கிறிஸ்து—தீர்க்கதரிசனங்களின் மையம்
“இயேசுவைப் பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது [அதாவது, நோக்கமாயிருக்கிறது].”—வெளிப்படுத்துதல் 19:10.
1, 2. (அ) பொ.ச. 29 முதற்கொண்டு இஸ்ரவேலர் என்ன தீர்மானத்தை எடுக்க வேண்டியிருந்தது? (ஆ) இந்தக் கட்டுரை எதைப் பற்றி சிந்திக்கும்?
அது பொ.ச. 29-ம் வருடம். இஸ்ரவேல் தேசத்து ஜனங்கள் வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவைப் பற்றி பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். முழுக்காட்டுபவரான யோவானுடைய ஊழியம் அவர்களுடைய எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. (லூக்கா 3:15) என்றாலும், தான் கிறிஸ்து அல்ல என யோவான் சொல்கிறார். மாறாக, நசரேயனாகிய இயேசுவைச் சுட்டிக்காட்டி, “இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன்” என்கிறார். (யோவான் 1:20, 34) எனவே, இயேசுவின் உபதேசங்களைக் கேட்பதற்காகவும் அவரால் குணமாவதற்காகவும் சீக்கிரத்தில் திரளானோர் அவரைப் பின்தொடர ஆரம்பிக்கிறார்கள்.
2 தொடர்ந்து வரும் மாதங்களில், யெகோவா தம்முடைய குமாரனைக் குறித்து ஏராளமான சான்றுகளை அளிக்கிறார். வேதவசனங்களைக் கற்றவர்களுக்கும் இயேசுவின் செயல்களைப் பார்க்கிறவர்களுக்கும் அவர் மீது நம்பிக்கை வைக்க பலமான ஆதாரம் கிடைக்கிறது. என்றாலும், கடவுளுடைய உடன்படிக்கைக்கு உட்பட்ட மக்கள் பொதுவாக அவநம்பிக்கையையே வெளிக்காட்டுகிறார்கள். இயேசுதான் கிறிஸ்து, அவர்தான் கடவுளுடைய குமாரன் என்பதை வெகு சிலரே ஒத்துக்கொள்கிறார்கள். (யோவான் 6:60-69) ஒருவேளை நீங்கள் அப்போது வாழ்ந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொண்டு அவருடைய உண்மையுள்ள சீஷராக ஆவதற்கு மனம் தூண்டப்பட்டிருப்பீர்களா? ஓய்வுநாளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டபோது, இயேசுவே தம்மைப் பற்றிய அடையாளத்திற்கு அத்தாட்சி அளித்ததை இப்போது சிந்தித்துப் பார்க்கலாம்; தம்முடைய உண்மையுள்ள சீஷர்களின் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்காகப் பிற்பாடு அவர் அளித்த மேலுமான ஆதாரங்களையும் கவனிக்கலாம்.
இயேசு தாமே அத்தாட்சி அளிக்கிறார்
3.எந்தச் சந்தர்ப்பத்தில் இயேசு தாம் யார் என்பதற்கான அத்தாட்சியை அளிக்க நேர்ந்தது?
3 அது பொ.ச. 31-ம் ஆண்டின் பஸ்கா பண்டிகை சமயம். இயேசு எருசலேமில் இருக்கிறார். 38 வருடங்களாக வியாதிப்பட்டிருந்த ஒரு மனிதனை அவர் அப்போதுதான் சுகப்படுத்தியிருக்கிறார். ஆனால், ஓய்வுநாளில் இதைச் செய்ததற்காக இயேசுவை யூதர்கள் துன்புறுத்துகிறார்கள். தேவதூஷணம் சொன்னதாகவும் அவர் மீது பழிபோடுகிறார்கள், அதுமட்டுமல்ல, கடவுளைத் தம்முடைய பிதா என்று அவர் சொல்வதால் அவரைக் கொலை செய்யவும் வகை தேடுகிறார்கள். (யோவான் 5:1-9, 16-18) இயேசு தம்முடைய சார்பாக வலிமைமிக்க மூன்று நியாயவாதங்களை அளிக்கிறார்; அவர் உண்மையில் யார் என்பதை அவை நல்மனமுள்ளவர்களுக்குப் புரிய வைக்கும்.
