மற்றவர்களோடு உங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறீர்களா?
நம்மைவிட அழகாக, பிரபலமாக, புத்திசாலியாக, அல்லது படிப்பில் புலியாக இருக்கும் ஒருவரை நம்மில் யார்தான் சந்திக்காது இருந்திருக்கிறோம்? சிலருக்கு நம்மைவிட நல்ல ஆரோக்கியமோ, மனநிறைவளிக்கும் வேலையோ, பேர் புகழோ, அதிக நண்பர்களோ இருக்கலாம். அவர்களுக்கு நிறைய சொத்துபத்துக்கள், எக்கச்சக்கமான பணம், புத்தம்புது கார் போன்றவை இருக்கலாம் அல்லது அவர்கள் நம்மைவிட அதிக சந்தோஷமாய் இருப்பது போல தோன்றலாம். இதையெல்லாம் வைத்து, மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு பார்க்கிறோமா? அப்படி ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவே முடியாதா? ஒரு கிறிஸ்தவர் ஏன் ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்? யாரோடும் நம்மை ஒப்பிட்டுப் பார்க்காமல், எப்படித் திருப்தியாக வாழலாம்?
ஏன் ஒப்பிடுகிறோம், எப்போது ஒப்பிடுகிறோம்
மக்கள் தங்களுடைய தன்மதிப்பைக் காப்பாற்றிக்கொள்ள அல்லது உயர்த்திக்கொள்ள விரும்புவதே தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதற்கு ஒரு காரணமாகும். பெரும்பாலும், தங்களுக்கு சமமாக இருப்பவர்களின் அளவுக்கு தாங்களும் வெற்றிகரமாக இருந்தால் அவர்கள் திருப்தியடைகிறார்கள். இப்படி ஒப்பிடுவதற்கு மற்றொரு காரணம், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், தங்களால் எதையெல்லாம் சாதிக்க முடியும், தங்கள் வரம்புகள் என்ன போன்றவற்றைப் புரிந்து கொள்ளவுமே ஆகும். மற்றவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் கவனிக்கிறார்கள். பல அம்சங்களில் கிட்டத்தட்ட தங்களைப் போலவே இருப்பவர்களால் குறிப்பிட்ட சில இலக்குகளை அடைய முடிகிறதென்றால் தங்களாலும் முடியும் என்று நம்புகிறார்கள்.
ஒரே பாலினத்தவர்கள், ஒத்த வயதினர், சம அந்தஸ்து உள்ளவர்கள், நன்கு அறிமுகமானவர்கள் போன்றவர்களே ஒருவரோடொருவர் தங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். ஏணி வைத்தாலும் எட்ட முடியாத ஒருவரோடு நம்மை நாம் ஒப்பிட்டு பார்ப்பதில்லை. உதாரணத்திற்கு, சராசரி டீன்ஏஜ் பெண் ஒருத்தி தனது தோழிகளுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பாளே தவிர பிரபல மாடல் அழகியோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்க மாட்டாள். அந்த அழகியும் சராசரி டீனேஜ் பெண்ணோடு தன்னை ஒப்பிட்டு பார்க்க மாட்டாள்.
எந்தெந்த விஷயங்களில் நாம் ஒப்பிட்டுப் பார்ப்போம்? புத்திசாலித்தனம், அழகு, சொத்துசுகம், ஆடை அலங்காரம் என சமுதாயத்தில் மதிப்புள்ளதாக கருதப்படும் எந்த விஷயமும் ஒப்பிடுவதற்கு காரணமாக இருக்கலாம். என்றபோதிலும், நமக்கு அதிக ஆர்வத்துக்குரிய விஷயங்களைத்தான் நாம் பெரும்பாலும் ஒப்பிட்டுப் பார்ப்போம். உதாரணத்திற்கு, நமக்குத் தபால் தலைகளைச் சேகரிப்பதில் ஆர்வம் இல்லாவிட்டால், நமக்குத் தெரிந்தவர் சேகரித்திருக்கும் தபால் தலைகளைப் பார்த்து ஒருவேளை பொறாமைப்பட மாட்டோம்.
மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது, திருப்தி முதல் சோர்வு வரையாக, ரசித்துப் பின்பற்றுவது முதல் மன உளைச்சல் அல்லது பகைமை வரையாக வித்தியாசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இவற்றில் சில உணர்ச்சிகள் தீங்கானவை, கிறிஸ்தவ குணங்களுடன் சற்றும் பொருந்தாதவை.
போட்டி போடுவதற்காக ஒப்பிடுதல்
மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டுப் பார்த்து அவர்களைவிட “வெற்றிசிறக்க” ஆலாய்ப் பறக்கும் அநேகர் போட்டி மனப்பான்மையை வெளிக்காட்டுகிறார்கள். இவர்கள் மற்றவர்களைவிட ஒருபடி மேலே இருக்கவே விரும்புகிறார்கள். அவ்வாறு தாங்கள் இருப்பதாக உணரும்வரை திருப்தியடையவே மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் மத்தியிலிருப்பது சந்தோஷத்தைத் தருவதில்லை. அவர்களுடன் கொண்டுள்ள நட்பிலும் உறவிலும் விரிசல்தான் மிஞ்சும். அவர்கள் மனத்தாழ்மையில் குறைவுபடுகிறார்கள்; அதோடு, அயலாரை நேசிக்க வேண்டும் என்ற பைபிளின் ஆலோசனையையும் பெரும்பாலும் பின்பற்றாதிருக்கிறார்கள். எப்படியெனில், அவர்களுடைய மனப்பான்மை மற்றவர்களை லாயக்கற்றவர்களாகவும், மட்டமானவர்களாகவும் எளிதில் உணரச் செய்யும்.—மத்தேயு 18:1-5; யோவான் 13:34, 35.
மற்றவர்களை “தோல்வியுற்றவர்களாக” உணரச் செய்வது ஒரு விதத்தில் அவர்களுடைய மனதை புண்படுத்துகிறது. அதோடு, “நமக்கு சரிசமமான நிலையில் இருப்பவர்களுக்கு நாம் விரும்பும் அனைத்தும் கிடைத்திருப்பதாக தோன்றுகையில், நம்முடைய தோல்வியென்னும் ரணம் அதிக வலியுண்டாக்கும்” என்று ஓர் எழுத்தாளர் கருதுகிறார். ஆகவே போட்டி மனப்பான்மை, மற்றவர்களுடைய சொத்துசுகம், செல்வச்செழிப்பு, அந்தஸ்து, பதவி, புகழ் போன்றவற்றைப் பார்த்துப் பொறாமைப்படவும் கோபப்படவும் வெறுப்படையவும் நம்மைத் தூண்டிவிடலாம். இது மேலும் கடும் போட்டியை வளர்த்து, இப்படியே ஒன்றையொன்று மாறி மாறி தூண்டிவிடும் ஒரு விஷ சுழலுக்குள் நம்மை இழுத்துச் சென்றுவிடும். எனவே, ‘போட்டி மனப்பான்மையைக் கிளறுவதை’ பைபிள் கண்டிக்கிறது.—கலாத்தியர் 5:26, NW.
பொறாமைப்படுபவர்கள் தங்களுடைய புண்பட்ட தன்மானத்தை காப்பாற்றிக்கொள்வதற்காக தங்களுடைய போட்டியாளர்களின் சாதனைகளை இழிவுபடுத்துகிறார்கள். இது சின்ன விஷயமாகத் தோன்றலாம், ஆனால் இதைக் கண்டுணர்ந்து சரிசெய்யாவிட்டால் மோசமான தவறுகளில் போய் முடியலாம். பொறாமையை மையமாக கொண்ட இரண்டு பைபிள் பதிவுகளைக் கவனியுங்கள்.
