உயிர்த்தெழுதல் நம்பிக்கை—உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?
“நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.” —சங்கீதம் 145:16.
1-3. எதிர்காலத்தைக் குறித்து சிலருக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? உதாரணம் தருக.
ஒன்பது வயது கிறிஸ்டோஃபரும் அவனுடைய அண்ணனும், அவர்களுடைய அங்கிள், ஆண்ட்டி, இரண்டு பிள்ளைகளுடன் சேர்ந்து இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் அருகே வீட்டுக்கு வீடு ஊழியத்தில் காலைப்பொழுதை செலவிட்டார்கள். அவர்களுக்கு என்ன சம்பவித்தது என்பதை நமது துணைப் பத்திரிகையான விழித்தெழு! விளக்கியது: “மதியம், அவர்கள் எல்லோரும் அருகிலிருந்த கடலோர சுற்றுலாத் தலமான பிளாக்பூலைச் சுற்றிப்பார்க்கச் சென்றார்கள். ஆனால் பரிதாபகரமாக, சாலை விபத்தில் பலியானார்கள்; அவர்கள் ஆறு பேரையும் சேர்த்து மொத்தம் 12 பேர் அந்த விபத்தில் பலியானது ‘ஒரு கோர சம்பவம்’ என போலீசார் விவரித்தனர்.”
2 அந்த விபத்து நடப்பதற்கு முந்தைய இரவு அந்தக் குடும்பத்தார் சபை புத்தகப் படிப்பில் கலந்து கொண்டிருந்தனர். அங்கு கலந்தாலோசிக்கப்பட்ட விஷயம் மரணத்தைப் பற்றியதாகும். அவனுடைய அப்பா இவ்வாறு கூறினார்: “கிறிஸ்டோபர் எதையுமே நன்கு யோசித்துத்தான் செய்வான். அன்றைக்கு ராத்திரி, புதிய உலகத்தையும் தன் எதிர்கால நம்பிக்கையையும் பற்றி அவன் தெளிவாகப் பேசினான். பிறகு திடீரென்று இப்படிச் சொன்னான்: ‘யெகோவாவின் சாட்சியாக இருப்பதில் ஒரு நன்மை என்னவென்றால், நமக்கு சாவு வந்தால்கூட, நாம் ஒருவரையொருவர் இந்தப் பூமியில் ஒருநாள் திரும்பவும் பார்ப்போம் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.’ அந்த வார்த்தைகள் இந்தளவுக்கு எங்கள் மனதில் பதிந்துவிடுமென்று நாங்கள் யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.”a
3 பல வருடங்களுக்கு முன், 1940-ல் ஆஸ்திரியாவைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சியான ஃப்ரான்ஸ் என்பவர் யெகோவாவின் வணக்கத்தை மறுதலிக்காததால் அவர் தலை துண்டிக்கப்பட வேண்டுமென்று தீர்ப்பளிக்கப்பட்டது. மரண தண்டனை பெறுவதற்கு முன், பெர்லின் தடுப்புக் காவல் மையத்திலிருந்து தன்னுடைய அம்மாவுக்கு இவ்வாறு எழுதினார்: “ஒருவேளை நான் [ராணுவ] உறுதிமொழியை எடுத்திருந்தால் கொடிய பாவத்தை செய்பவனாக ஆகியிருப்பேன். அது எனக்குக் கேடுதான் விளைவித்திருக்கும், உயிர்த்தெழுதல் வாய்ப்பே இருந்திருக்காது. . . . எனக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறதென இன்று என்னிடம் சொன்னார்கள். என் அருமை அம்மா மற்றும் சகோதர சகோதரிகளே, கலங்காதீர்கள். அது மரண தண்டனை, நாளை காலையில் நான் கொல்லப்படுவேன். அந்தக் காலத்திலிருந்த உண்மை கிறிஸ்தவர்களுக்கு கடவுள் எப்போதும் சக்தி கொடுத்தது போல எனக்கும் இப்போது கொடுக்கிறார். . . . நீங்களும்கூட சாகும்வரை உறுதியோடு இருந்தால், உயிர்த்தெழுதலில் நாம் மறுபடியும் சந்திக்கலாம். . . . அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.”b
4. இங்கே விவரிக்கப்பட்டுள்ள அனுபவங்களை வாசித்ததும் எப்படி உணர்ந்தீர்கள், அடுத்ததாக எதைக் குறித்து நாம் சிந்திப்போம்?
