வாழ்க்கை சரிதை
மாறும் சூழ்நிலைகளைப் பயன்படுத்தித் தூர இடங்களில் பிரசங்கித்தோம்
ரிகார்டோ மாலிக்சி சொன்னபடி
கிறிஸ்தவ நடுநிலை காரணமாக வேலையை இழந்தபோது, எங்கள் எதிர்காலத்தைத் திட்டமிடுவதில் உதவும்படி யெகோவாவிடம் நானும் என் குடும்பத்தாரும் வேண்டினோம். ஊழியத்தில் இன்னும் அதிகமாக ஈடுபட எங்களுக்கு ஆசை இருப்பதையும் ஜெபத்தில் தெரிவித்தோம். அதன்பின் சீக்கிரத்திலேயே நாடோடி வாழ்க்கையைத் தொடங்கினோம்; இரண்டு கண்டங்களிலுள்ள எட்டு நாடுகளுக்குச் சென்றோம். இதனால் தொலை தூர இடங்களில் எங்களால் ஊழியம் செய்ய முடிந்தது.
பிலிப்பைன்ஸில் 1933-ம் வருடம் பிறந்தேன். என் குடும்பத்தார் பிலிப்பைன் இண்டிப்பென்டென்ட் சர்ச்சைச் சேர்ந்தவர்கள். எங்கள் குடும்பத்திலிருந்த 14 பேரும் அந்தச் சர்ச்சுக்குத்தான் போய் வந்தோம். எனக்குச் சுமார் 12 வயதிருக்கும்போது உண்மையான மதத்தைக் காட்டித் தரும்படி கடவுளிடம் ஜெபித்தேன். என் ஆசிரியர் ஒருவர் என்னை மத வகுப்பில் சேர்த்துவிட்டார். எனக்குக் கத்தோலிக்க மதத்தில் ஈடுபாடு அதிகமானது. சனிக்கிழமைகளில் பாவமன்னிப்பு கேட்பதற்கும் சரி, ஞாயிற்றுக்கிழமைகளில் பூசைக்கும் சரி, நான் போகாமல் இருந்ததே இல்லை. ஆனாலும் எனக்குள் மெல்ல மெல்ல சந்தேகம் தலைதூக்கியது, அதிருப்தி குடிகொண்டது. ஜனங்கள் இறந்ததும் அவர்களுக்கு என்ன ஆகிறது என்ற கேள்வியும், நரகத்தையும், திரித்துவத்தையும் பற்றிய கேள்விகளும் மனதை வாட்டி வதைத்தன. மதத் தலைவர்கள் கொடுத்த பதில்கள் அர்த்தமற்றவையாக இருந்தன, அவை மனநிறைவை அளிக்கவில்லை.
மனநிறைவை அளிக்கும் பதில்களைப் பெறுதல்
கல்லூரியில் படிக்கும்போது மாணவர் கழகம் ஒன்றில் சேர்ந்தேன்; இதனால் சண்டை, சூதாட்டம், புகைபிடித்தல் ஆகியவற்றிலும் இன்னும் பல ஒழுக்கக்கேடான பழக்கங்களிலும் ஈடுபட்டேன். ஒருநாள் சாயங்காலம், என்கூட படிக்கும் ஒரு மாணவனின் அம்மாவைச் சந்தித்தேன். அவர் ஒரு யெகோவாவின் சாட்சி. என் மத போதகர்களிடம் கேட்ட அதே கேள்விகளையே இவரிடமும் கேட்டேன். என் கேள்விகள் எல்லாவற்றிற்கும் அவர் பைபிளிலிருந்து பதிலளித்தார், அவர் சொன்னதுதான் சத்தியம் என்பது எனக்குப் பளிச்சென புரிந்தது.
