கணவன் மனைவிக்குள் தகராறுகள் வரும்போது
தெளிந்த எண்ணமுள்ள எந்தக் கணவனும் மனைவியும் சண்டை போட விரும்புவது கிடையாது, இருந்தாலும் இதெல்லாம் இந்த உலகத்தில் ரொம்ப சகஜம். இதற்கு ஓர் உதாரணம்: எரிச்சலூட்டுகிற மாதிரி ஏதாவதொன்றை ஒருவர் சொல்கிறார். உடனே சத்தம் ஏழு வீட்டுக்குக் கேட்கிறது, கோபம் தீப்பொறி போல் பறக்கிறது, குத்தலான பேச்சுகள் உணர்ச்சிப் பிழம்பாக பற்றியெரிகின்றன. பிறகு இருவரும் மௌன விரதம் எடுத்துக்கொள்கிறார்கள், துளிகூட வாய்திறக்க மாட்டார்கள் சில நாட்கள். நாளாக நாளாக கோபம் மெதுமெதுவாக தணிகிறது, ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார்கள். இப்பொழுது சமாதானம் ஆகிவிடுகிறார்கள்—இன்னொரு முறை தகராறு வரும் வரை.
புருஷன் பெண்ஜாதிக்குள் நடக்கும் சின்னச் சின்ன தகராறுகள் சின்னத்திரையில் வரும் கதைகளிலும் ஜோக்குகளிலும் இடம்பெறுகின்றன, ஆனால் நிஜ வாழ்க்கையில் இதெல்லாம் ஒரு வேடிக்கை அல்ல. சொல்லப்போனால், பைபிள் நீதிமொழி ஒன்று இவ்வாறு கூறுகிறது: “யோசனையற்ற வார்த்தைகள் பட்டயக் குத்துகள் போல் ஆழமாக காயப்படுத்திவிடலாம்.” (நீதிமொழிகள் 12:18, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) ஆம், கடுகடுப்பான பேச்சு உணர்ச்சிப்பூர்வ வடுக்களை ஏற்படுத்திவிடலாம், வாய்ச்சண்டை நின்று வெகு நாட்களுக்குப் பிறகும் அது தொடர்ந்திருக்கும். வாக்குவாதம் வன்முறைக்கும் வித்திடலாம்.—யாத்திராகமம் 21:18.
மனிதனுடைய அபூரணத்தன்மையால் மணவாழ்க்கையில் சில சமயங்கள் சண்டை சச்சரவுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதவையே. (ஆதியாகமம் 3:16; 1 கொரிந்தியர் 7:28) என்றாலும், அடிக்கடியும் தீவிரமாயும் வாய்ச்சண்டை போடுவதை சகஜமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தம்பதியர் ஒருவருக்கொருவர் சதா சண்டை போடுவது கடைசியில் விவாகரத்தில் போய் முடிவடையலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆகவே, நீங்களும் உங்களுடைய மணத் துணையும் மனஸ்தாபங்களை சமாதானமாக சரிசெய்ய கற்றுக்கொள்வது முக்கியம்.
சூழ்நிலையை ஆராய்தல்
உங்கள் மணவாழ்வில் எப்பொழுது பார்த்தாலும் வாய் தகராறுகள் ஏற்பட்டால், அவையெல்லாம் ஒரே மாதிரி இருக்கின்றனவா என்பதை கண்டுபிடியுங்கள். உதாரணமாக, நீங்களும் உங்களுடைய துணைவரும் ஏதாவதொரு விஷயத்தில் ஒத்துப்போகாத சமயத்தில் என்ன நடக்கிறது? அந்த உரையாடல் சட்டென்று திசைமாறி வசைமொழிகளும் குற்றச்சாட்டுகளும் பறக்கும் ஒன்றாக மாறிவிடுகிறதா? அப்படியானால், நீங்கள் என்ன செய்யலாம்?
