கடவுளைப் பிரியப்படுத்தும் உண்மையான போதனைகள்
கடவுளைப் பிரியப்படுத்தும் உண்மையான போதனைகள் எவையென்பதை மனிதர் தெரிந்துகொள்வதற்கு அவரே தம் எண்ணங்களை மனிதருக்கு வெளிப்படுத்த வேண்டும். அவை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யவும் வேண்டும். கோட்பாடு, வணக்கம், நடத்தை சம்பந்தமாக கடவுள் எதை அங்கீகரிக்கிறார் என்பதை மனிதர் வேறெப்படி தெரிந்துகொள்ள முடியும்? கடவுள் அப்படிப்பட்ட விஷயங்களை வெளிப்படுத்தி இருக்கிறாரா? எவ்வகையில்?
சில பத்தாண்டுகளே வாழும் எந்த நபராவது, மனிதர்கள் எல்லாரையும் தனிப்பட்ட விதமாக சந்தித்து கடவுளுடைய செய்திகளை அறிவிக்க முடியுமா? முடியாது. ஆனால் நிரந்தரமான ஒரு பதிவு இருந்தால் அது சாத்தியமாகும் எனலாம். அப்படியென்றால், கடவுள் வெளிப்படுத்தும் செய்திகள் புத்தக வடிவில் கிடைக்கும் என்ற முடிவுக்கு வருவது சரிதான், அல்லவா? இவ்வாறு கடவுளால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் பூர்வ புத்தகங்களில் ஒன்றுதான் பைபிள். “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” என அதன் எழுத்தாளர்களில் ஒருவர் குறிப்பிடுகிறார். (2 தீமோத்தேயு 3:16, 17) இப்போது நாம் பைபிளைக் கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்து, அது உண்மையான போதனைகள் நிறைந்த புத்தகமா என பார்க்கலாம்.
எந்தளவு பழமையானது?
மிகப் பழமையான, முக்கிய மத நூல்களில் ஒன்று பைபிள். அதன் முதல் பகுதி சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. பைபிள், பொ.ச. 98-ல் முழுமையாக எழுதி முடிக்கப்பட்டது.a 1,600 வருட காலப்பகுதியில் சுமார் 40 பேர் பைபிளை எழுதியிருந்தாலும் அதிலுள்ள அனைத்தும் முன்னுக்குப் பின் முரண்படாமல் இருக்கின்றன. அதற்குக் காரணம், கடவுள் அதன் உண்மையான நூலாசிரியராக இருப்பதே.
சரித்திரத்திலேயே மிக அதிகமாக விநியோகிக்கப்பட்ட புத்தகமும் மிக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகமும் பைபிள்தான். ஒவ்வொரு ஆண்டும் முழுமையாகவோ பகுதிகளாகவோ சுமார் 6 கோடி பிரதிகள் விநியோகிக்கப்படுகின்றன. அதேபோல் 2,300-க்கும் அதிகமான மொழிகளிலும் கிளை மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. மனிதர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு முழு பைபிளோ அதன் சில பகுதிகளோ அவர்களுடைய தாய்மொழியில் கிடைக்கிறது. இப்புத்தகம், தேசம், இனம், குலம் போன்ற சகல தடைகளையும் தாண்டி அனைவருக்கும் கிடைக்கிறது.
எவ்வாறு தொகுக்கப்பட்டது?