ஒரு பைபிளை வாங்கி, யெகோவாவின் சாட்சிகளுடன் படிக்க ஆரம்பித்தேன். சீக்கிரத்திலேயே அவர்களது கூட்டங்கள் எல்லாவற்றிற்கும் போகத் தொடங்கினேன். “கெட்ட சகவாசங்கள் நல்ல பழக்கங்களைக் கெடுக்கும்” என்ற ஞானமான பைபிள் புத்திமதிக்கு இசைய ஒழுக்கங்கெட்ட நண்பர்களின் சகவாசத்தைத் துண்டித்துக் கொண்டேன். (1 கொரிந்தியர் 15:33, NW) இது பைபிள் படிப்பில் முன்னேறுவதற்கும், கடைசியில் யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுப்பதற்கும் உதவியது. 1951-ல் முழுக்காட்டுதல் எடுத்த பிறகு கொஞ்ச காலத்திற்கு முழுநேர ஊழியனாக (பயனியராக) சேவை செய்தேன். 1953, டிசம்பர் மாதம் அவுரேயா க்ரூஸ் என்ற பெண்ணை மணந்தேன்; அவள் என் வாழ்க்கை துணைவியாக மட்டுமல்ல, ஊழியத்தில் உண்மையுள்ள துணையாகவும் ஆனாள்.
எங்கள் ஜெபங்களுக்குக் கிடைத்த பதில்
பயனியர்களாகச் சேவை செய்யவே நெஞ்சார விரும்பினோம். ஆனால் யெகோவாவை இன்னும் முழுமையாக சேவிக்க வேண்டும் என்ற அந்த ஆசைக் கனவு உடனடியாக நிறைவேறவில்லை. இருந்தாலும் அவருடைய சேவையைச் செய்வதற்கு வாய்ப்புகளெனும் கதவுகளை எங்களுக்குத் திறக்க வேண்டுமென ஓயாமல் ஜெபித்தோம். ஆனால் வாழ்க்கையே போராட்டமாக இருந்தது. எனினும், எங்கள் ஆன்மீக இலக்குகளையும் நாங்கள் மறந்துவிடவில்லை. 25 வயதில் சபை ஊழியனாக, யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் நடத்தும் கண்காணியாக நியமிக்கப்பட்டேன்.
பைபிள் அறிவில் முன்னேற முன்னேற யெகோவாவின் நியமங்களை நன்கு புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். கிறிஸ்தவனாக நடுநிலைமை வகித்ததால் நான் செய்து வந்த வேலை என் மனசாட்சிக்கு விரோதமானது என்பதை உணர்ந்தேன். (ஏசாயா 2:2-4) எனவே வேலையை ராஜினாமா செய்ய தீர்மானித்தேன். இது எங்கள் விசுவாசத்திற்குச் சோதனையாய் அமைந்தது. என் குடும்பத்தாரின் தேவைகளை எப்படிக் கவனிப்பேன்? திரும்பவும் யெகோவா தேவனைத்தான் ஜெபத்தில் அணுகினோம். (சங்கீதம் 65:2) எங்கள் கஷ்டம் கவலைகளையெல்லாம் அவரிடம் சொன்னோம், அதோடு ராஜ்ய பிரசங்கிகள் அதிகம் தேவைப்படுகிற இடத்தில் சேவை செய்ய ஆசைப்படுவதாகவும் சொன்னோம். (பிலிப்பியர் 4:6, 7) ஆனால் வாய்ப்புகள் எனும் பல்வேறு கதவுகள் திறக்குமென அப்போது துளிகூட நினைத்துப் பார்க்கவில்லை!
எங்கள் பயணத்தைத் தொடங்குதல்
1965, ஏப்ரல் மாதம், லாவோஸிலுள்ள வியன்டியன் பன்னாட்டு விமான நிலையத்தில் விமான விபத்து மற்றும் மீட்புப் பணியில் சூப்பர்வைஸராக வேலை கிடைத்தது, எனவே அந்த இடத்திற்குக் குடிமாறினோம். வியன்டியன் நகரில் 24 யெகோவாவின் சாட்சிகள் இருந்தார்கள், மிஷனரிகளுடனும் அங்கிருந்த சில சகோதரர்களுடன் சேர்ந்து நாங்கள் ஊழியத்தைச் சந்தோஷமாக செய்து வந்தோம். அதன் பிறகு தாய்லாந்திலுள்ள உதோன் தானி விமான நிலையத்திற்கு வேலை மாற்றலாகியது. அங்கு யெகோவாவின் சாட்சிகள் யாருமே கிடையாது. அதனால் குடும்பமாக நாங்களே வாராந்தர கூட்டங்கள் எல்லாவற்றையும் நடத்தினோம். வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கித்தோம், மறுசந்திப்புகள் செய்தோம், பைபிள் படிப்புகளை ஆரம்பித்தோம்.
