வாழ்க்கை சரிதை
“இவ்வாழ்க்கை”—அதை முழுமையாக அனுபவித்தல்!
டெட் பக்கிங்ஹாம் சொன்னபடி
ஆறு வருடங்களாக முழுநேர ஊழியராகச் சேவை செய்து வந்திருந்தேன், ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகியிருந்தது, திடீரென ஒருவகை போலியோ நோய் (poliomyelitis) என்னைத் தாக்கியது. இது நடந்தது 1950-ல். அப்போது எனக்கு 24 வயதுதான் ஆகியிருந்தது. ஆஸ்பத்திரியில் ஒன்பது மாதங்கள் இருந்தபோது என் வாழ்க்கையைப் பற்றி ஆழ்ந்து யோசிக்க எனக்கு எக்கச்சக்கமான நேரம் கிடைத்தது. புதிதாகத் தலைதூக்கிய குறைபாடுகளுடன் எனக்கும் என் மனைவி ஜாய்ஸுக்கும் எதிர்காலம் எப்படி இருக்கும்?
மதத்தில் துளியும் ஈடுபாடில்லாத என் அப்பா 1938-ல் அரசாங்கம் என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கினார்.a அரசியல் கொந்தளிப்பாலும் போர் மூளுவதற்கான சாத்தியத்தாலும் அந்தப் புத்தகத்தை அவர் வாங்கியிருக்கலாம். எனக்குத் தெரிந்தவரை அவர் அப்புத்தகத்தைப் படிக்கவே இல்லை, ஆனால் மதப்பற்றுமிக்க என் அம்மா அதைப் படித்தார்கள். என்ன படித்தார்களோ அதன்படி உடனடியாக நடக்கவும் ஆரம்பித்தார்கள். சர்ச் ஆஃப் இங்லண்டிலிருந்து விலகினார்கள், என் அப்பா எதிர்த்தபோதிலும் யெகோவாவுக்கு உண்மையுள்ள சாட்சியாக ஆனார்கள், 1990-ல் இறக்கும்வரை உண்மையுடன் நிலைத்திருந்தார்கள்.
லண்டனின் தென் பகுதியில் எப்ஸம் என்ற நகரத்திலிருந்த ராஜ்ய மன்றத்துக்கு அம்மா என்னை அழைத்துச் சென்றார்கள், இதுதான் நான் கலந்துகொண்ட முதல் கிறிஸ்தவ கூட்டமாகும். ஒரு காலத்தில் கடையாக இருந்த இடத்தில் சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன, ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்த ஜே. எஃப். ரதர்ஃபர்டுடைய பேச்சை நாங்கள் கேட்டோம்; அவர் அந்தச் சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையை மேற்பார்வை செய்து வந்தார். அவருடைய பேச்சு என் மனதில் நீங்காத முத்திரையைப் பதித்தது.
லண்டன்மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் சரமாரியாக குண்டு மழை பொழிந்ததால் நிலைமை பெரும் ஆபத்தானதாய் இருந்தது. எனவே என் அப்பா 1940-ல் குடும்பத்தை இன்னும் பாதுகாப்பான இடத்திற்குக் குடிமாறினார்; அதாவது, லண்டனின் மேற்குப் பகுதியில், 45 கிலோமீட்டர் தூரத்திலிருந்த மெய்டன்ஹெட் என்ற சிறிய நகரத்திற்குக் குடிமாறினார். அதுவும் நல்லதுக்குத்தான்; அந்நகரில் 30 பேர் இருந்த அந்தச் சபை பெருமளவு புத்துணர்ச்சி அளித்தது. 1917-ல் முழுக்காட்டுதல் பெற்று, ஆன்மீகத்தில் திடகாத்திரமாயிருந்த ப்ரெட் ஸ்மித் என்பவர் எனக்கு ஆன்மீக அரவணைப்பை அளித்தார், இன்னும் திறம்பட்ட போதகனாவதற்குப் பயிற்சி அளித்தார். அவருடைய முன்மாதிரிக்கும், அன்பான உதவிக்கும் நான் ரொம்பவே கடமைப்பட்டிருக்கிறேன்.
