அற்புதங்கள்—நிஜமா கட்டுக்கதையா?
சாலையில் சென்ற ஒரு காரில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரின் மீது அவருடைய பார்வை பதிந்தது. “அற்புதங்கள் உண்மையில் நடக்கின்றன—தேவதூதர்களிடம் கேட்டுப் பாருங்கள்” என்று அதில் எழுதப்பட்டிருந்தது. அவர் மதப்பற்றுள்ளவராக இருந்தாலும் அந்த ஸ்டிக்கர் எதை அர்த்தப்படுத்தியது என்று புரியாமல் குழம்பிப்போனார். அந்தக் காரின் சொந்தக்காரர் அற்புதங்களை நம்புகிறாரா அல்லது அற்புதங்களிலும்சரி தேவதூதர்களிலும்சரி தனக்கு நம்பிக்கை இல்லை என்று கேலியாகச் சொல்கிறாரா என அவருக்குப் புரியவில்லை.
மான்ஃபிரெட் பார்டல் என்ற ஜெர்மானிய எழுத்தாளர் சொன்னதைக் கவனியுங்கள்: “அற்புதம் என்ற வார்த்தை, வாசகர்களை உடனடியாக எதிரும்புதிருமான இரண்டு குழுக்களாகப் பிரித்துவிடுகிறது.” அற்புதங்கள் உண்மையிலேயே நடக்கின்றன, அதுவும் அடிக்கடி நடக்கின்றன என்று அற்புதங்களை நம்புகிறவர்கள் சொல்கிறார்கள்.a உதாரணத்திற்கு, கடந்த சில வருடங்களாக கிரீஸ் நாட்டில், மாதத்திற்கு சுமார் ஒருமுறை அற்புதங்கள் நடப்பதாக சிலர் நம்புவதாய் அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது. இதனால் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் பிஷப் ஒருவர் இவ்வாறு எச்சரிக்க வேண்டியதாயிற்று: “அற்புதங்களை நம்புகிறவர் கடவுளையும் மரியாளையும் புனிதர்களையும் மனிதப் பண்புகளைப் பெற்றிருப்பவர்களாகக் கருதுகிறார். எனவே, அற்புதங்களை நம்புகிறவர்கள் இந்த விஷயங்களை அளவுக்கதிகமாக பெரிதுபடுத்தக் கூடாது.”
வேறு சில நாடுகளிலோ அற்புதங்களை வெகு சிலரே நம்புகிறார்கள். ஜெர்மனியில் 2002-ல் பிரசுரிக்கப்பட்ட ஆலன்ஸ்பாக் சுற்றாய்வின்படி, அங்குள்ள குடிமக்களில் 71 சதவீதத்தினர் அற்புதங்களை நிஜமானவையாக அல்ல கட்டுக்கதைகளாகவே கருதுகிறார்கள். என்றாலும், அற்புதங்களை நம்புகிற மூன்றில் ஒரு பகுதியிலும் குறைவானவர்களில் மூன்று பெண்கள் தங்களிடம் கன்னி மரியாள் பேசியதாக சொல்கிறார்கள். தேவதூதர்களோடும் புறாவோடும் மரியாள் தங்களுக்குக் காட்சி அளித்ததாக அந்தப் பெண்கள் சொன்ன சில மாதங்களுக்குப் பிறகு, வெஸ்ட்ஃபாலன் போஸ்ட் என்ற பத்திரிகை இவ்வாறு அறிக்கை செய்தது: “இது வரையில் 50,000 புனித பயணிகளும், சுகப்படுத்துதலை நாடுவோரும், ஆர்வமுள்ளவர்களும் இந்த பெண்கள் கண்ட காட்சிகளில் மிகுந்த அக்கறை காட்டியிருக்கிறார்கள்.” இன்னும் 10,000 பேர், மறுபடியும் மரியாள் காட்சி அளிப்பதைப் பார்ப்பதற்காக அந்தக் கிராமத்திற்குத் திரண்டு வரவிருந்தார்கள். 1858-ம் வருடம் பிரான்சு நாட்டில் லூர்ட்ஸ் என்ற இடத்திலும், 1917-ம் வருடம் போர்ச்சுகலின் ஃபாட்டிமா என்ற இடத்திலும் கன்னி மரியாள் காட்சியளித்தார் என்று சொல்லப்படுகிறது.
பிற மதங்களின் நம்பிக்கையென்ன?