உங்களிடம் ஒரு பைபிள் இருந்தால், அதைத் திறந்து, அது தொகுக்கப்பட்டிருக்கும் விதத்தை ஏன் பார்க்கக் கூடாது?b முதலில் பொருளடக்கத்திற்குத் திருப்புங்கள். பெரும்பாலான பைபிள்களில் ஆரம்பத்தில் அது காணப்படும்; அதில், ஒவ்வொரு புத்தகத்தின் பெயரும் அதற்குரிய பக்கமும் தரப்பட்டிருக்கும். பிரத்தியேகப் பெயர்களிலுள்ள பல புத்தகங்களின் பெரிய தொகுப்புதான் பைபிள் என்பதை நீங்கள் கவனிப்பீர்கள். அதன் முதல் புத்தகம் ஆதியாகமம், கடைசி புத்தகம் வெளிப்படுத்துதல், அதாவது அப்போகாலிப்ஸ். மொத்த புத்தகங்களும் இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. முதல் 39 புத்தகங்கள் பெரும்பாலும் எபிரெய மொழியில் எழுதப்பட்டதால், எபிரெய வேதாகமம் என அழைக்கப்படுகிறது. அடுத்த 27 புத்தகங்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்டதால் கிரேக்க வேதாகமம் என அழைக்கப்படுகிறது. சிலர் இவற்றை பழைய ஏற்பாடு என்றும் புதிய ஏற்பாடு என்றும் அழைக்கின்றனர்.
எடுத்துப் பார்ப்பதற்கு வசதியாக பைபிள் புத்தகங்கள் அதிகாரங்களாகவும் வசனங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பத்திரிகையில் வசனங்கள் குறிப்பிடப்படுகையில், முதலாவதாக பைபிள் புத்தகத்தின் பெயரும், அதன்பின் அதிகாரமும், அடுத்ததாக வசனமும் இருக்கும். உதாரணத்திற்கு, “2 தீமோத்தேயு 3:16” என்பது, தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாவது நிருபத்தில், 3-ஆம் அதிகாரம், 16-ஆம் வசனத்தைக் குறிக்கிறது. பைபிளில் அந்த வசனத்தை எடுக்க முடிகிறதாவென பாருங்கள்.
பைபிளை நன்கு தெரிந்துகொள்வதற்கு சிறந்த வழி, அதைத் தவறாமல் படிப்பதுதான் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள், அல்லவா? கிரேக்க வேதாகமத்தை முதலில் படிக்க ஆரம்பிப்பது சிலருக்கு உதவியாக இருந்திருக்கிறது; அவர்கள் மத்தேயு புத்தகத்திலிருந்து படிக்க ஆரம்பிக்கிறார்கள். தினமும் மூன்று முதல் ஐந்து அதிகாரங்களை வாசித்தால் ஒரே வருடத்தில் முழு பைபிளையும் வாசித்துவிடலாம். ஆனால் நீங்கள் பைபிளில் வாசிக்கும் விஷயங்கள் கடவுளுடைய ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்டவையே என்று எப்படி உறுதியாக நம்பலாம்?
நீங்கள் பைபிளை நம்ப முடியுமா?
கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்ட ஒரு புத்தகத்தில், வாழ்க்கைக்கு உதவும், எக்காலத்திலும் மாறாத அறிவுரைகள் இருக்க வேண்டுமல்லவா? பைபிள் மனித இயல்பைப் பற்றிய புரிந்துகொள்ளுதலோடு எழுதப்பட்டிருப்பதால் எல்லா சந்ததியினருக்கும் பொருந்துகிறது; முதன்முதலில் எழுதப்பட்டபோது எந்தளவு நடைமுறையானதாக இருந்ததோ அந்தளவு நடைமுறையானதாக இன்றும் இருக்கிறது. கிறிஸ்தவத்தின் ஸ்தாபகரான இயேசு கிறிஸ்துவின் புகழ்பெற்ற சொற்பொழிவு இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அது மத்தேயு 5-7 அதிகாரங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மலைப்பிரசங்கம் என அழைக்கப்படும் அது, உண்மையான சந்தோஷத்தைக் கண்டடைவது எப்படி என விளக்குகிறது; அதுமட்டுமல்ல, சண்டைகளைத் தீர்த்துக்கொள்வது எப்படி, ஜெபம் செய்வது எப்படி, பொருள் தேவைகளைக் கருதுவது எப்படி போன்ற இன்னும் பல விஷயங்களையும் விளக்குகிறது. இப்பிரசங்கம் உட்பட, பைபிளின் மற்றெல்லா பகுதிகளும், கடவுளைப் பிரியப்படுத்தவும் நம் வாழ்க்கையை மேம்படுத்தவும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்றெல்லாம் தெளிவாக சொல்கின்றன.
