யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
ரூத் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
இரு பெண்களும் ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருந்ததை நெகிழ வைக்கும் விதத்தில் சித்தரித்துக் காட்டும் உண்மை சம்பவம் அது. அது யெகோவா தேவன் மீதுள்ள போற்றுதலையும் அவருடைய ஏற்பாட்டின் மீதுள்ள நம்பிக்கையையும் சிறப்பித்துக் காட்டும் நிஜக் கதை. அது மேசியானிய வம்சாவளியில் யெகோவாவுக்கு இருந்த ஆழ்ந்த அக்கறையை சிறப்பித்துக் காட்டும் பதிவு. அது ஒரு குடும்பத்தின் இன்ப துன்பங்களை மனதைத் தொடும் விதத்தில் எடுத்துரைக்கும் விவரிப்பு. அதுதான் ரூத் புத்தகம். வேறுபல விஷயங்களும் இந்தப் புத்தகத்தில் உள்ளன.
ரூத் புத்தகத்தில், ‘நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்து வந்த நாட்களில்’ சுமார் 11 வருட காலப் பகுதியில் நடந்த சம்பவங்கள் உள்ளன. (ரூத் 1:1) இவை நியாயாதிபதிகளுடைய ஆரம்ப காலத்தில் நடந்த சம்பவங்களாய் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த நிஜக் கதையில் வரும் நிலச் சொந்தக்காரரான போவாஸ், யோசுவாவின் காலத்தில் வாழ்ந்த ராகாபின் மகனாவார். (யோசுவா 2:1, 2; ரூத் 2:1; மத்தேயு 1:5) இப்புத்தகம் பொ.ச.மு. 1090-ல் சாமுவேல் தீர்க்கதரிசியால் எழுதப்பட்டிருக்கலாம். இஸ்ரவேலரல்லாத ஒரு பெண்ணின் பெயரில் எழுதப்பட்ட ஒரே பைபிள் புத்தகம் இதுவே. இதிலுள்ள செய்தி ‘ஜீவனும் வல்லமையும் உள்ளது.’—எபிரெயர் 4:12.
“நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்”
நகோமியும் ரூத்தும் பெத்லெகேமுக்கு வந்து சேர்கிறார்கள். ஊரார் எல்லாரும் அவர்களை ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். மூத்தவரைப் பார்த்து ‘இவள் நகோமியா?’ என்று ஊரார் கேட்கிறார்கள். அதற்கு நகோமி, “என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார். நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பி வரப்பண்ணினார்” என்று சொல்கிறாள்.—ரூத் 1:19-21.
இஸ்ரவேலில் பஞ்சம் வந்து, நகோமியின் குடும்பம் பெத்லெகேமிலிருந்து மோவாப் தேசத்திற்குக் குடிமாறியபோது அவளுக்குக் கணவரும் இரண்டு மகன்களும் இருந்தார்கள், அந்த அர்த்தத்தில் அவள் “நிறைவுள்ளவளாய்” இருந்தாள். ஆனால் மோவாப் தேசத்திற்குப் போய் கொஞ்ச காலத்தில் அவளுடைய கணவர் எலிமெலேக்கு இறந்துவிடுகிறார். பிற்பாடு, அவளுடைய மகன்கள் இருவரும் ஒர்பாள், ரூத் எனும் மோவாபிய பெண்களை மணம் செய்து கொள்கிறார்கள். சுமார் பத்து வருடங்கள் உருண்டோடிவிடுகின்றன. இரண்டு மகன்களும் வாரிசின்றி இறந்துவிடுகிறார்கள். இப்போது இந்த மூன்று பெண்களும் தங்கள் கணவர்களைப் பறிகொடுத்து நிற்கிறார்கள். மாமியாரான நகோமி யூதா தேசத்திற்குத் திரும்பிச் செல்ல தீர்மானிக்கையில், விதவைகளான அவளுடைய மருமகள்கள் இரண்டு பேரும் அவளோடு செல்கிறார்கள். செல்லும் வழியில் அவர்களுடைய சொந்த ஊரான மோவாப் தேசத்திற்கே திரும்பிப் போய் அங்கு யாரையாவது திருமணம் செய்துகொள்ளும்படி நகோமி அவர்களுக்குப் புத்தி சொல்கிறாள். ஓர்பாள் அதற்குச் சம்மதித்து திரும்பிப் போய்விடுகிறாள். ஆனால் ரூத்தோ நகோமியை விட்டுப் போகாமல் “நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” என்று சொல்கிறாள்.—ரூத் 1:16.