தொடர்ந்து “மிகுந்த கனிகளைக் கொடு”க்க வேண்டுமென்று இயேசு தம் சீஷர்களுக்குச் சொன்ன புத்திமதி எங்களுக்கு நினைவிருந்தது. (யோவான் 15:8) எனவே அவர்களது முன்மாதிரியைப் பின்பற்றத் தீர்மானித்து, தொடர்ந்து நற்செய்தியை அறிவித்து வந்தோம். சீக்கிரத்திலேயே அதன் பலன்களைக் கண்டு அகமகிழ்ந்தோம். தாய்லாந்தைச் சேர்ந்த ஓர் இளைஞி சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, எங்கள் ஆன்மீக சகோதரியாக ஆனாள். வட அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள், பிற்பாடு அவர்கள் கிறிஸ்தவ மூப்பர்கள் ஆனார்கள். வட தாய்லாந்தில் நாங்கள் பத்து வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து நற்செய்தியைப் பிரசங்கித்து வந்தோம். இப்போது உதோன் தானியில் ஒரு சபை இருப்பதை அறியும்போது எங்களுடைய ஆனந்தத்திற்கு அளவேயில்லை! நாங்கள் அன்று விதைத்த சத்தியத்தின் விதைகள் சில இன்றும் கனிகொடுக்கின்றன.
நாங்கள் மீண்டும் அங்கிருந்து புறப்பட வேண்டி வந்தபோது வருத்தமாக இருந்தது; என்றாலும் பிரசங்க ஊழியத்தைத் தொடர்ந்து செய்வதற்கு உதவுமாறு ‘அறுப்புக்கு எஜமானரிடம்’ நாங்கள் ஜெபித்தோம். (மத்தேயு 9:38) ஈரானின் தலைநகரமான தெஹரானுக்கு மாற்றலாகிப் போனோம். அப்போது அங்கு ஷாவின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது.
சவால்மிக்க பிராந்தியங்களில் பிரசங்கித்தல்
தெஹரான் போனதும் முதல் வேலையாக எங்கள் ஆன்மீக சகோதரர்களைக் கண்டுபிடித்தோம். நாங்கள் கூட்டுறவு கொண்ட அந்தச் சிறிய தொகுதியில் 13 நாடுகளைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகள் இருந்தார்கள். ஈரானில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு சில மாற்றங்களை நாங்கள் செய்ய வேண்டியிருந்தது. நேரடியாக எந்த எதிர்ப்பையும் நாங்கள் சந்திக்காவிட்டாலும் உஷாராய் இருக்க வேண்டியிருந்தது.
ஆர்வம் காட்டியவர்களின் வேலை நேரத்தை அனுசரித்து சில சமயங்களில் நாங்கள் நடுராத்திரியிலோ அதற்குப் பின்போ பைபிள் படிப்பை ஆரம்பித்து விடியற்காலை வரை நடத்தினோம். இருப்பினும் அப்படிப் பாடுபட்டதற்குக் கைமேல் பலனைக் காண்கையில் அதிக சந்தோஷம் அடைந்தோம்! பிலிப்பைன்ஸ், கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த அநேக குடும்பத்தார் கிறிஸ்தவ சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தார்கள்.
அடுத்து நாங்கள் பங்களாதேஷிலுள்ள தாகாவிற்கு மாற்றலாகிப் போனோம். டிசம்பர் 1977-ல் அங்குப் போய் சேர்ந்தோம். இந்த நாட்டிலும் பிரசங்க ஊழியம் செய்வது அவ்வளவு எளிதல்ல. இருந்தாலும், ஊழியத்தில் மும்முரமாக ஈடுபட வேண்டுமென்பது எப்போதும் எங்கள் மனதிலிருந்தது. யெகோவாவுடைய ஆவியின் வழிநடத்துதலோடு கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்த பல குடும்பங்களை நாங்கள் கண்டுபிடித்தோம். அவர்களில் சிலர் பரிசுத்த பைபிளிலுள்ள சத்தியத்தின் புத்துயிரளிக்கும் தண்ணீருக்காகத் தவியாய் தவித்துக்கொண்டிருந்தவர்கள். (ஏசாயா 55:1) இதனால் அநேக பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முடிந்தது.
“எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட” வேண்டுமென்பதே கடவுளுடைய சித்தம் என்பது எங்கள் மனதில் மங்காமல் இருந்தது. (1 தீமோத்தேயு 2:4) யாராலும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் நேராதது எங்களுக்கு நிம்மதியை அளித்தது. எந்தத் தப்பெண்ணமும் தலைதூக்காதிருக்க ரொம்ப சகஜமாக, நட்பு முறையில் மக்களை அணுகுவதற்குக் கவனமாக இருந்தோம். அப்போஸ்தலன் பவுலைப் போல ‘எல்லாருக்கும் எல்லாமாக’ இருக்க முயன்றோம். (1 கொரிந்தியர் 9:22) நாங்கள் ஏன் வந்திருக்கிறோமென யாராவது கேட்டால் நாங்கள் கனிவுடன் பதிலளிப்போம். பொதுவாக எல்லாருமே அன்பாகப் பழகினார்கள்.
தாகாவில் ஒரு யெகோவாவின் சாட்சியைக் கண்டுபிடித்தோம், அவரை எங்களோடு கூட்டத்தில் கலந்துகொள்ளவும் ஊழியத்திற்கு வரவும் உற்சாகப்படுத்தினோம். பிறகு, என் மனைவி ஒரு குடும்பத்தாருக்குப் பைபிள் படிப்பு நடத்தி வந்தாள், அவர்களைக் கூட்டங்களுக்கு வரும்படி அழைத்தாள். யெகோவாவின் அன்புள்ள தயவால் அந்தக் குடும்பத்தார் அனைவரும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் அவர்களது இரண்டு மகள்கள் வங்காளியில் பைபிள் பிரசுரங்களை மொழிபெயர்ப்பதற்கு உதவினார்கள், அவர்களது உறவினர்களில் அநேகரும்கூட யெகோவாவைப் பற்றி அறிந்துகொண்டார்கள். பைபிள் படித்த இன்னும் பலரும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் இப்போது மூப்பர்களாக அல்லது பயனியர்களாக சேவை செய்து வருகிறார்கள்.
தாகா நகரம் ஜன நெருக்கமுள்ள இடமாதலால் பிரசங்க வேலையில் உதவும்படி எங்கள் உறவினர்கள் சிலரை அழைத்தோம். அந்த அழைப்பை ஏற்று பலர் வந்து, எங்களுடன் சேர்ந்து ஊழியம் செய்தார்கள். அந்நாட்டில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததற்காக எவ்வளவாய் சந்தோஷப்படுகிறோம்! அதற்கு யெகோவா வழிசெய்ததற்காக அவருக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்! ஒரேவொரு யெகோவாவின் சாட்சி இருந்த பங்களாதேஷில் இப்போது இரண்டு சபைகள் இருக்கின்றன!
ஜூலை 1982-ல் பங்களாதேஷிலிருந்து மூட்டைக் கட்ட வேண்டிய நேரம் வந்தது. கண்ணீரும் கம்பலையுமாக சகோதரர்களை விட்டுப் பிரிந்தோம். அதற்குப் பின் சீக்கிரத்திலேயே உகாண்டாவிலுள்ள என்டெப் பன்னாட்டு விமான நிலையத்தில் வேலை கிடைத்தது; அங்கு நாங்கள் நான்கு வருடங்களும் ஏழு மாதங்களும் இருந்தோம். இந்நாட்டில் யெகோவாவின் மகத்தான பெயருக்கு மகிமை சேர்க்கும் விதத்தில் எங்களால் என்ன செய்ய முடிந்திருக்கிறது?