4, 5. யோவான் செய்த ஊழியத்தின் நோக்கம் என்ன, அதை அவர் எவ்வளவு நன்றாக செய்து முடித்தார்?
4 முதலாவது, இயேசு தமக்கு முன்னோடியாக இருந்த முழுக்காட்டுபவரான யோவான் கொடுத்த சாட்சியைச் சுட்டிக்காட்டி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தான். அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.”—யோவான் 5:33, 35.
5 எந்த அர்த்தத்தில் முழுக்காட்டுபவரான யோவான் ‘எரிந்து பிரகாசிக்கிற விளக்காக’ இருந்தார்? ஏரோதினால் அநியாயமாய் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னரே தனக்குக் கடவுள் கொடுத்திருந்த வேலையை, அதாவது மேசியாவுக்காக வழியை ஆயத்தம் பண்ணுகிற வேலையை யோவான் செய்து முடித்திருந்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “இவர் [மேசியா] இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன். . . . ஆவியானவர் புறாவைப் போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன். நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன்.”a (யோவான் 1:26-37) இயேசுதான் கடவுளுடைய குமாரன், வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதை யோவான் குறிப்பாக அடையாளம் காட்டினார். யோவான் அளித்த சாட்சி அத்தனை தெளிவாக இருந்ததால்தான் அவர் மரணமடைந்து சுமார் எட்டு மாதங்கள் கழித்து, நல்மனமுள்ள அநேக யூதர்கள் “இவரைக் [இயேசுவைக்] குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது” என்று ஒப்புக்கொண்டார்கள்.—யோவான் 10:41, 42.
6.இயேசுவின் செயல்களைக் கடவுள் ஆதரித்தாரென ஜனங்களை ஏன் அவை நம்ப வைத்திருக்க வேண்டும்?
6 தாமே மேசியா என்பதை நிரூபிக்கும் இரண்டாவது நியாயவாதத்தை இயேசு அளிக்கிறார். தம்முடைய அருமையான செயல்களையே கடவுள் தம்மை ஆதரிப்பதற்கான அத்தாட்சியாக அவர் சுட்டிக்காட்டுகிறார். “யோவானுடைய சாட்சியைப் பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்து வருகிறதுமான கிரியைகளே [அதாவது, செயல்களே] பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறது” என அவர் சொல்கிறார். (யோவான் 5:36) இந்த அத்தாட்சியை, அதாவது அவர் செய்த ஏராளமான அற்புதங்களை இயேசுவின் எதிரிகளால்கூட மறுக்க முடியவில்லை. “நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே” என பிற்பாடு சிலர் சொல்கிறார்கள். (யோவான் 11:47) என்றாலும், சிலர் அவர் மீது விசுவாசம் வைத்து, “கிறிஸ்து வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைப் பார்க்கிலும் அதிகம் செய்வாரோ” என்கிறார்கள். (யோவான் 7:31) பிதாவின் குணாதிசயங்கள் குமாரனில் இருப்பதை இயேசுவுக்குச் செவிகொடுத்துக் கொண்டிருப்போர் வெகு தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.—யோவான் 14:9.
7. எபிரெய வேதவசனங்கள் இயேசுவைக் குறித்து எவ்வாறு சாட்சி பகருகின்றன?
