எந்தச் சோதனையையும் நம்மால் சமாளிக்க முடியும்!
தற்சமயம் உங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது சோதனையை எதிர்ப்பட்டு வருகிறீர்களா? அதைச் சமாளிக்க முடியாமல் நம்பிக்கையிழந்து தவிக்கிறீர்களா? உங்களுடைய பிரச்சினை யாருக்குமே வந்ததில்லை என்றும் அதற்குத் தீர்வே இல்லை என்றும்கூட நீங்கள் சிலசமயங்களில் கவலைப்படுகிறீர்களா? அப்படியானால், மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்! நாம் எதிர்ப்படும் சோதனைகள் எதுவாக இருந்தாலும்சரி, அவற்றை வெற்றிகரமாக சமாளிப்பதற்குக் கடவுள் உதவி செய்வாரென பைபிள் உறுதியளிக்கிறது.
கடவுளுடைய ஊழியர்கள் ‘பலவிதமான சோதனைகளில் அகப்படுவார்கள்’ என பைபிள் ஒப்புக்கொள்கிறது. (யாக்கோபு 1:2) “பலவிதமான” (கிரேக்கில் பிக்கிலோஸ்) என்ற வார்த்தையை கவனியுங்கள். பண்டைக்கால வழக்கின்படி, இந்த மூல வார்த்தையின் அர்த்தம், “பன்மடங்கு” அல்லது “பலவித நிறம்” என்பதாகும்; இது “சோதனைகளின் பல்வேறு வகைகளை” வலியுறுத்திக் காட்டுகிறது. ஆகவே, ‘பலவிதமான சோதனைகள்’ என்பது, அடையாள அர்த்தத்தில் சொன்னால், பல்வேறு நிறங்களில் வரும் சோதனைகளைக் குறிக்கிறது. என்றாலும், இவை ஒவ்வொன்றையும் சமாளிப்பதற்கு யெகோவா நமக்கு உதவுகிறார். நாம் ஏன் நிச்சயமாக இருக்கலாம்?
‘தேவனுடைய தகுதியற்ற தயவு பல்வேறு வழிகளில் வெளிப்படுதல்’
கிறிஸ்தவர்கள் ‘பலவிதமான சோதனைகளினால் துக்கப்படுவார்கள்’ என அப்போஸ்தலன் பேதுரு குறிப்பிடுகிறார். (1 பேதுரு 1:6) ஏவப்பட்டு எழுதிய தனது கடிதத்தில், ‘தேவனுடைய தகுதியற்ற தயவு பல்வேறு வழிகளில் வெளிக்காட்டப்படுவதைப்’ பற்றியும் பிற்பாடு அவர் குறிப்பிடுகிறார். (1 பேதுரு 4:10, NW) “பல்வேறு வழிகளில்” என்ற சொற்றொடரில் அதே மூல கிரேக்க வார்த்தையின் ஒரு வடிவம் அடங்கியுள்ளது. இந்தச் சொற்றொடருக்குக் குறிப்புரை அளிக்கையில், பைபிள் அறிஞர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: “இதில் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்துள்ளது. . . . கடவுளுடைய கிருபையை [அதாவது தகுதியற்ற தயவை] பற்றி பேசுவதற்கு பிக்கிலோஸ் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பது, கடவுளுடைய கிருபையால் சமாளிக்க முடியாத எந்தவொரு சூழ்நிலையும் மனிதருக்குக் கிடையாது என்ற அர்த்தத்தைத் தருகிறது.” அவர் மேலும் கூறுகிறார்: “கடவுளுடைய கிருபையால் வெற்றிகரமாக சமாளிக்க முடியாத சூழ்நிலைகளோ நெருக்கடிகளோ அவசர நிலையோ அவசரத் தேவையோ எதுவுமே இல்லை. கடவுளுடைய கிருபையால் சமாளிக்க முடியாத எந்தவொரு சூழ்நிலையும் வாழ்க்கையில் கிடையாது. பிக்கிலோஸ் என்ற இந்தத் தத்ரூபமான வார்த்தை பல்வேறு நிறங்களில் காட்டப்படும் கடவுளுடைய கிருபையை நமக்குத் தெளிவாக நினைப்பூட்டுகிறது; எல்லா காரியங்களையும் சமாளிப்பதற்கும் சகித்திருப்பதற்கும் இது போதுமானது.”
