள் சின்ன அட்டைகளை செய்து எடுவர்டுக்கும் மற்ற பிள்ளைகளுக்கும் கொடுத்தார்கள். இந்த சின்னஞ்சிறுசுகள் பொதுப் பேச்சை சமர்த்தாக விளம்பரம் செய்தன!
1948 பிப்ரவரியில் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தார்கள். எந்த சமயத்திலும் இந்த அரசாங்கம் எங்களுடைய ஊழியத்துக்கு தடை விதிக்கலாம் என்பது எங்களுக்கு தெரிந்திருந்தது. ப்ராக்கில் 1948 செப்டம்பர் மாதத்தின்போது ஒரு மாநாடு நடைபெற்றது. பொதுக் கூட்டத்தை சுதந்தரமாக அனுபவித்து மூன்று வருடங்களே ஆகியிருந்தாலும் மறுபடியும் தடை விதிக்கப்படுமோ என்று நினைத்தபோது சந்தோஷம் ஒரு பக்கம், பயம் ஒரு பக்கம் என பல வித உணர்ச்சிகள் எழுந்தன. மாநாட்டின் முடிவில் நாங்கள் எல்லாரும் ஓர் உறுதிமொழியை எடுத்தோம். அதில் சில வரிகளே இவை: “இங்கு கூடிவந்திருக்கும் யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் . . . , இந்த திருப்திகரமான சேவையை இன்னுமதிக அளவில் செய்வோம். கடவுளுடைய தகுதியற்ற தயவால் துன்பகாலங்களிலும் நிலைத்திருப்போம். முன்பைவிட அதிக வைராக்கியத்துடன் கடவுளுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தை அறிவிப்போம். இது உறுதி.”
“தேசத்தின் எதிரிகள்”
மாநாடு முடிந்து இரண்டு மாதங்களுக்குள்ளேயே இரகசிய போலீஸ் ப்ராக்குக்கு அருகேயுள்ள பெத்தேலில் திடீர் சோதனை நடத்தினார்கள். வளாகத்தை கைப்பற்றினார்கள், கண்ணில் படுகிற எல்லா பிரசுரங்களையும் பறிமுதல் செய்தார்கள், பெத்தேலிலிருந்த அனைவரையும் வேறு சில சகோதரர்களையும் கைது செய்தார்கள். ஆனால் துன்பங்கள் இத்துடன் முடிவடையவில்லை.
1952-ம் வருடம் பிப்ரவரி மாதம் 3-4 தேதி நடுராத்திரியில் பாதுகாப்பு படையினர் தேசம் முழுவதும் பரவிச் சென்று 100-க்கும் அதிகமான சாட்சிகளை கைது செய்தார்கள். அதில் நானும் ஒருவன். காலை சுமார் மூன்று மணிக்கு போலீஸார் எங்களுடைய கதவை தட்டினார்கள். எந்தக் காரணமும் சொல்லாமல் தங்களுடன் வரச்சொன்னார்கள். கையில் விலங்கை மாட்டி, கண்ணைக் கட்டி நிறையபேர் இருந்த டிரக்கில் என்னை தூக்கிப் போட்டார்கள். கண்ணைத் திறந்து பார்த்தபோது தனிச்சிறையில் இருந்தேன்.
என்னோடு பேசுவதற்கு ஒருவர்கூட இல்லாமல் ஒரு மாதம் கழிந்தது. அந்த மாதமெல்லாம் நான் பார்த்த ஒரே ஓர் ஆள் எனக்கு அளவு சாப்பாட்டை கதவின் ஓட்டை வழியாக தள்ளிவிட்ட காவலர்தான். அதன்பின் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட விசாரணைக்காரரிடம் அழைத்துச் சென்றார்கள். என்னை அவர் உளவாளி என்று கத்தின பிறகு இவ்வாறு கூறினார்: “மதம் என்பது முட்டாள்தனம். கடவுள் என்று யாரும் கிடையாது! எங்களுடைய தொழிலாளர் வர்க்கத்தை நீங்கள் ஏமாற்றுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஒன்று உங்களை தூக்கில் தொங்கவிடுவோம் அல்லது சிறைச்சாலையிலே பிணமாக விட்டுவிடுவோம். உங்களுடைய கடவுள் இங்கு வந்தால் அவரையும் கொலை செய்வோம்!”
எங்களுடைய கிறிஸ்தவ நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு சட்டமும் கிடையாது என்பது அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். அதனால் ஏற்கெனவே இருக்கும் சட்டங்களின் பிடியில் சிக்கவைப்பதற்காக எங்களை “தேசத்தின் எதிரிகள்,” அந்நிய நாட்டு உளவாளிகள் என்று அழைத்து எங்களுடைய நடவடிக்கைகளுக்கு மாற்று அர்த்தம் கொடுக்கப் பார்த்தார்கள். அதை செய்வதற்கு அவர்கள் எங்களுடைய மன உறுதியை முறித்து, பொய்க் குற்றச்சாட்டுகளை நாங்களே “ஒத்துக்கொள்ளும்படி” செய்ய வேண்டியிருந்தது. அன்று இரவு விசாரணை முடிந்த பிறகு என்னை தூங்கவே விடவில்லை. சில மணிநேரங்களுக்குள் மறுபடியுமாக விசாரணை செய்தார்கள். இந்த முறை விசாரணை செய்தவர் என்னை ஒரு வாக்குமூலத்தில் கையெழுத்துப்போட சொன்னார். அந்த வாக்குமூலம் இவ்வாறு வாசித்தது: “செக்கோஸ்லோவாகியா மக்கள் குடியரசின் எதிரியாகிய நான், அமெரிக்கர்களின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்ததால் [இராணுவத்தில்] சேரவில்லை.” அந்தப் பொய்யை ஒத்துக்கொண்டு கையெழுத்து போடாததால் என்னை விசேஷித்த ஓர் அறையில் போட்டார்கள்.