முழுநேர ஊழியத்தில் கால் பதித்தல்
1941-ல், 15 வயதில், மார்ச் மாத குளிரில் தேம்ஸ் நதியில் முழுக்காட்டுதல் பெற்றேன். அதற்குள்ளாக, என் அண்ணன் ஜிம் முழுநேர ஊழியனாக சேவை செய்ய ஆரம்பித்திருந்தார். அவர் பிரிட்டன் முழுவதும் வட்டார, மாவட்ட கண்காணியாக சேவை செய்தார்; அவரும் அவருடைய மனைவி மேஜும் வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தை யெகோவாவின் சேவையில் செலவிட்டிருக்கிறார்கள்; அவர்கள் இன்று பர்மிங்ஹாமில் வசிக்கிறார்கள். என் தங்கை ரோபினாவும் அவளுடைய கணவர் ஃபிராங்கும்கூட யெகோவாவுக்கு உண்மையுள்ள ஊழியர்களாக சேவை செய்கிறார்கள்.
நான் கார்மென்ட் கம்பெனியில் கணக்கராக வேலை பார்த்து வந்தேன். ஒருநாள் அதன் இயக்குநர் என்னை அவருடைய அலுவலகத்துக்கு அழைத்தார்; அந்தக் கம்பெனிக்குத் தேவையான பொருட்களை வாங்கும் பணியாளராக வேலை செய்தால் எனக்குப் பிரமாதமான எதிர்காலம் இருக்குமென சொன்னார். ஆனாலும், கொஞ்ச நாளாகவே என் அண்ணனைப் போல முழுநேர ஊழியம் செய்வதைக் குறித்து யோசித்து வந்ததால், தாழ்மையோடு அதை ஏற்க மறுத்ததுடன் அதற்கான காரணத்தையும் என் முதலாளியிடம் விளக்கினேன். எனக்கு ஆச்சரியமென்னவென்றால் இத்தகைய மதிப்புமிக்க கிறிஸ்தவ ஊழியத்தைச் செய்ய நான் ஆசைப்படுவதை அறிந்து சபாஷ் என அவர் என்னைப் பாராட்டியதே. எனவே 1944-ல் நார்தம்டன்னில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டிற்குப் பிறகு நான் முழுநேர பிரசங்கிப்பாளரானேன்.
முதன்முதலாக டிவோன் மாவட்டத்திலுள்ள எக்ஸ்டர் என்ற நகரத்தில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டேன். இந்நகரம் போர்க்கால குண்டுவீச்சிலிருந்து அப்போதுதான் மெல்ல மெல்ல சீரடைய ஆரம்பித்திருந்தது. ஃபிராங்க், ரூத் மிடில்டன் என்ற பயனியர் தம்பதியர் குடியிருந்த வீட்டிலேயே நானும் தங்கினேன்; என்னிடம் அவர்கள் ரொம்பவே கனிவுடன் நடந்துகொண்டார்கள். எனக்கு அப்போது 18 வயதுதான், துவைக்கவும் தெரியாது, சமைக்கவும் தெரியாது; எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததும் நிலைமையைச் சமாளிப்பது கொஞ்சம் எளிதானது.
என்னோடு சேர்ந்து ஊழியம் செய்த என் பார்ட்னருக்கு 50 வயது, அவருடைய பெயர் விக்டர் கார்ட்; அவர் அயர்லாந்தைச் சேர்ந்தவர், 1920-களில் பிரசங்கிக்க ஆரம்பித்தவர். அவர் சில விஷயங்களை எனக்குக் கற்றுக்கொடுத்தார்; உதாரணமாக, நேரத்தை பயனுள்ள விதத்தில் திட்டமிடுவதற்கும், பைபிள் வாசிப்பில் அதிக ஆர்வத்தை வளர்த்துக்கொள்வதற்கும், பல்வேறு பைபிள் மொழிபெயர்ப்புகளின் பயனைப் புரிந்துகொள்வதற்கும் அவர் எனக்குக் கற்றுக்கொடுத்தார். அந்த ஆரம்ப வருடங்களில், உறுதியாக இருப்பதில் அவர் வைத்த முன்மாதிரியே, உண்மையில் என்னைச் செதுக்கிச் சீராக்க பெரிதும் தேவைப்பட்டது.