7 நியாயவாதத்தின் மறுக்க முடியாத மூன்றாவது அத்தாட்சியை இயேசு குறிப்பிட்டுக் காண்பிக்கிறார். ‘வேதவாக்கியங்கள் . . . என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கின்றன’ என்று சொல்லிவிட்டு, “நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக் குறித்து எழுதியிருக்கிறானே” என்கிறார். (யோவான் 5:39, 46) சொல்லப்போனால், மோசே ஒருவர் மட்டுமல்ல, கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்த ஏராளமான சாட்சிகளும் அவரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். அவர்களுடைய பதிவுகளில் மேசியாவை அடையாளம் காட்டுகிற நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்களும், அவருடைய வம்சாவளி பற்றிய விவரங்களும் இருக்கின்றன. (லூக்கா 3:23-38; 24:44-46; அப்போஸ்தலர் 10:43) அப்படியானால், மோசேயின் நியாயப்பிரமாணச் சட்டத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? “நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (கலாத்தியர் 3:24) ஆம், “இயேசுவைப் பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது [அதாவது, முழு உத்தேசமாயிருக்கிறது, குறியாயிருக்கிறது, அதோடு நோக்கமாயுமிருக்கிறது].”—வெளிப்படுத்துதல் 19:10.
8.ஏன் அநேக யூதர்கள் மேசியாவை விசுவாசிக்கவில்லை?
8 ஆக, யோவான் அளித்த தெளிவான சாட்சி, இயேசுவின் வலிமைமிக்க செயல்கள், அவருடைய தெய்வீக குணங்கள், வேதவசனங்களின் மாபெரும் சான்று என இந்த எல்லா அத்தாட்சியும் இயேசுவே மேசியா என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்தவில்லையா? கடவுள் மீதும் அவருடைய வார்த்தையின் மீதும் உண்மையான அன்பு வைத்திருக்கிற எவரும் அதை எளிதில் புரிந்துகொண்டு, அவரை விசுவாசித்திருப்பார்கள். ஆனால், பொதுவாக அத்தகைய அன்பு இஸ்ரவேலர் மத்தியில் இருக்கவில்லை. தம்மை எதிர்த்தவர்களைப் பார்த்து, “உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்” என இயேசு சொன்னார். (யோவான் 5:42) அவர்கள் ‘தேவனாலே மாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொண்டார்கள்.’ அதனால்தான் அவர்கள் இயேசுவோடு ஒத்துப்போகவில்லை; பிதாவைப் போலவே, அவரும் அப்படிப்பட்ட சிந்தையை அறவே வெறுக்கிறார்!—யோவான் 5:43, 44; அப்போஸ்தலர் 12:21-23.
ஒரு தீர்க்கதரிசன காட்சியால் பலப்படுத்தப்படுதல்
9, 10. (அ) இயேசுவின் சீஷர்களுக்கு ஓர் அடையாளத்தைக் காட்டியது ஏன் சமயத்திற்கேற்ற ஒன்றாக இருந்தது? (ஆ) குறிப்பிடத்தக்க என்ன வாக்குறுதியை இயேசு தமது சீஷர்களுக்கு அளித்தார்?
9 தாமே மேசியா என்பதற்கு மேற்குறிப்பிட்ட ஆதாரங்களை இயேசு அளித்து ஒரு வருடத்திற்கும் மேலாக ஆகிவிட்டிருக்கிறது. பொ.ச. 32-ம் வருடத்தின் பஸ்கா பண்டிகையும் முடிந்துவிட்டிருக்கிறது. துன்புறுத்தல், பொருளாசை அல்லது வாழ்க்கை கவலைகள் காரணமாகவோ என்னவோ, அநேக விசுவாசிகள் அவரைப் பின்பற்றுவதையே நிறுத்திவிட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் குழப்பமோ ஏமாற்றமோ அடைந்திருக்கலாம், ஏனெனில் அவரை ராஜாவாக்குவதற்கு ஜனங்கள் முயற்சி செய்தபோது அவர் மறுத்துவிட்டிருந்தார். அதோடு, யூத மதத் தலைவர்கள் வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைக் காண்பிக்குமாறு சவால்விட்டபோது தமக்கு மகிமை உண்டாகும் விதத்தில் எந்தவொரு அடையாளத்தைக் கொடுக்கவும் அவர் மறுத்துவிட்டிருந்தார். (மத்தேயு 12:38, 39) அவர் அப்படி மறுத்தது சிலரைக் குழப்பமடையச் செய்திருக்கலாம். அதுமட்டுமல்ல, சீஷர்களால் கிரகித்துக்கொள்ள முடியாத ஒரு விஷயத்தை, அதாவது “தாம் எருசலேமுக்குப் போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலை” செய்யப்படவிருந்த விஷயத்தை அவர் சொல்ல ஆரம்பித்திருந்தார்.—மத்தேயு 16:21-23.