சோதனைகளைச் சகித்திருக்க உதவும் தயவு
கடவுளுடைய தகுதியற்ற தயவு காட்டப்படும் ஒரு வழி, கிறிஸ்தவ சபையிலுள்ள பல்வேறு நபர்களின் மூலமாகவே என பேதுரு கூறுகிறார். (1 பேதுரு 4:11) கடவுளுடைய ஒவ்வொரு ஊழியருக்கும் ஆவிக்குரிய வரங்கள், அதாவது திறமைகள் உள்ளன; அவை சோதனைகளை எதிர்ப்படுகிறவர்களுக்கு உற்சாகத்தின் ஊற்றாக விளங்குகின்றன. (ரோமர் 12:6-8) உதாரணமாக, சபை அங்கத்தினர்களில் சிலர், பைபிளைப் போதிப்பதில் சிறந்து விளங்குகிறார்கள். கருத்தாழமிக்க அவர்களுடைய வார்த்தைகள் மற்றவர்களுக்கு ஊக்கமளித்து, சோதனைகளைச் சகித்திருப்பதற்கு உந்துவிக்கின்றன. (நெகேமியா 8:1-4, 8, 12) மற்றவர்களோ ஆறுதல் தேவைப்படுகிறவர்களுடைய வீடுகளுக்குச் சென்று தவறாமல் மேய்ப்பு சந்திப்புகள் நடத்துகிறார்கள். இத்தகைய சந்திப்புகள் உற்சாகம் அளிப்பதற்கும் ‘இருதயங்களைத் தேற்றுவதற்கும்’ சிறந்த சந்தர்ப்பங்களாகும். (கொலோசெயர் 2:2) விசுவாசத்தைப் பலப்படுத்தும் இத்தகைய சந்திப்புகளைக் கண்காணிகள் செய்யும்போது, ஆவிக்குரிய வரத்தை அளிக்கிறார்கள். (யோவான் 21:16) இன்னும் சிலர், சோதனைகளால் சோர்ந்திருக்கும் சக விசுவாசிகளைக் கனிவோடும் இரக்கத்தோடும் மென்மையோடும் நடத்துவதற்குப் பெயர்பெற்றவர்களாக விளங்குகிறார்கள். (அப்போஸ்தலர் 4:36; ரோமர் 12:10; கொலோசெயர் 3:10) இத்தகைய அன்பான சகோதர சகோதரிகள் காண்பிக்கும் அனுதாபமும் நடைமுறையான உதவியும் கடவுளுடைய தகுதியற்ற தயவின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடாக அல்லது ‘நிறமாக’ இருக்கிறது.—நீதிமொழிகள் 12:25; 17:17.
‘சகலவிதமான ஆறுதலின் தேவன்’
எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவா ஆறுதலளிக்கிறார். அவரே ‘சகலவிதமான ஆறுதலின் தேவனாயிருக்கிறார், . . . சகல உபத்திரவங்களிலும் அவரே நமக்கு ஆறுதல் செய்கிறவர்.’ (2 கொரிந்தியர் 1:3, 4) ஏவப்பட்டு எழுதப்பட்ட கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் ஞானமும் அவருடைய பரிசுத்த ஆவி தரும் பலமும் உதவிக்காக நாம் ஏறெடுக்கும் ஜெபங்களுக்கு யெகோவா பதிலளிக்கும் முக்கிய வழிகளாகும். (ஏசாயா 30:18, 21; லூக்கா 11:13; யோவான் 14:16) ஆவியின் ஏவுதலால் அப்போஸ்தலன் பவுல் கொடுத்த வாக்குறுதியிலிருந்து நாம் ஆறுதலடையலாம். “தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” என அவர் கூறினார்.—1 கொரிந்தியர் 10:13.
ஆம், நமக்கு நேரிடும் சோதனையின் “நிறம்,” அதாவது தன்மை எப்படிப்பட்டதாக இருந்தாலும்சரி, அதற்கு ஈடுகட்டும் “நிறம்” அல்லது அதை சமாளிக்க உதவுவதற்கு கடவுளுடைய தகுதியற்ற தயவு ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு எப்போதும் இருக்கும். (யாக்கோபு 1:17) சோதனைகள் எந்த வகையாக இருந்தாலும்சரி அல்லது எவ்வளவு சவாலாக இருந்தாலும்சரி, யெகோவா தமது ஊழியர்களுக்குத் தரும் காலத்திற்கேற்ற தகுந்த உதவி ‘கடவுளுடைய பல்வகைப்பட்ட ஞானத்திற்கு’ ஓர் அத்தாட்சியே. (எபேசியர் 3:10, NW) நீங்கள் இதை ஒத்துக்கொள்வீர்கள், அல்லவா?
[பக்கம் 31-ன் படங்கள்]
சோதனைகளைச் சமாளிக்க யெகோவா நமக்கு உதவுகிறார்