“யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்”
மணமுடிக்காமலேயே யெகோவாவின் சேவையில் திருப்தி
“எங்களில் எத்தனையோ பேர் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறோம், ஆனாலும் நாங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோம், தெரியுமா!” என்கிறார் ஸ்பெய்னைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவப் பெண். அவருடைய திருப்திக்குக் காரணம்? “குடும்பக் கவலைகளெல்லாம் இல்லாமல் யெகோவா தேவனுக்கு இன்னும் அதிக ஊழியம் செய்ய முடிவதற்காகச் சந்தோஷப்படுகிறோம்” என அவர் சொல்கிறார்.
இத்தகைய உணர்ச்சிகள் மணமுடிக்காதிருப்பதைப் பற்றிக் கடவுளுடைய வார்த்தை சொல்லும் விஷயத்தோடு ஒத்திருக்கின்றன. திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் விளக்கியபோது, கடவுளுடைய ஆவியின் ஏவுதலால் பின்வரும் அறிவுரையைக் கூறினார்: “விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும் குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப் போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.” பவுல்கூட மணமுடிக்காதிருந்தார். எனினும், என்ன காரணத்திற்காக மணமுடிக்காதிருக்கும்படி அவர் சிபாரிசு செய்தார்? மணமுடித்தவர் இருமனப்பட்டிருக்கிறார், மணமுடிக்காத ஆணோ, பெண்ணோ, ‘கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறார்’ என அவர் சொன்னார். (1 கொரிந்தியர் 7:8, 32-34) யெகோவாவுக்குச் சேவை செய்வதே மணமுடிக்காத ஒருவர் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
உயரிய நோக்கத்திற்காக மணமுடிக்காதிருப்பது
கல்யாணம் செய்துகொண்டு, குழந்தை குட்டிகளோடு வாழ்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு, பவுல் சொல்வதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம். ஆனாலும் இயேசு கிறிஸ்துவை எடுத்துக்கொள்ளுங்கள்; அவர் மணமுடிக்காமலேயே சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருந்தார். எந்த உயரிய நோக்கத்திற்காக கிறிஸ்தவர்கள் மணமுடிக்காதிருக்கலாம் என்பதை அவர் குறிப்பிட்டார். “பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டவர்களும் [அதாவது, மணமுடிக்காமல் இருப்பவர்களும்] உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன்” என அவர் சொன்னார்.—மத்தேயு 19:12.
இந்த வார்த்தைகளுக்கு இசைய, மணமுடிக்காதிருப்பது, மண வாழ்க்கைக்கே உரிய கவனச்சிதறல்கள் இல்லாமல் கடவுளுக்குச் சேவை செய்ய அனுமதித்திருப்பதை பலர் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 7:35) ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மணத்துணையின்றி சந்தோஷமாக யெகோவாவை வணங்கி வருகிறார்கள்; மற்றவர்களுக்குப் பயனுள்ள விதத்தில் உதவ முடிவதில் மகிழ்ச்சி காண்கிறார்கள்.a
மணமுடிப்பவர்கள் மட்டுமே சந்தோஷத்தில் திளைக்கிறார்கள் என்பதும், மணமுடிக்காதவர்கள் அனைவருமே சந்தோஷமின்றி தவிக்கிறார்கள் என்பதும் உண்மையல்ல என்பதை மணமுடிக்காத கிறிஸ்தவர்கள் பலர் அறிந்திருக்கிறார்கள். மணமுடித்தவர்களும் சரி, மணமுடிக்காதவர்களும் சரி, சில சமயங்களில் இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், மணவாழ்க்கைதானே ‘சரீரத்திலே உபத்திரவத்தை’ தருகிறதென்ற உண்மையை பைபிள் சொல்கிறது.—1 கொரிந்தியர் 7:28.
சூழ்நிலை காரணமாக மணமுடிக்காதிருத்தல்
தாங்கள் விருப்பப்பட்டதால் அல்ல, ஆனால் சூழ்நிலை காரணமாக அநேகர் மணமுடிக்காமல் இருக்கிறார்கள். இவர்கள் மண பந்தத்தில் உள்ள கனிவையும், தோழமையையும், பாசத்தையும் அனுபவிக்க விரும்பலாம். இருப்பினும் சிலர், பணப் பிரச்சினையாலோ வேறு சில பிரச்சினைகளாலோ உடனடியாக திருமணம் செய்துகொள்ள முடியாத நிலையில் இருக்கலாம். இன்னும் சில கிறிஸ்தவர்கள், அதிலும் அன்புக்குரிய கிறிஸ்தவ சகோதரிகளில் பலர், ‘கர்த்தருக்குட்பட்டவரை’ மணமுடிக்கும்படியான பைபிளின் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே மணமுடிக்காமல் இருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 7:39) அவர்கள், ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டுதல் பெற்ற யெகோவாவின் வணக்கத்தார் ஒருவரையே மணமுடிக்க வேண்டுமென்ற உறுதியோடு இருக்கிறார்கள்.