நடுநிலைமையின் சவால்
போர் முடிவடையவிருந்தது, ஆனாலும் அதிகாரிகள் இளைஞர்களை இராணுவ சேவையில் ஈடுபடுத்த முயன்று வந்தார்கள். ஆகவே, 1943-ல் மெய்டன்ஹெட்டிலுள்ள தீர்ப்பு மன்றத்திற்குச் சென்று, நானொரு சுவிசேஷ ஊழியராக இருப்பதால் இராணுவ சேவையிலிருந்து விலக்களிக்க வேண்டுமென்று தெளிவாகக் குறிப்பிட்டேன். என் முறையீடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை; இருப்பினும் எக்ஸ்டருக்குச் சென்று ஊழியம் செய்யத் தீர்மானித்தேன். ஆனால் எக்ஸ்டரில் இருக்கும்போதுதான் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் பெற்றேன். சிறையில் ஆறு மாதங்கள் கடுமையாக வேலை செய்யும்படி தண்டனை விதித்த நீதிபதி, எனக்கு நீண்ட கால தண்டனை கொடுக்க முடியவில்லையே என கவலைப்பட்டார். ஆறு மாதங்கள் அங்கு வேலை செய்த பிறகு இன்னும் நான்கு மாதங்கள் சிறையில் இருக்கும்படி திருப்பி அனுப்பப்பட்டேன்.
அந்தச் சிறையில் நான் மட்டுமே யெகோவாவின் சாட்சியாக இருந்ததால் வார்டன்கள் என்னை யெகோவா என்றே அழைத்தார்கள். ஆஜர் எடுக்கும்போது அந்தப் பெயரைச் சொல்லி என்னை அழைத்தபோதெல்லாம் எனக்கு என்னவோ போல் இருந்தது, ஆனாலும் நாள் தவறாமல் கடவுளுடைய பெயர் அறிவிக்கப்படுவதைக் கேட்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! ஒரு யெகோவாவின் சாட்சியாக என்னுடைய மனசாட்சிப்பூர்வ நிலைநிற்கையின் காரணமாகவே அவர்களுடன் இருக்கிறேன் என்பதை மற்ற கைதிகள் அறிந்துகொள்ள இது உதவியது. பின்னர் நார்மன் கேஸ்ட்ரோ என்பவரும் இதே சிறைக்கு அனுப்பப்பட்டார்; அவர் வந்ததும் என் பெயரையும் மாற்றிவிட்டார்கள். அது முதல் எங்கள் இருவரையும் மோசே, ஆரோன் என்று அழைத்தார்கள்.
எக்ஸ்டரிலிருந்து பிரிஸ்டலுக்கும் இறுதியில் வின்செஸ்டர் சிறைக்கும் அனுப்பப்பட்டேன். நிலைமை எப்போதும் சுமுகமாக இருக்கவில்லை, ஆனாலும் நகைச்சுவை உணர்வைக் காத்துக்கொண்டது எனக்கு உதவியது. வின்செஸ்டரில் இருக்கையில் நார்மனும் நானும் நினைவுநாள் ஆசரிப்பை சந்தோஷமாக அனுசரித்தோம். அந்தச் சமயத்தில் எங்களைச் சந்திக்க சிறைக்கு வந்த ஃபிரான்சிஸ் குக் அருமையான நினைவுநாள் ஆசரிப்பு பேச்சைக் கொடுத்தார்.