மற்றொரு காரணத்திற்காகவும் நீங்கள் பைபிளை நம்பலாம். இந்தப் பழமையான புத்தகம் குறிப்பிடும் அறிவியல் விஷயங்கள்கூட திருத்தமாக இருப்பதே அந்தக் காரணம். உதாரணத்திற்கு, பூமி தட்டையாக இருப்பதாய் பெரும்பாலோர் நம்பி வந்த காலத்தில், “பூமி உருண்டை” என பைபிள் சொன்னது.c (ஏசாயா 40:22) மேலும், ஈர்ப்பு சக்தியினால் கிரகங்கள் அந்தரத்தில் தொங்குவதை பிரபல விஞ்ஞானியான சர் ஐசக் நியூட்டன் கண்டுபிடிப்பதற்கு 3,000 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே, ‘பூமி அந்தரத்திலே தொங்குகிறது’ என பைபிள் கவிதை நடையில் சொன்னது. (யோபு 26:7) பூமியின் நீர் சுழற்சியைப் பற்றி சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு பைபிளில் கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள இந்தக் விவரிப்பையும் கவனியுங்கள்: “எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.” (பிரசங்கி 1:7) ஆம், சர்வலோகத்தையும் படைத்தவரே பைபிளின் நூலாசிரியர்.
பைபிள் சரித்திரப்பூர்வமாக திருத்தமாய் இருப்பது, அது கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறது. பைபிளில் விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள் ஏதோ புராணக்கதைகள் அல்ல. அவை குறிப்பிட்ட தேதி, மக்கள், இடம் ஆகியவற்றோடு சம்பந்தப்பட்ட நிஜ சம்பவங்கள். உதாரணத்திற்கு, “திபேரியு ராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியு பிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும்” இருந்த காலத்தைப் பற்றிய உண்மை விவரங்களை லூக்கா 3:1 குறிப்பிடுகிறது.
பூர்வ கால சரித்திராசிரியர்கள், அரசர்களின் வெற்றிகளையும் நற்குணங்களையும் பற்றி மட்டுமே பெரும்பாலும் எழுதி வைத்தார்கள்; ஆனால் பைபிளின் எழுத்தாளர்களோ தங்கள் தப்பிதங்களைக்கூட ஒளிவு மறைவில்லாமல் நேர்மையோடு ஒப்புக்கொண்டார்கள். உதாரணத்திற்கு, இஸ்ரவேலை ஆண்ட தாவீது ராஜா இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ்செய்தேன்; . . . நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன்.” இந்த வாக்கியம் பைபிளில் ஒளிவுமறைவின்றி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. (2 சாமுவேல் 24:10) மற்றொரு பைபிள் எழுத்தாளரான மோசே, தான் உண்மைக் கடவுளை சார்ந்திருக்காமல்போன சம்பவத்தை தானே பதிவு செய்தார்.—எண்ணாகமம் 20:12.
பைபிள் கடவுளால் ஏவப்பட்டது என்பதற்கு மற்றொரு அத்தாட்சியும் உண்டு. அந்த அத்தாட்சி, நிறைவேறிய தீர்க்கதரிசனங்களே; சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்னதாகவே எழுதப்பட்ட சரித்திரம்தான் தீர்க்கதரிசனம். சில தீர்க்கதரிசனங்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றியவை. உதாரணமாக, அவர் பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கும் முன்பே, அவர் “யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே” பிறப்பார் என எபிரெய வேதாகமம் திருத்தமாக முன்னறிவித்தது.—மத்தேயு 2:1-6; மீகா 5:2.
மற்றொரு உதாரணத்தைக் கவனியுங்கள். 2 தீமோத்தேயு 3:1-5-ல் பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “கடைசி நாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.” பொதுவாக, ஜனங்கள் இன்று இப்படித்தான் இருக்கிறார்கள், அல்லவா? இவ்வார்த்தைகள் பொ.ச. 65-ல், அதாவது 1,900-க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டுவிட்டன!