பெலிஸ்தர் மத்தியில் ஈசாக்கு குடியிருந்தார்; அப்போது ‘அவருக்கு ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவர் பேரில் பொறாமை கொண்டார்கள்.’ எனவே அவரது தகப்பன் ஆபிரகாம் வெட்டிய எல்லா துரவுகளையும் அவர்கள் தூர்த்து போட்டார்கள். பெலிஸ்திய ராஜாவும் ஈசாக்கை வேறெங்காவது போய் குடியிருக்க சொன்னான். (ஆதியாகமம் 26:1-3, 12-16) அவர்களுடைய பொறாமை வன்மம் நிறைந்ததும், தீங்கு விளைவிப்பதுமாக இருந்தது. ஈசாக்கு அவர்கள் மத்தியில் சீரும் சிறப்புமாய் இருந்ததை அவர்களால் கொஞ்சம்கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மற்றொரு சம்பவம் நடந்தது. தாவீது யுத்த களத்தில் அபார வெற்றி பெற்றார். அவருடைய சாதனையைப் பார்த்து பூரித்துப்போன இஸ்ரவேல் பெண்கள், “சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்” என்று பாடினார்கள். அதில் சவுல் ஓரளவுக்கு புகழப்பட்டாலும், அந்த ஒப்பீட்டை அவமானமாக கருதினார். அவருக்குள் பொறாமை எனும் தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. அது முதல், மனதில் பகையை வளர்த்துக்கொண்டு, தாவீதை ஓர் எதிரியாகவே பார்க்க ஆரம்பித்தார். அதன் விளைவாக, அவரைக் கொல்வதற்கு முயற்சி எடுத்தார்; அதில் தோல்வியடையவே, மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார். பொறாமை எப்பேர்ப்பட்ட அக்கிரமத்தைச் செய்ய தூண்டலாம்!—1 சாமுவேல் 18:6-11.
எனவே, மற்றவர்களுடைய அருமை பெருமைகளையோ, வசதி வாய்ப்புகளையோ நம்முடையதோடு ஒப்பிடும்போது பொறாமையும் போட்டி மனப்பான்மையும் துளிர்ப்பது போல் தோன்றினால், எச்சரிக்கை! இவை மோசமான உணர்ச்சிகள், கடவுளுடைய சிந்தையோடு துளியும் பொருந்தாதவை. இவற்றை எப்படி எதிர்க்கலாம் என்பதை ஆராயும் முன், ஒப்பிட்டுப் பார்ப்பதை தூண்டும் மற்றொரு காரணியைப் பற்றி சற்று சிந்திக்கலாம்.
சுய பரிசோதனையும் திருப்தியும்
‘நான் புத்திசாலியாக, வசீகரமானவனாக, திறமைசாலியாக, ஆரோக்கியமானவனாக, மதிக்கப்படுகிறவனாக, நேசிக்கப்படுகிறவனாக இருக்கிறேனா? இருக்கிறேன் என்றால் எந்தளவிற்கு?’ என்றெல்லாம் நாம் கண்ணாடி முன் நின்று கேட்டுக்கொண்டிருப்பதில்லை. இருந்தாலும் “இப்படிப்பட்ட கேள்விகள் அவ்வப்போது நம் மனதில் மெல்ல தோன்றி ஓரளவு திருப்திகரமான பதிலை அளிக்கலாம்” என்று ஓர் எழுத்தாளர் கூறுகிறார். தன்னால் எதைச் சாதிக்க முடியும் என்பதைக் குறித்து நிச்சயமாக அறியாதிருக்கும் ஒரு நபர், போட்டி மனப்பான்மைக்கோ பொறாமைக்கோ துளியும் இடங்கொடுக்காமல் இக்கேள்விகளை யோசித்துப் பார்க்கலாம். அது சுய பரிசோதனையாக மட்டுமே இருக்கும். ஆகவே அதில் எந்தத் தவறும் இல்லை. என்றாலும், மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு பார்க்காமல் அதைச் செய்வதே சரியானது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
பல்வேறு காரணங்களால் நம்மிடம் வித்தியாசமான திறமைகள் பளிச்சிடலாம். நம்மைவிட சிறப்பாக ஜொலிக்கும் ஆட்கள் எப்போதும் இருக்கத்தான் செய்வார்கள். எனவே, அவர்களைப் பொறாமை கண்ணோடு பார்ப்பதற்குப் பதிலாக, கடவுளின் நீதியுள்ள தராதரங்களோடு நம் நடத்தையை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஏனெனில் அவை மட்டுமே நல்லது எது, கெட்டது எது என்பதை சரியாக காட்ட முடியும். யெகோவா நம்மை தனி நபர்களாகவே பார்க்கிறார். அவர் நம்மை யாரோடும் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. “அவனவன் தன்தன் சுய கிரியையைச் சோதித்துப் பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்” என அப்போஸ்தலன் பவுல் நமக்கு அறிவுறுத்துகிறார்.—கலாத்தியர் 6:4.