முதலாவதாக, அந்தப் பிரச்சினைக்கு தனிப்பட்ட நபராக நீங்கள் எப்படி காரணமாக இருக்கிறீர்கள் என்பதை நேர்மையுடன் அலசி ஆராயுங்கள். நீங்கள் எளிதில் கோபாவேசப்படுபவரா? நீங்கள் இயல்பாகவே வாக்குவாதம் செய்பவரா? இந்த விஷயத்தில் உங்களைக் குறித்து உங்களுடைய துணை என்ன சொல்வார்? இந்தக் கடைசி கேள்வி சிந்திக்க வேண்டிய முக்கியமான கேள்வி, ஏனெனில் வாக்குவாதம் செய்வதென்றால் உண்மையிலேயே எது என்பதைக் குறித்து உங்களுக்கும் உங்களுடைய துணைக்கும் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம்.
உதாரணமாக, உங்களுடைய துணை சற்று கூச்ச சுபாவமுள்ளவர், ஆனால் நீங்களோ எதையும் மனந்திறந்து வெளிப்படையாக பேசிவிடுபவர், மிகவும் உணர்ச்சிவசப்படுபவர் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் சொல்லலாம்: “நான் வளர்ந்து வந்த சூழ்நிலையே அப்படித்தான், என் வீட்டிலுள்ள எல்லாருமே அப்படித்தான் பேசுவார்கள். அது வாக்குவாதமே கிடையாது!” ஒருவேளை உங்களுக்கு அது வாக்குவாதமாக தோன்றாமல் இருக்கலாம். ஆனால், அப்படி நீங்கள் ஒளிவுமறைவின்றி நேரடியாகப் பேசுவதைப் புண்படுத்துவதாகவும் தர்க்கம் செய்வதாகவும் இருக்கிறதென உங்களுடைய துணை உணரலாம். அப்படியானால், பேச்சுத்தொடர்பு கொள்வதில் உங்களுக்கும் உங்களுடைய துணைக்கும் மாறுபட்ட பாணி இருக்கிறது என்பதை அறிந்திருப்பதே மனஸ்தாபங்களைப் போக்குவதற்கு உதவும்.
வாக்குவாதம் செய்வதென்றால் எப்பொழுதும் கத்திப் பேசுவதுதான் என நினைத்துக் கொள்ளாதீர்கள். கிறிஸ்தவர்களுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “சகலவிதமான . . . கூக்குரலும், தூஷணமும், . . . உங்களைவிட்டு நீங்கக்கடவது.” (எபேசியர் 4:31) ‘கூக்குரலிடுதல்’ என்பது கத்திப் பேசுவதைக் குறிக்கிறது, அதேசமயத்தில் ‘தூஷணம்’ என்பது பேசப்படும் விஷயத்தைக் குறிக்கிறது. ஆகவே இந்தக் கோணத்தில் பார்த்தால், எரிச்சலூட்டும் விதமாகவோ அல்லது இழிவாகவோ பேசினால், மெல்லிய குரலில் பேசும் வார்த்தைகளும்கூட வாக்குவாதமாக இருக்கலாம்.
மேற்குறிப்பிடப்பட்டதை மனதிற்கொண்டு, உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகையில் அதை எப்படி சரிசெய்கிறீர்கள் என்பதை மறுபடியும் ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் வாக்குவாதம் செய்பவரா? நாம் பார்த்தபடி, இந்தக் கேள்விக்கு உண்மையான பதில் உங்களுடைய துணையின் அபிப்பிராயத்தையே பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. உங்களுடைய துணை எளிதில் புண்படக்கூடியவர் என்று சொல்லி அவருடைய அபிப்பிராயத்தை ஒதுக்கித் தள்ளுவதற்குப் பதிலாக, அவருடைய கண்ணோட்டத்தில் உங்களைப் பார்க்க முயலுங்கள், தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள். பவுல் இவ்வாறு எழுதினார்: “ஒவ்வொருவனும் தன் சுய பிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.”—1 கொரிந்தியர் 10:24.
“நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்துக் கவனியுங்கள்”
கருத்து வேறுபாடுகளைச் சரிப்படுத்துவதற்கு உதவும் மற்றொரு அம்சம் இயேசுவின் வார்த்தைகளில் காணப்படுகிறது; அதாவது, “நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்துக் கவனியுங்கள்” என அவர் கூறினார். (லூக்கா 8:18) உண்மைதான், மணவாழ்க்கையில் பேச்சுத்தொடர்பு கொள்வதைப் பற்றி இயேசு இங்கே சொல்லவில்லை. என்றாலும், அதிலுள்ள நியமம் இதற்குப் பொருந்துகிறது. உங்களுடைய துணை பேசும்போது நீங்கள் எந்தளவு செவிகொடுத்துக் கேட்கிறீர்கள்? உண்மையில் செவிகொடுக்கிறீர்களா இல்லையா? அல்லது உங்கள் துணை சொல்வதை முழுமையாக புரிந்துகொள்ளாமல் அதற்கு சட்டென்று ஏதாவது எளிய பரிகாரத்தைச் சொல்லி பேச்சை முடித்துவிடுகிறீர்களா? “காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 18:13) அப்படியானால், கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது, நீங்களும் உங்களுடைய துணையும் அந்த விஷயத்தைப் பற்றி நிதானமாக பேசி, ஒருவருக்கொருவர் செவிகொடுத்துக் கேட்க வேண்டும்.
உங்களுடைய துணையின் கருத்தை மட்டம் தட்டுவதற்குப் பதிலாக, ‘அனுதாபம்’ காட்ட முயலுங்கள். (1 பேதுரு 3:8, NW) மூல கிரேக்கில், இந்த வார்த்தை அடிப்படையில் மற்றொருவருடன் சேர்ந்து துன்பம் அனுபவிப்பதைக் குறிக்கிறது. ஆகவே, உங்களுடைய துணை ஏதாவதொன்றைக் குறித்து மனவேதனைப்பட்டால், நீங்களும் உங்களுடைய துணையின் உணர்ச்சிகளை உணர வேண்டும். அந்த விஷயத்தை அவருடைய அல்லது அவளுடைய நோக்குநிலையிலிருந்து பார்க்க முயலுங்கள்.
தேவ பக்தியுடைய ஈசாக்கு அப்படி செய்தார் என்பதில் சந்தேகமில்லை. ஒரு சமயம் அவருடைய மனைவி ரெபெக்காள் தனது மகன் யாக்கோபுவைக் குறித்து கவலைப்பட்ட ஒரு விஷயத்தைப் பற்றி பைபிள் கூறுகிறது. “ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன” என்று ஈசாக்கிடம் கூறினாள்.—ஆதியாகமம் 27:46.
ரெபெக்காள் ஏதோ கவலையில் விஷயங்களை மிகைப்படுத்திக் கூறினாள் என்பது உண்மைதான். நிஜமாக பார்த்தால், அவள் உண்மையிலேயே உயிரை வெறுத்தாளா? ஏத்தின் குமாரத்திகளில் ஒருத்தியை தனது மகன் மணமுடித்துக் கொண்டால் அவள் உண்மையிலேயே செத்துப்போய் விடுவாளா? ஒருவேளை அப்படி செய்ய மாட்டாள். என்றாலும், ரெபெக்காளின் உணர்ச்சிகளை ஈசாக்கு அசட்டை செய்யவில்லை. மாறாக, ரெபெக்காள் கவலைப்படுவதில் அர்த்தமிருப்பதை ஈசாக்கு உணர்ந்துகொண்டார், அதோடு அதற்கேற்ப செயல்பட்டார். (ஆதியாகமம் 28:1) ஒரு விஷயத்தைக் குறித்து உங்களுடைய துணை கவலைப்படும்போது நீங்களும் அவ்வாறே செய்யுங்கள். ஏதோ அற்ப விஷயமென கருதி ஒதுக்கித் தள்ளிவிடாமல், உங்களுடைய துணைக்கு செவிகொடுங்கள், அவருடைய அல்லது அவளுடைய கருத்துக்கு மதிப்புக்கொடுங்கள், அதோடு கரிசனையுடன் செயல்படுங்கள்.
