வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
தாவீதும் அவரைச் சேர்ந்தவர்களும் தேவ சமூகத்து அப்பங்களைச் சாப்பிட்டது, இக்கட்டான சூழ்நிலையில் கடவுளுடைய சட்டத்தை மீறினால் தண்டிக்கப்பட மாட்டோம் என்பதை அர்த்தப்படுத்துகிறதா?—1 சாமுவேல் 21:1-6.
லேவியராகமம் 24:5-9-ன்படி, ஒவ்வொரு ஓய்வுநாளின் போதும் தேவ சமூகத்து அப்பங்கள் மாற்றப்பட்டன, அவை ஆசாரியர்கள் சாப்பிடுவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டன. இதன் நியமம் என்னவெனில், அந்த அப்பங்கள் பரிசுத்தமானவையாக இருந்ததால், கடவுளுடைய சேவையை செய்து வந்தவர்களுக்கு, அதாவது ஆசாரியர்களுக்கு அவை உணவாக இருக்க வேண்டும். சாதாரண வேலையாட்களுக்கு அவற்றைக் கொடுப்பதோ வெறுமனே இன்பத்திற்காக அவற்றை புசிப்பதோ நிச்சயமாகவே தவறாக இருந்தது. என்றபோதிலும், ஆசாரியனாகிய அகிமெலேக் பரிசுத்த அப்பத்தை தாவீதுக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் கொடுத்ததில் எந்தப் பாவமும் இருக்கவில்லை.
சவுல் ராஜா கொடுத்த ஒரு விசேஷ நியமிப்பை தாவீது நிறைவேற்றிக் கொண்டிருந்ததாக தோன்றியது. தாவீதும் அவரைச் சேர்ந்தவர்களும் அதிக பசியோடிருந்தார்கள். அவர்கள் சடங்காச்சார முறைப்படி சுத்தமாக இருக்கிறார்கள் என்பதை அகிமெலேக் உறுதிப்படுத்திக் கொண்டார். நுணுக்கமாக பார்க்கையில், தேவ சமூகத்து அப்பங்களை அவர்கள் சாப்பிட்டது சட்டவிரோதமாக இருக்கலாம்; ஆனால், அது பரிசுத்த அப்பங்களைப் பயன்படுத்தும் முறைக்கு இசைவாகவே இருந்தது. இந்தக் காரணமே அந்த சட்டத்துக்கு விதிவிலக்கை ஏற்படுத்த அகிமெலேக்கை அனுமதித்தது. இயேசு கிறிஸ்துகூட, ஓய்வுநாள் சட்டத்தை பரிசேயர்கள் அளவுக்குமீறிய கண்டிப்புடன் கடைப்பிடித்தது சரியானதல்ல என்பதை விளக்குவதற்கு இச்சம்பவத்தைப் பயன்படுத்தினார்.—மத்தேயு 12:1-8.
ஆனால் இக்கட்டான சூழ்நிலையில் கடவுளுடைய சட்டத்தை மீறலாமென இது அர்த்தப்படுத்துவதில்லை. உதாரணமாக, இஸ்ரவேல் போர்வீரர்கள் பெலிஸ்தரை எதிர்த்து போரிடுகையில், கடினமாகத் தோன்றிய ஒரு சூழ்நிலையைச் சந்தித்தார்கள். “நான் என் சத்துருக்கள் கையிலே பழிவாங்க வேண்டும், சாயங்காலமட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ, அவன் சபிக்கப்பட்டவன்” என்று சவுல் ராஜா ஆணையிட்டிருந்தார். பைபிள் இவ்வாறு கூறுகிறது: ‘அவர்கள் அன்றைய தினம் பெலிஸ்தரை முறிய அடித்தார்கள்.’ வீரர்கள் அனைவரும் போரினால் மிகவும் களைத்துப் போய், பசியாயிருந்தார்கள். ‘அப்பொழுது ஜனங்கள் விலங்குகளை பிடித்து, தரையிலே போட்டு அடித்து இரத்தத்தோடு புசித்தார்கள்.’ (1 சாமுவேல் 14:24, 31-33) இப்படியாக, இரத்தம் சம்பந்தமாக யெகோவா கொடுத்திருந்த கட்டளையை மீறி அவருக்கு விரோதமாக பாவம் செய்தார்கள். ‘பாவநிவிர்த்தி செய்வதற்காக’ மட்டுமே இரத்தத்தைப் பயன்படுத்த வேண்டுமென்ற அவருடைய கட்டளைக்கு இசைவாக அவர்களுடைய செயல்கள் இருக்கவில்லை. (லேவியராகமம் 17:10-12; ஆதியாகமம் 9:3, 4) பாவம் செய்தவர்களுக்காக விசேஷ பலி செலுத்தப்பட்டபோது யெகோவா அவற்றை இரக்கத்தோடு ஏற்றுக்கொண்டார்.—1 சாமுவேல் 14:34, 35.
ஆம், எல்லா சூழ்நிலையிலும் தம்முடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கிறார். அப்போஸ்தலனாகிய யோவான் இவ்வாறு கூறுகிறார்: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்.”—1 யோவான் 5:3.
[பக்கம் 30-ன் படம்]
சமூகத்து அப்பங்கள் புதிதாக ஒவ்வொரு ஓய்வுநாளின் போதும் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் வைக்கப்பட்டன