பெரும்பாலான மதங்கள் அற்புதங்களில் நம்பிக்கை வைக்கின்றன. புத்த மதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களின் ஸ்தாபகர்களுக்கு அற்புதங்களைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தன என்று மதங்களின் கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்) குறிப்பிடுகிறது. ஆனாலும், “அற்புதங்களும் அற்புதங்களைப் பற்றிய கதைகளும் மனிதர்களுடைய மத நம்பிக்கைகளில் மிக முக்கியமானவையாய் ஆகிவிட்டிருப்பதாக இந்த மதங்களின் பிந்தைய வரலாறு காட்டுகிறது” என்றும் அது சொல்கிறது. சில சமயங்களில் புத்தரும்கூட அற்புதங்களைச் செய்தார் என்று இப்புத்தகம் சொல்கிறது. சில காலங்களுக்குப் பிறகு, “சீனாவில் புத்த மதம் ஸ்தாபிக்கப்பட்டபோது புத்த மத மிஷனரிகள் தங்களுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தி இருப்பதை பலமுறை காட்டினார்கள்.”
நடந்ததாகச் சொல்லப்படும் அநேக அற்புதங்களைப் பற்றி குறிப்பிட்ட பிறகு, அந்தக் கலைக்களஞ்சியம் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறது: “மத எழுத்தாளர்கள் சொல்லும் இந்த அற்புதங்களைப் பற்றிய விவரங்கள் எல்லாவற்றையும் ஒருவர் நம்பாதிருக்கலாம். ஆனால் அவை, அற்புதங்களைச் செய்யும் சக்தியை சீடர்களுக்குக் கொடுத்த புத்தரை மகிமைப்படுத்தும் நல்லெண்ணத்தோடுதான் எழுதப்பட்டன என்பதில் சந்தேகமில்லை.” அதே புத்தகம் இஸ்லாமைப் பற்றி இவ்வாறு சொல்கிறது: “பெரும்பாலான இஸ்லாமிய சமுதாயத்தினர் எப்போதுமே அற்புதங்கள் நடப்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். முகமது பல சந்தர்ப்பங்களில் பொது இடங்களில் அற்புதங்களை நிகழ்த்தியதாகப் பாரம்பரியங்கள் (ஹேடித்ஸ்) சொல்கின்றன. . . . புனிதர்கள் தங்களுடைய பக்தர்களின் நலனுக்காக, இறந்த பின்னரும் கல்லறையில் இருந்துகொண்டே அற்புதங்களைச் செய்வதாக நம்பப்படுகிறது. தங்களுக்காக பரிந்து பேசும்படி மக்கள் அவர்களை பக்தியோடு வேண்டிக்கொள்வதாகவும் நம்பப்படுகிறது.”
கிறிஸ்தவத்தில் அற்புதங்கள் எதைக் காட்டுகின்றன?
கிறிஸ்தவத்தை தழுவிய அநேகர் மத்தியில் வெவ்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இயேசு கிறிஸ்துவும் கிறிஸ்தவம் தோன்றுவதற்கு முன்னான காலங்களில் கடவுளுடைய ஊழியர்களும் செய்த அற்புதங்களைப் பற்றிய பைபிள் பதிவுகளை உண்மையானவையாக சிலர் நம்புகிறார்கள். ஆனாலும் அநேகர் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தரின் கருத்தை ஆதரிக்கிறார்கள். அவரைப் பற்றி மதங்களின் கலைக்களஞ்சியம் இவ்வாறு சொல்கிறது: “அற்புதங்கள் நிகழ்ந்த காலங்களை எல்லாம் நாம் கடந்து வந்துவிட்டோம். அவை இனியும் நடக்குமென்று எதிர்பார்க்கக் கூடாது என்று லூத்தரும் கால்வினும் குறிப்பிட்டார்கள்.” கத்தோலிக்க சர்ச் அற்புதங்களை விடாப்பிடியாக நம்பி வந்தது, “அற்புதங்கள் எவ்வாறு நடந்தன என்பதைப் பற்றி அறிவுப்பூர்வமாக விளக்க அது முயற்சி எடுக்கவில்லை” என்று அப்புத்தகம் சொல்கிறது. “ஒழுக்க சம்பந்தமான விஷயங்களில் கண்டிப்பு காட்டுவதே கிறிஸ்தவர்களுக்கு அழகாகும். கடவுளோ ஆவி ஆட்களோ மனிதர்களோடு ஒருபோதும் தொடர்பு வைத்துக் கொண்டதுமில்லை, அவர்களுடைய வாழ்க்கையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தியதும் இல்லை என்று அறிவுப்பூர்வ புராட்டஸ்டன்ட் சமுதாயத்தினர் நம்ப ஆரம்பித்தார்கள்” என்றும் அது குறிப்பிட்டது.