இவர்களில் சிலர் சிலசமயம் தனிமையில் தவிக்கிறார்கள். மணமுடிக்காதிருக்கும் ஒரு கிறிஸ்தவ சகோதரி, தனிமையாய் உணருவதாக ஒப்புக்கொண்டாலும் இவ்வாறு சொல்கிறார்: “எங்களைப் போன்றவர்களுக்கு யெகோவாவின் சட்டதிட்டங்கள் என்னவென்று தெரியுமென்பதால், எக்காரணத்தைக் கொண்டும் அவருடைய மனதை வேதனைப்படுத்த நாங்கள் விரும்புவதில்லை. ஒருவேளை ஒரு துணையின் தோழமைக்காக நாங்கள் ஏங்கலாம், ஆனால் அதற்காக, யாரையாவது ஒருவரை திருமணம் செய்துகொள்ள இந்த உலக ஜனங்கள் எத்தனை தடவை ஏற்பாடு செய்தாலும் எங்கள் தீர்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். யெகோவாவை வணங்காத ஆண்களுடனோ பெண்களுடனோ பழகுவதைக்கூட நாங்கள் விரும்புவதில்லை.” அத்தகைய கிறிஸ்தவர்களை நாம் பாராட்டத்தான் வேண்டும்; பைபிள் ஆலோசனைகளைப் பின்பற்றி, உணர்ச்சிப்பூர்வமாக எந்த அழுத்தம் வந்தாலும் யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்காக உயர்ந்த நெறிமுறைகளை விட்டுக்கொடுக்காத அத்தகையவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.
கடவுள் பெருமளவு உதவுகிறார்
யெகோவாவை வணங்காத ஆட்களை மணமுடிக்க மறுப்பதன் மூலம் உண்மைத்தன்மை காட்டுகிற நபர்களிடம் அவரும் உண்மைத்தன்மையைக் காட்டுகிறார். தாவீது ராஜாவால் தன் சொந்த அனுபவத்திலிருந்து இதை உறுதியாகச் சொல்ல முடிந்தது: “உண்மைத்தன்மையுள்ளவருக்கு நீர் [யெகோவா] உண்மைத்தன்மை உள்ளவராய் இருக்கிறீர்.” (சங்கீதம் 18:25, NW) உண்மையுடன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களிடம், “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என யெகோவா வாக்குறுதி அளிக்கிறார். (எபிரெயர் 13:5) மணமுடிக்காதிருக்கும் கிறிஸ்தவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் சரி, கடவுளுடைய வார்த்தைக்கு உண்மையுடன் கீழ்ப்படியும் அவர்களை, யெகோவாவைப் போலவே நாமும் பெருமளவு பாராட்டலாம். சவால்களைச் சமாளிக்க அவர்களுக்கு யெகோவா பலத்தைத் தர வேண்டுமெனவும் நாம் ஜெபிக்கலாம்.—நியாயாதிபதிகள் 11:30-40.
பைபிள் கல்வி புகட்டும் வேலையில் முழுமையாகப் பங்குகொள்வது, தங்கள் வாழ்க்கைக்கு நோக்கத்தை அளிப்பதாக மணமுடிக்காத அநேக கிறிஸ்தவர்கள் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, சுமார் 35 வயதான பெட்ரிஷாவை எடுத்துக்கொள்ளுங்கள்; இவர் மணமுடிக்காமல் பயனியராக, அதாவது முழுநேர பிரசங்கியாக ஊழியம் செய்து வருகிறார். இவர் என்ன சொல்கிறாரென்று கேளுங்கள்: “மணமுடிக்காதிருக்கையில் பிரச்சினைகள் வந்தாலும், ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்வதற்கான வாய்ப்பை இது எனக்கு அளித்திருக்கிறது. ஒண்டிக்கட்டையாக இருப்பதால், என் அட்டவணையை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடிகிறது, இதனால் படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது. முக்கியமாக, கஷ்ட காலங்களில் யெகோவாவையே முழுக்க முழுக்க சார்ந்திருக்கவும் கற்றுக்கொடுத்திருக்கிறது.”
இப்படிப்பட்ட கருத்துகளுக்கு பைபிளின் நம்பிக்கையூட்டுகிற வாக்குறுதியே காரணமாக இருக்கிறது. அது சொல்வதாவது: “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்.” (சங்கீதம் 37:5) ஆம், யெகோவாவை உண்மையோடு வணங்கிவருகிற அனைவரும், மணமுடித்தவர்களாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, “யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்” என்ற கடவுளால் ஏவப்பட்ட வார்த்தைகளில் ஆறுதலையும் பலத்தையும் கண்டடையலாம்.—சங்கீதம் 121:2, NW.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டர் 2005-ல் ஜூலை/ஆகஸ்ட் பக்கத்தைக் காண்க.
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
“விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.”—1 கொரிந்தியர் 7:32
[பக்கம் 8-ன் பெட்டி]
மணமுடிக்காமலேயே ஆசீர்வாதங்களைப் பெறுதல்
மணமுடிக்காதிருந்த இயேசு இவ்வாறு சொன்னார்: “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.”—யோவான் 4:34.
மணமுடிக்காதிருந்த பிலிப்புவின் நான்கு மகள்கள் ‘தீர்க்கதரிசனம் சொல்லுவதில்’ மும்முரமாக ஈடுபட்டார்கள்.—அப்போஸ்தலர் 21:8, 9.
ராஜ்ய செய்தியைப் பிரசங்கிக்கிற மணமுடிக்காத கிறிஸ்தவ சகோதரிகள், “நற்செய்தியைக் கூறும் பெண்களின் ஒரு பெரும் சேனையின்” பாகமாக இருக்கிறார்கள்.—சங்கீதம் 68:11, NW.