அங்கு என்னை தூங்க, படுக்க, ஏன் உட்காரக்கூட விடவில்லை. நடப்பதற்கும் நிற்பதற்கும் மட்டுமே அனுமதித்தார்கள். என்னால் கொஞ்சமும் முடியாதபோது கான்கிரீட் தரையில் தலை சாய்த்தேன். உடனே காவலர்கள் வந்து விசாரணைக்காரரிடம் அழைத்துச் சென்றார்கள். “இப்போதாவது கையெழுத்து போடுகிறாயா?” என்று விசாரணைக்காரர் கேட்டார். மறுபடியும் மறுத்தபோது முகத்தில் குத்தினார். இரத்தம் வடிந்தது. “அவன் தற்கொலை செய்து கொள்ள பார்க்கிறான். அவனை தற்கொலை செய்துகொள்ள விடாதீர்கள்!” என்று கோபத்துடன் காவலர்களை பார்த்துக் கத்தினார். பழையபடி தனிச்சிறையில் போடப்பட்டேன். இப்படி நிறைய சந்தர்ப்பங்களில் நடத்தப்பட்ட விசாரணைகள் ஆறு மாதங்களுக்கு நீடித்தன. நான் ஒரு தேச விரோதி என்று என்னையே ஒத்துக்கொள்ள வைக்க அவர்கள் நடத்தின எந்த விசாரணையும் தந்திரமும், யெகோவாவுக்கு உத்தமத்தன்மையை காத்துக்கொள்ள வேண்டும் என்ற என் உறுதியை குலைக்கவில்லை.
வழக்கு விசாரணைக்கு ஒரு மாதம் இருந்தபோது எங்கள் தொகுதியிலிருந்த 12 சகோதரர்களையும் ப்ராக்கிலிருந்து வந்த ஒரு வக்கீல் சந்தித்து பல கேள்விகள் கேட்டார். “நம்முடைய நாட்டை மேற்கத்திய நாடுகள் தாக்கினால் என்ன செய்வாய்?” என்று என்னை கேட்டார். “இந்த நாடு ஹிட்லருடன் சேர்ந்து சோவியத் ரஷ்யாவை தாக்கியபோது செய்ததையே செய்வேன். அப்போது நான் போரில் ஈடுபடவில்லை, அதேபோல் இப்போதும் போரில் ஈடுபடமாட்டேன். காரணம், நான் அரசியலில் நடுநிலை வகிக்கும் ஒரு கிறிஸ்தவன்” என்று சொன்னேன். பின்பு அவர் இவ்வாறு சொன்னார்: “ஒருவேளை மேற்கத்திய நாடுகள் நம் நாட்டை தாக்கினால் அவர்களை எதிர்த்து போர் செய்யவும், அங்கிருக்கும் எங்களுடைய தொழிலாளர் வர்க்கத்தை விடுதலை செய்யவும் எங்களுக்கு வீரர்கள் தேவை. எனவே யெகோவாவின் சாட்சிகளை நாங்கள் சும்மா விட்டுவிட முடியாது.”
அது 1953-ம் வருடம், ஜூலை மாதம், 24-ம் தேதி. நாங்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். ஒவ்வொருவராக எங்கள் 12 பேரையும் நீதிபதிகளின் குழு முன் நிறுத்தினார்கள். எங்கள் விசுவாசத்தைப் பற்றி சாட்சி கொடுப்பதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டோம். எங்கள் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் நாங்கள் விடையளித்த பிறகு ஒரு வக்கீல் எழுந்து நின்று இவ்வாறு சொன்னார்: “நான் இந்த நீதிமன்றத்தில் எத்தனையோ முறை ஆஜராகியிருக்கிறேன். வழக்கமாக இந்த நீதிமன்றத்திற்கு வருபவர்கள் தங்கள் தவறை ஒத்துக்கொள்வார்கள், மனம் வருந்துவார்கள், கண் கலங்குவார்கள். ஆனால் இவர்கள் மட்டுமே, வரும்போது இருப்பதைவிட போகும்போது அதிக உறுதியோடு போவார்கள்.” அதன்பிறகு நாங்கள் 12 பேரும் தேச விரோதிகளாக தீர்ப்பளிக்கப்பட்டோம். எனக்கு மூன்று வருடம் சிறை தண்டனை வழங்கினார்கள். அதுமட்டுமல்ல என்னுடைய எல்லா சொத்தையும் அரசாங்கம் பறிமுதல் செய்தது.