கிழக்கு ஆப்பிரிக்காவில் யெகோவாவுக்கு சேவை
என்டெப் பன்னாட்டு விமான நிலையத்தில் தரை இறங்கியதும் ஒரு டிரைவர் என்னையும் என் மனைவியையும் தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து புறப்படும்போதே அந்த டிரைவரிடம் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிக்க ஆரம்பித்தேன். அவர் என்னிடம், “நீங்கள் யெகோவாவின் சாட்சியா?” என்று கேட்டார். ஆமாம் என பதிலளித்தபோது “உங்களுடைய சகோதரர் ஒருவர் இங்குக் கன்ட்ரோல் டவரில்தான் வேலை பார்க்கிறார்” என்று சொன்னார். நேராக வண்டியை அவரிருந்த இடத்திற்கு விடச் சொன்னேன். எங்களைப் பார்த்ததில் அந்தச் சகோதரருக்கு ரொம்ப சந்தோஷம்; உடனடியாக கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அந்தச் சமயத்தில் உகாண்டாவில் 228 ராஜ்ய பிரஸ்தாபிகள் மட்டுமே இருந்தார்கள். என்டெப்பிலிருந்த இன்னும் இரண்டு சகோதரர்களுடன் சேர்ந்து முதல் வருடம் அங்குச் சத்தியத்தின் விதைகளை விதைத்தோம். அங்குள்ள மக்கள் வாசிப்பதில் விருப்பமுள்ளவர்களாய் இருந்ததால் நூற்றுக்கணக்கான பத்திரிகைகளையும் எக்கச்சக்கமான வேறு பிரசுரங்களையும் நாங்கள் அவர்களுக்குக் கொடுத்தோம். எங்களுக்கு ஒத்தாசையாக, வார இறுதி நாட்களில் என்டெப்புக்கு வந்து ஊழியம் செய்யும்படி தலைநகரான கம்பாலாவிலுள்ள சகோதரர்களை அழைத்தோம். நான் கொடுத்த முதல் பொதுப் பேச்சைக் கேட்க வந்திருந்தவர்கள் என்னையும் சேர்த்து மொத்தம் ஐந்து பேர்.
அடுத்த மூன்று வருடங்களுக்கு, எங்கள் வாழ்க்கையிலேயே அதிக சந்தோஷமான சில தருணங்களை ருசித்தோம்; அதாவது, எங்கள் பைபிள் மாணாக்கர்கள் படித்ததற்கு இசைய நடக்கவும், படுவிரைவாக முன்னேறவும் ஆரம்பித்ததைப் பார்த்து சந்தோஷத்தில் திளைத்தோம். (3 யோவான் 4) ஒரு வட்டார மாநாட்டில் எங்கள் பைபிள் மாணாக்கர்களில் ஆறு பேர் முழுக்காட்டுதல் பெற்றார்கள். நாங்கள் முழுநேர வேலை பார்த்துக்கொண்டே பயனியர் ஊழியமும் செய்ததை அவர்கள் கண்ணாரக் கண்டதால் அவர்களில் அநேகர் முழுநேர ஊழியம் செய்ய ஊக்கத்தைப் பெற்றதாகச் சொன்னார்கள்.
நாங்கள் வேலை செய்து வந்த இடமும் பலன்தரும் பிராந்தியமாக இருக்கலாம் என்பதைப் புரிந்துகொண்டோம். ஒருசமயம் விமான நிலையத்திலிருந்த தீயணைப்பு அதிகாரியை அணுகி அவரிடம் பரதீஸ் பூமியில் கிடைக்கப் போகும் வாழ்க்கை பற்றிய பைபிள் நம்பிக்கையைப் பகிர்ந்துகொண்டேன். அப்போது, கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வார்கள், வறுமை, வீடில்லாத் திண்டாட்டம், போர், வியாதி, சாவு ஆகிய அனைத்தும் சுவடு தெரியாமல் துடைத்தழிக்கப்படும் என்பதை அவருடைய பைபிளிலிருந்தே காட்டினேன். (சங்கீதம் 46:9; ஏசாயா 33:24; 65:21, 22; வெளிப்படுத்துதல் 21:3, 4) தன்னுடைய பைபிளிலிருந்தே அவற்றைப் படித்ததும் அவருக்கு ஆர்வம் பிறந்தது. அப்போதே பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அவர் எல்லாக் கூட்டங்களுக்கும் வர ஆரம்பித்தார். சீக்கிரத்திலேயே யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றார். பின்னர் அவரும் எங்களுடன் சேர்ந்து முழுநேர ஊழியம் செய்ய ஆரம்பித்தார்.