சில குருமார் உட்பட, கிறிஸ்தவர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் மற்றவர்கள், பைபிளில் காணப்படும் அற்புதங்கள் உண்மைதானா என்பதைக் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். உதாரணத்திற்கு, பைபிளில் யாத்திராகமம் 3:1-5-ல், எரிகிற முட்செடியைப் பற்றி சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். ஜெர்மானிய இறையியலாளர்களில் அநேகர் இந்த அற்புதம் நிஜமாகவே நடந்ததாக ஒத்துக்கொள்வதில்லை என பைபிள் உண்மையில் என்ன சொல்கிறது என்ற ஆங்கில நூல் விவரிக்கிறது. அது “மோசேயின் மனதில் ஏற்பட்ட முட்கள் போன்ற குத்தலுக்கும், நெருப்பாய் குமுறிய அவரது மனசாட்சிக்குமே அடையாளம்” என அவர்கள் விளக்குகிறார்கள். “தெய்வீக பிரசன்னம் என்ற ஒளியில் திடீரென்று அச்செடியில் பூத்துக் குலுங்கிய மலர்களைக்கூட அந்தத் தீ அடையாளப்படுத்தி இருக்கலாம்” என்றும் அந்தப் புத்தகம் விவரிக்கிறது.
இத்தகைய விளக்கம் உங்களுக்கு அவ்வளவு திருப்தியை அளிக்காதிருக்கலாம். அப்படியென்றால் நீங்கள் எதை நம்ப வேண்டும்? அற்புதங்கள் எப்போதாவது உண்மையில் நடந்திருக்கின்றன என்று நம்புவதே நியாயமானதா? நடப்பதாக சொல்லப்படும் இன்றைய அற்புதங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? நிச்சயமாக நம்மால் தேவதூதர்களிடம் கேட்க முடியாதுதான், அப்படியென்றால் யாரிடம்தான் கேட்பது?
பைபிளின் கருத்து
கடந்த காலங்களில், மனிதரால் முடியாத காரியங்களைக் கடவுள் செய்துகாட்டினார் என்று பைபிள் சொல்வதை யாரும் மறுக்க முடியாது. அவரைப் பற்றி நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘இஸ்ரவேலாகிய உமது ஜனத்தை அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணினீர்.’ (எரேமியா 32:21) தலைப் பிள்ளை சங்காரம் உட்பட கடவுளால் ஏற்பட்ட பத்து வாதைகளினாலும், மகா பலம் படைத்த ஒரு பேரரசுக்கு ஏற்பட்ட தலைகுனிவை சற்று கற்பனை செய்து பாருங்கள். அவை உண்மையிலேயே அற்புதங்கள்தான் அல்லவா?—யாத்திராகமம் அதிகாரங்கள் 7-14.
பல நூற்றாண்டுகளுக்குப் பின், இயேசு செய்த சுமார் 35 அற்புதங்களைப் பற்றி நான்கு சுவிசேஷ எழுத்தாளர்கள் விளக்கினார்கள். அவர்கள் சொல்வதை வைத்து பார்த்தால், அவர்கள் அறிக்கை செய்ததுபோக இன்னும் பல அற்புதங்களை இயேசு செய்தார் என்பதாகவே தெரிகிறது. இந்த விவரங்கள் நிஜமா கட்டுக்கதையா?b—மத்தேயு 9:35; லூக்கா 9:11.