10 இன்னும் சுமார் ஒன்பது அல்லது பத்து மாதங்களில் “இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான” வேளை வந்துவிடும். (யோவான் 13:1) அதனால் தம்முடைய உண்மையுள்ள சீஷர்கள் மீதிருந்த ஆழ்ந்த அக்கறையினால், அவர்களில் சிலருக்கு வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைக் காண்பிக்கப் போவதாக வாக்குறுதி அளிக்கிறார்; ஆம், உண்மையற்ற யூதர்களுக்கு எதை மறுத்தாரோ அதையே இவர்களில் சிலருக்குச் செய்துகாட்டப் போவதாக வாக்குறுதி அளிக்கிறார். “இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷ குமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசி பார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என கூறுகிறார். (மத்தேயு 16:28) 1914-ல் மேசியானிய ராஜ்யம் ஸ்தாபிக்கப்படும் வரை தம் சீஷர்களில் சிலர் உயிரோடு இருப்பார்கள் என்பதை அவர் இங்கு அர்த்தப்படுத்தவே இல்லை. மாறாக, ராஜ்ய வல்லமையில் தாம் பெறப்போகும் மகிமையைப் பற்றிய, கண்ணைப் பறிக்கும் ஒரு தரிசனத்தை மிக நெருக்கமான தம்முடைய மூன்று சீஷர்களுக்குக் காண்பிக்க வேண்டுமென்பதே அவருடைய மனதில் இருந்தது. இந்த முற்காட்சி மறுரூபமாகுதல் என அழைக்கப்படுகிறது.
11. மறுரூபக் காட்சியை விளக்கவும்.
11 ஆறு நாட்களுக்குப் பின், பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை இயேசு உயர்ந்த ஒரு மலைக்கு அழைத்துச் செல்கிறார்; அது எர்மோன் மலையிலுள்ள ஒரு மேட்டுப்பகுதியாக இருந்திருக்கலாம். அங்கே இயேசு ‘அவர்களுக்கு முன்பாக மறுரூபமாகிறார்; அவர் முகம் சூரியனைப் போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப் போல வெண்மையாயிற்று.’ தீர்க்கதரிசிகளான மோசேயும் எலியாவும்கூட தோன்றுகிறார்கள். அவர்கள் இயேசுவுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பிரமிப்பூட்டுகிற இச்சம்பவம் பெரும்பாலும் இரவு நேரத்தில் நடைபெறுவதால் அது இன்னுமதிகமாக கண்ணைப் பறிப்பதாக இருக்கிறது. சொல்லப்போனால், அது அவ்வளவு தத்ரூபமாக இருப்பதால் இயேசுவுக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றும் என மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா என்பதாக பேதுரு கேட்கிறார். அவர் இப்படிப் பேசிக் கொண்டிருக்கையிலேயே, ஒளிமயமான ஒரு மேகம் அவர்கள் மீது நிழலிடுகிறது, அப்போது அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள்” என்று சொல்கிறது.—மத்தேயு 17:1-6.
12, 13. இயேசுவின் சீஷர்களுடைய மனதில் மறுரூபக் காட்சி என்ன பாதிப்பை ஏற்படுத்தியது, ஏன்?