முதிர் வயது—தடை இல்லை
வீடு திரும்பின பிறகும்கூட இரகசிய போலீஸாரின் கண்காணிப்பில்தான் இருந்தேன். அதன் மத்தியிலும் என்னுடைய ஆவிக்குரிய வேலைகளில் ஈடுபட்டேன். சபையை கண்காணிக்கும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டது. எங்களுடைய வீட்டை அரசாங்கம் கைப்பற்றியபோதிலும் நாங்கள் அதில் குடியிருப்பதற்கு அனுமதிக்கப்பட்டோம்; என்றாலும், சுமார் 40 வருடங்களுக்கு பிறகுதான், அதாவது கம்யூனிஸ ஆட்சி முடிவுக்கு வந்தபோதுதான் சட்டப்படி எங்கள் வீடு எங்களுக்கு திரும்ப கொடுக்கப்பட்டது.
என்னுடைய குடும்பத்தில் சிறைக்கு சென்று வந்தவர்கள் நான் மட்டுமல்ல. நான் வீட்டிற்கு திரும்பி மூன்றே வருடங்கள் ஆகியிருந்தபோது எடுவர்டையும் இராணுவ சேவைக்காக இழுத்துக்கொண்டு போனார்கள். பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின்படி அவன் இராணுவத்தில் சேர மறுத்தபோது சிறையில் போடப்பட்டான். பல வருடங்களுக்குப் பிறகு என்னுடைய பேரன் பீட்டரும்கூட, மோசமான உடல் நிலையின் மத்தியிலும் சிறை தண்டனையை அனுபவித்தான்.
1989-ம் வருடத்தின்போது செக்கோஸ்லோவாகியாவில் கம்யூனிஸ ஆட்சி கவிழ்ந்தது. 40 வருடங்களுக்குப் பிறகு வீடு வீடாக பிரசங்கிப்பதை எந்த தடையும் இல்லாமல் சுதந்தரமாக செய்ய முடிந்தபோது என் மனம் சந்தோஷத்தில் துள்ளியது! (அப்போஸ்தலர் 20:20) நல்ல ஆரோக்கியம் இருந்த வரை வெளி ஊழியத்தை அனுபவித்து மகிழ்ந்தேன். இப்போது எனக்கு 98 வயதாகிறது. என்னுடைய உடல் நிலை முன்பைப் போல் அவ்வளவு நன்றாக இல்லை. ஆனால் இன்றும்கூட யெகோவா வாக்குறுதி கொடுத்திருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றி பிரசங்கிக்க என்னால் முடிகிறது. அது எனக்கு சந்தோஷத்தை தருகிறது.
எங்கள் ஊரை ஐந்து நாடுகளைச் சேர்ந்த 12 தலைவர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். சர்வாதிகாரிகள், ஜனாதிபதிகள், ஒரு ராஜா ஆகிய எல்லாருடைய ஆட்சியின் கீழும் நாங்கள் இருந்திருக்கிறோம். ஆனால் எந்த ஆட்சியாளராலும் அவர்களுடைய பிரஜைகளான மக்களுடைய துயரத்தை நிரந்தரமாக தீர்க்க முடியவில்லை. (சங்கீதம் 146:3, 4) சிறு வயதிலேயே யெகோவாவைப் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததால் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேசியானிய ராஜ்யத்தின் மூலம் பிரச்சினைகளுக்கான தீர்வை யெகோவா கொண்டுவரப்போகிறார் என்பதை புரிந்துகொண்டதால் கடவுள் நம்பிக்கை இல்லாத வீணான வாழ்க்கை வாழ்வதிலிருந்து தப்பினேன். மிகச் சிறந்த செய்தியை மும்முரமாக பிரசங்கிக்கும் வேலையில் 75 வருடங்களுக்கு மேல் செலவிட்டிருக்கிறேன். இதனால் என்னுடைய வாழ்க்கைக்கு ஒரு நோக்கமும் எனக்கு திருப்தியும் கிடைத்திருக்கிறது. பூமியில் என்றென்றும் வாழும் பிரகாசமான நம்பிக்கையும் கிடைத்திருக்கிறது. இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்?b
[அடிக்குறிப்புகள்]
a இப்புத்தகம் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது, ஆனால் இப்போது அச்சடிக்கப்படுவதில்லை.
b வருத்தகரமாக, இக்கட்டுரை தயாராகிக் கொண்டிருந்த சமயத்திலேயே சகோதரர் மிகால் ஸாப்ராக் இறந்துவிட்டார். உயிர்த்தெழுதலில் உறுதியான விசுவாசம் வைத்திருந்த அவர் கடைசி வரை உண்மையோடு நிலைத்திருந்தார்.
[பக்கம் 26-ன் படம்]
திருமணமான புதிதில்
[பக்கம் 26-ன் படம்]
1940-களின் தொடக்கத்தில் எடுவர்டுடன்
[பக்கம் 27-ன் படம்]
1947-ல், ப்ரனோவில் மாநாட்டை விளம்பரப்படுத்திய சமயம்