போருக்குப் பின்னான வருடங்களில் மாறுதல்கள்
1946-ல் பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட “தேவனே சத்தியபரர்” என்ற ஆங்கில புத்தகம் வெளியிடப்பட்ட பிரிஸ்டல் மாநாட்டில், ஜாய்ஸ் மோர் என்ற அழகிய பெண்ணைச் சந்தித்தேன்; அவளும் டிவோனில் பயனியர் ஊழியம் செய்து வந்தாள். நாங்கள் நெருங்கிப் பழக ஆரம்பித்தோம், நான்கு வருடங்களுக்குப் பிறகு டைவர்டன் என்ற நகரத்தில் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்; அங்குதான் 1947 முதல் நான் ஊழியம் செய்து வந்திருந்தேன். பிறகு ஒரு வாடகை வீட்டில் குடியேறினோம், அதற்கு வாரா வாரம் 15 ஷில்லிங் (1.10 ஐ.மா. டாலர்) வாடகை கொடுத்தோம். திருப்தியான வாழ்க்கை அது!
திருமணமான அந்த முதல் வருடத்தில், தென் பகுதியிலுள்ள பிரிக்ஸ்ஹமிற்கு குடிமாறிச் சென்றோம்; அந்த அழகிய துறைமுக பட்டணத்தில்தான் பெரிய பைபோன்ற வலையை உபயோகித்து மீன்பிடிக்கும் தொழில்நுட்பம் முதன்முதலில் பின்பற்றப்பட்டது. ஆனால் அங்கு போய் கொஞ்ச நாட்கள்தான் ஆகியிருக்கும், லண்டனில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள பயணிக்கும்போது போலியோவால் தாக்கப்பட்டேன். கோமா நிலைக்குத் தள்ளப்பட்டேன். ஆரம்பத்தில் சொன்ன விதமாக, ஒன்பது மாதங்களுக்குப் பிறகு ஒருவழியாக ஆஸ்பத்திரியிலிருந்து வீடு திரும்பினேன். என்னுடைய வலது கையும் இரண்டு கால்களும் மோசமாக பாதிக்கப்பட்டன, இன்னமும் அப்படித்தான் இருக்கின்றன; அதனால் ஊன்றுகோலைப் பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. என் அருமை மனைவி எப்போதும் மலர்ந்த முகத்துடன் எனக்கு பக்கபலமாக இருந்தாள், அதிக உற்சாகமளித்தாள், முக்கியமாக முழுநேர ஊழியத்தையும் தொடர்ந்து செய்தாள். ஆனால் இந்தச் சூழ்நிலையில் நாங்கள் என்ன செய்வோம்? யெகோவாவின் கரம் குறுகியதல்ல என்பதைச் சீக்கிரத்திலேயே தெரிந்துகொள்ளவிருந்தேன்.
அதற்கு மறுவருடம் லண்டனிலுள்ள விம்பிள்டன் என்ற இடத்தில் நடந்த ஒரு மாநாட்டில் நாங்கள் கலந்துகொண்டோம். இதற்குள்ளாக ஊன்றுகோல் இல்லாமல் என்னால் நடக்க முடிந்திருந்தது. அங்கு, பிரிட்டனில் ஊழியத்தை மேற்பார்வை செய்து வந்த பிரைஸ் ஹ்யூஸ் என்பவரைச் சந்தித்தோம். அவர் உடனடியாக வணக்கம் சொல்லிவிட்டு, “இங்க பாருங்க! நீங்க வட்டார ஊழியம் செய்யணுன்னு நாங்க விரும்புறோம்!” என்றார். அப்போது எனக்கு இதைவிடவும் வேறெது மிகுந்த உற்சாகத்தை அளித்திருக்க முடியும்? ஆனால் அதற்கு நான் தகுதியானவன்தானா? அதைக் குறித்து நானும் ஜாய்ஸும் யோசித்தோம், ஆனால் ஒரு வார கால பயிற்சி கிடைத்தது, யெகோவாவின் மீது முழு நம்பிக்கையும் இருந்தது; எனவே வட்டாரக் கண்காணியாக என் ஊழியத்தை ஆரம்பிக்க இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதிக்குச் சென்றோம். அப்போது எனக்கு 25 வயதுதான் ஆகியிருந்தது, ஆனால் எனக்குப் பெரும் உதவியாக இருந்த சாட்சிகள் காட்டிய கனிவையும் பொறுமையையும் இன்னமும் என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது.