பொறாமையை எதிர்த்தல்
மனிதர் எல்லாரும் அபூரணராக இருப்பதால், பொறாமையை எதிர்ப்பதற்குத் தொடர்ந்து ஊக்கமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கலாம். “கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்” என பைபிள் உற்சாகப்படுத்துவதை நாம் அறிந்திருக்கலாம். ஆனால் அதைச் செய்வது அதிக கடினமாக இருக்கலாம். பாவம் செய்யும் மனப்போக்கு தன்னிடம் இருப்பதை பவுல் அறிந்திருந்தார். அதை எதிர்ப்பதற்குத் தன் ‘சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்த’ வேண்டியிருந்தது. (ரோமர் 12:10; 1 கொரிந்தியர் 9:27) நம்மைப் பொறுத்தவரை, போட்டி மனப்பான்மைகளுக்கு இடங்கொடுப்பதை எதிர்த்து அதற்குப் பதிலாக உற்சாகமளிக்கும் எண்ணங்களால் நம் மனதை நிரப்ப வேண்டியிருக்கலாம். ‘[நம்மைக்] குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல்’ இருக்க உதவும்படி யெகோவாவிடம் ஜெபிக்க வேண்டும்.—ரோமர் 12:3.
பைபிள் படிப்பும், தியானமும்கூட உதவும். உதாரணமாக, கடவுள் வாக்குறுதி அளித்திருக்கும் பரதீஸைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அப்போது சமாதானம், நல்லாரோக்கியம், ஏராளமான உணவு, வசதியான வீடு, திருப்தியான வேலை போன்றவற்றை அனைவரும் அனுபவிப்பர். (சங்கீதம் 46:8, 9; 72:7, 8, 16; ஏசாயா 65:21-23) அப்போது போட்டி போட யாருக்காவது மனம் வருமா? வரவே வராது. அதற்கு எந்தக் காரணமும் இருக்காது. பரதீஸில் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்ற எல்லா நுட்ப விவரங்களையும் யெகோவா நமக்கு அளிக்கவில்லை என்பது உண்மைதான்; என்றாலும் அங்கு அவரவருக்கு ஆர்வமூட்டும் காரியங்களில் ஈடுபடவும், விரும்புகிற திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் முடியும் என்று நாம் நியாயமாகவே எதிர்பார்க்கலாம். ஒருவர் வானவியலைப் படிக்கலாம், இன்னொருவர் அழகிய ஆடைகளை வடிவமைக்கலாம். பொறாமைக்கு அங்கு இடமேது? சக மனிதருடைய செயல்கள் உற்சாகப்படுத்துமே தவிர, வெறுப்பூட்டாது. போட்டி பொறாமை எல்லாம் சுவடு தெரியாமல் மறைந்திருக்கும்.