செவிகொடுத்துக் கேட்பதும் உட்பார்வையும்
பைபிள் நீதிமொழி ஒன்று இவ்வாறு கூறுகிறது: “மனுஷனுடைய விவேகம் [அதாவது உட்பார்வை] அவன் கோபத்தை அடக்கும்.” (நீதிமொழிகள் 19:11) சூடாக வாக்குவாதம் செய்கையில், உங்களுடைய துணை சொல்லும் ஒவ்வொரு குத்தலான வார்த்தைக்கும் வெடுக் வெடுக்கென்று பதில் சொல்வது மிக எளிது. ஆனால், பொதுவாக வாக்குவாதம் முற்றுவதற்குத்தான் இது வழிநடத்தும். ஆகவே, உங்களுடைய துணை சொல்வதை செவிகொடுத்துக் கேட்கும்போது, சொல்லப்படும் வார்த்தைகளுக்கு மட்டுமல்ல ஆனால் அந்த வார்த்தைகளுக்குப் பின்னாலுள்ள உணர்ச்சிகளுக்கும் செவிசாய்க்க உறுதிபூண்டிருங்கள். இத்தகைய உட்பார்வை, உங்களுடைய துணை சொன்ன விஷயத்தால் நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டீர்கள் என்பதற்குக் கவனம் செலுத்தாமல், பிரச்சினையின் ஆணிவேரை கண்டுபிடிக்க உதவும்.
உதாரணமாக, “நீங்கள் என்னுடன் நேரமே செலவிடுவதில்லை!” என உங்களுடைய மனைவி சொல்வதாக வைத்துக்கொள்ளுங்கள். உடனே நீங்கள் எரிச்சலடைந்து, அலட்சியமாக ஏதாவது சொல்லி அந்தக் குற்றச்சாட்டை சரிக்கட்ட விரும்பலாம். “போன மாசம் ஒருநாள் பூராவும் உன்கூடத்தான் இருந்தேன்!” என நீங்கள் பதிலளிக்கலாம். ஆனால் நீங்கள் கூர்ந்து செவிசாய்த்தால், உங்கள் மனைவி கூடுதலான நிமிடத்தையோ மணிநேரத்தையோ உங்களிடம் கேட்கவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அதற்கு மாறாக, அவள் அசட்டை செய்யப்பட்டதைப் போல் அல்லது நேசிக்கப்படாததைப் போல் உணருவதால், நீங்கள் உறுதி அளிக்கும்படியே அவள் எதிர்பார்க்கிறாள்.
நீங்கள் ஒரு மனைவியாக இருக்கிறீர்கள் என்றால், சமீபத்தில் நீங்கள் சில பொருட்களை வாங்கியது உங்களுடைய கணவருக்குப் பிடிக்கவில்லையென வைத்துக்கொள்ளுங்கள். “இவ்வளவு பணத்தை செலவு செய்ய எப்படி உனக்கு மனசு வந்தது?” என்பதை நம்பவே முடியாமல் அவர் உங்களிடம் கேட்கிறார். குடும்பத்தின் வரவு செலவை அப்படியே பிட்டுப்பிட்டு வைப்பதற்கு அல்லது அவர் வாங்கிய பொருட்களை நீங்கள் வாங்கிய பொருட்களோடு ஒப்பிட்டுக் காட்டுவதற்கு நீங்கள் ஒருவேளை துடிக்கலாம். ஆனால் சற்று உட்பார்வை செலுத்தினால், எத்தனை ரூபாய் எத்தனை பைசா நீங்கள் செலவழித்தீர்கள் என்பதைப் பற்றி உங்களுடைய கணவர் கவலைப்படவில்லை என்பதை புரிந்துகொள்வீர்கள். மாறாக, அவரிடம் ஒரு வார்த்தைகூட கேட்காமல் ‘மெகா பர்ச்சேஸ்’ செய்ததே அவருக்குக் கவலையாக இருக்கலாம்.