நாங்கள் செய்த பல்வேறு விதமான தேவராஜ்ய ஊழியங்களில், சபைகளைப் போய் சந்தித்ததே நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுடன் நெருங்கிய நட்புறவை ஏற்படுத்தியதாக நானும் ஜாய்ஸும் உணர்ந்தோம். எங்களிடம் கார் இருக்கவில்லை, எனவே ரயிலிலோ பஸ்ஸிலோதான் பயணித்தோம். என் சுகவீனத்தின் வரையறைகளுக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொண்டாலும், 1957 வரை எங்கள் ஊழிய சிலாக்கியங்களை அனுபவித்து மகிழ்ந்தோம், மனநிறைவாக வாழ்ந்தோம். ஆனால் அந்த வருடத்தில் மற்றொரு சவால் தலைதூக்கியது.
மிஷனரி ஊழியத்திற்கு
கிலியட் பள்ளியின் 30-வது வகுப்பில் கலந்துகொள்வதற்கான அழைப்பைப் பெற்றபோது நாங்கள் மெய்சிலிர்த்துப் போனோம். போலியோவை என்னால் நன்கு சமாளிக்க முடிந்திருந்ததால் நானும் ஜாய்ஸும் அந்த அழைப்பைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டோம். யெகோவாவின் சித்தத்தைச் செய்ய நாம் நாடினால் அவர் எப்போதும் அதற்குத் தேவையான பலத்தை அளிப்பார் என்ற அனுபவ பாடத்தை எங்கள் வாழ்க்கையில் படித்திருந்தோம். அமெரிக்காவில், நியு யார்க்கிலுள்ள அழகிய சௌத் லான்சிங்கில் அமைந்துள்ள உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியில் ஐந்து மாத தீவிர பயிற்சியின்போது நாட்கள் வேகமாய்ப் பறந்தன. முக்கியமாய் பயண ஊழியத்தில் ஈடுபட்டிருந்த தம்பதியினரே மாணாக்கர்களாக இருந்தார்கள். அயல் நாட்டில் மிஷனரியாக ஊழியம் செய்ய யாராவது முன்வருகிறோமாவென வகுப்பில் உள்ளவர்களிடம் கேட்டபோது உடனடியாக முன்வந்த சிலரில் நாங்களும் இருந்தோம். நாங்கள் எங்கே செல்லவிருந்தோம்? கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவுக்கு!
அந்தச் சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியம் உகாண்டாவில் தடை செய்யப்பட்டிருந்ததால் அந்த நாட்டில் குடியேறி, ஒரு வேலையைத் தேடிக்கொள்ளும்படி எனக்குச் சொல்லப்பட்டது. ரயிலிலும் படகிலும் நீண்ட தூரம் பயணித்த பிறகு நாங்கள் உகாண்டாவிலுள்ள கம்பாலாவை அடைந்தோம். நாங்கள் வந்தது குடியேற்ற அதிகாரிகளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை, ஒருசில மாதங்கள் மட்டுமே தங்குவதற்கு அனுமதி அளித்தார்கள். அதன் பிறகு வெளியேறும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். தலைமை அலுவலகம் கொடுத்த அறிவுரைகளுக்கு இசைய நாங்கள் வட ரோடீஷியாவுக்குப் (இன்றைய ஜாம்பியாவுக்குப்) பயணப்பட்டோம். கிலியட்டில் எங்கள் வகுப்பில் படித்த ஃபிராங்க் லூயிஸ், காரி லூயிஸ் மற்றும் ஹேஸ் ஹாஸ்கன்ஸ், ஹேரீயட் ஹாஸ்கன்ஸ் ஆகிய நான்கு பேரையும் சந்தித்தது எங்களுக்கு அதிக மகிழ்ச்சியை அளித்தது. சீக்கிரத்திலேயே அங்கிருந்து தெற்கு ரோடீஷியாவுக்குச் (இன்றைய ஜிம்பாப்வேக்குச்) செல்ல நியமனம் பெற்றோம்.