இப்படிப்பட்ட வாழ்க்கை வாழத்தான் ஆசைப்படுகிறோமென்றால் இப்போதே அத்தகைய மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள முயல வேண்டும் அல்லவா? உலகெங்கும் பிரச்சினைகள் இருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு ஓர் ஆன்மீக பரதீஸை இப்போதே நாம் அனுபவிக்கிறோம். கடவுளுடைய புதிய உலகில் போட்டி மனப்பான்மைக்கு இடமில்லை என்பதால், இப்போதே அதைத் தவிர்ப்பது சிறந்தது அல்லவா?
அப்படியென்றால், நம்மை மற்றவர்களோடு ஒப்பிடுவது எப்போதுமே தவறா? அல்லது ஏதாவது சமயங்களில் அது பொருத்தமாக இருக்குமா?
பொருத்தமான ஒப்பீடுகள்
ஒப்பிட்டுப் பார்ப்பது பல சமயங்களில் கசப்பான, சோர்வூட்டுகிற விளைவுகளுக்கு வழிநடத்தியிருக்கிறது, ஆனால் எல்லா சமயத்திலும் அல்ல. இவ்விஷயத்தில் அப்போஸ்தலன் பவுலின் அறிவுரையைக் கவனியுங்கள்: ‘வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.’ (எபிரெயர் 6:11) பூர்வ காலத்தில் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களாக இருந்தவர்களின் குணங்களைப் பின்பற்ற பாடுபடுவது பிரயோஜனமாயிருக்கும். இதற்காக, அவர்களுடன் நம்மை சில சமயங்களில் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியமாக இருக்கலாம் என்பது உண்மையே. இருந்தாலும், நாம் யாரைப் பின்பற்றலாம், எதில் முன்னேற வேண்டும் போன்றவற்றைக் கண்டுணர அது நமக்கு உதவும்.
யோனத்தானை கவனியுங்கள். பொறாமைப்பட அவருக்குக் காரணமிருந்தது என்று ஒருவர் சொல்லலாம். ஏனென்றால் அவர் இஸ்ரவேலை ஆண்டு வந்த சவுலின் மூத்த குமாரனாக இருந்தார்; அரசனாகும் எதிர்பார்ப்பு அவருக்கு ஒருவேளை இருந்திருக்கலாம். ஆனால் அவரைவிட 30 வயது இளையவரான தாவீதை யெகோவா தேர்ந்தெடுத்தார். மனதில் வன்மத்தை வளர்ப்பதற்குப் பதிலாக, யெகோவா தேவன் ராஜாவாகத் தேர்ந்தெடுத்த தாவீதிடம் தன்னலமற்ற நட்புடன் பழகினார், அவருக்கு ஆதரவளித்தார்; இவ்வாறு அவர் தன்னை வித்தியாசமானவராக காண்பித்தார். அவர் உண்மையில் ஓர் ஆன்மீக நபராக விளங்கினார். (1 சாமுவேல் 19:1-4) தாவீதை போட்டியாளனாக கருதிய தன் தகப்பன் சவுலைப் போல யோனத்தான் இல்லாமல், காரியங்களை யெகோவா வழிநடத்துகிறார் என்பதை அறிந்தவராக அவருடைய சித்தத்திற்குக் கட்டுப்பட்டு நடந்தார். தாவீதோடு தன்னை ஒப்பிட்டு, “நான் இருக்கும்போது தாவீதை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?” என்று கேள்வி கேட்கவில்லை.