12 உண்மைதான், இயேசுவே “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என பேதுரு கொஞ்ச நாட்களுக்கு முன்னர்தான் திட்டவட்டமாக கூறியிருந்தார். (மத்தேயு 16:16) ஆனால், அபிஷேகம் செய்யப்பட்ட தம்முடைய குமாரனின் அடையாளத்தைக் குறித்தும் அவர் வகிக்கும் பங்கைக் குறித்தும் கடவுள் தாமே சான்றளிப்பதைக் கேட்க அவர்களுக்கு எப்படியிருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்! அந்த மறுரூபக் காட்சி, பேதுருவுக்கும் யாக்கோபுக்கும் யோவானுக்கும் விசுவாசத்தைப் பலப்படுத்தும் எப்பேர்ப்பட்ட ஓர் அனுபவம்! இவ்வாறு அவர்களது விசுவாசம் பெருமளவு பலப்படுத்தப்பட்டிருப்பதால், இனி சம்பவிக்கப் போகிறவற்றை எதிர்ப்பட அவர்கள் இன்னும் நன்கு தயாராகி விடுகிறார்கள், பிற்பாடு உருவாகவிருந்த கிறிஸ்தவ சபையில் தங்கள் பங்கை செய்வதற்கும் தயாராகி விடுகிறார்கள்.
13 அந்தச் சீஷர்களின் மனதில் இந்த மறுரூபக் காட்சி நீங்கா இடம்பிடித்துவிடுகிறது. 30-க்கும் அதிகமான வருடங்களுக்குப் பிறகு, பேதுரு இவ்வாறு எழுதுகிறார்: “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு [இயேசுவுக்கு] உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.” (2 பேதுரு 1:17, 18) பேதுருவைப் போலவே யோவானுடைய மனதிலும் அச்சம்பவம் அழியா முத்திரை பதித்துவிடுகிறது. “அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” என அவர் 60-க்கும் மேலான வருடங்களுக்குப் பின் குறிப்பிட்டபோது அச்சம்பவத்தை மனதில் வைத்தே அப்படிச் சொன்னார் எனலாம். (யோவான் 1:14) ஆனால் இயேசுவைப் பின்பற்றியவர்கள் இந்த மறுரூபக் காட்சி தவிர, மேலும் பல தீர்க்கதரிசனக் காட்சிகளைப் பெறவிருந்தார்கள்.
கடவுளுடைய உண்மை ஊழியர்களுக்கு ஆன்மீக ஒளி மேலும் பிரகாசமாகிறது
14, 15. எந்த அர்த்தத்தில் இயேசு வரும்வரை அப்போஸ்தலன் யோவான் உயிரோடிருப்பார்?
14 இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, கலிலேய கடற்கரையில் தம் சீஷர்கள் முன் தோன்றுகிறார். அங்கு அவர் பேதுருவிடம், “நான் வருமளவும் இவனிருக்க [யோவான் இருக்க] எனக்குச் சித்தமானால், உனக்கென்ன” என சொல்கிறார். (யோவான் 21:1, 20-22, 24) யோவான் மற்ற அப்போஸ்தலர்களைவிட அதிக காலம் உயிர்வாழ்வார் என இந்த வார்த்தைகள் அர்த்தப்படுத்துகின்றனவா? ஆம், அப்படி அர்த்தப்படுத்தியிருக்கலாம், ஏனெனில் அதன் பிறகு அவர் சுமார் 70 வருடங்கள் உயிரோடிருந்து யெகோவாவுக்கு உண்மையுடன் சேவை செய்கிறார். என்றாலும், இயேசுவின் அந்த வார்த்தைகள் அதைவிட முக்கியமான ஒன்றை அர்த்தப்படுத்துகின்றன.