நாங்கள் உகாண்டாவில் இருக்கையில் இரண்டு முறை உள்நாட்டு கலவரம் வெடித்தது, ஆனால் அது எங்கள் ஆன்மீக நடவடிக்கைகளுக்கு எவ்விதத்திலும் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை. பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்களைச் சார்ந்து வாழ்ந்தவர்கள் ஆறு மாதத்திற்கு கென்யாவிலுள்ள நைரோபிக்கு மாற்றப்பட்டார்கள். உகாண்டாவிலேயே இருந்த நாங்கள் விவேகத்துடனும் எச்சரிக்கையுடன் செயல்பட்டோம்; இருப்பினும் கிறிஸ்தவ கூட்டங்களிலும் பிரசங்க ஊழியத்திலும் தவறாமல் கலந்துகொண்டோம்.
ஏப்ரல் 1988-ல் அங்கு என் வேலை முடிவுற்றது, நாங்கள் மீண்டும் வேறொரு இடத்திற்குச் சென்றோம். என்டெப் சபையை விட்டுப் புறப்படுகையில் அதன் ஆன்மீக முன்னேற்றத்தைக் குறித்ததில் பரம திருப்தி ஏற்பட்டது. ஜூலை 1997-ல் மீண்டும் என்டெப்புக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. அதற்குள்ளாக எங்களுடன் முன்னர் பைபிள் படித்த மாணாக்கர்கள் சிலர் மூப்பர்களாகச் சேவை செய்ய ஆரம்பித்திருந்தார்கள். பொதுப் பேச்சுக்கு 106 பேர் வந்திருந்ததைப் பார்த்தபோது எங்களுக்கு ஒரே சந்தோஷம்!
ஊழியம் செய்யப்படாத பிராந்தியத்திற்குச் செல்லுதல்
வாய்ப்பெனும் புதிய கதவுகள் திறக்கையில் எங்களால் நுழைய முடிந்ததா? முடிந்தது. அடுத்ததாக எனக்கு சோமாலியாவிலுள்ள மொகடிஸ்ஸு பன்னாட்டு விமான நிலையத்தில் வேலை கிடைத்தது. ஊழியம் செய்யப்படாத பிராந்தியத்தில் சேவை செய்ய கிடைத்த இந்தப் புதிய வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்தோம்.
தூதுவர் அலுவலகத்தில் வேலை செய்தவர்களிடமும் பிலிப்பைன்ஸிலிருந்து வந்திருந்த வேலையாட்களிடமும் வேறு அயல் நாட்டவர்களிடமும் மட்டுமே பெரும்பாலும் பிரசங்கிக்க முடிந்தது. அவர்களை அடிக்கடி மார்க்கெட்டில் சந்தித்தோம். அவர்களது வீடுகளுக்கும் போய் நட்பு முறையில் அவர்களைச் சந்தித்தோம். சாமர்த்தியமாகவும், புத்திசாலித்தனமாகவும், ஜாக்கிரதையாகவும் இருந்ததோடு யெகோவாவை முழுமையாகச் சார்ந்திருந்ததே மற்றவர்களுடன் பைபிள் சத்தியத்தை பகிர்ந்துகொள்ள எங்களுக்கு உதவியது; பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்தவர்கள் மத்தியில் இது பலன் கொடுத்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு, போர் மூளுவதற்குச் சற்று முன்பு நாங்கள் மொகடிஸ்ஸுவை விட்டுப் புறப்பட்டோம்.
இன்டர்நேஷனல் சிவில் ஏவியேஷன் ஆர்கனைஸேஷன் அடுத்து என்னை மயன்மாரிலுள்ள யாங்கூனுக்கு அனுப்பியது. கடவுளுடைய நோக்கங்களை நல்மனமுள்ளவர்கள் கற்றுக்கொள்ள உதவும் சிறந்த வாய்ப்பு மீண்டும் எங்களுக்குக் கிடைத்தது. மயன்மாருக்குப் பிறகு நாங்கள் டான்ஜானியாவிலுள்ள தார்-எஸ்-சலாம் என்ற இடத்திற்கு அனுப்பப்பட்டோம். அங்கு வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வது ரொம்ப எளிதாக இருந்தது; ஏனெனில் அங்கு ஆங்கிலம் பேசுவோர் இருந்தார்கள்.