4 கிறிஸ்டோஃபருக்கும் ஃப்ரான்ஸுக்கும் உயிர்த்தெழுதலில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அது அவர்களுக்கு நிஜமானதாக இருந்தது. அவர்களைப் பற்றிய இந்தப் பதிவுகள் உண்மையிலேயே நம் நெஞ்சைத் தொடுகின்றன! ஆகவே, உயிர்த்தெழுதல் ஏன் நடக்கும் என்பதையும், தனிப்பட்ட விதமாக அது நம் மீது எவ்வாறு செல்வாக்கு செலுத்த வேண்டும் என்பதையும் இப்போது நாம் சிந்திக்கலாம். இது யெகோவா மீதுள்ள நம்முடைய போற்றுதலை அதிகரிக்கவும், உயிர்த்தெழுதலில் நம்முடைய நம்பிக்கையைப் பலப்படுத்தவும் உதவி செய்யும்.
பூமிக்குரிய உயிர்த்தெழுதலைப் பற்றிய தரிசனம்
5, 6. வெளிப்படுத்துதல் 20:12, 13-ல் அப்போஸ்தலனாகிய யோவான் பதிவு செய்துள்ள தரிசனம் எதை வெளிப்படுத்துகிறது?
5 கிறிஸ்து இயேசுவின் ஆயிரவருட ஆட்சியில் நடக்கப்போகும் சம்பவங்களைப் பற்றிய தரிசனத்தில் பூமிக்குரிய உயிர்த்தெழுதல் நடைபெறுவதை அப்போஸ்தலனாகிய யோவான் கண்டார். “மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் . . . நிற்கக் கண்டேன்,” “சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் [“ஹேடீஸும்,” NW] தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன” என்று அவர் சொன்னார். (வெளிப்படுத்துதல் 20:12, 13) மனிதவர்க்கத்தின் பொதுப் பிரேதக்குழியான ஹேடீஸில் (ஷியோலில்) சிறைப்படுத்தப்பட்டிருக்கும் ‘சிறியோரும்’ சரி, ‘பெரியோரும்’ சரி—அதாவது எப்பேர்ப்பட்ட அந்தஸ்தைச் சேர்ந்தவர்களும் சரி—விடுவிக்கப்படுவார்கள். கடலில் தங்கள் உயிரை இழந்தவர்களும்கூட அப்போது உயிரடைவார்கள். இந்த அற்புதமும்கூட யெகோவாவுடைய ஒரு நோக்கமாக இருக்கிறது.
6 கிறிஸ்து ஆயிரவருட ஆட்சியை தொடங்கும்போது, சாத்தானைக் கட்டி அபிஸிற்குள் அடைத்துவிடுவார். பிறகு, உயிர்த்தெழுப்பப்படுபவர்களும் சரி மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைப்பவர்களும் சரி, யாருமே அந்த ஆட்சியில் சாத்தானால் மோசம்போக்கப்பட மாட்டார்கள். ஏனென்றால் அவன் செயலற்றவனாக இருப்பான். (வெளிப்படுத்துதல் 20:1-3) ஆயிரம் வருடங்கள் என்பது ஒரு நீண்ட காலப்பகுதி போல உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், யெகோவா உண்மையில் அதை ‘ஒரு நாள் போலவே’ கருதுகிறார்.—2 பேதுரு 3:8.
7. கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியில் நடைபெறும் நியாயத்தீர்ப்புக்கு எது அடிப்படையாக இருக்கும்?