15 “நான் வருமளவும்” என்ற வார்த்தைகள் “மனுஷ குமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதை” நமக்கு நினைப்பூட்டுகின்றன. (மத்தேயு 16:28) இயேசு வரும்வரை யோவான் உயிரோடிருப்பார் என்பது எதை அர்த்தப்படுத்துகிறது? இயேசு ராஜ்ய அதிகாரத்தில் வருவது பற்றிய தீர்க்கதரிசனக் காட்சி பிற்பாடு யோவானுக்கு கொடுக்கப்படுவதையே அர்த்தப்படுத்துகிறது. யோவான் தன்னுடைய அந்திம காலத்தில் பத்மு தீவில் கைதியாக இருந்தபோது, வெளிப்படுத்துதல் தரிசனங்கள் அவருக்குக் காண்பிக்கப்படுகின்றன; “கர்த்தருடைய நாளில்” நடக்கவிருக்கும் சம்பவங்களைப் பற்றி வியக்க வைக்கும் தீர்க்கதரிசன அடையாளங்களை அவர் அப்போது பார்க்கிறார். கண்கொள்ளா அந்தத் தரிசனங்களில் அவர் அந்தளவு லயித்துப் போய்விடுவதால், “நான் சீக்கிரமாய் வருகிறேன்” என இயேசு சொல்கையில், “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்” என அவர் உணர்ச்சிபொங்க கூறுகிறார்.—வெளிப்படுத்துதல் 1:1, 10; 22:20.
16. நம்முடைய விசுவாசத்தை நாம் தொடர்ந்து பலப்படுத்திக் கொள்வது ஏன் முக்கியம்?
16 முதல் நூற்றாண்டிலுள்ள நல்மனமுள்ளோர் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொண்டு, அவர் மீது விசுவாசம் வைக்கிறார்கள். என்றாலும், அவர்களைச் சுற்றியிருந்த அவநம்பிக்கையான சூழலையும், செய்ய வேண்டிய வேலையையும், சந்திக்க வேண்டிய சோதனைகளையும் வைத்துப் பார்க்கும்போது அந்த விசுவாசிகளுக்குக் கண்டிப்பாகவே பலப்படுத்துதல் அவசியமாயிருக்கிறது. தாமே மேசியா என்பதற்கு இயேசு போதுமான ஆதாரங்களை அச்சமயத்தில் அளித்திருக்கிறார், தம்முடைய உண்மையுள்ள சீஷர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஆன்மீக ஒளியூட்டுகிற தீர்க்கதரிசன காட்சிகளையும் அளித்திருக்கிறார். இன்று, நாம் ‘கர்த்தருடைய நாளின்’ இறுதிக்கட்டத்தில் வாழ்கிறோம். சீக்கிரமாக, சாத்தானுடைய பொல்லாத உலகம் முழுவதையும் கிறிஸ்து அழித்துவிடப் போகிறார், பிறகு கடவுளுடைய ஜனங்களைக் காப்பாற்றப் போகிறார். எனவே, நம்முடைய ஆன்மீக நலனுக்காக யெகோவா செய்கிற எல்லா ஏற்பாடுகளையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நாமும் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இருளிலிருந்தும் உபத்திரவத்திலிருந்தும் பாதுகாக்கப்படுதல்
17, 18. முதல் நூற்றாண்டிலிருந்த இயேசுவின் சீஷர்களுக்கும் கடவுளுடைய நோக்கத்தை எதிர்த்தவர்களுக்கும் இடையே என்ன மாபெரும் வேறுபாடு இருந்தது, அந்த ஒவ்வொரு தரப்பினருக்கும் என்ன நேர்ந்தது?
17 இயேசுவின் மரணத்திற்குப் பிறகு, சீஷர்கள் தைரியத்தோடு அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள், அதாவது “எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும்” அவரைப் பற்றி சாட்சி கொடுக்கும்படியான கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள். (அப்போஸ்தலர் 1:8) கடும் துன்புறுத்தல் மத்தியிலும், புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட கிறிஸ்தவ சபைக்கு யெகோவா ஆன்மீக ஒளி அருளுகிறார், ஏராளமான புதிய சீஷர்கள் வருவதற்கும் வழிசெய்கிறார்.—அப்போஸ்தலர் 2:47; 4:1-31; 8:1-8.