ரயிலில் சென்றோம், புலாவாயோவை அடைவதற்கு முன் புகழ்பெற்ற விக்டோரியா நீர்வீழ்ச்சியை முதன்முதலில் பார்த்தோம். மக்லக்கி குடும்பத்தாரோடு கொஞ்ச நாட்கள் தங்கினோம்; இவர்கள் அங்கு முதலாவது குடியேறிய யெகோவாவின் சாட்சிகள் ஆவர். அடுத்த 16 வருடங்களுக்கு அவர்களுடன் நன்கு பழகும் பாக்கியத்தையும் பெற்றோம்.
மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுதல்
ஆப்பிரிக்கப் பிராந்தியத்தைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள இரண்டு வார பயிற்சி அளிக்கப்பட்ட பிறகு மாவட்டக் கண்காணியாகச் சேவை செய்ய நியமிக்கப்பட்டேன். ஆப்பிரிக்க காட்டுப் பகுதிகளுக்குச் சாட்சி கொடுக்கச் செல்கையில் தண்ணீர், உணவு, படுக்கை, துணிமணி, பிலிம் புரொஜக்டர், எலெக்டிரிக் ஜெனரேட்டர், பெரிய திரை ஆகியவற்றையும், வேறு சில அத்தியாவசியப் பொருட்களையும் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. இவை எல்லாவற்றையும் ஒரு டிரக்கில் ஏற்றிக்கொண்டு நாங்களும் ஏறிக்கொண்டோம்; அந்த டிரக் உறுதியானதாக இருந்ததால்தான் அந்தக் கரடுமுரடான பாதைக்கு ஈடுகொடுக்க முடிந்தது.
நான் ஆப்பிரிக்க வட்டார ஊழியர்களுடன் சேர்ந்து வேலை செய்கையில் ஜாய்ஸ், அவர்களுடைய மனைவிகளுக்கும் பிள்ளைகளுக்கும் சந்தோஷமாக உதவி செய்தாள். ஆப்பிரிக்க புல்வெளியில் அதிலும் கொளுத்தும் வெயிலில் நடப்பது சோர்வை ஏற்படுத்துவதாக இருந்தாலும் இந்தச் சீதோஷ்ணநிலை என் உடல் குறைபாடுகளை எளிதாய் சமாளிக்க உதவியது, அதற்கு நான் அதிக நன்றியுள்ளவனாக இருந்தேன்.
பொதுவாக இங்குள்ளவர்கள் ஏழைபாழைகள். பெரும்பாலோர் பாரம்பரியத்திலும், மூடநம்பிக்கைகளிலும் ஊறிப்போனவர்கள், பலதார மணம் புரியும் பழக்கமுள்ளவர்கள்; இருந்தபோதிலும் அவர்கள் பைபிளுக்கு ஆழ்ந்த மரியாதை காட்டினார்கள். சில இடங்களில் சபை கூட்டங்கள் நிழல் தரும் பெரிய மரங்களின் கீழ் நடத்தப்பட்டன, மாலை நேரங்களில் வெளிச்சத்துக்காக எண்ணெய் விளக்குகள் தொங்கவிடப்பட்டன. கடவுளுடைய மகத்தான படைப்பாகிய நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தின் கீழ் அமர்ந்து அவருடைய வார்த்தையைப் படிக்கும்போது அவற்றைப் பார்த்து எப்போதுமே பிரமித்திருக்கிறோம்.