7 தரிசனத்தில் காண்பிக்கப்பட்டது போல, கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சி நியாயத்தீர்ப்புக்குரிய ஒரு காலமாக இருக்கும். “மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக் கண்டேன். அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவ புஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். . . . யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்” என்று அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார். (வெளிப்படுத்துதல் 20:12, 13) ஒரு நபர் மரிப்பதற்கு முன்பாகச் செய்த அல்லது செய்யத் தவறிய காரியங்களின் அடிப்படையில் அந்த நியாயத்தீர்ப்பு நடைபெறவில்லை என்பதைக் கவனியுங்கள். (ரோமர் 6:7) மாறாக, இது எதிர்காலத்தில் திறக்கப்படப்போகிற ‘புஸ்தகங்களோடு’ சம்பந்தப்பட்டிருக்கிறது. அந்தப் புஸ்தகங்களிலுள்ள விஷயங்களைக் கற்றுக்கொண்ட பிறகு ஒரு நபர் என்ன காரியங்களைச் செய்கிறார் என்பதை வைத்தே அவருடைய பெயர் ‘ஜீவ புஸ்தகத்தில்’ எழுதப்படுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.
‘ஜீவனுக்கான உயிர்த்தெழுதல்’ அல்லது ‘நியாயத்தீர்ப்புக்கான உயிர்த்தெழுதல்’
8. இறந்தவர்கள் என்ன இரண்டு வகையான உயிர்த்தெழுதல்களைப் பெறுவார்கள்?
8 யோவானுடைய தரிசனத்தின் ஆரம்பத்தில் “மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய [“ஹேடீஸுக்குமுரிய,” NW] திறவுகோல்களை” உடையவராக இயேசு வர்ணிக்கப்படுகிறார். (வெளிப்படுத்துதல் 1:18) யெகோவாவின் ‘ஜீவாதிபதியாக’ சேவை செய்யும் அவர் “உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும்” நியாயந்தீர்ப்பதற்கு அதிகாரம் பெற்றிருக்கிறார். (அப்போஸ்தலர் 3:15; 2 தீமோத்தேயு 4:1) அவர் இதை எப்படி செய்வார்? மரணத்தில் நித்திரை செய்பவர்களை உயிர்த்தெழுப்புவதன் மூலமாகவே. இயேசு தமக்கு செவிகொடுத்துக் கொண்டிருந்தவர்களிடம் இவ்வாறு கூறினார்: “இதைக் குறித்து நீங்கள் வியப்படைய வேண்டாம்; ஏனெனில் காலம் வருகிறது, அப்போது ஞாபகார்த்த கல்லறைகளில் உள்ளவர்கள் அனைவரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள் . . . அப்பொழுது, நன்மை செய்தவர்கள் ஜீவனுக்கான உயிர்த்தெழுதலையும், தீமை செய்தவர்கள் நியாயத்தீர்ப்புக்கான உயிர்த்தெழுதலையும் பெறுவார்கள்.” (யோவான் 5:28-30, NW) அப்படியானால், பூர்வத்தில் வாழ்ந்த விசுவாசமிக்க ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்ன எதிர்கால நம்பிக்கை இருக்கிறது?
9. (அ) உயிர்த்தெழுந்து வருபவர்கள் எதைக் குறித்து நிச்சயம் கற்றுக்கொள்வார்கள்? (ஆ) என்ன பிரமாண்டமான வேலை நடைபெறப் போகிறது?