ஆனால், எவ்வளவு நேரம் ஒன்றுசேர்ந்து செலவிடுவது, ‘பர்ச்சேஸ்’ செய்வதில் எப்படி ஒன்றுசேர்ந்து தீர்மானமெடுப்பது போன்றவற்றில் ஒவ்வொரு தம்பதியினருக்கும் வெவ்வேறு முறை இருக்கலாம். குறிப்பு என்னவென்றால், கருத்து வேறுபாடு வரும்போது உங்களுடைய கோபத்தை தணிப்பதற்கும் பிரச்சினைகளைச் சரிவர புரிந்துகொள்வதற்கும் உட்பார்வை உதவும். உணர்ச்சிவசப்பட்டு செயல்படுவதற்குப் பதிலாக, “கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்” என்று சொன்ன பைபிள் எழுத்தாளரான யாக்கோபின் புத்திமதியைப் பின்பற்றுங்கள்.—யாக்கோபு 1:19.
உங்கள் துணையிடம் பேசும்போது எப்படிப் பேசுகிறீர்கள் என்பது முக்கியம் என்பதை நினைவில் வையுங்கள். “ஞானிகளின் சொற்களோ புண்களை ஆற்றும்” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 12:18, பொது மொழிபெயர்ப்பு) உங்களுக்கும் உங்களுடைய துணைக்கும் இடையே கருத்து வேறுபாடு வரும்போது, உங்களுடைய வார்த்தைகள் புண்படுத்துகின்றனவா அல்லது ஆற்றுகின்றனவா? அவை முட்டுக்கட்டைகளைப் போடுகின்றனவா அல்லது சமாதானத்திற்குப் பாதை அமைக்கின்றனவா? நாம் ஏற்கெனவே பார்த்தபடி, கோபப்படுவதோ அல்லது உணர்ச்சிவசப்பட்டு பேசுவதோ சண்டையைத்தான் தூண்டும்.—நீதிமொழிகள் 29:22.
கருத்து வேறுபாடு முற்றி வாய்ச்சண்டையில் முடிவடைந்தால், முக்கிய பிரச்சினையைத் தீர்க்க இன்னும் அதிக முயற்சி எடுங்கள். கருத்து வேறுபாட்டிற்குரிய காரணத்தின் மீது கவனம் செலுத்துங்கள், அந்த நபரின் மீதல்ல. அதாவது யார் செய்தது சரி என்பதன் மீதல்ல, எது சரி என்பதன் மீது கவனம் செலுத்துங்கள். உங்களுடைய வார்த்தைகள் வாக்குவாதத்தைக் கிளறிவிடாதபடி கவனமாயிருங்கள். “கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 15:1) ஆம், உங்களுடைய துணையிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்குமா கிடைக்காதா என்பது நீங்கள் என்ன சொல்கிறீர்கள், அதை எப்படி சொல்கிறீர்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது.
தீர்ப்பதற்கு முயலுங்கள், வெல்வதற்கு அல்ல
கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கும்போது நம்முடைய இலக்கு வாக்குவாதத்தில் வெல்வது அல்ல ஆனால் சச்சரவைத் தீர்ப்பதே. எப்படி நீங்கள் தீர்வு காணலாம்? பைபிள் அறிவுரையைக் கண்டுபிடித்து அதை பொருத்திப் பயன்படுத்துவதே மிகச் சிறந்த வழி; இதில் முக்கியமாக கணவன்மார் முதற்படி எடுக்க வேண்டும். விவாதங்களை அல்லது பிரச்சினைகளைக் குறித்து சட்டென்று முடிவான அபிப்பிராயங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக, ஏன் அவற்றை யெகோவாவின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கக் கூடாது? அவரிடம் ஜெபியுங்கள், உங்களுடைய இருதயங்களையும் சிந்தைகளையும் காத்துக்கொள்ளும் தேவ சமாதானத்தை நாடுங்கள். (எபேசியர் 6:18; பிலிப்பியர் 4:6, 7) உங்களுடைய சொந்த விருப்பத்தை மட்டும் தேடாமல் உங்களுடைய துணையின் விருப்பத்தையும் தேட ஊக்கமாய் முயலுங்கள்.—பிலிப்பியர் 2:4.