சக விசுவாசிகளோடு இருக்கையில், மற்றவர்கள் நம்மை முந்திச் செல்ல பார்க்கிறார்கள் அல்லது நம்முடைய இடத்தை பிடிக்கப் பார்க்கிறார்கள் என நினைத்து ஒருபோதும் பயப்படத் தேவையில்லை. போட்டி நமக்கு பொருத்தமற்றது. போட்டி அல்ல, ஆனால் ஒத்துழைப்பு, ஒற்றுமை, அன்பு ஆகியவையே முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களுக்கு அடையாளம். “அன்பின் மிகப் பெரிய எதிரி பொறாமையே” என சமூகவியலாளர் ப்ரான்செஸ்கோ ஆல்பெரோனி கூறுகிறார். “ஒருவர் மீது நமக்கு அன்பு இருந்தால், அவருக்கு எது நல்லதோ அதுவே அவருக்கு கிடைக்கும்படி விரும்புவோம், அவரது வெற்றியிலும் மகிழ்ச்சியிலும் நாமும் சேர்ந்து சந்தோஷப்படுவோம்” என்றும் கூறுகிறார். ஆகவே, கிறிஸ்தவ சபையிலுள்ள ஒருவர் குறிப்பிட்ட ஒரு சிலாக்கியத்திற்காக தேர்ந்தெடுக்கப்படுகையில் அதைப் பார்த்து திருப்திப்படுவதே அன்பான காரியமாகும். யோனத்தான் அதைத்தான் செய்தார். யெகோவாவின் அமைப்பில் பொறுப்புள்ள ஸ்தானங்களில் உண்மையாய் உழைப்பவர்களை நாம் ஆதரிக்கையில் யோனத்தானைப் போல நாமும் ஆசீர்வதிக்கப்படுவோம்.
சக கிறிஸ்தவர்கள் வைக்கும் மிகச் சிறந்த முன்மாதிரி நம் அபிமானத்தைப் பெறலாம். சமநிலையோடு நம்மை அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்ற நாம் உந்துவிக்கப்படலாம். (எபிரெயர் 13:7) ஆனால், நாம் கவனமாக இல்லாவிட்டால் இது போட்டியாக மாறிவிடலாம். நம் அபிமானத்துக்குரியவர் ஏதோவொரு விதத்தில் நம்மை மிஞ்சிவிட்டதாக நினைத்து அவரை மட்டம் தட்டவோ குறைகூறவோ தொடங்கினால், அவரைப் பின்பற்றுவதற்குப் பதிலாக அவரைப் பார்த்து பொறாமைப்பட ஆரம்பித்துவிடுவோம்.
அபூரணத்தில் பிறந்த யாரும் பூரண முன்மாதிரியாகத் திகழ முடியாது. ‘நீங்கள் பிரியமான பிள்ளைகளைப் போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்’ என்றும், “கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார்” என்றும் வேதாகமம் கூறுகிறது. (எபேசியர் 5:1, 2; 1 பேதுரு 2:21) யெகோவாவும் இயேசுவும் வெளிக்காட்டும் அன்பு, கனிவு, அநுதாபம், மனத்தாழ்மை போன்ற குணங்களைப் பின்பற்ற நாமும் முயல வேண்டும். அவர்களுடைய குணங்கள், நோக்கங்கள், அவர்கள் செயல்படும் விதங்கள் ஆகியவற்றை நம்முடையதோடு ஒப்பிட்டுப் பார்க்க நேரம் செலவிட வேண்டும். இப்படி ஒப்பிட்டுப் பார்ப்பது நம் வாழ்க்கையை வளமாக்கும், சரியான பாதையில் வழிநடத்தும், ஒரு பிடிப்பைக் கொடுக்கும், பாதுகாப்பை அளிக்கும்; அதோடு, முதிர்ச்சியுள்ள ஆண்களும் பெண்களுமாக ஆவதற்கும் உதவும். (எபேசியர் 4:11) அவர்களுடைய பூரண மாதிரியைப் பின்பற்ற நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வதற்குக் கவனமாயிருந்தால், சக மனிதர்களோடு நம்மை ஒப்பிட்டு பார்க்க விரும்பவே மாட்டோம்.
[பக்கம் 28, 29-ன் படம்]
தாவீதைப் பார்த்து சவுல் பொறாமைப்பட்டார்
[பக்கம் 31-ன் படம்]
இளம் தாவீதை யோனத்தான் ஒருபோதும் தனக்குப் போட்டியாகக் கருதவில்லை