9 பூர்வத்தில் வாழ்ந்த விசுவாசமிக்கவர்கள் உயிர்த்தெழுந்து வரும்போது தாங்கள் நம்பியிருந்த வாக்குறுதிகள் நிஜமாகவே நிறைவேறியிருப்பதைக் கண்ணாரக் காண்பார்கள். ஆதியாகமம் 3:15-ல் உள்ள பைபிளின் முதல் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டுள்ள கடவுளுடைய ஸ்திரீயின் வித்து யார் என்பதைத் தெரிந்துகொள்வதில் அவர்கள் எவ்வளவு ஆர்வமாயிருப்பார்கள்! வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவான இயேசு மரணம்வரை உண்மையாயிருந்து, தம்முடைய உயிரை மீட்கும் பலியாக அளித்தார் என்பதை கேட்கையில் அவர்கள் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள்! (மத்தேயு 20:28) உயிர்த்தெழுந்து வருவோரை வரவேற்பவர்கள், இந்த மீட்கும் பலி ஏற்பாடு யெகோவாவுடைய தகுதியற்ற தயவின் வெளிக்காட்டாகவும் இரக்கத்தின் வெளிக்காட்டாகவும் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு உதவுவார்கள். பூமியைக் குறித்த யெகோவாவின் நோக்கத்தை அவரது அரசாங்கம் நிறைவேற்றி வருவதை உயிர்த்தெழுந்து வருபவர்கள் காணும்போது, அவர்களுடைய இருதயம் யெகோவாவுக்கான துதிகளால் பொங்கி வழியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அன்பான பரலோக தகப்பன் மீதும் அவருடைய மகன் மீதும் தாங்கள் வைத்திருக்கும் பற்றுறுதியை வெளிக்காட்ட அவர்களுக்குப் போதுமான வாய்ப்பு அப்போது இருக்கும். கல்லறையிலிருந்து திரும்பிவரும் கோடிக்கணக்கான ஆட்களும்கூட கடவுளுடைய மீட்கும் பலி ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆகவே, அப்போது உயிரோடிருக்கும் அனைவரும் உயிர்த்தெழுந்து வருவோருக்கு போதிக்க வேண்டிய ஒரு பிரமாண்டமான வேலையில் சந்தோஷமாக பங்குகொள்வார்கள்.
10, 11. (அ) பூமியிலுள்ள அனைவருக்கும் என்ன வாய்ப்புகளை ஆயிரவருட ஆட்சி அளிக்கப் போகிறது? (ஆ) இது நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
10 ஆபிரகாம் உயிர்த்தெழுந்து வரும்போது, தான் ஆவலோடு காத்திருந்த அந்த ‘நகரத்தின்’ ஆட்சியில் மெய்யான வாழ்க்கையை அனுபவிப்பதில் பெரிதும் ஆறுதலடைவார். (எபிரெயர் 11:10) விசுவாசப் பரீட்சைகளை எதிர்ப்பட்ட யெகோவாவின் மற்ற ஊழியர்களை, தனது வாழ்க்கைப் போக்கு எப்படிப் பலப்படுத்தியது என்பதை பூர்வத்தில் வாழ்ந்த உண்மையுள்ள யோபு அறியும்போது எவ்வளவு சந்தோஷப்படுவார்! ஆவியின் ஏவுதலால் தான் எழுதிய தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு தானியேல் எவ்வளவு ஆர்வமாக இருப்பார்!
11 சொல்லப்போனால், உயிர்த்தெழுந்து வருபவர்களும் சரி மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிப்பிழைப்பவர்களும் சரி, நீதியான புதிய உலகில் வாழப்போகிற அனைவருமே, பூமிக்கும் அதன் குடிமக்களுக்கும் யெகோவா வைத்திருக்கும் நோக்கத்தைப் பற்றி நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்வார்கள். என்றென்றும் வாழ்கிற எதிர்பார்ப்பும், யெகோவாவை நித்தியமாகத் துதிக்கும் எதிர்பார்ப்பும் ஆயிரவருட போதனா திட்டத்தை நிச்சயமாகவே மகிழ்ச்சிக்குரியதாக ஆக்கும். என்றாலும், புஸ்தக சுருள்களிலிருந்து கற்றுக்கொள்கிற விஷயங்களைத் தனிப்பட்ட விதமாக நாம் என்ன செய்வோம் என்பதே அதிமுக்கியமாக இருக்கும். அவற்றைக் கடைப்பிடிப்போமா? சத்தியப் பாதையிலிருந்து நம்மை வழிவிலகச் செய்வதற்கு சாத்தான் எடுக்கப்போகும் கடைசி முயற்சியை தவிடுபொடியாக்குவதற்கு நம்மைப் பலப்படுத்தும் மிக முக்கியமான அந்த விஷயங்களைத் தியானித்து அதன்படி நடப்போமா?