பைபிள் என்ன கற்பிக்கிறது?
நீங்கள் பைபிளை வாசிக்கையில், அது மனித ஞானத்திற்கு அப்பாற்பட்ட ஞானத்தின் ஊற்றுமூலமாக விளங்குவதைப் புரிந்துகொள்வீர்கள். பின்வருவதைப் போன்ற கேள்விகளுக்கு அது திருப்தியான பதிலை அளிக்கிறது: கடவுள் யார்? பிசாசு இருப்பது உண்மையா? இயேசு கிறிஸ்து யார்? துன்பத்திற்கான காரணம் என்ன? நாம் இறக்கும்போது என்ன நேரிடுகிறது? இவற்றிற்கு பலதரப்பட்ட பதில்கள் கொடுக்கப்படுகின்றன; மக்கள் மத்தியில் நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் எந்தளவு வித்தியாசப்படுகின்றனவோ அந்தளவு பதில்களும் வித்தியாசப்படுகின்றன. ஆனால் இவ்விஷயங்களின் பேரிலும் மற்ற அநேக விஷயங்களின் பேரிலுமான உண்மையான போதனைகளை பைபிள் அளிக்கிறது. மேலும், சக மனிதர்களிடமும் மேலான அதிகாரிகளிடமும் நாம் நடந்து கொள்ள வேண்டிய விதத்தையும் நாம் காட்ட வேண்டிய மனப்பான்மையையும் பற்றி பைபிள் நிகரற்ற ஆலோசனைகளைத் தருகிறது.d
பூமிக்கும் மனிதருக்குமான கடவுளுடைய நோக்கத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? அது இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறது: “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:10, 11) ‘தேவன்தாமே மனிதர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோகும்.’ (வெளிப்படுத்துதல் 21:3, 4) “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:29.
போர், குற்றச்செயல், வன்முறை, துன்மார்க்கம் ஆகியவை விரைவில் முடிவுக்கு வருமென்றும் பைபிள் முன்னறிவிக்கிறது. வியாதி, முதுமை, மரணம் ஆகியவையும் ஒழிக்கப்படும். பூங்காவனம் போன்ற பரதீஸான பூமியில் நித்திய ஜீவனைப் பெறும் நம்பிக்கை நிஜமாகும். இவை எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி தரும் எதிர்பார்ப்புகள்! இவை அனைத்தும், மனிதர்மீது கடவுள் காட்டும் அன்பை எவ்வளவு நன்றாக படம்பிடித்துக் காட்டுகின்றன!
நீங்கள் என்ன செய்வீர்கள்?
பைபிள், நம் படைப்பாளர் தந்திருக்கும் அருமையான பரிசு. அந்தப் பரிசை நீங்கள் என்ன செய்ய வேண்டும்? கடவுளிடமிருந்து வந்த ஒரு புத்தகம் மனிதர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாய் இருப்பதற்கு, அது நாகரிகம் தோன்றிய காலத்திலேயே எழுதப்பட்டிருக்க வேண்டுமென இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் நினைத்தார். இந்து மத நூல்களிலேயே மிகப் பழமையான வேதங்களைவிடவும் மிகப் பழமையான பகுதிகள் பைபிளில் சில இருப்பதை அவர் உணர்ந்தபோது, பைபிளை வாசித்து அதிலிருப்பதை ஆராய முடிவு செய்தார்.e மிகப் பரவலாக விநியோகிக்கப்பட்டிருக்கும் இப்புத்தகத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் அதை வாசித்துப் பார்க்க வேண்டுமென்பதை ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழக பேராசிரியரும் புரிந்துகொண்டார்.