18 மறுபட்சத்தில், நற்செய்தியை எதிர்க்கிறவர்களின் எதிர்காலம் படிப்படியாக இருளடைகிறது. “துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப் போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்” என நீதிமொழிகள் 4:19 குறிப்பிடுகிறது. பொ.ச. 66-ல் ரோம படையினர் எருசலேமை முற்றுகையிடுகையில் அந்தக் ‘காரிருள்’ இன்னும் அதிகமாகிறது. ஆனால் என்ன காரணத்திற்கோ தெரியவில்லை ரோம படையினர் தற்காலிகமாகப் பின்வாங்கிப் போகிறார்கள்; என்றாலும், பொ.ச. 70-ல் மீண்டும் வந்து எருசலேம் நகரத்தையே தரைமட்டமாக்கி விடுகிறார்கள். யூத சரித்திராசிரியர் ஜொசிஃபஸ்ஸின்படி, அச்சமயத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கிறார்கள். என்றாலும், உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் தப்பிப்பிழைக்கிறார்கள். எப்படி? ரோம படையினர் தற்காலிகமாகப் பின்வாங்கியபோது, இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அவர்கள் அங்கிருந்து ஓடிவிடுவதால் உயிர் தப்புகிறார்கள்.—லூக்கா 21:20-22.
19, 20. (அ) இன்றைய உலகம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில் கடவுளுடைய ஜனங்கள் ஏன் பயப்படத் தேவையில்லை? (ஆ) 1914-ம் வருடத்திற்குப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே, யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு என்ன குறிப்பிடத்தக்க புரிந்துகொள்ளுதலை அளித்தார்?
19 நம்முடைய நிலைமையும் அதேபோலத்தான் இருக்கிறது. சீக்கிரத்தில் வரவிருக்கும் மிகுந்த உபத்திரவம் சாத்தானின் பொல்லாத உலகிற்கு ஒட்டுமொத்தமாக முடிவுகட்டிவிடும். ஆனால், கடவுளுடைய ஜனங்கள் பயப்படத் தேவையில்லை, ஏனெனில், “இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என இயேசு வாக்குறுதி அளித்திருக்கிறார். (மத்தேயு 28:20) தம்முடைய ஆரம்பகால சீஷர்களின் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்காகவும், வரவிருக்கும் காரியங்களை முன்னிட்டு அவர்களைத் தயார்படுத்துவதற்காகவும், இயேசு பரலோக மகிமையில் தாம் மேசியானிய ராஜாவாக இருக்கப் போவதைப் பற்றிய முற்காட்சியை அவர்களுக்குக் காண்பித்தார். அப்படியானால், இன்றைய நாளைப் பற்றி என்ன? அந்த முற்காட்சி 1914-ல் நிஜம் ஆனது. அது கடவுளுடைய மக்களின் விசுவாசத்தை எவ்வளவாய் பலப்படுத்தி வந்திருக்கிறது! அந்த மேசியானிய ராஜ்யம் அருமையான ஓர் எதிர்காலத்தை நமக்கு வாக்குறுதி அளிக்கிறது, அதைப் பற்றி அதிகமதிகமான ஆன்மீக ஒளி யெகோவாவின் ஊழியர்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. இருளடைந்து வரும் இன்றைய உலக நிலவரத்தின் மத்தியில், ‘நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போல இருக்கிறது.’—நீதிமொழிகள் 4:18.