12. கல்வி புகட்டும் வேலையிலும், பூமியைப் பரதீஸாக்கும் வேலையிலும் முழுமையாகப் பங்கேற்க ஒவ்வொருவருக்கும் எது உதவும்?
12 கிறிஸ்துவுடைய மீட்கும் பலியினால் வரும் நன்மைகளைப் பொருத்துவதன் மூலம் கிடைக்கிற மிகச் சிறந்த ஆசீர்வாதங்களை நாம் மறந்துவிடக் கூடாது. இப்போதிருக்கும் குறைபாடுகள், பலவீனங்கள் எதுவுமே உயிர்த்தெழுந்து வருவோரிடம் இருக்காது. (ஏசாயா 33:24) புதிய உலகில் வாழப்போகும் அனைவருக்கும் குறையற்ற உடலும் பூரண ஆரோக்கியமும் இருக்கப் போவதால், உயிர்த்தெழுந்து வரும் கோடிக்கணக்கானோருக்குக் கல்வி புகட்டும் வேலையில் அவர்களால் முழுமையாகப் பங்குகொள்ள முடியும். அதுமட்டுமல்ல, இந்தப் பூமியில் இதுவரை செய்யப்படாத ஒரு வேலையில், அதாவது யெகோவாவுக்குத் துதி சேர்க்கும் விதத்தில் இந்த முழு கிரகத்தையும் ஒரு பரதீஸாக மாற்றுகிற மிகப் பெரிய வேலையில், பங்குகொள்வார்கள்.
13, 14. கடைசி சோதனையின்போது சாத்தான் விடுவிக்கப்படுவதன் நோக்கம் என்ன, தனிப்பட்ட விதமாக நமக்கு என்ன சம்பவிக்கலாம்?
13 கடைசி சோதனைக்காக சாத்தானை அபிஸிலிருந்து விடுவிக்கையில், அவன் மறுபடியும் மனிதர்களை மோசம்போக்க முயலுவான். வெளிப்படுத்துதல் 20:7-9-ன்படி சாத்தானின் தீய செல்வாக்கிற்கு அடிபணிந்து ‘மோசம்போன ஜாதிகள்’ அல்லது ஜனத் தொகுதியினர் அனைவரும் அழிவுக்கேதுவாக நியாயந்தீர்க்கப்படுவார்கள். ‘வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப் போடும்.’ இவர்கள் ஆயிரவருட ஆட்சியின்போது உயிர்த்தெழுப்பப்பட்டவர்களாக இருந்தால், அது கண்டனத் தீர்ப்புக்கான உயிர்த்தெழுதலாக இருக்கும். மாறாக, உயிர்த்தெழுந்தவர்களில் உண்மையோடு நிலைத்திருப்பவர்கள் நித்திய ஜீவன் என்ற பரிசைப் பெறுவார்கள். ஆம், அவர்களுடைய உயிர்த்தெழுதல், ‘ஜீவனுக்கான உயிர்த்தெழுதலாக’ இருக்கும்.—யோவான் 5:29, NW.
14 உயிர்த்தெழுதல் நம்பிக்கை இப்போதேகூட நமக்கு எவ்வாறு ஆறுதல் அளிக்கலாம்? மிக முக்கியமாக, அதன் நன்மைகளை எதிர்காலத்தில் அனுபவிப்பதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்?
இப்போது கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
15. உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைப்பது இப்போதே எப்படி உதவியாக இருக்கும்?
