மதம் மனிதகுலத்தை ஒன்றுசேர்க்க முடியுமா—ஏன் பலருக்கு சந்தேகம்?
‘பிறனிடத்தில் அன்புகூருவாயாக.’ (மத்தேயு 22:39) நடத்தை பற்றிய இந்த அடிப்படை விதியை அநேக மதங்கள் ஆமோதிக்கின்றன. பிறரை நேசிப்பதற்கு இந்த மதங்கள் திறம்பட போதித்திருந்தால், அவற்றின் அங்கத்தினர்கள் ஒன்றுசேர்ந்து ஐக்கியப்பட்டிருப்பார்கள். ஆனால் இன்றைக்கு அப்படி இருக்கிறதா? மதங்கள் ஒற்றுமைக்கு வழிநடத்தும் சக்தியாக இருக்கின்றனவா? சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த ஒரு சுற்றாய்வில், “மதம் மக்களை ஒற்றுமைப்படுத்துகிறதா, அல்லது பிரிக்கிறதா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. ஒற்றுமைப்படுத்துகிறது என 22 சதவீதத்தினர் கருதினார்கள், 52 சதவீதத்தினரோ மதம் மக்களைப் பிரிப்பதாக கருதினார்கள். ஒருவேளை உங்களுடைய நாட்டில் வசிக்கும் மக்களும் இதேபோல உணரலாம்.
மதம் மனிதகுலத்தை ஒன்றுசேர்க்கும் என்பதில் ஏன் சிலரே நம்பிக்கை வைக்கின்றனர்? ஒருவேளை அவர்கள் சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்திருக்கலாம். மதம் மக்களை ஒன்றுசேர்ப்பதற்குப் பதிலாக, அவர்கள் மத்தியில் பெரும்பாலும் பிரிவினையையே ஏற்படுத்தியிருக்கிறது. சில சந்தர்ப்பங்களில், மதம் எனும் போர்வையில் பயங்கர கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளன. கடந்த 100 ஆண்டுகால சரித்திரத்தைச் சற்றுப் புரட்டிப் பார்க்கலாம்.
மதத்தின் பெயரில்
இரண்டாம் உலகப் போரின்போது, பால்கனில் குரோஷிய மொழி பேசும் ரோமன் கத்தோலிக்கரும் செர்பிய மொழி பேசும் ஆர்த்தடாக்ஸ் பிரிவினரும் ஒருவருக்கொருவர் குரல்வளையைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். பிறரை நேசிக்க வேண்டுமென கற்பித்த இயேசுவின் வழி நடப்பதாக இரு தொகுதியினரும் சொல்லிக்கொண்டார்கள். ஆனால் அவர்களுக்குள் நடந்த சண்டை, “சரித்திரத்தில் நிகழ்ந்த மிகவும் அதிர்ச்சியூட்டும் பொதுமக்கள் படுகொலைகளில் ஒன்று” என ஓர் ஆராய்ச்சியாளர் சொல்லுமளவுக்கு படுபயங்கரமாக இருந்தது. 5,00,000-க்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் மடிந்துபோனதைப் பார்த்து இந்த உலகமே ஸ்தம்பித்துப் போனது.
1947-ல் இந்தியத் துணைக்கண்டத்தில் சுமார் 40 கோடி மக்கள், அதாவது மனிதகுலத்தில் சுமார் ஐந்தில் ஒரு பாகத்தினர் இருந்தார்கள்; இவர்களில் பெரும்பாலோர் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர் ஆவர். இந்தியா பிரிக்கப்பட்டபோது இஸ்லாமிய தேசமான பாகிஸ்தான் பிறந்தது. அந்தச் சமயத்தில், இரு நாடுகளையும் சேர்ந்த லட்சோபலட்சம் அகதிகள் அடுத்தடுத்து வந்த மதப் படுகொலைகளால் தீக்கிரையாக்கப்பட்டார்கள், தாக்கப்பட்டார்கள், வதைக்கப்பட்டார்கள், சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இதெல்லாம் போதாது என்பது போல இந்தப் புதிய நூற்றாண்டின் உதயத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் தலைப்பு செய்திகளில் இடம்பிடிக்க ஆரம்பித்தது. இன்று, பயங்கரவாதம் இந்த முழு உலகத்தாருடைய தூக்கத்தைப் பறித்திருக்கிறது. பயங்கரவாத தொகுதிகள் பல, ஒரு மதத்தை சேர்ந்திருப்பதாக சொல்லிக்கொள்கின்றன. ஐக்கியத்தை முன்னேற்றுவிக்கும் சக்தியாக மதம் கருதப்படுவதில்லை. அதற்கு மாறாக, அது பெரும்பாலும் வன்முறையுடனும் பிரிவினையுடனும்தான் சம்பந்தப்படுத்தப்படுகிறது. ஆகவே, ஃபோக்கஸ் என்ற ஜெர்மன் செய்திப் பத்திரிகை இந்த உலகிலுள்ள பிரபல மதங்களை—புத்தமதம், கிறிஸ்தவமண்டலம், கன்பூசியம், இந்து மதம், இஸ்லாம், யூத மதம், தாவோ மதம் ஆகியவற்றை—வெடிமருந்துக்கு ஒப்பிட்டது.
உட்பூசல்கள்
சில மதங்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்கின்றன, வேறுசில மதங்களோ உட்பூசல்களால் நிறைந்திருக்கின்றன. உதாரணமாக, சமீப வருடங்களில் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் கோட்பாடு சம்பந்தமான விஷயங்களில் தொடர்ந்து சர்ச்சை செய்துகொண்டே இருப்பதால் பிளவுபட்டிருக்கின்றன. பாதிரிமாரும் பாமரரும் ஒன்று போலவே கேட்கின்றனர்: குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளலாமா? கருக்கலைப்பு செய்துகொள்ளலாமா? பெண்களைப் பாதிரிகளாக நியமிக்க வேண்டுமா? ஓரினப்புணர்ச்சியை சர்ச் எப்படி கருத வேண்டும்? போரில் ஈடுபடுவதை ஒரு மதம் அங்கீகரிக்க வேண்டுமா? இத்தகைய விஷயங்களில் ஒற்றுமையின்மை நிலவுவதால், அநேகர் இவ்வாறு கேட்கின்றனர்: ‘மத அங்கத்தினர்களே ஒருவருக்கொருவர் ஐக்கியமாக இல்லையென்றால், எப்படி ஒரு மதம் மனிதகுலத்தை ஒன்றுசேர்க்க முடியும்?’
ஆகவே, பொதுவாக மதம் மனிதகுலத்தை ஒன்றுசேர்க்க தவறிவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் எல்லா மதங்களுமே பிளவுற்று இருக்கின்றனவா? மாறுபட்ட ஒரு மதம், அதாவது மனிதகுலத்தை ஒன்றுசேர்க்கும் ஒரு மதம் இருக்கிறதா?
[பக்கம் 3-ன் படம்]
இந்தியாவில் 1947-ல் மத தொகுதிகளிடையே மோதல் ஏற்பட்டபோது காயமடைந்த போலீசார்
[படத்திற்கான நன்றி]
Photo by Keystone/Getty Images