20 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அடங்கிய ஒரு சிறு தொகுதியினர், கர்த்தருடைய வருகையைக் குறித்த முக்கியமான உண்மைகளை 1914-க்கு முன்னரே புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள். உதாரணத்திற்கு, கர்த்தருடைய வருகை காணக்கூடாததாக இருக்கும் என்பதை அவர்கள் விளங்கிக்கொண்டார்கள்; பொ.ச. 33-ல் பரலோகத்திற்கு இயேசு எழும்பிச் சென்ற சமயத்தில் சீஷர்கள் முன் தோன்றிய இரண்டு தேவதூதர்கள் சொன்ன விஷயத்தில் இது குறிப்பாகத் தெரிகிறது. பரலோகத்துக்கு இயேசு திரும்பிச் செல்வதைச் சீஷர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு மேகம் அவரை மறைக்கிறது, அப்போது அந்தத் தேவதூதர்கள் அவர்களிடம் இவ்வாறு சொன்னார்கள்: ‘உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப் போனாரோ, அப்படியே [அதாவது, அதே விதமாக] மறுபடியும் வருவார்.’—அப்போஸ்தலர் 1:9-11.
21. அடுத்த கட்டுரையில் என்ன கலந்தாலோசிக்கப்படும்?
21 பரலோகத்திற்கு இயேசு திரும்பிச் செல்வதை அவருடைய உண்மையுள்ள சீஷர்கள் மாத்திரமே பார்த்தார்கள். மறுரூபக் காட்சியின்போது சம்பவித்த விதமாகவே பொதுமக்கள் யாரும் அவர் பரலோகத்துக்குச் செல்வதைப் பார்க்கவில்லை; என்ன நடந்துகொண்டிருந்ததென பொதுவாக உலக ஜனங்களுக்குத் தெரியவே இல்லை. கிறிஸ்து ராஜ்ய வல்லமையில் திரும்ப வரும்போதும்கூட அப்படித்தான் இருக்கும். (யோவான் 14:19) அவர் ராஜாவாக வந்திருப்பதை அபிஷேகம் செய்யப்பட்ட அவருடைய உண்மையுள்ள சீஷர்கள் மாத்திரமே புரிந்துகொள்வார்கள். அந்தப் புரிந்துகொள்ளுதல் எப்படி அவர்கள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவிருந்தது என்பதும், அதன் விளைவாக லட்சக்கணக்கானோர் எப்படி இயேசுவின் பூமிக்குரிய குடிமக்களாக ஆகவிருந்தார்கள் என்பதும் அடுத்த கட்டுரையில் கலந்தாலோசிக்கப்படும்.—வெளிப்படுத்துதல் 7:9, 14.
[அடிக்குறிப்பு]
a இயேசுவின் முழுக்காட்டுதலின்போது, யோவான் மட்டுமே கடவுளுடைய குரலைக் கேட்டிருக்க வேண்டும். இயேசு எந்த யூதர்களுடன் பேசிக்கொண்டிருந்தாரோ அந்த யூதர்கள் “அவர் [கடவுளுடைய] சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.”—யோவான் 5:37.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• இயேசு ஓய்வுநாளை மீறியதாகவும் தேவதூஷணம் சொன்னதாகவும் குற்றம் சுமத்தப்பட்டபோது, தாமே மேசியா என்பதற்கு அவர் என்ன அத்தாட்சியை அளித்தார்?
• இயேசுவின் ஆரம்பகால சீஷர்கள் மறுரூபக் காட்சியிலிருந்து எப்படி நன்மையடைந்தார்கள்?
• தாம் வருமளவும் யோவான் உயிரோடிருப்பார் என இயேசு சொன்னபோது, அவர் எதை அர்த்தப்படுத்தினார்?
• என்ன முற்காட்சி 1914-ல் நிஜம் ஆனது?
[பக்கம் 10-ன் படங்கள்]
தாமே மேசியா என்பதற்கான ஆதாரங்களை இயேசு அளித்தார்
[பக்கம் 12-ன் படம்]
மறுரூபக் காட்சி விசுவாசத்தைப் பலப்படுத்துவதாய் இருந்தது
[பக்கம் 13-ன் படம்]
இயேசு ‘வருமளவும்’ யோவான் உயிரோடிருப்பார் என சொல்லப்பட்டது