ஆப்பிரிக்க ஒதுக்கீட்டுப் பகுதிகளில் உவாட்ச் டவர் சொஸைட்டியின் படக் காட்சிகளைப் போட்டுக் காட்டுவது மறக்க முடியாத மற்றொரு அனுபவமாகும். ஒருவேளை 30 பிரஸ்தாபிகள் உடைய சபையாக இருந்தாலும் படக் காட்சிக்குப் பெரும்பாலும் 1,000 பேரோ அதற்கும் அதிகமானோரோ வரலாம் என்பதை அறிந்திருந்தோம்!
வெப்ப மண்டலப் பகுதிகளில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது, ஆனால் எல்லா சமயத்திலும் நம்பிக்கையான மனநிலை அவசியமென உணர்ந்தோம். அதனால் நானும் ஜாய்ஸும் சூழ்நிலையை நன்கு சமாளிக்கக் கற்றுக்கொண்டோம்; அவ்வப்போது வந்த மலேரியாவை நான் சமாளித்தேன், அமீபாக்களினால் வரும் வயிறு சம்பந்தப்பட்ட வியாதியை ஜாய்ஸ் சமாளித்தாள்.
பின்னர் சாலிஸ்பரியிலுள்ள (இன்றைய ஹராரேயிலுள்ள) கிளை அலுவலகத்தில் வேலை செய்ய நியமிக்கப்பட்டோம்; அங்கு, லெஸ்டர் டேவி, ஜார்ஜ் மற்றும் ரூபி பிராட்லி போன்ற யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து வேலை செய்யும் சிலாக்கியம் பெற்றோம். திருமண பதிவாளராக அரசாங்கம் என்னை நியமித்தது; இது, ஆப்பிரிக்க சகோதரர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதற்கும், சபைகளில் கிறிஸ்தவ திருமண பந்தத்தைப் பலப்படுத்துவதற்கும் எனக்கு வாய்ப்பளித்தது. சில வருடங்களுக்குப் பிறகு, மற்றொரு பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. ஆப்பிரிக்க மொழி இல்லாத பிறமொழி பேசும் சபைகளைப் போய்ச் சந்திக்க வேண்டியிருந்தது. இப்படியாக நானும் ஜாய்ஸும், பத்து வருடங்களுக்கும் மேலாக நம் சகோதரர்களை நன்கு தெரிந்துகொள்ள முடிந்ததற்காகச் சந்தோஷப்பட்டோம், அவர்களுடைய ஆன்மீக முன்னேற்றத்தைக் கண்டு உச்சி குளிர்ந்து போனோம். அந்தச் சமயத்தில் போட்ஸ்வானா, மொசாம்பிக் ஆகிய இடங்களிலுள்ள நம் சகோதரர்களையும் போய் சந்தித்தோம்.
மீண்டும் பயணத்தில்
தென் ஆப்பிரிக்காவில் சந்தோஷமாகப் பல வருடங்களைக் கழித்த பிறகு, 1975-ல் மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள சியர்ரா லியோனுக்கு அனுப்பப்பட்டோம். உடனடியாக கிளை அலுவலகத்தில் தங்கி எங்கள் புதிய பிராந்தியத்தில் சந்தோஷமாய் வேலையைத் தொடங்கினோம், ஆனால் அப்படி அதிக நாட்கள் வேலை செய்ய முடியவில்லை. மலேரியா கடுமையாகத் தாக்கியதால் வியாதிப்பட்டு, பலவீனமடைந்தேன்; கடைசியில் சிகிச்சைக்காக லண்டன் செல்ல வேண்டியிருந்தது, ஆப்பிரிக்காவுக்குத் திரும்பச் செல்ல வேண்டாமென என்னிடம் சொல்லப்பட்டதைக் கேட்டதும் நாங்கள் கவலைப்பட்டோம். ஆனால் நானும் ஜாய்ஸும் லண்டன் பெத்தேல் குடும்பத்தாரால் அன்புடன் ஏற்றுக்கொள்ளப்பட்டோம். லண்டனிலுள்ள பல சபைகளில் எண்ணற்ற ஆப்பிரிக்க சகோதரர்கள் இருப்பதால் ஆப்பிரிக்காவில் இருப்பதைப் போலவே உணர்ந்தோம். என் உடல்நலம் தேறியபோது வேறு விதமான வாழ்க்கைக்கு எங்களைத் தயார்படுத்திக் கொண்டோம்; பர்ச்சேஸிங் டிபார்ட்மென்டை கவனித்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். கடந்து வந்த வருடங்களில் ஏற்பட்ட விஸ்தரிப்பைக் காணும்போது இது ஆர்வத்தை அளிக்கும் வேலையாக இருந்திருக்கிறது.