மனக் காயங்களும் உள்ளக் குமுறல்களும் உங்களுடைய சிந்தைகளையும் செயல்களையும் ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பதே சூழ்நிலையை இன்னும் அதிக மோசமாக்கிவிடுகிறது. மறுபட்சத்தில், கடவுளுடைய வார்த்தை தரும் அறிவுரையை ஏற்று உங்களை சரிப்படுத்துவதற்கு மனமுள்ளவர்களாக இருந்தால், அது சமாதானத்திற்கும் இணக்கத்திற்கும் யெகோவாவின் ஆசீர்வாதத்திற்கும் வழிநடத்தும். (2 கொரிந்தியர் 13:11) ஆகவே, ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தால்’ வழிநடத்தப்படுங்கள், தேவ பக்திக்கேற்ற பண்புகளை வெளிப்படுத்துங்கள், ‘சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாக’ நன்மைகளை அறுவடை செய்யுங்கள்.—யாக்கோபு 3:17, 18.
சொல்லப்போனால், எல்லாருமே கருத்து வேறுபாடுகளை சமாதானமாக சரிசெய்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும், இதற்காக தனிப்பட்ட விருப்பங்களைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தாலும் அப்படி செய்ய வேண்டும். (1 கொரிந்தியர் 6:7) ‘கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். . . . பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு . . . புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.’—கொலோசெயர் 3:8-10.
ஆனால், சிலசமயங்களில், பின்னால் வருந்தக்கூடிய விஷயங்களை நீங்கள் வாய்தவறி சொல்லிவிடுவீர்கள். (யாக்கோபு 3:8) இப்படி நேரிட்டால், உங்களுடைய துணையிடம் மன்னிப்பு கேளுங்கள். கருத்து வேறுபாடுகளை சரிசெய்ய தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். காலப்போக்கில், நீங்களும் உங்களுடைய துணையும் நிறைய முன்னேற்றம் செய்திருப்பதைக் காண்பீர்கள்.
[பக்கம் 22-ன் பெட்டி/படம்]
சூடான வாக்குவாதத்தை தணிக்க மூன்று படிகள்
• உங்களுடைய துணை சொல்வதை செவிகொடுத்துக் கேளுங்கள்.—நீதிமொழிகள் 10:19
• அவருடைய அல்லது அவளுடைய கருத்துக்கு மதிப்புக் கொடுங்கள்.—பிலிப்பியர் 2:4
• அன்பான முறையில் செயல்படுங்கள்.—1 கொரிந்தியர் 13:4-7
[பக்கம் 23-ன் பெட்டி/படம்]
இப்போது நீங்கள் என்ன செய்யலாம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை உங்கள் மனைவியிடம்/கணவரிடம் கேளுங்கள், குறுக்கிடாமல் அவ(ளு)ருடைய பதில்களுக்குச் செவிகொடுங்கள். பிறகு உங்களுடைய மனைவியும்/கணவரும் இதே போல் உங்களிடம் கேட்கலாம்.
• வாக்குவாதம் பண்ணுகிற குணம் எனக்கிருக்கிறதா?
• மனந்திறந்து பேசும்போது நான் உண்மையிலேயே செவிகொடுத்துக் கேட்கிறேனா, அல்லது பேசி முடிப்பதற்கு முன்பு உணர்ச்சிவசப்பட்டு வெடுக்கென்று பேசிவிடுகிறேனா?
• என்னுடைய வார்த்தைகள் உணர்ச்சியற்றதாகவோ கோபமாகவோ தொனிக்கின்றனவா?
• நாம் பேச்சுத்தொடர்பு கொள்ளும் முறையில் முன்னேறுவதற்கு—முக்கியமாக ஏதாவதொரு விஷயத்தில் நாம் ஒத்துப்போகாதபோது—நாம் இருவருமே என்ன செய்யலாம்?
[பக்கம் 21-ன் படம்]
நீங்கள் செவிகொடுத்துக் கேட்கிறீர்களா?
[பக்கம் 22-ன் படம்]
“நான் அசட்டை செய்யப் பட்டவளாகவும் நேசிக்கப்படாத வளாகவும் உணருகிறேன்”
[பக்கம் 22-ன் படம்]
“நீங்கள் என்னுடன் நேரமே செலவிடுவதில்லை!”
[பக்கம் 22-ன் படம்]
“போன மாசம் ஒருநாள் பூராவும் உன்கூடத்தான் இருந்தேன்!”