15 அன்பான ஒருவரை சமீபத்தில் நீங்கள் மரணத்தில் இழந்திருக்கலாம். அந்தப் பேரிழப்பின் காரணமாக ஒருவேளை நீங்கள் பெரும் மாற்றங்களைச் செய்யப் போராடிக் கொண்டிருக்கலாம். அத்தகைய சமயத்தில், உயிர்த்தெழுதல் நம்பிக்கையால் உங்களுக்கு மன அமைதியும் பலமும் கிடைக்கிறது, சத்தியத்தை அறியாதவர்களுக்கோ அது கிடைப்பதில்லை. “நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை” என்று பவுல் தெசலோனிக்கேயர்களைத் தேற்றினார். (1 தெசலோனிக்கேயர் 4:13) புதிய உலகில் இருப்பது போலவும் உயிர்த்தெழுதல் நடைபெறுவதை பார்ப்பது போலவும் உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா? உங்களுடைய அன்பானவர்களை மறுபடியும் சந்திக்கும் அந்த எதிர்பார்ப்பைக் குறித்து தியானிப்பதன் மூலம் இப்போதே ஆறுதலைக் கண்டடையுங்கள்.
16. உயிர்த்தெழுதல் நடைபெறுகையில் நீங்கள் எப்படி உணர்வீர்கள்?
16 ஆதாமுடைய கலகத்தின் விளைவை தற்போது நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கலாம். ஒருவேளை கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கலாம். என்றாலும், புதிய உலகில் புதுத் தெம்போடும் பலத்தோடும் மறுபடியும் உயிர்த்தெழுந்து வருகிற சந்தோஷமான எதிர்பார்ப்பை மறந்துவிடுமளவுக்கு வேதனையிலேயே மூழ்கிப்போய் விடாதீர்கள். உயிர்த்தெழுகிற சமயத்தில், நீங்கள் கண்களைத் திறந்து பார்க்கும்போது உங்களை ஆவலோடு வரவேற்கக் காத்திருக்கும் சந்தோஷமான முகங்களைக் காண்பீர்கள். கடவுளுடைய அன்பான தயவுக்குக் கட்டாயம் அப்போது நீங்கள் நன்றி தெரிவிப்பீர்கள்.
17, 18. என்ன முக்கியமான இரண்டு பாடங்களை நாம் நினைவில் வைக்க வேண்டும்?
17 இதற்கிடையே, நாம் நினைவில் வைக்க வேண்டிய இரண்டு பாடங்களைக் கவனியுங்கள். முதல் பாடம், இப்போதே யெகோவாவுக்கு முழு இருதயத்தோடே சேவை செய்வது அவசியம். நமது எஜமானரான கிறிஸ்து இயேசுவைப் போல சுய தியாக வாழ்க்கை வாழ்வதன் மூலம் யெகோவாவையும் அயலாரையும் நேசிப்பதை வெளிக்காட்டுகிறோம். எதிர்ப்பு அல்லது துன்புறுத்தல் நம்முடைய பிழைப்பையோ சுதந்திரத்தையோ பறித்துக்கொண்டாலும், எவ்வித கஷ்டத்தின் மத்தியிலும் உண்மையோடு நிலைத்திருக்க நாம் தீர்மானித்திருக்கிறோம். விரோதிகள் நம்மை கொலை செய்துவிடுவதாக அச்சுறுத்தினாலும், உயிர்த்தெழுதல் நம்பிக்கை நமக்கு ஆறுதலையும் பலத்தையும் தந்து, யெகோவாவுக்கும் அவரது ராஜ்யத்துக்கும் உண்மையோடு நிலைத்திருக்க உதவுகிறது. ஆம், ராஜ்ய பிரசங்கிப்பு வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் நாம் காட்டுகிற பக்தி வைராக்கியம் நீதிமான்களுக்காக யெகோவா வைத்திருக்கும் நித்திய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள உதவுகிறது.