விதவைகளான நகோமியும் ரூத்தும் வாற்கோதுமை அறுவடையின் ஆரம்பத்தில் பெத்லெகேமுக்கு வருகிறார்கள். கடவுளுடைய நியாயப்பிரமாண ஏற்பாட்டிற்கு இசைய, ரூத் ஒரு வயலுக்குச் சென்று கதிர்களைப் பொறுக்க ஆரம்பிக்கிறாள். அது எலிமெலேக்குவின் நெருங்கிய உறவினர் ஒருவருடைய வயல். வயதான அந்த யூதருடைய பெயர் போவாஸ். ரூத்துக்கு அவர் கருணை காட்டுவதால் “கோதுமை அறுப்பும் வாற்கோதுமை அறுப்பும் தீருமட்டும்” அவருடைய வயலில் கதிர் பொறுக்குகிறாள்.—ரூத் 2:23.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:8—நகோமி தன் மருமகள்களிடம் தகப்பன் வீட்டுக்குப் போகும்படி சொல்லாமல் ஏன் “தாய் வீட்டுக்குத்” திரும்பிப் போகும்படி சொன்னாள்? ஒர்பாளின் தகப்பன் அப்போது உயிருடன் இருந்தாரா இல்லையா என்பதைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால் ரூத்தின் தகப்பன் அப்போது உயிரோடுதான் இருந்தார். (ரூத் 2:11) என்றாலும் தாயைப் பற்றி சொன்னால் தாய் பாசம் அவர்களுடைய ஞாபகத்திற்கு வரும் என்பதற்காக ஒருவேளை நகோமி அப்படி சொல்லியிருக்கலாம். பாசமான மாமியாரை விட்டுப் பிரியும் துக்கத்திலிருக்கும் அப்பெண்களுக்கு இது ஆறுதலளிப்பதாய் இருந்திருக்கும். நகோமியைப் போல் அல்லாமல் அவர்களுடைய தாய் வீடு நல்ல வசதியானவையாய் இருந்ததையும் அந்தக் குறிப்பு சுட்டிக்காட்டலாம்.
1:13, 21—நகோமியின் வாழ்க்கையில் கசப்பும் துயரமும் ஏற்படுவதற்கு யெகோவா காரணராய் இருந்தாரா? இல்லை. நகோமி எந்த விதத்திலும் கடவுள் மீது பழிசுமத்தவில்லை. இருந்தாலும், அவளுக்குச் சம்பவித்த எல்லாவற்றையும் பார்க்கையில் யெகோவா தனக்கு விரோதமாக இருந்ததாக நினைத்தாள். அவள் மனக் கசப்பும் ஏமாற்றமும் அடைந்தாள். அதுமட்டுமல்ல அக்காலங்களில் பிள்ளைகள் இருப்பது ஆசீர்வாதமாகவும் பிள்ளைகள் இல்லாதிருப்பது சாபமாகவும் கருதப்பட்டது. இரண்டு மகன்களைப் பறிகொடுத்ததாலும் பேரப்பிள்ளைகள் இல்லாததாலும் யெகோவா தன்னைச் சிறுமைப்படுத்தியதாக நகோமி நினைத்திருக்கலாம்.
2:12—“செய்கைக்குத்தக்க” என்ன “பலனை” யெகோவாவிடமிருந்து ரூத் பெற்றாள்? ரூத் ஒரு மகனைப் பெற்றெடுத்து, அதன் மூலம் சரித்திரத்தில் மிக முக்கியமான வம்சாவளிக்கு, அதாவது இயேசு கிறிஸ்துவின் வம்சாவளிக்கு பாலமாக அமையும் பாக்கியத்தைப் பெற்றாள்.—ரூத் 4:13-17; மத்தேயு 1:5, 16.