1990-களின் ஆரம்பத்தில் இயங்கு நரம்பணு (motor neuron) வியாதி வந்து என் அருமை ஜாய்ஸ் நோய்வாய்ப்பட்டாள்; 1994-ல் இறந்துபோனாள். அவள் அன்பான, நம்பகமான, உத்தம மனைவியாக இருந்தாள், நாங்கள் சந்தித்த பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள எப்போதும் மனமுள்ளவளாக இருந்தாள். இது போன்ற இழப்பைச் சமாளிக்க வேண்டிய சமயங்களில், எப்போதும் தெளிவான ஆன்மீக கண்ணோட்டத்துடன் இருக்க வேண்டுமென்றும் எதிர்காலத்தை கண் முன்னே நிறுத்திக்கொள்ள வேண்டுமென்றும் கற்றுக்கொண்டிருக்கிறேன். தேவராஜ்ய அட்டவணையை நல்ல முறையில் பின்பற்றுவதற்கும் பிரசங்கிப்பதற்கும் துணைபுரியும்படி யெகோவாவிடம் ஜெபிப்பதும்கூட மனதை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள எனக்கு உதவியிருக்கிறது.—நீதிமொழிகள் 3:5, 6.
பெத்தேலில் சேவை செய்வது ஒரு சிலாக்கியமாகும், அருமையான வாழ்க்கைக்கு வழியுமாகும். அநேக இளைஞர்களுடன் சேர்ந்து வேலை செய்யவும், பலருடன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளவும் முடிகிறது. லண்டன் பெத்தேலைக் காண எண்ணற்றவர்கள் வருவதும் ஓர் ஆசீர்வாதமாகும். சில சமயங்களில் நானிருந்த ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அருமை நண்பர்கள் வருகிறார்கள், அப்போது, சந்தோஷம் அளித்த அந்த நாட்களின் நினைவலைகள் மனதில் பெருக்கெடுக்கின்றன. இவை எல்லாம் “இவ்வாழ்க்கையை” முழுமையாக தொடர்ந்து அனுபவிக்கவும், “இனிவரும்” வாழ்க்கையை நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் எண்ணிப் பார்க்கவும் எனக்கு உதவுகின்றன.—1 தீமோத்தேயு 4:8, ஈஸி டு ரீட் வர்ஷன்.
[அடிக்குறிப்பு]
a 1928-ல் யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டது, ஆனால் தற்போது அச்சிடப்படுவதில்லை.
[பக்கம் 25-ன் படம்]
1946-ல் என் அம்மாவுடன்
[பக்கம் 26-ன் படம்]
1950-ல் எங்கள் திருமண நாளில் ஜாய்ஸுடன்
[பக்கம்] -ன் படம்26
1953-ல் பிரிஸ்டல் மாநாட்டில்
[பக்கம் 27-ன் படம்]
மேலே: ஒதுக்குப் புறமான இடத்திலுள்ள தொகுதியுடன்; இடது: தெற்கு ரோடீஷியா விலுள்ள (இன்றைய ஜிம்பாப்வேயிலுள்ள) ஒரு சபையுடன்