நாங்கள் வேலை செய்த எல்லா நாடுகளிலும் ஊழியத்தில் அந்தளவுக்கு எந்தப் பிரச்சினையையும் எதிர்ப்படவில்லை; இத்தனைக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியத்திற்கு கட்டுப்பாடுகள் இருந்த நாடுகளிலேயே பெரும்பாலும் வேலை செய்தோம். நான் கௌரவமான வேலையில் இருந்ததால், அதாவது பொதுவாக அரசாங்கத்துடனும் பன்னாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடைய வேலையில் இருந்ததால் யாரும் எங்கள் ஊழியத்தைக் குறித்து கேள்வி கேட்கவில்லை.
என் வேலை காரணமாக நானும் என் மனைவியும் 30 ஆண்டுகளுக்கு நாடோடி வாழ்க்கை நடத்தினோம். இருந்தாலும் எனது வேலையை, எங்கள் இலக்கை எட்டுவதற்கான வழியாக மட்டுமே கருதினோம். கடவுளுடைய ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதே எப்போதும் எங்களது முதல் இலக்காக இருந்தது. மாறும் சூழ்நிலைகளை நன்கு பயன்படுத்திக் கொள்வதற்கும் தொலை தூரங்களில் நற்செய்தியைப் பரப்பும் அருமையான சிலாக்கியத்தை அனுபவிப்பதற்கும் எங்களுக்கு வாய்ப்பளித்து உதவியதற்காக யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்.
மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே
58 வயதில் முன்னதாகவே ஓய்வு பெற்றுக்கொண்டு பிலிப்பைன்ஸுக்குத் திரும்பிப் போகத் தீர்மானித்தேன். திரும்பிச் சென்றதும் மீண்டும் எங்களுக்கு வழிகாட்டுமாறு யெகோவாவிடம் ஜெபித்தோம். நாங்கள் கேவிடி மாகாணத்திலுள்ள ட்ரேசே மார்டிரேஸ் நகரிலுள்ள ஒரு சபையில் சேவை செய்ய ஆரம்பித்தோம். நாங்கள் போய்ச் சேர்ந்தபோது கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் 19 பேர் மட்டுமே அங்கிருந்தார்கள். தினமும் பிரசங்க ஊழியத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது, அநேக பைபிள் படிப்புகளும் ஆரம்பிக்கப்பட்டன. சபை வளரத் தொடங்கியது. ஒருசமயம் என் மனைவி கிட்டத்தட்ட 19 பைபிள் படிப்புகளை நடத்தினாள்; நான் 14 படிப்புகளை நடத்தினேன்.
சீக்கிரத்திலேயே எங்களுக்குப் பெரிய ராஜ்ய மன்றம் தேவைப்பட்டது. இதற்காகவும் நாங்கள் யெகோவாவிடம் ஜெபித்தோம். ஆன்மீக சகோதரர் ஒருவரும் அவரது மனைவியும் ஒரு சிறிய நிலத்தை நன்கொடையாகக் கொடுத்தார்கள், புதிய ராஜ்ய மன்றம் கட்டுவதற்குக் கடன் கொடுக்கக் கிளை அலுவலகமும் ஒப்புக்கொண்டது. புதிய கட்டடத்தின் வருகை பிரசங்க வேலைக்குப் பெரும் உத்வேகம் அளித்தது, கூட்டத்திற்கு வருகிறவர்களின் எண்ணிக்கை வாரா வாரம் அதிகரித்தது. தற்போது 17 பேருள்ள மற்றொரு சபைக்கு நாங்கள் உதவி செய்து வருகிறோம்; அங்குப் போவதற்கு மட்டுமே ஒரு மணிநேரத்திற்கும் மேல் பயணம் செய்கிறோம்.
நானும் என் மனைவியும், பல்வேறு நாடுகளில் சேவை செய்ய கிடைத்த பாக்கியத்தைப் பொன்னெனப் போற்றுகிறோம். நாங்கள் நடந்து வந்த நாடோடி வாழ்க்கை பாதையைத் திரும்பிப் பார்க்கையில் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் அதை மிகச் சிறந்த விதத்தில் பயன்படுத்தியதை அறிந்து பரம திருப்தி அடைகிறோம்!
[பக்கம் 24, 25-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
டான்ஜானியா
உகாண்டா
சோமாலியா
ஈரான்
பங்களாதேஷ்
மயன்மார்
லாவோஸ்
தாய்லாந்து
பிலிப்பைன்ஸ்
[பக்கம் 23-ன் படம்]
என் மனைவி அவுரேயா க்ரூஸ்ஸுடன்