நமக்குப் பாடம்:
1:8; 2:20. நகோமி பல துயரங்களை அனுபவித்த போதிலும் யெகோவாவுடைய அன்புள்ள தயவில் திட நம்பிக்கை வைத்திருந்தாள். நமக்கும் அத்தகைய நம்பிக்கை இருக்க வேண்டும், முக்கியமாய் கடும் சோதனைகளை அனுபவிக்கையில் அத்தகைய நம்பிக்கை இருக்க வேண்டும்.
1:9. வீடு என்பது உண்பதற்கும் உறங்குவதற்குமான இடமாக மட்டுமே இருக்கக் கூடாது. இளைப்பாறுவதற்கும் ஆறுதல் பெறுவதற்கும் ஏற்ற அமைதிப் பூங்காவாய் இருக்க வேண்டும்.
1:14-16. ஒர்பாள் ‘தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய் விட்டாள்.’ ஆனால் ரூத் போகவில்லை. சொந்த ஊரில் வசதியாக, பாதுகாப்பாக வாழ்வதை விட்டுவிட்டு, யெகோவாவுக்கு உண்மைப் பற்றுறுதியோடு வாழ விரும்பினாள். கடவுளிடம் பற்றுமாறா அன்பை வளர்த்து, சுயதியாக மனப்பான்மையைக் காட்டுவது, தன்னல ஆசைகளுக்கு இடமளிக்காமலும் ‘கெட்டுப்போகப் பின்வாங்காமலும்’ இருக்க நமக்கு உதவும்.—எபிரெயர் 10:39.
2:2. அந்நியரும் கஷ்டப்படுகிறவர்களும் பிழைப்பதற்கு வழிசெய்த, கதிர் பொறுக்கும் ஏற்பாட்டை ரூத் பயன்படுத்திக்கொள்ள விரும்பினாள். அவள் மனத்தாழ்மை உள்ளவளாக இருந்தாள். கஷ்டத்திலிருக்கும் ஒரு கிறிஸ்தவர், சக விசுவாசிகள் தரும் அன்பான உதவியை அல்லது தனக்குக் கிடைக்கும் அரசாங்க உதவியை ஏற்றுக்கொள்ள மனதில்லாதளவுக்கு கர்வம் பிடித்தவராக இருக்கக் கூடாது.
2:7. கதிர் பொறுக்குவதற்கான உரிமை இருந்தபோதிலும், ரூத் முதலில் அனுமதி கேட்டாள். (லேவியராகமம் 19:9, 10) இது அவளுடைய மனத்தாழ்மைக்கு அடையாளமாக இருந்தது. “சாந்தகுணமுள்ளவர்கள் [அதாவது மனத்தாழ்மை உள்ளவர்கள்] பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்” என்பதால் நாம் ‘மனத்தாழ்மையாகத் தேடுவது’ ஞானமானது.—செப்பனியா 2:3; சங்கீதம் 37:11.
2:11. நகோமிக்கு ரூத் ஒரு மருமகளாக மட்டுமே இருக்கவில்லை. உண்மையான ஒரு சிநேகிதியாகவும் இருந்தாள். (நீதிமொழிகள் 17:17) அவர்களுடைய நட்புறவு வலுவானதாக இருந்தது; ஏனெனில் அன்பு, உண்மைப் பற்றுறுதி, அனுதாபம், தயவு, சுயதியாக மனப்பான்மை போன்ற பண்புகளின் அடிப்படையில் அது இருந்தது. மிக முக்கியமாக, யெகோவாவுக்குச் சேவை செய்து அவருடைய வணக்கத்தாளாய் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் அது இருந்தது. உண்மை வணக்கத்தாரோடு தூய நட்பை வளர்த்துக்கொள்வதற்கு நமக்கும்கூட சிறந்த வாய்ப்புகள் உள்ளன.