18 இரண்டாவது பாடம், நம்முடைய அபூரணத்தினால் வரும் சோதனைகளை நாம் எப்படி சமாளிக்கிறோம் என்பதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றிய அறிவும், யெகோவாவுடைய தகுதியற்ற தயவின்பேரில் போற்றுதலும் விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டுமென்ற நம்முடைய தீர்மானத்தை உறுதிப்படுத்துகின்றன. “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்” என்று அப்போஸ்தலனாகிய யோவான் எச்சரித்தார். “ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என்றார். (1 யோவான் 2:15-17) ‘மெய் வாழ்வோடு’ (NW) ஒப்பிடுகையில் இந்த உலகத்தின் பொருளாசை நம் கண்களுக்குக் கவர்ச்சியானதாகவே தெரியாது. (1 தீமோத்தேயு 6:17-19) ஒழுக்கக்கேட்டில் ஈடுபட தூண்டப்பட்டால், நாம் அதை உறுதியாக எதிர்ப்போம். அர்மகெதோனுக்கு முன் யெகோவாவுக்குப் பிரியமில்லாத வாழ்க்கை வாழ்ந்து மரிக்க நேரிட்டால், உயிர்த்தெழுதல் என்ற எதிர்பார்ப்பே நமக்கு இல்லாமல் போய்விடும் என்பதைக்கூட நாம் அறிவோம்.
19. எந்த மிகப் பெரிய பாக்கியத்தை நாம் மறக்கக் கூடாது?
19 எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவாவின் இருதயத்தை இன்றும் என்றும் சந்தோஷப்படுத்துகிற மிகப் பெரிய பாக்கியம் நமக்கு இருப்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. (நீதிமொழிகள் 27:11) மரணம் வரையிலோ அல்லது இந்தப் பொல்லாத உலகின் முடிவு வரையிலோ நாம் உண்மையோடு இருந்தால், சர்வலோக பேரரசுரிமையைப் பற்றிய விவாதத்தில் யெகோவாவின் சார்பாக நிலைநிற்கை எடுத்திருப்பதை நாம் அவருக்குக் காட்டுவோம். அப்போது, மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிப்பிழைத்தவர்களாக, அல்லது அற்புதமான விதத்தில் உயிர்த்தெழுப்பப்பட்டவர்களாக பரதீஸ் பூமியில் வாழ்வது எவ்வளவு இன்பமாயிருக்கும்!
நமது விருப்பங்களைத் திருப்தி செய்தல்
20, 21. உயிர்த்தெழுதலைக் குறித்து பதிலளிக்கப்படாத கேள்விகள் நமக்கு இருந்தாலும், உண்மையுடன் நிலைத்திருக்க நமக்கு எது உதவும்? விளக்கவும்.
20 உயிர்த்தெழுதலைப் பற்றிய இந்தக் கலந்தாலோசிப்பில் சில கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்படவில்லை. உதாரணத்திற்கு, இறந்துபோன மணமானவர்களுக்கு யெகோவா என்ன ஏற்பாடுகள் செய்வார்? (லூக்கா 20:34, 35) மக்கள் எந்த இடத்தில் இறந்தார்களோ அந்த இடத்திலிருந்துதான் உயிர்த்தெழுந்து வருவார்களா? உயிர்த்தெழுபவர்கள் தங்கள் குடும்பத்தார் வசிக்கும் இடங்களுக்கு அருகிலிருந்து எழுந்து வருவார்களா? போன்ற ஏராளமான கேள்விகள் பதிலளிக்கப்படாமலேயே உள்ளன. என்றாலும், எரேமியாவின் பின்வரும் வார்த்தைகளை நாம் மனதில் வைப்பது அவசியம்: “தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.” (புலம்பல் 3:25, 26) நமக்குப் பூரண திருப்தியளிக்கும் விதத்தில் நம்முடைய அனைத்து கேள்விகளுக்கும் யெகோவா உரிய வேளையில் பதிலளிப்பார். இதை எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியும்?