பைபிளை வாசித்து, அது கற்பிக்கும் விஷயங்களைக் கடைப்பிடிப்பது உங்களுக்கு அநேக ஆசீர்வாதங்களை அள்ளித் தரும். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “கர்த்தருடைய [“யெகோவாவின்,” NW] வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.”f (சங்கீதம் 1:2, 3) பைபிளை வாசித்து அதன் பேரில் தியானிப்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும், ஏனென்றால் உங்களுடைய ஆன்மீக தேவையை அது பூர்த்தி செய்யும். (மத்தேயு 5:3, NW) அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து பிரச்சினைகளை நல்ல விதமாக சமாளிப்பது எப்படியென அது உங்களுக்குக் காட்டும். ஆம், பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் கடவுளுடைய சட்டதிட்டங்களைக் “கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.” (சங்கீதம் 19:11) அதுமட்டுமல்ல, கடவுளுடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைப்பது இன்று உங்களுக்கு ஆசீர்வாதங்களைத் தருவதோடு, ஒளிமயமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் அளிக்கும்.
“புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்” என பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. (1 பேதுரு 2:2) புதிதாகப் பிறந்த குழந்தைக்கு போஷாக்கு தேவை, அது கிடைக்கும் வரை அக்குழந்தை தன் அழுகையை நிறுத்தாது. அதேபோல் நமக்கு கடவுளைப் பற்றிய அறிவு தேவை. ஆகவே அவருடைய வார்த்தைக்கான ‘வாஞ்சையை,’ அதாவது மிகுந்த விருப்பத்தை, வளர்த்துக்கொள்ள வேண்டும். பைபிள், கடவுளுடைய உண்மையான போதனைகள் அடங்கிய புத்தகம். எனவே அதைத் தவறாமல் படிப்பதைக் குறிக்கோளாக வையுங்கள். அந்தப் படிப்பிலிருந்து முடிந்தளவு பயன் பெற உங்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷத்தோடு காத்திருக்கிறார்கள். உங்கள் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்பு கொள்ளும்படி உங்களைக் கனிவுடன் அழைக்கிறோம். அல்லது இப்பத்திரிகையைப் பிரசுரிப்போருக்கு நீங்கள் கேட்டெழுதலாம்.
[அடிக்குறிப்புகள்]
a பொ.ச. என்பது “பொது சகாப்தத்தைக்” குறிக்கிறது, பெரும்பாலும் கி.பி. என்று அழைக்கப்படும் இதற்கு அர்த்தம், “கிறிஸ்துவுக்குப் பின்” என்பதாகும். பொ.ச.மு. என்பது “பொது சகாப்தத்துக்கு முன்” என்று பொருள்படுகிறது.
b உங்களிடம் ஒரு பைபிள் இல்லாவிட்டால், அதை அளிக்க யெகோவாவின் சாட்சிகள் மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
c ஏசாயா 40:22-ல் “உருண்டை” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தை “கோளம்” என்றும் மொழிபெயர்க்கப்படலாம். ஈஸி டு ரீட் வர்ஷன், ‘பூமி வளையம்’ என குறிப்பிடுகிறது.
d இவ்விஷயங்கள், யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளன.
e வேதங்களின் மிகப் பழமையான பாடல்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டு வாய்வழியாக பின் சந்ததியாருக்குக் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. “கி.பி. பதினான்காம் நூற்றாண்டில்தான் வேதங்கள் எழுத்தில் வடிக்கப்பட்டன” என இந்தியாவின் சரித்திரம் என்ற ஆங்கில புத்தகத்தில் பி. கே. சரத்குமார் தெரிவிக்கிறார்.
f பைபிளில் குறிப்பிடப்படும் கடவுளுடைய பெயர் யெகோவா. இப்பெயரை அநேக பைபிள் மொழிபெயர்ப்புகளில் சங்கீதம் 83:17-ல் (அல்லது, 18-ல்) நீங்கள் காணலாம்.
[பக்கம் 7-ன் படம்]
கடவுளுடைய வார்த்தைமீது ‘வாஞ்சையை’ வளர்த்துக் கொள்ளுங்கள். பைபிளைத் தவறாமல் படியுங்கள்
[பக்கம் 5-ன் படத்திற்கான நன்றி]
NASA photo