2:15-17. அதிகம் கஷ்டப்படாமல் கதிர் பொறுக்குவதற்கு போவாஸ் வழி செய்து கொடுத்தபோதிலும் ரூத் “சாயங்கால மட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள்.” அவள் ஒரு கடின உழைப்பாளி என்பதை இது காட்டுகிறது. ஒரு கிறிஸ்தவர் கடின உழைப்பாளி என்ற பெயர் பெற்றிருக்க வேண்டும்.
2:19-22. நகோமியும் ரூத்தும் சாயங்கால வேளைகளில் நன்கு உரையாடி மகிழ்ந்தனர். இளையவளான ரூத்தின் வேலைகளைப் பற்றியெல்லாம் முதியவளான நகோமி அக்கறையோடு விசாரித்தறிந்தாள், அவர்கள் இருவரும் தங்களுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்து கொண்டனர். கிறிஸ்தவ குடும்பங்களிலும் இதேவிதமாய் இருக்க வேண்டாமா?
2:22, 23. யாக்கோபுவின் மகள் தீனாளைப் போல் அல்லாமல், ரூத்தோ யெகோவாவை வணங்குவோருடைய கூட்டுறவை நாடினாள். இது நமக்கு எப்பேர்ப்பட்ட அருமையான முன்மாதிரி!—ஆதியாகமம் 34:1, 2; 1 கொரிந்தியர் 15:33.
நகோமி ‘நிறைவுள்ளவளாக’ ஆகிறாள்
நகோமி பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாத மூதாட்டியாக இருந்தாள். ஆகவே தனக்குப் பதிலாக மீட்பதற்கு உரிமை உடையவரை மணம் முடிக்கும்படி, அதாவது மைத்துனன் விவாகத்தின் மூலம் மணம் முடிக்கும்படி ரூத்திடம் சொல்கிறாள். நகோமியின் அறிவுரைப்படி ரூத், மீட்கும் உரிமை உடைய போவாசிடம் தன்னை மணம் முடிக்கும்படி கேட்கிறாள். அவர் அதற்கு ஒத்துக்கொள்ள தயாராகவே இருந்தாலும், அவரைவிட நெருங்கிய உறவினர் ஒருவர் இருக்கிறார். எனவே முதலாவது அவருக்கு அந்த வாய்ப்பை அளிக்க தீர்மானிக்கிறார்.
போவாஸ் இந்தக் காரியத்தை இழுத்தடிக்காமல் உடனடியாகச் சரிசெய்கிறார். மறுநாளே பெத்லெகேமிலுள்ள பத்து மூப்பரை வரவழைக்கிறார். அவர்களுக்கு முன்பாக, ரூத்தை மீட்பதற்கு தயாரா என அந்த உறவினரிடம் கேட்கிறார். அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். அப்போது, போவாஸ் மீட்கும் உரிமை உடையவராக செயல்பட்டு ரூத்தை மணம் முடிக்கிறார். அவர்களுக்கு மகன் பிறக்கிறான். அவரே தாவீது ராஜாவின் தாத்தாவான ஓபேத். பெத்லெகேம் பெண்கள் இப்போது நகோமியைப் பார்த்து, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; . . . அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்; உன்னைச் சிநேகித்து, ஏழு குமாரரைப் பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே” என்கிறார்கள். (ரூத் 4:14, 15) பெத்லெகேமுக்கு ‘வெறுமையாய் திரும்பி வந்த’ நகோமி மீண்டும் ‘நிறைவுள்ளவளாக’ ஆகிறாள்.—ரூத் 1:21.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
3:11—“குணசாலி” என்ற பெயர் ரூத்துக்கு எப்படி கிடைத்தது? ‘மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பை’ பார்த்து மற்றவர்கள் ரூத்தைப் புகழவில்லை. மாறாக, ‘இருதயத்தில் மறைந்திருக்கிற குணத்தை,’ அதாவது அவளுடைய உண்மைப் பற்றுறுதி, அன்பு, மனத்தாழ்மை, கடின உழைப்பு, சுயதியாக மனப்பான்மை ஆகியவற்றைப் பார்த்தே அவர்கள் புகழ்ந்தனர். ரூத்தைப் போல் நல்ல பெயரெடுக்க விரும்பும் தேவபயமுள்ள எந்தப் பெண்ணும் இக்குணங்களை வளர்த்துக்கொள்ள முயல வேண்டும்.—1 பேதுரு 3:3, 4; நீதிமொழிகள் 31:28-31.