21 “நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்” என்று கடவுளுடைய ஆவியின் ஏவுதலால் சங்கீதக்காரன் கூறிய வார்த்தைகளை எண்ணிப் பாருங்கள். (சங்கீதம் 145:16) வயது ஆக ஆக, நம்முடைய விருப்பங்கள் மாறுகின்றன. குழந்தைகளாக இருக்கையில் விரும்பியவற்றை இப்போது நாம் விரும்புவதில்லை. நம்முடைய அனுபவங்களும் எதிர்பார்ப்புகளும் வாழ்க்கையைப் பற்றிய நம்முடைய கண்ணோட்டத்தையே மாற்றிவிடுகின்றன. என்றாலும், புதிய உலகில் நமக்கு எந்தவொரு நியாயமான விருப்பம் இருந்தாலும், யெகோவா அதை நிச்சயம் திருப்தி செய்வார்.
22. யெகோவாவைத் துதிப்பதற்கு நமக்கு ஏன் நல்ல காரணம் இருக்கிறது?
22 உண்மையுடன் நிலைத்திருப்பதுதான் இப்போது நம் ஒவ்வொருவருக்கும் முக்கியமாக இருக்கிறது. “உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.” (1 கொரிந்தியர் 4:2) கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய மகத்தான நற்செய்திக்கு நாம் அனைவரும் உக்கிராணக்காரர்களாக, அதாவது பொறுப்பாளிகளாக இருக்கிறோம். நாம் சந்திக்கிற அனைத்து நபர்களிடமும் ஊக்கம் தளராமல் நற்செய்தியை அறிவிக்கும்போதுதான் ஜீவனுக்குப் போகும் பாதையில் நம்மால் தொடர்ந்து செல்ல முடியும். “சமயமும் எதிர்பாராத சம்பவமும்” நம் அனைவரையும் தாக்கக்கூடும் என்ற உண்மையை ஒருபோதும் மறவாதிருப்போமாக. (பிரசங்கி 9:11, NW) எதிர்பாரா சம்பவங்களால் வரும் எவ்வித கவலையையும் சமாளிப்பதற்கு உயிர்த்தெழுதல் என்ற மகத்தான நம்பிக்கையை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சி தொடங்குவதற்கு முன் நீங்கள் மரித்துவிடுவீர்கள் என்று தோன்றினால், மீட்பு நிச்சயம் என்பதை அறிந்து ஆறுதலடையுங்கள். யெகோவாவுடைய உரிய நேரத்தில், யோபுவைப் போல் நீங்களும் அவரிடம் இவ்வாறு கூறுவீர்கள்: “என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்.” எனவே, தம்முடைய நினைவிலுள்ள அனைவரையும் உயிர்த்தெழுப்ப ஆவலோடிருக்கும் யெகோவாவுக்கே எல்லா துதியும் சேரட்டும்!—யோபு 14:15.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட விழித்தெழு! ஜூலை 8, 1989, பக்கம் 10-ஐக் காண்க.
b யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் (ஆங்கிலம்), பக்கம் 662. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• ஆயிரவருட ஆட்சியின்போது, மக்கள் எதன் அடிப்படையில் நியாயந்தீர்க்கப்படுவார்கள்?
• ஏன் சிலர் ‘ஜீவனுக்கான உயிர்த்தெழுதலையும்,’ மற்றவர்கள் ‘நியாயத்தீர்ப்புக்கான உயிர்த்தெழுதலையும்’ பெறுவார்கள்?
• உயிர்த்தெழுதல் நம்பிக்கை இப்போதே நமக்கு எவ்வாறு ஆறுதல் அளிக்கலாம்?
• உயிர்த்தெழுதல் பற்றிய பதிலளிக்கப்படாத கேள்விகளைப் பொறுத்தவரை சங்கீதம் 145:16-ல் உள்ள வார்த்தைகள் நமக்கு எவ்வாறு உதவுகின்றன?
[பக்கம் 21-ன் படங்கள்]
உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைப்பது இப்போதே நமக்கு எவ்வாறு உதவி செய்யலாம்?