பைபிள் கடவுளுடைய சத்திய வார்த்தை என்று சொல்லிக்கொள்வது உண்மையானால், அதில் சொல்லப்பட்டிருக்கும் அற்புதங்களை நீங்கள் நிச்சயமாக நம்பலாம். கடந்த காலங்களில் சுகப்படுத்துதல், உயிர்த்தெழுதல் போன்ற அற்புதங்கள் பல நடந்ததாக பைபிள் திட்டவட்டமாக சொல்கிறது. ஆனால் அப்படிப்பட்ட அற்புதங்கள் இன்று நடப்பதில்லை என்றும் அது தெளிவாகச் சொல்கிறது. (“அன்றுபோல் இன்று ஏன் அற்புதங்கள் நடைபெறுவதில்லை” என்ற தலைப்பில் பக்கம் 4-லுள்ள பெட்டியைக் காண்க.) அப்படியென்றால், பைபிளை நம்புகிறவர்கள்கூட இன்றைய அற்புதங்களை நம்புவதில்லை என்று அர்த்தமாகுமா? பதிலைத் தெரிந்துகொள்ள அடுத்த கட்டுரைக்குத் திருப்புங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு பைபிள் அகராதி பின்வருமாறு கொடுக்கும் அர்த்தத்தின்படியே இந்தக் கட்டுரையில் “அற்புதங்கள்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது: “மனித மற்றும் இயற்கை சக்திகள் அனைத்தையும் மீறி உலகில் நிகழும் காரியங்கள்; இயற்கைக்கு அப்பாற்பட்ட ஊற்றுமூலத்தால் நடப்பதாக சொல்லப்படுபவை.”
b பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? என்ற ஆங்கில நூலில் பைபிள் நம்பத்தகுந்தது என்பதற்கு ஆதாரங்களை நீங்கள் அறிந்துகொள்ளலாம்; இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 4-ன் பெட்டி]
அன்றுபோல் இன்று ஏன் அற்புதங்கள் நடைபெறுவதில்லை
பைபிள் பல விதமான அற்புதங்களைப் பற்றி குறிப்பிடுகிறது. (யாத்திராகமம் 7:19-21; 1 இராஜாக்கள் 17:1-7; 18:22-38; 2 இராஜாக்கள் 5:1-14; மத்தேயு 8:24-27; லூக்கா 17:11-19; யோவான் 2:1-11; 9:1-7) இவற்றில் அநேக அற்புதங்கள், இயேசுவே மேசியா என்பதை அடையாளம் கண்டுகொள்ள உதவின. அவருக்குக் கடவுளுடைய ஆதரவு இருந்தது என்பதை அவை சுட்டிக்காட்டின. இயேசுவின் ஆரம்ப கால சீஷர்களுக்கு அற்புதங்களைச் செய்யும் வரங்கள் கொடுக்கப்பட்டன. அதனால் அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசினார்கள், ஆவியால் ஏவப்பட்ட வார்த்தைகளைப் பகுத்தறியவும் அவர்களால் முடிந்தது. (அப்போஸ்தலர் 2:5-12; 1 கொரிந்தியர் 12:28-31) கிறிஸ்தவ சபை தோன்றிய காலத்தில், அந்த அற்புதங்கள் பெரிதும் உதவின. எவ்வாறு?
அன்று வெகு சில வேதாகமப் பிரதிகளே இருந்தன. பெரும்பாலும், செல்வச் சீமான்களிடமே சுருள்களும் புத்தகங்களும் இருந்தன. புறமத நாடுகளில், பைபிளைப் பற்றியோ அதன் ஆசிரியரான யெகோவாவைப் பற்றியோ யாருக்கும் தெரியாதிருந்தது. வாய்மொழியாகவே கிறிஸ்தவ போதனைகளைக் கடத்த வேண்டியிருந்தது. அச்சமயத்தில் கிறிஸ்தவ சபைகளைக் கடவுள் பயன்படுத்தி வருவதைக் காட்ட அற்புதங்கள் உதவியாக இருந்தன.
ஆனால் அற்புதங்களை நிகழ்த்தும் வரங்கள் இனிமேலும் தேவைப்படாதபோது அவை நீக்கப்பட்டுவிடும் என்பதை பவுல் எடுத்துரைத்தார். “தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.”—1 கொரிந்தியர் 13:8-10.
இன்று பைபிள்கள், பைபிள் சம்பந்தப்பட்ட ஒத்துவாக்கிய நூல்கள், என்ஸைக்ளோப்பீடியாக்கள் போன்றவை மக்களுக்கு எளிதில் கிடைக்கின்றன. பயிற்றுவிக்கப்பட்ட சுமார் 60 லட்சம் கிறிஸ்தவர்கள், பைபிளின் அடிப்படையில் தெய்வீக அறிவைப் பெற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். எனவே இயேசு கிறிஸ்துவே கடவுளால் நியமிக்கப்பட்ட மீட்பர் என்பதையும், இன்று யெகோவா தமது ஊழியர்களைக் காத்து வருகிறார் என்பதையும் நிரூபிக்க இனியும் அற்புதங்கள் தேவையில்லை.