3:14—ரூத்தும் போவாசும் பொழுது புலருவதற்குள் ஏன் எழுந்து விட்டார்கள்? இரவில் ஏதோ தகாத விதமாக நடந்துகொண்டதாலும் அதை மூடி மறைக்க விரும்பியதாலும் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மைத்துனனை மணம் முடிக்க உரிமையுள்ள ஒரு பெண் வழக்கப்படி என்ன செய்தாளோ அதையே ரூத்தும் செய்தாள். அதோடு நகோமியின் அறிவுரைப்படி அவள் நடந்துகொண்டாள். அதுமட்டுமல்ல, ரூத்தின் செயலில் எந்தக் குற்றத்தையும் போவாஸ் காணவில்லை என்பதை அவர் நடந்துகொண்ட விதம் தெளிவாகக் காட்டுகிறது. (ரூத் 3:2-13) வீண் வதந்தியை யாரும் கிளப்பி விடக்கூடாது என்பதற்காகவே ரூத்தும் போவாசும் பொழுது புலருவதற்குள் எழுந்து விட்டார்கள்.
3:15—ரூத்துக்கு ஆறு படி வாற்கோதுமையை போவாஸ் கொடுத்தது எதற்கு அடையாளமாக இருந்தது? ஆறு வேலை நாட்களுக்குப் பிறகு இளைப்பாறுதலுக்குரிய நாள் வருவது போல, ரூத் இளைப்பாறுவதற்கான நாளும் சீக்கிரத்தில் வரவிருந்ததை இது அர்த்தப்படுத்தியிருக்கலாம். கணவருடைய வீட்டிலே ‘இளைப்பாறுவதற்கு ஓர் இடம்’ ரூத்துவுக்கு கிடைக்கும் என்பதை இதன் மூலம் போவாஸ் உறுதிப்படுத்தியிருக்கலாம். (ரூத் 1:9, NW; 3:1, NW) ஒருவேளை, ஆறு படி வாற்கோதுமையை மட்டுமே ரூத்தால் தன் தலையில் தூக்கிச் செல்ல முடிந்ததாலும் போவாஸ் அவ்வாறு கொடுத்திருக்கலாம். சில ஆதாரங்கள் காட்டுகிறபடி இந்த ஆறு படி வாற்கோதுமை 44 லிட்டருக்குச் சமம்.
3:16—மூல எபிரெயப் பதிவின்படி, “என் மகளே, நீ யார்?” என்று ரூத்திடம் நகோமி கேட்டாள். ஏன் அப்படிக் கேட்டாள்? தன் மருமகளை அவளுக்கு அடையாளம் தெரியாமல் போய்விட்டதா? ரூத் வீடு திரும்பியபோது இன்னும் இருட்டாகவே இருந்திருக்கலாம், அதனால் ஒருவேளை நகோமியால் அவளை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போயிருக்கலாம். அதே சமயத்தில், மீட்டுக்கொள்ளப் போகிறவர் சம்பந்தமாக ரூத்துவின் புதிய ஸ்தானத்தைப் பற்றி தெரிந்துகொள்ள நகோமி அப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்கலாம்.
4:6—ஒருவர் ஒன்றை மீட்டுக்கொள்கையில் தன் சுதந்தரத்தை எப்படி “கெடுக்க” முடியும்? முதலாவதாக, வறுமையின் காரணமாக விற்கப்பட்ட நிலத்தை ஒருவர் மீட்டுக்கொள்கையில், அடுத்த யூபிலி வரையுள்ள வருடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அந்த நிலத்திற்கான விலையைக் கணக்கிட்டு அதை வாங்குவார். (லேவியராகமம் 25:25-27) அவ்வாறு செய்வது அவருக்கு ஏற்கெனவே உள்ள சொத்தின் மதிப்பைக் குறைத்துவிடும். அதுமட்டுமல்ல, ரூத்துக்கு ஒரு மகன் பிறந்தால் அந்த நிலம் மீட்டுக்கொள்பவரின் நெருங்கிய உறவினருக்குப் பதிலாக அந்த மகனுக்கே போய் சேரும்.
நமக்குப் பாடம்:
3:12; 4:1-6. யெகோவாவின் ஏற்பாட்டை போவாஸ் மனசாட்சிப்பூர்வமாக பின்பற்றினார். நாம் தேவராஜ்ய முறைமைகளை மனசாட்சிக்குப் பயந்து பின்பற்றுகிறோமா?—1 கொரிந்தியர் 14:40.
3:18. நகோமிக்கு போவாசின் மீது உறுதியான நம்பிக்கை இருந்தது. உண்மையுள்ள சக விசுவாசிகள் மீது நமக்கும் இதே போன்ற உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டாமா? மைத்துனன் விவாக முறைப்படி தனக்கு அறிமுகமில்லாத ஒருவரை மணம் முடிக்க ரூத் மனமுள்ளவளாக இருந்தாள்; அவருடைய பெயர் பைபிளில் குறிப்பிடப்படவில்லை. (ரூத் 4:1) ஏன்? ஏனென்றால் கடவுளுடைய ஏற்பாட்டில் அவளுக்கு திட நம்பிக்கை இருந்தது. நமக்கும் இதே விதமான நம்பிக்கை இருக்கிறதா? உதாரணமாக, ஒரு மணத் துணையைத் தேடுகையில் ‘கர்த்தருக்குட்பட்டவரை மட்டுமே’ மணம் முடிக்க வேண்டும் என்ற ஆலோசனைக்குக் கீழ்ப்படிகிறோமா?—1 கொரிந்தியர் 7:39.
4:13-16. ரூத் ஒரு மோவாபிய பெண்ணாக முன்பு கேமோஷ் என்ற தெய்வத்தை வணங்குபவளாக இருந்தபோதிலும், எப்பேர்ப்பட்ட பாக்கியத்தைப் பெற்றாள்! இது “விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்” என்ற நியமத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.—ரோமர் 9:16.
‘ஏற்ற காலத்திலே தேவன் உயர்த்துவார்’
ரூத் புத்தகம் யெகோவாவை, உண்மை ஊழியர்களின் சார்பாகச் செயல்படுகிற, அன்புள்ள தயவுடைய கடவுளாக சித்தரிக்கிறது. (2 நாளாகமம் 16:9) ரூத் பெற்ற ஆசீர்வாதத்தைப் பற்றி நாம் சிந்திக்கையில், விசுவாசத்தில் எள்ளளவும் சந்தேகமில்லாமல், கடவுள் ‘உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும்’ நம்புவதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம்.—எபிரெயர் 11:6.
ரூத்தும் நகோமியும் போவாசும் யெகோவாவின் ஏற்பாட்டில் முழு நம்பிக்கை வைத்தார்கள், அதனால் பலனளிக்கப்பட்டார்கள். அவ்வாறே, ‘அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடப்பிக்கிறார்.’ (ரோமர் 8:28) அப்படியானால் அப்போஸ்தன் பேதுருவின் இந்த ஆலோசனையை நாம் மனதில் கொள்வோமாக: “ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.”—1 பேதுரு 5:6, 7.
[பக்கம் 26-ன் படம்]
நகோமியை ரூத் ஏன் ஒதுக்கிவிடவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா?
[பக்கம் 27-ன் படம்]
“குணசாலி” என்ற பெயர் ரூத்துக்கு எப்படி கிடைத்தது?
[பக்கம் 28-ன் படம்]
“செய்கைக்குத்தக்க” என்ன “பலனை” யெகோவாவிடமிருந்து ரூத் பெற்றாள்?